• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
நேத்ரா ராமின் அணைப்பில் பாதுகாப்பாக உணர்ந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அடுத்த நிமிடமே அவனை வலுக்கட்டாயமாக தள்ளி நிறுத்தி....

"நீ யாருடா? எனக்கும், என் பொண்ணுக்கும் பாதுகாப்பு தரதுக்கு???... என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டா நீ எனக்கு வேண்டப்பட்டவன் ஆகிடுவேயா!!!??? என் பொண்ணை பார்த்துக்க எனக்குத் தெரியும்... வேற யாரும் இதுல தலையிடத் தேவையில்லை... என் பொண்ணை யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்கமாட்டேன்..." என்று தன் கண்களை துடைத்துக் கொண்டு, அழுகையை தொண்டைக்குழியிலேயே விழுங்கிவிட்டு திமிராக தலைதூக்கி பதில் கூறினாள்.

எப்போதும் போல் அவளின் திமிரில் தானும் கர்வம் கொண்டான் ஆடவன். நேத்ராவின் அருகே நெருங்கி நின்று கொஞ்சம் கடுமையான குரலில்,

"நீ என் பொண்டாட்டி, வெண்பா என் பொண்ணு... இதை யாராலும் மாற்ற முடியாது... அதே போல இனி உங்க ரெண்டு பேரையும் அந்த மதன் என்ன, எமனே வந்தாலும் என் அனுமதி இல்லாம நெருங்க முடியாது....." என்று அவளின் அடிகளை தன் நெஞ்சில் தாங்கியபடி கூறினான்.

ராம் தன்னை நெருங்கி நிற்பதை தடுக்க நினைத்து கைகளை வைத்து அவனைத் தள்ளினாள். அவனோ அவளின் தடைகளை மிகவும் சாதாரணமாக தகர்த்து, மேலும் முன்னேறினான். அவளால் அவனின் முன்னேற்றத்தை தடுக்க முடியாமல் போக அவனை அடிக்கத் தொடங்கினாள்.

அடித்து ஓய்ந்தவள் அவனின் வார்த்தைகளை உள்வாங்கி "நான் ஒன்னும் உன் மனைவி இல்லே..." என்றிட,

இருவருக்கும் நடுவே சீனச்சுவர் போல் தடுத்திருந்த அவளின் பட்டுக் கரங்களை அவளின் முதுகுப் புறமாக முறுக்கிப் பிடித்து தங்களுக்குள்ளான இடைவெளியை இன்னும் குறைத்திருந்தான் அந்த முரடன். அவளின் காதருகே குனிந்து, மணிரத்தினம் படத்தில் வருவது போல் மிகவும் அமைதியான குரலில்,

"உன்னைப்பத்தி தெரியுறதுக்கு முன்னாடியே உன்னை விரும்புறதா சொன்னவன் டி நான். இப்போ உன்னோட திமிரை முழுசா தெரிஞ்சிக்கிட்ட பின்னாடி விட்டுட்டு போய்டுவேனா என்ன!!! உன் திமிரு மொத்தமும் எனக்கே எனக்கு தான்னு கோட்டை கட்டிவெச்சி ரசிச்சிகிட்டு இருக்கேன்...

நீ என்னைவிட்டு விலகிச் செல்ல நினைக்கிற ஒவ்வொரு நொடியும் நமக்குள்ள இருக்க இடைவெளியக் கொறச்சி நெருக்கத்தை தான் அதிகப்படுத்துவேன் நான்... இன்னைக்கு மறுப்பு தெரிவிச்சதுக்கு தண்டனையா இந்த அணைப்பு போதும்னு நினைக்கிறேன்" என்றவன் தான் பேசிய வார்த்தைகளை முழுவதுமாக உள்வாங்கிடக் கூட அவளுக்கு கால அவகாசம் தராமல் மிச்சம் மீதி இருந்த இடைவெளியையும் குறைத்து அவளை இறுக்கமாக அணைத்திருந்தான்.

முதல் அணைப்பில் அவனைப் பாதுகாவலனாய் உணர்ந்தவள், இப்போதைய அணைப்பில் காதலனாய் உணர்ந்தாள். பெண்ணவள் தன் பெண்மையையும் சேர்த்து உணர்ந்திட அவளின் உடல் சில்லிட்டு உள்ளம் வரை சென்று தொட்டது அவன் அணைப்பு.

இடையைச் சுற்றி அணைத்திருந்த கைகளை மட்டும் சற்றே தளர்த்தி "அடுத்த முறை என்னை பார்த்து 'நீ யாரு? உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? என் பொண்ணைவிட்டு விலகிடு' அப்படி இப்படினு ஏதாவது சொன்னேனு வை என்னுடைய இதழ் பாஷை வேற மாதிரி தான் உன்னை வந்தடையும்..." என்று அழுத்தமான குரலில் கண்களில் குறும்பு மின்ன மொழிந்து அவளை விட்டு விலகிச் சென்றான்.

ராம் தன் அறையைவிட்டு வெளியேறிச் சென்றதைக் கூட உணராமல் அவனின் வார்த்தைகளில் மூழ்கிக்கிடந்தாள் அந்த இரும்பு மனுஷி. அவன் சொல்வது உண்மை தானே, அவனை விட்டு விலக நினைக்கும் ஒவ்வொரு முறையும் மனதால் நெருக்கமானவனாக உணரத் தோன்றுகிறதே... இதனை மாற்ற வேண்டும். அவனை விலகி நிறுத்த வேண்டும், முடியாவிட்டால் தான் விலகிச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அடுத்தாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தபின் தான் படுக்கைக்குச் சென்று தன் பிள்ளைச் செல்வத்தை, அல்லி மலரை அணைத்தாற்போல் படுத்துக் கொண்டாள் அவனின் தரு.

அங்கே பவனின் அறையில் சோஃபாவில் படுத்திருந்தவன், எப்போதும் போல் நடு இரவில் எழுந்து தன்னவள் உறங்கிவிட்டாளா என்று பார்த்தவன் விக்கித்து எழுந்து அமர்ந்தான்.

"மித்து... ஏய்... ஏன்மா? இன்னு தூங்காம இருக்கே? என்ன செய்து டா?" என்று அக்கறைமாக வினவினான்.

சோஃபாவில் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருக்கும் பவனைப் பார்த்தவாறே அமர்ந்த நிலையில் அவனை வெறித்துக் கொண்டிருந்தாள் மிதுன்யா. அதனைக் கண்டு தான் அவன் அதிர்ச்சியுற்றது.

"ஓஓஓ... நான் ஒருத்தி இந்த வீட்ல இருக்கேன்னு உங்க கண்ணுக்கு தெரியுதா?" என்று தன் கோபத்தை அடக்கி நக்கலாக அவன் கண் பார்த்து வினவினாள் மங்கையவள்.

இத்தனை நாள் அவள் கூறிய வார்த்தைக்காக அவன் ஒதுங்கியிருக்கவில்லை. அவள் கூறிய 'ஜடமாக நினைத்துக் கொள்' என்ற சொற்கள் அவனை காயப்படுத்திய போதும் அவளின் இழப்பும் ஏமாற்றமும் தான் அவள் இவ்வாறு பேசக் காரணம் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. தன் ஒதுக்கம் அவளின் கோபம் தனிய வழிவகுக்கும் என்றும், மேலும் அவள் மனம் மாற வாய்ப்புள்ளது என்றும் நினைத்து தான் ஒதுங்கியிருந்தான்.

எழுந்து வந்து அவள் அருகில் அவளை ஒட்டிக் கொண்டு அமர்ந்திட பெண்ணவள் நகர்ந்து அமர்ந்தாள்.

"நான் பேசுறது, உன் பக்கத்துல உக்காருறது, உன்னை தொடுறது, இது எதுவுமே உனக்கு பிடிக்காத போது என்னை நேருக்கு நேரா பாக்குறதை மட்டும் நீ எப்படி விரும்புவே!!! அதனாலத் தான் உன்னே தொல்லை செய்ய வேண்டாம்னு ஒதுங்கி இருந்தேன்.

இந்த உலகத்துலேயே உனக்குப் பிடிக்காத பெர்ஷன்ஸ் லிஸ்ட்ல 1st பெர்ஷனா நான் தான் இருப்பேன். அது பொய்னு உன்னால சொல்ல முடியுமா?" என்று அவளை நோக்கி பொய்னு சொல்லிரு பார்ப்போம் என்பது போல் சவாலாக வினவினான்.

"முழுசும் பொய்யும் கிடையாது... முழுசும் உண்மையும் கிடையாது....." என்று அவளும் ஏதோ ஒரு கோபத்தில் அவசரத்தில் படபடவென உண்மையை வார்த்தைகளால் கொட்டிவிட்டாளே ஒழிய அவன் என்ன நினைப்பான் என்று அதன் பின் யோசித்து அவனை நோக்கினாள்.

சிறிய நெற்றிச் சுருக்கத்தோடு அவளின் முகத்தைத் தான் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

"இப்போ நீ சொன்னது உண்மைனா எனக்கு ரெம்ப சந்தோஷம் தான். இப்போ நான் என்ன செய்யனும்? என்கிட்ட நீ என்ன எதிர்பார்க்குறே?" என்று வினவினான்.

அது அவளுக்கும் தான் தெரியவில்லையே.... பிறகு எப்படி அவனிடம் கூறுவாள். தான் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறோம்? தனக்கு என்ன வேண்டும்? அவனின் விலகலா? இல்லை நெருக்கமா? இரண்டையும் தான் தன் மனசு முழுதாக ஏற்கமாட்டேன் என்கிறதே என்று தன்னைப் பற்றிய சுய சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் அவள்.

பவனோ எண்பதுகளில் வந்த திரைப்படம் ஒன்று நினைவிற்கு வர, "நீ... நீ... பாட்டுக்க பட்டுனு 'நீங்க தொட்டாலே கம்பளிபூச்சி ஊருன மாதிரி இருக்கு.... உங்களைவிட்டு பிரியனும் நினைக்கிறேன்..... டைவர்ஸ் கிடைக்குமா... அதைத் தான் உங்ககிட்ட எதிர்பார்க்குறேன்னு...' சொல்லிடாதே... அது கொஞ்சம் கஷ்டம் தான்..." என்று அலரியடித்து பதில் கூறினான்.

அவனின் அவசர பதிலிலும், முக பாவனையிலும் கிளுக் என சிரித்தாள் பெண்ணவள்.

அவனும் பதிலுக்கு தன் தலையை சொரிந்து அசடு வழிந்துவிட்டு "சரி சொல்லு... நான் எப்படி நடந்துக்கனும்?" என்று அவன் அதிலேயே நின்றான்.

கொஞ்சம் மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் முழைத்திட "என்னைக் கேட்டா?...." என்று உக்கிரமாக கத்தியவள், பின் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு,

"கல்யாணத்துக்கு முன்னே வரைக்கும் எல்லாம் உன் விருப்பம் தான், எந்த கட்டுப்பாடும் இல்லேனு சொல்லிட்டு, இப்போ எல்லா விசயத்துலேயும் நீங்க நெனச்சது தான் நடக்கனும்னு சாதிக்கிறிங்க...." என்று தன் மனதை மறைக்காமல் உரைத்தாள்.

"சரி இனிமே உன்னை நான் ரூல் பண்ணலே... நாளைல இருந்து உனக்கு பிடிச்ச ரூம்ல இருந்துக்கோ. உன் விருப்பம் போல நீ என்ன வேணுனாலும் செய்யலாம். எங்கேனாலும் போகலாம். ஒரே ஒரு ரெக்வெஸ்ட் வெளியே எங்கேயாவது போகனுனா மட்டும் அம்மாகிட்ட அல்லது வீட்ல யார்கிட்டயாவது சொல்லிட்டுப் போ... சரியா?" என்று தன் அறையில் தங்கப் பிடிக்காமல் கூறுகிறாள் என்று நினைத்து பதில் கூறினான்.

"இப்படி விருப்பு வெறுப்பு இல்லாம சொன்னா எப்படி!!! நான் என்ன இதோ இந்த டேபில் சேர் மாதிரி தெரியிறேனா? இந்த ரூமுக்கு செட் ஆகலேனா, வேற ரூம்ல மாத்தி வைக்கிறதுக்கு...?" என்று மீண்டும் கோபமாக ஆரம்பித்தாள்.

அவளின் பேச்சில் அவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. அவளுக்கு தன் மேல் உள்ள பிடித்ததையும், அதனை வெளியே காண்பிக்க விடாமல் தடுக்கும் கோபத்தையும் நன்கு அறிந்து கொண்டான். இருந்தும் அவள் வழிக்கே சென்று அவளுக்கு உண்மையை புரிய வைக்க நினைத்து, கோபம் கொண்டது போல்,

"இப்போ என்னடி செய்யனுங்குற!!! என்ன சொன்னாலும் ஏதாவது குறை சொல்லிக்கிட்டு..... உனக்கு இங்கே இருக்கப் பிடிக்கலேனா நாளைக்கே எல்லாரும் கிளம்பும் போது நீயும் அவங்களோட போயிடு.... உனக்கு எப்போ என்னை பாக்கனும்னு தோனுதோ அப்போ வா..." என்று கோபமாக கத்திவிட்டு மெத்தையில் படுத்துக் கொண்டான்.

"ஓஹோ... உங்களுக்கு நான் அவ்ளோ ச்சீப்பா போய்ட்டேன்ல!!!! இந்த ரூம்ல இருந்து தான் துரத்துறிங்கனு பார்த்தா, வீட்டை விட்டே துரத்த ஐடியா பண்ணுறிங்கல்ல!!!!.... என் ராம் மச்சான் அப்பவே சொன்னாங்க, 'அவன் உன்னை திருப்பி அனுப்பிடுவான்னு', நான் தான் அன்னைக்கு நீங்க மன்னிப்புக் கேட்டதை வச்சி உங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்... நீங்க நல்லவருனு நெனச்சுடேன். கொஞ்ச நாள்... என் கோபம் எல்லாம் போனதும், உங்களோட சேர்ந்து புள்ளக்குட்டியெல்லாம் பெத்துக்கலாம்னு நெனச்சேன்...ஆஆஆ."

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவளை இழுத்து தன் அருகில் உடலோடு உடல் உரசிய படி தன் அணைப்பில் படுக்க வைத்திருந்தான் பவன்.

"என்னை விடுங்க... என் அம்மா வீட்டுக்கு போக சொன்ன நீங்க ஒன்னும் எனக்கு வேண்டாம்" என்று முரண்டு பிடித்தவளை,

"ஹேய்... போண்டா.... இன்னைக்கு தான் டி ஒரு நல்ல விஷயம் சொல்லிருக்க அந்த சந்தோஷத்தை கொஞ்ச நேரம் ஃபீல் பண்ணவிடுடி என் போண்டா.... டீ...." என்று கண்களை மூடிக் கொண்டே பதில் கூறினான்.

பவனின் சரிபாதியானவளோ அப்போது தான் தன் பேச்சை நினைவுகூர்ந்து வெட்கிச் சிவந்தாள். ஆனால் அதனை ஏற்க மனம் இல்லாமல்,

"என் கோபம் போனப் பின்னாடி தான் சொன்னேன். நான் இன்னும் கோபமா தான் இருக்கேன்...." என்று மிகவும் மெல்லிய குரலில் கூறினாள்.

"இருந்துக்கோ... இருந்துக்கோ... உனக்கு இல்லாத உரிமையா? தாராளமா கோபமா இரு.... ஆனா என் பக்கத்துலேயே இரு... எந்த ஊருக்கும் போக வேண்டாம், எந்த ரூமுக்கும் மாறவேண்டாம்.... எப்பவும் என் கூடவே இரு... இப்போதைக்கு கொஞ்ச நேரம் நெளியாம இரு...." என்று இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டு கண் திறவாமலேயே பதிலுரைத்தான்.

பஞ்சணையை அலங்கரித்திருந்த மல்லிகையையும், மரிக்கொழுந்தையும், பன்னீர் ரோஜாவையும் தாண்டி பெண்ணவளின் மணம் மன்னவனின் மனதை மயக்கிட, அதில் தொலைய இருந்தவன் ஒருநொடியில் தன்னை மீட்டு மஞ்சம்விட்டு எழுந்து மணவாட்டியைப் பிரிந்து சோஃபாவில் சென்று படுத்துக் கொண்டான். அவனின் போண்டாவும் அதனை உணர்ந்தாளோ என்னவோ அமைதியாக அவன் புறம் திரும்பி அவனைப் பார்த்தவாறே படுத்து உறங்கியும் போனாள். பவன் எப்போதும் போல் சிறிது நேரத்தில் எழுந்து அவள் உறங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டு, அவள் அருகே சென்று தலை கோதி,

"சாரி டி பொண்டாட்டி... உன்னை நெரைய கஷ்டபடுத்திட்டேன். இனி அதுக்கும் ஒருபடி அதிகமாகவே சந்தோஷமா வெச்சிப்பேன் டி.... ஐ லவ் யூ டி போண்டா..." என்று அவள் தூக்கம் கலையாமல் மென்மையான குரலில் கூறிவிட்டு, நெற்றியில் முத்தமிட்டான்.

கன்னத்திலும் முத்தமிடத் தோன்றிய ஆசையை அடக்கி, 'உன்னோட விருப்பம்னு சொல்லிருக்கேன். நீ முழுசா மனசு மாறி என்னை ஏத்துக்குற வரைக்கும் வெய்ட் பண்ணுறேன்' என்று மனதார நினைத்துக் கொண்டு மீண்டும் சோஃபாவில் படுத்து உறங்கினான்.

இது தினமும் நடப்பது தான். சாரியும், லவ் யூ வும் அவள் உறங்கியப் பின் சொல்வதை இந்த பத்து நாளில் வாடிக்கையாக்கியிருந்தான் அவளின் வில்லன்.
-ஊடல் கூடும்.​
 
Top