• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
மதனின் பதிலில் தான் கட்டி வைத்திருந்த கனவுக் கோட்டை இடிந்து விழுந்தது போல் இருந்தது கற்பகத்திற்கு. சரி அதற்கும் வழி கிடைக்கும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு மாலதியின் கல்யாண வேலைகள் பற்றி திட்டம் தீட்டினார் கற்பகம்.

"நேத்து ம்மா... என்னடா பண்றே?" என்று மெதுவாக தன் பீடிகையை ஆரம்பித்தார் கற்பகம்.

"அது வந்து அத்தே..." என்று தயங்கியவாறு போனையே பார்த்திருந்தாள்.

"உனக்கு லீவ் ஆரம்பிச்சிடுச்சுல?"

"ஆமா அத்தை..." என்று கூறி தலை குனிந்து கொண்டாள்.

"மதுரைக்கு போகனுமா டா?" என்று அவள் அந்த ஐடியாவில் இல்லை என்றாலும் அனுப்பி வைக்கும் முடிவோடு கேட்டார் கற்பகம்.

"பவனும் லீவுக்கு வரான் அத்தை..." என்று இப்போது தான் தன் மொபைலுக்கு வந்த குறுந்தகவலைக் காட்டினாள்.

"சந்தோஷமா போய் இருந்துட்டு வாடா... பெரியவங்க எப்படியோ!!! ஆனால் பசங்க ரெண்டு பேரும் உன் மேல பிரியமாத் தான் இருக்காங்க... இங்கே வந்திருந்த போது தான் பார்த்தேனே..." என்று வாயெல்லாம் இளித்தாலும் மனம் முழுதும் கனலாக உளன்றது கற்பகத்திற்கு.

"அத்தைக்கும், மாமாவுக்கும் கூட என் மேல பிரியம் தான்...." என்று தன்னையும் மறந்து கங்காதரன் மற்றும் விமலாவை தன் பேச்சில் சேர்த்திருந்தாள்...

"நீ தான் டா அப்படி சொல்றே... எனக்கு என்னவோ அப்படித் தெரியலே... நான் வந்து உன்னை அழைச்சிட்டு போறதுக்காகவே காத்திருந்தாங்க போல... கேட்டதும் சரினு சொல்லிட்டாங்க... சரி போகட்டும்னு விட்டா இப்போ எதுனாலும் கேட்டா தான் செய்றாங்க..." என்றிட அவள் முகம் வாடியது.

"அதைவிடு, அடுத்தவங்க எப்படி இருந்தா நமக்கென்ன, நம்ம மாலதி ஒருத்தரை விரும்புறாளாம்… அவர் இருக்குற இடத்துல தான் இப்போ அவளுக்கு வேலையும் கிடைச்சிருக்கு. அவர் வீட்டிலேயே அவங்க அம்மா, அப்பா கூட தங்கி வேலை செய்யட்டும்னு சொல்றாங்க... எனக்கு தான் அதுல உடன்பாடு இல்லே... என்ன இருந்தாலும் வயசுப் பொண்ணை ஒருத்தர் சொன்னாருனு அவர்கூட அனுப்பி வைக்க முடியுமா!!! அதுவும் இல்லாம என்ன தான் கட்டிக்கிட பேற பையனா இருந்தாலுமே ஒரு ஆம்பலை இருக்க வீட்டுல கன்னி பெண்ணை தங்க வெக்கிறதுனா யோசிக்கனும் தானே..."

என்று கங்காதரன் உன்னை இங்கே அனுப்பி வைக்கும் போது இதெல்லாம் யோசிக்கவில்லை என்று அவர் மேல் தப்பான அபிப்பிராயத்தை மறைமுகமாக விதைத்தார். மேலும் அவரே தொடர்ந்தார்,

"சரி ஊரு வாயிக்கு எதுக்கு அவல் கொடுப்பானேனு கல்யாணம் செய்து வெச்சி அனுப்பி வெச்சிடலாம்னு பார்த்தா அவங்க கேட்குற டௌரி நம்மால கொடுக்க முடியாது போல... ரவி இருந்திருந்தா தாய்மாமா சீரோட பாதி கல்யாணத்தையே முடிச்சிருப்பான். இந்த மதனும் முடிஞ்ச அளவு ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கடன் கேட்டிருக்கான் போல... அதை வெச்சி தான் சமாளிக்கனும். முடியலேனா அவள் தலையெழுத்து அவ்வளவு தான்னு நெனச்சி வேற இடம் பார்க்க வேண்டி தான்... சரி ம்மா இதையெல்லாம் உன்கிட்ட பொலம்பி என்ன ஆகப்போகுது... நீ லீவ் முடியிர வரை மதுரைல அந்த பசங்களோட நிம்மதியா , சந்தோஷமா இருந்துட்டு வா... சரியா? அதுக்கு முன்னே விஷேசம் வெச்சா சொல்லுறேன்..." என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் இந்த விடுமுறைக்கு ஊருக்குச் சென்று அவளின் பணி என்ன என்பதை மனதில் பதிய வைக்க அடித்தளம் இட்டார்.

அத்தோடு நிற்காமல் மதுரைக்கு கிளம்புவதற்கு முன்பு வரை, பணப் பற்றாகுறை பற்றி புலம்பித் தள்ளினார். வாயைத் திறந்தாலே டௌரி, தாய்மாமன் சீர் போன்ற வார்த்தைகள் தான் வந்துவிழும்...

அனைத்திற்கும் எதிர்ப்பும் சொல்லாமல், ஆமோதிப்பும் இல்லாமல் மௌனம் மட்டுமே பதிலாகத் தந்து மதுரை வந்தடைந்தாள் நேத்ரா. வந்ததும் வராததுமாக அவளின் முதல் சந்திப்பு கங்காதரனாகத் தான் இருந்தது.

மாலதியின் கல்யாண விஷயத்தை மட்டும் காதில் போட்டதோடு சரி அதன்பின் அவள் அதுபற்றி அவரிடம் மூச்சு கூட விடவில்லை...

கற்பகம் சொன்னது போல் பவன் மற்றும் கமலுடன் தன் விடுமுறையை உற்சாகமாக கழித்தாள். பற்றாக்குறைக்கு விமலாவுடன் அவ்வபோது சமையல் கற்றுக்கொள்கிறேன் என்று சமையலறையை ரணகளமாக மாற்றியிருந்தாள். அதன் விளைவாக உணவு மேசை போர்க்களமாக மாறியது.

பவனும் கமலும் ஆளுக்கு ஒருபுறம் நேத்ரா சுட்ட வடையை தங்கள் ஆயுதமாக மாற்றி, ஒருவர் மீது ஒருவர் எரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவளின் ஊத்தப்பத்தையே கேடையமாக பயன்படுத்தி தங்களை காத்துக் கொண்டனர்.

அவள் சுட்டெடுத்த சப்பாத்தி 'த்ரோ டிஸ்க்' விளையாட நன்றாகவே பயன்பட்டது. இது எல்லாம் நேத்ரா கண்மறைவின் பின்னால் தான் நிகழும். அவளின் முன்னாள் நடந்ததென்றால் அவ்வளவு தான், சாம்பார் என்ற பெயரில் அவள் சமைத்த கலப்படக் குழம்பில் அபிஷேகம் செய்துவிடுவாளே... அந்த பயம் அண்ணன் தம்பி இருவரின் மனதிலும் உண்டு.

நேத்ரா வந்த முதல் நாள் இரவே கங்காதரன் விமலாவிடம் மாலதி கல்யாணம் பற்றி பேசினார்.

"விமலா!!! மாலதி பொண்ணுக்கு கல்யாணம் பேசப்போறாங்கலாம்..."

"ஓஓஓ அப்படியா!!! சந்தோஷமான விஷயம் தான்..."

"இதைத் தாண்டி சொல்றதுக்கு உன்கிட்ட எதுவும் இல்லேயா?"

"நான் சொல்ல என்ன இருக்கு!!! கற்பகம் அக்கா என்ன கேட்கிறாங்களோ செய்து கொடுங்க..." என்று மேசையின் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில பேப்பர் மற்றும் டைரி முதலியவிற்றை மீண்டும் ஒருமுறை தூசிதட்டி அடுக்கி வைத்தார்.

"என்கிட்ட நேரடியா எதுவும் கேட்கலே... ஏன்? பேசக் கூட இல்ல!!!... ஆனால் நிச்சயம் சிவாகிட்ட பேசியிருப்பாங்க..."

"சிவா என்ன சொல்றா? அவ என்னென்ன செய்யனும்னு சொல்றாளோ எல்லாம் செய்து கொடுத்திடலாம்..." என்று தன் பணியே முக்கியம் என்பது போல் செய்து கொண்டே பதிலளித்தார்.

கங்காதரன் இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விமலாவையே பார்த்திருந்தார்.

கங்காதரனின் புறம் திரும்பாமலேயே அவரின் பார்வை தன் மேல் நிலைத்திருப்பதை உணர்ந்து கொண்ட விமலா,

"சரி அவ சொல்லலேனா என்ன? ரவி அண்ணா இடத்தில இருந்து சிவா என்னென்ன செய்யனும்னு நீங்க அவளுக்கு சொல்லிக் கொடுங்க..." என்று விமலாவே மேலும் கூறிட இப்போதும் அவரிடம் வார்த்தைகளின்றி வெறுமனே பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தார்.

அவரின் பார்வையில் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டினார் விமலா.

"நீங்க என்ன எதிர்பார்க்குறிங்கனு எனக்குப் புரியுது. சிவாவைப் பற்றித் தெரிந்தும் நான் அப்படி சொல்லிருக்கக் கூடாது தான். அதுக்காக மன்னிச்சிடுங்க... நாம எந்த விதத்திலேயும் குறையா செய்திடமாட்டோம்னு சிவாக்கும் தெரியும் தான். அதனாலத் தான் அவளும் எதுவும் வாய் திறந்து கேட்கலே... ஆனால் நீங்க முழு கல்யாணத்தையே நடத்திக் கொடுத்தாலும் அவங்களுக்கு மனசு நிறையாது, இதுக்கு மேல உங்க விருப்பம்... நீங்க என்ன செய்தாலும் மறுப்பு சொல்லமாட்டேன்..."

"நான் செய்றது சிவாக்காக மட்டும் தான்னு நீ நினைக்கிறேயா?" இந்த கேள்வியில் அவரை நிமிர்ந்து பார்த்த விமலா, இத்தனை வருடம் உங்களுடன் வாழ்ந்தும் இதைக் கூட புரிந்து கொள்ள முடியாமலா இருப்பேன் என்று பார்வையாலேயே பதிலளித்தவர், வாய்மொழியாகவும் உரைத்தார்.

"நம்ம ரெண்டு பேரோட சொந்தங்களும் நம்மை ஒட்டு மொத்தமா ஒதுக்கி வெச்சிட்டாங்க. அதனால ரவி அண்ணாவோட அக்காவை உங்க அக்காவா நினைச்சி தான் செய்றிங்க. ஆனால் அவங்க அதை புரிஞ்சுக்கலே... அதான் ஒதுங்கி இருந்து சிவா பேரை சொல்லி அவங்களுக்கும் செய்துட்டு இருக்கிங்க..." என்றிட...

இருபத்தி ஐந்து வருட திருமண வாழ்வில் தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னால் இருக்கும் சரியான காரணத்தை மிகச்சரியாக ஊகிக்கும் தன் மனையாளை பெறுமை பொங்க பார்த்தார் கங்காதரன்.

"அப்போ இரண்டு தாய்மாமன் சீரும் நாம தானே செய்யனும். அதுவும் இல்லாம அப்பா இல்லாமல் தவிக்கும் மதனுக்கும் நாம தானே பக்கபலமா இருக்கனும்!!!..."

"ஆனால் அவங்க அப்படி நெனைக்கமாட்டாங்கலே... அதை நினைக்கும் போது எனக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு..."

"நாம செய்ய வேண்டியதை செய்வோம்... நடப்பது நடக்கட்டும்... எல்லாமே நல்லதுக்கு நினைச்சிக்கோ விமலா. அதுவும் இல்லாம நாம இப்போ இந்த அளவு வளர்ந்து நிக்கிறது ரவியால மட்டும் தான். அவன் குடும்பத்துக்கு செய்றதுக்கு யோசிக்கலாமா!!! நீ முழுமனதோடு சம்மதம் சொன்னா தான் என்வேலை தங்குதடையில்லாம நடக்கும். இல்லேனா உனக்கு விருப்பம் இல்லேயோனு யோசிச்சு, யோசிச்சு அரையும், குறையுமா செய்திடுவேன்..." என்று விமலாவின் அருகே சென்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு கூறினார்.

விமலாவும் கணவனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொருட்டு, சிரித்த முகமாக "சரிங்க, உங்க விருப்பப்படியே எல்லாம் செய்யலாம். இந்த முறை சிவாவை முன் நிறுத்தாம கற்பகம் அக்காவை முன்னிறுத்தி அவங்க செய்றது போலவே செய்திடலாம்..." என்று தன் முழு சம்மதத்தையும் தெரிவித்தார்.

"ஆங்ங்ங்... இது தான் என் விமலா..." என்று கங்காதரன் காதலுடன் கன்னம் கிள்ளிட,

"ச்சூசூசூ... என்ன இது!!! பேரப்பிள்ளையை கொஞ்ச வேண்டிய வயசுல என்னை கொஞ்சிக்கிட்டு...." என்று செல்லமாக கடிந்திட,

"அதுக்கு தான் இன்னும் நிரைய டைம் இருக்கே. என் பொண்ணு அவளோட லண்டன் படிப்பை முடிச்சி இரண்டு வருடம் நம்ம பிஸ்னஸ் பழகிட்டு தான் கல்யாணம் செய்துப்பேன்னு சொல்லிருக்கா... அப்படி இப்படினு பார்த்தா கூட மருமகன் வரதுக்கே இன்னு ஐந்து வருடம் ஆகும்... அதுவரை நான் கொடுத்து வெச்சவன் தான்..."

"ம்ம்ம்... ஆசை தான்... உங்க பிள்ளைங்க மூனும் ஒன்னா லண்டன் கிளம்புதுகலாம். பின்னே நான் மட்டும் இங்கே என்ன செய்ய!!! நானும் லண்டன் போகப் போறேன்... எனக்கும் பாஸ்போர்ட் எடுங்க..."

"அதை என்னைப் பார்த்து தான் சொல்லேன்!!! 'உங்களை தனியா விட்டுட்டு நான் என் பிள்ளைகளுடன் போகிறேன் என்று'!!!" என்று சவால் விடுவது போல் வினவினார்...

நேருக்கு நேர் நின்று பதில் சொல்ல முடியாமல் நகர்ந்து சென்று மெத்தையில் படுத்துக் கொண்டு "ஒரு நாள் உண்மையாகவே சொல்லத்தான் போறேன்... பாருங்க..." என்று கூறி உறங்கத் தயாரானார்.

நிச்சயம் அது மட்டும் நடக்காது என்ற அர்த்தத்தில் சற்று பலமாகவே சிரித்துக் கொண்டே கங்காதரனும் வந்து படுத்துக் கொண்டார்.

காதல் எல்லா வயதிலும் அழகு தான். பல நேரங்களில் அப்பாமார்களை தனியே விட்டுவிட்டு அம்மா மார்கள் எங்கும் இரவு தங்குவதில்லை. 'இந்த மனுஷனை கட்டிக்கிட்டு எங்கேயாவது ஜாலியா போய்ட்டு வர முடியுதா!!!' என்று அலுத்துக்கொண்டாலும் அடுத்த நிமிடமே 'உன் அப்பா சாப்பிட்டாறா தெரியவில்லையே!!! என்ன சாப்பிட்டாரோ!!! எப்போ சாப்பிட்டாரோ!!!' என்று புலம்புவதில் தான் அம்மாவின் காதல் வெளிப்படும் என்றால், அப்பாவின் காதலை 'நீ இல்லாமலா ஜாலியா இருந்தேன். டேஸ்ட்டான ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டேன்' என்று கூறினாலும் ஒரு நாளிலேயே முகவாட்டமும், மெலிந்த உடலும் காட்டிக்கொடுத்துவிடும்...

விடுமுறை முடிந்து மீண்டும் குற்றாலம் வந்த நேத்ராவிடம் கற்பகம் என்ன கொண்டு வந்தே? ஏது கொண்டு வந்தே? என்று தன் விசாரணையைத் தொடங்கினார்.

"நேத்து குட்டி... மாமா மாலதி கல்யாணம் பத்தி என்ன சொன்னார் டா..."

அவரை சிறிது நாட்கள் தவிக்கவிட நினைத்த நேத்ரா "கண்டிப்பா கல்யாணத்துக்கு குடும்பத்தோடு வரோம்னு சொல்லிருக்காங்க அத்தை..."

"ஆமா... ஆமா... கட்டிப்பா குடும்பத்தோடு வந்து கலந்துகிட்டா சந்தோஷம் தான். நம்ம ஹரித்ரா சடங்குக்கு கூட எல்லாருமா கலந்துகிட்டு நிறைஞ்ச மனசோட தானே செய்துட்டு போனாங்க..."

"ஆமா அத்தை... மதனை சீக்கிரம் கடனை வாங்கினாலும் கல்யாண ஏற்பாடு செய்ய சொல்லுங்க... மாலதி கல்யாணத்தில் தான் திரும்பவும் ஒரு ஆட்டம் போடலாம் என்று நெனச்சிருக்கோம்... கல்யாணம்னாலே கொண்டாட்டம் தானே..." என்றிட கற்பகத்தின் பாடு திண்டாட்டம் ஆகியது.
-ஊடல் கூடும்.​
 
Top