• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
மாலை வரவேற்பிற்கு உண்டான ஏற்பாட்டை ராம் மற்றும் ஆரவ் பார்த்துக் கொள்ள, அபினவ் எதிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தான்.

மயில் தோகை வண்ண பட்டுப்புடவையும் அதில் செய்யப்பட்டிருந்த கல் மற்றும் ஜரிகை வேளைப்பாடும் முந்தானையில் வடிவமைக்கப் பட்டிருந்த இரட்டை மயில் டிசைனும், அதனை வட இந்திய முறையில் முந்தானையை முன்பக்கமாக வைத்துக் கட்டி, அழகுநிலையத்தின் உபயத்தில் அளவான ஒப்பனையில் மேடையில் அருகில் இருக்கும் ஆண்மகனுக்கு இணையான நிமிர்வுடன் நின்றிருந்தாள் மிதுன்யா.

மனையாளின் மிதமிஞ்சிய அழகுக்கு சலைக்காதவனாய் தன்னவளின் ஆடை வண்ணத்திற்கு பொருத்தமாய் இளம்பச்சை வர்ண ஷர்வானியில் ஆணழகனாய் நின்றிருந்தான் அவளின் மணாளன்.

தன் தந்தை வீட்டு சொந்தங்கள், அண்டை அயலார், தொழில் துறை நண்பர்களில் தனக்குப் பழக்கமானவர்கள், குடும்ப நண்பர்கள் என தனக்குத் தெரிந்த அனைவரையும் பவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் பெண்ணவள்.

சர்வசாதாரணமாக அவனின் தோள் திருப்பி அழைப்பதும், உள்ளங்கையோடு கைகோர்த்து நிற்பதும் என அவளின் இந்த நடவடிக்கையை அவன் நிச்சயம் எதிர்பார்த்திடவில்லை.

அவளின் தோழிகள் மூவர் தத்தம் கணவருடனும் ஒரு பெண் தனியாகவும் மேடையேறிட அவர்களையும் அறிமுகம் செய்து வைத்தாள். தோழிகள் அனைவரும் ஒன்றாக குழுமிட,

"இது தான் என் ப்ரெண்ட்ஸ்... பஞ்சபாண்டவி கேங்..." என்று பற்கள் அனைத்தும் தெரிய, அவனுக்கு அறிமுகப்படுத்தினாள்.
தோழிகள் இருவருக்கும் வாழ்த்து கூறினர்.

கல்யாணம் ஆகாத ஒருபெண்ணை அனைவரும் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். "உனக்கு எப்போ மச்சி கல்யாணம்... நம்ம கேங்ல நீ தான் இன்னும் சிங்கிள்..."

"அவளுக்கு என்ன அவளோட அத்த பையன் இருக்கான் எப்போனாலும் தூக்கிட்டு போய் கல்யாணம் செய்துக்குவா... அப்படித்தானே?..." என்று மற்றோரு பெண் கூறினாள்.

"எனக்கு என் அத்த பையன்லாம் வேண்டாம் பா... இப்போ தான் நம்ம ராம் மச்சான் ஃபிரீயா தானே இருக்காரு. அவரையே கரெக்ட் பண்ணி கல்யாணம் செய்துக்கப் போறேன்..." என்றாள். மிதுன்யா அவளைத் தான் ஆஆஆவென வாய்பிளந்துப் பார்த்திருந்தாள்.

"ஆனாலும் நம்ம மிதுன் சான்ஸே இல்லே மச்சி, என் கல்யாணதுக்கு வீட்ல பெர்மிஷன் கேட்டுட்டு அவ கல்யாணத்தை முடிசிட்டு வந்துட்டா பாரேன்..." என உண்மை அறிந்திடாமல் புதுமணப்பெண் மிதுன்யாவை கிண்டல் செய்தாள்.

அதற்கும் மிதுன்யா கோபம் கொள்ளாமல் "ச்சீ போ..." என்று சிணுங்கலாய் கூறினாள்.

"பாருடா வெட்கத்தை... இதுக்கே இப்படினா மத்த விஷயம்லா பாஸ் ஆகிடுவேயா!!!" என்று கிசுகிசுப்பாக வினவினாள் ஒருபெண்.

மற்றொரு பெண்ணோ... "எல்லாம் நம்மகிட்ட மட்டும் தான் ..." என்று கூறியவள் அருகில் இருப்பவளின் காதுக்குள் அடுத்த வார்த்தைகளைக் கூறிட அங்கே சிரிப்பு சத்தம் ஆட்சி செய்தது.

இதுவரை பேசிய அனைத்தும் பவனின் காதுகளுக்கும் கேட்க, தன்னவளின் மனதைப் படித்திட அவளின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அவளோ தன் தோழிகளுடன், தன் இயல்பு மாறாமல் அவர்களின் கிண்டலுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் இன்முகமாகவே நின்றிருந்தாள். அவளின் செயலில் அவனால் எதுவும் கண்டுகொள்ள முடியாமல் போனது. ஆனாலும் அவளின் இயல்புப் பேச்சிலும் செய்கையிலும் கவரப்பட்டவன் அவளின் மாற்றத்தை அந்தப் பொழுதில் ரசித்திட மட்டுமே செய்தான்.

அவள் தன் தோழிகளோடு செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்க, பவனோ அருகில் இருக்கும் தன் தம்பியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அதிரடியாக அவன் முழங்கைக்குள் தன் கையைக் கோர்த்து தன்னருகே இழுத்தாள் அவனவள். அவள் மேல் மோதி நின்றவன் அதிர்ந்து பின் தன் சுயம் பெற்று ஃபோட்டிவிற்கு போஸ் கொடுத்தான்.

அதன்பின் அந்த தோழியிடம் மொபைலைப் பெற்று அவனுடன் ஜோடியாக செல்ஃபி எடுத்துக் கொண்டாள். அவளின் முகமலர்ச்சியை ஃபோனில் கண்டவன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனான்.

முதன் முதலாக அவளைக் கடத்திச் செல்லும் போது ரிவர் வியூ மிரரில் அவனை கோபமாகவும், அறுவறுப்பாகவும் கண்ட கண்கள் இன்றோ ஜொலித்தது. ஒவ்வொரு முறையும் அவனை வெறுப்பாகப் பார்த்த பார்வை இன்றோ குறும்போடு அவனை நோக்கியது.

அந்த மதிமுகத்தைக் கண்டவன் மதிமயங்கி சுற்றம் மறந்து நின்றான்.
"பவன்..." என்று தன்னவளின் உலுக்கலில் மீண்டவன் அவளைப் பார்த்து,
"என்ன?" என்று புருவமத்தியில் சிறிய முடிச்சுடன் வினவினான்.

"என்ன வா? உங்கள கனவுலகுல இருந்து நனவுலகுக்குக் கொண்டுவரதுக்குள்ள... அப்பப்பப்பாஆஆஆ.... ஓஓஓ காட்..." என்று கண்களை உருட்டி, அவனைப் பார்த்திட அவனின் ரசனைப் பார்வை அவளிடம் நிலைத்திருந்தது.

மீண்டும் ஒருமுறை "பவன்..." என்று உலுக்கினாள்.

"ஓஓஓ... சாரி... சாரி..." என்றவன் அவளின் தோழிகளுடன் இணைந்து நிற்க, ஃபோட்டோ கிராஃபர் தன் புகைப்படக் கருவியில் பதிவாக்கிக் கொண்டார். அவளை பிரம்மிப்பாகப் பார்த்தான் பவன்.

அவளின் நடவடிக்கையில் புதுவிதமான வித்தியாசம் தெரிந்த போதும் எதுவும் கேட்கவும் முடியாமலும், சொல்லவும் முடியாமலும் அனைத்திற்கும் அமைதிகாத்து சின்ன சிரிப்புடனும், நிமிர்வுடனும் நின்றிருந்தான்.

அதேநேரம் அவளை சைட்டடிக்கவும் தவறவில்லை. தன்னவளை ரசிக்கும் ஆவலில் நொடிக்கொருமுறை அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அவளில் முகபாவனை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருந்தது. மேலும் அவளின் கண்கள் யாரையோ தேடிக் கொண்டிருந்தது. அதனை கவனித்தவன் அவளிடம் என்னவாயிற்று என்று கேட்க எத்தனித்த நேரம் கமல் அவளிடம் வினவியிருந்தான்.

"என்னாச்சு அண்ணி? யாரைத் தேடுரிங்க?" இவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த வெறுப்பு மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ள, அவனை வெறுப்பாகப் பார்த்து "ஒன்னுயில்ல" என்றுவிட்டு திரும்பிக் கொண்டாள்.

பவனுக்கு அவளின் முகமாற்றம் மீண்டும் குழப்பத்தைத் தந்தது. இவ்வளவு நேரம் இருந்த சிரித்த முகம் இப்போது முற்றிலுமாக மாறியிருந்தது. அவளின் தவிப்பு அதிகரிக்க அதிகரிக்க, தான் கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்துக் கேட்டான்.

"என்னாச்சு? ஏன் டென்ஷனா இருக்கே?" என்று அவளின் தவிப்பை தன் முகத்தில் ஏந்திக்கொண்டு கேட்டான்.

"உங்களுக்கு சொன்னா புரியாது." என்று சிடுசிடுத்தாள்.

பவன் தன் தம்பியிடம் "கமல், ராமை அழச்சிட்டு வா" என்றான்.

கமலோ அண்ணனின் காதுக்குள் கடித்தான்.

"அவனை எதுக்கு வர சொல்றே... அதுவும் என்னை..... என்னாலேலாம் போக முடியாது. நான் அவன்கிட்ட பேசமாட்டேன்."

"சொன்னா கேளுடா. ராம் வந்தாத் தான் அவளுக்கு என்ன வேணும்னு சொல்லுவா... நீ இப்பவே போய் அவனை வர சொல்லு..." என்று முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டு சொன்னான்.

அண்ணனின் கட்டளையை மறுக்க முடியாமல் "சரி போறேன்..." என்று அண்ணனை முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான் கமல்.

ஆனால் ராம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த பார்ட்டி ஹால் முழுதும் தேடிப்பார்த்துவிட்டான். பஃபே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோட்டப்பகுதியிலும் பார்த்துவிட்டான். அங்கேயும் இல்லை.
தன் தமையனிடம் சொல்ல நினைத்து மீண்டும் ரிஸப்ஷன் ஹாலுக்குள் நுழைந்திட அங்கே மேடையில் மிதுன்யா மயக்கநிலைக்குச் சென்று கொண்டிருந்தாள். அதனைக் கண்டு "அண்ணி" என்று கத்திக் கொண்டு ஓடி வந்தான் கமல்.

அதற்குள் பவன் அவளைத் தாங்கிப் பிடித்திருக்க, மிதுன்யாவின் அத்தைமார்களும் மாமன்மார்களும் மேடையேறியிருந்தனர். ஆரவ் தண்ணீர் எடுத்து வந்து தந்தான். அந்த ஏசியறையிலும் அவளுக்கு வேர்த்திருப்பதைக் கண்ட கமல், அருகில் இருக்கும் கிவ்ட் பாக்கில் இருந்து ஒரு அட்டையை பிய்த்து எடுத்து வீசத் தொடங்கினான்.

அபி விறைந்து சென்று சோடா எடுத்து வந்து கொடுத்தான். ஒரு நிமிடம் அனைவரும் பதற்றம் அடைந்திட என்ன செய்வது என்று அறியாமல் தவித்தனர்.

"ஏய்.... மித்து... மித்து... இங்க பாருடா... கண்ணைத் தெறமா... ஒன்னுயில்லைடா... கண்ணைத் தெறந்து பாரு ம்மா... மித்து...மித்துமா..." என்று மிதுன்யா முகத்தில் தண்ணீர் தெளித்து, அவளின் கன்னம் தட்டி எழுப்பிவிட்டு அவளை சோடா அருந்தச் செய்தான் பவன்.

அவனின் பதற்றம் மேடையருகே அமர்ந்திருந்த மலையரசியையும் கூட அசைத்துப் பார்த்தது. பொதுவாகவே மலையரசியை ஓரிடத்தில் அமர்த்தி வைப்பது என்பது முடியாத காரியம். லட்சுமணனுக்கு துணையாக அருகில் இருக்க வேண்டும் என்று தான் இன்று அமர்ந்திருந்தார். மிதுன்யா மயக்கமடைந்தவுடன் தன் மகன்கள் எவ்வளவு பதறினார்களோ அதைவிட அதிகமாக பதறிய பவனைக் கண்டு அவனுக்கு மிதுன்யாவின் மீதிருக்கும் அன்பை அறிந்து கொண்டார்.

ஆனால் மிதுன்யாவிற்கும் அவன் மேல் அன்பு இருக்க வேண்டுமே... நேற்று வரை யாரும் அறிந்திடாவண்ணம் அழுது கரைந்தவள் இன்று அவனுடன் ஜோடி போட்டு நிற்பதும் சிரித்துப் பேசுவதும் அந்த முதியருக்குத் தெரியாமல் இல்லை. மெதுவாக எழுந்து பேத்தியின் அருகே சென்றார் மலையரசி.

மேடையில் வந்து நின்ற குந்தவியைக் கண்டு கண்களால் அழைத்தாள் மிதுன்யா. மிதுன்யா தன் அன்னையை அழைத்தவிதத்திலேயே அவளின் அன்னையைத் தான் தேடினாள் என அறிந்து கொண்ட பவன், 'அதனை தன் தம்பியிடம் சொல்லியிருக்கலாமே, அவன் அழைத்து வந்திருப்பானே. அட்லீஸ்ட் என்கிட்டயாச்சு சொல்லிருக்கலாமே' என நினைக்கவும் தவறவில்லை.

"என்னடா? என்னாச்சு?" என்று அவளின் தலைதடவி கேட்க, குந்தவியின் காதருகே சென்று சொன்னாள்.

அடுத்த நிமிடம் குந்தவி இருக்கும் இடம் மறந்து மகளை கடிந்து கொண்டார்.

"உன்கிட்ட கேட்டு தானே டி நாள் குறிக்க சொன்னேன். இப்போ வந்துட்டு வீட்டுக்கு தூரம்னு சொன்னா என்னடி அர்த்தம்!!! உன்னோட ரிஸப்ஷனுக்கு நீ ஸ்டேஜ்ல நிக்கலேனா நல்லாவா இருக்கும்?" என்று பல்லைக் கடித்துக்கொண்டு திட்டினார். ஆகாரம் இன்றியும், வெகு நேரமாக நின்றிருந்ததும், தற்போது வந்த வயிறுவலியும் இணைந்து கொள்ள பெண்ணவள் மயக்கமடைந்திருந்தாள்.

பூங்கொடியும், மீனாட்சியும் குந்தவியை சமாதானம் செய்தனர். மெது மெதுவாக படி ஏறி வந்த மலையரசி அங்கு நடந்ததை விசாரித்து தன் பேரன் அபியை அவளுக்குத் தேவையானதை வாங்கிவருமாறு கூறிவிட்டு அவளை அருகில் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.

பவன் தனியாக நிற்பதைவிட லட்சுமணனுடன் அமர்ந்திருந்தால் தேவையற்ற கேள்விகளும், கலவரமும் குறையும் என நினைத்த மலையரசி, செல்லும் முன் பவனை சிறுது நேரம் தாத்தாவுடன் அமர்ந்திருக்குமாறு சொல்லிச் சென்றார்.

கங்காதரனோ என்ன செய்வது என்று அறியாமல் பாரி மற்றும் புகழுடன் இணைந்து நின்றிருந்தார். கண்களால் விமலாவையும், நேத்ராவையும் தேடிட அங்கு இல்லை என்றவுடன் நேத்ராவின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தார் 'நாட் ரீச்சபல்' என்று வந்தது. விமலாவும் நேத்ராவும் எங்கே சென்றிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
வெளியே சென்ற அபியும் வெகுநேரமாகியும் வராமல் போகவே மீனாட்சி, அறைக்கும் மண்டப வாயிலுக்குமாக நடைபயணம் செய்தார்.

மேடை காலியாக இருப்பதைக் கண்டு கமல் குழந்தைகளை மேடையில் ஏற்றிவிட்டு டான்ஸ் ஆடவிட்டான். ஆடி களைத்து ஓய்ந்திட, அவர்களுக்கு பிடித்தமான நடிகர், நடிகைகளைப் போல் நடித்துக் காண்பிக்க வேண்டும், அதனை அவர்களின் தாத்தாமார்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

பெரியோர்கள் இந்தக்கால நடிகர்களின் பெயரும் படத்தின் பெயரும் தெரியாமல் முழிக்க, அன்னை தந்தையர் குழந்தைகளின் நவரச பாவனைகளைக் கண்டு மகிழ என புதுமணத் தம்பதியரை மறந்தனர்.

காலதாமதமாகவே வந்த அபியின் முகம் கடும் கோபத்தில் இருந்தது. அதனை பவன் மட்டுமே கண்டிருந்தான். அபி தன்னிடம் எதுவும் பேசுவதில்லை என்பதால் அவனிடம் எதுவும் கேட்க இயலாது அமைதி காத்தான் பவன். சிறிது நேரத்தில் ஹாலுக்குள் நுழைந்த ராம் அபியின் அருகே சென்று அவனை சமாதானம் செய்ய முயன்றான்.

சரி... அண்ணன் தம்பிக்குள் ஏதோ தகராறு என்று நினைத்து ஒதுக்கி வைத்தவன் கண்கள், அவ்வபோது அவர்களை தழுவிச் சென்றது. ஏதோ அவன் மனதிற்கு சரியில்லை என்று பட்டது.

சிறிது நேரத்திலேயே மிதுன்யாவை வேறொரு சேலையில், மிதமான ஒப்பனையில் அழைத்து வந்து பவனின் அருகில் அமரவைத்தார் மலையரசி. ஸ்டேஜில் இருந்தபோது அவள் முகத்தில் தெரிந்த புன்னகை இப்போது காணாமல் போயிருந்தது.
சிறிது நேரம் பொறுத்திருந்தவனால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல்,

"ஆர் யூ ஆல்ரைட் நௌ?" என்று மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் வினவினான்.

"நாட் யட்" என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசிடவில்லை.

ஆதரவாக அவளின் கையைப் பிடித்திட சிறிய உச்சுக் கொட்டலுடன் தன் கையை நகர்த்திக் கொண்டாள்.

"இதோ பார் மித்து... நான் உன் வலியை என் வலியா நினைக்கிறேன். உன் வேதனைய உன்னோட சேர்ந்து விரட்டனும் நினைக்கிறேன். உனக்கு எப்பவும் நான் துணையா இருப்பேன் தைரியமா இருனு சொல்லத் தான் உன் கையைப் பிடிச்சேன்...அதுக்கு ஏன் இவ்வளோ ரியாக்ட் பண்ணுறே?" என்று அவள் என்றும் கண்டிறாத பவனாய் மாறி இன்று கர்மசிரத்தையாகக் கேட்டான்.

அடக்கிட நினைத்தும் முடியால் வெளிவந்த ஏளனச்சிரிப்பை சிந்தியவள், "இதைவிட பெரிய பெரிய வலியும் வேதனையும் தந்ததே நீ தான். அதை எல்லாம் மறந்து அதுக்கு மருந்து தேடி உன் தோளில் சாய்வேன்னு நினைச்சியா? என்னோட மனவேதனைய ஒரு தீண்டல் அதுவும் உன் தீண்டல் சரி செய்யும்னு நெனச்சேனா உன்னைவிட முட்டாள் யாரும் இல்லே.... ஒரு பொண்ணு உன்னை விரும்புறாளா இல்லேயானு தெரியாம உன்னால எப்படி என்னைத் தொடமுடியுது?" என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சீறினாள்.

அவன் பல்லைக் கடித்து தன் கோபத்தை அடக்கிட, அதனைக் கண்டவளுக்கு அவனிடம் மோதி முதல்முறை வென்ற திருப்தி கிடைத்திட களிப்போடு அமர்ந்திருந்தாள்.

தன் ஃபோனை எடுத்தவன் ஏதோ டைப் செய்து கொண்டிருந்தான். சில நிமிடங்களில் அவனுக்கு மெசேஜ் டோன் வர அவளின் முன் ஃபோனை நீட்டினான்.

அதில் சற்றுமுன் மேடையில், இருவரும் அவள் தோழியோடு எடுத்துக் கொண்ட படங்களை கண்டவள் ஒன்றும் புரியாமல் அவனை நோக்கிட,

"இந்த தீண்டல் கொள்கை, உபதேசம் எல்லாம் எனக்கு மட்டும் தான் போல... நானாவது என் உரிமைய உன்கிட்ட மட்டும் தான் காட்ட நெனச்சேன். ஆனால் நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஸ்டேஜ்ல எல்லார் முன்னாடியும் என் கைபிடிச்சி இழுக்குறதும், என் உள்ளங்கையோடு உன் கை கோர்த்துகிறதும்... அப்பறம் ஏதோ செய்தியே..." என்று யோசிப்பது போல் பாவனை செய்து,

"ஹா நியாபகம் வந்திடுச்சி... என்னை கனவுலகுல இருந்து கூட்டிட்டு வந்திங்கல்ல... எப்படி? எப்படி?... பல்வரிசை தெரிய செவ்விதழ் விரிச்சு...... சிரிச்சு, மூக்கை சுருக்கி, கண்ணை உருட்டி அப்பாபாபாஆஆஆ... என்ன ரியாக்ஷன் டி அது... இப்போ நெனச்சாலும் அப்படியே அள்ளி அணைச்சிக்கனும் போல இருக்கு..." என்றவனின் பார்வை அவளின் இதழ்களில் நிலைத்திட, அடுத்த நொடியே சுற்றும் உணர்ந்து அவளின் கண்களோடு தன் பார்வையை கலக்கவிட்டு,

"சத்தியமா அதைப் பார்த்தவன் எல்லாம் அடிச்சி சொல்லுவான் இது காதல் கல்யாணம்னு..." என்று இதழோரப் புன்னகையை வீசிவிட்டு அமைதியாக அமர்ந்து கொண்டான்.
அவனுடன் சண்டையிடும் ஆர்வத்தில் அவன் காதருகே ஏதோ சொல்லுவதற்கு சென்றிட,

"என்ன மிதுன் இங்கேயே ரொமென்ஸ் ஸ்டார்ட் பண்ணிட்டியா?"என்று தன் காதருகே கேட்க திடுக்கிட்டு திரும்பியவள், கண்டது தன் தோழிகளைத் தான்.

அவர்களுக்கு பதிலளிக்காமல் திருதிருவென முழிக்க, "பார்த்து டார்லிங் கண்ணு வெளியே வந்து விழுந்திடப் போகுது" என்று மறுபக்கக் காதில் அவளவன் உரைத்து கள்ளச் சிரிப்பு சிரித்தான்.

மற்றொருவளோ "இப்போ ஓகேவா மிது?" என்று அக்கரையாக அவளின் உடல்நலம் விசாரித்தாள்.
"ம்ம்ம்" என்று தலையை மட்டும் ஆட்டினாள் மிதுன்யா.

"நீங்க ரெண்டு பேரும் ஸ்டேஜ்ல ஜோடியா நின்னதைப் பாக்குறதுக்கே அட்டகாசமா இருந்தது. உங்க ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து கண்ணுபட்டிடுச்சு போல... ஆனாலும் உன்னைப் பார்த்தா இப்போ சமீபகாலமா லவ் பண்ணின மாதிரி தெரியலேயே... பல வருடமா லவ் பண்ணுற மாதிரில இருக்கு!!!... எங்ககிட்டய மறச்சிட்ட பாத்தியா!!!?" என்று அதிசயித்துக் கேட்டவளுக்கு என்ன பதில் தருவது என தெரியாமல்,
'பக்கத்துல இருக்குற எருமைக்கு கேட்டிருந்தா என்னை உண்டு இல்லைனு செய்துடுவானே' என மனதிற்குள் புலம்பிக் கொண்டே அவனை ஓரக்கண்ணால் பார்த்திட, மெல்லிய புன்னகையுடன் அவளைத் தான் பார்த்திருந்தான்.

"ஏய்... நாங்களும் இங்கே தான் இருக்கோம். நாங்க போனதுக்கு அப்பறம் உன் ரொமென்ஸை கன்டினியூ பண்ணு..." என்று மேலும் அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

தோழிகள் புறப்பட ஆயத்தாமாக இருந்த நேரம் செல்ஃபி எடுக்க மொபைல் கொடுத்த அந்த திருமணம் ஆகாத தோழியை அழைத்தாள் மிதுன்யா.

"பவன் நம்பர் எப்போ டி வாங்கினே?" என அவனிடம் காண்பிக்க முடியாத கோபத்தை தோழியிடம் காண்பித்திட,

"என்மேல ஏன்யா பாயுறே. உன்னவர் தான் என் நம்பரை கேட்டாரு. ஸ்டேஜ்ல இருந்து கீழ இறங்கும் போதே என் நம்பர் வாங்கி ஃபோட்டோ ஷேர் பண்ண சொல்லியிருந்தாரு. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட மெசேஜ் அனுப்பியிருந்தார்." என்றிட,

'சரியான கேடியா இருக்கான். பக்கத்துல இருந்த எனக்கு கூட தெரியாம நம்பர் வாங்கிருக்கான். இவன்கிட்ட ரெம்ப கவனமா இருக்கனும்' என்று தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டு தோழியை வழியனுப்பினாள்.

நெருங்கிய சொந்தங்கள் தவிற மற்றவர்கள் சென்றிருக்க அப்போது தான் கண்ணில் பட்டனர் நேத்ராவும், விமலாவும். தன் அன்னையின் முகம் சரியில்லாமல் இருப்பதைக் கண்ட பவன் அருகில் இருக்கும் நேத்ராவைக் காண, அவளோ கண்களில் கனலுடன் நின்றிருந்தாள்.

யாரை முறைத்துக் கொண்டிருக்கிறாள் என அவள் பார்வை சென்ற திசையை நோக்கிட, அங்கே நின்றிருந்த ராம் அவளைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தான். மீண்டும் நேத்ராவிடம் வம்புவளர்த்து வைத்திருக்கிறான் எனத் தோன்ற, கோபத்தில் இருக்கையை விட்டு எழுந்தவன் நின்ற இடத்தில் அப்படியே நின்றுவிட்டான்.
தன் பாட்டியின் பிடியிலிருந்து தன் கையை உதறிக் கொண்டு ஓடி வந்த மூன்று வயது பெண் குழந்தை ராமின் அருகே சென்றுத் தூக்கச் சொல்லி கை உயர்த்தியது.

இருவரும் பேசிக் கொள்ள மொழி தேவைப் படவில்லை. அவன் தூக்கிவுடன் தன் தேனிதழ் முத்ததை அவன் இரு கன்னங்களிலும் நிரப்பியது அந்த குழந்தை. பதிலுக்கு அவனும் முத்தமிட்டு கை காண்பித்து ஏதோ கூற, அவன் கை காண்பித்த இடத்தில் நின்றிருந்த தன் அன்னையைக் கண்டவாறே அவன் கழுத்தை இறுக்கி அணைத்துக் கொண்டது.

அதனைக் கண்ட அந்த குழந்தையின் அன்னையோ மேலும் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

-ஊடல் கூடும்.​
 
Top