• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
'ஹரித்ராவிற்கு என்ன ஆகியிருக்கும், ஏன் தன்னுடன் பேச மறுக்கிறாள்!!!' என்று நினைத்து நினைத்து தவித்தப் பெண்ணவள், அவளின் இந்நிலை கண்டு தன் மனதிற்குள் பல கேள்விகள் தோன்ற அதனை கேட்கும் விதம் அறியாது தவித்துக் கொண்டிருந்தாள்.

'எங்கிருந்து ஆரம்பிப்பது? என்ன கேட்பது? என்று மூளை யோசித்தாலும் பார்வை முழுதும் அவள் மேடிட்ட வயிற்றின் மேல் தான் இருந்தது. தான் இங்கே வந்து சென்று நான்கு மாதங்கள் தான் இருக்கும், அதற்குள் இவ்வளவு பெரிய வயிறு எப்படி? அப்படி என்றால் அப்போதே உண்டாகியிருந்தாளா? தவறு செய்துவிட்ட உணர்வு அவள் முகத்தில் துளியும் இல்லாமல் என்னுடன் சுற்றித் திரிந்தாளே!!! ஒருவேளை இது அவளுக்கு சகஜமான விஷயமா? ச்சீ ச்சீ... இது என்ன நினைப்பு அவள் அப்படிப்பட்டவளா என்ன!!! அப்படினா அவளுக்கே தெரியாமல் தான் இருந்திருக்கும்... கண்டிப்பா அப்படியாகத் தான் இருக்கும்.' என்று நேத்ராவின் எண்ணங்கள் பலவிதமாக விரிந்து கொண்டிருக்க, ஹரித்ரா தன் தலையிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதாள்.

அதனைக் கண்டவுடன் நேத்ரா ஒருபுறம் பதறியடித்து ஓடிவர, கற்பகம் ஒருபுறம் "வேண்டாம்ய்யா..." என்று அழறிட, ஹரித்ராவின் தாய் குத்துக் கல்லாக நின்றிருந்தார்.

"ஹரிம்மா... அக்கா உன்னை தப்பா நினைக்கல டா... வேண்டாம் டா... அழாதே... உள்ள இருக்க குழந்தைய கஷ்டப்படுத்தினா உனக்கும் சேர்த்து தான் ஆபத்து..." என்று அவளை அணைத்து நின்று என்ன பேச வேண்டும் என்று புரியாமல் ஹரித்ராவை மட்டுமே கருத்தில் கொண்டு உரைத்தாள்.

"அக்கா... எனக்கு இது வேண்டாம் க்கா... எனக்கே தெரியாமல் எனக்குள் வந்த இது எனக்கு வேண்டாம்..." என்று கூறி ஹரித்ராவும் அழுதிட,

"சரி டா... சரி உனக்கு வேண்டாம்... இப்போ அழாதே டா... அக்காவுக்காக அழாம இருடா... ப்ளீஸ்..." என்று அவளிடம் கெஞ்சும் குரலில் இறைஞ்சினாள்.

வீடே அமைதி மயானம் போல் காட்சியளிக்க, அழுது சோர்ந்த ஹரித்ராவை தன் மடியில் சாய்த்து உறங்க வைத்துவிட்டு அவள் அன்னையிடம் வந்து நின்றாள் நேத்ரா.

"என்ன ஆச்சு? எப்போ உங்களுக்கு தெரிஞ்சது?"

"இப்போ தான் இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சது. வயிறு கொஞ்சம் உப்பலா இருக்கவும் சந்தேகத்துல அவளோட வீட்டுக்கு தூரம் என்னைக்குனு கேட்டேன்.

தெரியலே ம்மா வந்து ரெம்ப நாள் ஆன மாதிரி இருக்குனு சொன்னா... ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக கொஞ்சம் பயமா இருந்தது. அதனால பக்கத்து ஊர்ல மருத்துவச்சி ஒருத்தவங்ககிட்ட கூட்டிட்டுப் போனேன். அவங்க தான் ஊர்ஜிதம் செய்து சொன்னாங்க. குழந்தை வளர்ச்சி அடைந்துட்டதால கலைக்க முடியாதுனு சொல்லிட்டாங்க..." என்று கூறி சேலை தலைப்பில் வாயை மூடிக்கொண்டு அழுகையுடனே மேலும் தொடர்ந்தார்.

"முன் ஜென்மத்துல என்ன பாவம் செய்தமோ, அவ வைத்துல சாபமா, எங்களுக்கு தண்டனையா வந்து நிக்கிது.

எத்தனமுறை தலைபாடா அடிச்சிக்கிட்டேன்... ஊர்வழிய சுத்தாதேடி-னு கேட்டாளா பாவி மவ... என் வயித்துல பொறந்ததால அவளுக்கு வந்த சாபமா இல்லே அவளுக்கு அம்மா இருக்கதால எனக்கு வந்த பாவமா தெரியலே..." என்று அவர் அழுது புலம்பிட,

"பிரசவத் தேதி என்ன சொல்லிருக்காங்க?"

"அதெல்லாம் கேட்கலே... வயித்தைத் தள்ளிக்கிட்டு வெளியே போனா ஊர்வாயில விழுகனுமேனு அவளை எங்கேயும் கூட்டிட்டுப் போகலே..." என்றிட, நேத்ராவிற்கு தான் கோபம் கோபமாக வந்தது.

"என்ன அம்மா நீங்க... இத்தனை மாதத்திற்கு பண்ண வேண்டிய செக்கப் எதுவும் பண்ணாம, அதுக்கான டேப்லட்ஸ் எதுவும் எடுத்துக்காம இருந்திருக்கிங்க. இது ஹரிகுட்டியையும் சேர்த்து தான் பாதிக்கும்..." என்று கத்திட, அவர் அதற்கும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை.

அவரைப் பொறுத்தவரை வெளியே தெரிந்தால் அசிங்கம், அவமானம் என்பது மட்டுமே. ஹரித்ராவிடமும் இதற்கு யார் காரணம் என்று அவர் கேட்க நினைக்கவும் இல்லை, அதற்கான தண்டனையை பெற்றுத்தர நினைக்கவும் இல்லை. இதெல்லாம் புரிந்ததும் நேத்ரா அவரை இன்னும் அதிகமாகவேத் திட்டினாள்.

நேத்ரா அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசித்து, முதல்கட்டமாக கங்கதரனுக்கு அழைத்து விஷயத்தைக் கூறி, வீட்டிற்கு வந்து பார்க்க நம்பகமான ஒரு டாக்டர் வேண்டும், அவர் அறிவுரையின் படி ஹரித்ராவை மதுரை அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள் என்றாள்.

கங்காதரன் தனக்குப் பழக்கமான மருத்துவர் ஒருவரின் உதவியின் மூலம் தென்காசியில் இருக்கும் பெண் மருத்துவரை வரவழைத்தார். அவர் நேத்ராவை தனியாக அழைத்துச் சென்று கூறிய சில விசயங்கள் இன்னுமே அதிர்ச்சி கொடுத்தது. அவளின் அந்தரங்க உறுப்புகள் சித்தரவதை செய்யப்பட்டதாகக் கூறினார். மேலும் சில உண்மைகளை போட்டு உடைக்க நேத்ராவும் அதனை எதிர்பார்த்திருந்தாலும் உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.

சிறு வயது பெண் என்பதால் பிரசவ வலியை எதிர்க்கொள்ளும் மனோதிடமும், உடல்வலிமையும் இல்லாமல் இருப்பதால் சுகப்பிரசவம் தவிர்த்து அறுவை சிகிச்சை செய்தால் இருவரையும் சேஃப் செய்ய முடியும் என்றார்.

மருத்துவர் சென்ற பின் ஹரித்ராவுடன் அமர்ந்திருந்த நேத்ராவிற்கு மீண்டும் பல சிந்தனைகள் தோன்றின. 'எவரேனும் கடத்திச் சென்றிருப்பார்களோ? இதை எப்படித் தெரிந்து கொள்வது? இவளிடம் கேட்டால் அவளுக்குத் தெரியுமா?' என்று யோசித்துக் கொண்டிருந்தவள் "அக்கா" என்ற ஹரித்ராவின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தாள்.

"எனக்கு நீங்க இங்க வந்த போதே சில விஷயம் சொல்லனும்னு நெனச்சேன். சில சந்தேகமும் கேட்னும்னு நெனச்சேன் க்கா... ஆனால் நம்ம வீட்ல இருக்கும் போது தனியா பேச வாய்ப்பே கிடைக்கல... வெளி இடத்தில் வச்சி இதுபத்தி பேச எனக்கு ஒரு மாதிரியா இருந்தது அக்கா... அதான் உங்ககிட்ட சொல்லலே..." என்று முடிந்தளவு தன் அழுகையை அடக்கி கொண்டு பேசினாள்.

இதனைக் கேட்டவுடன் நேத்ராவிற்கு தன் மேலேயே கோபம் பல மடங்கு தோன்றியது. தன்னிடம் மனம்விட்டுப் பேசத்தான் தன்னுடன் மதுரை வருவதாக உரைத்திருப்பாளோ!!! இதற்கு காரணமாவரை இவளுக்குத் தெரியுமோ!!! ஒருவேளை பேச வாய்ப்புக் கிடைத்திருந்தால் அதனையும் உரைத்திருப்பாளோ!!! என்று யோசித்துக் கொண்டே,

"குட்டிம்மா... நீ எங்கேயும் தனியா போனியா டா? அல்லது உனக்குத் தெரிஞ்சவங்களே உன்கிட்ட எப்போவாச்சும் தப்பா நடக்கவோ, பேசவோ செய்திருக்காங்களா?"

"தெரிஞ்சவங்க யாரும் என்னிடம் தப்பா பேசினது இல்லே க்கா... நீங்க வரதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நான் ஸ்கூல் போகும்போது ஒரு ஆள் திடீரனு குறுக்க வந்து 'உன்னை மாதிரி ஒருத்திய பார்த்தது இல்லே. இன்னொரு நாள் வெச்சுக்கலாமா?'னு கேட்டாங்க. அது எனக்குப் புரியலே. நான் அவனை அவாய்ட் பண்ணிட்டு போய்ட்டேன். அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு இன்னொருத்தரையும் கூட்டிட்டு வந்து 'என்ன பாப்பா என்னை நியாபகம் இல்லையா?'னு கேட்டாங்க. எனக்கு சத்தியமா அவங்க ரெண்டுபேருமே யாருனு தெரியாது க்கா... என்ன பேசினாங்கனு புரியலே, ஏன் என்கிட்ட பேசினாங்கனு தெரியலே... அதுக்கப்பறம் அவங்களை பார்க்கல க்கா... அவன் தான் என்னோட இந்த நிலைமைக்கு காரணமா க்கா?" என்று தன் பல நாள் சந்தேகங்களில் ஒன்றை நேத்ராவிடம் வினவினாள்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்னு நேத்ராவிற்கு புரியவில்லை. "சரி நீ என்கிட்ட என்ன கேட்கனும்னு நெனச்சே?"

"என் உடல் வலியைத் தான் உங்ககிட்ட சொல்லனும்னு நெனச்சேன் க்கா... ஃபஸ்ட் வலியை உணர்ந்தது மார்புல தான்... ட்ரெஸ் உரசும்போதெல்லாம் வலிக்கும்... அடுத்து டாய்லெட் போகனும்னாலே பயமா இருக்கும். எரிச்சல் தாங்க முடியலே... ஏன் இப்படியெல்லாம் இருக்குனு யோசிச்சா ஒன்னும் புரியலே...

நான் ஏஜ் அட்டன் செய்தப்போ ரத்தம் வருதுனு அம்மாகிட்ட சொன்னதுக்கு, 'இனிமே அப்படித் தான் இருக்கும்... மாசமாசம் வரும்' அப்படினு சொன்னாங்க, அதே போலத் தான் இப்போ இந்த மாதிரி மாற்றம் இருக்கும் போலனு நெனச்சேன். ஆனால் பீரியட்ஸ் ஆகலேங்கவும் இதை யார்கிட்ட கேட்கிறதுனு தெரியலே...இதை எல்லாம் தான் உங்கிட்ட கேட்கனும் நெனச்சேன். ஆனால் எப்பவுமே அம்மாவோ அல்லது அத்தையோ நம்ம கூடவே இருப்பாங்க... என்னால கடைசி வரை கேட்கவே முடியலே... அப்பறம் கொஞ்ச நாள்ல எல்லாம் பழகிடுச்சி... நான் என்ன க்கா தப்பு செய்தேன். எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை?" என்று அழுது கொண்டே கூறினாள்.

"அழாதே டா... அந்த பொறுக்கி நாய்ங்க மட்டும் யாருனு தெரியட்டும்... இருக்கு அவனுங்களுக்கு" என்று வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கூறினாள் நேத்ரா...

நேத்ராவிற்கு அவன் யார் என்று எப்படி தெரிந்து கொள்வது என்று புரியாமல் போக அப்போது தான் மதனின் நினைவு வந்தது. அவன் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த ஊர் தானே அவனிடம் கேட்டால் ஏதேனும் உதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தாள்.

ஆனால் தன் அன்னையின் மூலம் விஷயம் அறிந்து கொண்ட மதன் பதறியடித்துக் கொண்டு குற்றாலம் வந்து சேர்ந்தான். அவனை அங்கே எதிர்பார்த்திடாத நேத்ரா,

"மதன் நானே உங்களை வர சொல்லனும்னு நெனச்சேன். நீங்களே வந்துட்டிங்க... நல்லதா போச்சு... உங்களுக்கு இங்கே போலிஸ் நண்பர்கள் யாராச்சும் இருக்காங்கலா? அல்லது டிடெக்கிவ்ஸ்?"

உள்ளே நுழைந்ததும் நேத்ராவின் கேள்வியில் எரிச்சல் அடைந்தாலும் தன்னை முதன்முதலாக நெருங்கி நிற்பவளைக் கண்டு கல்லத்தனமாக சிரித்துக் கொண்டு,

"போலிஸ் ஃப்ரெண்டு வெச்சுக்கிற அளவுக்கு நான் ரௌடியும் இல்லே... பணக்காரனும் இல்லே... டிடெக்டிவ்ஸ்... ம்ம்ம்..." என்று யோசித்தவன், அவள் தோளில் தன் இரண்டு கைகளையும் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து,

"இங்கேலாம் கிடைக்கமாட்டாங்க... என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா ஊருக்குள்ள அடுத்த வீட்ல என்ன நடக்குதுனு இதே வேலையா பார்த்துட்டு திரியறவங்க யாரையாச்சும் பிடிச்சு விசாரிக்கச் சொல்றேன்..." என்று கூறி முடித்த போது இருவருக்குமான இடைவெளியைக் குறைத்திருந்தான்.

பேச்சு சுவாரசியத்தில் அதனை கவனிக்க மறந்திருந்தாள் நேத்ரா. "டேய்" என்ற அதட்டலில் சற்று பயந்து அவளைவிட்டு நகர்ந்து நின்று, சத்தம் வந்த திசையில் பார்த்தவன் அங்கு தன் அன்னையைக் கண்டு,

"என்ன ம்மா?" என்று கொஞ்சம் கடுப்பாகவே கேட்டிட,

"வந்ததும் வராததுமா கைகாலைக் கூட கழுவாம அவளை ஏன்டா இடிச்சிட்டு நிக்கிறே... போய் குளிச்சிட்டு வந்து உன் பொண்டாட்டிக்கிட்ட விடிய விடிய பேசு..." என்று சத்தம் போட்டுச் சென்றார்.

தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்தவன், ஹரித்ராவின் அறைக்குச் சென்று இன்னும் சில விஷயங்களை விசாரித்துக் கொண்டு, தெரிந்தவர் ஒருவரை பார்த்துவிட்டு வருவதாகக் கூறினான்.

"மதன்... விஷயம் வெளியே தெரிய வேண்டாம்... ஹரியோட அம்மா அவங்க இருக்கிற நிலைமைக்கு இந்த விஷயத்துல எதிர்த்து போராட முடியாதுனு நினைக்கிறாங்க... நாம ஹெல்ப் பண்ணுறதா சொன்னாலும் போன மானம் போனது தானே, எங்களுக்கு யாரையும் தண்டிக்க வேண்டாம். நாங்க மன்னிச்சுட்டதாவே இருக்கட்டும்னு ஒரே அழுகை... அதனால முடிஞ்ச அளவு வெளியே விஷயம் வராம பார்த்துக்கோ..." என்றாள் நேத்ரா.

"யூ டோன்ட் வொரி..." என்று அவள் கன்னம் தட்டி கூறிச் சென்றான்.

இரவோடு இரவாக ஹரித்ராவகற்கு மூச்சுத்திணறல் ஏற்பட, அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை செல்ல, அங்கே தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆபத்து என்றார் மருத்துவர்.

ஒருபக்கம் ப்ளட் டெஸ்ட் எடுக்கப்பட, மறுபக்கம் ஈ.சீ.ஜி பொருத்தப்பட்ட ஆப்ரேஷனுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

குழந்தையை செவிலியர் வெளியே எடுத்துவர, ஹரித்ராவின் அன்னை அதனை வாங்க மறுத்தார்.

முதன்முதலாக குழந்தையை கையில் வாங்கியது நேத்ரா தான். பிஞ்சு நெஞ்சின் பட்டு மேனியை தொட்டிடும் போது சிலிர்த்துப் போனாள் அதனைப் பெறாத அன்னையவள். அந்த குட்டி தேவதையை தன்னையும் அறியாமல் ரசித்து அதில் ஹரித்ராவின் முகம் தெரிகிறதா என்று தேடிக் கொண்டிருந்தாள் நேத்ரா.

சிறிது நேரத்தில் வெளியே வந்து டாக்டர் "சாரி" என்று கூறிச் செல்ல தலையில் இடி விழுந்தது போல் இருந்தது நேத்ராவிற்கு. தலைசுற்றிவது போல் இருக்க, கையில் இருக்கும் குழந்தையை கருத்தில் கொண்டு காலை அழுந்தி ஊன்றி நின்று, தன்னை சமன் செய்து பஞ்சுபோல் இருக்கும் பிஞ்சைக் கண்டாள். இவ்வளவு நேரம் ரசித்த குழந்தையின் முகம் இப்போது வெறுக்கத் தோன்றியது. ஆனால் அதுவும் ஒருநொடியே... அடுத்த நொடி இத்தனை நாள் தங்கையாய் இருந்து தன்னுடன் உறவாடியவள் இப்போது மீண்டும் அறும்பாகி தன்னோடு இணைந்து பூத்துக்குலுங்க வந்திருக்கிறாளோ!!! என்று தோன்றிட அந்த ஒரு நொடி கலங்கம் கூட விட்டுவிலகிச் சென்றது...

உடல்கூறு ஆய்விலும், ரத்தப் பறிசோதனையிலும் ஹரித்ரா ட்ரக்ஸ் பயன்படுத்தியதாக கூறப்பட, அதனை மறுக்க சரியான ஆதாரம் இல்லாமல் போனது.

ஹரித்ராவின் அன்னை கலந்து கொடுத்த பாலில் தான் போதை மருந்து கலக்கப்பட்டதாகக் கூறி அவரின் மேல் கேஸ் பதிவு செய்யப்பட்டு சிறையில் இடப்பட்டார். அவமானம் தாங்காமல் சிறையிலேயே இறந்தும் போனார்.

ஹரித்ராவின் தந்தை நேத்ராவிடம், "இந்த சனியன் வந்த நேரம் என் குடும்பம் அவமானப்பட்டதோட இப்போ இரண்டு பலியும் எடுத்துக்கிச்சு. இதையும் கொன்னாத் தான் எனக்கு நிம்மதி" என்று குழந்தையை கொல்ல முயற்சிக்க நேத்ரா அவரை தடுத்து நிறுத்தினாள்.

"உங்க பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்டவனே கொல்ல துப்பில்லே. கண்டுபிடிக்கக் கூட வக்கில்லே. பச்சைப்பிள்ளைய கொல்ல வரிங்களா? வெட்கமா இல்லே... உங்களுக்கு இந்த பிள்ளையைப் பார்த்தால் எமன் மாதிரி தெரியுதுனா பயந்து எங்கேயாவது போய் ஓடி ஒழிஞ்சுக்கோங்க... போங்க... நான் வளர்த்துக்குறேன்..." என்று திட்டி விரட்டிவிட்டாள். அவரும் "விட்டது சனி" என்று சத்தமாகவே உரைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

தன்னுடைய எந்த கேள்விகளுக்கும் பதில் கிடைக்காமல் போக, இன்னுமே கேள்விகள் அதிகமாகியது தான் மிச்சம். பவனும் கங்காதரனும் இதில் இழுக்க மனம் இல்லாமல் அவர்இளை தலையிடவேண்டாம் என்று தடுத்திருந்தாள். இப்போது அவளின் முழுமுதல் நம்பிக்கை மதன் என்று நினைத்திருக்க, அவனிடம் இருந்து சில அதிர்ச்சிகளும் கிடைத்தது.

பதினாறாம் நாள் காரியம் முடித்துக் கொண்டு புறப்படும் நேரம் நேத்ரா வீட்டில் இல்லாததை உறுதி செய்து கொண்டு தன் அன்னையிடம் சென்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தான் மதன்.

"என்ன நெனச்சிட்டு இருக்கா அவ? யாரோ பெத்த பிள்ளையை தூக்கிக்கிட்டு திரியறா... அந்த பிள்ளையோட என்வீட்டு வாசல் மிதிக்கக் கூடாது சொல்லிட்டேன்... எங்கேயாவது குப்பைத் தொட்டில போட சொல்லுங்க"

"டேய்... மனசாட்சியில்லாம பேசாதே டா மதன். பச்சைப் பிள்ளை டா... இது பாவம் டா..."

"ரெம்ப பாவமா இருந்தா, அனாதை ஆசிரமத்தில சேர்த்துவிட சொல்லுங்க... அந்த குழந்தை என் வீட்டுக்குள்ள வரக்கூடாது. எவனோ நாலு பேர் சேர்ந்து பெத்தபிள்ளைக்கு நான் அப்பாவா இருக்க முடியாது..."

"நீங்க அப்பாவா இருக்க வேண்டாம். ஆனால் நான் தான் இந்த குழந்தைக்கு அம்மா..." என்று தன் கனீர் குரலுடன் உள்ளே நுழைந்தாள் நேத்ரா.

மதனின் பேச்சில் கோபம் மூண்டதே ஒழிய, தன் நம்பிக்கை பொய்த்துவிட்டது என்று சிறிதும் வருந்தத் தோன்றவில்லை அவளுக்கு. மதன் சுயநலவாதி என்று அறிந்திருந்தவளுக்கு அவனின் கூற்று பெரிதாகவும் தோன்றவில்லை.

"நீ அம்மாவா? இப்படியே ஊருக்குள்ள சொல்லிட்டுத் திரிஞ்சேனா உனக்கு ரெம்ப நல்ல பேரு கிடைக்கும்..." என்று தன் குரலை இறக்கியிருந்தான் மதன்.

"எனக்கு எத்தனை பேர்கள் கிடைத்தாலும் பரவா இல்லே. முகம் தெரியாத நாலு ஆம்பளைங்க செய்த தப்புக்கு ஒன்னும் அறியாத இந்த குழந்தை என்ன பாவம் செய்தது!!!"

"நீ அந்த குழந்தையுடன் தான் வருவேனா, உன் மாமா வீட்டுக்கு வாழாவெட்டியா தான் போகனும்... நல்லா யோசிச்சு பதில் சொல்?" என்று மிரட்டல் தோரணையில் கூறிட,

"போனதும் விவாகரத்து நோட்டிஸ் அனுப்புறேன். கையெலுத்து போட்டு அனுப்புங்க...." என்றுவிட்ட தன் அத்தையிடம் திரும்பி, "வாங்க அத்தை போகலாம்..."

"திமிர் டி... பணத்திமிர்... கருவாச்சி உனக்கெல்லாம் இவ்வளவு திமிர் எங்கிருந்து வந்தது டி.. எல்லாம் பணம் இருக்குன்ற தைரியம் தானே... உன்னைலாம் ஒரு பொண்ணா மதிச்சு கல்யாணம் செய்துகிட்டது என் தப்பு தான்."

"என்னை கல்யாணம் செய்துக்கோங்கனு நான் உங்களை கெஞ்சினேனா!!! நீ தானே என்னை வர்புருத்தினே!!!"

"உன்னை வர்புருத்தி தான் கல்யாணம் செய்துகிட்டேன். அதுக்கு காரணம் காதல்லாம் கிடையாது... லைட் ஆஃப் பண்ணிட்டா பக்கத்துல இருக்கிறது, உலக அழகியா இருந்தா என்ன? உன்னை மாதியி கருவாச்சியா இருந்தா என்ன? என் தேவை நிறைவேறினால் சரி தான்னு தான் உன்னை கட்டிகிட்டேன். அதுவும் கிடைக்காத போது இனி உன்கூட எனக்கென்ன வேலை...

உன்னை கல்யாணம் செய்துகிட்டது உன் பணத்துக்காக தான். இனி வர்றவனும் உன் பணத்துக்காக மட்டும் தான் வருவான். நான் இல்லேனா இன்னொருத்தன்னு ஜாலியா இருக்கலாம்னு பார்த்தியா?. எல்லாம் இந்த பணம் இருக்கிற வரைக்கும் தான்."

என்று அவன் அடுக்கிக் கொண்டே போக, அவன் கன்னத்தில் விழுந்த அரையில் வாய்மூடி கோபத்தோடு அவளை முறைத்து நிற்க, "இனி ஒரு வார்த்தை பேசினே... உன்னை கொன்னுடுவேன்... இது என் வீடு... போ வெளியே..." என்று அவனைத் துரத்திவிட, அவனோ தன் அன்னையைப் பார்க்க, கற்பகம் நேத்ராவுடன் இணைந்து நின்றார். அவரையும் மனதிற்குள் சபித்துக் கொண்டு வெளியேறிச் சென்றான்.

ஹரித்ராவின் நிலைக்குக் காரணமான அயோக்கியனைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தாலும், இனி அதில் என்ன பயன் இருக்கப் போகிறது, வழக்கு பதிவு செய்தாலும் சம்மந்தப்பட்டவள் உயிரோடு இல்லை எனும் போது கேஸ் செல்லபடி ஆகது என்று அவனைத் தேடும் பணியை நிறுத்திவிட்டாள்.

டைவர்ஸ் அப்ளை செய்து அதுவும் கிடைத்துவிட, திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் கணவன் இல்லாமல் குழந்தையுடன் வந்து நின்ற நேத்ராவிற்கு மதன் மூலமாகவே பல பெயர்கள் கிடைத்தது. அதன் விளைவு ஊருக்குள்ளும் தெரிய, வீட்டைவிட்டு வெளியேறவே பயந்தாள்.

பவன் தான் அவள் துவண்டு போகும் போதெல்லாம் ஆறுதல் கூறி தேற்றி தொழில் கற்றுக்கொடுத்து, கூடவே தற்காப்புக்கலையும் பயிற்சித்து வடமாநிலம் முழுதும் ஆர்டர் எடுக்கும் பணியை அவளுக்கு நியமித்து, அதனை சிறப்பாக நடத்திடவும் உதவினான்.

அதனால் தான் தொழில் ரீதியாக வடமாநிலத்தில் குறிப்பாக அபியின் மனதில் அயர்ன் லேடியாக வலம் வந்தாள் சிவநேத்ரா.

ஒருவருடத்திற்கு முன்பு கற்பகமும் இறந்துவிட, மதனின் ஆட்டம் மீண்டும் ஆரம்பித்தது. நேத்ரா நிச்சயமாக வெண்பாவிற்கு தான் அன்னையல்ல என்று அனைவர் முன்னிலையிலும் சொல்லமாட்டாள் என்ற நம்பிக்கையில், வெண்பா தன் குழந்தை என்றும், நேத்ராவின் நடத்தை சரியில்லாத காரணத்தால் தான் விவாகரத்து செய்து கொண்டதாகவும், வெண்பா பெண்குழந்தை என்பதால் அவளிடம் வளர்வது சரிவாராது என்றும் கூறி குழந்தையை தன்னோடு அனுப்பி வைக்க வேண்டும் அல்லது தான் கூறுவதைக் கேட்டு நல்லமுறையில் தன்னோடு வந்து வாழ வேண்டும் என்று நேத்ராவின் மேல் வழக்கு பதிவு செய்திருந்தான். இந்த திட்டமும் அவளது பணத்திற்காகத் தான்.

-ஊடல் கூடும்.
 
Top