• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
பவனின் முன் வந்து நின்ற லட்சுமணன்,

"உங்க மனைவி, உங்க கூட வரத் தயாரா இருக்காங்க. நீங்க கூட்டிட்டுப் போகலாம்." என்று தன் முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டு கூறிவிட்டு விறுவிறுவென்று நகர்ந்து சென்றுவிட்டார்.

பூங்கொடிக்கு பவனின் மேல் கோபம் இருந்தாலும், மிதுன்யா பவனை விரும்புகிறாள் என்று தெரிந்தவுடன், தன் கோபத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு, பவனிடம் வந்து,

"மிதுன் எங்க ராமை கல்யாணம் செய்துக்கிட்டு இந்த வீட்டுக்கும் எனக்கும் மருமகளா வருவானு ஆசைப்பட்டேன். ஆனால் அவ ஆசைப்பட்டது உங்களத் தான். அவளுக்கு இன்னு சமைக்கத் தெரியாது. குழந்தைத்தனமா விளையாட்டா ஏதாவது செய்தா கொஞ்சம் பொறுமையா சொன்னாலே கேட்டப்பா. அவளை நல்லா பாத்துக்கோங்க. இனி அவங்க தாத்தா எப்போ சமாதானம் ஆவாருனு தெரியலே. முடிஞ்சா அவங்க தாத்தாவை சீக்கிரம் சமாதானப்படுத்தி அவளை இங்கே அடிக்கடி கூட்டிட்டு வாங்க." என்று கூறிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்து கொண்டார்.

குந்தவியும், சுஷேணும் லட்சுமணன் அறையைவிட்டு வெளியே வரவே இல்லை. புகழின் கண்ணசைவில் மீனாட்சி மிதுன்யாவை அழைத்துவரச் சென்றார்.
ராமும், மிதுன்யாவும் ஒன்றாக இணைந்து வர மலையரசியின் மனம் இப்போது ஜோடிப் பொருத்தம் பார்த்து வருந்தியது. ராமின் வருத்தத்திற்கான உண்மையான காரணம் அறிந்திடாமல் அவனின் கலங்கிய கண்களும், குன்றி சுருங்கிய முகமும் அனைவரின் கோபத்தையும் மிதுன்யாவின் புறம் திருப்பியது .

ராமின் அருகே சென்ற மலையரசி அவனின் சிவந்திருந்த கண்களைக் கண்டு "என் பேரனை இப்படி கலங்க வெச்சிட்டியே டி. நீ அந்த பையனை விரும்புறதை மொதவே சொல்லியிருந்தா என் பேரன் உன் மேல ஆசைப்பட்டிருக்கமாட்டானே..." என்று புலம்பிட, பவனுக்குத் தான் அங்கே என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரிந்திடவில்லை.

'இவள் எப்போது தன்னை விரும்பினாள்!!!' என்று யோசித்தவனுக்குக் கிடைத்த விடை அவளின் மேல் கோபத்தை உண்டாக்கியது.

ராம் நேத்ராவிடம் முறையற்று பேசியதை மற்றவரிடம் மறைப்பதற்காகவும் அவனை யாரும் தவறாக நினைத்திடக் கூடாது என்பதற்காகவும் தன்னை விரும்பி மணந்ததாகக் கூறியிருக்கிறாள் என்று நினைத்து அவளின் மேல் கோபத்தை வளர்த்துக் கொண்டான்.

மிதுன்யாவைப் பார்த்து "நான் உங்க தாத்தாகிட்ட பேசனும்" என்று முகத்தில் கடுமையைக் காட்டிட, அனைவரும் அவன் கோபம் கண்டு என்னவோ ஏதோ என்று பதறினர்.

"இனி பேசுறதுக்கு என்ன இருக்கு? அதான் மிதுன் உங்க கூட வரத் தயாரா இருக்காளே. இன்னும் என்ன கேட்கனும்? வரதட்சணை, நகைனு எதுவும் எதிர்பார்த்திங்கன்னா.... நீங்க அதை கேட்கவே தேவையில்ல, எல்லாம் உங்க வீடு தேடி வரும்." என்று பாரி உரைக்க, அவனின் முன்கோபம் தலை தூக்கியது.

"நீங்க கொடுக்குற வரதட்சணைய வெச்சித் தான் என் மனைவிய வாழ வைக்கனுற அவசியம் எனக்கு இல்லே. என் மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு நான் இன்னும் தாழ்ந்தும் போகல. அப்படியே தாழ்ந்து போனாலும் உங்க காசை எதிர்பார்த்து ஒருநாளும் இருக்கமாட்டேன். எனக்கு அவர்கிட்ட சில உண்மைகளை சொல்லனும்" என்று தன் கோபத்தை வார்த்தைகளில் காண்பிக்காமல் கூறினான்.

மிதுன்யா அவனுடன் இருந்த இரண்டு நாட்களில் அவனின் கடுஞ்சொற்கள் பழகியதால் அவன் மறைத்து வைத்தக் கோபத்தை உணர்ந்து கொண்டாள்.

"என்ன உண்மை சொல்லப் போறிங்க?" என்று ஆளுக்கு முன்னதாக கேட்ட மிதுன்யாவை சற்றும் கோபம் குறையாமல் முறைத்துக் கொண்டிருந்தான் பவன்.
எப்போதும் போல் அவனது முறைத்தப் பார்வை அவளுள் சிறிது நடுக்கத்தை கொடுத்திட தலை தாழ்த்திக் கொண்டாள்.

"நான் கூட்டிட்டுப் போறேன்" என்று முன்வந்தான் ராம். மற்றவர்களையும் பொறுமையாக இருக்கும் படி கண்களால் சமாதானம் செய்துவிட்டு சென்றான். ராமுடன் இணைந்து மிதுன்யாவின் கையைப்படித்து அவளையும் தன்னோடு இழத்துச் சென்றான் பவன்.

உள்ளே வந்தவர்களைக் கண்ட லட்சுமணன் ஒன்றும் புரியாமல் அவர்களையே பார்த்திருக்க,
"நான் உங்ககிட்ட தனியா பேசனும்" என்று மிதுன்யாவை தன் கைப்பிடியில் வைத்துக் கொண்டே கூறினான். லட்சுமணன் கூறுவதற்கு முன்பே சுஷேண்-குந்தவி தம்பதியினரும், ராமும் வெளியே சென்றிருந்தனர்.

பொறுமையென்றால் என்னவென்றே அறியாதவன் பெரியவர் என்ற மரியாதைக்காக தன் பொறுமையை முகத்தில் மட்டுமே காண்பித்தான். வார்த்தைகளில் கடுமையே நிறைந்திருந்தது.

"ஐயா... உங்க பேரனும் பேத்தியும் உங்ககிட்ட என்ன சொன்னாங்கனு எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு உண்மையை சொல்ல வேண்டி இருக்கு. பொய் சொல்லி உங்க பேத்திய அழைச்சிட்டுப் போக நான் விரும்பலே." என்று ஆரம்பித்தவனை கை உயர்த்தி ஏதோ கூற வந்த லட்சுமணனிடம்,

தன் கைகளை கும்பிட்டு "தயவு செய்து நான் பேச வந்ததை பேசிடுறேன். அப்பறம் நீங்க என்ன சொன்னாலும் அதை ஏத்துக்கிறேன்." என்று உள்மூச்சு எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

தான் யார் என்பதையும், தனக்கும் நேத்ரா சில்க்ஸிற்கும் என்ன சம்பந்தம் என்பதையும் கூறியவன், ராம் மற்றும் நேத்ராவின் சச்சரவைத் தவிர்த்து தொழில் ரீதியான ஏமாற்றத்தினால் கோபத்தில் செய்ததாகக் கூறினான். "உங்க பேத்திய நான் கடத்திட்டு போய், மிரட்டி கட்டாயக் கல்யாணம் செய்துகிட்டேன். ஆனால் எனக்குனு ஒரு லைஃவ், குழந்தைங்கனு இருந்தா அது நிச்சயம் உங்க பேத்தியோடத் தான்ற முடிவுல தான் இந்த கல்யாணமே செய்துக்கிட்டேன். உங்க குடும்பத்தோட முழு சம்மதம் கிடைச்சா என் அம்மா அப்பாவை வர சொல்ற ஐடியால தான் நான் மட்டும் இப்போ தனியா இங்கே வந்தேன்.
என் வீட்ல என் அம்மா அப்பாக்கு எங்க கல்யாணம் நடந்தது தெரியும். அதேபோல உங்களுக்கும் விஷயம் தெரிஞ்சிருக்கும்னு நெனச்சேன். உங்க பேத்தி சம்மதிச்சா உங்ககிட்ட எப்படினாலும் சம்மதம் வாங்கிடலாம்னு தான் உங்க பேத்தி சம்மதத்தைக் கேட்டேன். ஆனால் இங்கே எல்லாரும் இது காதல் கல்யாணம்னு பேசிக்கிறாங்க. அது பொய்.

யாரு அந்த பொய்ய உங்ககிட்ட சொன்னாங்கனு தெரியாது. ஆனால் நான் சொன்னது நிஜம், உண்மைய சொல்லனும் நினைச்சேன் சொல்லிட்டேன். இதுக்கு மேல நீங்க எனக்கு என்ன தண்டணைனாலும் தரலாம்." என்று ஒரே மூச்சாகக் கூறி முடித்தான்.

லட்சுமணனுக்கோ பேரதிர்ச்சி. என்ன தைரியத்தில் இவன் இவ்வாறு பேசுகிறான் என்று அவனை பிரம்மிப்பாகப் பார்த்திருந்தார்.
வந்ததிலிருந்து அவனின் பேச்சுத் திறமையைக் கண்டு வியந்தவர் தற்போது அவனின் பிசிறற்ற, துணிவுப் பேச்சில் அவன் கூறியது அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து கொண்டார்.

பற்றாக்குறைக்கு அபி கூறிய தொழில் தொடர்பான கடத்தல் என்ற வார்த்தைகளும் அவரை நம்ப வைத்தது.

"உங்க வார்த்தைய நம்புறேன். உங்க அப்பா Mr. கங்காதரன் தானே. நல்ல மனிதர், உங்களைப் போல தைரியமானவரும், துடுக்கானவரும் கூட. உங்களை காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டதா சொன்னது என் பேத்தி தான்.

இதுக்கு இது தான் தீர்வுனு நீங்களா முடிவு செய்தது தப்பாகிடுச்சி. என்னைக்குமே ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு தீர்வாகாது. தப்பு செய்தாலும் அதை சரிசெய்ய துணிந்து முன் வந்து நிக்கிற உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனால் என் குடும்பத்தோட முடிவு தான் என் முடிவாவும் இருக்கும்
மிதுனோட அம்மா அப்பாகிட்ட இதைப் பத்தி பேசுறேன். என் பேரன்கிட்டேயும் பேசனும் ஏன்னா அவன் தான் மிதுனை கல்யாணம் செய்துகிறதா இருந்தது. அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் கூட முடிவு செய்திருந்தோம்...." என்று நிறுத்தினார்.

"என்னை பிடிச்சிருக்குனு சொன்னதுக்கு ரெம்ப நன்றி ஐயா. எல்லார்கிட்டேயும் கலந்து பேசி உங்க முடிவை சொல்லுங்க. ஆனால் மிதுன்யா சம்மதம் இல்லாம அவளுக்கு வேற கல்யாணம் செய்து வைக்க நெனச்சா திரும்பவும் வந்து நிப்பேன்." என்று ஏதோ ஒரு உள்ளணர்வின் உந்துதலில் உரைத்தவன் தன் அவசர புத்தியை நினைத்து தன்னைத் தானே கடிந்து கொண்டு

"நான் கிளம்புறே ஐயா." என்றான்.

"ஆமா, அது என்ன என் மனைவிய மட்டும் உரிமையா பாட்டிமானு கூப்பிட்டே!!! என்னை ஐயா... ஐயானு கூப்பிடுற. உன் மனைவிக்கு தாத்தான்ற உறவுல சொல்லிக்கலேனாலும் உன் பாட்டிமாவின் கணவன்ற முறைல என்னை பாட்டையானு கூப்பிட வேண்டி தானே?" என்று உரிமையாக அவனிடம் கோபித்துக் கொண்டார் லட்சுமணன்.

அவரின் மறைமுக சம்மதத்தில் பவனின் கண்கள் ஒரு நொடி பிரகாசமாகி தன்னவளைத் தழுவியது. அடுத்த நொடி அவளின் கண்ணீர் கோடுகள் அவனுக்குள் கோபத்தைத் தூண்டிட, அவளைத் தவிர்த்து அங்கிருந்து விடைபெற்றுச் சென்றான்.

லட்சுமணன் ராம் மற்றும் மிதுன்யாவிடம் இது பற்றி வினவிட, தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இப்படி பொய்யுறைத்ததாகக் கூறினாள் மிதுன்யா.

"இதை தாத்தாகிட்ட சொல்லிருக்கலாமே டா மிதுன் குட்டி. சரி இப்போ கேட்குறேன் உண்மைய சொல்லு. உனக்கு அந்த பவனை பிடிச்சிருக்கா?" என்று கனிவாக வினவினார் லட்சுமணன்.

"உங்க விருப்பம் தாத்தா. இப்போ உங்களுக்கு அவரைப் பத்தி தெரிஞ்சிடுச்சி. இப்போ நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நான் சம்மதிக்கிறேன்." என்றாள்.

"ராம் நீ என்ன நிறைக்கிற அந்த பையனைப் பத்தி? "

"நல்ல பையன் தாத்தா... கெட்டப் பழக்கம்னு எதுவும் இல்லே. அப்பாவோட தொழிலை கவனிச்சிகிறது மட்டும் இல்லாம சொந்தமா ஃபர்னிச்சர் ஷோரூம் தொடங்கியிருக்கான். அதிலேயும் நல்ல சக்ஸஸ் தான். நாம வெளிய மாப்பிள்ளை தேடியிருந்தா நிச்சயமா இந்த மாதிரி பையனைத் தான் தேடியிருப்போம்.

ஆனால் அவன் செய்த காரியத்துக்கு அவன் ஓகே வா இல்லேயானு அத்தை, மாமா, மிதுன்கிட்ட தான் நீங்க சம்மதம் கேட்கனும்." என்றிட இப்போது தன் பேரனை பூரிப்புடன் பார்த்தார்.

என்னதான் பகை என்ற போதும், கோபம் குறையாத நிலையிலும் ராமின் இந்த பதில் அவர் எதிர்பார்த்திடாத ஒன்று. விஷயம் கேள்விப்பட்டு முதலில் மறுத்தது குந்தவி தான்.

"குந்தவி உன் அப்பா எதையும் யோசிக்காம செய்யமாட்டாரு ம்மா... அவருக்கு நம்பிக்கை இருக்கிறதாலத் தான், நம்ம வரைக்கும் விஷயத்தை கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு அந்த பையன் மேல சந்தேகம் இருந்திருந்தா நிச்சயமா அவன்கிட்டயே முடியாதுனு பதில் சொல்லி அனுப்பிடுப்பார். அதுவும் நம்ம மிதுனுக்கு ஒன்னுனா அவர் சும்மா விடுவாரா!!! இந்த காரியத்தைச் செய்தவன் ஒரு மோசமானவனா இருந்திருந்தா இன்னேரம் இந்த வீட்டைவிட்டு உயிரோட போயிருக்க முடியுமா யோசி?

இப்போ நீ வேண்டாம்னு சொன்னாலும் உன் அப்பா மிதுனுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடுவார் தான். உன்னை ஒரு போதும் கட்டாயப்படுத்தமாட்டார். நான் அவரு மேல இருக்க நம்பிக்கைல பவனுக்கு ஓகே சொல்றேன். உன் விருப்பத்தை நீ உன் அப்பாக்கிட்ட சொல்லிடு." என்று கூறிவிட்டு சுஷேண் சென்றுவிட்டார்.

"அம்மா, எனக்கும் ராமுக்கும் கல்யாணம் இல்லேனு ஆகிடுச்சி. இனிமே எனக்கு கல்யாணம் ஆனாத்தான் ராம் மச்சினும் கல்யாணம் செய்துக்க ஒத்துக்குவாங்க. அடுத்தவாரம் நடக்கப்போற நிச்சயதார்த்தத்தை நிறுத்திட்டு எனக்கு மாப்பிள்ளை தேடினா ஏன்? என்ன? ஏது?னு கேள்வி வரும். அது தேவையில்லாம நம்ம குடும்பத்துக்குத் தான் அவபெயர் தேடித்தரும். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கம்மா..." என்று மிதுன்யா எடுத்துக் கூறிட குந்தவி மேலும் தவித்துப் போனார்.

"அதுக்காக தெரிஞ்சே எப்படி டி உன்னை அந்த பையன் கூட அனுப்பி வைப்பேன்?"

"தாத்தாவே சொல்லும் போது நீங்க ஏன் ம்மா பயப்படுறே!!!"

"நான் உன்னைப் பெத்தவ டி. எனக்கு அந்த பயம் இருக்கத் தான் செய்யும். ஆமா... நீ ஏன் இந்த தாலிய கலட்டலே. உனக்கு அந்த பையன் மேல விருப்பம் இருக்கா என்ன!!!" என்று தன் சந்தேகத்தை வினவினார்.
இந்த இரண்டு வார மனவேதனை அவளுக்குப் பல பாடங்களை கற்றுக் கொடுத்திருந்தது. மிகவும் பொறுமையாக முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டிடாமல்

"நான் விரும்பிருப்பேன்னு நீங்க நெனைக்கிறிங்களா?"

"பின்ன ஏன் என்கிட்ட சொல்லவும் இல்ல?"

"நீங்க கூட தான் ராம் மச்சானுக்கும் எனக்கும் நிச்சயம் பண்ணப்போறதை என்கிட்ட சொல்லவே இல்லே. அது தெரிஞ்சிருந்தா நானே உங்ககிட்ட சொல்லிருப்பேன். சரி இப்போ நீங்க என்ன பதில் சொல்லப்போறிங்க?"

"எத்தனை முறை கேட்டாலும் முடியாது தான் என்னோட பதில்..." என்று உறுதியாகக் கூறினார் குந்தவி.
நாட்கள் கடந்திட மிதுன்யாவின் பத்து நாள் போராட்டத்திற்குப் பின் குந்தவி அறைகுறை மனதாக சம்மதித்தார். இதற்கிடையே சுனைனாவும் வந்து சென்றிருந்தாள்.

குந்தவியின் மனம் மாறுவதற்குள்ளாகவே அனைத்தும் முடிந்திட வேண்டும் என மிதுன்யா ராமிடம் கேட்டுக் கொள்ள, உடனடியாக பவனின் தந்தையை அழைத்து விஷயத்தை தெரிவித்தான்.

பவனின் அன்னை, தந்தை வாரணாசி வந்து லட்சுமணனை சந்தித்தனர். ஒருவருக்கொருவர் இயல்பாகப் பேசிக் கொள்ளவில்லை தான். அதே நேரம் முகம் சுழிக்கும் படியாகவும் நடந்திடவில்லை.
வீட்டார் அனைவரின் முன்னிலையிலும் மீண்டும் திருமணம் நிகழ்த்திட நினைத்து திருமணத்திற்கு நாள் பார்த்திட மிதுன்யாவும் பவனும் மறுத்துவிட்டனர். எனவே வரவேற்பு மட்டும் வைத்துக் கொள்ள முடிவாகியது. வாரணாசியில் ஒருநாளும், மதுரையில் ஒரு நாளும் என இரண்டு நாள் குறிக்கப்பட்டது.

வாரணாசி வரவேற்பன்று சுனைனாவிற்கு பரிட்சை இருந்ததால் கலந்து கொள்ள முடியாது என்றுவிட்டாள். மதுரை வரவேற்பிற்கு மும்பையிலிருந்து நேரே மதுரை வந்துவிடுவதாகக் கூறியிருந்தாள்.
நேத்ராவும் பாரியை சந்தித்து கான்ட்ராக்ட்டை முடித்துக் கொள்ளும் படி கேட்டுப் போராடினாள். இதற்கு மேல் ஒப்பந்தத்தைத் தொடர்வது என்பது இந்த திருமணத்தின் அர்த்தத்தை மாற்றிவிடும் என்று பலமுறை எடுத்துரைத்தும் அவர் மறுத்துவிட்டார். அபினவ்ஐ சமாதானப்படுத்த உதவும் என்று நினைத்து சிறிது காலம் செல்லட்டும் என முடிவெடுத்தாள்.

அபினவ் நேத்ராவின் மேல் வருத்தத்தில் இருந்தான். ஃபோன் செய்தாலும் அவன் எடுப்பதில்லை, நேரில் பார்த்தாலும் தெரியாதவர் போல் விளகிச் சென்றான். அவனால் பவனை தன் அண்ணன் இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை.

ஆரம்பத்திலிருந்தே கமலை பிடிக்காமல் போய்விட்டது. இன்று வரை பவனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறான். யாரும் அவன் பேச்சை காதில் வாங்குவதாக இல்லை.

இதோ இன்று மாலை வாரணாசியில் வரவேற்பு. அதற்கான வேலைகள் தான் மும்பரமாக நடந்துகொண்டிருக்கிறது.
-ஊடல் கூடும்​
 
Top