• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
தன் வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறாமல் போனதில் மனமுடைந்த மதன் சில நாட்களாகவே பித்துபிடித்தது போல் அலைந்தான்.

அவனை நினைத்து கற்பகத்திற்கு வருத்தம் இருந்த போதும் பயமும் இருந்தது. அவனின் ஆசை அறிந்தவர் ஆயிற்றே... எங்கே தற்கொலை ஏதும் செய்து கொள்வானோ என்ற பயம் அவருக்கு அதிகமாகவே இருந்தது. அவனிடம் சென்று பேசி அவனை சமாதானம் செய்ய நினைத்தார்.

"மதன்... இப்போ யூ.எஸ் போக முடியலேனா என்ன? வேற எங்கேயாவது முயற்சி செய்யேன்... ஏன் இப்படி பித்து பிடிச்சவன் போல திரியிறே... அது ஒன்னு தான் ஊரா என்ன? ஏன் நம்ம ஊர்லயே உன் திறமைய காண்பிக்கலாமே..."

"நம்மல மாதிரி லோயர் மிடில் க்ளாஸ் இதுக்கெல்லாம் ஆசைபடக் கூடாதுல... இந்த வருடம் எப்படியும் விசா கிடைச்சிடும்னு நெனச்சேன்..." என்றவன் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு,

"பணக்காரவங்க நெனச்சா கோடிக்கணக்குல செலவளிச்சு நெனச்ச ஊருக்கு பறக்க முடியுது... ஏன் அந்த நாட்டு ரூல்ஸ் படி அந்த நாட்டுகாரவங்கல கல்யாணம் செய்துகிட்டு சிட்டசன்ஷிப் வாங்கிடுறாங்க... ஆனா நாமெல்லாம் இந்த இந்தியாவை தாண்டுறதுக்கு யார்யார் காலைப்பிடிக்கனுமோ பிடிச்சு, செய்யக் கூடாத வேலைலாம் செய்து... இருக்குற மானம் மரியாதை போனது தான் மிச்சம்... நானும் நாலு வருஷமா நாயா அலையுறேன். ஒருத்தன் கூட வாய்ப்பு தரமாட்டேன்றான்..." என்று முதல்முறையாக தன் அன்னையிடம் வாய்விட்டுப் புலம்பினான்.

"சரி டா இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்... ஆமா... நீ வேலைக்கு போற மாதிரி தெரியலேயே!!! போறியா இல்லேயா?"

"விசா விஷயமா அலைஞ்சதுல கொஞ்சம் அதிகமா லீவ் எடுத்துட்டேன்... வேலையும் போச்சு..."

"என்னடா இப்படி அசால்ட்டா சொல்றே... ஏன் இத்தனை நாள் என்கிட்ட சொல்லவே இல்லை?"

"இப்போ என்ன பண்ண சொல்றிங்க... சும்மா எல்லாம் தெரிஞ்சது மாதிரி நொய்.. நொய்... கேள்வி கேட்டுட்டு... இப்போ உங்ககிட்ட சொன்னதும் எனக்கு வேலை வாங்கித் தரப் போறிங்களா... முடியாதுல... போய் ஓரமா உக்காந்து உங்க அழகு மருமகள்கிட்ட வீடியோ கால் பேசுங்க... போங்க..." என்று ஏகத்திற்கும் கோபமாகக் கத்தினான்.

மதனுக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் சில நாட்களாக வீட்டில் கூட பூஜையறை பக்கம் செல்வதில்லை. ஒருவேளை இறைவனின் மெல்லிசையைக் கேட்டால், இறைவனின் திருவுருவைப் பார்த்தால் அவன் சாந்தம் அடையக் கூடுமோ என்று நினைத்த கற்பகம்,

"சரி வா... கோவிலுக்கு போய்ட்டு வரலாம்..."

"நான் வரலே...."

"சரிடா நீ வர வேண்டாம்... என்னையாச்சும் ட்ராப் பண்ண வா..."

"இனி அந்த வேலை தானே பார்த்தாகனும். நீங்க எங்க போகனுமோ அங்கே உங்களை ட்ராப் பண்றதும், திரும்ப வந்து பிக்அப் பண்றதும்.... அது தானே இனி என் வேலை.... அடுத்த வருடம் அந்த மஹாராணியும் வந்திடுவாங்க... அவளுக்கும் கால் அமுக்கிவிடுறேன்... நீங்க சந்தோஷமா பார்த்து ரசிங்க..." என்று வேலையில்லாத கடுப்பில் தன் அன்னையிடம் கத்திவிட்டுச் சென்றான்.

சில நாட்களாகவே அவன் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் விஷயம் இது தான். பணம் தான் நம் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்கிறது. பணம் இருந்தால் போதும் உலகையே காலடியில் வைத்து ஆழலாம். பணம் இல்லாதவன் இருப்பவனுக்கு கைகட்டி அடி பணிந்து நிற்க வேண்டும்... இதனால் பணக்காரர்களின் மேல் ஒருவிதமான வெறுப்பு கூட வந்தது. அதில் நேத்ராவையும் சேர்த்துக் கொண்டான்.

மதனின் இந்த எண்ணம் தெரியாமல் கற்பகம் கங்காதரனிடம் உதவி கேட்டிட, அவரோ

"கொஞ்ச நாள் இங்கே வந்து கடையின் கணக்கு வழக்கைப் பார்க்கட்டும்... இங்கே அனைத்தும் சிஸ்டமேட்டிக் என்பதால் அவனுக்கு எளிதாகத் தான் இருக்கும். அதுவும் இல்லாமல் வேலையில்லை சும்மா இருக்கிறோம்... என்ற தாழ்வுணர்ச்சி இல்லாமல் தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்வான். இப்போது கடையை இரண்டாக பிரித்ததில் எனக்கும் வேலை அதிகமாகத் தான் இருக்கிறது. மதன் இங்கே வந்தால் எனக்கும் உதவியாகவும், நம்பகமாகவும் இருக்கும்" என்றார்.

வேறு வழி இல்லாமல் மதுரை வந்தான். அங்கே கற்பகத்திற்கு துணையாக ஹரித்ராவின் குடும்பம் அவுட்ஹவுஸில் வந்து தங்கியது.

எட்டு மாதங்கள் கடந்திட கங்காதரனுக்கு மதனின் வேலைகள் பிடித்திட, இப்படியே இங்கேயே இருந்தால் இன்னும் நல்லது என்று நினைத்தார். மதனும் எந்த வித சுனக்கமும் காட்டாமல் கொடுத்த வேலையை செய்து கொண்டு, வீடு மற்றும் கடை என இருந்திடவே கற்பகமும் தன் மகன் நல்லமுறையில் இருந்தால் சரி என்று நினைத்து அமைதியடைந்தார்.

இவர்கள் இருவரும் மதனின் மனதில் தோன்றிய வன்மத்தை அறிந்துகொள்ளமல் போனது தான் விதியின் சதி...

என்ன தான் தன்னை அமைதியாகக் காட்டிக் கொண்டாலும் தானும் ஒரு பணக்காரனிடம் கைகட்டி வேலை தான் பார்க்கிறோம் என்ற நினைப்பு அவன் மனதைவிட்டு அகலவில்லை. பற்றா குறைக்கு கணக்குவழக்குப் பிரிவுவேறு... கடை வருமானம், லாப நஷ்டம், நேத்ராவின் பங்கு எவ்வளவு செல்கிறது என அக்குவேரு ஆணிவேராக அறிந்து வைத்திருந்தான். மறுபுறம் தன் முயற்சியை கைவிடவும் இல்லை. இப்போது ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்கு முயற்சித்தான்.

இடையே ஒருமுறை நண்பன் ஒருவன் விசாவிற்கு உதவி செய்வதாகக் கூற அவனைக் காண குற்றாலம் சென்று வந்தான். மூன்று நாட்கள் தங்கிவிட்டு வந்தவன் தன் பலநாள் கனவு நிறைவேறப் போகிற குஷியில் தன் பணியில் கவனம் இன்றி சுற்றித்திரிந்தான்...

நேத்ரா மற்றும் பவன் தன் படிப்பை முடித்து இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக இருந்தது. கமல் இன்னும் மூன்று ஆண்டு அங்கேயே இருந்து தன் மேற்படிப்பையும் முடித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டான். அதற்கான வேலைகளையும் செய்யத் தொடங்கியிருந்தான்.

இதோ நேத்ராவும் பவனும் வந்து இரண்டு நாட்கள் கடந்திருக்க, தன் அத்தையைப் பார்த்துவிட்டு இங்கே அழைத்து வருவதாகக் கூறினாள் நேத்ரா...

"மாமா... மதனும் இங்கே தானே வேலை பார்க்கிறார். அத்தை மட்டும் ஏன் அங்கே தனியா இருக்கனும்... இங்க கூட்டிட்டு வந்திட வா?... மதனும், அத்தையும் விருப்பப்பட்டால் நம்ம கூட இருக்கட்டும், இல்லேனா பக்கத்துலேயே ஒரு வீடு பார்த்து குடிவைக்கலாம்..."

"அதை நான் அவங்ககிட்ட சொன்னா நல்லாயிருக்காது டா... நீ லண்டன் கிளம்பினப்போவே அந்த வீட்டை காலி செய்வதாகச் சொன்னாங்க. நான் தான் வம்படியா அது உங்க தம்பி வீடு... நீங்க அங்கே தான் இருக்கனும்னு சொல்லி இருக்கவெச்சேன்... இப்போ நானே காலி செய்ய சொன்னா நல்லா இருக்காது. அவங்களுக்கு இங்கே வர விருப்பம் இல்லேனா கட்டாயப்படுத்தாதே சிவா..." என்று கூறினார் கங்காதரன்.

"சரிங்க மாமா..."

"நீ நாளைக்கு மதனையும் கூட்டிட்டு ஊருக்குப் போலாமே!!!"

"மதனுக்கு என்னுடன் வர விருப்பம் என்றால் எனக்கும் ஓகே மாமா..."

"சரிம்மா நான் அவன்கிட்ட கேட்கிறேன்..."

மதனிடம், "சிவாவுடன் நீயும் ஊருக்குப் போய் உன் அம்மா இங்கே அழைத்துவாயேன் மதன்" என்றார் கங்காதரன்.

மதனோ இந்த முறையும் மலைபோல் நம்பியிருந்த நண்பன் கைவிரித்திட விசா கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருந்ததான். அதுவும் இல்லாமல் நண்பனுக்காக ஒரு பெரிய தவறு செய்து அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய இக்கட்டான சூழ்நிலைக்கு தன் அன்னை அங்கே தனியே இருப்பதும் சரிவாராது என்று நினைத்து கங்காதரனிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்...

கங்காதரனைப் பொருத்தவரை மதன் 'தான் உண்டு தன் வேலை உண்டு' என்று இருப்பவன். இந்த ஒரு வருடத்தில் ஒரு நாள் கூட அவன் புகைத்தோ அல்லது புகைத்ததை பார்த்ததாகவோ கேள்விப்பட்டதில்லை. அதே போல் தான் மதுவும்... அது 100% உண்மையும் கூட. மதனுக்கு மது அருந்துவதோ, புகைப்பதோ பிடிக்காத ஒன்று. கடையில் கூட சேல்ஸ்மேன் எவரேனும் வெளியே சென்று புகைத்துவிட்டு அப்படிவே வந்து அவனிடம் பேசினால் அவனுக்குப் பிடிக்காது. அப்போது அவன் முகம் அஸ்டகோணலில் செல்வதை கங்காதரன் கூட பல முறை பார்த்திருக்கிறார்.

அந்த வயதிற்கே உண்டான ஆசை என்றும், நண்பர்களின் முன் கெத்துக் காண்பிக்க என்றும், பணம் படைத்தவர்களின் முன் சபை நாகரிகம் கருதி என்றும், வெர்க் டென்ஷன் என்றும் தான் கெட்டுப்போக பல காரணங்கள் கூறிக்கொள்ளும் இன்றைய தலைமுறைகளுக்கு மத்தியில் 'எனக்குப் பிடிக்காது, அதனால் யாருக்காகவும் எதற்காகவும் செய்யமாட்டேன்' என்று உரைக்கும் மதனை கங்காதரனுக்கு பிடித்து தான் இருந்தது.

ஏனோ அவனுக்கு வெளிநாட்டின் மேல் மோகம். அதற்கும் கங்காதரன் தான் உதவுவதாகக் கூறிய போது 'தேவையில்லை என் திறமையால், என் உழைப்பால் நான் செல்வேன்' என்று கூறி மறுத்திருக்கிறான். இதனைக் கேட்டவருக்கு அவன் மேல் வைத்த மதிப்பு இன்னுமே அதிகமாகியது. ஆனால் அவன் கூறியதன் உண்மைப் பொருள்வேறு என்பதை அவர் அறிந்திடவில்லை...

மதனின் மேல் கங்காதரனுக்கு இருக்கும் மதிப்பு அவரையும் அறியாமல் சில நேரங்களில் வெளிப்படுவதுண்டு... கங்காதரனே பாராட்டும் அளவிற்கு அவனிடம் நல்ல பண்புகள் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் பெண்ணவள்.

மறுநாள் இருவரும் ஒன்றாக குற்றாலம் புறப்பட, இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்து உடன் வந்த ட்ரைவரை மறுத்து நானே ட்ரைவ் செய்வதாகக் கூறினான் மதன். நேத்ராவை தன் கேடயமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்தவன் அவளிடம் தனியாகப் பேச வாய்ப்பு கிடைக்கவே அதனை உபயோகித்துக் கொண்டான்.

பின்னால் அமர்ந்திருந்த நேத்ராவை மிரரில் பார்த்துக் கொண்டே வந்தவன், அவளின் அமைதி கண்டு கோபமுற்று,

"நீ லண்டன் போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொன்னேனே... நியாபகம் இருக்கா?"

அவளுக்குப் புரிந்தது அவன் எதைப் பற்றி கேட்கிறான் என்று...

"என்ன திடீர் காதல்..."

"நான் உன்கிட்ட சொல்லி மூனு வருஷம் ஆகுது... பின்னே எப்படி அது திடீர் காதல் ஆகும்!!!?"

"ஆனால் அதைப் பற்றி மறந்தும் மூனு வருஷம் ஆகுது..."

"நான் மறந்தேனா இல்லையானு நான் தான் சொல்லனும்... நீ எப்படி எதை வெச்சு சொல்றே நான் மறந்துட்டேன் என்று???!!'

அவளிடம் இந்த கேள்விக்கு பதில் இல்லை...ஏனென்றால் அவள் தானே படிப்பு முடியட்டும் என்றிருந்தாள்... இப்போது கேட்டால் அதைத் தானே காரணமாகக் கூறுவான் என்று நினைத்து

"காதலிப்பதாக சொன்ன அன்றைக்கு கூட உங்க கண்ணில் காதல் தெரியவில்லை... அப்படி இருக்கும் போது நீங்க உங்க சுயநலத்துக்காக என்னை பயன்படுத்திக்கிறிங்கனு தான் தோனுச்சு... அதை வெச்சு தான் சொல்றேன்..."

ஒருநிமிடம் அவள் தன்னைக் கண்டுகொண்டாள் என்ற பயம் தோன்றினாலும் பதில் வாதம் வைத்தான்.

"உன்னை பயன்படுத்திக்கனும்னு நெனச்சிருந்தா இந்நேரம் உன்னைக் கல்யாணம் செய்து உன்னோடு நானும் லண்டன் வந்திருப்பேன். உங்க மாமாவும் மறுப்பு சொல்லிருக்கமாட்டார்..."

அவன் சொல்வதில் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது என்று தோன்றியது நேத்ராவிற்கு. வெளிநாட்டில் செட்டில் ஆகவேண்டும் என்று நினைப்பில் தான் தன் பின்னால் சுற்றுகிறான் என்று தான் இத்தனை நாள் நினைத்திருந்தாள். ஆனால் இனி அவன் வெளிநாடு செல்ல வாய்ப்பில்லை என்று தெரிந்தும் தன்னை விரும்புவதாகக் கூறுகிறான் என்றால் ஒருவேளை உண்மையாகத் தான் விரும்புகிறானோ!!! என்று யோசித்தாள். இருந்தாலும் அவளால் முழு மனதாக ஒத்துக்கொள்ள முடியாமல்,

"கேட்கிறேன்னு தப்பா நினைக்காதிங்க... உங்கள் பணத் தேவைக்கு என்னை பயன்படுத்திக்க நினைக்கிறிங்களா?"

"பணத்தேவை நாம ரெண்டுபேரும் சந்திச்ச நாளில் இருந்து எனக்கு இருக்காதான் செய்யிது. நேரடியாக இல்லாட்டாலும் மறைமுகமா... அதாவது என் அம்மா மூலமாக் கூட உன் பணத்தை எதிர்பார்த்தது இல்லை. என் பேரை சொல்லி அம்மா உன்கிட்ட என்னைக்காவது புலம்பிருக்காங்களா!!! சரி அதைவிடு இப்போ உங்க கடைல தான் வேலை பார்க்குறேன். சம்பளம் போக அதிகமா என்னைக்காவது உன் மாமாகிட்ட பணம் வாங்கிருக்கனா கேட்டுப்பாரு... அவரே முன் வந்து வெளிநாடு போறதுக்கு உதவி செய்றேனு சொன்னார். அதுக்கு அவர்கிட்ட என்ன பதில் சொன்னேனு கேளு..." என்று பொறுமையாக உரைத்தான்.

அவன் கூறிய அனைத்தும் சரியாகவேப்பட்டது நேத்ராவிற்கு. "ஆனாலும் ஏதோ தேவைக்காக என்னை நீங்க அப்ரோச் பண்றமாதிரி தான் எனக்குத் தோனுது..."

"யூ சி... இந்த உலகத்துல எல்லாருக்கும் ஏதோ ஒரு தேவை இருக்கத்தான் செய்யுது. அப்படி தேவைப்படுறவங்க எல்லாம் கல்யாணமே செய்துக்கக் கூடாதுனு இருக்கா? எனக்கும் தேவை இருக்கு தான். ஆனா அதுக்காக உன்னை கல்யாணம் செய்துக்க நினைக்கலே... இப்பவும் உன்னை கட்டாயப்படுத்தலே. என்னை ரிஜெக்ட் செய்றதா இருந்தா சரியான காரணம் சொல்லு ஒத்துக்கிறேன். சும்மா தட்டிக்கழிக்காதே..." என்று தன்னைப்பற்றி யோசிப்பதை தடுத்து காரணம் யோசிக்க வைக்கும் நோக்கில் உரைத்தான்.

"என் மனசுல உங்க மேல காதல் இருக்கிற மாதிரி தோனல மதன்..."

"நீ என்னைப் பார்த்தே ஐந்து வர்ஷம் தான் ஆகுது. அதிலும் முதல் ஒன்றரை வருடம் நீயும் நானும் பேசிக்கிட்டது இல்லே... அதுக்கப்பறம் நானா வந்து பேசினாலும் நீ ஒதுங்கிப் போன... அடுத்து லண்டன் போய்ட்டு இப்போ தான் வந்திருக்க... நண்பர்களா பழகுறதுக்கு கூட நாம நேரம் ஒதுக்கவில்லை . பின்னே எப்படி உனக்கு என் மேல காதல் உணர்வு வரும்!!? ஒருவேளை நம்ம கல்யாணத்துக்குப் பிறகு வரலாம்..."

"ஆனால் உங்களுக்கு மட்டும் என் மேல அந்த உணர்வு வந்ததா சொல்றிங்க, நீங்களும் என்கிட்ட பழகினது இல்லேல!!!?"

"ஒருத்தரை பிடிச்சிருக்குனா நமக்கு பிடிச்ச மாதிரி அவங்ககிட்ட ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கும்... நான் உன்கிட்ட அதை உணர்ந்தேன். என் அம்மா உன்னை பணத்துக்காக நல்லாவே யூஸ் பண்ணிக்கிறாங்கனு தெரிஞ்சும் அவங்களை நீ எதிர்த்து எதுவும் கேட்டதில்லை. உனக்கு பிடிக்கலேனாலும் எங்க கூட வந்து தங்கின... எங்களுக்குடைய தேவைகளையும் தேடித் தேடி செய்து கொடுத்த... ஆரம்புத்துல மரை களன்ட கேஸ்-னு நெனச்சேன். பிறகு இது தான் உன் குணம்னு தெரிஞ்சுக்கிட்டேன்.... அது பிடிச்சிருந்தது."

இப்போ இவன் என்ன சொல்லவரான். அவனுக்கு என்னை புரிஞ்சுக்க கிடைத்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கலேனு சொல்றானா!!! இப்போ இவனுக்கு என்ன பதில் சொல்லனும்... என்று தனக்குள்ளாகவே யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் தன் பதிலுக்காக காத்திருக்கிறான் என்று புரிய,

"நான் அத்தை, மாமாகிட்ட இது பத்தி பேசனும்... டூ டேஸ்ல சொல்லட்டுமா?" என்றிட, அவனும் சம்மதம் என்றான்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு தன் தன் தம்பி மகளின் வருகைக்காக காத்திருந்தார் கற்பகம். ஆரத்தி எடுத்து வருவேற்க வாசலில் வந்து நின்றவர், தன் மகனுடன் நடந்து வருபவளைக் கண்டதும் மீண்டும் தன் மருமகளாக ஆக்கிக் கொள்ளும் ஆசை தோன்றியது அவருக்கு. இந்த முறை எந்த எதிர்பார்ப்பும் இன்றி முழு அன்போடு ஏற்றுக்கொள்ள அவர் தயாரக இருந்தார். ஆனால் அடுத்த நிமிடமே தன் மகனும் அதே அன்போடு அவளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டுமே என்று தோன்றிட அந்த எண்ணத்தை கைவிட்டார்.

நேத்ரா முன்பிருந்த அத்தைக்கும், இப்போது தன்னை எதிர்பார்த்து காத்திருக்கும் அத்தைக்கும் மலையளவு வித்தியாசம் உணர்ந்தாள். பொய்யுறவாக பழகிய அத்தை இன்று கண்களில் அன்பொழுக தன்னைப் பார்ப்பதைக் கண்ட பெண்ணவள், அவரை ஆரத்தழுவிக் கொண்டாள்.

அத்தையிடம் நல விசாரிப்புகளை முடித்துக் கொண்டு, அவர் கேட்ட கேள்விகளுக்கும் பதில் கூறிவிட்டு தன் கண்களை வீட்டைச் சுற்றி வட்டமிடச் செய்தாள். அவள் தேடும் நங்கையவள் கண்ணில் அகப்படாமல் போக,

"அத்தை ஹரித்ரா எங்கே? நான் வரது அவளுக்கு தெரியுமா? தெரியாதா?" என்றிட,

அப்போது தான் நேத்ராவைக் காண உள்ளே வந்து கொண்டிருந்த ஹரித்ராவின் அன்னை அதற்கு பதில் கூறினார்.

"நீங்த இன்னைக்கு வரது அவளுக்கு தெரியும் டா பாப்பா... அது வர வர நல்லா சோம்பேரி ஆகிட்டு இருக்கு. வேண்டா சகவாசம் இருக்குனு நெனைக்கிறேன். எப்போ பார் வீட்ல தங்குறதே இல்லே... அப்படியே வீட்டுக்கு வந்தாலும் தூங்கு மூஞ்சியாட்டம் தூங்கிட்டு தான் இருக்கா... இப்போ தான் எழுப்பிவிட்டிருக்கேன். குளிச்சிட்டு வரேன்னு சொன்னா..."

"அவளைத் திட்டாதிங்க அக்கா... இந்த வருடம் +1ல போறாள். படிக்கிறதுக்கும் ரெக்கார்ட் வொர்க்கும் அதிகமா இருக்கும். ப்ரெண்ட்ஸோட சேர்ந்து எழுதினா அழுப்பு தெரியாது... அதான் ப்ரெண்ட் யார் வீட்டுக்காவது போயிட்டு வருவாளா இருக்கும்....." என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, அக்கா என்று கத்திக் கொண்டு ஓடி வந்த ஹரித்ரா நிற்க முடியாமல் தடுமாறி நேத்ராவைப் பிடித்து ஒரு நொடி நின்று அடுத்த நிமிடமே நேத்ராவையும் இணைத்துக் கொண்டு ரங்கராட்டினம் சுற்றுவது போல் சுற்றினாள்.

இத்தனை நாள் தொலைத்த சந்தோஷம் ஒட்டு மொத்தமாக கிடைத்தது போல் ஹரித்ராவின் சிரிப்பு பிரகாசமாக மின்னியது. அதே நேரம் ஹரித்ராவின் கண்கள் பாதுகாப்புத் தேடி அலையும் கோழிக்குஞ்சைப் போன்று பயத்துடன் தன் தாய்ப்பறவையின் இறக்கையை நாடியது.

-ஊடல் கூடும்.​
 
Top