• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
கங்காதரன் குடும்பத்தில் அனைவரும் லட்சுமணன் வீட்டிற்கு தயாராகிக் கொண்டிருக்க, நேத்ரா வெண்பாவையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் செல்லப் போவதாகக் கூறிட,

"அப்படினா யாரும் போக வேண்டாம்" என்று கமல் தன் தமையனின் இடத்தில் இருந்து முடிவெடுத்தான். கங்காதரன் மற்றும் விமலா எதுவும் கூறாமல் அமைதியாக சோஃபாவில் அமர்ந்து கொண்டனர்.

"கமல் நீ பண்றது சரியில்லை டா... உன்னால தான் அத்தையும் மாமாவும் ரெடியானவங்க கூட அப்படியே உக்காந்திருக்காங்க" என்றாள் நேத்ரா.

"சிவா நீயும் இந்த குடும்பத்துல ஒருத்தி தானே... நீ இல்லாம நாங்க மட்டும் போவோம்னு நீ எப்படி நெனச்சே!!!. போனா எல்லாரும் போறோம், இல்லேனா யாருமே போல... புரியுதா? நீ ஏன் வரலேனு சொல்றே? அதுக்கு மொதோ காரணம் சொல்லு?" என்று கட்டளைக் குரலில் கேட்டான்.

நேத்ராவோ வாய் மேல் கை வைத்து, "நீ எப்போ டா பெரிய மனுஷன் ஆனே... இந்த அதிகாரம் பண்ணுறே... பவன் வீட்ல இல்லேனா உன் அதிகாரம் தான் தூள் பறக்குது" என்று அவனை சீண்டினாள்.

"பேச்சை மாத்தாதே சிவா... நீ அந்த ராமுக்கு பயந்து தானே வரமாட்டேன்ற. ராம் இன்னு உன்னை தொல்லை பண்ணுறது எங்களுக்குத் தெரியாதுனு நெனைக்கிறேயா? இப்போ புதுசா வெண்பாகிட்ட வேற பழக ஆரம்பிச்சுட்டான்... அவனை நெனச்சாலே கோபமா வருது..." என்று திட்டலில் ஆரம்பித்து கடுப்பில் முடித்தான்.

"என்ன ஷார்ப் டா நீங்க ரெண்டு பேரும்... தனியா ரூமுக்குள்ள அடஞ்சியிருக்கிற மாதிரி தான் இருந்தது. ஆனாலும் இவ்வளோ தெரிஞ்சு வெச்சிருக்கிங்க..." என்று பாராட்டுவது போல் நக்கலடித்துக் கொண்டிருந்தாள்.

"இதுக்கு மேலேயும் தெரிஞ்சு வெச்சிருந்துக்கலாம். இன்னுமே நல்லதா போயிருக்கும்..." என்று கங்காதரன் நடுவில் புகுந்தார்....
"என்ன எல்லாரும் சேர்ந்து என்னை கலாய்க்கிறிங்களா!!!!..." என்று கடுப்புடன் வினவினான் கமல்.

"ஒருவழியா கண்டுபிடிச்சிட்டேயா? எங்கே நீ கடைசி வரையும் தத்தியாவே இருந்திடுவேயோனு நெனச்சுட்டேன்..." என்று இப்போது விமலாவும் இணைந்து கொள்ள...
"அம்மா..." என்று பல்லைக் கடித்தான்.
"டேய்... அமைதியா இரு... சும்மா காச்சி மூச்சினு கத்திக்கிட்டு... நீ மொதோ காரை எடு" என்று கங்காதரன் கட்டளையிட்டார்.

"ச்சே... ஒரு புள்ள பொறுப்பா இருந்தா உங்களுக்கு பிடிக்காதே..." என்று வாய்க்குள் முனுமுனுத்துவிட்டுச் சென்றான்.

அவன் வெளியே சென்றவுடன், "மாமா, அத்தே உங்க ரெண்டு பேருக்கும் காரணம் தெரியும்.... நீங்க எப்படியும் நைட் வந்திடுவிங்க...

அதனால அவங்க வீட்டல ஏதாவது சொல்லி சமாளிங்க... ப்ளீஸ்" இறைஞ்சுவது போல் கூறினாள்.
"குடும்பத்தோட வாங்கனு சொன்னாங்க டா... நீ இப்போ வரலேனா நீ எங்க குடும்பம் இல்லேனு ஆகிடாதா!!! இப்படி ஒரு உருத்தல் மனசுக்குள்ள வந்த பின்னாடி உன்னை எப்படி மா தெரிஞ்சே விட்டுட்டு போக முடியும்.

கமல் சொல்றது தான் சரி. நீ இப்போ வரலேனா நாங்களும் போகலே..."
சிறிது நேரம் யோசித்தவள், "சரி மாமா நான் வரேன்..." என்று அரைகுறை மனதுடன் கங்காதரனுக்காக சம்மதித்தாள்.
அடுத்து வந்த மூன்று நாட்களும் லட்சுமணன் வீட்டில் அனைவரும் ஒன்று குழுமிட அனைவருக்கும் நல்லிணக்கம் தோன்றியது. மிதுன் மற்றும் பவன் இருவரின் சீண்டல்கள் பெரியோர்களுக்கு செல்லத் தீண்டலாகத் தான் தெரிந்தது.
ராம் அபியிடம் கூறியது போல் நேத்ராவிடம் எந்த வம்பும் செய்யாமல் இருந்தான். அதே போல் நேத்ரா, கங்காதரன்-விமலா தம்பதியரின் மகள் அல்ல என்று இப்போது தான் அனைவரும் தெரிந்து கொண்டனர்.

நேத்ராவின் குணமும், பேச்சும் அவளை இக்குடும்பத்தை விட்டு தனியாக பிரித்துப் பார்க்க யாராலும் முடியவில்லை. அனைவரும் அவளுடன் சகஜமாகவே பழகினர்.
அதே போல் வெண்பாவின் மழலை பேச்சு அனைவரையும் தொற்றிக்கொள்ள சில நேரங்களில் அவளைப் போல் தப்பாத்தி(சப்பாத்தி), அத்தத்தோ(அச்சச்சோ), நானுக்கு(எனக்கு) என்று பெரியோர்களும் இணைந்து பேசிக் கொள்ள சிறுமியின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.

ஆனால் எவரும் எதிர்பார்க்காத விதமாக இருவர் முட்டிக் கொண்டனர். பார்க்கும் போதெல்லாம் இருவருக்கும் மூக்குவிடைத்து பச்சைமிளகாயைத் தின்றது போல் முகத்தை உர் என்று வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க முறைத்துக் கொண்டனர்.

கமலை லட்சுமணன் குடும்பத்தார் எவரேனும் பாராட்டிவிட்டால் போதும் அபியின் நாடி, நரம்பு, ரத்தம் எல்லாம் கொதித்து கொந்தளித்துவிடுவான். அதே போல் அபியின் செயலை கங்காதரனோ, விமலாவோ முக்கியமாக நேத்ரா புகழ்ந்துவிட்டால் போதும் அபியுடன் சேர்த்து அவர்களையும் முறைக்க ஆரம்பித்துவிடுவான் கமல்.
மூன்றாம் நாள் இரவு விமானத்தில் கங்காதரன் குடும்பம் மதுரை புறப்பட்டனர்.

பெண்ணாகப் பிறந்தாலே சந்திக்க வேண்டிய, ஜீரணித்துக் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை தான் இப்போது மிதுன்யாவிற்கும். பிறந்த இல்லம் பிரிந்து புகுந்த இல்லம் செல்வது.

கணவன் இல்லத்தில் வருடங்கள் கடந்து குழந்தைச் செல்வங்களுடன் எவ்வளவு தான் சந்தோஷமாக இருந்தாலும் கூட இந்த ஒரு நாளை நினைக்கும் போது பெண்கள் மனதில் தோன்றும் வலியை பிரம்மனாலும் கூட மாற்றியமைக்க முடியாது.

மிதுன்யா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன!!! வாய் வார்த்தைகள் இன்றி கண்கள் மட்டுமே அழுகை மொழி பேசிட, லட்சுமணன் குடும்பத்தார் அவளை அணைத்து ஆருதல் கூறி வழியனுப்பினர்.

இறுதியாக ராமிடம் வந்தவள், எப்போதும் போல் அவனை கடுப்பேற்ற வேண்டி,

"மச்சான்,... ஐ மிஸ் யூ மச்சான்..." என்று அவனை அணைத்துக் கொண்டு கூறிட,
அடுத்த நிமிடம் அவளை தள்ளி வைத்தவன், "டோன்ட் கால் மி மச்சான். நீ மச்சான் மச்சானு கூப்பிட்டு கொஞ்சுறதுக்கு தான் உன் புருஷன் வந்தாச்சிலே, பின்னே ஏன் டி என்னை மச்சானு கூப்பிடுற... போ டி..." என்று உச்சக்கட்ட கடுப்பில் கூறினான். ஒரு நிமிடம் இருவரும் மனவிட்டு சிரிக்க, அவர்களின் மகிழ்ச்சி மற்றவர்களின் மனதை கொஞ்சம் இளகுவாக்கியது.

ஒருவழியாக ஏர்போர்ட் வரை மனநிறைவும், கண்ணீருமாக அனைவரும் வழியனுப்பிச் செல்ல பவன் மிதுன்யாவை அழைத்துக் கொண்டு குடியேற்றம் நோக்கி அழைத்துச் சென்றான்.

மிதுன்யா தன் குடும்பத்தை பிரிந்து செல்லும் வலியுடன் அன்றைய நாளின் கடத்தல் நினைவில் பவன் மற்றும் கமலின் மேல் மூண்ட கோபத்துடனும், தன் புகுந்த இல்லம் நோக்கி பயணித்தாள்.

வீட்டிற்கு வந்து ஆரத்தி எடுத்து அழைத்துச் செல்லப்பட, முறைப்புடனே உள்ளே நுழைந்தாள் மிதுன்யா. பவனும் கமலும் லக்கேஜ் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். தன்னுடைய சூட்கேஸை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே இருந்த விருந்தினர் அறைக்குள் நுழைந்தாள் மிதுன்யா.

"என்னடா ம்மா இங்கே ஏன் தங்குறே? மாடிக்குப் போலாமே?" என்று விமலா அவளிடம் வினவினார்.
"இல்லே... நான் இங்கேயே தங்கிக்கிறேன்... எனக்கு இந்த ரூம் போதும்..." என்று அமைதியாகப் பேசி தன் கோபத்தைக் காண்பித்தாள்.
விமலாவும் ரகசியம் பேசுவது போல் அவளின் அருகே சென்று, "இங்கே தங்கினா அவனை எப்படி நீ அடிச்சி துவைக்க முடியும்? மாடில அவன் ரூமுக்கு பக்கத்து ரூம்ல தங்கிக்கோ... அப்போ தான் அவனை அப்பப்போ செமத்தியா கவனிக்க முடியும்.." என்று மருமகளுக்கு ஐடியா கொடுத்தார்.

பிரச்சனை பெரிதாகிவிடாமல் தடுப்பதற்கு விமாலா கையாளும் குழந்தைத்தனத்தை எண்ணி வாய்விட்டு சிரிக்கத் தோன்றினாலும், அதனை மறைக்க கண்களை சுருக்கி முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு கோபமாக இருப்பது போல்,
"அதைவிட உங்க பையன் ரூம்லயே இருந்துக்கிறேனே... இன்னு வசதியா நினைச்ச நேரம்லா தூக்கிப் போட்டு மிதிக்கலாமே!!!..." என்று அவளும் நக்கலாக வினவினாள்.

"அட ஆமா... இந்த ஐடியா...ஆஆஆ" என்று இழுத்தவர் அவளின் முறைப்பில் பயந்தது போல் பம்மி... "நல்லாயில்ல... அது சரிப்படாது..." என்று மாற்றிக் கூறி 'வேற ஏதாவது செய்யனுமே?' என்று தனக்குதானே யோசிப்பது போல் பாவனை செய்தார்.

தன் மாமியாரைக் கண்டு கொண்டவள் "அத்தம்மா... உங்க ஐடியா என்னனு எனக்குத் தெரியும். இப்போ பக்கத்து ரூம்ல தங்கிக்கோனு சொல்லுவிங்க... அப்பறம் கொஞ்ச நாள்ல ஓரே ரூம்ல தங்கிக்கோனு சொல்லுவிங்க... இந்த சங்கதியே வேண்டாம்..." என்று மறுத்தாள்.

அந்நேரம் அந்த அறைக்குள் நுழைந்தான் பவன்.
"அம்மா... இவ இங்கே என்ன பன்னுறா!!! அவளை பெட்டி படுக்கைய எடுத்துட்டு என் ரூமுக்கு போக சொல்லு..." என்றிட,
விமலாவோ... 'கிழிஞ்சது.... நல்ல நேரம் பார்த்து வந்தே டா நான் பெத்த மவனே.... நானா சமாளிச்சிருந்தா கூட உனக்கு பக்கத்து ரூம்ல தங்கவாவது சரினு சொல்லிருப்பா... இப்போ சுத்தம் அடுத்த ப்ளைட்லயே டிக்கெட் போடு நான் என் அம்மா வீட்டுக்குப் போறேனு சொல்லப்போறா!!!' என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக மனதிற்குள் சலித்துக் கொண்டார் விமலா...

"நான் கண்டவங்க ரூம்ல தங்க மாட்டேனு சொல்லுங்க அத்தே... தாலி மட்டும் கட்டிக்கோ... அப்பறம் உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லேனு சொன்னவங்க ரூம்ல நான் ஏன் தங்கனும்!!!?" என்று உதட்டை சுழித்து பளிப்பு காட்டினாள்.

அவளை முறைத்தவன் நேரடியாக ஏதும் கூற முடியாமல் "இப்போ அவ என் ரூமுக்கு போலேனா இன்னு பத்து நாள்ல அவங்க வீட்ல இருந்து வரும்போதும் என் ரூம்குள்ள வரக்கூடாது... சொல்லிவைம்மா அவகிட்டே..."

"இப்பவும் வரமாட்டேன்... அப்பவும் வரமாட்டேன்... எப்பவும் வரமாட்டேன்னு சொல்லுங்க அத்தே..." என்று அவளும் விரைப்பாகக் கூறிவிட்டு தன் கைகளைக் கட்டிக் கொண்டு நேரே இருக்கும் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

சுதாரித்துக் கொண்ட விமலா இது தான் வாய்ப்பு என்று "டேய்... நீ என்னடா சொல்றது அவ இந்த வீட்ல எங்க தங்கனும், எங்க தூங்கனும்னு!!!?..... அவளுக்கு பிடிச்ச ரூம்ல அவ தங்குவா...... நாளைப்பின்னே தேவைப்பட்டா உன் ரூம்ல உன் பெட்ல கூட தூங்குவா...... உனக்கு என்னடா வந்துச்சு...... நீ மொதோ உன் ரூமுக்கு போ... சும்மா அவளை அதிகாரம் பண்ணிட்டிருக்கே..." பவனை அங்கிருந்து விரட்டிவிட்டார்.

"அம்மா நான் அவளுக்காகத் தான் சொல்றேன்..... அவங்க வீட்ல இருந்த வரநேரம் அவ தான் எல்லா திங்க்ஸையும் மாத்தி வைக்கனும்... அதுக்கு இப்போவே என் ரூம்ல வெச்சிகட்டும்... அவங்க வந்துட்டு போனதுக்கப்பறம் அவ எங்கேனாலும் தங்கிக்கட்டும்..." என்று அன்பாக ஆரம்பித்து கட்டளைக்குரலில் முடித்தான்.

"இன்னு பத்து நாள் இருக்குல... அது வரைக்கும் அவ இங்கே இருக்கட்டும். திரும்ப கப்போர்ட் அடுக்குறதுக்கு நீயும் ஹெல்ப் பண்ணு... சீக்கிரம் வேலை முடிஞ்சிடும்... அவளும் தனியா கஷ்டபடமாட்டா..." என்று விமலாவும் பதிலுக்கு பதில் பேசினார்.

"உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்க... நான் சிவாவே கூட்டிட்டு வரேன்" என்று கூறி வெளியேறினான்.

பவன் வெளியேறியவுடன் "அத்தம்மா வர்ற கோபத்துக்கு உங்க பையனை இல்லே உங்களை தான் கடிச்சி வெக்கனும் போல இருக்கு... எனக்கு சப்போர்ட் பண்ணுறா மாதிரியே உங்க பையனுக்கு ஃபேவரா தானே பேசுறிங்க... உங்களை..." என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவரை நெருங்கினாள்.

"அடிங்க... நானும் பாக்குறேன் ரெம்பத் தான் கத்துறே... கடிப்பேனு சொல்றே... மாமியார்னு கொஞ்சமாவது பயம் இருக்கா உனக்கு... லெஃப்டல விட்டா ரைட்ல திரும்பிக்கும்..." என்று விமலாவும் சவுண்டு கொடுக்க ஒரு நொடி பயந்து அப்படியே நின்றுவிட்டாள் பெண்ணவள்.


-ஊடல் கூடும்​
 
Top