• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
காலைப்பொழுதில் தன் மருமகளைக் காண விமலா ஒருபுறமும், மருமகன் எந்த சூறாவளியில் சிக்கினாரோ என்ற தவிப்புடன் குந்தவி ஒருபுறமும் வலம் வந்தனர். ஆனால் இருவரின் பிள்ளைகளும் எந்தவித பரபரப்பும் இன்றி எப்போதும் போல் சகஜமாக அறையைவிட்டு வெளியே வந்தனர். இரண்டு தாய்மார்களுக்கும் 'என்ன நடந்தது?' என்று தன் பிள்ளைகளிடம் கேட்க தைரியம் இல்லை.

மலையரசியோ சும்மா இருக்கமாட்டாமல், "பெத்தவளுகளுக்கு பிள்ளைங்க முகத்தை வெச்சும் கண்டுபிடிக்கத் தெரியலே, சாடைமாடையா கேக்கவும் தெரியலே... இவளுங்க எல்லாம் இத்தனை வருஷமா என்னத்தை அம்மாவா இருந்தாளுங்கனு தெரியலே..." என்று நொடித்துக் கொண்டார்.

பவனோ எங்கே பாட்டியிடம் தனியாக சிக்கினால் பாட்டையாவின் மார்க்கம் கை கொடுத்ததா என்று கேட்டுவிடுவாரோ என்று அஞ்சி அவர் கண்ணில் சிக்காமல் ஓடி ஒழிந்து கொண்டிருந்தான்.

காலை எழுந்ததில் இருந்து வெண்பா ராமிடம் தான் இருந்தாள். "பொம்மிய பாக்க அதிகதி வரனும்... செரியா?" என்று அவ்வபோது அவனிடம் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

ராமிற்கும் வெண்பாவை விட்டுப் பிரிய மனமில்லாமல் காலை ப்ரஷ் செய்வதிலிருந்து, அவனுக்கு ஷர்ட் பட்டன் போட்டுவிடுவது, தலை வாரிவிடுவது, உணவு ஊட்டிவிடுவது என்று அவள் தனக்காக பார்த்து பார்த்து செய்வது அனைத்தையும்... வீட்டில் ஆரம்பித்து ஏர்போர்ட்டில் லக்கேஜ் ட்ராளி தள்ளிச் செல்வது வரை இருவரும் இணைந்து பல செல்ஃபிகளை எடுத்துக் கொண்டனர்.

இவை அனைத்தையும் பார்த்தும் பார்க்காதது போல் சுற்றித்திரிந்தாள் நேத்ரா. எல்லாவற்றிற்கும் இன்றே கடைசி என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு அமைதி காத்தாள்.

இதே எண்ணத்தோடு தான் பவனும், கமலும் இருந்தார்களோ, என்னவோ!!!அவர்களும் கண்டும் காணதது போல் ஒன்றும் கூறாமல் தன் வேலையை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

காலை உணவை முடித்துக் கொண்டு தான் விமானநிலையம் சென்றனர்.

நேத்ராவோ விமானநிலையத்தில் வெண்பாவைக் கொடுக்கும் சாக்கில் தன்னிடம் எப்படியும் பேச வருவான். அதனை எப்படித் தவிர்ப்பது என்ற யோசனையில் சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றமே... குழந்தையை விமாலாவின் கையில் கொடுத்துவிட்டு அப்படியே சென்றுவிட்டான் ராம். கண்களால் கூட அவளிடம் விடைபெறவில்லை...

'முதல்நாள் இரவில் தன்னிடம் உறுகி உறுகி காதல் வசனம் பேசிக் கொண்டிருந்தவன் இன்று தன் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லையே' என்ற ஏக்கம் தோன்றி மறைந்ததை அவளால் உணரமுடிந்தது.

ஏர்போர்ட்டில் இருந்து வீடு திரும்பும் வரை வேறுவிதமான யோசனையில் தவித்தது பெண்மனம். 'அவன் தன்னை தவிரக்கிறான் என்றாள் சந்தோஷம் தானே கொள்ள வேண்டும். ஏன் என் மனம் ஏமாற்றமாக உணர்கிறது?' என்று ஒரு மனமும், 'அதற்கு தான் பதில் நேற்று இரவே கிடைத்துவிட்டதே, விலக நினைக்கும் போது தான் மிகவும் நெருக்கமானவனாக நினைக்கத் தோன்றுகிறது. நீ உன் செய்கையால் விளக்கி வைத்திருந்தாலும் உள்ளிருக்கும் எனக்குத் தானே தெரியும் மனதளவில் உன்னை நெருங்கிவிட்டான் என்று... அதனால் தான் அவனின் விலகல் உனக்கு ஏமாற்றத்தைத் தந்தது' என்று மற்றொரு மனமும் முட்டிக் கொண்டிருந்தது. என்ன நடந்தாலும் சரி தன் மனதில் தோன்றிய இந்த சிறிய ஏக்கத்தைக் கூட அவன் முன்னாள் காண்பித்துவிடக் கூடாது என்பதிலும், முடிந்த அளவு அவனை விட்டு வெகுதொலைவில் சென்றுவிட வேண்டும் என்று தனக்குத் தானே பலமுறை கூறிக் கொண்டாள்.

ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தவனோ... "உன்கிட்ட சொல்லிட்டு புறப்படுற அளவுக்கு நான் ஸ்ட்ராங் இல்லே டி... 'போய்ட்டு வரேன்'னு சொல்றதுக்கு பதிலா உன் கை பிடிச்சு 'என் கூடவே வந்திடு'னு சொல்லிறுவேனோனு ஒரு பயம்... வெண்பா என்னோடே இருந்ததுக்கும் அதுக்கும் நிச்சயம் அப்படி தான் சொல்லிருப்பேன்... உன் சம்மதத்தோட உன்னை கல்யாணம் செய்து உன்னையும் பாப்புவையும் என் கூடவே கூட்டிட்டுப் போறேன். அந்த நாளுக்காக தான் காத்திருக்கேன்" என்று தன் திறன்பேசியின் திரையில் மிளிர்ந்த தன்னவளின் பிம்பத்தோடு பேசிக் கொண்டிருந்தான்.

பவன் தான் காரை ட்ரைவ் செய்து கொண்டிருந்தான். ஏர்போர்ட்டில் இருந்து நேராக ஷோரூம் செல்ல நினைத்தருந்தவன், தன்னவளின் 'நீயும் இப்போதே என்னை தனித்து விட்டுச் செல்ல வேண்டுமா?' என்ற ஏக்கப் பார்வையில் கமலை கடைக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு மற்றவர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.

மிரரில் அவ்வபோது பின் இருக்கையைப் பார்த்தவனாலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஒருபுறம் நேத்ராவின் குழப்பம் படிந்த முகம், மறுபுறம் மிதுன்யாவின் கவலை நிறைந்த முகம். இருவருக்கும் மத்தியில் அமர்ந்திருக்கும் தன் அன்னையோ நேத்ராவை கண்டு கொள்ளாமல் மிதுன்யாவைத் தான் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.

"அம்மா... அவளை நான் பார்த்துக்கிறேன். நீங்க சிவாவை கவனிங்க. சிவாவும் டல்லா இருக்கா பாருங்க." என்று அதட்டல் போட்டான் தன் அன்னையை.

"உனக்கு என்னடி வந்தது? நீ ஏன் முகத்தை திருப்பிக்கிட்டு உக்காந்திருக்கே... உனக்கு வேண்டப்பட்டவங்க யாரும் உன்னை தனியா தவிக்க விட்டுட்டு போய்டாங்களா என்ன?" அவளின் அமைதிக்கு சரியான காரணத்தை ஊகித்து அதனை நக்கலாக வினவினார்.

அவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஏன் அவரை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் வெளியே சாலையில் கவனத்தைப் பதித்தவாறு அமர்ந்திருந்தாள் நேத்ரா...

விமலாவின் கேள்வியில் திடுக்கிட்டது என்னவோ பவன் தான். "என்ன ம்மா கேள்வி இது? உங்களை போய் சொன்னேன் பாருங்க... சிவா உனக்கு என்ன ஆச்சு? நீ ஏன் டல்லா இருக்கே?" என்று தாயைக் கடிந்து கொண்டு நேத்ராவிடம் கேட்டு முடித்தான்.

"இல்ல... நானும் இன்னு ஒரு வாரத்துல ஊருக்கு போய் தானே ஆகனும்... அதான் ஒரு மாதிரி இருக்கு..."

"உன்னை யாரு போக சொன்னா? நீ இங்கேயே இரு... இனி சேரி டிசைன் பாக்குறது எல்லாம் ஆன்லைன்ல பார்த்துக்கோ... சேம்பில் உனக்கு திருப்தியா இருந்தா மட்டும் பல்க் ஆர்டர் கொடு... ஈசி சிவா... தேவையில்லாம நீ எங்கேயும் போக வேண்டாம். இனிமே பொம்மி கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு... அவளுக்கும் இன்னு ரெண்டு மாசத்துல மூனு வயசு ஆகப்போகுது. இன்னும் ஸ்கூல்ல சேர்க்கலே, என் ஃப்ரெண்டு ஸ்கூல் செக்கரெட்ரியா இருக்கான். அது ஒன்லி ப்ரைமரி ஸ்கூல் தான். பட் ஸ்டான்டர்டானா ஸ்கூல்... நீ அந்த ஸ்கூல் ஓகே யானு யோசிச்சு சொல்லு." என்று அவள் மனதை மாற்றும் நோக்கில் வினவினான்.

அவளும் "ம்ம்ம்... நானும் கேட்லாக் பார்த்தே ஆர்டர் கொடுத்திடலாம்னு தான் யோசிச்சுட்டு இருந்தேன். ஸ்கூல் நீ பார்த்து சொன்னா சரி தான். பிக்கப், ட்ராப் ஆஃப் மட்டும் நாமலே செய்துக்கலாம்." என்று ஏதோ போல் பதில் கூறினாள்.



*******​



வாரணாசியில் கட்டுக்கடங்கா கோபத்தோடு தன் அலுவலக அறைக்குள் சுற்றித் திரிந்தவனிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தனர் ஆரவ்வும், அபியும்...

ஒருவாரம் கடந்த நிலையில் தன்னவள் எப்போது வருவாள் என ஆர்வமாக காத்திருந்த ராமிற்கு வந்ததென்னவோ தன்னவளின் ஆன்லைன் ஆர்டர்கள் மட்டுமே தான். பதிலுக்கு அழைப்புவிடுத்தால் ப்ளாக் செய்யப்பட்டுள்ளது என்று செய்தியே வந்தது. அபியை முயற்சிக்க சொல்ல அவனோ,

"என்னுடைய அழைப்பை ஏற்பதே இல்லை பையா... நானும் இங்கே வந்த நாளில் இருந்து அவங்களுக்கு கால் செய்து பாக்குறேன், அட்டென்ட் செய்றதே இல்லை..." என்று அவனும் தலையைக் கவிழ்ந்து நின்று சொல்ல

தன் உதடுகளை மடித்து கோபத்தை மட்டுப்படுத்தி "ஓஓஓ... மேடம் அவாய்ட் பண்றாங்களா!!! இருக்கட்டும் அவளை இங்கே வரவைக்கிறேன்." என்று பற்களைக் கடித்துக்கொண்டு உறுமிவிட்டு ஆரவ்வை அழைத்தான்.

"ஆரவ்... நேத்ரா சில்க்ஸ் சாம்பில் பீஸ் ஆர்டர் கொடுத்திருக்காங்க இல்லையா!!! அதை அனுப்ப வேண்டாம். ஸ்டாப் பண்ணி வை..." என்று கூறி தான் அமர்ந்திருந்த சேரின் பக்கக் கைபிடியை கைகளை மடக்கித் தட்டினான்.

"ஆனா... பையா...." என்று ஆரவ் மென்று முழுங்கி ஆரம்பித்திட

"ப்ராப்ளம் வந்தா நான் பார்த்துக்கிறேன்.... நான் சொன்னதை மட்டும் செய்...." என்று தன் முன்னால் இருந்த மடிகணினியில் தன் கவனத்தை செலுத்தினான்.

"அது இல்ல பையா...." என்று அவன் தயங்கி நின்றிட,

"என்ன ஆரவ்? சொல்ல வந்ததை சட்டுனு சொல்லு.... நீ இன்னும் என்னை டென்ஷன் பண்ணாதே..." என்று அவனைப் பார்த்து கோபமாகக் கத்தினான்.

"சாம்பில் பீஸ்ஸுக்கு அவங்க ஓகே சொல்லி, பல்க் ஆர்டரையும் இன்னைக்கு காலைல தான் அனுப்பி வெச்சேன் பையா...."

"முட்டாள்.... யாரை கேட்டு டா அனுப்பி வெச்சே..." என்று இருக்கையை விட்டு எழுந்து நின்று கத்திட, தம்பிகள் இருவரும் அமைதியாக நிற்பதைத் தவிர தப்பிக்க வேறு வழி இல்லை என்று மௌனித்தனர்.

"நேத்ரா சில்க்ஸ்ல இருந்து ஆர்டர் வந்தா என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க வேண்டி தானே... அபி, என்ன நீயும் அவனும் சேர்ந்து செய்த வேலையா இது!!!?" என்று சிக்கியவர்களை எல்லாம் கோபத்தில் வதைத்துக் கொண்டிருந்தான்.

"ஐயோ... சத்தியமா இல்ல பையா..." என்று அவசரமாக மறுத்தான்.

"பின்னே உன்னோட டீலர்... உன் சம்மதம் இல்லாம எப்படி ஸ்டாக் ஏத்தி அனுப்பினாங்க?" என்று அபிமை லெஃப்ட் அண்ட ரைட் வாங்கினான்.

"பையா இதுல நானோ அபியோ இன்வால்வாகல, எல்லாமே பெரியப்பா தான் பார்த்துக்கிட்டாங்க... பெரியப்பா தான் இன்னைக்கு எல்லா பண்டிலும் அனுப்பியிருக்கனும்னு சொன்னாங்க அதான்...." என்று இழுத்தான் ஆரவ்.

"இப்போ அப்பா எங்கே இருக்காங்க?"

"இப்போ தான் அப்பாவும், பெரியப்பாவும் வீட்டுக்கு போனாங்க...." என்றான் அபி. அடுத்த நிமிடமே அறையைவிட்டு வெளியேறி காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்தான் ராம்.

ராம் வெளியேறியப் பின் இருவரும் உப்வ்வ்வ் என்று பெருமூச்சுவிட்டு ஒருவரை ஒருவர் அப்பாவியாக பார்த்துக் கொண்டனர்.

நேரே தன் தாத்தாவின் அறைக்குச் சென்றவன் அங்கே அமர்ந்திருந்த பெரிய தலைகளில் தன் தந்தையிடம் சென்று, "நீங்க எதுக்கு நேத்ரா சில்க்ஸ் டீலை பார்த்துட்டு இருக்கிங்க ப்பா?" என்றான் எடுத்ததும் அடாதடியாக,

"இதென்னா கேள்வி நான் தானே இத்தனை வர்ஷம் பாத்துக்கிட்டேன்!!!... இப்போவும் அதே தான் நடக்குது. இதுல உனக்கு என்ன கஷ்டம்?"

"இத்தனை வர்ஷம் வேற.... இனிமே நான் பார்த்துக்குறேன்... நேத்ரா சில்க்ஸ் இனி என்னோட பொறுப்பு...."

"டேய் இது என்னடா வம்பா இருக்கு!!!.... அந்த நேத்ரா பொண்ணு நீங்களே இருந்து பாருங்க அங்கிள்,னு கேட்டதாலத் தான் அபியைக் கூட இதிலேருந்து எடுத்துட்டு நான் பாக்குறேன்... இப்போ நீ அந்த டீலை பாத்துக்குறேனு சொல்ற... என்ன தான்டா நடக்குது?" என்று குழப்பமாக வினவினார்.

அப்போது புகழ் குறுக்கே வந்தார், "ஏன் ராம் கண்ணா?, அபி எதுவும் சரியா செய்யலேயா? சொல்லி வெச்சா மாதிரி நேத்ராவும் அபிய வேண்டாங்குறா.... நீயும் அபிய வேண்டாங்குறே.... அவன் ஏதாவது தப்பு செய்துட்டானா?" என்று இருவரும் அபியைத் தவிர்க்கிறார்கள் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு பெற்றவராய் தன் பையன் மேல் ஏதேனும் தவறு இருக்குமோ என்ற ஐயத்தில் கேட்டார்.

தன் சித்தப்பாவின் கேள்வியில் தான் கொஞ்சம் நிதானத்திற்கு வந்தவன், அருகில் தன்னை அமைதியாக நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் தாத்தாவைக் கண்டு தன் மனதில் இருக்கும் எண்ணத்தை மறைத்து அவசரமாக ஒரு பொய்யைக் கண்டுபிடித்து சமாளித்தான்.

"அதெல்லாம் இல்லே... சித்தப்பா.... இது நம்ம மிதுன் கல்யாணத்து முன்னாடி ஆரம்பிச்ச ப்ரச்சனை.... என் தவறு தானே. அதை சரி செய்ய வாய்ப்பு கிடைக்கும்னு நெனச்சேன்.... ஆனா நேத்ராவுக்கு இன்னும் என் மேல நம்பிக்கை இல்லே போல, அந்த கோபத்துல தான் அப்படி கேட்டேன்.... சாரி சித்தப்பா.... அப்பா உங்க ஃபோன் கொடுங்க...." என்று தன் சித்தப்பாவை சமாதானம் செய்துவிட்டு, தந்தையின் மொபைலைப் பெற்றுக் கொண்டு தனதறை நோக்கி சென்றான்.

அறைக்குள் சென்ற மறுநிமிடம் தன் தந்தையின் எண்ணிலிருந்து தன்னவள் எண்ணிற்கு அழைத்தான். மறுபக்கம் ஃபோன் எடுக்கப்பட, அவளின் ஹலோவிற்கு கூட காத்திருக்காமல்,

"இன்னு அஞ்சு நிமிஷத்துல உன் நம்பர்ல இருந்து எனக்கு கால் பண்ணுறே... இல்லேனா நான் யாருனு காட்ட வேண்டி இருக்கும்..." என்று அடிக்குரலில் தன் ஒட்டு மொத்த கோபத்தையும் காட்டி அடுத்த நிமிடமே கட் செய்தும் இருந்தான்.

அவனின் குரலிலேயே அவன் கோபத்தை உணர்ந்திருந்தவளுக்கு அவன் பேச்சை மீறும் தைரியம் வரவில்லை. அப்படியே மீறானாலும் ராமின் அடாவடி நடவடிக்கைக்கும் பவனின் முன்கோபமுத்திக்கும் இடையே சண்டை மூண்டாலும் அச்சரியப்படுவதற்கில்லை என்பதாலும், அதுவே மிதுன்யா மற்றும் பவனின் மனஸ்பாத்திற்கு வழிவகுக்கும் என்று நினைத்தவள் கால் செய்ய முடிவெடுத்தாள். அது மட்டும் தான் காரணமா என்று கேட்ட தன் மனசாட்சிக்கு அவளிடம் பதில் இல்லாமல் போனது. அனைத்து யோசனைகளையும் ஒத்தி வைத்துவிட்டு அவன் நம்பரை அன்ப்ளாக் செய்து அவனுக்கு அழைத்தாள்.

திரையில் வந்த அவளின் எண்ணைக் கண்டதும் தன் கோபத்தில் பாதி காற்றில் பறந்து செல்வதைப் போல் உணர்ந்தவன், இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டு கோபமாக இருப்பது போல் வினவினான்,

"என்னடி நெனச்சுட்டு இருக்கே உன் மனசுல?... என் நம்பரை ப்ளாக் செய்துட்டா, உன்னை காண்டாக்ட் பண்ண முடியாதா என்ன?"

மறுபக்கமோ 'நீ ஒரு விடாக்கண்டன் னு எனக்கு தான் தெரியுமே!!!' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அமைதி காத்தாள்.

"வாயத் தெறந்து பேசு டி.... ஏன்
ஆர்டர் எல்லாம் கேட்லாக் பார்த்து ஓகே சொல்லிருக்க? என்ன? என்னை அவாய்ட் பண்ணுறதா நெனப்பா?"

"அதுதான் புரியுதுல!!! பின்ன ஏன் என்னை டார்ச்சர் பண்ணுறிங்க? பிடிக்கலேனு சொல்லி ஒதுங்கிப் போனா அதை ஏன் புரிஞ்சுக்காம நடந்துக்கிறிங்க?" என்று அவளும் தன் குரலை உயர்த்தினாள்.

என்ன தான் அவள் தன் குரலை உயர்த்தியிருந்த போதும் அவன் எப்போதும் ரசிக்கும் அவளின் திமிர் கலந்த பேச்சு காணாமல் போயிருந்தது. அதுமட்டுமல்லாமல் அவளின் டா என்ற அழைப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து…, மரியாதை கூடியிருப்பதை உணர்ந்தான். இந்த மாற்றம் எதற்காக என்று யோசித்துக் கொண்டே, அவளிடம் கேட்க வேண்டியதையும் கேட்க ஆரம்பித்தான்.

"ஓஓஓ.... அதாவது இப்போ என்ன சொல்லவரிங்க?... மேடம்-க்கு என்னைப் பிடிக்கலே.... அப்படித் தானே!!!?"

'ஆமானு சொல்லு சிவா.....' என்று அவள் மனம் உந்தினாளும், இதழ்கள் என்னவோ பிரியமாட்டேன் என்று ஒன்றை ஒன்று அணைத்துக் கொண்டது.

"சொல்லுங்க மேடம்... என் கண்ணை நேருக்கு நேர் பார்த்து 'உன்னை எனக்குப் பிடிக்கலே'னு சொல்லுங்க... நான் அதுக்கப்பறம் உங்களை தொல்லை செய்யமாட்டேன்..." என்று அவனும் வார்த்தைக்கு வார்த்தை மரியாதை கொடுத்து நக்கலாக வினவினான்.

"அப்படி சொல்லிட்டா மட்டும் என்னை விட்டுவிலகிடுவிங்களா என்ன!!! என்னை அங்கே வர வைக்கிறதுக்காக சும்மா சொல்றிங்க... நான் இனிமே அங்கே வரமாட்டேன்..." என்று அழுத்தமாகக் கூறினாள்.

அவள் வரமாட்டேன் என்றதில் கோபம் ஏற்பட்டாலும், அதற்கு முன் கூறிய வார்த்தைகளை வைத்து அவளிடம் வம்புவளர்த்தான். 'வாடி என் சண்டிராணி' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு

"மேடம் என்னை பத்தி நெரையா தெரிஞ்சு வெச்சிருக்கிங்களே!!!... நான் அவ்வளவு சாதாரணமா எதிலேயும் பின்வாங்கமாட்டேன்னு சரியா சொல்றிங்க!!! ம்ம்ம்???" என்று குறுநகையுடன் கூறினான்.

கண்ணில் புலப்படாத அவனின் சிரிப்பில் எரிச்சலுற்றவள் "இப்போ எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்கிங்க? உங்களுக்கும் எனக்கும் தொழில் ரீதியாக் கூட எந்த சம்மந்தம் இல்லே... அதனால இனி நீங்க என்கிட்ட பேச வேண்டிய அவசியம் இல்லே... நான் ஃபோனை வைக்கிறேன்..." என்று அவனது பதிலையும் எதிர்பார்க்காமல் ஃபோனை கட் செய்திருந்தாள்.

மறுநாள் காலை வீட்டு வாசலில் வந்து நிற்பான் என்றும், காலைப்பொழுது அவன் முகத்தில் தான் விடியப் போகிறது என்றும் தெரிந்திருந்தால் நிச்சயம் அந்தத் தவறை செய்திருந்திருக்கமாட்டாள்.


-ஊடல் கூடும்.​
 
Top