• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
சொந்தம் 5

ராம் தன் மனதின் போக்கை கண்டறிய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அதே நேரம் நேத்ரா அபிக்கு அழைப்புவிடுத்து என்ன நேர்ந்தது என்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.

"ராம் பையா தான் ஏர்போர்ட்ல ட்ராப் செய்தாங்க. அண்ணி இமிக்ரேஸன் போறவரைக்கும் வெய்ட் பண்ணி பார்த்துட்டு தான் ஆபிஸ் போனாங்கலாம்.
அண்ணி ஃபோன் ஏர்போர்ட்டில் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதற்குப் பின் இன்னும் ஆன் செய்யப்படலே. அன்றைக்கு இந்தியா முழுதும் பயணித்த பயணிகள் பட்டியல் முழுதுமாக சரிபார்த்துட்டு இருக்காங்க.
சிசிடிவி கேமரா புட்டேஜ்ல அண்ணி யாரோ ஒரு ஏர்லைன் ஹெல்ப்பர்கிட்ட பேசிட்டு எழுந்து போற மாதிரி இருக்கு, அது யாருனு இன்னும் கண்டுபிடிக்கலே?
அவன் தான் ஏதோ சொல்லி அண்ணிய கூட்டிட்டுப் போறான். அவன் எந்த ஏர்லைன்ஸ்லயும் வொர்க் பண்ணனு கண்டுபிடிச்சிட்டாங்க. அதனால அவனை இந்தியா முழுதும் தேட ஏற்பாடு செய்திருக்கோம்.
அவன் கிடைச்சிட்டா அண்ணி இருக்கிற இடம் தெர்ஞ்சிடும். அவன் மட்டும் கெடைக்கட்டும்... இருக்கு அவனுக்கு...." என்று அவன் பற்களை கடித்துக் கொண்டும் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டும் பேசுவதை அவனின் குரலிலேயே அவளால் உணரமுடிந்தது .

அப்போது அங்கே வந்த ராம் அபியிடம்

"மிதுன் கிடைச்சிட்டா சோட்டூ. தமிழ்நாட்டில் மதுரை பக்கத்துல அவ போன் சிங்னல் ரிசிவ் பண்ணிருக்காங்க. நானும் சுராஜித்தும் போய் அழச்சிட்டு வரப்போறோம். நீயும் ஆரவும் இன்டஸ்ட்ரிய பார்த்துக்கோங்க" என்று சந்தோஷமாகக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டான்.

"பையா நானும் வரேன்." என்று கூறிக் கொண்டே ராமின் பின்னாள் விரைந்தான் அபி.

மிதுன்யா கிடைத்த சந்தோஷத்தில் மொபைலில் பேசிக் கொண்டிருந்த நேத்ராவிடம் "உங்ககிட்ட அப்பறம் பேசுறேன் நேத்ரா" என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

நேத்ராவின் பெயரைக் கேட்டதும் ராம் அடுத்த அடி எடுத்துவைக்க மறந்தவனாய் அப்படியே நின்றுவிட்டான். பின்னால் வந்து கொண்டிருந்த அபி அவன் மேல் மோதி நிற்க,

"என்ன பையா நின்னுடிங்க... வாங்க போலாம்" என்று கூறி முன்னே சென்றான்.
ராமின் மனதில் ஏதோ குறுகுறுப்புத் தோன்ற இதழோரப் புன்னகையை உதிர்த்துவிட்டு அபியைப் பின் தொடர்ந்தான்.

வீட்டிற்கு செல்லும் வழியில் நேத்ரா ஏன் அழைத்தாள் என்று கேட்டு அறிந்து கொண்ட ராமிற்கு மேலும் மேலும் புன்னகை விரிந்தது. என்னதான் தன்னிடம் கோபமாக பேசியிருந்தாலும் மிதுன்யாவிற்கு என்னவாயிற்று என்று அக்கறையாக விசாரித்ததை நினைத்து நினைத்து மகிழ்ந்தான்.

மிதுன்யா இருக்கும் இடம் தெரிந்துவிட்டது என்று வீட்டில் உள்ளோருக்குத் தெரிவிக்க அனைவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி.

மிதுன்யாவின் ஆச்சி மலையரசி இரண்டு நாட்களாக காஞ்சி காமாட்சி அம்மன் படத்தின் காலடியில் அமர்ந்து, பூஜையறையே கதி என இறைவன் துதிபாடி அழுது கரைந்தவர், பேத்தி கிடைத்துவிட்டாள் என்ற சேதியில் புதுத்தெம்பு பெற்றார்.

குந்தவியோ பூஜையறைக்குச் சென்று விளக்கு ஏற்றி கடவுளுக்கு ஆராதனை செய்து வழிபட்டு இறைவன் பாதம் சரணடைந்தார்.

பூங்கொடியோ தன் மகனை ஆரத்தழுவி "சீக்கிரம் என் மருமகளை கூட்டிட்டு வாடா கண்ணா" என்றார்.

லட்சுமணன் மட்டும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போனார். தன் கோபத்தையும் வைராக்கியத்தையும் விடுத்து பேரனிடம் தானாகச் சென்று பேசினார்.

"ராம் கண்ணா... சம்மந்தமே இல்லாம நம்ம மிதுன்குட்டி ஏன்டா தமிழ்நாடு போனாள்?"
தன் மனதில் தோன்றிய அதே சந்தேகத்தை தாத்தாவும் வினவ ஒரு நொடி அவரை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு

"ஒன்னு இல்ல தாத்தா. அவ லாஸ்ட் மினிட் கன்ஃபியூஷன்ல ஃப்ளைட் மாரி ஏறிடுப்பானு நினைக்கிறேன். நீங்க கவலைப்படாதிங்க. நான் நம்ம வீட்டுக்கு அழச்சிட்டு வந்திடுறேன்." என்றான் அவர் பயத்தைப் போக்கும் விதமாக.

"இல்ல டா கண்ணா. உனக்கும் இந்த சந்தேகம் கண்டிப்பா வந்திருக்கும். நிச்சயமா இது கிட்னாப் தான். அவளுக்கு ஏதும் அசம்பாவிதம் நடந்திருக்காதுல?." என்று தளுதளுத்தக் குரலில் வினவிய தாத்தாவை கண்டு துடித்தவன்,

"அப்படி எதுவும் இருக்காது தாத்தா. நீங்க தேவையில்லாம மனசை கஷ்ட படுத்திக்காதிங்க. நான் அவளை அழச்சிட்டு வந்து உங்க பேத்தியாவே உங்க முன்னாடி நிறுத்துறேன்." என்று தன் தாத்தாவை தேற்றினான்.

ஆனால் கடந்த இரண்டு தினங்களாக அவனைத் தேற்றுவாரின்றி துடிதுடித்து தான் போனான். இது நேத்ராவின் வேலையாக இருக்குமோ என நினைத்து இனம்புரியாத வருத்தத்துடன் சுற்றித் திரிந்தவன், அவளின் பேச்சில் நிச்சயம் இப்படி ஒரு காரியம் அவள் செய்திடமாட்டாள் என நூறு சதவிகிதம் நம்பினான்.

அதன் விளைவாக இப்போதும் இந்த கடத்தலுக்கும் நேத்ராவிற்கும் சம்மந்தம் இருக்கக் கூடும் என்று அவனுக்கு துளியளவு கூட சந்தேகம் ஏற்படவில்லை. மனம் முழுதும் மிதுன்யா பத்திரமாக இருப்பாளா? இல்லயா? என்று கலங்கிய மனநிலையோடு தமிழ் நாடு நோக்கி பயணித்தான்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

திருமணம் முடிந்த கையோடு மிதுன்யாவை மதுரைக்கு அழைத்துச் சென்றான் அவள் கணவனாகப்பட்டவன்.

மணக்கோலத்தில் தன் மகனைக் கண்ட பொற்றோருக்கோ என்ன? ஏது? என்று எதுவும் புரிந்திடவில்லை.

தன் மகனின் முன்கோபம் பற்றி தெரிந்திருந்த போதும் யோசிக்காமல் எதுவும் செய்திடமாட்டான் என முழுமையாக அவனை நம்பியிருந்தார் அவனது தந்தை கங்காதரன்.

இந்த திருமணத்திற்குப் பின்னாலும் சரியான காரணம் இருக்கும் என்று நம்பினார், அவரின் நம்பிக்கை ஆட்டம் காணப் போவதை அறியாமல்.

"என்ன பவன் இது? நீ என்ன காரியம் செய்திருக்கேனு தெரியுதா?" என அதிர்ச்சியோடு வினவினார் அவன் தாய் விமலா.

"அம்மா. ப்ளீஸ் ஈவ்னிங் சிவா வரட்டும்... அப்பறம் பேசிக்கலாம்" என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசுவதற்கு இல்லை என்பது போல் மாடியில் தனதறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டான்.

விமலா தான் குழம்பிப் போனார். பெற்றோரிடம் கூட சொல்லாமல் கல்யாணம் செய்து கொள்ளும் அளவிற்கு அவனுக்கு இக்கட்டான சூழ்நிலை வந்ததா என்ன!!!. அப்படியே இருந்தாலும் கல்யாணம் செய்து கூட்டிவந்தவளை வாசலிலேயே நிற்க வைத்துவிட்டு அவனறைக்குச் சென்று தாளிட்டுக் கொண்டால் என்ன அர்த்தம்!!! வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்டானா!!! அப்படி ஒரு திருமணத்தின் அவசியம் தான் என்ன? இதை யாரிடம் தான் கேட்பது? என்று பலவாறு தனக்குள்ளேயே யோசித்து கலங்கி நின்றிருந்தார்.

"அந்த பொண்ணை ஆரத்தி எடுத்து உள்ளே அழச்சிட்டுப் போ விமலா" என்ற கங்காதரனின் கட்டளையில் சுயவுணர்வு பெற்ற விமலா மிதுன்யாவை ஆரத்தி எடுத்து தங்களறைக்கு அழைத்துச் சென்றார்.

தன் குழப்பத்திற்கான விடை இந்தப் பெண்ணிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் "உன் பெயர் என்ன? பவனை உனக்கு எப்படித் தெரியும்?" என்று மிதுன்யாவிடம் பேச்சுக் கொடுத்தார்.

'மனசாட்சியற்ற மிருகத்தின் அன்னை' என்பது போல் ஒரு ஏளன ஓரப்பார்வையை செலுத்தியவள், தன் அன்னையின் வயதை ஒத்த பெண்மணியை அவமதிக்க விரும்பாமல் சிறிது நேரம் கழித்து வாய் திறந்தாள்.

"என் பெயர் மிதுன்யா. உங்க பையன் பெயர் பவன் என்பதே எனக்கு இப்போது தான் தெரியும்".

மிதுன்யாவின் பதிலில் மேலும் அதிர்ச்சியடைந்த விமலா 'என்ன பெண்ணிவள். யார்? எவர்? என்றே தெரியாத ஒருவனை நம்பி எப்படி கழுத்தை நீட்டினாள்!!! அப்படி முன்பின் அறியாதவனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் என்ன வந்தது இவளுக்கு?' என்று மீண்டும் யோசனையில் ஆழ்ந்தவருக்கு மேலும் சில கேள்விகள் எழுந்தனவே ஒழிய பதில் ஏதும் கிடைக்கவில்லை. அதற்கு மேல் எதுவும் கேட்கத் தோன்றாமல், பொலிவிழந்த முகத்துடன்,

"நீ ரெஸ்ட் எடும்மா" என்று கூறிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினார்.

மிதுன்யா கூறியதை தன் கணவரிடம் சொல்ல கங்காதரனோ,

"என்ன விமலா நம்ம புள்ள லவ் மேரேஜ் செய்து கூட்டிவந்திருக்கான்னு நினைச்சியா?... அவனோட காதலுக்கு நாம சம்மதம் தெரிவிப்போமுனு அவனுக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது நம்மகிட்ட சொல்லாம கல்யாணம் செய்திருக்கான்னா கண்டிப்பா இது காதல் கல்யாணம் இல்லே.
இது நாள் வரைக்கும் கல்யாணப் பேச்சு எடுத்தாலே எரிந்து விழுபவன் திடீர்னு ஒரு பொண்ணை கல்யாணம் செய்து கூட்டிவந்திருக்கான்னா அதில் ஏதோ பிரச்சனை இருக்குனு உனக்கு தோனலேயா? இனி என்ன நடந்தாலும் சரி இந்த பொண்ணு தான் உன் மருமக, அதை மட்டும் மறந்துடாதே..." என்று அழுத்தமாகவே கூறினார்.

மாலை கீழே இறங்கி வந்த பவன் ஹால் ஷோஃபாவில் அமர்ந்திருந்த தன் தந்தையிடம் பேசத் துணிவின்றி, சமையலறையில் இருக்கும் தன் அன்னையிடம் சென்றான்.

"அம்மா... அந்த பொண்ணு எங்க?"
அவனின் கேள்வியில் திரும்பி நின்று அவனை ஏறஇறங்க பார்த்த விமலா,

"உனக்காவது அந்த பொண்ணு பேர் தெரியுமா? இல்லே நான் தான் உனக்கும் சொல்லனுமா?" என்று தன் ஆதங்கத்தை குத்தல் பேச்சில் காண்பித்தார்.

தான் மேலே சென்றப்பின் என்ன நிகழ்ந்திருக்கும் என்று ஊகித்தவன்,

"அம்மா ப்ளீஸ்... நான் தான் ஈவ்னிங் சிவா வரவும் எல்லாம் விவரமா சொல்றேன்னு சொன்னேல... அப்பறம் என்ன ம்மா?... அநேகமா அந்த பொண்ணு..." என்று ஆரம்பித்து, தன் அன்னையை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு

"மிதுன்யா வீட்டில் இருந்து நாளைக்கு வருவாங்கனு நெனைக்கிறேன்." என்று கூறிவிட்டு முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.

அவனை ஆழ்ந்து நோக்கிய விமலாவிற்கு உணர்ச்சிகளற்ற தன் மகனின் முகத்தில் ஒன்றும் கண்டறிந்திட முடியாவில்லை.

"எங்க ரூம்ல தான் இருக்கா... என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியாது. ஆனால் அவளுக்கும் விருப்பம் இல்லாமத் தான் இந்த கல்யாணம் நடந்திருக்குனு நினைக்கிறேன். அவளை மேலும் மேலும் கஷ்டபடுத்தாம அவளுக்கும் மனசு இருக்குன்றதைப் புரிஞ்சு நடந்துக்கோ " என்று தன் மகன் வழிமாறிச் செல்கிறானோ என்ற பயத்தில் பட்டும்படாமலும் அறிவுரை வழங்கினார்.

அதனைப் புரிந்து கொள்ள மறுத்த மூளையில், முன்கோபம் தலைதூக்க

"அவளை ஏன் உங்க ரூம்ல தங்க வெச்சிங்க? கெஸ்ட் ரூம் சும்மா தானே இருக்கு. அங்க தங்க சொல்ல வேண்டிதானே!!!"

"நீ அவளை இந்த வீட்டு கெஸ்ட்டா கூட்டிட்டு வந்திருந்தா அப்படி செய்திருக்கலாம். ஞாயப்படி அவளை உன் ரூமுக்கு தான் அனுப்பி வெச்சிருக்கனும்..." என்றிட,

பவன் ஏதும் பேசாமல் தன் அன்னையை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றவன் முதலில் கண்டது, தலையணையை முதுகிற்குக் கொடுத்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் மூடிய இமைகளின் வழியே வடிந்தோடிய கண்ணீர் கோடுகளைத் தான்.

தொண்டையை செருமி தான் வந்திருப்பதை அவளுக்கு உணர்த்தினான். விழிகளைத் திறந்து பார்த்தவள் அவனைப் பார்ப்பதே பாவம் என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"நீ இருக்கும் இடத்தை உன் வீட்டுக்குத் தெரியபடுத்து. நாளை அவர்களை வரச்சொல்." என்றான் கட்டளைத் தோரணையில்.

"இந்நேரம் நான் இருக்கும் இடம் கண்டுபிடிச்சிருப்பாங்க. கூடிய சீக்கிரம் என்னோட ராம் மச்சான் வந்திடுவாங்க" என்று எங்கோ பார்த்து அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே அவளது மொபைல் சிணுங்கியது.

திரையில் தெரிந்த ராமின் முகத்தைக் கண்டவளுக்கு மேலும் அழுகை பொங்கி எழ, பவன் முன் அழுக விரும்பாமல் ராமின் அழைப்பை கட் செய்து தான் இருக்கும் லொக்கேஷனை ராமிற்கு சேர் செய்தாள்.

முகத்தைத் திருப்பிக் கொண்டவளிடம் என்ன பேசுவது என்று அங்கிருந்து வெளியேறினான் பவன்.

அவள் கூறியது போலவே அடுத்த அரைமணிநேரத்தில் அங்கு வந்து நின்றான் ராம்.
சுராஜித்தின் பதவி பின்புலத்தைப் பயன்படுத்தி தனி விமானம் ஏற்பாடு செய்து மூவரும் மதுரை வந்து இறங்கினர். இறங்கியவுடனே தன் மொபைலை ஆன் செய்தவனுக்கு மிதுன்யாவின் அழைப்புகள் மிஸ்ட் கால் லிஸ்ட்டில் காண்பிக்கப்பட உடனடியாக அழைத்தான், ஆனால் அழைப்புத் துண்டிக்கப்பட்டு, இருக்கும் இடம் பகிரப்பட, உடனடியாக டாக்ஸியில் அவ்விடம் விரைந்தனர்.

மிதுன்யாவிடம் பேசமுடியாமல் போனதும் ராமின் தைரியம் காணாமல் போனது போல் உணர்ந்தான். இது கடத்தல் தான் என ஊர்ஜிதமாகிய நிலையில் அவளை துன்புறுத்தி சித்ரவதை செய்திருப்பார்களோ, உயிருக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்திருக்குமோ என யோசித்து நிலைகுலைந்து போனான்.

ஊருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத தெருவில் அந்த வீட்டு வெளிச்சுவற்றின் அருகே அவர்களின் டாக்ஸி வந்து நிற்க, அந்த இடத்தைக் கண்ட ராம், மிதுன்யாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என்ற உள்ளுணர்வில் சிறிது நிம்மதி அடைந்தான்...

அப்போது அவர்களைக் கடந்து சென்ற கார், திறந்த கேட்டின் வழியாக உள்ளே சென்றிட, ராம் வீட்டை நோட்டமிட்டான். வீட்டை மேய்ந்த அவன் கண்கள் காரிலிருந்து இறங்கிய நேத்ராவைக் கண்டு அதிர்ச்சியுற்றன.
*********

அபியின் அழைப்பு துண்டிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நேத்ராவிற்கு மதுரை வருவதற்கு ப்ளைட் டிக்கெட் மெயிலில் வந்திருந்தது. அடுத்த நிமிடமே ஃபோனை எடுத்து அழைப்பு விடுத்தாள்.
ஆனால் யாரும் எடுத்தபாடில்லை. ஏதோ தவறாக நடப்பது போல் தோன்றிட அவளும் விரைந்து புறப்பட்டாள்.

ஏற்கனவே மிதுன்யா தமிழ்நாட்டில் இருக்கிறாள் என ராம் கூறியது இவள் காதுகளுக்கும் கேட்டிருக்க, இப்போது தன் குடும்பத்தார் தன்னை அவசரமாக அழைத்திட அவள் மனதில் பயப் பந்து உருள ஆரம்பித்தது.

தன் வீட்டு வாசலில் ராமைக் கண்டதும் அவளுக்கு அனைத்தும் புரிந்துவிட்டது. அவன் தன்னை முறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு சிலையாக நின்றாள் சிவநேத்ரா.

கோபம் கொப்பளிக்க அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ராமின் மனதிலோ 'இது இவளது வீடா?' என்ற கேள்வி தோன்றிட அவனின் கோபம் மேலும் அதிகரித்தது.
காலையில் அபியுடனான அவளின் விசாரிப்பு அக்கறையாகத் தெரிந்தது, இப்போதோ அக்கறை போல் நடித்து தன்னை நோட்டம் இட்டிருக்கிறாள் என்று வன்மமாக மாறிப் போனது.

அவளைக் கொன்றுவிடும் வெறியோடு அவளின் அருகே சென்ற ராமின் முன் முறைப்புடனும் விறைப்புடனும் வந்து நின்றான் ஒரு புதியவன்.

-ஊடல் கூடும்.​
 
Top