• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூப் சாங், பீப் சாங்குக்கு எதிர்வினையாக ஆண்களைப் புண்படுத்துகிறதா `புஷ்பா' பாடல்?

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
881
சூப் சாங், பீப் சாங்குக்கு எதிர்வினையாக ஆண்களைப் புண்படுத்துகிறதா `புஷ்பா' பாடல்?

பெண்ணியம் என்பது அனைவருக்கும் சம உரிமையும், மரியாதையும் கோருவது. ஆண் கீழானவன் என்றதும் மகிழ்ந்து பாராட்டுவது பெண்ணியத்தை அரைகுறையாக புரிந்துக் கொண்டதின் வெளிப்பாடு.ஊ... சொல்றியா... ஊஹூம்... சொல்றியா என்று ஆண்களை அலற விட்டிருக்கிறது சமீபத்தில் வெளி வந்திருக்கும் 'புஷ்பா' திரைப்படத்தின் பாடல். தமிழில் ஆண்ட்ரியா பாடி இருக்கிறார். அதற்கு சமந்தா நடனமாடுவது போன்ற புகைப்படங்களுடன் வீடியோவாக இந்தப் பாடல் வெளி வந்திருக்கிறது. 'ஆண்களை பதற வைத்த பாடல்' என்று பத்திரிகைகள் தலைப்பிட்டு எழுதும் அளவிற்கு இந்தப் பாடல் ஆண்களிடம் பெரிய சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.

சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக அல்லது குறிப்பிட்ட சமூகத்தினரை புண்படுத்துவதாகச் சொல்லி ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே அதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து, அதனால் தடை செய்யப்பட்ட படங்களும், காட்சிகளும், பாடல்களும், வசனங்களுமே இங்கே உண்டு. அதேபோல் பெண்களை புண்படுத்துவதாக தொடர்ந்து பல பாடல்களுக்கு பெண்கள் அமைப்புகள் சார்பாக வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன.

முதன்முறையாக பாடலின் வரிகள் ஒட்டுமொத்த 'ஆண்கள்' மனதையும் புண்படுத்துவதாகவும் அந்தப் பாடலை திரைப்படம் வெளிவரும் முன்னரே தடை செய்யக் கோரியும் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு தடை கோரி ஹைதராபாத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் 'ஆண்கள் பாதுகாப்பு அமைப்பு' சார்பாக பாடலை தடை செய்யக்கோரி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை வரவேற்பது அல்லது எதிர்ப்பது, அதேபோல் பாடலுக்கு எதிரான புகார்களை தீவிரமாக எடுத்துக் கொள்வது அல்லது விளையாட்டாக கேலி செய்து கடந்து செல்வது என்று இணையத்தில் இரண்டு விதமான எதிர்வினைகள் வந்திருந்தாலும் இந்தப் பாடலை கண்டு கோபப்படும் ஆண்களின் உளவியல் சற்று ஆச்சர்யமாக சிந்திக்க வைக்கிறது.

ஆரம்பக்காலம் முதலே தமிழ் திரைப்படங்களில் காதல் டூயட் பாடல்களில் பெண் தன்னை ஆணுக்கு அன்போடு அர்ப்பணிப்பதாக எழுதி இருப்பார்கள். கவர்ச்சி நடன பாடல்களில் பெண்ணின் உடலை ஆபாசமாக வர்ணிப்பதோடு ஆணுக்கு பெண் தன்னுடலை விருந்து வைப்பது போன்ற பொருளில் எழுதப்பட்டிருக்கும். பெண்களை உடமையாக்கிக் கொள்ள சொல்லும் பாடல்களையும், பெண்கள் மீதான வன்முறையை ஏவும் பாடல்களையும் பெண்கள் அமைப்பினர் சமீப காலங்களாக வலிமையாக எதிர்க்க தொடங்கிய பிறகு அது போன்ற பாடல்கள் வருவது குறைந்திருக்கிறன.

‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் செல்வராகவன் எழுதிய ’அடிடா அவள வெட்றா அவள’ பாடல் பெண்கள் அமைப்பினால் பல காலமாக எதிர்க்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கழித்து படத்தின் இயக்குநர் செல்வராகவன் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனாலும் அந்தப் பாடல் தடை செய்யப்படவில்லை. அதேபோல் 2015 சென்னை வெள்ளத்தின் போது சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளிவந்த 'பீப் பாடல்' பெண்ணின் உடல் உறுப்பை குறிக்கும் தகாத வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் தலைநகரம் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது இப்படி ஒரு பாடலை வெளியிட்டு பெண்களின் மனதை புண்படுத்தியவர்களும் இதே கலை உலகத்தின் 'ஸ்டார்' ஆண்கள்தான். இந்த இரண்டு பாடல்களையும் கொண்டாடி தீர்த்தனர் சராசரி ஆண்கள். அதோடு பாடலை எதிர்த்த பெண்ணியவாதிகளையும் மிக மோசமாக வசைபாடினர். இவை எல்லாவற்றையும் விட 'கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கும்' என்கிற வாக்கியம் இல்லாத படங்களே இல்லை எனும் அளவிற்கு மிக சர்வ சாதாரணமாக பெண்களைக் குறித்து தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். டாஸ்மாக் பாடல்கள், சூப் சாங்ஸ் என இன்னமும் இந்தப் பட்டியல் நீளவே செய்கிறது.

பெண்கள் குறைவான ஆடைகளுடன் உடலை காட்டி ஆடும் கவர்ச்சி நடனங்கள் சரியா, தவறா எனும் வாதங்கள் தொடர்ந்து சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அழகை ரசிக்க வேண்டும் என ஒரு புறமும், பெண்களை உடமையாக, உயிரற்ற பொருளாக இது போன்ற நடனங்கள் காட்சிப்படுத்துகின்றன என்று இன்னொரு தரப்பும் சொல்கின்றனர்.பெண்ணியம், பெண் முன்னேற்றம் என்று பேசும்போது பெண்களுக்கு தங்களது உடையில் சுதந்திரமும் முக்கியமான பேசு பொருளாக இருக்கின்றது. பெண் தன்னுடைய உடலை ஒரு பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என்கிற வாதத்தை பெண்ணியவாதிகள் வைக்கின்றனர். அதே சமயம் உலகம் முழுவதும் ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருள்களின் வியாபாரம் பெண்களின் அழகை குறிவைத்து நடக்கின்றது என்றும் பெண்கள் அதில் முடங்கி விடக்கூடாது என்றும் அவர்கள் சொல்கின்றனர்.அதேபோல் பெண்கள் க்ளாமராக உடை அணிவதை சக பெண்களே ரசிக்கவும் செய்கின்றனர். சமந்தா போன்றவர்களை அவர்களின் நடிப்பை விடவும் உடல் அமைப்பு மற்றும் உடை தேர்விற்காக இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் பெண்கள் அதிகம்.

பெண்களின் அழகு, இளமை, உடைகள் போன்றவைகளுக்கு உலகம் முழுவதும் மாபெரும் சந்தை இருக்கின்றது. முன்பு கலாசாரத்தின் பேரில் பெண்கள் அதிகமாக தன்னை அலங்கரித்துக் கொள்வது, மேக்கப் செய்து கொள்வது தவறு என பார்க்கப்பட்டது. இன்று சாதாரணமாக செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் போடுவதற்கு கூட பெண்கள் தங்களை மிகவும் வசீகரமாக அலங்கரித்துக் கொள்கின்றனர். அதற்காக நிறைய செலவுகள் செய்கின்றனர். பெண்களிடத்தில் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது முன்பைவிட தற்போது மிகக் கடினம்.

அழகு சம்பந்தப்பட்ட பொருள்களுக்கான அவ்வளவு விளம்பரங்களும் பெண்ணின் சுதந்திரம், சுயமரியாதை, தன்னம்பிக்கை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தித்தான் வியாபாரம் செய்யப்படுகின்றன. தங்கள் உடலுக்கு ஏற்றவாறு உடை அணிவது, அலங்கரித்துக் கொள்வது என்று தங்கள் விருப்பம் போல் இருப்பது ’கான்பிடன்ஸ்’ ஏற்படுத்துகிறது என்று பெண்கள் சொல்கின்றனர்.

பெண்ணியம் பேசும் முற்போக்கு பெண்களுக்குள்ளேயே பெண் உடல், ஆடை, அலங்காரம், அழகு சார்ந்த கருத்துக்களில் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், ஆண்களுக்கு இவை எல்லாம் அநாவசியம். ஆண் பெண்ணை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிறான் என்கிறது ’ஊ சொல்றியா மாமா’ பாடல்.

அந்தப் பாடலின் வரிகளை குறித்து கருத்து கேட்டபோது திரைப்படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜுன் முதல் நம் வீட்டில் உள்ள ஆண்கள் வரை ’இது உண்மை தானே, இதில் கோபப்பட என்ன இருக்கிறது’ என்கிறார்கள். இதைக் கேட்டவுடன் பெண்கள் கூட்டம், “அடடே ஆண்கள்கூட இந்தப் பாடலை ஆதரிக்கிறார்களே!” என்று பெருமை கொள்கின்றனர்.’இது உண்மைதானே, ஆண் பெண்ணை போகப் பொருளாக மட்டும்தானே பார்க்கிறான்’ என்று ஆண்கள் வெளிப்படையாக ஒத்துக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? பெண்களை உடைமையாக, போகப் பொருளாக பார்ப்பது தவறு என்றால் அந்த உண்மை உரைக்கும்போது வருத்தம்தானே தோன்றி இருக்க வேண்டும்? ஆண்களை போகப் பொருளாகத்தான் பார்க்கிறோம் என்றோ, வருமானம் ஈட்டித் தரும் எந்திரமாக பார்க்கிறோம் என்றோ பெண்கள் இதே போல் ஒரு பாடல் எழுதிவிட்டு வெளிப்படையாக அதை ஒத்துக் கொள்ளவும் முடியுமா? பத்திரிகையாளர் சந்திப்பில் ’இது உண்மைதான்’ என்று சொல்லிவிட்டு கதாநாயகன் அல்லு அர்ஜுன் சிரிப்பது கூட இந்த சமூகத்தில் பாலின படிநிலையில் ஆண் அதிகார மையத்தில் இருக்கிறான் என்பதை உணர்த்துவதாகவே இருக்கின்றது.பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேகாவைவிட பாடலை பாடியிருக்கும் ஆண்ட்ரியாவுக்கும் அதில் நடித்திருக்கும் சமந்தாவுக்கும் அதிக எதிர்ப்புகள் வருவதற்கு காரணம் என்ன? படத்தின் கதாநாயகன், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என இவ்வளவு ஆண்கள் இந்தப் பாடலை ஏற்றுக் கொண்டு வெளியிட்டிருக்கும்போது, அவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு போஸ்டரில் தோன்றியிருக்கும் சமந்தாவையும், பாடல் பாடியிருக்கும் ஆண்ட்ரியாவை தாக்குவதன் பின்னணியில் இருப்பது ஆண் எனும் ஈகோ! தன்னுடைய அடிமை எஜமானரை கேலி செய்துவிட்டால் எஜமானருக்கு வரும் கோபத்தைபோல ஆண்களுக்கு சமந்தா மீதும் ஆண்ட்ரியா மீதும் கோபம் வருகிறது.

ஒரு செக்ஸியான குரல் உடைய பெண்ணை பாட வைத்து, குறைந்த ஆடையில் செக்ஸியாக ஒரு பெண்ணை ஆட வைத்து ஆண்களுக்கு எதிராக பெண்ணியம் பேசும் ஒரு பாடலை உருவாக்கியிருப்பது கூட ஒருவகையில் பெண்ணியத்தை சந்தைப் பொருளாக்கி விற்கும் கேவலமான செயல். ஆண், ஆண்ட்ரியாவின் குரலையும், சமந்தாவின் அழகையும் மட்டுமே பார்ப்பான். பெண்ணுக்கு இந்தப் பாடல் வரிகளில் ஆணை தாக்குவது மட்டும் போதும். ஆக, அனைவரிடத்திலும் இந்த பாடலை கொண்டு சேர்க்கும் வணிக நோக்கம் மட்டுமே இது. இவ்வளவு ஏன், இதே 'புஷ்பா' படத்தில் 'சாமி சாமி' என்றொரு டூயட் பாடலில் கணவனுக்கு அடிமைப்பட்டு கிடப்பது பெருமையே என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் வரிகள் இருக்கின்றன. ஆக, இங்கு எல்லாமே வணிகம் மட்டுமே!

சமந்தாவின் பாடலுக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினரின் புகாரை பற்றி பாடலாசிரியர் விவேகாவிடம் கேட்டபோது, ”அயோக்கியர்கள் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கும் போது அதை எதிர்த்து ஏன் சக ஆண்களாக ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் குரல் கொடுக்கவில்லை? நாட்டில் ஆண்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் வந்திருக்கின்றன. அடிப்படையான உணவுக்காக ஆண்கள் கொல்லப்பட்ட போதுகூட ஏன் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் வரவில்லை?” என்று கேட்டிருக்கிறார்.ஆண்களுக்கு பாதுகாப்பு சங்கம் என்றிருப்பதே பெண்கள் பாதுகாப்பு அமைப்புகளை கேலி செய்வதை போன்றது. இந்தப் பூமியின் மீது மற்ற எந்த பாலினத்தை விடவும் தங்களுக்கான உரிமைகளையும், சுதந்திரத்தையும் தக்க வைத்துக் கொள்பவர்களும் உறுதிப்படுத்திக் கொள்பவர்களும் ஆண்கள்தான். அதற்காக ஆண்களுக்கு பிரச்னையே இல்லை என்று பொருள் இல்லை. சமூகத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்களில் பாலின வேறுபாடு இல்லாமல் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள். மன ரீதியான பிரச்னைகள், ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள், அரசியல் ரீதியான பிரச்னைகள் இங்கே அனைவரையும் பாதிக்கவே செய்கின்றன. ஆனால், அதைத் தாண்டி குடும்பம், சமூகம், தனி மனித சுரண்டல்கள் போன்றவற்றால் ஆண்களை விட மற்ற பாலினங்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சமந்தா தனது விவாகரத்திற்கு பிறகு முதன்முறையாக ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடி நடித்திருப்பதால் அதிக க்ளாமராக நடித்திருக்கிறார் என்று ஆண்களும், விவாகரத்திற்கு பிறகு அதிகம் ஜொலிக்கிறார் என பெண்களும் நடிகையின் தனிப்பட்ட வாழ்வை உள்ளிழுத்து பேசுகின்றனர். இதற்கு முன்பு எத்தனையோ ஆண் நடிகர்கள் இதே சூழ்நிலையை கடந்து வந்திருப்பார்கள். அவர்களை இந்த சமூகம் இதே அளவுகோலுடன்தான் அணுகியதா? சமந்தா ஜொலிக்கிறார் என்பது பாராட்டாகவே இருந்தாலும் திருமண உறவில் இருந்து பிரிந்த பிறகு ஒரு பெண் கூடுதலாக ஒளிர்கிறாள் என்பது அரைவேக்காட்டுத்தனமான புரிதல்.

இந்தப் பாடல் முற்போக்கான அல்லது பெண்களின் சார்பான பாடல் என்று தோன்றினால் அதுவும் முற்றிலும் தவறே! பெண்ணின் உடல் பாகங்களை பழங்களுடன் ஒப்பிட்டு முன்பு வந்த பாடல்களின் இன்னொரு வெர்ஷன்தான் சீனி, அல்வா என்பதும் அதற்கேற்றாற்போல் சமந்தாவின் உடைகளும். இதில் எந்த பெருமையும் இல்லை. 'விளக்குமாறு' என்று ஆண்களை சொல்வதாலேயே இந்தப் பாடலை கொண்டாட முடியாது. பெண்ணியம் என்பது அனைவருக்கும் சம உரிமையும், மரியாதையும் கோருவது. ஆண் கீழானவன் என்றதும் மகிழ்ந்து பாராட்டுவது பெண்ணியத்தை அரைகுறையாக புரிந்துக் கொண்டதின் வெளிப்பாடு.பின்குறிப்பு: #NotAllMen ஆண்களிலும் மற்ற பாலினத்தவர்களை சக மனிதர்களாக மதிப்பவர்கள், உடலை தாண்டி அன்பு, காதலை பிரதானமாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள். எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய் என கேட்டீர்களானால், அந்த ’நம்பிக்கையில்’ தான் தலைக்கு மேல் வானம் இருக்கிறது, காலுக்கு கீழ் பூமி சுழல்கிறது.

ஆக... ஆண்களே ம்ம் சொல்றீங்களா? ம்ஹூம் சொல்றீங்களா?

நன்றி
ஆனந்த விகடன்..
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
278
எதுக்காக கம்பு சுத்துரோம்னே தெரியாம சிலர் இருக்காங்க..
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அதுல ஒன்னு
 
Top