• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 3

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"ஆடு தானா வந்து தலையக் கொடுக்கும் போது யாராச்சும் தலைவாழை விருந்து சாப்பிடமாட்டேன்னு சொல்லுவாங்களா கண்ணா!!!" என்று அம்மு கமலைப் பார்த்து கண்ணடித்துக் கூறிட, அவனோ அவளை முறைத்துக் கொண்டாருந்தான்.

கங்காதரனோ இவர்களது பேச்சு எதையும் கவனிக்காமல் "அந்த பொண்ணை ஏன் டா மொறைக்கிறே! இப்போ அந்த பொண்ணே பெத்தவங்களுக்கு என்ன பதில் சொல்றது?" என்று மீண்டும் சத்தம் போட, கமலுக்கு முன்னதாக எஸ்.ஐ பதில் கூறினார்.

"சார் நைட் நேரத்துல ஒரு பொண்ணு போலீஸ் ஸ்டேஷன் படி ஏறுதுன்னா ப்ரச்சனை பெரிசுனு தானே அர்த்தம். அவங்க வீட்லேயும் பேசிட்டேன் சார்... அவங்க அம்மா அவ என் பொண்ணே இல்லேனு சொல்லி ஃபோனை வெச்சிட்டாங்க....." என்று முழுமையாக கூறி முடிப்பதற்குள் கங்காதரன் தன் மகனைப் பார்த்தார்.

'நல்லா கேளுங்க... நான் இன்னும் அதே பழைய கமல் தான்... என்ன ஏதுனு கேட்காம என்னை சந்தேகப்பட்டுட்டிங்கல்ல!!!' என்று அவன் மேல் தப்பே இல்லாதது போல் மீண்டும் தலையைத் தலையை அசைத்து ஏதோ சாதித்துவிட்டது போல் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு கழுத்தை வெடுக்கென திருப்பி மறுபக்கம் திரும்பி நின்றான்.

கங்காதரனோ மனம்விட்டு, வாய் திறந்து திட்டமுடியாமல் 'தலையெழுத்து' என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு தலையில் அடித்துக்கொண்டார்.

சப் இன்ஸ்பெக்டரோ சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில் அவர் மட்டும் தனியாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.

"இப்படி பேர்ண்ட்ஸே உங்க பசங்களோட சந்தோஷத்துக்கு தடையா இருத்தா எப்படி சார்? லவ் மேரேஜ் செய்துகிட்டா என்ன சார் தப்பு?.... லவ்-ஐ தயவு செய்து அக்ஸப்ட் பண்ணுங்க சார்... ஏன் சார் கடைசி வரைக்கும் லவ்-க்கு வில்லனாவே இருக்கனும்னு நெனைக்கிறிங்க!!!" என்று அவர்போக்கில் அறிவுரை வழங்கிட,

கங்காதரன் மனசாட்சியோ கேட்பாரற்று புலம்பியது... 'யாரு....? நானு.....? லவ்-க்கு எதிரி....? நான் பெத்த ரெண்டு தடிமாடுகளுக்கும் லவ் மேரேஜ் செய்துக்கு ஃபுல் ரைட்ஸ் கொடுத்தவன் டா நானு.... ஆனா ரெண்டு பக்கிகளும் லவ் பண்ணி கல்யாணம் செய்திருந்தா பரவாயில்லேயே!!! எந்த நேரத்துல ரெண்டையும் இவங்க அம்மா பெத்தாளோ தெரியலே! எல்லாம் என் தலையெழுத்து!!!' என்று மனதில் நினைத்துக் கொண்டு அதனை வாய்விட்டும் கூறிட முடியாமல் திண்டாடினார்.

அதற்குள் மினிஸ்டரின் அடி ஆட்களை கண்ட எஸ்.ஐ, கங்காதரனிடம் "சார் நீங்க மொதோ டென்ஷன் ஆகாதிங்க... ஒரு அஞ்சு நிமிஷம் உக்காருங்க... இதோ வரேன்." என்று கங்காதரனுக்கு இருக்கையை காண்பித்து, ஏட்டையாவிடம் பருக தண்ணீர் தருமாறு கூறிவிட்டு அடியாட்களை நோக்கிச் சென்றார்.

இங்கே கமலோ தன் தந்தையைப் பார்த்து அடியாட்களை கண்காண்பித்திட, அவரும் அதனை உணர்ந்தவராய், காதுகளைத் தீட்டிக்கொண்டு அவர்கள் பேசுவது ஏதேனும் கேட்கிறதா என்று கவனிக்கத் தொடங்கினார்.

அம்முவோ எந்த கவலையும் இன்றி, கைவிரல் நகங்களை கடிப்பது போல் வெறுமனே வாயில் வைத்து மருத்துவமனையில் தான் என்னென்ன செய்தோம் என்பதை யோசித்து எப்படியெல்லாம் எஸ்.ஐ கேள்வி கேட்கக் கூடும் என்ற யோசனையில் மூழ்கினாள்.

அங்கே அடியாட்களிடம் "என்னங்கடா? என்ன விஷயமா இங்கே வந்திருக்கிங்க? மினிஸ்டர் எதுவும் கால் பண்ணலேயே?" என்று எஸ்.ஐ வினவிட,

"சார் நாங்க அந்த டாக்டர் பொண்ணை தேடி வந்தோம்..."

"அந்த பொண்ணையா? அந்த பொண்ணை எதுக்கு?"

ரவுடிகளில் ஒருவன் சுற்றும் முற்றும் பார்த்து எஸ்.ஐ யின் அருகே வந்து,

"இன்னைக்கு கோமா பேஷன்ட் பாடில இருந்து பொருள் எடுக்குறதுக்கு முன்னாடியே விஷயம் வெளியே தெரிஞ்சு, ப்ரச்சனை ஆகிடுச்சு...பேஷண்ட்க்கு சொந்தகாரன் ப்ரச்சன பண்ணி, நிலைமை கைய மீறி போயிடுச்சு..." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே,

காவலாளியின் முகத்தில் கலவரம் படர்ந்தது, "என்னடா சொல்றிங்க... விஷயம் வெளியே தெரிஞ்சிருச்சா? எப்படி?" என்று அதிர்ச்சியோடு வினவினார்.

"இல்லே... அதுக்கு முன்னாடியே எப்படியோ சரிகட்டி மூடி மறச்சிட்டாங்க... அந்த பேஷண்ட்டையும் எந்த ப்ரச்சனையும் பண்ணக்கூடாதுனு சொல்லி அனுப்பி வெச்சுட்டாங்க... இப்போ நம்ம தர்மா ஹாஸ்பிட்டல்ல ஆர்கான் மாத்த வேண்டிய பேசண்ட் வேற வெய்ட்டிங்... நம்ம JD டாக்டர் செம்ம கோபத்துல இருக்காரு..

அதான் யாருனு கண்டுபிடிச்சி முடிச்சிற சொன்னாங்க... டாக்டர் ஆப்ரேஷன் பத்தி பேசும்போது இந்த பொண்ணு தான் அங்கே இருந்துச்சாம்... அதுவும் இல்லாம ஹாஸ்பிட்டல்ல நடந்த பிரச்சனைக்கு அப்பறம் இந்த பொண்ணு யாருகிட்டேயோ ஃபோன்ல பேசிக்கிட்டே சுத்திமுத்தி பாத்துக்கிட்டே ஓடிபோச்சு... அதுக்கப்பறம் ஆளையே காணோம்... இந்த பொண்ணு தான் காரணமா இருக்குமோனு ஒரு சந்தேகம்..."

எஸ்.ஐ அம்முவிற்கு சாதகமாகவே பேசினார். "லவ்ல ஏதோ ப்ரச்சனை எங்களை சேத்து வைங்கனு சொல்லி தான் இங்கே வந்தாங்க, அந்த பையனோட அப்பனும் வந்ததுல இருந்து தாம்தூம்னு குதிச்சிட்டு தான் இருக்கார். எனக்கென்னமோ நீங்க தேடிறது இந்த பொண்ணா இருக்காதுனு தோனுது... எதுக்கும் அந்த பொண்ணை கூப்பிட்டி விசாரிக்கிறேன்..." என்று கூறி மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்.

"இங்கே வா ம்மா பொண்ணு..." என்று தன் இருக்கை சென்று அமர்ந்து அம்முவை அழைத்தார்.

"நீ எந்த ஊர் ம்மா?" என்று அம்மு அவர் அருகே சென்றதும் வினவினார்.

"கன்னியாகுமரி சார்"

"வேலைக்காக தான் இங்கே வந்தேயா?" என்றிட, அவளோ கங்காதரனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு,

"இவனுக்காக தான் வந்தேன் சார்" என்று கமலை சுட்டிக் காண்பித்திட,

கங்காதரனோ 'இதுவும் நடிப்பு மாதிரி தெரியலேயே!' என்று யோசித்தபடி அம்முவையே பார்த்தார்.

அம்மு மீண்டும் கங்காதரனைப் பார்க்க அவரது துழைக்கும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் தலை குனிந்து கொள்ள, இன்ஸ்பெக்டரோ அவரைக் கண்டு பயந்து தலைகுனிவதாக நினைத்துக் கொண்டார்.

"இங்கே பாரும்மா எதுவா இருந்தாலும் பயப்படாம சொல்லு... இங்கே என் முன்னாடி உன்னை யாரும் எதுவும் செய்திடமாட்டாங்க... ம்ம்ம்!!! உன் ஃபோனைக் கொஞ்சம் கொடு ம்மா..." என்றிட கமலுக்கோ உள்ளுக்குள் கிலி பரவியது.

அம்மு தன் ஃபோனை எடுத்து சப் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்துவிட்டு, "நானும் இவரும் லவ் பண்றோம் சார்" என்று கூறியவளின் கரத்தை ஆடை மறைவுக்கு கமல் கோபம் குறையும் மட்டும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான். அம்முவோ வலியை உணர்வதற்கு பதிலாக, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

"இவனுக்காக தான் இங்கே வேலைக்கு அப்ளை பண்ணினேன். அவ்ளோ தூரம் ஏன் போகனும்னு என் அப்பாக்கு சந்தேகம் வந்து கடைசில எங்க காதலும் வீட்டுக்குத் தெரிஞ்சு இவனை கல்யாணம் செய்துகிறதுன்னா எங்களை மறந்துடுனு சொல்லி திட்டினாங்க...

நானும் மொதோ வேலைல ஜாய்ன் பண்ணிட்டு அவங்களை சமாதானம் செய்துக்கலாம்னு நெனச்சு கிளம்பி வந்துட்டேன்... அதுக்குள்ள எங்கப்பா இவங்க வீட்டுக்கும் சொல்லி, அங்கிளும் கமல்கிட்ட, ஹாஸ்ப்பிட்டலேயே வெச்சு சத்தம் போட்டு என்னை ஊருக்கு அனுப்பி வைக்கிறதா சொன்னாறாம்...

அதான் இவன் என் ஃப்ரெண்டு மூலமா எனக்கு ஃபோன் பண்ணி ஹாஸ்பிட்டல்ல இருக்க வேண்டாம்னு சொல்லவும் நானும் பெர்மிஷன் கூட கேட்காமல் உடனே கெளம்பி வந்துட்டேன். என்ன தான் இருந்தாலும், வேலைல ஜாயின் பண்ணின முதல் நாளே நான் வேலை பாக்குற இடத்துல வெச்சு பிரச்சனை பண்ணினா, நான் திரும்பவும் அங்கே வேலைக்குப் போகனுமே சார்... அதுவும் கொஞ்சம் அசிங்கம் தானே...

என்னாலேயும் என் கண்ணா இல்லாம இருக்க முடியாது சார்... எங்களை பிரிச்சிட வேண்டாம்னு சொல்லுங்க சார்..." என்று புலுகுவதற்கென்றே பிறந்தவள் போல் நீளமாக அடுக்கடுக்காக அடுக்கிக் கொண்டே போக, கமலும் கங்காதரனும் அவளை வாய் பிளந்து சுற்றம் மறந்து பார்த்திருந்தனர்.

அவர்களின் பார்வையே தன்னை காட்டிக்கொடுத்துவிடும் என்று உணர்ந்தவள், கமலின் கையைப் பிடித்து இழுத்து கங்காதரனின் காலில் விழுந்து "எங்களை ஏத்துக்கோங்க மாமா... நான் உங்க குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா நடந்துக்கிறேன் மாமா..." என்றிட கங்காதரன் பேச்சற்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

'விட்டா பொய் சொல்லியே ஊரையே... வாயில போட்டு சாப்பிட்டருவா போலவே.... இந்த பொண்ணு பேச்சை இன்னும் கொஞ்ச நேரம் கேட்டேன்!!!.... இல்லாத வியாதி எல்லாம் எனக்கு வந்திடும்.....' என்று நினைத்தபடி அவளையே பார்த்திருந்தார்.

அவரது காலடியில் கிடந்தவளோ, "டேய் மாங்கா! நடிக்கனும்னு முடிவு பண்ணிட்டா சின்ன சந்தேகம் கூட வராத அளவுக்கு பெர்ஃபாம் பண்ணனும்... உன் அப்பாவை சம்மதிக்க வைக்கிற மாதிரி கொஞ்சமாவது ஆக்ட் பண்ணு... கெஞ்சு டா... இல்லே இஞ்சக்ஷன் எடுத்து சொருகிடுவேன்..." என்று கமலை மிரட்ட,

கமலோ உண்மையாகவே தந்தையின் காலைப் பிடித்து கதறினான். "ப்பா மன்னிச்சிடுங்க ப்பா... உங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம தான் எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்னு இப்போ நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன் ப்பா... என்ன மன்னிச்சிடுங்க ப்பா" என்று அழுவது போல் புலம்பிட,

"டேய்... சொதப்பாத... நீ புலம்புற நேரம் இது இல்லே... இவ்வளவு நேரம் புலம்பினதுக்கே அப்பறமா தனியா வாங்கி கட்டிப்பே... இப்போ ஒழுங்க பெர்ஃபாமென்ஸ்ஸப் போடு..." என்று மீண்டும் அவனை அடக்கினாள் அம்மு.

"அவ்வ்வ்வ்.... அப்பா என்ன மன்னிச்சிடுங்க ப்பா..." என்று மீண்டும் ஆரம்பித்தான்.

பற்றாகுறைக்கு அவளது ஃபோனைப் பறித்துப் பார்த்த எஸ்.ஐ-யோ அழைப்புகள் குறித்த விவரப்பட்டியலில் கடைசியாக சுனைனா மற்றும் கமலுக்கு மட்டுமே பல அழைப்புகள் விடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவள் கூறுவது உண்மை என்றே நம்பிவிட்டார்.

"யோவ்... என்ன மனுஷயன் யா நீ... பிள்ளைங்க ரெண்டும் எப்படி கெடந்து தவிக்கிதுங்க... இன்னேரம் என் பிள்ளைங்களா இருந்தா பாதினாறும் பெத்து சந்தோஷமா இருங்கனு வாழ்த்திருப்பேன்.... காலைப் பிடிச்சு கதறுற பிள்ளைங்களை ஆசிர்வாதம் பண்ணி தூக்கிவிடாம இப்படி கதறவிட்டுட்டு இருக்கேயே யா..." என்று எஸ்.ஐ இவ்வளவு நேரம் அழைத்த சார் என்ற அழைப்பைத் தவிர்த்து கங்காதரனை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிட,

'மொதோ இந்த எஸ்.ஐ கிட்ட இருந்து தள்ளிப் போகனும்... உண்மை என்னனு தெரியாம பேசிப் பேசியே சாவடிக்கிறான்...' என்று நினைத்துக் கொண்ட கங்காதரன்,

"எழுந்திரிங்க ரெண்டு பேரும்... இவ்வளவு தூரம் ஆனதுக்கப்பறம் எப்படி ஏத்துக்கிடாம இருக்கிறது... வாங்க வீட்டுக்குப் போகலாம்..." என்று கூறிட,

"நில்லுங்க கொஞ்சம்... எனக்கு இன்னும் உங்க மேல நம்பிக்கை வரலே... நானே வந்து வீடுவரைக்கும் விட்டுட்டு வரேன்..." என்று மீண்டும் எஸ்.ஐ நிறுத்தினார்.

'ஏற்கனவே மரியாதை காலி... இனி மானமும் போகப் போகுது... அக்கம் பக்கம் வீடு எல்லாம் இந்த குடும்பமே கல்யாணத்துக்கு பேர் போன குடும்பம்னு பேர் வெச்சிடுவானுங்க...' என்று கங்காதரனின் மனதிற்குள் ஒரு நொடி தோன்றினாலும், தன் பிள்ளைகளின் சந்தோஷத்திற்கு முன் அதெல்லாம் தூசு என்று நினைத்து உதறித் தள்ளினார்.

முதலில் வெளியேறிய எஸ்.ஐ ரவுடிகளைப் பார்த்து இல்லை என தலையசைத்துவிட்டுச் சென்றார். ரவுடிகளோ சற்று குழம்பியபடி அம்முவின் மேல் பார்வையைப் பதிக்க,

கங்காதரனை அடுத்து வெளியே வந்த கமலும், அம்முவும் ஒருவருக்கு ஒருவர் கை கோர்த்தபடி நெருக்கமாக நடந்து வந்தனர், பார்ப்போரை வாழ்த்த வைக்கும் மனமொத்த தம்பதிகளைப் போல்... அவரவர் வந்த வாகனத்தில் அவரவர் ஏறிக்கொள்ள ஜீப் கங்காதரன் வீட்டை நோக்கிச் சென்றது.

விமலா தன் மூத்த மருமகள் மிதுன்யா மற்றும் பேரன் ருத்தேஷுடன் கோவிலுக்குச் சென்றிருந்தவர், மகிழுந்தில் கேட்டிற்குள் நுழைய, தங்களுக்கு முன்னால் நின்றிருந்த கங்காதரனின் வாகனத்தைக் கண்டு, முகம் மலர்ந்திட,

"அத்தேம்மா... உங்க ஜோடிப்புறா இன்னேரம் வீட்டுக்கு வந்திருக்கார் பாருங்க... மாமாவுக்கு உங்களை மதியம் கண்ணுல பாக்காம ஒரு வேலையும் ஓடல போல...." என்று வம்பு வளர்த்தாள் மிதுன்யா...

"உன் புருஷன் உன்னை பாக்க வரலேன்ற பொறாமைல என் புருஷனை கண்ணு வைக்காதே டி..."

"அடேங்கப்பா.... எங்க கண்ணை உங்க மேல வெச்சுட்டு நாங்க எப்படி பாக்குறதாம்!!" என்று கிண்டலடிக்க,

விமலாவோ அசராமல் அவள் வாய்யை மூட வைத்தார்... "மிதுமா, இப்படி ஓல்டு கவுண்டர் கொடுத்து உன்னை நீயே 90'kids இன்ட்ரோ கொடுத்துக்காதே டா ம்மா!!! ருத்து கூட சேந்து கொஞ்சம் நியூ ட்ரெண்ட்க்கு வா..." என்று கூறிவிட்டு பேரனுடன் மகிழுந்தைவிட்டு இறங்கினார்...

"அத்த்த்தேம்ம்ம்மா... என்னை 90'kidsனு சொல்ற நீங்க யாராம்!!! Sweet sixteen னு நெனப்போ!!!... 60's பாட்டி நியாபகம் இருக்கட்டும்.." என்று பல்லைக் கடித்தபடி காலை உதைத்து கத்தினாள்.

அதற்கும் அசராமல் "மருமகளே நைட் உன் புருஷன் வரும் போது மறக்காம ஐஸ் க்ரீம் வாங்கிட்டு வர சொல்லிடு..." என்று கூறிச் சென்றார் விமலா.

"ஐயோ மித்து அவசரபட்டு கோபப்பட்டுட்டியே! இன்னேக்கு கோட்டாவும் போச்சு.." என்று புலம்பியபடி அவர் பின்னாலேயே சென்றாள்.

உள்ளே நுழைந்த விமலாவோ நாலாபுறமும் போடப் பட்டிருந்த நீள்சாய்விருக்கையில் வாசலுக்கு நேர்எதிரே அமர்ந்திருந்த கங்காதரனைக் கண்டு "எப்போ வந்திங்க?" என்றபடியே அவரை நோக்கி நடந்தார்.

அதற்குள் ருத்துவோ ஐயம்மாவின் கையை உருகிக் கொண்டு, "ஐப்பா..." என்று அழைத்துக்கொண்டு கங்காதரனை நோக்கி ஓடினான்.

"இன்னைக்கு கோவில்ல பூசாரி, கூடிய சீக்கிரம் விஷேஷம் சொல்லப் போறிங்கனு சொன்னாரு... அவர் வாய் முகூர்த்தம் பலிச்சு கமலுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்னு வேண்டிக்கோங்க..." என்றபடி கங்காதரன் நெற்றியில் விபூதி, குங்குமம் பூசிவிட்டார்.

பாவம்.... மதியத்தில் இருந்து மிதுன்யாவும், விமலாவும் வீட்டில் இல்லாததால் இங்கே நடந்த எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை.

கங்காதரனோ "இனி அதுக்கு அவசியமே இல்லை" என்று கூறிட,

"என்ன சொல்றிங்க? அனர்த்தமா பேசாதிங்க..."

"யம்மா... நான் ஏற்கனவே நெறையா கேட்டுட்டேன்... இதுக்கு மேல இந்த காது தாங்காது... இதோ நிக்கிறாங்க மீதிய நீயே கேளு..." என்று கூறிவிட்டு தன் பேரனை மடியில் அமர்த்திக் கொண்டு நீள்சாய்விருக்கையில் பின்னால் தலை சாய்த்துப் படுத்தார்.

விமலாவோ 'என்னாச்சு இவருக்கு!' என்று யோசித்தபடி திரும்பிப் பார்க்க, அங்கே கமல் மற்றும் அம்மு இருவரும், மூவர் அமரும் இருக்கையிலும் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

விமலாவோ கண்களை விரித்து "டேய் கமல கண்ணா யாருடா இந்த பொண்ணு?" என்று அதிர்ச்சி பாதி மகிழ்ச்சி பாதியாக வினவினார்.



-சீண்டல் தொடரும்.