• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"அக்கா... நீங்க இந்த வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கிங்களா?" என்று குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்க்க, அங்கே ஒரு சிறு வயதுபெண் நின்றிருந்தாள்.

"ஹாய் டா செல்லம்... பூட்டியிருக்க வீட்டுக்குள்ள நீங்க என்ன பண்ணுறிங்க?" என்று பதிலுக்கு நேத்ரா வினவினாள்.

"ஃபஸ்ட் கேள்வி கேட்டது நான் தான். மொதோ என் கேள்விக்கு பதில் சொல்லுங்க.." என்று பெரிய மனுஷி தோரணையில் இடுப்பில் கை வைத்து வினவினாள் அந்தப் பெண்.

மெல்லிய சிரிப்பை பதிலாகக் கொடுத்த நேத்ரா, "இது எங்க வீடு தான்டா தங்கம், இனிமே இங்கே தான் இருக்கப் போறோம்."

"ஓஓஓ... சூப்பர் க்கா. இதுவரைக்கும் இந்த வீட்ல தோட்டக்கார தாத்தாவைத் தவிர வேற யாரையும் பார்த்தது இல்லேயா அதான் கேட்டேன்." என்றாள் அவள்.

அந்த பெண்ணின் உடையைப் பார்க்க நிச்சயம் அந்த வீட்டிற்கும் அவளுக்கும் சம்மந்தம் இல்லை என்று தோன்றிட, "சரி உன்னை பத்தி சொல்லு?" என்றாள் நேத்ரா.

"எங்க அம்மா இந்த வீட்டை சுத்தம் பண்ண வந்திருக்காங்க. இந்த வீட்டு ஓனர் சார் அவங்க குடும்பத்தோட குத்தாலத்தை சுத்தி பாக்க அடுத்த வாரம் வராங்கலாம்."

"ம்ம்ம்... உன் பெயரென்ன? என்ன படிக்கிற?"

"நான் ஹரித்ரா... ஏழாவது படிக்கிறேன். நீங்க?"
"சிவநேத்ரா..."

"ஐஐஐ... ஹரித்ரா நேத்ரா... நம்ம நேம் ரைமிங்கா இருக்கே..." என்று குதூகலமாக கூறியவள் இப்போது பார்ப்பதற்கு பதின்பருவத்தில் அடி எடுத்து வைக்கும் குழந்தையாகவேத் தெரிந்தாள்.

"அட ஆமா.." என்ற நேத்ராவும் அவளுடன் ஹை-பை செய்து குழந்தையாக மாறிப் போனாள். "உங்க வீடு எங்கே இருக்கு?"

"எங்க வீடு கொஞ்சம் தூரம் தான் க்கா..." என்று அவள் வீடு இருக்கும் இடத்தைக் கூறிட,

"எனக்கு இந்த ஊர்ல எந்த இடமும் தெரியாது." என்றாள் நேத்ரா.

"அப்போ பெரிய அருவி கூடத் தெரியாதா?"

உதடு பிதுக்கி இடவலமாக இல்லை என்றவள், "நியூஸ்ல பார்த்ததோடு அவ்வளவு தான்" என்றாள் நேத்ரா.

"அடுத்த வாரம் இங்கே தான் இருப்பேன். நான் உங்களை கூட்டிட்டு போறேன்." என்றிட நேத்ராவும் சம்மதம் என தலையசைத்தாள்.

அதற்குள் ஹரித்ராவின் அன்னை அழைத்திட, "எங்க அம்மா கூப்பிடுறாங்க. நாம அடுத்த வாரம் மீட் பண்ணலாம்... டாட்டா..." என்று கையசைத்துக் கூறினாள் அந்த பதின்பருவக் குழந்தை.

இங்கிருந்து கல்லூரி செல்வது இரண்டு பெண்களுக்கும் கடினமாகத் தான் இருந்தது. நேத்ரா இது பற்றி வாய் திறக்கவில்லை என்றாலும் மாலதி தன் அன்னையிடம் முறையிட்டாள்.

"ம்மா... நாம நம்ம வீட்டுக்கே போயிடலாமா?"

"ஏன்டி அறிவிருக்கா உனக்கு!!! இவ்வளவு பெரிய வீட்டை விட்டுட்டு தீப்பட்டி சைஸ்ல இருக்க வீட்டுக்குப் போலாமானு கேட்கிறாயே!!!"

"இங்கே இருந்து காலேஜ் போயிட்டுவர கஷ்டமா இருக்கு ம்மா... லேட் ஆகிடுது... உனக்கு தான் தெரியுல எங்க காலேஜ் ஸ்ரிக்ட்னு... அதுவுமில்லாம நான் இந்த வருடம் பைனல் இயர். பிராக்டிகல் கிலாஸெஸ் எல்லாம் மிஸ் ஆகுது..."

"சரி... சரி புலம்பாதே அதுக்கும் ஒரு ஐடியா பண்ணுறேன்." என்று தன் மகளை சமாதானம் செய்தார் கற்பகம்.

அடுத்த இரண்டு நாட்களில் காருடன் டிரைவர் வாசலில் வந்து நின்றிருந்தார். இதில் மாலதிக்கு விருப்பம் இல்லை என்றாலும் தன்னுடைய காரியம் தடையில்லாமல் நடந்தால் சரி தான் என்று ஏற்றுக்கொண்டாள். அந்த குடும்பத்தில் தப்பிப் பிறந்த தனிப்பிறவி மாலதி மட்டுமே. அதற்காக ரெம்ப நல்லவள்னு சொல்லிட முடியாது, தனக்கு பங்கம் விளையாத பட்சத்தில் எதையும் கண்டுகொள்ளமாட்டாள்.

ஆரம்பத்தில் நேத்ராவிடம் மாமன் மகள் என்று அன்போடு தான் பழகினாள் மாலதி. ஆனால் தன் அன்னையின் நடிப்பைக் கண்டு தன்னையும் அதே போல் நினைத்தால் தனக்கு தான் அவமானம் என்று நினைத்து தான் நேத்ராவிடம் அளவாகப் பேச கற்றுக்கொண்டாள். மதன் வீட்டில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளவேமாட்டான்...

ஹரித்ரா சொன்னது போல் ஒருவாரத்தில் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் வந்து தங்க, ஹரித்ராவும் அவள் அன்னை, தந்தையும் அவர்கள் வீட்டு வேலைக்கு வந்து தங்கினர். மாலை நேரங்களில் ஹரித்ரா நேத்ராவுடன் தன் நேரத்தை செலவிட்டாள்.

சில நேரங்களில் வாயாடிக் கொண்டும், சில நேரங்களில் பாடம் படித்துக் கொண்டும் என இருவரும் ஒன்றாக பொழுதை போக்கினர். அந்த வார இறுதியில் ஹரித்ரா நேத்ராவை ஐந்தருவி அழைத்துச் சென்றாள். சுற்றிப் பார்க்க வந்தவர்கள் சென்றபின் ஹரித்ராவும், நேத்ராவும் மாதமாதம் சந்தித்து எங்கேனும் சென்று வந்து கொண்டிருந்தனர்.

தினம்தினம் ஒரு மாற்றமும் அதில் பல ஏமாற்றங்களுமாக நாட்கள் செல்ல நேத்ராவிற்கு கிடைத்த ஒரே ஆறுதல் ஹரித்ரா மட்டுமே என்றாகிப் போனாள்.

இதற்கிடையே வீட்டு வேலைக்கு ஹரித்ராவின் அன்னை தான் நியமிக்கப்பட்டிருந்தார். அதனால் மாதம் ஒருமுறை இருந்த ஹரித்ரா, நேத்ரா சந்திப்பு வார வாரமாக மாறியது. மற்ற நாட்களில் ஹரித்ரா பள்ளிக்குச் சென்றபின் வேலைக்கு வந்தார் அவள் அன்னை.

பவன், கமல், நேத்ரா சந்திப்பைத் தவிர மற்ற அனைத்தும் சுமூகமாகவே சென்றது. கற்பகம் தனக்கு வேண்டிய வசதிகளை நேத்ராவின் பேரைச் சொல்லி செய்து கொண்டார். அவரின் செயலில் நேத்ரா தான் தலைகுனிந்து உடல் கூசிப்போவாள். கங்காதரன் மற்றும் விமலாவை நிமிர்ந்து பார்க்கவே ஒரு மாதிரி ஆகிவிடும் அவளுக்கு.

அவர்களும் இவளின் கூச்சத்தைக் கண்டு கேட்பதற்கு தயங்குகிறாள் என்று நினைத்தனர். "எங்களிடம் கேட்பதற்கு என்ன தயக்கம்?" என்று கேட்டாலும் கற்பகம் தான் ஆளுக்கு முன்பாக பதில் கூறுவார்.

"நானும் இதே தான் தம்பி சொன்னேன். நேத்ரா தான் 'எனக்கு எப்போ என்ன செய்து கொடுக்கனும்னு மாமாக்கு தெரியும். நானா எதுவும் கேட்டதில்லை'னு சொல்லிடுச்சு. நானும் அப்படியே விட்டுட முடியுமா? அப்பறம் அத்தியாவசிய தேவை கூட எதுனு மறந்து போயிடுமே..." என்றார்.

"அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் அளவு கூட மதன் சம்பாதிக்கவில்லையா?" என்று ஒருமுறை எதார்த்தமாக கேட்டுவிட்டார் கங்காதரன்.

மதன் காலையில் வீட்டைவிட்டு சென்றான் என்றாள் இரவு தான் வீட்டிற்கு வருவான். அவன் என்ன வேலை செய்கிறான், எங்கே செல்கிறான் என்று யாருக்கும் தெரியாது. அதனையும் சமாளிக்கும் விதமாக,

"இந்த வருடம் தானே படிப்பை முடித்திருக்கிறான். வேலை தேடுவானா இருக்கும்... ஒரு வேலை நிரந்தரமா கிடைத்தபின் அவனே எல்லாம் பார்த்துப்பான்." என்று வலிந்து கொண்டுக் கூறினார்.

மேலும் மேலும் பேசிக் கொண்டிருந்தால் தன் பெண்ணின் மனது தான் வருத்தமடையும் என்று அதன்பின் இது பற்றி கேட்பதே இல்லே கங்காதரன்.

ஆறுமாதம் கடந்திருக்க, ஹரித்ரா வருவது நின்றது. என்னவென்று அவள் அன்னையிடம் விசாரிக்க,

"பெரிய மனுஷி ஆகிவிட்டாள். உங்கள் வீடு இருப்பதோ காட்டுப் பாதை... வயதிற்கு வந்த பெண்ணை அந்த வழியே கூட்டிவந்தாள் காத்துக் கருப்பு அடிச்சிடும்" என்றார்.

நேத்ராவிற்கு அளவற்ற மகிழ்ச்சி, கங்காதரன் குடும்பத்திற்கு அடுத்தபடியாக தனக்குக் கிடைத்த உண்மையான உறவு அந்த சிறுமி தான் என்று பலமுறை நினைத்திருக்கிறாள். அவளின் அக்கா என்ற அழைப்பிற்காகவேணும், ஒரு அக்காவாக இருந்து ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்து, கங்காதரனுக்கு அழைப்புவிடுத்தாள்.

அன்று தான் கங்காதரனும் ஒரு விஷயத்தை அறிந்து கொண்டார். தன் வளர்ப்பு மகள் தன்னிடம் கேட்க ஒருபோதும் இடைத்தரகர் வைத்ததில்லை, இத்தனை நாள் கேட்டு வாங்கியது அனைத்தும் கற்பகம் தான் என்று நன்கு உணர்ந்து கொண்டார்.

நேத்ராவே கேட்டுக் கொண்டதால் கங்காதரன், விமலா, பவன், கமல் என அனைவரும் ஹரித்ராவை பார்க்க வந்தனர்.

நேத்ராவின் விருப்பப்படி இரண்டு பட்டுப்புடவையும், ஒரு பட்டு தாவணியும், ஒரு ஜமிக்கி வொர்க் வைத்த தாவணியும், அது போக மூன்று எம்ராய்டரி சல்வாரும், உடுத்து மாற்றுக்குப் போட்டுக்கொள்ள கொஞ்சம் சுடிதாரும் என ஆடைகளே நிறைய குவித்தனர்.

கங்காதரனும், விமலாவும் ஒரு ரூபி கல் நகை செட் பரிசளிக்க, பவனும் கமலும் வெறுமனே ஆசிர்வதிக்கக் கூடாது என்பதற்காக ஆளுக்கு ஒரு தங்க நாணயமும், நேத்ரா ஒரு செயினும் மோதிரமும் என குறைவில்லாமல் நிறை மனதுடன் செய்தனர்.

கற்பகத்திற்கு இது அனைத்தையும் பார்த்து வயிற்றெரிச்சல் ஏற்பட்டாலும் நேத்ராவே நேரடியாக தலையிட்டதால் ஏதும் சொல்ல முடியாமல் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறித் தவித்தார். பற்றாகுறைக்கு பவன் மற்றும் கமலுடன் சகஜமாக பேசுவதைக் கண்டவர் மேலும் காண்டானார். அதனாலேயே அவரின் கோணல் புத்தி, ஒரு நாள் கூட அமைதியாக இல்லாமல் ஒரு திட்டம் தீட்டி அதனை அமல்படுத்த சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

ஹரித்ரா வரமுடியாத காரணத்தால் நேத்ராவே டிரைவருடன் காரில் சென்று பார்த்துவிட்டு, அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு அருவி அல்லது பூங்காவிற்கு சென்று வருவார்கள்.

அப்படி ஹரித்ராவை சந்திக்கச் சென்ற ஒரு தருணத்தில் அவளுக்குத் தெரியாமல் வீட்டில் பல விஷயங்கள் நிகழ்ந்திருந்தது. மாலதி தன் படிப்பை முடித்த கையோடு மூணாரில் ட்ரைனிங் என்று கூறிட முதலில் கற்பகம் மறுத்தார்.

"நீ வேலைக்கும் போக வேண்டாம், ட்ரைனிங்கும் போக வேண்டாம். உனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறேன்..."

"கல்யாணம் செய்துகிட்டு வேலைக்குப் போனா உங்களுக்கு சம்மதமா?"

"வரப்போற மாப்பிள்ளை சரினு சொன்னா நீ போ... எனக்கென்ன வந்தது!!!"

"அப்படினா நல்லா கேட்டுக்கோங்க நான் ஒருத்தரை காதலிக்கிறேன். அவன் மூணார்ல தான் வேலை பார்க்குறான். அதனாலத் தான் நானும் மூணார் போறேன். நீங்க சம்மதிச்சாலும் சம்மதிக்கலேனாலும் அவனைத் தான் கல்யாணம் செய்துப்பேன்..." என்று அதிரடியாகக் கூறிட கற்பகம் மற்றும் மதன் இருவருக்குமே அதிர்ச்சியே...

மதனோ "என்ன தைரியம் இருந்தா என் முன்னாடியே காதலிக்கிறேனு சொல்லுவே..." என்று கோபம் கொள்ள,

"என்னடா இத்தனை நாள் இந்த வீட்ல என்ன நடந்தாலும் கண்டுக்காம சுத்திட்டு இருந்துட்டு இப்போ என்கிட்ட எகுறுகிறே... அண்ணனா இருந்து கல்யாணம் செய்து வைக்க முடியும்னா செய்து வை... இல்லேனா சொல்லு நானே செய்துக்குறேன்..." என்று மதனிடமும் கத்தினாள்.

தங்கையை அடிக்கச் சென்ற மதனை தடுத்து நிறுத்தினார் கற்பகம். "அந்த பையன் யாரு என்னனு சொல்லு? பிறகு கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம்..." என்றிட,

"நீ நினைக்கிற அளவுக்கு பணக்காரன் கிடையாது. ஆனால் நம்மை விட நல்ல வசதி. ஒரே பையன். அதனால அவங்க வீட்ல ஓகே சொல்லிட்டாங்க... நீங்க சம்மதிக்கலேனாலும் அவங்க முன்னிலையில் கல்யாணம் நடக்கும்..." என்று அன்னை மற்றும் தமையனை எச்சரித்துவிட்டுச் சென்றாள்.

கற்பகம் கிடைத்த வரைக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, தான் தீட்டிய திட்டத்தை செயல்முறைப் படுத்தினார். இல்லாவிட்டால் தன் மகளின் அவசரபுத்திக்கு கிடைக்க வேண்டியதும் கைநழுவிச் சென்றுவிடும் என்றே அவசரமாக கல்யாண ஏற்பாடுகளை செய்யுமாறு தன் மகனிடம் கூறினார்.

அது பிடிக்காத மதன், "என்ன ம்மா... உங்களுக்கு புத்தி கெட்டுபோச்சா!!! அவ தான் மிரட்டிட்டுப் போறானா நீங்களும் எல்லாத்துக்கும் சரினு சொல்லிட்டு இருக்கிங்க?"

"டேய்... மதன் உனக்கு தான் புத்தி இல்லாம போச்சு... தங்க முட்டை இடுற வாத்து நம்ம கையில் இருக்கும் போது முடிந்தளவு பயன்படுத்திக்கனும்... நேத்ரா நம் கைநழுவி போனப்பின்னாடி நாம நடுத் தெருல தான் நிக்கனும்... அதுக்கு முன்னாடி மாலதி கல்யாணம், வளைகாப்பு, குழந்தைக்குச் செய்ய வேண்டியதுனு எல்லாத்தையும் நேத்ரா மூலமா செய்து முடிக்கனும். என்னை கேட்டால் நேத்ராவை உனக்கே கட்டிவெச்சி தங்கமுட்டை எடுத்துக்கிட்டே இருப்பேன். மாலதி கல்யாணம் முடிஞ்சதும் என் அடுத்த திட்டமே அது தான்."

"என்னாலேலாம் அந்த கருவாச்சிய கட்டிக்க முடியாது. என் ரேஞ்சே வேற... நானே ஃபாரின்ல செட்டில் ஆகுற ப்ளான்ல இருக்கேன். என்னலாம் உன் தம்பி மகளை கட்டிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ணாதே..." என்று கூறி அவன் வழியில் அவன் சென்றுவிட்டான்.

-ஊடல் கூடும்.​
 
Top