• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொந்தம் 46

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
கண்கள் கலங்க அவன் மடியில் அமர்ந்த நிலையிலேயே அவனை இறுக அணைத்துக் கொண்டாள் நேத்ரா.

நேத்ரா தானாக அணைப்பதை நினைத்து மகிழ்வதா இல்லை அவளின் கண்ணீரை நினைத்து வருந்துவதா அல்லது கோபம் கொள்வதா எனத் தெரியாமல் பரிதவித்தான் ராம்.

"உன்னை லவ் பண்ணறது தப்பா!!! இல்ல அதிகமா லவ் பண்றது தப்பா!னு எனக்கே தெரியலே டீ... லவ்வை சொன்ன நாள்ல இருந்து என்ன சொன்னாலும் அழுகுற... இப்போ நான் என்ன பண்ணட்டும்?" என்று மென்மையாக வினவினான்.

"எனக்கு இது வேண்டாம்... என்னால இதை செய்ய முடியாது..." என்று அழுகையை விழுங்கிக் கொண்டு அவனை அணைத்தவாறே காதோடு ரகசியம் பேசுவது போல் கூறினாள்.

"இதோ பார் ஆரம்பிச்ச அடுத்த நாளே நிறைய பேர் கால் பண்ணுவாங்கனு நெனைக்காதே மா... அதே மாதிரி சின்ன பசங்க, ஸ்கூல் பிள்ளைங்க மட்டும் தான் ஃபோன் பண்ணுவாங்கனு இல்லே... எல்லா ஏஜ் குரூபுக்கும் சேர்த்து தான் ஆரம்பிக்கிறோம். சில விதமான அநியாயங்கள் எல்லா வயதினருக்கும் நடக்கத் தான் செய்யுது. பொண்ணுங்க மொதோ நம்மல நம்பனும்...அப்பறம் தான் நம்மகிட்ட ஹெல்ப் கேட்டு வருவாங்க... அந்த நம்பிக்கை நீ அவங்களுக்குக் கொடுக்கனும். உன் ஹிரிக்குட்டிக்கு கொடுக்க முடியாம போன நம்பிக்கைய நீ அவங்களுக்குக் கொடு..." என்று பக்குவமாகக் கூறினான்.

"என்னால எப்படி கொடுக்க முடியும் ராம்? என்னால முடியாது... என்னை நம்பினவளுக்கே என்னால எந்த ஹெல்ப்பும் செய்ய முடியலே... முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு பழகாதவங்களுக்கு என்னால எப்படி நம்பிக்கை கொடுக்க முடியும்!!!." என்று இன்னுமே அவனை இறுக்கிக் கொண்டு கூறிட, அவள் பதிலில் கோபமுற்றவன்,

"எந்திரிடீ மொதோ... நகர்ந்து நில்லு..." என்று அதிகாரமாய் மிரட்டினான்.

அவனது குரலிலும், வார்த்தைகளிலும் சற்று பதறியவள், அவனை அணைத்திருந்த கைகளை தளர்த்தி, அவன் மடியில் இருந்து எழுந்திட, இப்போது அவள் முகத்தைப் பார்த்து திட்டத் தொடங்கினான்.

"என்ன கேட்டாலும் முடியாது, வேண்டாம், நடக்காது... ஃபுல் அண்ட் ஃபுல் நெகட்டிவ் தாட்ஸ்... இதுல உன் பேர் 'ஐயர்ன் லேடி'யாம்... சோட்டூ ராஸ்கல் வரட்டும்... பாருடா உன் ஐயர்ன் லேடியோட லட்சனத்தை, நல்லா பாருனு காமிக்கிறேன்..." என்று சத்தமாக திட்டிவிட்டு, அதன் பின் வந்த வார்த்தைகளை முணுமுணுத்தான்.

"இவளை நம்பி ஆரம்பிச்சதுக்கு கல்லை கட்டி கிணத்துல விழுந்திருக்கலாம்..." என்று பற்களைக் கடித்துக்கொண்டு தன் கோபத்தை முடிந்தமட்டும் வார்த்தைகளால் காண்பித்தான்..

அவனின் முணுமுணுப்புகள் அவளது காதில் தெளிவாக விழுந்திட, அதறகெல்லாம் கொஞ்சமும் அசராமல் பதிலளித்தார.

"அந்த கஷ்டம் உங்களுக்கு எதுக்கு... நானே பிடிச்சு தள்ளிவிடுறேன்..." என்று கூறிவிட்டு விறுவிறுவென்று விறைந்து, தான் படுக்கும் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
'இந்த வெட்டி வீராப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லே. எல்லா திமிரும் என்கிட்ட மட்டும் தான் போல...' என்று புலம்பினாலும், உடனே கவுன்டர் கொடுத்தது அவன் மனசாட்சி, 'அதையும் தான் ரசிக்கிறியே நீயும்.'என்று

காதல் கொண்ட மனமோ 'வேற என்ன பண்ணுவேன்!!! என் ஸ்ட்ரென்த்தும் அவ தான் என் வீக்னஸும் அவ தான். அவ என்ன செய்தாலும் எனக்கு பிடிக்குதே... ஹம்ம்...' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான். அவள் இல்லாமல் அங்கே அமர்ந்திருக்க முடியாமல்,

"தரு..." என்று அழைத்திட அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பொறுமையற்றவன் "தரு..." என்று அழைத்துக் கொண்டே எழுந்து அவள் அறைக்குள் நுழைந்தான்.

அங்கே படுக்கையில் கால்களை குறுக்கி முகத்தில் வலிகளோடு படுத்திருப்பவளைப் பார்க்க அத்தனையும் தூக்கி எறிந்துவிட்டு, 'உன் விருப்பம் போல் இரு... உன்னை இனி எந்த காரியத்திற்கும் கட்டாயப்படுத்தமாட்டேன்... உனக்குப் பிடித்ததை பிடித்த நேரத்தில் செய்...' என்று கூறி தன் அணைப்பில் வைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு.

இருந்தாலும் அவளை இப்படியே அவள் வழியில் விட்டோம் என்றாள், இருக்கிற மிச்சம் மீதி தைரியத்தையும் இழந்து என் பின்னால் ஒழிந்து கொள்ளும் கோழையாகிவிடுவாள் என்று நினைத்து கோபத்தை வரவழைத்துக் கொண்டு,

"இப்போ எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கிறே? நான் என்ன உன்னை தனியாவா செய்ய சொல்றேன். உனக்கு தொணைக்கு தான் அமி இருக்காங்க, அது போக லேடி போலிஸும் உங்களுக்கு சில என்கொயரிஸ்-க்கு ஹெல்ப் பண்ணுவாங்க... நான் தனியா சுராஜித் மூலமா உனக்கும் அமிக்கும் பாடிகார்ட்ஸ் அப்பாய்ன்ட் பண்ணிருக்கேன். இதுக்கு மேல உனக்கு இதை செய்றதுல என்ன கஷ்டம்..."

"இது எல்லாமே வெளி பாதுகாப்புக்கு தான். என் மனசுல இருக்குற வலிக்கும் வருத்தத்துக்கும் இல்லே... அதுவும் இல்லாம இப்போ தான் இன்டர்நெட் இருக்கே... அதுல பார்த்தாலே எல்லா இன்ஃபர்மேஷனும் தெரிஞ்சிடப் போகுது... அதை சொல்றதுக்கு எதுக்கு நாலு பேரை உக்கார வெச்சு தேவையில்லாத வேலை பார்க்கனும்..."

"என்னடீ பேசுற!!!... ஒருத்தர்கிட்ட 'உனக்கு அநியாயம் நடக்க நான் விடமாட்டேன், தைரியமா இரு...'னு சொன்னாலே அவங்க தன்னம்பிக்கையோடு ப்ரச்சனைய எதிர்த்து போராடுவாங்க... அந்த நம்பிக்கைய இந்த செல்போனும் இன்டர்நெட்டும் கொடுத்திடுமா!!! அது மட்டும் இல்லாம ஹரித்ராவுக்கு அநியாயம் நடக்கும் போதும் இதே இன்ட்டர்நெட் இருக்க தானே செய்தது. அவ ஏன் இதெல்லாம் தெரிஞ்சுக்காம போனா?"

"அவங்க ஃபேமிலி பேக்கரவுண்ட் அப்படி... அதுவும் இல்லாம அவளுக்கு ஸ்மார்ட் ஃபோன், இன்டர்நெட் யூஸ் பண்ணி அவ்ளோ பழக்கம் இல்லே..."

"இப்பவும் அந்த நிலைமை பல இடத்துல இருக்கு. அவங்களுக்காக தான் நாம இந்த டீம் ஸ்டார்ட் பண்ணுறோம்..."

"தாராளமா பண்ணுங்க... ஆனா என்னை விட்டுடுங்க..." என்று கூறி மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள்.

"நீ இன்னைக்கு ஆரம்பிச்சு வைக்கப்போற இந்த சேவை மையத்தைப் பார்த்தும், அதில் நீ மத்தவங்களுக்கு தரக்கூடிய தைரியத்தையும் கேட்டும் வளரக் கூடியது யாரோ நாலு பொண்ணுங்க இல்லே... நம்ம வெண்பா தான். அவளுடைய பள்ளிபருவத்தில் அவளே அவ ஃப்ரெண்ட்ஸுக்கு தைரியம் சொல்ற அளவுக்கு உன்னை பார்த்து பழகிப்பா... அது தான் நீ ஹரித்ராவுக்கு செய்யக் கூடிய பரிகாரம்... இதுக்கு மேல உன் விருப்பம்." என்று கூறி அறையிலிருந்து வெளியேறினான்.

"I can't" என்று மட்டும் குறுஞ்செய்தி தட்டச்சு செய்து அவன் எண்ணிற்கு அனுப்பினாள்.

முன்னறை சென்றிருந்தவன், அவள் அனுப்பிய செய்தியைப் படித்துவிட்டு கோபத்தை எதில் காண்பிப்பது என்று தெரியாமல் கையில் இருந்த திறன்பேசியை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டான். ஏதோ உடையும் சத்தம் கேட்டு திடுக்கிட்டவள், அவனின் கோபம் தான் இது என்று உணர்ந்து சத்தம் இல்லாமல் கண்ணீர்விட்டாள்.

கீழே இறங்கி வந்தவனைக் கண்ட வெண்பா, ஓடி வந்து அவனிடம் தாவிக் கொள்ள, தன் கோபம் மறைத்து குழத்தையுடன் குழந்தையாக மாறி விளையாட, மகனுக்கு காஃபி கலந்து வந்த பூங்கொடியின் முகத்திலும் மெல்லிய புன்னகை பரவியது.

"ராம் ப்பா... கொடி பாட்டி கூட சேந்து நானும் காபி போட்டேன்... நல்லாயிக்கா?"

"குட்டி ஏஞ்சல், கொடி பாட்டியை விட சூப்பரா காஃபி போட்டிருக்கிங்களே... என் அறிவுக்குட்டி" என்று கொஞ்சிட, குழந்தை சிரித்தாள் என்றால், அன்னை முறைத்தார்.

உடனே அன்னையைப் பார்த்து "சும்மா லுலுலாயிக்கி கொடி... பாப்பா ஃபீல் பண்ணுவா இல்லியா அதுக்கு தான்..." என்று பொய்யாக சமாதானம் செய்திட,

ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து அவன் கன்னத்தில் குத்தவது போல் இடித்திட, "யப்பா... என்னா இடி..." என்று கூறி தாடையை அசைத்து சரி செய்வது போல் செய்தான்.

"நேத்ரா இல்லாம போயிட்டா... உன் மூக்குல குத்துறதுக்கு" என்று பூங்கொடி கூறிய நொடி அவன் முகம் கோபத்தின் உருவாக மாறி, மீண்டும் இயல்புக்கு வந்தது.

"சரி ம்மா... நான் கிளம்புறேன்... பைய் டா பாப்பு... அப்பா நைட் வரதுக்கு லேட் ஆகும், நீ சமத்தா அம்மா கூட தூங்கனும்... சரியா? அம்மாவே பத்திரமா பார்த்துக்கோ ஓகே!!! பைய் ம்மா..." என்று இருவரிடமும் விடைபெற்றுச் சென்றான்.

மகனின் முகமாற்றத்திலும், பேச்சிலும் இருந்த மாற்றத்தை அறிந்து கொண்ட அன்னையவர், வெண்பாவை நேத்ராவின் அறைக்கு அனுப்பி வைத்தார்.

அறைக்குள் நுழைந்த வெண்பா, முன்னறையில் பல கீரல்களோடு தரையில் கிடந்த ராமின் திறன்பேசியை எடுத்துக் கொண்டு அன்னையைக் காணச் சென்றாள்.

"ம்மா... அப்பாவோட ஃபோன் ஒடஞ்சி போச்சு பாருங்க..." என்று கத்திக்கொண்டே படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

மகளின் குரல் கேட்டதும் அவசரமாக தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து அமரந்தாள். "ஒடஞ்சதுனால தான் அப்பா இங்கேயே போட்டுட்டு போயிட்டாங்க... நைட் வந்து சரி பண்ணிப்பாங்க... அதுவரை அம்மா பத்திரமா வெச்சிருக்கேன்..." என்று கூறி வாங்கி வைத்துக் கொண்டாள்.

குழந்தையின் முன்னால் தன் வேதனையைக் காண்பிக்க விரும்பாமல், எழுந்து சென்று முகம் கழுவி, மற்ற நாட்களைவிட கொஞ்சம் அதிகமாகவே கவனம் எடுத்து ஒப்பனை செய்து கொண்டாள். அப்படி இருந்தும் அவளின் சிவந்த விழிகளை ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

உடைந்த திறன்பேசியை அலுவலக அறையில் சென்று வைத்துவிட்டு வெண்பாவை அழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்.

வெண்பா கொடியிடம் சென்று "கொடி பாட்டி!!! அப்பா ஃபோன் ஒடஞ்சிருச்சு!!!" என்று கீழே வந்ததும் தன் வேலையை கச்சிதமாக செய்திட, அவரோ நேத்ராவைப் பார்த்தார். சந்தேகப்பட்டது போல் நேத்ராவின் விழிகளில் அவள் அழுதிருப்பது ஊர்ஜிதமாகிவிட, அவளுக்கும் தனக்குமாக காஃபி கலந்து தோட்டத்திற்கு எடுத்துக்கொண்டு, வெண்பாவை மீனாட்சியிடம் விட்டுவிட்டு நேத்ராவையும் அழைத்துச் சென்றார்.

"என்னடா? முதல் சண்டையா?" என்று காஃபி குடித்து முடித்து சிறிய நடைபயிற்சியுடன் வினவிட,

தன் சோகத்தையும் தாண்டி இயல்பாக பேச முயற்சித்தாள் நேத்ரா, "உங்களுக்கு ஒன்னு தெரியுமா ம்மா!!! நாங்க சண்டை போடாத நாட்களை விரல்விட்டு எண்ணிடலாம்" என்று கண்களை சிமிட்டிக் கூறினார்.

அவளின் பதிலில் ஒரு நொடி பிரமித்து பின் சிரித்துக் கொண்டே வினவினார். "பாத்தா அப்படி தெரியலேயே, காலைல அவன் சாப்பிடும் போது பார்த்து பார்த்து நீ பக்கத்துல இருந்து பரிமாறுறதும்... அவன் தான் சாப்பிட்ட தட்டிலேயே உனக்கு கொஞ்சம் சாப்பாடு ஒதுக்கி வைக்கிறதும்... மதியம் அவன் வீட்டுக்கு வரமுடியாத நாள்ல எல்லாரும் சாப்பிட்டாச்சானு மறைமுகமா உன்னை விசாரிக்க பத்துமுறை ஃபோன் பண்ணுறதும்... ராத்திரி அவன் வர தாமதம் ஆகிடுச்சுனா நீ வாசலுக்கும் வீட்டுக்கும் அலையிறதும்... அப்படி ஒரு காதலோடேல வீட்டுக்குள்ள சுத்திட்டு இருந்திங்க!!!.." என்றிட,

யாருக்கும் தெரியாது என்று நினைத்த இவர்கள் இருவரின் ரகசியத்தை அப்படமாக உரைத்திட, பெண்ணவளுக்கு பதில் பேச நா எழவில்லை...

"அது ம்மா... அது வந்து..." என்று அதற்கான விளக்கம் கூற வந்தவள், முழுதும் நனைந்தபின் முக்காடு எதற்கு என்று நினைத்து, "யாரும் கவனிக்கலேனு நெனச்சேன்." என்று அமைதியாக தலைகுனிந்து கொண்டே கூறினாள்.

"மத்தவங்க கவனிச்சாங்கலானு எனக்குத் தெரியாது. எனக்கு என் பிள்ளைங்க வாழ்க்கை இல்லையா!!! அதான் ஒருத்தருக்கு ஒருத்தர், இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கல்ல கூட காதலை பகிர்ந்துக்கிறதைப் பார்த்து சந்தோஷபட்டுப்பேன். இதோ இப்போ கூட வெண்பாகிட்ட அம்மாவை பார்த்துக்கோனு சொல்லிட்டுப் போயிருக்கான். அவன் பேச்சைக் கேட்டா யாரு குழந்தை யாரு அம்மானு ஒரு நிமிஷம் சந்தேகம் வந்திடும்..." என்று முகத்தில் புன்னகை தவழ சந்தோஷமாகக் கூறினார்.

இதே வார்த்தைகளை தான் மிதுன்யாவிற்கு கூறியது நினைவில் வந்திட, 'ஒருவேளை தன்னை அனுபவமற்ற குழந்தையாகத் தான் நினைக்கிறானோ!!! அப்படி நினைப்பவன் எதற்கு தனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பைத் தர வேண்டும்?' என்று யோசிக்கத் தொடங்கினாள்.

குழப்பமான சூழலில் அவள் நாடிடும் விமலாவின் மடியை இப்போதும் நாடிட, அதனை கொடியிடம் வினவினாள். "அம்மா நான் கொஞ்ச நேரம் உங்க மடில படுத்துக்கட்டா?"

"ச்சீ கழுதை... இதையெல்லாம் கேட்டா செய்வாங்க... வா... வந்து படு..." என்று கார்டனில் அமைக்கப்பட்டிருந்த மணிமாடம் போன்ற அமைப்பில் அமர்ந்து அவளை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டார்.

சிறிது நேரம் அவர் மடியில் படுத்திருந்தவள் கொஞ்சம் தெளிவு பெற்றிட, அவளின் முகத்தில் அதனைக் கண்டு கொண்ட பூங்கொடி, பேச ஆரம்பித்தார்,

"நேத்ரா நான் சொன்னேன்றதுக்காக மட்டும் தான் நீ என்னை அம்மானு கூப்பிடுறேயா?"

"ச்சே... ச்சே... எனக்கு உங்களை அம்மா கூப்பிடுறது பிடிச்சிருக்கு. ஆனால் இத்தனை வர்ஷம் என்னை வளர்த்த அத்தையும், மாமாவும் வருத்தப்படக் கூடாதுனு தான் நெனப்பேன். அஞ்சு வயசு வரைக்கும் அத்தை, மாமானு அழைச்சிட்டு அவங்களை அம்மா, அப்பானு மாத்திக்க முடியலே... ஆனால் அவங்க என்னை எல்லார்கிட்டேயும் 'என் பொண்ணு'னு தான் சொல்லிக்குவாங்க... உங்களை அம்மானு கூப்பிட சொல்லும் போது ரெம்ப ஹாப்பியா இருந்தது."

"அப்போ உனக்கு என்ன மனகஷ்டம் வந்தாலும் என்கிட்ட வெளிப்படையா சொல்லனும்... இப்படி ரூமுக்குள்ள உக்காந்து அழுதுட்டு இருக்கக் கூடாது சரியா?" என்று அவர் கேட்டபோது கட்டியணைத்துக் கொள்ளத் தோன்றியது அவளுக்கு.

பூங்கொடியின் பேச்சு இன்னுமே அவளை யோசிக்க வைத்திட, 'ராம் கூறியது போல் உனக்கு நான் இருக்கிறேன் என்ற வார்த்தைகள் எவ்வளவு இதமாக இருக்கிறது, என்று நினைத்த கையோடு, கொடியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

"அம்மா வாங்க உள்ளே போகலாம்..." என்று முகத்தில் தெளிவோடு, குரலில் துள்ளளோடு அழைத்துச் சென்றாள். அதன் பின் இரவு உணவை சமைத்துவிட்டு, வெண்பாவிற்கு ஊட்டிவிட்டாள். இரவு பாரியும், புகழும் பதினோரு மணி போல் இல்லம் திரும்பிட, அவர்கள் அனைவரும் உறங்கச் செல்லும் வரை காத்திருந்து அதன் பின் தன் அறைக்கு வெண்பாவை அழைத்துக் கொண்டு சென்றாள்.

வெண்பா எப்போதும் ராமின் படுக்கையில் அவனிடம் கதை கேட்டுக்கொண்டே உறங்கி பழகியதால் அதே பழக்கத்தில் தன் அன்னையையும் அழைத்துக் கொண்டு ராமின் படுக்கையில் படுத்துக்கொண்டே கதை கேட்டபடி உறங்கியும் போனாள்.

குழந்தை உறங்கியப் பின் அலுவலக அறைக்குச் சென்று அவன் பாதி நிரப்பி வைத்திருந்த ஃபார்மில் மீதியை நிரப்பி கையெழுத்திட்டு, அதனோடு அவனின் உடைந்த திறன்பேசியையும் எடுத்துக்கொண்டு முன்னறைக்கு வந்து அங்கே கிடந்த டேபிலில் வைத்துவிட்டு அப்படியே சோஃபாவில் படுத்துக்கொண்டாள். ஏனோ இன்று அவளுக்கு தன்னறைக்குச் சென்று தூங்க மனமில்லை. அதனால் தான் குழந்தையையும் ராமின் படுக்கையிலேயே படுக்க வைத்திருந்தாள்.

நல்லிரவு தாண்டியே வீட்டிற்கு வந்த ராம், கையெழுத்திட்ட பேப்பரோடு சோஃபாவில் உறங்குபவளைப் பார்த்து, 'உன்னை சம்மதிக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியது இருக்கு பார்... கடைசியா என் ஃபோன் போச்சு' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, உடைமாற்றி வந்தவன், அவளை தன் கையில் அள்ளிக்கொண்டு தன் படுக்கையில் படுக்க வைத்துக் கொண்டான்.

-ஊடல் கூடும்.​