• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுந்தரா - 01

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
172
113
43
Dindigul
எனை தீண்டாதே சுந்தரா
சுந்தரா - 01

செந்தூர் முருகன் ஃபைனான்ஸ் என்று எழுத்துக்கள் பெரிதாக பொறிக்கப்பட்ட அந்த ஐந்து மாடி கட்டிடத்தின் ரிசப்சனில் அமர்ந்திருந்தாள் வர்த்தினி.

வர்த்தினியை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் அவளை பாவமாகவும், பரிதாபமாகவும் பார்த்து செல்ல அமர்ந்திருந்தவளுக்கு உடலெல்லாம் கூசிப்போனது.

தன் நிலை இத்தனை கீழாகிப் போகும் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லையே.

ஓர் இரவில் ஒருவரின் வாழ்க்கை தலைகீழாய் மாறிப்போகும் என்று அவள் வாழ்க்கையில் நடக்கும் வரை நம்பவே இல்லையே. சுனாமி போல் அவள் வாழ்க்கை எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்திருந்தது.

‘அப்பா.. அப்பா… என்னை மட்டும் ஏன் இப்படி விட்டுட்டு போனீங்க.. என்னையும் உங்களோடவே கூப்பிட்டு போயிருக்கலாமே.. ப்பா ப்பா..’ என தனக்குள்ளாகவே போராடிக் கொண்டிருந்தவளை “எம்மா இங்க வா..” என அங்கிருந்த ஒரு பெண் அழைக்க, வேகமாக முகத்தை துடைத்தவள் ரிசப்சனுக்கு விரைந்து, “மேடம் சொல்லுங்க..?” என பரிதவிப்பாக கேட்டாள்.

“நானும் பேசிப் பார்த்துட்டேன் ம்மா. ஆனா மேனேஜர் கேட்குற மாதிரியே இல்லை. நாளைக்கு வந்து பணத்தைக் கட்டிட்டு அவங்களைக் கூப்பிட்டு போக சொல்றார்..” என எந்த ஒரு பாவனையும் முகத்தில் காட்டாமல், இதெல்லாம் இங்கு மிக சாதாரணம் என்பது போல் சொல்ல,

“மேடம்.. ப்ளீஸ் மேடம் அவங்க உடம்பு சரியில்லாதவங்க மேடம்.. ப்ளீஸ் கொஞ்சம் கருணை காட்டுங்க மேடம். சரியான நேரத்துக்கு மாத்திரை போடலன்னா அவங்களுக்கு பிட்ஸ் வந்துரும் ப்ளீஸ்..” என விழிகள் கலங்க கெஞ்சியவளை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாதே. இங்கு வேலை செய்யும் அனைவருமே மனசாட்சியை வெளியவே விட்டுத்தான் ஆபிஸ்குள்ளே நுழைய வேண்டும்.

இங்கு வரும் ஒவ்வொருவரின் கஷ்டமும் அப்படித்தான் இருக்கும். தயவு தாட்சன்யம் இன்றிதான் நடந்துகொள்ள முடியும். இல்லையென்றால் இப்படியான ஒரு கம்பெனியில் வேலை செய்ய முடியாதே.

“உனக்காக நானும் என்னால எவ்வளவு முடியுமோ அவ்ளோ பேசிட்டேன்மா.. ஆனா மேனேஜர் அதையெல்லாம் காது கொடுத்து கூட கேட்க மாட்டேங்குறார். நான் கடன் வாங்கியிருந்தாலும் இந்த நிலமைதான்மா.. அதனால எப்படியாவது கடனை கட்ட பார்..” என அவளுக்காக பேச,

“நான் எப்படியாவது கட்டிடறேன் மேடம். ஆனா கொஞ்சம் கொஞ்சம் டைம் கொடுங்க.. ஒரு ஒரு மாசம் மட்டும் வாங்கிக் கொடுங்க மேடம். இந்த டைம் கண்டிப்பா என் உயிரை கொடுத்தாவது கட்டிடுறேன்..” என அவளின் கெஞ்சலை அங்கிருந்த அத்தனை பேரும் வருத்தமாகத்தான் பார்த்தனர்.

தினம் இப்படியொரு நிகழ்வு நடக்கத்தான் செய்யும். அங்குள்ளவர்களுக்கு இதெல்லாம் பழக்கமும்தான். ஆனால் கடந்த ஒரு வாரமாக தினமும் வந்து நிற்கும் வர்த்தினியைப் பார்க்கும் போது அவர்களுக்கு அவ்வளவு வருத்தமாக இருக்கும். ஆனால் அவர்களாலும் எதுவுமே செய்ய முடியாத நிலை. மேனேஜர் நினைத்தால் செய்யலாம், ஆனால் அவன் அந்த பெண்ணைப் பார்க்கும் பார்வையே சரியில்லை எனும்போது அதை அவளிடம் சொல்லக்கூட அவர்கள் யோசிக்கவில்லை.

“இங்க பாரும்மா.. இங்க இருக்குற எல்லாருக்குமே உன்னோட கஷ்டம் புரிய்த்தான் செய்யுது. ஆனா எங்களால உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாதுமா. கொஞ்சம் புரிஞ்சிக்கோ. சீக்கிரம் பணத்தைக் கட்டிட்டு அவங்களை கூப்பிட்டு போ..” என அந்த பெண்மணி கூற, பதிலேதும் சொல்லாமல் தலையைப் பிடித்தபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

உடல் குழுங்குவதிலேயே அவள் அழுகிறாள் என்று அனைவருக்கும் புரிந்தது. அவள் மீதிருந்த பாவமான பார்வையை விளக்க யாராலும் முடியவில்லை.

தன் முகத்தை அழுந்த துடைத்தவள், பின் ஒரு பெருமூச்சைவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் அந்த பெண்மணியிடம் வந்தாள், தன் கைப்பையில் இருந்த மாத்திரையைக் கொடுத்து, “சாப்பாடெல்லாம் சரியா கொடுப்பீங்களா, இந்த மாத்திரையை மட்டும் மறக்காம கொடுத்துடுறீங்களா?” என அழுகையை அடக்கிய குரலில் கேட்க, கேட்ட அந்த பெண்ணுக்குமே கண்கள் கலங்கிவிட்டது.

“நான் பார்த்துக்குறேன்..” என யாருக்கும் கேட்காமல் மெல்ல முணுமுணுக்க, “தேங்க்ஸ் மேடம்” என்றவள், தளர்ந்த நடையுடன் அங்கிருந்து வெளியில் வந்தாள்.

எங்கு செல்ல, யாரிடம் கேட்க என அவளுக்கு எதுவுமே புரியவில்லை. பணம் அந்த பெயரே இப்போதெல்லாம் கசப்பாக இருந்தது.

இந்த பணம் இருக்கும்போது அதன் மதிப்பு அவளுக்குத் தெரியவில்லை. தெரியும் போது அந்த பணம் அவளிடமில்லை.

வர்த்தினி கேட்டை நெருங்கும் போது அங்கிருந்த வாட்ச்மேன் சுந்தரம், அந்த அபலையைப் பார்த்து மென்மையாக புன்னகைப்பது அவளுக்கு தெரிந்தது. பதிலுக்கு சிரிக்க முயன்றால் முடியவில்லை.

அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தையை தூக்கிக்கொண்டவள் “ரொம்ப தொந்தரவு பண்ணிட்டாளா தாத்தா.?” என தயக்கமாக கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல பாப்பா.. உன் பொண்ணுதான் நல்லா பழகிட்டாளே. நீ போன வேலை என்னாச்சு..? என்று கேட்டார் விடை தெரிந்தும்.

“எங்க தாத்தா..? வழக்கம்போலத்தான் சொன்னாங்க. நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல” என்றவளுக்கு உலகே சூனியமாகிவிட்ட நிலைதான்.

“பாப்பா.. முதலாளி வெளிநாட்டுக்குப் போயிட்டு இன்னைக்குத்தான் வந்துருக்கார். அவர் நாளைக்கு ஆஃபிஸ்க்கு வருவார். நாளைக்கு ஒருநாள் மட்டும் வந்துட்டு போயேன். இங்க நடக்குறது தெரிஞ்சா கண்டிப்பா உனக்கு உதவுவார். உனக்கு அவரால மட்டும் தான் உதவி செய்ய முடியும் பாப்பா..” என சுந்தரம் கூற

அவர் பேசியதை அப்படியே விட்டுவிட்டு “நீங்க இங்கதான தாத்தா இருப்பீங்க. அக்காவை பார்த்துக்கோங்க தாத்தா. நான் எப்படியாவது பணத்தை ரெடி பண்ணிட்டு வந்து கொடுத்துடுறேன்.” என வேறு பேச

அதை அவரும் புரிந்து கொள்ள “அக்காவைப்பத்தி கவலைப்படாத பாப்பா. நல்லா பார்த்துப்பாங்க. நானும் இருக்கேன்ல. நான் சொன்னதை கேளு, நாளைக்கு நீ வந்து ஒரு தடவை பேசிப்பாரு..” என மேலும் வற்புறுத்த

“வேலைக்கு போய் ஒரு வாரம் ஆச்சு தாத்தா.. நாளைக்கு போகலைன்னா வேலையை விட்டு அனுப்பிடுவாங்க. ஆஃபிஸ் முடிஞ்ச பிறகு வரட்டுமா? ஒரு ஐஞ்சு மணிக்கு மேல” என மனதே இல்லாமல் சரியென்றாள்.

“சரிதான் பாப்பா.. நீ நாளைக்கு வா.. உனக்கு நல்லதே நடக்கும்.” என அந்த சுந்தரத்தின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கிளம்பினாள் ஆதினி.

மனம் முழுக்க பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்ற எண்ணம்தான். “மம்மி… பசிக்குது” என்ற குழந்தையின் பேச்சில் நினைவுக்கு வந்தவள் தன் பேகில் இருந்த பிஸ்கட்டை எடுத்து கொடுக்க, அதுவும் சமத்தாக வாங்கி சாப்பிட ஆரம்பித்தது.

வீட்டை நெருங்க நெருங்க உடலெல்லாம் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது. வீதியில் இருப்பவர்கள் எல்லாம் அவளை ஒருமாதிரி பார்த்தபடி பேசுவது அவளால் உணர முடிந்தது.

அவர்கள் இன்று நேற்றா பேசுகிறார்கள் தந்தை இறந்து இரண்டு பெண்களும் தனியான நாளில் இருந்துதான் பேசுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் இப்போது உணரக்கூடிய நிலையில் இல்லை அவள்.

கேட்டைத் திறக்கும் நேரம் “வனிம்மா.. ஆரா பாப்பா எப்படி இருக்கு.?” என்றபடியே அவளோடு உள்ளே வந்தார் சரோஜா.

“தெரில ஆயா.. என்னைப் பார்க்கவே விடல. தாத்தாக்கிட்ட சொல்லிட்டு வந்துருக்கேன். அவர் நான் பார்த்துக்குறேன் சொல்லிருக்கார்..” என்றவளுக்கு குரல் உடைய ஆரம்பித்தது.

“நீ முதல்ல உள்ள வா பாப்பா.. அதான் அந்த மனுசன் சொல்லிட்டாருல்ல, நானும் சொல்லிட்டு வந்துருக்கேன். அப்படியெல்லாம் தப்பா நடக்க விடாது. நீயும் பாப்பாவும் உடம்ப கழுவிட்டு வாங்க.. நான் காபி வைக்கிறேன்..” என்ற சரோஜா வர்த்தினிக்கு துணையாக அந்த வீட்டில் இருப்பவர்.

ஜிகே என்றால் சென்னையில் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். மிகப்பெரும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருந்தார் வர்த்தினியின் அப்பா கௌதம். அவர் மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரின் பெயரின் முதல் எழுத்துதான் ஜிகே ஹோம் அப்ளையன்ஸஸ்.

தமிழகம்மற்றும் கேரளாவில் பல கிளைகள் தொடங்கி மிகவும் வெற்றிக்கரமாக போய் கொண்டிருந்தது அவர்களது தொழில்.

கௌதம் - கிருஷ்ணவேணி தம்பதியருக்கு இரு பெண்கள், ஆருத்ரா, வர்த்தினி. ஆருத்ராவிற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் கிருஷ்ணவேனியின் உயிர் ஒருநாள் தூக்கத்திலேயே பிரிந்திருந்தது.

மனைவியின் இழப்பை ஏற்க முடியாமல் மிகவும் தடுமாறிப்போனார் கௌதம். அவரால் தொழிலை சரியாக பார்க்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். அந்த நேரம் ஆருத்ராதான் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. வர்த்தினி கல்லூரி படிப்பில் இருந்தாள்.

மனைவியின் இழப்பை தாங்க முடியவில்லை என்றாலும் தன்னை நம்பி இருக்கும் இரண்டு பெண் குழந்தைகளின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் முயன்று தன்னை சரி செய்து, மீண்டும் பெரியவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.

அப்படி அமைந்தது தான் சிவபிரசாத் குடும்பம். சிவபிரசாத் நல்ல படிப்பு, லண்டனில் வேலை என எந்த மறுப்பும் சொல்ல முடியாத இடத்தில்தான் இருந்தான். அதோடு ஆருத்ராவிற்கும் பிடித்திருக்க, கல்யாண வேலைகளை ஆரம்பித்தார்.

மனைவி இருந்து பெண்ணுக்கு என்ன செய்திருப்பாரோ அதைவிட அதிகமாக செய்து தன் பெரிய பெண்ணின் திருமணத்தை முடித்தார் கௌதம்.

ஆருவிற்கு விசா கிடைப்பதில் பிரச்சினையாகவும், மனைவியை விட்டுவிட்டு சிவபிரசாத் மட்டும் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் லண்டன் கிளம்பியிருந்தான்.

கிருஷ்ணா இல்லம் இப்போது மேலும் அமைதியாகிப் போனது. பெரிய பெண் இல்லாதது இருவருக்கும் வருத்தமாக இருக்க, அமைதியாகவே நாட்கள் செல்ல ஆரம்பித்தது. வர்த்தினியிடம் இருந்த உற்சாகமே குறைந்து போயிருந்தது.

அது கௌதமிற்கு புரிய, அவளை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றார். அவளிடம் அதிகம் நேரம் செலவிட்டார். அவளுக்குப் பிடித்த அனைத்தையும் செய்தார்.

வர்த்தினி தன் தாயைவிட ஆருவிடம் தான் அதிகம் ஒட்டுதலுடன் இருப்பாள். தாயின் இழப்பைக்கூட சாதாரணமாக கடந்தவளால், ஆருவின் பிரிவை ஏற்க முடியாமல் திணறினாள். அதை அவளுக்கு பொறுமையாக எடுத்து சொல்லி புரிய வைத்தார் கௌதம்.

அடுத்து அவளின் பொறுப்பையும் எடுத்து சொல்ல, இனி ‘அப்பாவை நான்தான் பார்த்துக்கனும்’ என்ற எண்ணம் வர, ஆருவின் பிரிவில் இருந்து வெளியில் வந்து தந்தையுடன் கடைக்கு சென்று வர ஆரம்பித்தாள்.

அனைத்தும் சரியாக போய் கொண்டிருந்த சமயம் ஆருவின் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் அவர்கள் குடும்பம் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.

அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாமல் கௌதமிற்கு மாரடைப்பு வந்துவிட மருத்துவமனையில் இருந்த நேரம், சொத்துக்கள் அனைத்தும் ஏலத்தில் போய்விட்டதை உணர்ந்த ஆருவின் குடும்பம் அவளைக் கொண்டுவந்து வர்த்தினியிடம் விட்டுவிட்டு சென்றனர்.

ஏன் எதற்கு என்று புரியாமல் அவள் தத்தளித்துக் கொண்டிருந்த நேரம் கௌதமின் உயிரும் இந்த உலகைவிட்டு சென்றிருக்க, அதைக் கேட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த ஆருத்ரா கோமாவிற்கு சென்றுவிட அடுத்து என்ன என தெரியாமல் தவித்துப்போய் நின்றிருந்தாள் வர்த்தினி.

“பாப்பா…” என்ற சரோஜாவின் சத்தத்தில் நிகழ்வுக்கு வந்த வர்த்தினி குழந்தையுடன் வெளியில் வந்தாள். குழந்தைக்கு பாலையும், வர்த்தினிக்கு காபியையும் கொடுத்த சரோஜா “நைட்டுக்கு எல்லாம் செஞ்சிட்டேன் பாப்பா. தாத்தா இப்போ வருவார். அவர்கூட நான் போய் ஆரு பாப்பாவுக்கு சாப்படு கொடுத்துட்டு இருந்துக்குறேன். இங்க நீ சூதானமா இருந்துக்கனும் சரியா.?” எனவும், அவரின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அப்படியொரு அழுகை வர்த்தினியிடம்.

“பாப்பா என்ன பாப்பா நீ? இந்த நேரம் நீ தைரியமா இருக்கனும். நீயும் உடைஞ்சிட்டா ஆருவை யார் பார்த்துப்பா?” என அதட்ட,

“ம்ம்ம்.” என்றவள் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு “நீங்க மட்டும் இல்லைன்னா நான் என்ன ஆகிருப்பேன்னு தெரியல ஆயா. உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்..” என தேம்ப,

“பாப்பா உங்க அம்மா அந்த மகராசி செஞ்ச உதவிதான் என் பொண்ணுங்க மூனும் படிச்சி பெரிய வேலையில சந்தோசமா நிம்மதியா இருக்காங்க. எங்க வாழ்க்கையை மாத்திக் கொடுத்தவங்க அந்த மகராசி. அவங்க பிள்ளைங்களுக்கு ஒன்னுன்னா நாங்க பார்த்துட்டு இருக்க முடியுமா சொல்லு? கண்டதையும் யோசிக்காம சாப்பிட்டு தூங்கு. நான் காலையில வரேன். அப்புறம் சொல்ல மறந்துட்டேன், எனக்கு தெரிஞ்ச ஒரு அம்மாக்கிட்ட உன்னைப்பத்தி சொன்னேன், நாளைக்கு உன்னை கூட்டியார சொன்னாங்க. போய் பார்த்துட்டு வரலாம். அவங்களால எதுவும் உதவி கிடைக்க வாய்ப்பிருக்கு பாப்பா..” என சரோஜா கூற,

சொத்து போனதும் சொந்த பந்தமும் போய்விட்டது. இதோ இவர்கள்தான் அநாதையாக நின்ற இரு பெண்களையும் கைப்பிடித்து இழுத்துக்கொண்டது.

இவர்களுக்கு இருக்கும் பாசம்கூட சொந்த பந்தம் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் இல்லையே என்று பலநாள் யோசித்திருக்கிறாள்.

அவளுக்குத் தெரிந்தே அவளின் அப்பா அவ்வளவு செய்திருக்கிறார். இல்லையென்று அவர் சொல்லி பார்த்ததுமில்லை கேட்டதுமில்லை.

ஆனால் சொல்லியிருக்க வேண்டுமோ என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது. தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சரோஜாவிடம் ‘சரி’ என்பது போல் தலையசைத்துவிட்டு காபியை அருந்த ஆரம்பித்தாள் வர்த்தினி.