• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
அறைக்குள் நுழைந்த தன்னவனின் முகம் ஒருவித இருக்கத்தோடு இருப்பது போல் உணர்ந்தாள் மிதுன்யா...

படுக்கையில் எழுந்து அமர்ந்து குட்மார்னிங் சொல்ல, அவனோ அவளை நிமிர்ந்தும் பாராமல் பதிலுக்கு குட்மார்னிங் சொல்லிவிட்டு தன் உடற்பயிற்சியைத் தொடர்ந்தான்.

'தலைவரு ஏன் உம்முனு திரியிறாருனு தெரியலேயே' என்று நினைத்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்து தன்னை சுத்தம் செய்து கொண்டு கீழே இறங்கி வந்தாள்.

"அத்தம்மா... பவன் ஏன் கோபமா இருக்கார்?"

"ஓஓஓ அவன் வந்துட்டானா?"

"உங்களுக்குத் தெரியாதா அவரு வந்தது?"

"தெரியாதே... சரி இந்தா இதை குடிக்காம மாடிக்குப் போய்ட்டான். சத்து மாவு கஞ்சி, ஆரிப்போச்சுனா நல்லா இருக்காது... அவன்கிட்ட கொடுத்துட்டு வா..."

"அத்தே... அவரு கோபமா இருக்காருனு சொல்றேன்... காதிலேயே வாங்காமா பேசிட்டு இருக்கிங்க?" என்று படபடவென பட்டாசாய்ப் பொறிந்தாள்.

"அடியேய் அவன் கோபமா இருந்தா அவன் பொண்டாட்டி நீ தான் சரி கட்டனும்... இதை போய் கொடுத்துட்டு கொஞ்ச நேரம் நில்லு... அவனே உன்கிட்ட சொல்லுவான். தப்பித் தவறி வாயை மட்டும் திறந்திடாதே..." என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

மாடிக்குச் சென்றவள் அவன் குளியல் அறையில் இருப்பதை அறிந்து கொண்டு, அவனுக்கு பேண்ட், ஷர்ட் ஐயர்ன் பண்ணச் சென்றாள். தன் வேலையை முடித்துவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைய, கண்ணாடி முன் நின்று நீராடிய உடம்பை வாசனை திரவியத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். அங்கே தான் அவளது நாவில் வந்து அமர்ந்தது சனி.

"அப்பப்பா... இது என்ன பாடி ஸ்ப்ரெவா? இல்லே பூச்சி மருந்தா?... இப்படி உடம்பு ஃபுல்லா தெளிச்சிட்டு இருக்கிங்க!!!" என்றிட,

"பிடிக்கலேனா போடி அந்த பக்கம்... வந்துட்டா எனக்கு சொல்லிக்கொடுக்க..." என்று சிடுசிடுப்பாக பதில் வர, அதே நேரம் அத்தையம்மாவின் அறிவுரையும் தாமதமாக நினைவில் வந்து தொலைத்திட, குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்து தலைசீவிக் கொண்டிருந்தவனைக் கண்டு உதட்டைச் சுழித்து முகவாட்டில் இடித்துக் கொண்டு கொன்னை வைத்துச் சென்றாள். கண்ணாடி வழியாக இதனைக் கண்டவன் தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டு அவள் எடுத்து வைத்த ஆடையை அணிந்து அழகு பார்த்துவிட்டு, கஞ்சியை எடுத்துக் குடித்துக் கொண்டே அறையைவிட்டு வெளியேற நினைத்து கதவைத் திறக்க, சரியாக மிதுன்யாவும் கதவைத் திறந்து

"இப்போ உங்களுக்கு என்ன தான் கோபம்?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

அவள் வந்த வேகத்தில் அவன் மேல் இடித்துவிட சத்துமாவு கஞ்சி அப்படியே அவன் சட்டையில் கொட்டியது.

கோபத்தில் அவளை அடிக்கக் கை ஓங்கிவிட்டு, பின் தானாகவே கையைக் கீழே இறக்கி இருந்தான். ஆனாலும் கோபம் குறையவில்லை...

"ஏய்... லூசு... அறிவிருக்கா? அப்படி என்னடி உனக்கு அவசரம்... கோபமா இருக்கேனு தெரியுதுல... கொஞ்சம் அமைதியா இருக்குறதுக்கு என்ன!!! கோபம் கொஞ்சம் குறைஞ்சதும் நானே வந்து பேசப்போறேன்... ஒரு ஒருமணி நேரம் கூட உன்னால பொறுமையா இருக்க முடியாதா? என் சட்டையெல்லாம் பாழாய் போச்சு..... உன்னால எனக்கு தான் டென்ஷன்..." என்று அவளைத் திட்டிக் கொண்டே வேறு உடை மாற்றிவிட்டு சொல்லாமல் கூட ஷோரூம் கிளம்பிச் சென்றிருந்தான்.

பவனின் முன்கோபம் பற்றி அறிந்திருந்த போதும் அவன் அடிக்கக் கை ஓங்கியது அவளுக்கு ஒருமாதிரி ஆகிப்போனது. தன் இல்லத்தில் யாரும் கடிந்து பேசிக் கூட கேட்டிடாதவள்; அதுவும் காதல் திருமணம் செய்த தன் அன்னை தந்தையின் செல்ல சண்டைகளைப் பார்த்து அது போல் தன் வாழ்வையும் கற்பனை செய்திருந்தவள்; அவனின் முதல் சிடுசிடுப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் திருமணத்திற்குப் பின் தன்னிடம் முதன்முதலாக முகம் சுழித்துப் பேசியதை தாங்கிக் கொள்ள முடியாமல் சிறிது நேரம் அழுது ஓய்து... அவன் மேல் கோபத்தை வளர்த்துக் கொண்டாள்.

விமலா மருமகளுக்கு இன்டர்காமில் அழைத்து சாப்பிட வரசொல்ல, "கொஞ்ச நேரம் தூங்குறேன் அத்தை. குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன். நானே கீழ வந்திடுவேன். நீங்க சாப்பிடுங்க" என்று சிறிதும் தன் கோபத்தையோ வருத்ததையோ காட்டாமல் பதில் கூறினாள்.

நேத்ரா ராமிடம் பேசியதற்குப் பிறகு அறையைவிட்டு வெளியே வரவில்லை. வெண்பாவும் எழுந்து தன் மைமியைத் தேடிச் சென்றிட, விமலா குழந்தையிடம் கதைபேசிக் கொண்டே குளிக்க வைத்து உடைமாற்றி உணவு உண்ண வைத்தார்.

நேத்ரா என்ன தான் தனக்குத் தானே ஆருதல் சொல்லிக் கொண்டாலும் அவளின் கோபமும் அடங்கியபாடில்லை. இதனை நேரில் சந்தித்து நிச்சயம் பேசியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து, ராமிற்கு அழைத்தாள். அதற்காகவே காத்திருந்தது போல் அழைப்பை ஏற்று,

"சொல்லுங்க நேத்ரா ஜீ!!! கோபம் போயே போச்சா?" என்றான்.

அதற்கு பதில் கூறாமல் எதிர்கேள்வி கேட்டாள். "நீ எங்கே இருக்க?"

"நான் ஊரெல்லாம் சுத்திட்டு இப்போ கள்ளழகர் கோவில் போயிட்டிருக்கேன்.... ஏன் நீயும் அழகரை பார்க்க வரேயா?"

"அங்கேயே இரு வரேன்." என்று கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டு, தயாராகினாள்.

"அத்தே... ஒரு வேலையா வெளியே போறேன்... அப்படியே கடைக்குப் போய்ட்டு மதியம் கமல் கூட சேர்ந்து வீட்டுக்கு வந்திடுறேன்..." என்று விமலாவிடம் கூறி விடைபெற்றாள்.

கடைக்குச் சென்றிருந்த பவனோ இரண்டு மணி நேரத்தில் மீண்டும் வீட்டில் இருந்தான்.

"என்னடா இந்த நேரம் வந்திருக்க? என்ன ஆச்சு? உடம்புக்கு எதுவும் முடியலேயா?" என்று அக்கறையாக வினவினார்.

"நான் நல்லா தான் இருக்கேன் ம்மா" என்றவனின் கண்கள் தன்னவளைத் தான் வலைவீசித் தேடிக் கொண்டிருந்தது. அவள் கண்ணில் படவில்லை என்றவுடன்,

"அம்மா மித்து எங்கே?" என்றான்.

"அவ படுத்திருக்கதா சொன்னாள் டா. இன்னும் கொஞ்சம் நேரத்துல சாப்பிட வரதா சொன்னா.." என்றார்.

"ஏன் படுத்திருக்கா? அவளுக்கு என்ன ஆச்சு? ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கா?" என்று தன் அன்னையிடம் ஏதேனும் சொல்லியிருப்பாலோ என்ற ஐயத்தோடு போட்டுவாங்கிப் பார்த்தான்.

"தெரியலே டா... அவ எப்பவும் இந்த நேரம் தான் சாப்பிடுவா... அதனால இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவா..." என்று இயல்பாக பதிலளித்தார்.

"இருங்க நான் போய் கூட்டிட்டு வரேன்.." என்றுவிட்டு

"மித்து..." என்று அழைத்துக் கொண்டே இரண்டு இரண்டு படிகளாக ஏறி தங்களறைக்குச் சென்று பார்த்தான். அவள் அங்கே இல்லாமல் இருக்க, மீண்டும் அன்னையிடம் வந்து

"அவ ரூம்ல இல்லியே மா.."

அங்கே அடுப்படியில் குழாயில் தண்ணீர் வராமல் போக 'இது என்ன அரைமணி நேரமா மோட்டார் ஓடியும் ஒரு சொட்டு தண்ணி வரலே' என்று வாய்விட்டு சத்தமாக புலம்பிக் கொண்டிருந்த விமலா, மகனின் வார்த்தைகளில் தன் கற்பனைக்கு விருந்து வைத்து அதில் மிதுன்யாவையே படையலாக்கியிருந்தார்.

"டேய் அவ குளிச்சிட்டு கீழ வரதா சொன்னா... ஒருவேளை பாத்ரூம்ல மயக்கம் போட்டிருப்பாளோ!!!..." அவர் முழுதாகக் கூட கூறி முடிக்கவில்லை மீண்டும் விறைந்து படி ஏறிச் சென்று பார்க்க அவள் குளியலறையலும் இல்லை.மகனின் பின்னாலேயே தன்னால் முடிந்த மட்டும் வேகமாக படியேறி வந்தார் விமலா.

அவளின் சேட்டைகளை பாட்டிமாவின் வழியே அறிந்திருந்தவன், தன் அன்னயின் புறம் திரும்பி சிரித்துக் கொண்டே

"நீங்க இன்னைக்கு முழுசும் மோட்டார் போட்டாலும் குழாய்ல தண்ணீர் வராது. என் பொண்டாட்டி இப்போ டேங்க்-குள்ள தான் உக்காந்திருப்பா..." என்றிட

"இது என்னடா விசித்திரமா இருக்கு!!! எதுக்கு அங்கே உக்காந்திருக்கா?"

"காலைல கோபத்துல அவளைத் திட்டிட்டேன்.. அதான் கோபமா இருக்கா..." என்று இப்போதும் மென்னகையோடு சிரித்துக் கொண்டே கூறினான்.

"உனக்கு பொறுமையே இல்லே தம்பி... பாவம் அவ சின்னப் பொண்ணு பயந்திருப்பா... உன் கோபத்தை நீ மாத்திக்கிறதாவே இல்லேயா!!? காலைலயே என்கிட்ட சொன்னா... நான் தான் நீ அவள் முகத்தைப் பார்த்தா கோபத்தை விடுத்து அவகிட்ட நார்மலாக பேசுவேனு நெனச்சு அனுப்பி வெச்சேன்... எல்லாம் என் தப்பு தான்..." என்று அவர் தன் பையனிடம் ஆரம்பித்து, அனைத்திற்கும் காரணம் நான் தான் என்று தன் மேலேயே பலியை போட்டுக் கொள்ள,

"சாரி ம்மா... நான் அவளை சமாதானப்படுத்த தான் இப்போ வீட்டுக்கு வந்தேன்... இனி யாருகிட்டேயும் கோபத்தைக் காண்பிக்கமாட்டேன்... நீங்க இப்படியெல்லாம் பேசாதிங்க..." என்று தன் அன்னையை சமாதானம் செய்திட,

"சரி சரி மொதோ அவளை கீழே கூட்டிட்டு வா... எவ்வளவு நேரமா ஈரத்துக்குள்ள உக்காந்திருக்காளோ தெரியலே..." என்று கவலையாகக் கூறினார்.

அடுத்தநிமிடமே விறைந்து சென்று ஏணியில் ஏறி சிமிண்ட்டால் கட்டப்படிருந்த தொட்டிக்குள் எட்டிப்பார்க்க அவள் உள்ளே தான் அமர்ந்திருந்தாள்.

"ஹாய் போண்டா..." என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

அவள் அவனை நிமிர்ந்தும் பார்த்திடவில்லை... உள்ளே இறங்கி அவளின் அருகே இடித்துக் கொண்டு அமர்ந்தான். அவள் சற்றுத் தள்ளி அமர்ந்தாள். மீண்டும் அவளை இடித்துக் கொண்டு அமர, அவள் மீண்டும் நகர்ந்து அமர்ந்தாள்.

அவள் இடையோடு கை கோர்த்து தன்னோடு சேர்த்து அமர்த்தினான். அவன் கையைத் தட்டிவிட்டு மீண்டும் நகர்ந்து அமர்ந்தாள். அவனாக விளக்கம் கொடுப்பான் என அவளும், அவள் மீண்டும் ஒருமுறை கேட்டால் சொல்லலாம் என்று அவனும் மௌனம் காத்தனர். பெண்ணவள் பொறுமையற்று,

"இப்போ மட்டும் உங்க ட்ரெஸ் அழுக்காகலேயா? இதுக்கும் என்னை தான் அடிப்பிங்களா?"

"அழுக்கான என் அழகான பொண்டாட்டி தொவைச்சிக் கொடுப்பா... அழகு பொண்டாட்டிய யாராச்சும் அடிப்பாங்களா!!!..."

"ஓஹோ உங்க துணியைத் தொவைச்சிப்போடத் தான் நான் இருக்கேனா? காலைல அடிக்கக் கை ஓங்குனிங்க... அப்போ இந்த அழகு பொண்டாட்டி உங்க கண்ணுக்குத் தெரியலேயா!!! இல்ல அப்படி ஒருத்தி இந்த வீட்ல இருக்கேனு திரும்பவும் மறந்துபோச்சா?"

"ம்ம்ம் மறந்து தான் போயிட்டேன்...." என்று ஆமோதிப்பாக பதிலளித்தான்.

"யூ... யூ... என்னை எப்படி டா மறந்துட்டேனு சொல்லலாம் நீ..." என்று அவனை அடிக்கத் தொடங்கினாள்.

அடிக்கும் அவள் கைகளை பிடித்துக் கொண்டு, "அதுக்கு தான் டெய்லி ஷோரூம் கிளம்பும் போது வழியனுப்ப ஒரு முத்தம், திரும்ப வீட்டுக்குள்ள வந்ததும் வரவேற்க ஒரு முத்தம்னு சிலபல முத்தங்களை கொடுத்திருக்கனும்... நீ என்னைக் கண்டாலே பத்தடித் தூரம் தள்ளி நிக்கிறே... பின்னே எப்படி நீ தான் என் பொண்டாட்டினு நியாபகம் வரும்!!!"

அவனின் சல்லாபப் பேச்சில் ஒருநொடி முகம் சிவந்தவள், அதனை மறைக்க தன் உணர்வுகளோடு நிறையவே போராடினாள்.

"அப்படி தினமும் கொடுத்தா தான் என்னை நியாபகம் இருக்கும்னா நீ ஒன்னு என்னை நியாபகம் வெச்சிக்க வேண்டாம்... என்னை அடிக்க கை ஓங்குனேல... அதனால உனக்கு ஒன்னும் கிடையாது..." என்று தன்னை இயல்பாக்கிக் கொண்டு மிகவும் மென்மையான குரலில் கூறினாள்.

"நீ கொடுக்க வேண்டாம் நானே எடுத்துக்கிறேன்..." என்றவன் அவள் இதழோடு தன் இதழ் பொருத்தி ஒரேஒரு நொடி ஒற்றி எடுத்தான்...

விழிவிரித்து அவனைப் பார்த்தவள் புதுவிதமான அச்சத்தை உணர்ந்தாள்.

"ஹேய் நான் உன் புருஷன் தான்... ஏதோ மூனாவது மனுஷனை பார்க்குற மாதிரி பார்க்குறே... இந்த கருமத்துக்கு தான் உன் பக்கத்துல வரதுக்கே யோசனையா இருக்கு..." என்று சிடுசிடுத்தான்.

அவனது பேச்சின் உள்ள கோபம் எதனால் என்பது புரிந்திட மெதுவாக அவன் அருகே நகர்ந்து அமர்ந்து அவன் கைகளுக்குள் தன் கையைக் கோர்த்து அவன் தோளில் சாய்ந்து அமர்ந்தாள்.

"நான் என்ன உங்களைப் பிடிக்காமலா அப்படி ரியாக்ட் பண்ணுறேன். என்ன தான் நீங்க கேஷுவலா நடந்துக்கிட்டாலும் என்னால அப்படி இருக்க முடியலே... ஆனால் நீங்க கோபமா இருந்தா என் மேல தான் கோபமா இருக்கிங்களோ கஷ்டமா இருக்கு... அதான் காலைல அதை சரிபண்ணிடும் வேகத்துல அப்படி நடந்துக்கிட்டேன்... சாரி..... இனிமே பொறுமையா இருக்க கத்துக்குறேன்."

"நீ நடந்துக்கிட்ட விதமும் ஒரு மாதிரியான உரிமை தான். நான் தான் அதை புரிஞ்சுக்கல... எனக்கேத்த மாதிரி நீ மாறணும்னு எனக்கே தெரியாம எதிர்பார்த்திருக்கேன்... என்னை நீ அப்படியே அக்ஸெப்ட் பண்ணிக்கனும்னு நெனச்சிருக்கேன். ஆனால் நான் உன்னை அப்படியே ஏத்துக்க முயற்சிகூட பண்ணாம, என் கோபத்தைக் காண்பிச்சிட்டேன்... சாரி..."

"கொஞ்ச நேரம் எதுவும் பேசவேண்டாம்... எனக்கு இந்த இடம், இப்படி உங்ககூட உக்காந்திருக்குறது பிடிச்சிருக்கு..." என்றிட, மென்னகையோடு அவள் தலையில் தன் தாடையை வைத்து அழுத்தினான்.

சிறிது நேரம் கழித்து அவனாகவே ஆரம்பித்தான். "உன் ராம் மச்சான் இங்கே தான், மதுரைல தான் சுத்திட்டு இருக்கான்" என்று முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் கூறினான்.

"அப்படியா? ஆனால் ஏன் என்கிட்ட சொல்லாமல் கூட இங்கே வரனும்!!! வந்தாலும் எனக்கு ஏன் கால் பண்ணலே!!! அப்போ எனக்குத் தெரியாம ஏதோ திருட்டுத்தனம் பண்ணுறார்." என்று ஆர்வமாக கூறினாள்.

அவள் தன் வார்த்தைகளை நம்புகிறாள் என்பதே அவனுக்கு பனிச்சாரலில் நனைந்தது போல் இதமாக இருந்தது. அவன் கோபத்திற்கு அதுவும் ஒரு காரணம் தானே... எங்கே தன்னவள் தன் வார்த்தைகளை மறுத்து 'என் ராம் மச்சான் அப்படியெல்லாம் கிடையாது... நீங்க அவர் மேல இருக்குற கோபத்தில் தான் இப்படியெல்லாம் அவரை பலி சொல்லுறிங்க' என்று எடுத்தவுடனே மறுத்து சண்டையிட்டாள் என்றாள் தன் மொத்தக் கோபத்தையும் அவளிடம் காண்பிக்க நேரிடும் என்று தான் அவளையும் தவிர்த்திருந்தான்.

"நம்ம செல்வம் அண்ணா தான் சொன்னாங்க. சிவா தான் அவனை உள்ளே அழைச்சிட்டு வந்திருக்கா... ஆனால் காலைல அவன் வீட்ல இல்லே... சுவர்.... ஏறிகுதிச்சு.... வெளியே போனதை... நானே பார்த்தேன்..." என்று கடைசி வாக்கியத்தை மட்டும் நிறுத்தி நிதானமாக தன்னவள் எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ என்ற நினைப்போடு கூறினான்.

"ஓஓஓஓ அப்போ இரண்டு பேருக்குள்ளேயும் ஏதோ இருக்கு போலவே..." என்று வாயெல்லாம் பல்லாகக் கூறினாள்.

"ஏய்... லூசு மாதிரி பேசாதே...." என்றது தான் தாமதம் மிதுன்யா சந்திரமுகியாக மாறியிருந்தாள்.

"யாரு... நானா? நானா?... நான் லூசு மாதிரி பேசுறேனா?... நான் லூசா? என்னே பார்த்தா லூசு மாதிரி தெரியுதா உங்களுக்கு? நானா லூசு?" என அவன் ஒருமுறை கூறியதை பலவிதங்களில் பலமுறை கூறினாள்.

"பின்னே இல்லேயா?" என்று அவனும் அவளின் மாடுலேஷனுக்காகவெல்லாம் அஞ்சாமல் மிரட்டல் குரலில் கேட்டுவிட்டு அவனே மேலும் தொடர்ந்தான்.

"அப்படியே இருந்தாலும் இதெல்லாம் சரிவருமா மித்து?"

"அதை நீங்க ஏன் முடிவு பண்ணுறிங்க? நேத்ரா அக்காவும், மச்சானும் முடிவு பண்ணட்டும்..." என்றாள்.

"உனக்கு சிவாவை பத்தி தெரியாது. அவ ஒரு சென்டிமெண்டல் இடியட்... அவகிட்ட கொஞ்சம் பாசமா பேசினாளே இலகிடுவா... இந்த வீராப்பு, திமிர் எல்லாம் அவளுக்கு நாங்க போட்டுவிட்டிருக்க முகமூடி..." என்று பழைய நிகழ்வுகளில் மூழ்கினான்.

மிதுன்யாவிற்கு நேத்ராவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால் அதனை தன்னவனிடம் கேட்டு அவனை இன்னும் காயப்படுத்திட விரும்பவில்லை அவள்.

"என்னைவிட்டா இப்படியே ஏதாவது பேசிக்கிட்டே இருப்பேன். நீ மொதோ உன் ஈர உடையை மாத்திட்டு சாப்பிட உட்கார்." என்று அவளை துரிதப்படுத்தினான்.

தன்னவனின் சொல்லுக்கு இணங்கி உடை மாற்றி கீழே வந்து தன் அத்தையம்மாவிடமும் மன்னிப்புக் கேட்டாள்.

"இதோ பாரு மிதுன் உனக்கு கோபம் வந்தா உன் புருஷனை நாலு அடி கூட அடிச்சிடு... ஆனால் இப்படி இரண்டு மணிநேரம் ஈரத்துக்குள்ளேயே இருந்தா உனக்கு தான் உடம்புக்கு சேராமா போயிடும் சொல்லிட்டேன்..." என்றார் விமலா.

"என்னை டேமேஜ் பண்ணுறதுக்கு நீங்க ஒரு ஆள் போதும் ம்மா..." என்று தன் அன்னையை செல்லமாக கடிந்து கொண்டான் பவன்.

"அம்மா.... சீக்கிரம் சாப்பிட எடுத்து வைங்க நான் கடைக்குப் போகனும்..." என்று கூறிக்கொண்டே கீழே இறங்கி வந்தான் கமல்.

"டேய் நீ இன்னும் கடைக்குப் போகலேயா!!!" என்று பதறியபடி விமலா கேட்க,

"எங்கே கிளம்புறது!!! அதான் இவ்வளவு நேரமா தண்ணி வரலேயே!!!" என்று அங்கே நடந்த எதுவும் தெரியாமல் தன் சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தியபடி உரைத்தான்.

அவனின் பதிலில் பவன் மிதுன்யாவை 'எல்லார் வேலையையும் நல்லா கெடுத்திருக்கே' என்ற கண்டிப்போடு முறைத்திட அவளோ "ஹிஹிஹி..." என்று அசடுவழிந்து கொண்டிருந்தாள்.

"டேய்... அண்ணா உன் ரொமாண்டிக் லுக்கே நான் சாப்பிட்டு முடிச்சி போனதும் வெச்சிக்கோ..." என்று கூறிவிட்டு எழுந்து அடுப்படிக்குள் சென்றான் கமல்.

மிதுன்யாவிற்கு முகம் வாடியதோடு, அதன் தொடர்ச்சியாக கோபம் தலைதூக்க "ஹேய்... அவன் ஏதோ funny-யா சொல்லிட்டுப் போறான்... அதைப்போய் பெருசா எடுத்துகிட்டு முகத்தை தூக்கிவெச்சிருக்க..." என்றிட, அவளும் அப்போதைக்கு கடனே என்று சிரித்து சமாளித்தாள்.

அங்கே அழகரைச் சந்தித்துவிட்டு மீண்டும் நுழைவாயில் அருகே இருக்கும் மரத்தடியில் நேத்ராவிற்காக காத்திருந்தான் ராம்.

தன் அக்மார்க் கொண்டையும், வெளிர் இளம்பச்சை வண்ண சேலையும் அதனை நேர்த்தியாக கட்டியிருந்த பாங்கும், புயல் வேக நடையும் என தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்தான் அவன்.

அவன் அருகே வந்தவள் ஒருநொடி கூட தாமதிக்காமல் அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்.

"என்னடா நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? நீ சொல்றதுக்கு எல்லாம் பொறுமையா அனுசரிச்சுப் போனா ரெம்ப ஓவரா பண்ணுறே...." என்று பொரிந்து தள்ளிட, சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தான் அவன்.

அதனைக் கண்டு மேலும் கோபம் ஏற, "மனுஷனா டா நீயெல்லாம்... உன்கிட்டேலாம் பேசுறதே வேஸ்ட்... தயவு செய்து இனிமே என்னைப் பார்க்க வராதே... திரும்பவும் இந்த மாதிரி என்னை மிரட்டி உன் வழிக்கு கொண்டு வரலாம்னு மட்டும் நினைக்காதே... இனி இதே மாதிரி நடந்துக்கிட்டா உன்னை அசிங்கப்படுத்தவும் தயங்கமாட்டேன்... என்னை தன் பொண்ணு மாதிரி பார்த்து பார்த்து எல்லாம் செய்து கொடுக்குற என் மாமா முன்னாடியும், இப்போ வரைக்கும் எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டா, சகோதரனா இருக்குற பவன் முன்னாடியும் தலைகுனிஞ்சி நின்னதெல்லாம் உன்னால தான். இனிமே என் முகத்திலேயே முழிக்காதே... குட்பைய்" என்று கூறி திரும்பியவளின் கையைப் பிடித்து நிறுத்தித் தன்புறம் திரும்பி தன்னை அடித்த கைக்குள் கற்றைப் காகிதங்களை வைத்தான்.

அதனைக் கண்டவள் இவன் தான் எதையும் சாமானியமாக விட்டுவிடுபவன் இல்லையே, பாரி அங்கிள் உடனான உடன்படிக்கையை அவன் பெயருக்கு மாற்றி எழுதியிருப்பான இருக்கும் என்ற எண்ணத்தோடு 'என்ன இது?' என்று கேவளமான பார்வையில் வினவினாள்.

"பிரிச்சி படிச்சுப் பாரு தெரியும்..." என்று கூறி தோளைக் குலுக்கிக் கொண்டு தன் பேண்ட் பாக்கெட்டில் கைகளை திணித்து பந்தாவாக பின்னால் இருந்த திட்டில் ஒரு காலை மடக்கி வைத்து சாய்ந்து பாதி அமர்ந்திருப்பது போல் நின்றான்.

'சரியான அடமெண்ட்.... அடிவாங்கினாலும் இந்த ஸ்டைலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லே...' என்று மீண்டும் தன் மனதிற்குள் திட்டிக் கொண்டே பத்திரத்தைப் பார்த்தாள். அதில் எழுதப்பட்டிருந்த விஷயங்களை வாசிக்க தானாக அவள் கண்கள் குளம் கட்டியது.


-ஊடல் கூடும்.​
 
Top