• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
மதுரையில் மாலை சின்னதாக ஒரு ரிஸப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டருந்தது. மேடையில் பெண்ணவளின் அருகே கம்பீரமாய் நின்றிருந்தவனை நோக்கி வெண்பா ஓடிவர அவளை தூக்கிக் கொண்டான்.

ஃபோட்டோ கிராஃபர் குழந்தை இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி இறக்கிவிடச் சொல்ல,

"குழந்தை என்கிட்ட தான் இருப்பா. அவளா எப்போ இறங்கிப்போறாளோ அப்போ வந்து ஃபோட்டோ எடு. அதுவரை போய் சும்மா உட்கார்..." என்று கோபமாகக் கத்தி விரட்டிவிட்டான்.

அருகில் நிற்பவள் அவனின் கோபம் கண்டு அஞ்சிட, தன் முகத்தை சற்று இயல்புக்குக் கொண்டு வந்தான்.

வெண்பாவை விமலா வந்து அழைத்துச் சென்றப்பின் வாங்கிய பணத்திற்கு பத்து ஃபோட்டோ வேணும் எடுக்க வேண்டுமே என்று அவசரமாக மேடை ஏறி வந்தான் ஃபோட்டோ கிராஃபர்.

மணமகன், மணப்பெண் மட்டும் மேடையில் நிற்க, ஃபோட்டோ கிராஃபர் சில பல போஸ்களில் நிற்க சொல்ல, கிளிப்பிள்ளை போல் இருவரும் நின்றனர். இடையே ஒரு முறை அவனின் முகம் மூக்கு விடைத்து கோப நிலைக்குச் செல்வதைக் கண்ட ஃபோட்டோ கிராபர்,

"இன்னும் இரண்டு ஸ்நாப் தான் சார்... ப்ளீஸ் சார்... கொஞ்ச நேரம் நில்லுங்க சார்..." என்று கெஞ்சத் தொடங்கினான்.

"ம்ம்ம்" என்று மட்டும் கூறி தன் முகத்தை மீண்டும் இயல்பாக்கினான்.

"மேடம் நீங்க சாருக்கு முன்னாடி வந்து நில்லுங்க மேடம், சார் நீங்க அவங்க கை இரண்டையும் விரல்களோடு கோர்த்து முன்னாடி கூடி அணைச்சி நில்லுங்க சார். ஹாங்... அதே தான் சார்... சூப்பர்... அப்படியே நில்லுங்க, ரெண்டு பேரும் இங்கே பாருங்க... சூப்பர்... சூப்பர்..." க்ளிக்.

தன் முதுகில் மென்மையாக உரசிடும் ஆடவனின் வலியதேகம் பெண்ணவளுக்குள் சொல்லொன்னா உணர்வை ஏற்படுத்திட, அதன் வெளிப்பாடாக அவள் கைகள் நடுக்கம் கொள்ள, அதனை தன் கைகள் வழியே உணர்ந்து கொண்டான் அவள் மணவாளன்.

அவன் விலக நினைக்கையில், ஃபோட்டோ கிராஃபர் பேசத் தொடங்கினார்,

"மேடம் நீங்க அப்படியே அதே போஸ்லயே லைட்டா பின்னாடி சாஞ்சு சாரை நிமிர்ந்து பாருங்க. சார் நீங்க மேடத்தோட கண்ணைப் பாருங்க சார்... ஆங்... சூப்பர்..."

மைவிழியாளின் கயல்விழிகளில் காதல் வழிந்திட, அதற்கு மேல் அந்த வேல்விழியின் காதலை... தாக்கத்தை ஏற்று தாங்கி நிற்கும் சக்தியின்றி புகைப்படக் கருவியின் க்ளிக் என்ற சத்தம் கேட்ட அடுத்த நொடி அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.

விருந்தினர் அனைவரும் சென்றிருந்தாலும் கூட பெண்ணவள் மேடையில் தனியாக நிற்பாள் என்று அவன் சிறிதும் யோசிக்கவில்லை. கோபத்தில் அருகிலிருப்பவளை வதைத்துவிடுவோமோ என்று அஞ்சியே அங்கிருந்து சென்றிருந்தான்.

மன்னவனின் கோப வதனம் அவளுள் அச்சத்தை ஏற்படுத்திட, நிற்க த்ராணி இன்றி தொப்பென இருக்கையில் அமர்ந்தாள். அது மட்டும் அல்லாமல் அதிகாலை திருமணத்திற்கு நல்லிரவில் எழுந்ததும், திருமணம் முடிந்த கையோடு இன்றே மதுரையில் வரவேற்பு வைக்க வேண்டும் என்றிட, ஆறு மணிநேரப் பயணக் கலைப்பும், அதனைத் தொடர்ந்து இப்போது சுமார் ஒருமணிநேரம் மேடையில் நின்றிருந்ததும் என எல்லாம் சேர்த்து அவளை இன்னும் சோர்வடையச் செய்திருந்தது.

அப்போது அங்கே வந்த அமியின் அன்னை புவனா,

"என்ன நீ மட்டும் உக்காந்திருக்க? மாப்பிள்ளை எங்கே?" என்றிட,

இவரிடம் 'கோபித்துக் கொண்டு போய்விட்டான்' என்றா கூற முடியும் என்று யோசித்துக் கொண்டே,

"அது வந்து..." என்று ஆரம்பித்து எதுவும் பேசாமல் அவன் சென்ற திசையை நோக்கிட,

அவரும் புரிந்து கொண்டு, "சரி வா... ரூம்ல வந்து உட்கார்... இனி யாரும் வரமாட்டாங்க... அப்படியே வந்தாலும் உன்னை ரூம்ல வந்து பார்த்துக்கட்டும்..." என்று உள்ளே அழைத்துச் சென்றார்.

கேலி கிண்டலுடன் இரவு உணவு முடித்து இல்லம் திரும்பிட, மணப்பெண்ணின் அறையில் அலங்காரத்திற்கு ஏற்பாடு செய்யப் போவதாக கேள்வியுற்ற ராம், அங்கே சென்று தன் அன்னையிடம்,

"மாம்... இன்னைக்கு ரெம்ப டயர்டா இருக்கு, அதனால எந்த ஏற்பாடும் செய்ய வேண்டாமே!!!" என்று சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டான்.

"டேய் என்னடா இது! ஸ்கூல் பசங்க லீவ் போடுறதுக்கு ரீசன் சொல்ற மாதிரி சொல்றே!!! உன்னோட ஒரே தொல்லையா போச்சு டா... பாவம் டா அந்த பொண்ணு, உன்னை கட்டிக்கிட்டு படாத பாடு படுறா... இதை எப்படி மத்தவங்ககிட்ட சொல்லுவேன்!!!" என்று தன் மகனை கிண்டல் செய்து கொண்டும் கைகளைப் பிசைந்து கொண்டும் நின்றிருந்தார்.

"நான் வேணுனா எல்லார்கிட்டேயும் சொல்லட்டா?" என்று தன் அன்னை கலாய்த்ததில் முகத்தை உம்மென வைத்துக் கொண்டு கூறினான்.

"டேய்... நல்லவனே... நீ இவ்வளவு நேரம் செய்ததே போதும்... எப்படியாவது நானே சொல்லிக்கிறேன்... நீ போ..." என்று அவனை விரட்டினார்.

இங்கே பவனின் நிலையோ அந்தோ பரிதாபமாக இருந்தது. இன்று முழுதும் பட்டு சேலையில், பட்டாம்பூச்சியாய் இங்கும் அங்கும் பறந்து கொண்டிருந்த மிதுன்யாவைக் காண இருகண்கள் போதவில்லை அவனுக்கு. கண்முன் வலம் வந்தவளைக் கண்டு ஏக்கப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தான் பவன். இன்று எப்படியாவது அவளிடம் பேசி சரிக்கட்டிவிட வேண்டும் என்று நினைத்து மிதுன்யாவிற்காக தன் அறையில் காத்திருக்க, அவளோ வெண்பாவுடன் அறைக்குள் நுழைந்தாள்.

"என்னடி இது?" என்று கண்களால் வினவிட,

"நேத்ரா அக்கா பாவம் பவன். இன்னைக்கு ஃபுல்லா ரெஸ்டே இல்லாம ரெம்ப கலைப்பா தெரிஞ்சாங்க. இதுல மயக்கம் வேற போட்டுட்டாங்க... பொம்மி வேற கார்ல வரைல நல்லா தூங்கிட்டாளா! அதான் அவ தூங்குவாளோ இல்லேயோனு கவலைப்பட்டுட்டு இருந்தாங்க, அதான் நான் இன்னைக்கு தூங்க வைக்கிறேனு சொல்லி கூட்டிட்டு வந்தேன்." என்றிட

'இன்னைக்கும் போச்சா!!!' என்று கண்களால் வினவி, மீண்டும் ஏக்கமாக பார்த்து வைக்க,

அந்த பார்வையின் அர்த்தம் புரியாத பெண்ணவள், "இப்போ எதுக்கு நந்தி மாதிரி குறுக்க நின்னுட்டு இருக்கிங்க. கொஞ்சம் நகந்து போங்க..." என்று சலிப்பாகக் கூறினாள்.

"நானு?!!... நந்தி மாதிரி இருக்கேன்?!! நல்ல்லா வருவே டி... இப்படியே மெய்ட்டெய்ன் பண்ணு..." என்று பல்லைக்கடித்துக் கொண்டு கூறிவிட்டு எப்போதும் போல் சோஃபாவிற்கு சென்று படுத்துக்கொள்ள, வெண்பாவோ

"சித்தி, அங்கிள் ஏன் பெட்ல படுக்காம, சோஃபால படுத்திருக்காங்க?"

"நாம ரெண்டு பேரும் ஜாலியா உருண்டு விளையாடத்தான்... சரி வா உனக்கு கதை சொல்லட்டா?"

"சித்தி... நான் உருளமாட்டேன்... அங்கிளையும் இங்கே வர சொல்லுங்க... அங்கிள் நீங்களும் வந்து கதை கேளுங்க..." என்று அன்பாக அழைத்தாள்.

"பொம்மி நீ தான் வர சொல்றே... உன் சித்தி கூப்பிடமாட்றாங்களே!" என்று நேரம் பார்த்து மிதுன்யாவைக் கோர்த்துவிட்டான்.

வெண்பா மிதுன்யாவைப் பார்க்க, கடனே என்று தன் முதுகிற்குப் பின்னால் சோஃபாவில் படுத்திருந்தவனை திரும்பிக் கூடப்பார்க்காது அழைத்தாள் அவள். "வெண்பாவுக்காக வாங்களேன்" என்றது தான் தாமதம் பறந்து வந்து மிதுன்யாவின் பக்கம் படுக்கச் செல்ல, இப்போது தான் மிதுன்யாவிற்கு அவனது அவசரமும் சலிப்பும் எதனால் என்று புரிந்தது.

"அங்கிள் இந்த பக்கம் படுங்க... அப்போ தான் கதை கேட்க முடியும்..." என்று வெண்பா தன் அருகே அழைத்திட, மிதுன்யா வாய்மூடி சிரித்தாள்.

நாளைப்பின்னே சிக்குவேல, அப்போ கவனிச்சிக்கிறேன் டி உன்னை. என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வெண்பாவின் அருகே படுத்தக் கொண்டான். மிதுன்யா வெண்பாவிற்கு கதை கூறிட குழந்தைக்கு முன்பாகவே பவன் உறங்கியும் விட்டிருந்தான். சிறிது நேரத்தில் வெண்பாவும் உறங்கிவிட, விமலா வந்து வெண்பாவைத் தூக்கிச் சென்றுவிட்டார்.

வெகுநாட்களுக்குப் பின் வசதியாக கை, கால்களை நீட்டி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் பவனை எழுப்ப மனமில்லாமல், அவன் கையில் தலைவைத்து, அவன் விடும் மூச்சுக்காற்றை தன் உச்சந்தலையில் ஏந்திக்கொண்டு அவன் நெஞ்சில் கன்னம் உரசி சுகமாகத் தூங்கிப்போனாள் அவன் மனையாள்.

இங்கே ராம், சிங்கத்தின் குகைக்குள் கூட நுழைந்திடுவான் போல, ஆனால் தன் மணவாட்டியின் அறைக்குள் செல்ல பயந்து நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான். இறுதியாக வேறு வழி இல்லாமல் பெண்ணவள் அறைக்குள் செல்ல, அங்கே அவன் பத்தினியவள், அவளின் கோதுமை நிறத்திற்கு பொருத்தமான தக்காளிப்பழ நிற சிவப்பு பட்டில், அளவான ஒப்பனையில், சிலைபோல் அமர்ந்திருந்தாள்.

'கொடி... இதொல்லாம் சேர்த்து தானே வேண்டாம்னு சொன்னேன்... என்னை இப்படி கவுத்துட்டியே கொடி...' என்று தன் அன்னைக்கு முதல் அர்ச்சனை செய்துவிட்டு, மீண்டும் மனையாளைப் பார்க்க மீண்டும் மைண்ட் வாய்ஸ் தான் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தது,

'இவளைப் பார்த்தாளே அள்ளி அணைத்துக் கட்டிக்கொள்ள தோனுதே... இதுல அவள் பார்வை வேற... அய்ய்ய்யோயோயோ... கண்ணாலேயே உயிரை உறிஞ்சிக் குடிக்கிறாளே!!... இவ மேல ஒருநாள் கூட கோபமா இருக்க முடியலே... இவ செய்த காரியத்துக்கு இவளை...' என்று பல்லைக்கடித்துக் கொண்டு வம்படியாக கோபத்தை வரவழைத்துக் கொண்டு நேத்ராவின் முன் வந்து நின்றான்.

அவனைக் கண்ட அடுத்த நிமிடம் கண்களில் கண்ணீர் வடிந்திட, அது எதற்கு என்று அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. 'இந்த கண்ணீர் தானே காலை இவளை என்னவளாக்கியது' என்று நினைத்த நொடி அவனின் இதழ்கள் புன்னகைத்தது.

இத்தோடு நூறுமுறையேனும் நினைத்திருப்பான், அவன் அவள் கழுத்தில் மங்கலத்திருநாண் அணிவித்த அந்த மகிழ்ச்சியான தருணத்தை. இதோ இப்போது நமக்காகவும் ஒருமுறை.

பெரியோர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட தங்கத்தாலியை கைகள் நடுங்கிட பெற்றுக்கொண்டவன், நேத்ராவை ஏறிட அவளின் காதல் மொழி கண்ணீராய் உருமாறி அவனைச் சென்றடைய, அதேநேரம் பாரி அவன் தோள் தட்டி அம்ரிதா காத்திருப்பதைக் கூறினார்.

அமியைப் பார்த்து மெல்லியதாக செருமினான் ராம். நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், அவனின் கண்ணசைவில் சிரித்துக் கொண்டே விறைந்து சென்று நேத்ராவின் கையைப்பிடித்து இழுத்து வந்து ராமின் அருகே நிற்க வைத்து தன் கழுத்தில் இருந்த மாலையை அவள் கழுத்திற்கு மாற்றினாள்.

நேத்ராவைப் பார்த்து சிரித்து கண்சிமிட்டிவிட்டு சிறிதும் தாமதிக்காமல் சுற்றியிருப்போர் மறுப்புக் கூறுவதற்கு முன்னால் அவளின் சங்குக் கழுத்தில் மங்கலநாண் பூட்டியிருந்தான் அந்த கள்வன்.

ராம் அணிவித்த திருமாங்கல்யம் கழுத்தில் ஏறிய மறுநிமிடம் பெண்ணவள் அதிர்ச்சியில் மயங்கி சரிய, அவளை தன் தோளில் தாங்கி நின்று கன்னம் தட்டி எழுப்பினான். எழுந்தும் அதிர்ச்சி குறையாமல் அவன் கண்களையே பார்த்திருக்க,

"திமிர் பிடிச்சவளே!!! இனிமே என் மனைவியா என் அறையில் உன் திமிரை எவ்வளவுனாலும் காட்டு... உன்னையும், உன் திமிரையும் வாழ்நாள் முழுக்க ரசிச்சு சந்தோஷமா ஏத்துக்குறேன்..." என்று தமிழில் தன் காதலை அவனுக்குத் தெரிந்த முறையில் கவர்ச்சிகரமான சிரிப்போடு வெளிப்படுத்தினான்.

வெண்பாவிடம் தமிழில் பேசியிருக்கிறான் தான். பெரும்பாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள் தான் பேசுவான். மற்ற யாரிடமும் தமிழில் பேசியதில்லை. இப்போது தன் காதலை தெளிவான தமிழில் உச்சரித்திட, பெண்ணவள் திண்டாடிப் போனாள்.

இத்தனை நாள் தவித்த தவிப்பை, மனம் அனுபவித்த வேதனையை அவன் நெஞ்சில் தஞ்சமடைந்து கரைத்திட நினைத்தாள். சுற்றம் கருதி அவனை பார்வையால் மட்டும் களவாடி கண்களில் கண்ணீரும், இதழில் புன்னகையும் சுமந்து நின்றாள்.

அவளின் பார்வைக்கான அர்த்தம் என்னவென்று உணர்ந்து கொண்டவனுக்கு இப்போது தான் கோபம் அதிகமாகியது. 'இவ்வளவு காதலை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு எதற்கு இந்த பிடிவாதம். இவளின் வீம்பால் இன்னொரு பெண்ணிற்கு தாலி கட்டியிருந்தால் மூவரின் வாழ்வும் நரகமாகியிருக்குமே!!!' என்று சிந்தித்து கோபம் கொண்டான்.

அடுத்தநொடி ஆரவ் ஒருபுறமும், அபினவ் ஒருபுறமும் ராமைத் தூக்கி தோளில் வைத்து உலுக்கிக் கத்தி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

"ராம் பையா... Congrats... கலக்கிட்டிங்க பையா..." என்று அபி தான் கத்தி விசிலடித்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தான்.

ராம் இப்படி ஒரு காரியம் செய்வான் என்று யாருமே எதிர்பார்த்திடவில்லை. அது அனைவரின் முகத்திலும் பிரதிபலித்திட, கங்காதரன் குடும்பத்தாருக்கு நேத்ராவின் வாழ்க்கை சீரானதில் மகிழ்ச்சியே என்றாலும் சொந்தத்தில் விரிசல் விழுந்திடுமோ என்ற பயம், அமியின் அன்னை தந்தைக்கு தன் மகளின் வாழ்வு குறித்த பயம்.

ஊடல் கூடும்.​
 
Top