• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"ராம்... உங்களுக்கு நான் யாரு ராம்?" என்று தன்னையும் மறந்து வினவிட,

"என் காதலை உன்கிட்ட சொன்ன நாளிலிருந்து நீ என் பொண்டாட்டி தான்..." என்றவனின் முகம் காண முயற்சித்தாள் பெண்ணவள்.

அவள் கேட்ட கேள்வியின் பொருள் அவள் மட்டுமே அறிவாள். ஆனால் அதனை உணராதவனின் பதிலில், அவள் தன்னைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினாள்.

'தானும் அவனை காதலிப்பதாக உணர்ந்த நாளிலிருந்து பல மனக்குழப்பங்களுக்கு நடுவிலும் அவனின் நினைவுகள் மட்டுமே தன் உயிர் மூச்சாகிப் போனதை நன்கு அறிந்திருந்த நல்லாள்.

ஆனால் அவனைப் போல் தெளிவாக இருக்க முடியாமல் போனதே. அவன் தனக்கு வேண்டும்... ஆனால் அவனுக்கு தான் வேண்டாம்... என்று யோசித்து யோசித்தே தன் காதலை இழக்க நினைத்தேனே... என்ன மடத்தனம்!!!' என்று இப்போது தோன்றியது.

அவள் தன்னைப் பற்றிய சுய ஆராய்ச்சியில் இருக்கும் போதே பின்னால் இருந்து அவள் தாடையில் கை வைத்து தலையை தன் மேல் சாய்த்துக் கொண்டு முன்கழுத்தில் இதழ் பதித்து,

"நேத்ரா மேடம் என்ன யோசனைல இருக்கிங்க?" என்று வினவினான்.

அவனின் கேள்வியில் மீண்டும் மிரண்டு அவன் புறம் முழுமையாகத் திரும்பி,

"ராம் என்னை அப்படி கூப்பிடாதிங்க ப்ளீஸ்... 'தரு'னே கூப்பிடுங்களேன்..." என்று இறைஞ்சும் குரலில் கேட்டுக் கொண்டாள்.

அவளின் இந்த வேண்டுதல் அவனுக்கு உரிமை உணர்வோடு சேர்த்து நிறைவைக் கொடுத்ததோடு, அவள் தன் பிரத்தியேக அழைப்பை மட்டுமே விரும்புகிறாள் என்ற மகிழ்ச்சிப் பெருக்கில், அவளின் எழுதப்படாத இதழ் ஒப்பந்தத்தில் தன் இதழ் ரேகை வைத்து கையப்பம் இட்டான்.

முதலில் மென்மையாக ஆரம்பித்த இதழ் தீண்டல், அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றவுடன், கொஞ்சம் வலுவடைந்தது. 'எப்போது வேண்டுமானுலும் தடை விதிப்பாள், அப்படி தடுத்தால் விலகிவிட வேண்டும்' என்ற எண்ணத்தில் தான் தொடங்கி வைத்தான். ஆனால் அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை என்றவுடன் தன் கட்டுப்பாட்டை இழந்து அவளின் இதழ்களை சிறைப்பிடிக்க நினைத்து இறுதியில் அவனே அவளின் இதழுக்குள் சிறைப்பட்டுப் போனான்.

நொடிகள் கடந்து நிமிடங்கள் தாண்டியும் பெண்ணவளை விட்டு விலகிச் செல்ல மனமில்லாமல், மீண்டும் மீண்டும் தானாகவே சென்று அவளின் இதழ்களில் இன்பமாகச் சிறைபட்டான்.

அவனாக விலகும் வரை தான் அவனை ஒதுக்கிவிடக் கூடாது என்று தன் கரங்களை சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் அதனை கடைபிடிக்க முடியாமல், கிடைத்த ஒரு நொடி இடைவேளையில்

"இப்போ நான் யார் ராம்?" என்று வினவிட,

குழப்பமாக அவளைப் பார்த்து, அவளைத் தெளிய வைக்கும் எண்ணத்தில், இடையோடு சேர்த்து வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டு,

"நீ எப்பவுமே என் செல்லப் பொண்டாட்டி தரு தான்..." என்று கூறி அவள் நெற்றியில் முட்டினான்.

கண்களை மூடிய நிலையில் கண்ணீர் வடித்த பூவையவள், "விளக்குகள் அணைக்கப்பட்ட இருளுக்குள் நான் யாரா இருப்பேன்? உங்க மனைவி தரு-வாத் தான் இருப்பேனா? இல்லை!!! வேற ஒரு பொண்ணோட நினைவுல என்னை தொடுவிங்களா?" என்று கேட்டுவிட்டு, மறுநொடியே அன்னையைத் தேடும் குழந்தையைப் போல் அவன் நெஞ்சில் சாய்ந்து அவனை அணைத்து, உதட்டைக் கடித்து கேவல்களை அடக்கி விசும்பி அழுகத் தொடங்கினாள்.

அவள் இடையோடு வளைத்திருந்த கைகளைத் தளர்த்தி,

"தேவையில்லாம யோசிச்சு மனசை கஷ்டபடுத்திக்காதே... இந்த ட்ரெஸ் அடுக்குற வேலைய அப்பறமா வந்து பாரு... வெண்பா பசியா இருப்பா... அவளை கவனி..." என்று கூறி அவளை நகர்த்தி நிற்க வைத்துவிட்டு படுக்கையில் சரிந்தான்.

இத்தனை நாள் இல்லாமல் இன்று தான் அவன் அறவணைப்பை எதிர்பார்த்தாள் பெண்ணவள். ஆனால் அணைத்து ஆறுதல் படுத்த வேண்டியவனோ, தன்னை தேற்றிக் கொள்ளவே மிகவும் சிரமப்பட்டான்.

'கேட்டிருக்கக் கூடாது... நாவடக்கம் இல்லாமல் யாரிடம் என்ன கேட்க வேண்டும் என்று யோசியாமல் கேட்டுவிட்டோமே' என்று அவள் மனசாட்சி குடைந்திட, மன்னிப்புக் கேட்க தனிமை வேண்டி காத்திருந்தாள். அந்த தனிமை கிடைக்கவில்லை என்பதை விட, கிடைக்க இடம் கொடுக்காமல் செய்திருந்தான் அவளின் ஶ்ரீராமன்.

இரவு உணவு முடித்து வெண்பாவை விமலா தங்கள் அறைக்கு அழைத்துச் செல்ல, அதனைத் தடுத்து தன்னோடு அழைத்து வந்து படுக்க வைத்துக் கொண்டான்.

லட்சுமணன் குடும்பத்தார் இங்கே வந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில் மறுநாள் காலை விமானத்திற்கு அனைவரும் புறப்பட்டனர். அவர்களுடன் ராம், நேத்ரா மட்டும் வழியனுப்பச் சென்றிருந்தனர்.

மீனாட்சியும், புகழும் அமியின் வீட்டில் இருந்து ஆரவ்-அமியுடன் ஏர்போர்ட் வந்திருந்தனர். சுனைனாவும் அங்கிருந்து அப்படியே மும்பை சென்றாள்.

ஆரவ் மற்றும் அம்ரிதாவிற்கு கங்காதரன் இல்லத்தில் விருந்து ஏற்பாடு தடாபுடலாக நடந்து கொண்டிருந்தது. கமல் மற்றும் பவன் காலை ஒருவேளை மட்டும் கடையில் இருந்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றனர்.

கங்காதரன் ராம் மற்றும் ஆரவ்வுடன் பேசிக் கொண்டிருக்க, வெண்பா ராமின் மடியில் அமர்ந்து பார்பியுடன் பேசிக் கொண்டிருந்தாள். விமலா, நேத்ரா இருவரும் சமைக்க, மிதுன்யா விமலாவிற்கு சின்ன சின்ன உதவிகளை செய்து கொண்டிருந்தாள். அமி அடுப்புமேட்டில் அமர்ந்து அவர்களுடன் வம்புவளர்த்துக் கொண்டிருந்தாள்.

சிக்கன் பிரியாணி, மட்டன் சுக்கா விமலாவின் கைருசியிலும், நண்டு கிரேவி நேத்ராவின் கைப்பக்குவத்திலும் வீடெங்கும் வாசனை பரப்பியது.

மதிய உணவிற்கு கமலும், பவனும் வந்துவிட, வேலையாட்கள் பதார்த்தங்களை மேசையில் எடுத்து வைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். மிதுன்யாவும், நேத்ராவும் அனைவருக்கும் பரிமாரிட, ராம் வெண்பாவை தன் அருகில் அமர்த்தி சாப்பிட வைத்தான்.

நண்டு ஓட்டை நீக்கி வெண்பாவின் தட்டில் வைத்துவிட, சாதத்துடன் இணைத்து உண்டாள் சிறுமி. அதனைப் பார்த்த கங்காதரன்,

"சிவாம்மா நீ சமைப்பேன், சாப்பிடமாட்டேனு சொல்லுவியே, இங்கே பார் ரெண்டு பேரும் விரும்பி சாப்பிடுறாங்க..." என்று நேத்ராவிடம் கூறிவிட்டு ராமிடம்,

"நானும் நண்டு நல்லது சாப்பிட்டு பாருனு பல தடவை சொல்லிட்டேன் மாப்ள, உங்கள் மாதிரி பல நாள் எடுத்துக் கொடுத்திருக்கேன்... ஆனா ஒரு நாள் கூட சாப்பிட்டது இல்லே. அவ சாப்பிடாததால பொம்மியும் சாப்பிடமாட்டா... இன்னைக்கு நீங்க கொடுக்கவும் தான் சாப்பிடுறா இந்த சின்ன வாண்டு..." என்றிட

நேத்ரா அவன் முகத்தை தான் பார்த்திருந்தாள். முதல் நாள் இரவில் இருந்து மற்றவர்கள் முன் எப்போதும் போல் காட்டிக் கொண்டாலும், அவளிடம் சரியாகப் பேசுவதில்லை.

நார்மலாக பேசியிருந்தால் இந்நேரம் வெண்பாவிற்கு எடுத்து வைப்பது போல் அவளுக்கு ஒரு சில துண்டுகளேனும் ஊட்டிவிட்டிருந்திருப்பான். அது தெரிந்தவள் தன் முகம் கூட காண விரும்பாமல் கோபத்தில் இருக்கிறான் என்று நினைத்து வருந்தினாள்.

மீதம் இருக்கும் ஒரு வாரத்தை இப்படியே கடத்திவிட முடியாது என்று உணர்ந்த ராம் இரண்டு நாட்களை கஷ்டப்பட்டு கடத்திவிட்டு, மூன்றாம் நாள் காலை கங்காதரனிடம் பேசினான்.

"அங்கிள்... அங்கே கம்பெனில கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு போல, எப்படியும் இன்னு இரண்டு நாள்ல புறப்பட்டு தானே ஆகனும்...." என்று கூறிக் கொண்டிருக்கும் போதே கங்காதரன் முகம் வாடிவிட, அதற்கு மேல் கேட்க முடியாமல் அமைதியாக இருந்தான்.

(நேத்ராவின் கழுத்தில் திருநாண் கூட்டுவதற்கு முன்பு வரை கங்காதரனை சித்தப்பா என்று தான் அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவர் மாப்பிள்ளை என்று அழைத்திட இவன் சித்தப்பா என்ற அழைப்பை நிறுத்தி விட்டான். சரி மாமா என்று அழைக்கலாம் என்று பார்த்தால் நேத்ரா அவ்வாறு தான் அழைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிய தன் அழைப்பை அங்கிள் என்று மாற்றிவிட்டான்.)

அதற்கு மேல் ராமை பேசவிட்டு சங்கடப் படுத்திவிடக் கூடாது என்று நினைத்த கங்காதரன், "வேலையும் பார்த்து தானே ஆகனும் மாப்ள, இப்போ என்ன இரண்டு நாள் முன்னதா புறப்படுறிங்க. அவ்ளோ தானே... அடுத்த வரும்போது ஒரு பத்து நாள் தங்குறது போல வாங்க..." என்று தன் வருத்தம் மறைத்து சிரித்த முகமாகக் கூறினார்.

இவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த விமலா, நேத்ராவிடம் "சிவா, நாளைக்கு ஊருக்குப் போறிங்களா? ஏன் என்கிட்ட சொல்லலே?" என்று வினவிட, அப்போது தான் அவளுக்கே தெரிந்திருந்தது.

"எனக்கு தெரியாது அத்தை... என்கிட்ட இது பத்தி சொல்லலே..." என்றிட,

"சரி டா... பரவா இல்லே... உனககு தெரிஞ்சா மனசு கஷ்டபடுவேனா சொல்லாம இருந்திருப்பார். இன்னைக்கே உனக்கு என்னென்ன வேணுனு பார்த்து நான் எடுத்து வைக்கிறேன்." என்றது தான் தாமதம் அவரை அணைத்துக் கொண்டாள்.

அன்று முழுதும் நேத்ராவிற்கும், வெண்பாவிற்கும் என்னென்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து எடுத்து வைப்பதிலேயே சென்றுவிட்டது. இரவு தங்கள் அறையில் இது பற்றி அவனிடம் கேட்டாள்.

"ஆமா... என்ன தான் அப்பா, சித்தப்பா இருந்தாலும் சோட்டூ தனியா கஷ்டபடுறான். உனக்கு இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருக்கனுனா இரு... நான் அடுத்த வாரம் வந்து அழைச்சிட்டு போறேன்..." என்றிட,

மூக்குவிடைக்க அவனை முறைத்துவிட்டு மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள்.

மறுப்பு தெரிவிக்கமாட்டாள் என்று தெரிந்து தானே நேரடியாக கங்காதரனிடம் பேசினான்.

மறுநாள் மாலை விமானத்தில் புறப்பட்டு வாரணாசி வந்து சேர்ந்தனர்.

-ஊடல் கூடும்​
 
Top