• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
ராமின் முறைப்பு அபியின் மூளைக்கு சிறிதும் எட்டிடவில்லை. தன் அண்ணன் ஒரு பெண்ணை முரட்டுத்தனமாக பிடித்திருந்ததை துளியும் நம்ப முடியாமல் அவனையே பார்த்திருந்தான்.

"கதவை தட்டிட்டு வரவேண்டி தானே?"என்று அதே முறைப்போடு அபிக்கு மட்டும் கேட்கும்படி கூறினான் ராம்.

இதுவரை தன் அண்ணன் அறைக்குள் நுழைவதற்கு அதுபோன்ற கதவைத்தட்டும் பழக்கமற்ற அபிக்கு, அண்ணனின் கேள்வி புதிதாகத் தோன்றியது. ஒருமுறை மிதுன்யாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கூட அபி எப்போதும் போல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்துவிட்டு, பின் இருவருக்கும் தனிமை தர வேண்டி மீண்டும் வெளியேறிச் செல்ல இருந்தவனை தடுத்து நிறுத்தி நமக்குள்ள என்ன டா, வா நீயும் எங்களுடன் வந்து உட்கார் என்று கூறிய ராமை இப்போது நினைத்துப் பார்த்து வருந்தினான் அபி.

இருந்தும் தமையனை விட்டுக்கொடுக்க முடியாமல், மிதுன்யாவுடனான பேச்சு குடும்ப விஷயம், நேத்ராவுடனான மீட்டிங் தொழில் தொடர்பானது என்பதால் கோபம் கொண்டு அவ்வாறு கூறியிருப்பார் என தனக்குத் தானே நினைத்துக் கொண்டு

"சாரி பையா" என்றான். ஆனாலும் ராமின் நடவடிக்கை மாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினான்.

நேத்ராவோ என்னவென்று சொல்ல முடியாத உணர்விற்குத் தள்ளப்பட்டாள். ராம்கிரனைப் போன்று தன் நிறத்தை ஏளனமாகப் பார்த்தோரையும், விவாகரத்தானவள் என்று இழிவாக நடத்தியோரையும் மட்டுமல்லாது, வெகுநாட்களாக கைபடாத மலர் என்று எண்ணும் சிறுபுத்திக்காரர்களையும் பார்வையாலும் பேச்சாலும் எட்ட நிறுத்தி இருந்தவளுக்கு ராமின் இந்த முரட்டுத்தனமான தாக்குதல் கோபத்தையும் கூடவே ஒருவிதமான அச்சத்தையும் ஏற்படுத்தியது.

அங்கிருந்து செல்ல முற்பட்டவளை தடுத்து நிறுத்தியது ராமின் குரல்.

"கான்ட்ராக்ட் கேன்சல் செய்ய முடியாது. உன்னால என்ன செய்ய முடியுமோ செய்துக்கோ" என்றான்.

தொலைந்து போன தைரியம் மீண்டும் கிடைத்தது போல் திரும்பி அவனை முறைத்து விழித்தாள்.

அவளின் முறைப்பைக் கண்டவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு

"நெக்ஸ்ட் மீட் இருவருக்கும் இனிமையாக அமையட்டும்" என்று வாழ்த்தினான்.

"உன்னை பார்க்கவே பிடிக்கலே. இனி ஒருமுறை உன்னை சந்திக்கும் சூழ்நிலை வரவே கூடாதுனு நினைக்கிறேன்." என்று கோபமாக கண்களில் அனல் தெறிக்க மொழிந்துவிட்டு வெளியேறிச் சென்றாள்.

அவளின் வாய்மொழி வார்த்தைகளைக் கேட்டவனுக்கு இதழ்விரிந்த குறுநகைத் தோன்றி மறைந்தது. தன்னையே விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்த அபியைக் கண்டதும் தான் அவனிடம் கோபமாக பேசியது நினைவில் வந்தது.

"சாரி சோட்டூ.... அவ மேல இருந்த கோபத்தை உன்கிட்ட காண்பிச்சுட்டேன். வெரி சாரி" என்று தன் காதுகளை பிடித்துக் கொண்டு கூறிட,
"நகி பையா... ஏதோ கோபத்துல தான் அப்படி பேசினிங்கனு எனக்கு தெரியும்" என்று தன் தமயனை இலகுவாக்கிடும் பொருட்டு உரைத்துவிட்டு தான் கேட்க வந்த சந்தேகத்தை கேட்டுச் சென்றான்.

பதினோரு மணி தான்டியே அலுவலகம் வந்த பாரி மற்றும் புகழ் நேரே ராமை சந்திக்கச் சென்றனர். அவர்களிடம்

"என்னால் இதனை சரி செய்ய முடியும், அப்படி சரி செய்ய முடியாத சூழ்நிலை வரும் போது உங்கள் உதவியை நாடுகிறேன்" என்று கூறி அவர்கள் பணியை கவனிக்க அனுப்பி வைத்தான்...

இப்பொழுதே அவனுக்கு போதும்போதும் என்று ஆகிவிட்டது. இன்னும் இதனைப் பற்றி தாத்தாவிற்கு விளக்கம் அளிக்க வேண்டும், அம்மாவின் காதிற்கு செல்லும் போது அவர்களை சமாதானம் செய்ய வேண்டும், போதாக்குறைக்கு அத்தை, மாமா, சித்தி, மிதுன் என குடும்ப உறுப்பினர்கள் கேட்கும் போதெல்லாம் பதில் கூற வேண்டுமே என்று நினைத்து தன்னைத்தானே நொந்து கொண்டான்.

அது சரி வெற்றியுடன் வீடு சென்றால் அனைவருமே பாராட்டுவது மட்டும் அல்லாது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதே போல் தோல்வி கிடைத்தாலும் நாம் துவலாமல் இருக்க ஆருதல் கூறத்தானே செய்வார்கள், அது தானே உண்மையான அன்பு நிறைந்த மனது என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

மதியம் ராமைத் தவிர அனைவரும் வீட்டிற்குச் சென்று உணவருந்தினர். தன் அத்தை குந்தவையின் அழைப்பை ஏற்று அங்கே சென்றான் ராம்.

"பையா, தாத்தாகிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்டிங்க..." என்ற அபியிடம்

"சோட்டூ அந்த ராட்சசிக்கு தாத்தா எவ்வளவோ மேல்... அவ இப்போ என்ன பிரச்சனைய இழுத்து வெச்சிருக்கானும் தெரியலே. இன்னும் என்னென்ன பிரச்சனை இழுத்துட்டு வருவானும் தெரியலே......" என்று மிதுன்யாவை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தான் ராம்.

குந்தவையின் இல்லம் சென்று மிதுன்யாவை எதிர்க்கொள்ளும் தெம்பை வரவழைத்துக் கொண்டு உப்ப்ப் என்று ஒரு பெருமூச்சை வெளிவிட்டு காலிங் பெல்லை அழுத்தினான். அங்கு வந்து நின்றதோ அவன் அத்தை குந்தவை.

"உள்ள வாடா கண்ணா..."

"என்ன அத்தை? என்ன பிரச்சனை? எதுக்கு என்னை கால் செய்து வரச் சொன்னிங்க?"

"எல்லாம் அவ பண்ற வேலை தான். அவளை சமாளிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள் நீ தான். போய் பாரு அவ பண்ற கூத்தை" என்றார் குந்தவை.

உச்சி வெயிலில் மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்திருப்பவளை எப்படி வெளியே வரவைப்பது என யோசித்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்தான் ராம்.

அவள் இவனை நிமிர்ந்து கூடப் பார்ப்பதாக இல்லை.

"உனக்கு எது வேணுனாலும் என்கிட்ட கேளுனு சொல்லிருக்கேன்ல? இப்போ எதுக்கு இங்கே வந்து உக்காந்திருக்க?"

முகத்தை உர்ர்ர் என்று வைத்துக் கொண்டு அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

"ஹேய்..... மிதுன்.... உன்கிட்ட தான் பேசுறேன். இப்படி முகத்தை திருப்பிக்கிட்டா என்ன பிரச்சனை னு எனக்கு எப்படித் தெரியும்? வாயைத் திறந்து சொல்லு..."

"உங்களுக்கு எத்தன முறை கால் செய்தேன் தெரியுமா? நீங்க எடுக்கவே இல்லை. சரி பிசியா இருப்பிங்க திரும்ப கால் செய்விங்கனு பார்த்தா அதுவும் இல்லே... உங்க அத்தை கூப்பிட்டதும் வேமா வந்து நிக்கிறிங்க...." என்றாள் குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு.

"ஓஓஓ... அது தான் கோபமா... இன்னைக்கு ஒரு டெவில் என்னை டென்ஷன் ஆக்கிடுச்சி", என்று ஆரம்பித்து நேத்ரா பற்றி அனைத்தும் கூறியவன் அவளைத் தான் அணைத்து தன் முரட்டுப் பிடியில் வைத்திருந்ததை மட்டும் மறைத்தான்....

"அப்பறம்?"

"அப்பறம் என்ன!!! யோசிக்கனும்... சரி அதைவிடு... நீ மொதோ வெளியே வா..." என்று அவளுக்கு கை கொடுத்து தூக்கிவிட்டான்.

அந்த ஆயிரம் லிட்டர் சின்டெக்ஸ் தொட்டிக்குள் இருந்து வெளியே வந்தாள் கெண்டைமீன் கண்களும், நீண்ட நெடு நாசியும், கோவை இதழும், பார்ப்போரை சுண்டி இழுக்கும் பால்வண்ண மேனியுமாக சர்வலட்சணமும் பொருந்திய மங்கையவள்.

"உன் கோபத்தைக் காட்ட வேற இடமே கிடைக்கலேயா? எப்போ பார் தண்ணீர் தொட்டிக்குள்ள வந்து உக்காந்துகிட்டு, தண்ணீரை வேஸ்ட் பண்ணுறதே வேலையா போச்சு உனக்கு..." என்று திட்டத் தொடங்கினான்.

"சும்மா சும்மா திட்டிக்கிட்டே இருந்தா திரும்ப உள்ளபோய் உக்காந்துக்குவேன். வெளிய வரவே மாட்டேன்." என்று கொஞ்சியவளை,

"போடி.... உள்ளேயே கெட" என்று மீண்டும் அவளை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

கீழே விழுகாமல் தன்னை நிதானித்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள்.

"மச்சான்... மச்சான்.... ப்ளீஸ் மச்சான்.... நான் என் ப்ரெண்டு மேரேஜ்க்கு டெல்லி போறதுக்கு அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்கிக்கொடுங்க மச்சான்..." என்று மச்சான் என்ற வார்த்தையைத் தவிர்த்து மீதி அனைத்தும் ஹிந்தியில் கூறினாள்.

"டோன்ட் கால் மீ மச்சான்...."

ஏனோ அவனுக்கு அந்த வார்த்தையில் விருப்பம் இல்லை. ஒருவேளை தமிழ் தெரிந்திருந்தால் முறைப்பெண்ணின் அந்த அழைப்பில் உள்ள இனிமை புரிந்திருக்குமோ என்னவோ...😉

"ஓகே Mr.ராம் ஜீ.... உங்க அத்தைய சமாளிங்க Mr.ராம் ஜீ"

"உங்க ரெண்டு பேரையும் மாமா எப்படித்தான் சமாளிக்கிறாரோ தெரியலே. வாரத்தில ஐந்து நாள் உங்க பஞ்சாயத்துக்கு என்னை அழைச்சிடுறிங்க...." என்று அலுத்துக் கொண்டான்.

மேலும் அவளிடம் தோழியின் திருமணம் பற்றி அறிந்து கொண்டு அவளையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றான். தன் அத்தை சமையலறையில் இருப்பதைக் கண்டு மெதுவாக உள்ளே நுழைய, அவனைத் தொடர்ந்து பின்னே பதுங்கி பதுங்கி வந்தாள் மிதுன்யா.

"அவளுக்கு சப்போர்ட் செய்து பேசுறதுனா என் கிட்ட வராதே ராம் கண்ணா..." என்று திரும்பிப் பார்க்காமலே கூறினார் குந்தவி.

"கண்டிப்பா.... இல்லே அத்தை...., அவ்வளோ தூரம்.... போக வேண்டாம்னு தான்.... நானும் சொல்லிட்டு இருந்தேன்." என்று தன் அத்தையின் பக்கம் பல்ட்டி அடித்தான்.

அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே கண்களால் மிரட்டிக் கொண்டிருந்தாள் பெண்ணவள். 'இப்போ பெர்மிஷன் வாங்கித் தரலே மகனே நீ செத்த...'

அவனும் பதிலுக்கு கண்களை மூடித் திறந்து 'கவலை வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறினான்.

இப்போது குந்தவை அவன்புறம் திரும்பி நின்று,

"இதை நான் நம்பனுமா?" என்றிட

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல்
"எதை?" என்றான்.

"அதான் நீ அவளை போகக் கூடாதுனு சொன்னதா சொன்னியே.... அதைத் தான்..."

"ஹா... ஹாங்... ஆமா... அதே தான்... இப்போ அவ போகலேனா கல்யாணம் நடக்காதா என்ன?..." என்றவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் குந்தவை அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க,

"ப்ரெண்ட்ஸ் எல்லாரும் போறாங்கலே... இவ ஒருத்தி இல்லேனாலும் கல்யாணப் பொண்ணு சந்தோஷமாத் தான் இருக்கும். என்ன இவ கல்யாணத்துக்கு தான் இவ ப்ரெண்ட்ஸ் யாரும் வர மாட்டாங்க... மேடைல மிதுன் மட்டும் தனியா இருப்பா?" என்று மேலும் கொஞ்சம் கரைக்க முயன்றான்.

"அதான் அவ கூட ஸ்டேஜ்ல நீ இருப்பியேடா ராம் கண்ணா... பின்னே எப்படி மிதுன் தனியா நிப்பா?" என்றிட, அவன் திருதிருவென முழித்தான்.

"பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் குந்தவை.

குந்தவையின் பின்னாலேயே சென்று "அவ போறதுல என்ன பிரச்சனை உங்களுக்கு?"

"உன்னை கல்யாணம் செய்துகிட்டு உன் கூட அவ எங்கனாலும் போகட்டுமே.... எனக்கு எந்த பிரச்சனையும் இல்லயே"

"பாத்திங்களா... பாத்திங்களா... நீங்களே ஒத்துக்கிட்டிங்க... கல்யாணம் ஆகிட்ட என் கூட மட்டும் தான் சுத்த முடியும். அதுக்கு முன்னாடி கொஞ்சம் ப்ரெண்ட்ஸோட என்ஜாய் பண்ணட்டுமே.... ஜஸ்ட் ஃபைவ் டேஸ் தானே அத்தை...."

"ஏன்டா ராம் கண்ணா!!!... நீ சொல்றதைப் பார்த்தா மிதுன் உன் பொண்டாட்டி ஆனதுக்கு அப்பறம் அவள் உன் கூட மட்டும் தான் எங்கேயும் போகனும்னு ஆர்டர் போட்டிருவ போலயே... அவ ப்ரெண்ட்ஸோட எங்கேயும் விட மாட்டியா? " என்று கொலுத்திபோட்டுவிட்டு அவன் பதிலைக் கூட எதிர்பாரமல் தங்கள் அறைக்குள் சென்றுவிட்டார் குந்தவை.

அத்தையம்மா கொலுத்திவிட்டது மிகச் சிறப்பாக வேலை செய்தது. "ராம்... கல்யாணம் ஆனப்பிறகு நீ என்னை என் ப்ரெண்ட்ஸ் கூட எங்கேயும் போறதுக்கு அலோவ் பண்ண மாட்டேயா?"

"நான் எப்போடி அப்படி சொன்னே?"

"நீ சொல்லாமலா அம்மா அப்படி சொல்லிட்டு போறாங்க..."

"அடிங்க.... நீ என் கூட சண்டை போட்டு என்னை இங்கிருந்து போக சொல்றதுக்கு தான் அப்படி சொல்லிட்டுப் போறாங்க... அதைக் கூட புரிஞ்சுக்கத் தெரியலே..."

தலையை சொரிந்து கொண்டே "அய்யோ.... ஆமா... இதெப்படி யோசிக்காமவிட்டேன். சாரிடா ராம் கண்ணா..." என்று குந்தவியைப் போல் பேசிக் காண்பித்துக் கொஞ்சியவளை மெய் மறந்து பார்த்தவன், மீண்டும் அத்தையிடம் சென்று அவளுக்காகக் கெஞ்சினான்.

இறுதியில் அவனின் வாக்குவாதமே வென்றது. அதுவும் மூன்று நாள் பயணமாக ரயிலைத் தவிர்த்து விமானத்தில் சென்று வருவதாக இருந்தால் சம்மதம் என்றார் குந்தவை.

மறுநாள் விமானத்திற்கு டிக்கெட் புக் செய்வதாக சொல்லிச் சென்றான் ராம்.

இரவு ராமிடம் தாத்தா ஏதும் விசாரிப்பார் என்று அனைவரும் நினைத்திருக்க, அவரோ அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகக் கூட காட்டிக்கொள்ளவில்லை. இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் ராமிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவர்.

தாத்தாவின் அறைக்குச் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டான் ராம்.

"பிரச்சனைய சரி செய்துட்டு வா... அப்பறம் வந்து சொல்லு உன் சாகசத்தை. அதுக்கு முன்னே பேசுறதா இருந்தா 'எனக்கு பிஸ்னஸ் தெரியலே, நான் பிஸ்னஸ் செய்றதுக்கு லாயிக்கில்லை' அப்படினு நீ ஒத்துக்கிறதா இருந்தா என்கிட்ட பேசு..." என்று அவனின் தன்மானத்தை சீண்டினார்.

பதின்பருவத்தில் இருந்தே ராமின் தொழில் ஆர்வத்தை கண்டு பிரம்மித்து அப்போது இருந்தே தொழில் நுணுக்கங்களைக் கற்பித்து, அவனை தானாக யோசிக்க வைத்து, அவனின் ஒவ்வொரு உத்தியிலும் வரக்கூடிய நன்மை தீமையை எடுத்துரைத்தவர் அவர். தனியாக சமாளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டியே இப்போது ஒதுங்கிக் கொண்டார்.

"நீங்க சொல்றமாதிரி பிரச்சனையை சரி செய்துட்டு வந்து உங்ககிட்ட பேசுறேன்." என்று கூறி தனதறைக்குச் சென்றான்.
மறுநாள் ஃப்ளைட் டிக்கெட்டுடன் மிதுனாயாவைக் காணச் சென்றான் ராம். குந்தவை அவளுக்கு பல அறிவுரைகளுடன் வழியனுப்பி வைத்தார்.
செல்லும் வழியிலும் ராம் அந்த பணியை தொடர்ந்திட நொந்து போன மிதுன்யா "மச்சான்...." என்று கத்திட, இப்போது ராம் தன் காதுடன் சேர்த்து வாயையும் மூடிக்கொண்டான்.

விமானநிலையத்தில் அவளை விட்டுவிட்டு குடியேற்றத்திற்குள் செல்லும்வரை இருந்து பார்த்துவிட்டு தான் அவன் அலுவலகம் சென்றான்.

பணிகளுக்கு நடுநடுவே நேத்ராவின் கலங்கிய விழிகளும், அவள் செல்வதற்கு முன் அவனை முறைத்துச் சென்றதும் நினைவில் வந்து அவனை தொல்லை செய்தது. அவளை நினைக்கக் கூடாது என நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அவனை அறியாமலேயே அவளை நினைத்திருந்தான்.

வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போக, அடுத்த நாள் தான் செய்து முடிக்க வேண்டிய பணிகளை வகுத்துவிட்டு இருள் பரவத் தொடங்கிய நேரம் வீடு திரும்பிய ராமிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே ராமின் இல்லத்தில் அழுது கொண்டிருந்த குந்தவியைக் கண்டு குழப்பமுற்று அருகே சென்றவன் என்னவென கேட்க, மிதுன்யா தன் தோழியின் திருமணத்திற்குச் செல்லவில்லை என்றார் குந்தவை.
-ஊடல் கூடும்​
 
Top