• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
காலைப்பொழுதின் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த சமையலறையில் ஒருபுறம் மீனாட்சி வெண்பொங்கலை நெய்யிட்டு, முந்திரி, மிளகு, சீரகத்துடன் தாளித்துக் கொண்டிருக்க, கொடி அடுப்பிலருந்த சாம்பாரில் காய்கறிகளைக் கலந்து, வீட்டில் அறைத்த பொடியோடு, புளிக்கு பதிலாக மாபொடியைச் சேர்த்து மனமனக்கும் சாம்பாரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

நேத்ரா மிக்ஸியில் தேங்காய் துவையல் அறைத்துக் கொண்டிருக்க, சமையலறையின் இன்டர்காம் ஒலித்தது. எடுத்து காதில் வைத்த பூங்கொடி,

"குட்மார்னிங் ராம் கண்ணா... உன் பொண்டாட்டி தானே இதோ அனுப்பி வைக்கிறேன்." என்று எடுத்த எடுப்பிலேயே பதில் கூறிட, மறுமுனையில் இருந்தவன் பேச தேவையில்லாமல் போனது.

பூங்கொடியின் பேச்சைக் கேட்டு, மீனாட்சி சிரித்திட, உடன் இணைந்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த பணியாளும் சிரித்தார். நேத்ராவோ தன்னவனை நினைத்து நொந்து தலையில் அடித்துக் கொண்டாள்.

"உங்க ரெண்டு பேரையும் என்ன செய்யிறதுனே தெரியலே... உன்னை அவன் ஆபிஸ் போனப்பின்னாடி அடுப்படி பக்கம் வானு சொன்னா நீ கேட்கமாட்டேங்கிற. அவனாவது ஒருநாளாவது இந்த இன்டர்காம் அழைப்புக்கு லீவ் கொடுப்பானு பாத்தா அதுவும் இல்லே..." என்று மீனாட்சி கூறிட,

"நாளைல இருந்து உங்க ரெண்டு பேரையும் சமைக்கவிட்டுட்டு நானும், மீனாவும் நல்லா படுத்து ரெஸ்ட் எடுக்கப் போறோம்..." என்று பூங்கொடி கோபம் போல் கூறினாலும், முகத்தில் புன்னகையே நிறைந்திருந்தது.

"அக்கா... அப்பறம் காலை டிஃபனுக்கு பதிலா மதிய சாப்பாடும், லன்ச்சுக்கு பதிலா ஈவ்னிங் ஸ்நாக்ஸூம் தான் ரெடியாகும்" என்றார் மீனாட்சி.

"மீனா அது ரெடியாகுறதே பெரிய விஷயம்" என்று இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் நேத்ராவையும், ராமையும் கலாய்க்க,,

நேத்ராவோ அறைத்துக் கொண்டிருந்த துவையலை மிக்ஸி ஜாரிலேயே விட்டுவிட்டு கைகழுவிக் கொண்டு கொடியின் முன் வந்து நின்றவள் அவரின் சேலையில் கையைத் துடைத்துக் கொண்டே,

"அவர் கூப்பிட்டா, அவ வேலை பாத்துட்டு இருக்கா... இப்போ அனுப்ப முடியாதுனு சொல்லி சத்தம் போட வேண்டியது தானே... அவர் கூப்பிட்டாராம் இவங்க அனுப்பி வைக்கிறாங்கலாம்..." என்று கூறிவிட்டு அடுக்களையிலிருந்து வெளியேறினாள்.

மீனாட்சி கண்ஜாடையில் மிக்ஸியைக் காண்பித்திட,

"அறைச்ச துவையலைக் கூட பாத்திரத்தில் மாத்தாம அப்படியே வெச்சிட்டுப் போறா... அவ்ளோ அவசரம்... இதுல ஏதோ வேண்டா வெறுப்பா போறது மாதிரி சீன் போடுறதை பார்..." என்ற போதும் புன்னகை மாறாமல் அவள் பாதியில் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தார்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், ராம் உடைமாற்றும் அறையில் இருந்து எட்டிப் பார்க்க, அவனின் வதனியவள் மூக்கு விடைக்க அவனை முறைத்தவாறு,

"இப்போ எதுக்கு வர சொன்னிங்க?" என்று கேட்டுக் கொண்டே அவன் அருகே வந்து நின்றிட,

அவனோ அப்போது தான் குளித்து முடித்து ஈரத்தலையோடு நேத்ராவிற்காக காத்திருந்தவன், அவளுக்கு எந்த பதிலும் கூறாமல் தன்னவளின் கோபத்தை ரசித்தவாறு அவளின் சேலை தலைப்பை எடுத்து தன் தலையைத் துடைக்கத் தொடங்கினான்.

"வர வர ரெம்ப அநியாயம் பண்ணுறிங்க ராம். உங்ககிட்ட நல்ல விஷயம் செய்தா பாராட்டமாட்டிங்களானு கேட்டது தப்பா போச்சு... இரண்டு வாரத்துக்கு முன்னாடி என்ன சமைக்கிற? கொழம்புல உப்பு இல்லே, காய்ல காரம் இல்லேனு திட்டிட்டு உங்க ஸ்டைல்ல பனிஷ் பண்ணினிங்க...

போனவாரம் என்னடானா, ஆஹா!!! ஓஹோ!!! ஃபஸ்ட் க்லாஸ் சமையல்னு ஒரே பாராட்டு மழை தான். முந்தாநாள் டை ஒழுங்கா ஐயர்ன் பண்ணைலேனு பனிஷ்மன்ட்... நேத்து எல்லாம் பர்ஃபெக்டா ஐயர்ன் பண்ணி வெச்சுட்டியேனு பாராட்டு...

இதெல்லாம் பத்தாதுனு இதை எல்லாம் செய்றதுக்கு ஒரு இன்டர்காம் கால் வேற... உங்களால என் மானமே போகுது... இன்னும் பொம்மி ஒருத்தி தான் என்னை கிண்டல் பண்ணலே..." என்று திட்டிக்கொண்டே மொடாவை இழுத்து அவனை அதில் அமர்த்தி தலை துவட்டிக் கொண்டிருந்தாள்.

அவள் கையைத் தட்டிவிட்டு "சரி தான் போடி..." என்று கூறி எழுந்து செல்ல, நின்ற இடத்தில் அப்படியே நின்றபடி கைகளைக் கட்டிக் கொண்டு அவனைப் பார்த்திருந்தாள் அவன் அன்பி.

தன் பின்னால் வந்து தன்னை சமாதானம் செய்வாள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவன் அவள் வரவில்லை என்றவுடன், திரும்பிப் பார்த்திட அதற்காகவே காத்திருந்தது போல்,

"போறேன்... நீங்க சொல்லலேனாலும் நாளைக்கு மதுரைக்குப் போகத்தான் போறேன்... நியாபகம் இருக்கட்டும்... நாளைக்கு இன்டர்காம்ல யாரை கூப்பிடுறிங்கனு பாக்குறேன்..." என்று கூறி திரும்பிட, இரண்டே எட்டில் அவளருகே வந்து கையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

"அதான் தெரியுதுல... பின்னே ஏன்டி பிகு பண்ணிக்கிறே!!!" என்று கடிந்து கொண்டு சற்று நேரம் அவளின் வாசத்தில் கரைந்து நின்றிருந்தான்.

"தரு... நீ கண்டிப்பா போகனுமா!!!" என்று அவளை அனுப்பி வைக்க விருப்பம் இன்றி வினவினான்.

அவனின் கேள்வியில் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.

"சரி... நான் தான் போக சொன்னேன். அதுக்காக இப்போ வருத்தப்படுறேன் போதுமா?" என்று மீண்டும் சிடுசிடுத்தாலும், அவளின் பேசாத் திமிரை ரசித்தான்.

மிதுன்யாவிற்கு ஐந்தாம் மாதம் தொடங்கியிருப்பதால் அவளைக் காண குந்தவி, சுஷேணுடன் நேத்ரா மற்றும் வெண்பாவை அனுப்ப முடிவு செய்திருந்தான். நேத்ராவிடம் இந்த வீட்டு மூத்த மருமகளாக தன் கடமையை செய்துவிட்டு, அந்த வீட்டுச் செல்லப் பிள்ளையாக ஒருவாரம் தங்கியிருந்து வருமாறு கூறியிருந்தான்.

நேத்ரா பலமுறை கூறிவிட்டாள். இருவரும் சேர்ந்து செல்வோம் மூன்று நாள் தங்கியிருந்துவிட்டு திரும்பி விடுவோம் என்று. அவனோ பிடிவாதமாக தன்னால் வரமுடியாது என்று கூறி அவளை மட்டும் சென்றுவரச் சொன்னான்.

"மாமா..."

"இப்போ எப்படி ஐஸ் வெச்சாலும் என்னால உன் கூட மதுரைக்கு வரமுடியாது..." என்றிட பெண்ணவள் அவனை தள்ளிவிட்டு ட்ரெஸிங் டேபிலில் சாய்ந்து நின்றாள்.

மெல்லி சிரிப்புடன் "சரி என்ன சொல்ல வந்த சொல்லு..." என்று கேட்டபடி அவன் அலுவலகம் தயாராகிக் கொண்டிருந்தான்.

"ஒன்னுயில்லே..." என்று அவள் முறுக்கிக் கொள்ள, அவளின் சோர்ந்த முகத்தைக் கண்டு அவன் மனமும் சுணங்கிட,

"இன்னைக்கு ஃபுல்லா உன் கூட ஸ்பென்ட் பண்ணுறேன்... ஓகே வா?" என்றான்.
முகம் கொள்ளாப் புன்னையோடு முதலில் சம்மதித்தவள், மீண்டும் சோர்ந்துவிட, அதன் அர்த்தமும் புரிந்து கொண்டவன்,

"நீ ஷாப்பிங் போக நெனச்சிருந்த தானே..."

"ம்ம்ம்..." என்று சுரத்தையே இல்லாமல் வந்தது அவளது குரல்.

"நான் கூட்டிட்டுப் போறேன், பாடிகார்ட்ஸ் இல்லாம... நீயும், நானும் மட்டும்" என்று தன்னவளை புரிந்து கொண்டவனாய் கூறிவிட்டு, அவள் தனக்காக எடுத்து வைத்திருந்த ஃபார்மல் ட்ரெஸ்-ஐ கப்போர்டில் வைத்துவிட்டு ஜீன்னும்,
டீ-ஷர்ட்டும் எடுத்து அணிந்து கொண்டான்.

அதன் பின் வெண்பாவை பள்ளியில் விட்டுவிட்டு, இருவருமாக இணைந்து பிரபல ஷாப்பிங் மாலுக்குச் சென்றனர். அன்று அமியுடன் சென்ற அதே மால். அங்கே சென்றதுமே நேத்ராவிற்கு அன்று சந்தித்த நபரும் நினைவில் வரத்தான் செய்தான். இன்றேனும் அந்த நபரைப் பற்றி தன்னவனிடம் சொல்லியிருந்தால், நிகழவிருக்கும் அசம்பாவித்தில் இருந்து தப்பியிருந்திருக்கலாம்.

நேத்ராவோ அவனை ஒரு பொருட்டாகக் கூட நினைத்திடவில்லை. 'வந்த வேலை முடிந்துவிட்டால் சத்தமில்லாமல் ஊரைப் பார்த்து சென்றுவிடப் போவதாகக் கூறினானே! இன்னேரம் சென்றிருப்பான்' என்று நினைத்துக் கொண்டு இந்த நாளை சந்தோஷமாக தன்னவனுடன் செலவளிப்பதில் முனைந்தாள்.

திருமணம் முடிந்து முதல்முறை மதுரை செல்வதால் தாய்வீடு செல்லும் மகிழ்ச்சி அவளுக்கும் தோன்றிடாமல் இல்லை. தன் அத்தை, மாமா என்று ஆரம்பித்து தோட்டக்காரர் வளர்க்கும் பூனைக்குட்டி வரை அனைவருக்கும் வாங்கிக் குவித்தாள்.

மதியம் வடஇந்திய உணவு முறையான, பெரிய தட்டில் காய்கறி, குழம்பு, பொறியல், கிரேவி, நாண், வெரைட்டி ரைஸ், வொயிட் ரைஸ் என இருபத்து எட்டு வகை உணவு பதார்த்தங்களுடன் (நம்ம ஊர் பாகுபலி லன்ச் 😋) ஒருவெட்டு வெட்டினர்.

அனைவருக்கும் வாங்கி முடித்து புறப்படும் போது, ஹீலியம் காற்று நிரப்பப்பட்ட கார்ட்டுன் பலூன்களை வெண்பாவிற்காக வாங்கியவன், நேத்ராவை காருக்குச் செல்லுமாறு கூறிவிட்டு, அவள் அங்கிருந்து அகன்றதும், வெண்பாவிற்கு ஃப்ரொசன் பொம்மையும், நேத்ராவிற்கு அதில் வரும் ஸ்னோமேன் பொம்மையும் வாங்கிக் கொண்டு கார் பார்க்கிங் நோக்கிச் சென்றான்.

அங்கே அவனது காரின் டிக்கி திறந்திருக்க, இன்னுமா பையை உள்ளே வைத்துக் கொண்டிருக்கிறாள் என்ற யோசனையோடு அருகில் செல்ல பைகள் அனைத்தும் கீழே சிதறிக் கிடக்க, அங்கே அவள் இல்லை.

ஒரு நிமிடம் பூமி சுற்றுவதை நிறுத்திவிட்டது போலத் தோன்றிட சுற்றிலும் பார்வையை செலுத்தியவனுக்கு அவ்விடமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது. என்ன செய்வது என்று ஒன்றும் புரிந்திடவில்லை. பித்துப் பிடித்தது போல் சிறிது நேரம் அங்கும் இங்குமாக ஓடி அவளைத் தேடியவன், கண்கள் கலங்கி என்னவளைத் தொலைத்துவிட்டேனே என்ற எண்ணம் தோன்றிட, 'அவனை சாதாரணமாக நினைத்தது தவறோ!!!' என்று நினைத்தான். 'என் தரு அவன் கையில் சிக்கியிருந்தால் என்ன செய்வான்?' என்று கற்பனையில் கண்டவனுக்கு அச்சம் தோன்றிட,

அடுத்த நொடி அவனது இதழ் அவள் பெயரை உரக்கக் கத்தியது "தரு..." என்று. கார் பார்க்கிங் மொத்தமும் அப்படி ஒரு அமைதி... தன் இதயம் அதிவேகத்தில் துடிப்பதை உணர்ந்தவன், அவளின் இதயமும் இதே வேகத்தோடு இங்கே தான் துடித்துக் கொண்டிருக்கிறது என்று அவனின் ஆழ்மனம் உரைத்திட,

"தரு...." என்று மீண்டும் ஒருமுறை கத்தினான். தொலைவில் ஒரு காரின் அலாட் பீப் சத்தம் கேட்க, உணர்ச்சிவயம் அடையாமல், அந்த சத்தத்தை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினான். காரின் சத்தத்திற்கு எதிர் திசையில்...... சத்தம் கேட்கக் கூடாது என்பதற்காகவே மிகவும் கவனமாகத் தன் கால்களை அழுந்தி ஊன்றி நடக்கும் பூட்ஸ் சத்தம் கேட்டிட அத்திசை நோக்கி நடந்தான் ராம்.

ராம் நினைத்தது போலவே நேத்ரா அங்கே ஒரு காரினுள் அடைக்கப்பட்டிருக்க, அவனைக் கண்டு சிரித்துக் கொண்டே இங்கேயிருந்து போகும்படியாக சைகை செய்தாள். அவளின் செயலுக்கான அர்த்தம் புரிந்திடாதவன் காரின் கதவை திறக்க முற்பட, அவளின் கண்கள் பயத்தில் விரிந்தது, இன்னும் இதழ்கள் சிரித்துக் கொண்டு தான் இருந்தது.

பின்னால் பார்க்கும் படியாக அவள் மறுபடியும் சைகை செய்ய அவன் அதனை உணர்வதற்குள் இரும்புக் கம்பி ஒன்று அவன் தலையை பதம் பார்த்தது, வலியோடு அவன் தலையில் கை வைத்தபடி திரும்பிப் பார்க்க அங்கே மதன் நின்றிருந்தான்.

ராம் திரும்புவதற்காகவே காத்திருந்தது போல் கையில் இருந்த கம்பி கொண்டு ராமின் வயிற்றில் அடித்தான். அதில் வாயிலிருந்து ரத்தம் வர அதனைக் கண்டு கர்வமாக சிரித்தான் மதன். வலி தாங்காமல் சுருண்ட ராம், அவன் கையில் இருக்கும் கம்பியை பறிக்க முயற்சிக்க,

"அடுத்தவன் குழந்தைக்கும், பொண்டாட்டிக்கும் ஆசை பட்டேல... உனக்கு இனி குழந்தையே பிறக்காது டா..." என்று கூறி ராமின் குறுக்கு எலும்பில் அந்த கம்பியைக் கொண்டு அடித்தான்.

ராம் மீண்டும் தன்னை நிதானத்து எழுந்து அங்கிருந்த ஒரு காரின் மேல் சாய்ந்து நின்றிட,

"உன்னை என் கையாலேயெ அடிச்சு கொன்னாத் தான் டா என் மனசு ஆரும்" என்று கூறிக் கொண்டு மீண்டும் கம்பியை ஓங்கினான் மதன்.

மதன் அடிக்க வரும் போது ராம் நகர்ந்து கொள்ள அடுத்த அடி காரின் மேல் விழுந்திட, கார் பீச் சத்தம் கொடுக்க ஆரம்பித்தது. ராம் தன் சோர்ந்த உடலை கடினப்பட்டு நகர்த்தி அடுத்த காரின் மேல் சாய்ந்து நிற்க, மதன் மீண்டும் கம்பியை ஓங்கினான். இந்த முறையும் ராம் நகர்ந்து கொள்ள அடி மீண்டும் காரின் மேல் விழுந்து சத்தம் எழுப்பியது.

ராமின் எண்ணத்தை அப்போது தான் மதன் புரிந்து கொண்டான். காரின் சத்தம் கேட்டு காவலாளி வர, இம்முறை ராமின் முகத்தில் தன் பலம் கொண்டு தாக்கிட, ராமின் கன்னம் கிழிந்து ரத்தம் தெரிக்க சுழன்று கீழே விழுந்தான்.

மதன் நேத்ராவை அடைத்து வைத்திருந்த தனது காரை கிளப்பில கொண்டு விரைந்து சென்றான்.

ராம் தன்னவளை காப்பாற்ற முடியாமல் போன இயலாமையுடன் நேத்ராவைப் பார்க்க, அவளோ கார் கண்ணாடி வழியே இன்னமும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, குளப்பமாக அவள் கண்களைக் கண்டான். அது அவனுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. அதனைக் கண்டு அவன் கண்களும் கண்ணீர் வடிக்க அப்படியே மயக்கம் அடைந்தான்.

-ஊடல் கூடும்.​
 
Top