• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
சொந்தம் 4

இருள் முழுமையாக சூழ்ந்திருந்த அந்த நடுச்சாமத்தில் தூரத்தில் ஒன்றும் இரண்டுமாக எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகள் தன்னைக் கடந்து மெதுவாக நகர்ந்து சென்றிட, அருகில் இருந்த விளக்குகள் மிகவிரைவாகக் கடந்து செல்வதைக் கண்ட மிதுன்யாவிற்கு அப்போது தான் உறைத்தது இது விமானம் இல்லை என்று.

அதிர்ச்சியுடன் சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தவள், தான் ஏதோ ஒரு தேசிய நெடுசாலையில் மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருப்பது புரிபட ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருப்பவனிடம் ஏதோ கேட்க நினைத்தாள், ஆனால் முடியவில்லை. கை, கால்கள் கட்டப்பட்டு தன்னுடைய ஷால் கொண்டே வாயும் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீரில் கரையத் தொடங்கினாள்.

விசும்பலுடன் கூடிய அழுகை சத்தம் கேட்டிட, கண்ணாடி வழியாக அவள் எழுந்ததை அறிந்து கொண்டான் அவன். அவளின் ஆர்ப்பாட்டத்தை எதிர்நோக்கி காத்திருந்தவனோ அவளின் அழுகையைக் கண்டதும் ஒரு நொடி உறைந்து போனான். மிதுன்யாவின் ஆர்ப்பாட்டமற்ற அழுகை வெகு தூரம் தொடர, சிறிது மனம் இறங்கியவனாய் வாய் கட்டை மட்டும் அவிழ்த்துவிட்டான். மேலும் சிறிது நேரப் பயணத்திற்குப் பின் காரை ஓரமாக நிறுத்தியவன் அவளின் கைக்கட்டை அவிழ்த்துவிட்டு முன்னிருக்கையில் வைத்திருந்த உணவு பார்சலை அவளின் கையில் தினித்துவிட்டு ஓட்டுனர் இருக்கைக்கு வந்தான்.

அலுமினியம் ஃபாயில் சுற்றியிருந்த அந்த பொட்டலம் ஏதோ ஒரு வகை உணவுப் பொருள் என்பதனை அறிந்து, அதனை உண்ணப்பிடிக்காமல், தன் கோபத்தைக் காண்பிக்கும் விதமாய், அவன் அமர்வதற்கு முன்பு அவனது இருக்கையில் எறிந்தாள்.

அதனைக் கண்டு திறந்த காரின் கதவை அடைத்துவிட்டு மீண்டும் அவள் புறம் வந்தவன் அவளது கைகளை மட்டும் கட்டிவிட்டு, முன்னிருக்கையில் அமர்ந்து அவள் தூக்கி எறிந்த சான்ட்விச்சை எடுத்து உண்ண ஆரம்பித்தான்.

அவளைக் கண்டுகொள்ளாதத் தன்மையைக் கண்டு அவனைக் கொன்றுவிடும் வெறியோடு ஒரு நிமிடம் உற்று கவனித்தாள். ஆறடி உயரமும், அதிகப்படியான தசைகளற்ற அளவான தேகமும், முழுநேரமும் சுருங்கிய நெற்றியும், ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் திமிருடன் கூடிய நிமிர்வும் என வில்லனாகவே காட்சித் தந்தான்.

அவனை பார்க்கப் பார்க்க வெறுப்பு அதிகரித்திட பார்வையை வெளியே சுழலவிட்டாள். தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாவிட்டாலும் பிழையின்றி எழுத்துக்கூட்டி படிக்கும் அளவிற்கு கற்றுத் தேர்ந்திருந்தது இன்று கை கொடுத்தது அவளுக்கு.

வெளியே இருந்த பெயர்ப்பலகையில் மதுரை என்று தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் எழுதப்பட்டு வலதுபக்க அம்புக்குறி இருந்தது. தமிழ் எழுத்துக்களைக் கண்டவுடன் அவனிடம் தான் கேட்க நினைத்ததைக் கேட்டாள்.

அவள் தமிழ் பேசியதை பிரம்மிப்புடன் பார்த்திருந்தவன் பதிலளிக்க மறந்து போனான். அவளோ மீண்டும் ஒருமுறை கேட்டாள்.

"என்ன எதுக்கு கடத்திட்டு வந்திருக்க? யாரு நீ?".
அவளின் திருத்தமான தமிழ் பேச்சிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டு

"உன்னால ஒரு சின்ன காரியம் நடக்க வேண்டி இருக்கு...." என்றான்.

"நீ நடத்த நினைக்கிற எந்த காரியத்துக்கும் நான் ஒத்துழைக்கமாட்டேன்..." என்று அழுத்தமாகக் கூறினாள்.

"அதையும் பார்ப்போம்.... நீயாவே ஒத்துக்குவ...." என்று கூறிவிட்டு மீண்டும் காரை உயிர்ப்பித்தான்.

பச்சைவண்ண பட்டுடுத்திய மலைமுகடுகளும் அதில் வெள்ளிச்சரிகையாக மின்னிடும் அருவிகளும் நிறைந்த குற்றாலம் நோக்கிப் பயணித்தது அந்த மகிழுந்து...
🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️🏞️

மாலை வீட்டிற்கு வந்த ராம், மிதுன்யா தன் தோழியின் திருமணத்திற்குச் செல்லவில்லை என்று கூறிய குந்தவியைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.

"பின்னே எங்க போனா?"

"தெரியலடா கண்ணா.... அவளுக்கு கால் செய்தால் ஸ்விட்சிடு ஆஃப் னு வந்தது. அவள் ப்ரெண்டுக்கு கால் செய்தா அவள் வரவே இல்லைனு சொல்றா..."

அடுத்த நிமிடமே துரிதமாக செயல்படத் தொடங்கினான் ராம். ஏர்லைன்ஸ்க்கு கால் செய்து மிதுன்யா அதில் பயணித்தாலா என்று விசாரித்திட, சரிபார்த்து அரைமணி நேரத்தில் கூறுவதாக பதில் வந்தது.

காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொருவருக்கும் பலப்பல சிந்தனைகள். விமானத்தில் தனியாக பயணித்த அனுபவம் அவளுக்கு உண்டு என்பதால் டெல்லியில் இறங்கியப் பின் தான் அவளுக்கு ஏதோ ஆபத்து நிகழ்ந்திருக்கிறது என்றே எண்ணினர்.

ஏர்லைன்ஸிலிருந்து அழைப்பு வர எடுத்துப் பேசிய ராமிற்கு மேலும் அதிர்ச்சி. மிதுன்யா இவன் டிக்கெட் புக் செய்த விமானத்தில் பயணிக்கவில்லை என்று கூறினர்.

இதனைப் பற்றி விமானநிலையம் சென்று விசாரிக்க வேண்டுமெனில் போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை வர,

புலன் விசாரணைத் துறையில் பணிபுரியும் நண்பனுக்கு அழைத்து உதவி கேட்டான் ராம்.
"ஃபார்மாலிட்டிக்கு ஒரு கம்ப்ளைன்ட் மட்டும் கொடுத்திரு. மேற்கொண்டு நான் விசாரிக்க சொல்றேன். வெளியே விஷயம் தெரியாம பார்த்துக்கலாம்" என்றான் ராமின் நண்பன் சுராஜித்.

உடனடியாக காவல் நிலையம் சென்று கம்ப்ளைன்ட் செய்தனர். இரவே விமானநிலையம் சென்று பயணிகளின் பட்டியல், சிசிடிவி புட்டேஜ் என அனைத்தையும் சேகரித்து விசாரணையைத் தொடங்கினர்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தமிழகத்தின் காசி என்று கருதப்படும் தென்காசி, காசி விசுவநாதர் கோவிலில் மங்கள மேளம் முழங்க தங்கச் சங்கிலியில் சொக்கர் மீனாட்சியின் திருவுருவம் பதித்த திருமாங்கல்யத்தை அவளின் சங்குக் கழுத்தில் அணிவித்து தன்னில் சரிபாதியாக அங்கீகரித்தான் அவன்.

மேற்கொண்டு ஐயர் கூறியபடியே இயந்திரமாக செயல்பட்டு அவள் நெற்றியில் குங்குமம் இட்டான். பின் கைலாசநாதனை வழிபட்டுவிட்டு அங்ககருந்து புறப்பட்டனர்.

காரின் பின்பக்கம் அமரச் சென்ற மிதுன்யாவை தடுத்து நிறுத்தியது அவன் குரல்.
"நான் ஒன்னும் உனக்கு டிரைவர் இல்லே.... முன்னாடி வந்து உட்கார்" என்றான் அதட்டலாக,
அவன் கூறியதை வேண்டா வெறுப்பாக செய்தாள் அவள்.

தப்பித்தவறி கூட அவன் முகத்தை பார்க்க விரும்பாமல் கண்களை இறுக மூடி சீட்டில் தலை சாய்த்தாள். மனமோ நினைக்க விரும்பாதவற்றை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தியது.

இந்த இரண்டு நாட்களாக அவனுடன் ஏற்பட்ட போராட்டங்கள், வாக்குவாதங்கள் என அனைத்தும் மனக்கண் முன்னாள் காட்சிகளாக விரிந்தது.

குற்றாலம் சென்றடைந்த போது அதிகாலை நான்கு மணியைக் கடந்திருந்தது. அங்கிருந்து ஐந்தருவி செல்லும் பாதையில் கிளைச்சாலை வழியாக இருபது கிலோமீட்டர் தொலைவில் வீடு ஒன்று கண்ணில்பட்டது. அதன் வாசலில் காரை நிறுத்தி அவளை உள்ள அழைத்துச் சென்றான்.
வரவேற்பறையே பெரிய ஹால் போன்று இருந்தது. அதனை அடுத்து ஹாலும், அதன் இடது ஓரத்தில் ஒரு அறையும் அதனை அடுத்து சமையலறை, ஹாலின் வலது பக்கம் இரண்டு அறைகள். வாசலுக்கு நேர் எதிரே சுழல் படிகள் மற்றும் மாடியில் நான்கு அறைகள் என பெரியதாக இருந்தது அந்த வீடு.
கீழே இருந்த ஒரு அறையில் அவளை தங்கிக் கொள்ள சொன்னான்.

"இந்த ரூம்ல தங்கிக்கோ... தப்பிக்கலாம்னு நினைக்காதே... வெளியே வீட்டைச்சுற்றி நாற்பது கிலோமீட்டர் தூரம் முழுமைக்கும் காடு தான்." என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவள் இடைமரித்தாள்.

"லைன் இருக்குமா?" என்று சிறிய பயத்துடன் வினவினாள்.

"சிங்கம், புலி இருக்குமானு தெரியாது. ஆனா கார்டன்ல என்னோட டாபர்மேன் டாக்ஸ் இருக்கு. நீ கார்டனுக்கு போனாலே உன்னை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிடும்." என்று கூறிக் கொண்டே ஜன்னல் கர்ட்டனை விலக்கிக் காண்பித்தான்.

ஜன்னலில் தன் கால்களை தூக்கி வைத்து அவன் உயரத்திற்கு எழுந்து நின்று கொண்டு அவனை தன் முன் கால்களால் அழைத்துக் கொண்டிருந்தது மூன்று காவல் நாய்கள்.

அவ்வளவு உயரத்திற்கு எழுந்து நின்ற நாய்களைக் கண்ட அதிர்ச்சியில் தன் கண்களை கைகள் கொண்டு மூடியபடி கத்திவிட்டாள். "அம்மா....".

"நல்லது... கண்டிப்பா தப்பிக்க ட்ரை பண்ணமாட்டே... ஃப்ரிட்ஜில பால், ப்ரெட், ப்ரூட்ஸ்-லாம் இருக்கு பசிச்சா எடுத்து சாப்பிடு." என்று கூறிவிட்டு மாடியறை நோக்கி சென்றுவிட்டான்.

மாலை அவளின் அறைக்குச் வந்தவன் "இன்னும் இரண்டு நாள்ல நமக்கு கல்யாணம் ரெடியா இரு..." என்றான்.
தன் காதில் விழுந்த வார்த்தைகள் சரிதானா என்பது போல் அவனை குழப்பமாகப் பார்த்தாள்.

அவனோ புருவங்களை உயர்த்தி என்ன என்றான்.

"நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டேன்."

"உன் விருப்பத்தை எதிர்பாத்து உன்கிட்ட சொல்லலே... சொந்தங்களின் பாதுகாப்பில் இருந்த உன்னை தூக்கிட்டு வரத் தெரிந்த எனக்கு, மும்பையில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் உன் தங்கை சுனைனாவைத் தூக்கிட்டு வரது கஷ்டம் கிடையாது. நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கலேனா உன்னோட தங்கச்சிய கல்யாணம் செய்துப்பேன். உன் முடிவை இன்னும் இரண்டு மணிநேரத்தில சொல்லு..." என்று கூறிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான் அவன்.

அவன் தன் தங்கையைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் எதிரொலி போல் மீண்டும் மீண்டும் அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. தன் அறையைவிட்டு வெளியே வந்தவள், ஹாலில் அமர்ந்திருந்தவனைக் கண்டு அவன் எதிரே சென்று நின்றாள்.

"எங்களை ஏன் இப்படி துரத்துற? அப்படி என்ன தான் தப்பு செய்தோம் நாங்க? அவ இன்னும் பேச்சுலர் டிகிரி கூட முடிக்காத சின்னப் பொண்ணு... அவளைப்போய் தூக்கிட்டுவந்து கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்ற... நீ எல்லாம் மனிஷனா இல்லே பெண்பித்தனா?..." என்று ஆக்ரோஷமாய் கத்தினாள்.

ஷோஃபாவில் அமர்ந்திருந்தவன் புயலென எழுந்து அவள் முன் நின்று அவளை எச்சரிப்பது போல் "நான் பெண்பித்தனா இருந்திருந்தா இப்போ உன்னை கல்யாணம் செய்திருக்க நெனச்சிருக்க மாட்டேன்... யாருகிட்ட என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசு..." என்று உறுமினான்.

"பின்னே எதுக்கு எங்கல்ல ஒருத்தரைத் தான் கல்யாணம் செய்துக்கனும்னு நினைக்கிறே..." அவனின் உறுமலுக்கு சிறிதும் அஞ்சாமல் நின்ற இடத்திலிருந்து கொஞ்சம் கூட நகராமல் எதிர்கேள்வி கேட்டாள்.

"அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லே..."

"எனக்கு நீ பதில் சொல்லித் தான் ஆகனும்... எதுக்கு என்னை கல்யாணம் செய்துக்க நினைக்கிற... இந்த கல்யாணத்தால உனக்கு என்ன நன்மை கிடைக்கப் போகுது?"

"எனக்கு என்ன நன்மை நடக்கப் போகுதுன்றது உனக்கு தேவையில்லை. இது ஜஸ்ட் கல்யாணம் அவ்ளோ தான். அதுக்கு மேல உன்கிட்ட எதையும் எதிர்பார்க்கமாட்டேன். நீ என்கூட இருக்குறதுனாலும் இருக்கலாம், இல்லே உன் ஊருக்கும் போகலாம்...."

"வாட்!!! உனக்கு யாரு மேல கோபம்? நிச்சயமா நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டேன் ."

"ஏற்கனவே சொல்லிட்டேன். நீ சம்மதிக்கலேனா உன் தங்கச்சிய கட்டிப்பேன். ஆனால் அதுவரைக்கும் நீ இங்கே தான் இருக்கப்போற.... அதுக்கு நாலு மாசமோ ஆறு மாசமோ ஆகலாம்." என்று சொன்னதை செய்வேன் என்பது போல் அழுத்தமாகக் கூறினான்.

"ஆனால் இந்த கல்யாணத்துக்கு அப்பறம் நான் உன்னை போலிஸ்ல பிடிச்சுக் கொடுத்தா உன் நிலைமை என்னனு யோசிச்சயா?"

"அது தானே எனக்கும் வேணும். உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சினு ஊர்முழுக்க தெரியனுமே.... அந்த வேலைய நீ அல்லது உன் குடும்பத்துல யாராவது செய்தால் எனக்கு வேலை சுலபம்...."

அவனது திட்டம் என்னவாக இருக்கும் என்று மூளை குடையத் தொடங்க

"நான் யோசிக்கனும்...."
என்றவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் சிறிய தோள்குலுக்கலுடன் அமர்ந்து கொண்டான்.
அன்று இரவே அவனுக்கு சம்மதமும் தெரிவித்தாள்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

வாரணாசியில் ஆண்கள் அனைவரும் போலிஸ் ஸ்டேஷன், வீடு, இன்டஸ்ட்ரி என மாற்றி மாற்றி அழைந்தனர். என்றபோதும் கூட எந்த பயனும் இல்லை. இரண்டு நாட்கள் கடந்தும் மிதுன்யா பற்றி எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

அலுவலகத்தில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புடன் விழி முடி அமர்ந்திருந்த ராமின் மனதிற்குள் ஒரு நிமிடம் நேத்ரா தோன்றி மறைந்தாள். இதற்கு மேலும் தான் எதுவும் ஸ்டெப் எடுக்காவிட்டால் மிதுன்யாவை கண்டுபிடித்திட முடியாது என நினைத்தவன், அடுத்தநிமிடமே நேத்ராவிற்கு அழைத்துப் பேசினான்.

"ஹலோ, நேத்ரா ஹியர்"

"உன்னை மீட் பண்ணனும். நீ என் ஆஃபிஸ் வரியா? இல்லே நான் உன் இடத்துக்கு வரவா?" என்றான் தடாலடியாக....

"ஹூ ஆர் யூ?"
அவளின் கேள்வி அவனுக்கு கோபமூட்டியது. 'சரியான திமிர் பிடிச்சவ, தெரியாத மாதிரியே பேசுறாள் பார்' என்று மனதிற்குள் புகைந்தவன், கண்களை மூடித் திறந்து தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

"உனக்கு என் நம்பர் தெரியாமல் இருக்கலாம், ஆனால் என் குரல் மறந்திருக்க மாட்டனு நினைக்கிறேன்!!! மறக்குற மாதிரி சம்பவமும் அன்னைக்கு நடக்கல...." என்றான் சிடுசிடுப்பாக...

இதற்கு மேலும் தெரியாதது போல் நடித்திட அவள் விரும்பவில்லை.

"என்னை எதுக்கு மீட் பண்ணனும்?" பட்டென்று கேட்டாள்.

"இதோ பார்... என்கிட்ட என்ன எதிர்பார்க்குற?.... அன்னைக்கு உன்கிட்ட நடந்துக்கிட்ட முறைக்கு மன்னிப்புக் கேட்கனும்னு நினைக்கிறேயா?... நிச்சயமா மன்னிப்பு கேட்குறேன்... ஆனால் மிதுன்னை வீட்டுக்கு அனுப்பிவை... அவ தான் எங்க வீட்டு மொத்த சந்தோஷமும்... இப்போ சொல்லு உன்னை எங்க மீட் பண்ணனும்..."

"மிதுன் யாரு?" என்று குழப்பத்துடன் வினவினாள்.

"தெரியாத மாதிரி நடிக்காதே டி... மிதுன் என் அத்தை பொண்ணு. அது தெரிஞ்சு தானே அவளை பிடிச்சி வெச்சிருக்க?"

"ச்சீ... எல்லாரும் உன்னை மாதிரி அரக்க குணமா இருப்பாங்கனு நெனச்சியா?... உன்னைப் பலிவாங்க ஒரு பொண்ணை அடச்சு வச்சு கொடுமைப் படுத்துறளவுக்கு மனசாட்சி இல்லாத மிருகம் இல்லை நான். உன்னை தண்டிக்க நினைச்சிருந்தா உன்மேல போலிஸ் கம்ப்ளைன்ட் தான் கொடுத்திருப்பேன். இப்படி உன் வீட்டுப் பெண்ணை பிடித்து வைத்திருக்கமாட்டேன். என் மேல டவுட் இருந்தா போலிஸ்ல சொல்லு, அவங்க விசாரிக்கட்டும். இனி எனக்கு போன் செய்யாதே" என்று கடுமையாக உறைத்துவிட்டு போனை கட் செய்தாள்.

தன் திறன்பேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனோ 'உன்னை போலிஸ் விசாரிக்கிறதை விரும்பாமல் தானே நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். உன்னைப்பத்தி என் மனசுல என்ன நினைக்கிறேன்னு எனக்கே தெரியலயேடி...' என்று நினைத்து இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தான்.
-ஊடல் கூடும்​
 
Top