• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
கங்காதரனிடம் இருந்து கல்யாண செலவிற்கு எந்த உதவியும் வராது என்று தெரிந்து கொண்ட கற்பகத்தின் பாடு திண்டாட்டம் ஆகியது. இதற்கு மேல் மொத்த செலவையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்று அறிந்து கொண்டவர், பத்திரிக்கை அடிப்பது, புடவை எடுப்பது, மண்டபம் பிடிப்பது என மற்ற செலவுகளுக்கேனும் பணம் வேண்டுமே என்று நினைத்து மதனிடம் வந்து நின்றார்.

"மதன்... மாலதி கல்யாணத்துக்கு பணம் ரெடி பண்ணனும்... உனக்குத் தெரிந்தவர்கள் யாரிடமாவது கடன் வாங்க முடியுமா? பாங்க்-ல் கல்யாணக் கடன் வாங்க ஏற்பாடு செய்..."

"நீங்க கேட்டதால என்கிட்ட இருக்கிறதை தரேன். பாங்க்ல லோன் வாங்கித் தரேன். மத்தபடி ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்க முடியாது. ஏற்கனவே வெளிநாடு போறதுல பிரச்சனை இருக்கு. இதுல நான் கடன் வாங்கினா சுத்தமா வெளிநாடு ஆசையை மறந்துட வேண்டி தான்... அதே போல பாங்க் லோன் உங்க பேர்ல தான் வாங்கித் தருவேன். இன்ட்ரெஸ்ட் நீங்க தான் கட்டிக்கனும். என்னை எதுவும் தொல்லை செய்யாதிங்க..."

"டேய்... அவ உன் தங்கச்சி டா... இப்படி யாருக்கோ செய்யப் போறது மாதிரி பேசிறே... இன்ட்ரெஸ்ட் கட்டுறது நான் என்ன வேலையாடா பார்க்கிறேன்!!!"

"அவ என்னை அண்ணனா மதிச்சாளா... யாருக்கோ சொல்ற மாதிரி தானே சொல்லிட்டு போனா... அவ கல்யாணத்தை அவளே நடத்திப்பேனு தானே சொன்னா... அவளுக்காக நான் இது செய்றதே பெரிது. நீங்களும் தங்கமுட்டை இடுற வாத்துனு உங்க தம்பி பொண்ணைத் தானே நம்புனிங்க... உங்க ரெண்டு பேருக்கும் நான் ஏன் செய்யனும்..." என்று அவனும் கை விரித்துச் சென்றான்.

கற்பகம் உண்மையாகவே கலங்கிப் போனார். இனி என்ன செய்வது என்று புரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார். செய்த பாவம் தன்னை திருப்பி அடிப்பதை அவரால் நன்றாகவே உணர முடிந்தது.

மதுரையிலிருந்து வந்தவுடன் நேத்ரா ஹரித்ராவை காணச் சென்றாள். விடுமுறை நாட்களில் நடந்த கதைகள் அனைத்தையும் கதை, கதையாகவே பேசித் தீர்த்தனர்.

மறுநாள் காலை நேத்ரா கல்லூரிக்கும், மதன் தன் பணிக்கும் சென்றுவிட, மாலதி ட்ரைனிங் செல்வதற்கு ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கற்பகம் தனித்து அத்துவானக் காட்டில் கண்ணைக் கட்டிவிட்டது போல் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று தெரியாமல் சுற்றித் திரிந்தார். என்ன வேலை செய்தாலும் மனம் முழுதும் தன் பிள்ளைகளின் ஒட்டாத்தன்மையில் தான் வந்து நின்றது.

தான் பெற்ற மகளே அவள் திருமணத்திற்கு அன்னையாக நீ வராவிட்டாலும் பரவாயில்லை என்று முகத்திற்கு நேரே கூறிச் சென்றுவிட்டாள். மகனோ எனக்கும் இந்த குடும்பத்துக்கும் இப்போது நடக்கவிருக்கும் தங்கையின் திருமணத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் ஒதுங்கிக் கொண்டான். இதனை நினைக்கையில் எப்படி பிள்ளைகளை வளர்க்கக் கூடாது என்பதற்கு தான் ஒரு உதாரமாக இருப்பதை நினைத்து அவமானம் அடைந்தார்.

சிறிது நேரத்தில் அவரின் அலைபேசி அதிர, யாரென்று கூட பார்க்கத் தோன்றாமல் பொத்தானை ஆன் செய்து காதில் வைத்தார்.

"நான் மதுரையில் இருந்து கங்காதரன் பேசுறேன்."

"சொல்லுங்க தம்பி.."

கற்பகத்தின் குரலில் பெரிய மாற்றமே தெரிந்திட, சில நொடிகள் அதனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார் கங்காதரன்.

"ஹலோ..." என்ற கற்பகத்தின் குரலில் மீண்டு வந்தவர்,

"மாலதிக்கு கல்யாணம்னு சிவா சொன்னாள். கல்யாணச் சேலை மத்தவங்களுக்கும் ட்ரெஸ் எல்லாம் கொடுத்துவிட்டிருக்கேன். நீங்க பார்த்து எல்லாம் ஓகேவானு சொல்லுங்க. இது பிடிக்கலேனா நாளைக்கு இன்னும் கொஞ்சம் விலை கூடின சேலை கொடுத்துவிடுறேன்." என்றிட

அவர் கூறிய எதுவும் தெளிவாக காதில் விழுகாதது போல் இருந்தது கற்பகத்திற்கு.

இப்போது குரல் கொடுப்பது கங்காதரன் முறையாகியது. "ஹலோ.."

"ஆங்ங்ங்... உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம்... நான் எப்படியவது சமாளித்துக் கொள்வேன்... "

இப்படிக் கூறும் கற்பகத்தைக் கண்டதில்லை கங்காதரன். உண்மையாகவே அவர் வாய்மொழி வார்த்தை தானா இது!!! என்பது போல் ஆச்சரியம் அடைந்தார் கங்காதரன்.

"அக்கா... என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா பேசுறிங்க?"

கற்பகத்திற்கு மனம் முழுதும் ரணமாக இருந்த போதும் தன் பிள்ளைகளின் நிராகரிப்பை வெளியே சொல்ல விருப்பம் இல்லாமல்

"அப்படி எல்லாம் இல்ல தம்பி... என் பொண்ணுக்காக நீங்க சிரமப் பட வேண்டாமேனு தான் சொன்னேன்.."

"ஏன் சிவாவையும் மாலதியையும் தனித்தனியா பார்க்குறிங்க... எனக்கு ரெண்டு பேரும் ஒன்னு தான் அக்கா... நீங்க கவலைப்பட வேண்டாம் க்கா... சிவாவுக்கு மட்டும் இல்லே, மாலதிக்காகவும் நீங்க என்கிட்ட சங்கடப்படாம தேவையானதைக் கேட்கலாம்..."

'நேத்ரா சொல்றது சரி தான்... நான் தான் இத்தனை நாள் உங்களை தவறா புரிஞ்சிக்கிட்டேன்... உங்க குடும்பத்துல எல்லாருக்கும் பெரிய மனசு தான்...' என்று தன் மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டு, "எதுவும் வேண்டாம் தம்பி... நீங்க கல்யாணத்துக்கு வந்துட்டு போனாலே போதும்..." என்றிட

"நீங்க ஏதோ குழப்பத்துல இருக்கிங்கனு நினைக்கிறேன்... நான் விமலாவையும் உடன் அனுப்பி வைக்கிறேன்... கல்யாணம் முடியற வரை அவளும் உங்களுக்கு துணையா இருக்கட்டும்..."

"அதெல்லாம் வேண்டாம் ப்பா... நான் இங்கே சமாளிச்சுக்குவேன்..." என்று வேகமாக மறுத்தார்.

"இல்லே அக்கா... உங்க பேச்சு ஏதோ வித்தியாசமா இருக்கு... நானும் வரேன்... நேரில் பேசலாம்..." என்று கூறி அழைப்பைத் துண்டித்து விமலாவுடன் இணைந்து குற்றாலம் புறப்பட்டார்.

நேரில் வந்து நின்ற கங்காதரன், விமலாவிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தலைகுனிந்து நின்றார் கற்பகம். இத்தனை நாள் நடந்து கொண்ட முறைக்கு மன்னிப்புக் கேட்பதா!!! இல்லை இக்கட்டான நிலையில் உதவிக்கரம் நீட்டத் துடிப்பவற்கு நன்றி சொல்வதா!!! இல்லை தன் வளர்ப்பை நினைத்து வெட்கி வருந்துவதா!!!

இவை அனைத்தையும் தவிர்க்கும் ஆயுதம் மௌனம் என்று உணர்ந்து மௌனித்தார் கற்பகம். கங்காதரனும் விமலாவும் கற்பகத்திடம் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து பொதுப்படையாக அவருக்கு ஆறுதலாகப் பேசி, திருமணத்தை எந்த குறையும் இல்லாமல் நடத்திட அனைத்து பணிகளையும் முன் நின்று நடத்தித் தருவதாகக் கூறி, மற்ற வேலைகளுக்கு நம்பகமான ஒருவரை நியமித்துவிட்டு கை செலவிற்கு பணம் கொடுத்துச் சென்றனர்.

இத்தனை நாள் கேட்டு வாங்கிய போதெல்லாம் தோன்றாத அவமானம் இப்போது தோன்றியது கற்பகத்திற்கு. கங்காதரன் குடும்பத்திற்கோ நேத்ராவிற்கோ ஏன் கற்பகம் மறுக்கிறார் என்று தெரியவில்லை. இருந்தும் பல நேரங்களில் நேத்ரா தான் அவரை சமாதானம் செய்து கங்காதரனின் உதவிகளை ஏற்றுக்கொள்ள வைத்தாள்.

கற்பகம் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே மிகவும் சிறப்பாக நடந்தேறியது மாலதியின் திருமணம். ஆனால் அதில் சந்தோஷமடைய அவரால் முடியவில்லை... தன் கீழ்த்தரமான எண்ணத்தை மறந்து மன்னித்து தனக்கு பக்கபலமாக இருந்த நேத்ரா மற்றும் கங்காதரன் குடும்பத்தை நிமிர்ந்து பார்க்கக் கூட தனக்கு தகுதியில்லை என்று நினைத்தார் கற்பகம்.

"உன்னை உன் மாமா குடும்பத்திலிருந்து பிரிச்சுட்டேன் டா... முடிஞ்சா என்னை மன்னிச்சிடு. நீ அவங்க கூட இருக்க விரும்பினா அங்கேயே இருடாமா... நானும் மதனும் வேற வீட்டுக்குப் போய்டுறோம்..."

"நான் இங்கே தான் படிக்கப் போறேன் அத்தை. இந்த வீட்ல தான் தங்க போறேன்... நீங்க எனக்குத் துணைக்கு இங்கே தங்குறிங்களா?"

"ஆனால் உன் மேற்படிப்புக்கு இந்த காலேஜ்ல படிக்கிறது சரிவருமா..."

"ஃபாரின்ல படிக்க முடியலேனா பரவா இல்லை... எனக்கு என் அத்தை கிடைச்சிருக்காங்க..." என்றாள் நேத்ரா...

நேத்ராவின் பதிலில் அவளை கட்டியணைத்து மீண்டும் தன் தவறிற்கு மன்னிப்பு வேண்டினார்.

விதி யாரைத் தான் விட்டது... எது நடந்ததோ நன்மைக்காகவே நடந்தது. எது நடக்கிறதோ நன்மைக்காகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ நன்மைக்காகவே நடக்கும்.

தன் தம்பியின் செல்லப் புதல்விக்கு தானும் அன்னையாக மாறிப் போனார். மதன் சில நேரங்களில் நேத்ராவிடம் தானாக வழிய வந்து பேசினான். பல நேரங்களில் தன் பைக்கில் கல்லூரி அழைத்துச் செல்வதாக தானே முன்வந்து நின்றான். ஏனோ நேத்ராவிற்கு அவனின் உதவிகளை இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கற்பகத்திற்கு மகனின் போக்கு புரிந்துவிட அவனை மிரட்டினார்.

"டேய்... நேத்ரா வெளிநாடு போய் படிக்கப்போறானு தெரிஞ்சதும் உன் போக்கே சரியில்லே... உன் காரியத்துகாக அவகிட்ட பழகுறதா இருந்தா இத்தோடவிட்டுடு..."

"அதை நீங்க சொல்றிங்களா!!! இத்தனை நாள் நீங்களும் அவளை பயன்படுத்திக்கிட்டு தான் இருந்திங்க... அதை மறந்துடாதிங்க..."

"ஆமா டா... அந்த சின்ன பெண்ணோட மனசை புரிஞ்சுக்காம நடந்துகிட்டேன் தான்... நான்விட்டதை நீ தொடராதே..."

ஆவேசமாக பேசிய தன் அன்னையிடம் இப்போது எதிர்த்து வாதிடமுடியாது என்று உணர்ந்து "அம்மா நான் உண்மையாவே அவளை கல்யாணம் செய்துக்க விரும்புறேன்... வேற எந்த ஆசைக்காகவும் அவளை தொல்லை செய்யலே..." என்று தான் இறங்கிச் சென்றான்.

என்ன தான் இருந்தாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு இல்லையா... ஆதலால் மகன் செய்யவிருக்கும் தவறின் எல்லை அறியாமல், "அப்படியே இருந்தாலும் அவளும் சம்மதிச்சா தான் இந்த கல்யாணம் நடக்கும்... இல்லேனா நானே உன் மேல ஈவ்டீஸிங் கேஸ் போடுவேன்..."

தன் அன்னையின் மிரட்டல் உண்மை என்று அவரின் குரலிலேயே உணர்ந்து கொண்டான் மதன். ஆதலால் சிறிது நாட்கள் நேத்ராவை தொல்லை செய்யாமல் ஒதுங்கி இருந்தான்.

அதுமட்டும் இல்லாமல் அமெரிக்கா செல்வதற்கு விசா இன்டர்வியூ ப்ராஸஸ் நடந்து கொண்டிருந்ததால், கொஞ்ச நாள் எந்த வம்பும் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தான்.

நேத்ராவும் தன் இறுதி ஆண்டு படிப்பை நல்லமுறையில் முடித்தாள். பவனும், நேத்ராவும் தன் யூ.ஜி. டிகிரியை முடித்து லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்கு முயற்சித்தனர். கமல் தன் இளங்கலைப் படிப்பிற்கு அதே பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தான்.

மூவருக்கும் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்துவிட ஒன்றாகப் பறந்தனர். நேத்ரா ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு மதன் நேத்ராவை காதலிப்பதாகக் கூறிட, தன் படிப்பை முடித்துவிட்டு கல்யாணம் பற்றி யோசிக்கலாம் என்று கூறிச் சென்றாள்.

வேறு வீடு மாற்றம் செய்து கொள்வதாகக் கூறிய கற்பகத்தை அந்த வீட்டிலேயே தங்கிக்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார் கங்காதரன். ஹரித்ரா நேத்ராவின் பிரிவை நினைத்து அதிக வருத்தம் கொண்டாள். அவள் அழுகைக்கு அளவில்லாமல் போனது. அவ்வபோது நேத்ராவின் நினைப்பு வரும் போது வீட்டிற்கு வந்து அவளின் அறையில் அமர்ந்து அவளிடம் பேசுவது போல் அந்த அறையில் தனித்துப் பேசிச் செல்வாள்.

மூன்று, நான்கு முறை முயற்சித்தும் மதனுக்கு விசா கிடைக்காமல் போக கோல்மால் செய்ய நினைத்து, இறுதியில் ப்ளாக் மார்க் ஆகி யூ.எஸ் இறுதிவரை கனவாகவே இருந்துவிட்டது. இனி அவன் யூ.எஸ் செல்லவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டான்.
-ஊடல் கூடும்.​
 
Top