• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொந்தம் 59

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
நேத்ராவிடம் என்ன நேர்ந்தது என்று ராம் வினவிட, "உங்க பெண்ணு தான் மனசுல பதியிற அளவுக்கு பாக்குற எல்லார்கிட்டேயும் பக்கம் பக்கமா சொல்றாளே!!! அப்பறம் என்ன!!! ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்குறிங்க!!!"

நேத்ரா பல நேரங்களில் வெண்பாவை 'என் பொண்ணு' என்று தான் குறிப்பிடுவாள். ராம் உங்கள் இருவருக்கும் தான் என் வாழ்வில் முதலிடம் என்று பல விதங்களில் காண்பித்த பின்னும் கூட 'நம்ம பொண்ணு' என்ற வார்த்தையைக் கூட அவள் உபயோகித்தது இல்லை. ஆனால் இன்று 'உங்க பொண்ணு' என்று கூறியதிலேயே அவளது மனமும் மாற்றம் பெற்றிருக்கிறது என்பதனை அறிந்து கொண்டவன் தீமையிலும் நன்மை என்று நினைத்துக் கொண்டு பெருமிதமாகப் பார்த்தபடி

"அவ சந்தோஷத்தோட அளவை அவள் வார்த்தையா சொல்லிட்டா... இப்போ நீ சொல்லு... உன் சந்தோஷத்தோட அளவை செயலா கூட காட்டலாம்... நான் ஒன்னும் தப்பா நெனச்சுக்கமாட்டேன்" என்று தன் கன்னம் தடவிக் காண்பித்திட,

அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்று புரிந்திருந்த பெண்ணவள் தன் விரல் கொண்டு சற்றே அடர்த்தியாக வளர்ந்திருந்த தாடிக்குள் மறைந்து கிடந்த அவன் இதழ்களைக் கிள்ளிக் கொஞ்சினாள்.

ஆனால் அவளிடம் இதனை எதிர்பார்த்திடாதவன் புருவங்களை உயர்த்தி கண்களை விரித்து அதிசயித்து, "கோபத்துலேயும் இவ்வளவு சந்தோஷமா இருக்கேயா!!! அது தெரியாம கன்னத்தை காண்பிச்சிட்டேனே!!! ஹாஸ்பிட்டலா இல்லாம வீடா இருந்திருக்கலாம்!!!" என்று விளையாட்டாக பெருமூச்சுவிட்டு வருத்தம் போல் கூறினான்.

அவனது முகத்தில் தெரிந்த போலியான வருத்தத்தைக் கண்டு சிரித்த பெண்ணவளைச் செல்லமாக முறைத்துவிட்டு, "சரி சொல்லு... இதுக்கு மேல வெய்ட் பண்ண முடியாது..." என்று பரபரப்பாக வினவினான்.

"நீங்க எங்களை மறந்துட்டிங்கலாம்... தேட வேண்டாம்னு சொல்லிட்டிங்களாம்..." என்று சற்று வருந்திய குரலில் தலை கவிழ்ந்து உரைத்திட, தலை குனிந்திருந்தவளை வதனம் தொட்டு நிமிர்த்தி புன்னகையோடு "ம்ம்ம்... ஆமாம்" என்றான்.

அதில் சற்று கடுப்படைந்தவள், 'அவனை ஏமாற்றி திசை திருப்பத் தான் அப்படி பொய் சொன்னேனு சொன்னா தான் என்னவாம்!' என்று மனதிற்குள் புகைந்தபடி, 'இனி தன் வருத்தத்தையும் வெளிக்காட்டக் கூடாது' என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டு அவனது கையை தட்டிவிட்டு தலை நிமிர்ந்து அமர்ந்தாள். அவளின் செயலில் கள்ளத்தனமாக சிரித்தவன், "ம்ம்... அப்பறம்?" என்று அடுத்து கூறும்படி ஊக்கினான்.

"உங்களுக்கு நாங்க இனிமே தேவையில்லேயாம்... உங்க காதல் அவ்ளோ தானாம்... தேவை தீர்ந்ததும் தூக்கி எறிஞ்சிட்டிங்களாம்..." என்றிட, சற்று சத்தமாக சிரித்தான்.

அவன் கோபப்படுவான் என்று நினைத்து கூறியவளுக்கு அவனது சிரிப்பு கோபமூட்டியது. "இப்போ எதுக்கு இந்த சிரிப்பு?" என்று முகத்தை சுரித்தபடி வினவினாள்.

சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு "அப்பறமா சொல்றேன்... நீ மேல சொல்லு?" என்றிட, சிறிய முறைப்போடு அவள் தொடர்ந்தாள்.

"ஹரித்ரா நிலை எனக்கும் பொம்மிக்கும் நிகழ வாய்ப்பிருக்குனு தெரிஞ்சும் நீங்க எங்களை அவன்கிட்ட விட்டு வெச்சிருந்திங்களாம்..." என்றிட, ராமின் வதனம் கோபத்தில் சிவந்தது. கண்கள் நெருப்பென கொதித்திட, "இனியும் அப்படி ஒரு காரியம் செய்ய அவனுக்கு துணிச்சல் இருக்கா?" என்று பற்களை கடித்துக்கொண்டு உருமினான்.

இவ்வளவு நேரம் ஏன் கோபம் கொள்ளாமல் சிரித்துக் கொண்டிருக்கிறான்!!! என்று யோசித்த அவன் வனிதை கூட அவனது கோபம் கண்டு அஞ்சினாள்.

"நீங்க இப்படி கோபப் படுறதுனா நான் இப்போ சொல்லலே... நாளைக்கு பேசலாம்" என்று கூறி எழுந்து சென்றுவிட்டாள். "சரி நான் கோபப்படலே... வா... வந்து சொல்லு" என்று முகத்தை மட்டும் சாதாரணமாக வைத்துக் கொண்டு உள்ளே கொதித்தபடி கூறினான்.

அப்போதும் வாய்திறவாமல் தன் படுக்கையில் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவளை திரும்பிப் பார்த்தவன், அவளின் நிலை குத்தி நின்ற பார்வையில் தன் மனதில் இருத்தியிருந்த கோபத்தை வயிற்றிக்குள் தள்ளி ஜீரணித்து.... "உண்மையாவே கோபம் போயிடுச்சு... இப்போ பேசலாமே?" என்றிட, அப்போதும் அவள் அசையாமல் இருக்க, தான் எழுந்து கொள்ள முயற்சித்தான்.

அவனின் செயலைக் கண்டவள், அவசரமாக எழுந்து வந்து அவனை மீண்டும் படுக்க வைத்தாள். அவனை முறைத்தபடி அவன் அருகில் அவனது படுக்கையிலேயே அமர்ந்து, "இப்போ நீங்க இருக்குற கன்டிஷன்ல ஏன் இவ்ளோ கோபப்படுறிங்கனு தானே நாளைக்கு பேசலாம்னு சொன்னேன்... நீங்க என்னடானா எழுந்துக்க பாக்குறிங்க... இன்னும் உடம்பு மோசமாத் தான் போகும்." என்று கோபமாக கண்டித்தாள்.

"இனி என்னை பார்த்துக்க என் தரு வந்துட்டாளே!!! பின்னே என்ன கவலை!!!" என்று அவளைப் பார்த்து கண்ணடித்திட,

அவனது செய்கையில் சிரித்தாலும், "ஆனால் உங்க தரு கவலைப்படுவாளே!!!" என்று கூறிக் கொண்டே அருகில் இருக்கும் சாய்விருக்கையில் அமரச் செல்ல, அவளின் இடையைப் பிடித்து இழுத்து "இங்கேயே உட்கார்" என்று அதிகாரமாகக் கூறிட, "ச்சூ..." என்று இடையில் இருந்த அவனது கைகளை தட்டிவிட்டு "யாராவது வந்தா என்ன நெனப்பாங்க!!!" என்று கூறி அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.

அவளின் கண்களைப் பார்த்தபடி, "சரியா சொல்லனும்னா...... உன் அருகாமையை உணர்ந்து இன்னையோட தர்ட்டி டூ டேஸ் ஆகுது. நான் உணர நினைக்கிறது உடலும், உடலும் மட்டும் உரசிக்கொள்ளும் அருகாமைய இல்லே... நீ எந்த ஆபத்தும் இல்லாம பத்திரமா என் பக்கத்துல தான் இருக்கனு மனசளவுல உணர நினைக்கிறேன். அதுக்கு இதெல்லாம் பத்தாது..." என்று இருவரின் கையையும் சுட்டிக்காட்டி கூறினான்.

"எனக்கு தெரியும் ராம்... நீங்க சொல்லாமலேயே என்னால அதை புரிஞ்சுக்க முடியும்... ஆனால் நாம் இருக்கிற இடம்...!!!" என்று சுற்றிலும் பார்வையை செலுத்திட, அவனும் புரிந்து கொண்டவனாய்,

"அது வேற ஒன்னும் இல்லே... அன்னைக்கு என் கண்ணு முன்னாடியே...... உன்னை......" என்று அதற்கு மேல் கூற விரும்பாமல் அங்கேயே நிறுத்திவிட்டு, பெருமூச்சு ஒன்றை இழுத்துக் கொண்டு மீண்டும் ஆரம்பித்தான், "அதான் உன்னைவிட்டு ஒரு செகண்டு கூட பிரியக் கூடாதுனு ஏதோ ஒரு ஃபீல்... பயம்னு கூட சொல்லலாம்... சரி விடு... நீ சொல்லு"

"அப்போ கடத்தல் ப்ளான் உங்களுக்குத் தெரியாதா!!!" என்று கண்களை விரித்து வினவினாள்.

"ம்கூம்..." என்று உதடு பிதுக்கியவன், "நீ மொதோ அந்த மதனை என்ன சொஞ்சனு சொல்லு... அப்பறம் என்கிட்ட என்ன தெரிஞ்சுக்கனுமோ கேளு" என்றிட, அன்று மதன் பேசியதை கூற ஆரம்பித்தாள்.

"ஹரித்ராவோடு நிலை உனக்கும் நீ ஆசையா வளக்குற உன் செல்ல பொண்ணுக்கும் நிகழ வாய்ப்பு இருக்குனு தெரிஞ்சும் மூனு வாரமா உங்களை தேடாம என்கிட்ட விட்டு வெச்சிருக்கானே!!! அதுக்கு என்ன அர்த்தம்? அவனுக்கு நீங்க வேண்டாம்னு அர்த்தம்" என்று கூறி வெற்றிச் சிரிப்பு சிரித்தான்.

பதிலுக்கு நேத்ராவும் சிரித்திட, அவளின் சிரிப்பில் இருந்த செருக்கைக் கண்டு கோபம் கொண்டவன், அப்போது தான் போட்டு முடித்த ஊசியை தூக்கி எறிந்து "இப்போ எதுக்கு டி இப்படி சிரிக்கிறே?" என்று அவள் கழுத்தை நெரித்தபடி வினவினான்.

அவளது சிரிப்பு சற்றும் குறையாமல் அதிகரிக்க, அவளின் சிரிப்பை நிறுத்த வெண்பாவை நெருங்கினான்.

"பொம்மி ஓடு..." என்று நேத்ராவின் அழுத்தமான கட்டளைக் குரலுக்கு, குழந்தை மதனின் கைக்கு சிக்காமல் நொடிக்குள் அவன் அகன்ற கால்களுக்குள் புகுந்த மறுபுறம் சென்று நின்று கொண்டது.

அதில் வெறிப்பிடித்தவன் போல் பின்பக்கம் திரும்பி வெண்பாவை பிடிக்கச் செல்ல "காலை இறுக்கி பிடி" என்ற தன் அன்னையின் அடுத்த கட்டளையில் மதனின் ஒரு கால் பாதத்தின் மேல் அமர்ந்து முழங்காலை கவ்விக்கொண்டு தன் கால்களால் அவனது மற்றொரு காலை க்ராஸ் செய்து எட்டு போன்று கவ்விக் கொண்டாள்.

மதன் வெண்பாவை விலக்க முயற்சிக்க அவன் கால்கள் இடருவது போல் தோன்றிட, முதுகுப் புறமாக வெண்பாவின் சட்டையைப் பிடித்து தூக்க முயற்சித்தான். அதற்குள் மதன் தூக்கி எறிந்த ஊசியை அவனது முதுகு தண்டுவடத்தில் ஓங்கி குத்திட, ஊசியின் நுனி உடைந்து மீதம் இருந்த உடைந்த ஊசி அவன் முதுகிற்குள் இறங்கியது.

வலியில் கத்தியபடி கைகளை பின்னால் கொண்டு சென்று ஊசியை அகற்ற முயன்றான் மதன். நேத்ராவோ முன்னதாகவே கிழித்து தன் இடையில் சொருகி வைத்திருந்த சேலை துணியை எடுத்து, தன் முதுகில் இருந்த ஊசியை எடுக்க முயற்சித்த மதனின் கைகளை இழுத்து கட்டினாள். மதனோ வெண்பாவை எட்டி உதைக்க நினைத்து தன் கால்களை உதறிட, தடுக்கி தரையில் விழுந்தான். மறு நிமிடமே அடுத்த சேலை துணியை எடுத்து அவன் கால்களை கட்ட முயன்ற நேத்ராவை ஓங்கி எத்தினான்.

சற்று தள்ளிச் சென்று விழுந்தவள் அவன் தன் கை கட்டை அவிழ்க்கவோ, கிழிக்கவோ முயற்சிப்பதைக் கண்டு, தள்ளாடியபடி சென்று இரண்டு இன்ஜக்ஷனில் மருந்தை நிறப்பிட, அவனோ "ஏய் நேத்ரா... வேண்டாம் சொன்னா கேளு... ஒழுங்கா கட்டை அவுத்து விடு. நானா கழட்டினா நீ செத்த டீ..." என்று மிரட்டிட,

அதனையெல்லாம் அசட்டை செய்து "கொஞ்சம் ஆடாம இரு... போதைல கைல போடுறதுக்கு பதிலா கண்ட எடத்துல ஊசிய குத்திடப் போறேன்..." என்று பொறுமையாக பதிலளித்த படி பின்பக்கமாக கட்டப்பட்டிருந்த அவனது இரண்டு கைகளின் மணிகட்டிற்கு அருகிலும் இரண்டு ஊசியை குத்தினாள்.

இரண்டு ஹெவி டோஸ் இன்ஜக்ஷன் என்பதால் சற்று நேரத்திலேயே போதை தலைக்கு ஏறிட, "ஏய்..... உன்ன கொல்லாம விடமாட்டேன் டீ... என்னை கட்டி வெச்சுட்டா மட்டும்...... நீ அந்த ராம்கிட்ட போயிடுவேயா!!! போனாலும் அவன் உன்னை சேத்துக்கமாட்டான் டீ... உன்னையும் கொல்லுவே....... அவனையும் கொல்லுவே......" என்று அறைகுறை நினைவில் உளரியபடி படுத்திருந்தான்.

நேத்ரா தள்ளாடியபடி அறையைவிட்டு வெளியே வந்து மதனை கட்டி வைப்பதற்கு வேறு என்ன இருக்கிறது என்று கண்களை சுருக்கி தேடிக் கொண்டிருந்தாள். கிடைத்தவற்றை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்து அவன் கால்களை அறையும் குறையுமாக கட்டிவிட, அதற்கு மேல் முடியாதவளாய் சுவற்றில் சாய்ந்து வெண்பாவை அழைத்து தன் கைகளுக்குள் வைத்தபடி மயங்கி சரிந்தாள்.

தான் மயக்கத்தில் இருக்கும் போது பெரும்பாலும் வெண்பாவையும் தூங்கிவிடும்படி கூறி பழக்கியிருந்தாள். அதே போல் தன் கையணைப்பை விட்டு எங்கும் எழுந்து செல்லக் கூடாது என்றும் பழக்கி வைத்திருந்தாள். முதலில் போதை தெளிந்தது நேத்ராவிற்குத் தான். அவள் இதனை எதிர்பார்த்து தான் மதனுக்கு இரண்டு ஊசி போட்டுவிட்டிருந்தாள்.

இப்போது தெளிந்த நிலையில் தான் இருந்து அதே அறையில் மதனை நாற்காலியில் அமர வைத்து கை, கால் மற்றும் வாயையும் சேர்த்து கட்டி வைத்துவிட்டு, அவனது ஃபோனையும் எடுத்துக் கொண்டாள்.

இத்தனை நாளில் அவள் கவனித்த வரையில் இந்த வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்தவன் அவ்வபோது வந்து பணம் வாங்கிச் செல்வதைத் தெரிந்து வைத்திருந்தாள். இப்போது அவன் வந்தாள் என்ன செய்வது என்று யோசித்தவள், அணைத்து ஜன்னல் கதவுகளையும் அடைத்து வைத்து, வீட்டின் கதவையும் சாவி கொண்டு பூட்டி வைத்தாள்.

இங்கே மதன் போதை தெளிந்து பேச முடியாமல் முனங்கிக் கொண்டருக்க, கத்தி ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு அவனின் அருகே சென்றாள்.

அவனைப் பார்த்து நக்கலாக சிரித்து, "ராம் எங்களை ஏன் இத்தனை நாள் உன்கிட்ட விட்டு வெச்சிருக்கார்னு கேட்டேல!!! அதுக்காக அவர் எங்களை மறந்துட்டார்னு அர்த்தம் இல்லே... நீ என் கையாள சாகனுங்கிறது தான்." என்றவள் பல்லைக் கடித்துக்கொண்டு கையில் இருந்த கத்தியால் அவன் கழுத்தில் வைத்து அழுத்தி "என்ன போட்டு தள்ளிடவா?" என்றிட, மதனுக்கோ வேர்த்து விறுவிறுக்கத் தொடங்கியது. ஆனால் முகத்தை மட்டும் விரைப்பாக வைத்துக்கொண்டு அவளை எதிர்க் கொண்டான்.

அவனின் பதிலை எதிர்பார்க்காமல் நேத்ராவே மேலும் தொடர்ந்தாள், "என் ஹரிக்குட்டிய கஷ்டபடுத்தின நீயெல்லாம் இப்படி சட்டுனு சாகக் கூடாது" என்றவள் கழுத்தில் இருந்த கத்தியை கீழே இறக்கி அவன் எதிர்பாராத நேரத்தில் அவனது தொடையில் கிழித்து ரத்தம் கசிவதைக் கண்டு ஆனந்தமாகச் சிரித்தாள்.

ஹரித்ராவின் வலி நிறைந்த வார்த்தைகள் நினைவில் வர, கத்தியை தொடையில் ஓங்கி குத்தி சொருகி வைத்தாள். வலியில் கத்திட, "கத்தி கத்தி உன் எனர்ஜிய வேஸ்ட் பண்ணாதே, சாகும் போது இதைவிட அதிகமா வலிக்கும், அப்போ மொத்தமா கத்து" என்று திமிராகக் கூறினாள்.

இப்படி ஒவ்வொரு முறையும் ஹரித்ராவின் நினைவு வரும்போதும், அவள் தன் வலிகள் பற்றி கூறிய வார்த்தைகள் காதில் ஒலிக்கும் போதும் உடலின் பல இடங்களில் கீறல் போட்டிருந்தாள் நேத்ரா.

அடுத்ததாக மதனின் ஃபோனை எடுத்து பார்க்க, அதுவோ நம்பர் லாக் செய்யப்பட்டிருந்தது. பலமுறை அதனை உருட்டிப் பார்த்துவிட்டாள். ஆனால் பலன் பூஜ்ஜியமாக இருக்க, அதனை கண்ட படி அமர்ந்திருந்த மதன் 'உன்னால ஒன்னும் செய்ய முடியாது' என்பது போல் பார்த்து சிரித்தான்.

அடுத்த நாள் ஷாகித்-திடம் இருந்து குறுந்தகவல் வர, நேத்ராவிற்கு இதில் ராமின் பங்கு இருக்குமோ என்று தோன்றிட, மதனின் ஃபோனை அன்லாக் செய்ய முயற்சித்தாள். பல முயற்சிக்குப் பின் கைரேகை வைக்கும் படி வர, மதனின் விரலை வைத்து அன்லாக் செய்துவிட்டு, ஷாகித்-திற்கு பதில் அனுப்பி வைத்தாள். ஷாகித் மூன்று நாட்களில் மருந்து கொண்டு வருவதாகக் கூறிவிட, இது ராமின் முயற்சியாக இல்லாத பட்சத்தில் வருபவனையும் எதிர்த்து போராட தயாராகினாள்.

இதற்கிடையே ஷாகித் வருவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாக வீடு பிடித்துக் கொடுத்தவன் கதவைத் தட்டிட, ஒழிந்திருந்து அதனைக் கண்டவளுக்கு ஒரு நொடி மூச்சே நின்றுவிட்டது. வெகு நேரம் கதவு திறக்கப்படாமல் போக, திரும்பிச் சென்றான். அதற்குள் ஷாகித்-திடம் இருந்து அழைப்பு வர, ஃபோன் சத்தத்தில் மீண்டும் வீட்டின் அருகே வந்தான் அவன். வந்தவனோ தன்னிடம் இருந்த சாவி கொண்டு கதவை திறக்க முயற்சித்திட, நேத்ராவின் தைரியம் உடையத் தொடங்கியது.

வெண்பாவைக் கண்டவள், தனக்காக இல்லாவிட்டாலும், பொம்மிக்காக போராட வேண்டும் என்று நினைத்து வெண்பாவை அறை கதவின் பின்னே அமர்த்திவிட்டு ஒரு கையில் கத்தியும், மற்றொரு கையில் மகிழுந்து பழுது பார்க்கும் திருப்பிலி ஒன்றையும் எடுத்துக்கொண்டு வாசல் கதவின் அருகே ஒழிந்து கொண்டாள்.

உள்ளே நுழைந்தவனை திருப்பிலி கொண்டு நெற்றியில் தாக்க, நெற்றியை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தவன், தன்னை நிதானித்துக் கொள்ள சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டான். எழுந்து நின்றவன் பெண் தானே என்று நினைத்து நேத்ராவை தாக்கச் செல்ல, திருப்பிலியை சுழற்றி, அவனது கைகளில் அடித்தாள். அவளின் பாவனையே கூறியது கலைகள் கற்றுத் தேர்ந்தவள் என்று. அந்த அடியில் அஞ்சியவன், ஹிந்தியில் திட்டத் தொடங்கினான். அதில் கோபம் கொண்டு அவனை மீண்டும் திருப்பிலி கொண்டு அடிக்க சுவரோடு சுவராக பல்லி போல் ஒட்டிக் கொண்டான்.

கத்தி முனையில் அவனை மிரட்டி மதனின் அருகிலேயே கட்டி வைத்தாள். இருவருக்கும் இன்ஜக்ஷன் போட்டுவிட்டு ஷாகித்-திற்கு அழைத்தாள். திறன்பேசியில் குரல் மாற்றிப் பேசும் செயலியை இயக்கி ஆண் குரலில் பேசிட, சிறிது நேரத்தில் ஷாகித் கதவைத் தட்டினான். அபியையும், கமலையும் கவனிக்காதவள், அடுத்த போராட்டத்திற்கு தயாராகிட, வெண்பாவின் சோட்டூ என்ற கத்தலில் கால்கள் நடுங்கியபடி நின்ற இடத்தில் அப்படியே சரிந்து அமர்ந்தாள்
.

தன்னவளின் வாய்மொழியாக அவள் பட்ட வேதனையையும், தன்பால் கொண்ட நம்பிக்கையையும் கேட்டு தெரிந்து கொண்டவன், அவளது கன்னம் வருடி "சாரி ம்மா..." என்று வருத்தமாகக் கூறினான்.

"நீங்க சாரி கேட்க வேண்டியது இல்லை ராம்... அடுத்த நாளே என்னை கண்டுபிடிச்சிருந்திங்கன்னா நான் இவ்வளவு தைரியமா எதிர்த்து சண்டை போட்டிருக்கமாட்டேன். பொதுவாவே ஆண்கள் பெண்களை விட பலசாலிகள்னு நெனச்சு கவலைபட்டிருக்கிறேன். அன்னைக்கு எனக்காக உங்களை எதிர்த்து போராடதவள், இப்போ பொம்மிக்காக இரண்டு ஆண்களை எதிர்த்து நின்னு சண்டை போட்டது மட்டும் இல்லாம, மூனாவதா ஒருவனுடன் சண்டை போடவும் தயாரா தான் இருந்திருக்கேன். இது எல்லாம் உங்களாள மட்டும் தான்... நீங்க என்கிட்ட ரசிக்கிற அந்த திமிர் தான் என்னால முடியும்ன்ற நம்பிக்கைய கொடுத்துச்சு..."

"சும்மா நான் வருத்தப்படக் கூடாதுனு எல்லாம் என்னால தான்னு சொல்றே... ஹரித்ரா விஷயம் தெரியிறதுக்கு முன்னாடி வரைக்கும் நான் வருவேனு நம்பின தானே!??? என்னால அந்த நம்பிக்கைய காப்பாத்த முடியலேயே!!!" என்று வருந்தியவனின் கன்னத்தை தன் கைகளில் ஏந்தி,

"கொஞ்சம் இல்லே நெறையா நம்பினேன். நீங்க எத்தனை வர்ஷம் கடந்தாலும் எங்களை தேடி வருவிங்கனு... ஆனால் தப்பு செய்த மதனை இன்னும் உயிரோடு விட்டுவெச்சிருக்கிங்கன்னா அவனுக்கு தண்டனை என் கையால கிடைக்கனும்னு காத்திருக்கிங்கனு புரிஞ்சுகிட்டேன். அந்த தண்டனைய அவனுக்கு கொடுத்துட்டு உங்க திமிர்பிடிச்ச தரு-வா தான் உங்க முன்னாடி நிக்கனும்னு நெனச்சேன்..." என்று தலையைத் தூக்கி எப்படி என்பது போல் கண்களால் வினவிட,

"நீ எப்படி இருந்தாலும் எப்பவும் என் தரு தான்." என்று அவனும் காதலாய் மொழிந்திட,

"மதன் எங்களை கடத்திட்டு போவான்னு தெரியாதுனா நீங்களும் நிறைய கஷ்டப்பட்டிருப்பிங்களே!!! உடல் வலியோடு சேர்த்து மனவலியும் நிறைய இருந்திருக்கும் உங்களுக்கு" என்று அவனுக்காக வருந்தினாள்.

"உன்னை இந்த ட்ரஸ்ட் ஆரம்பிக்க வெச்சதே நீயா முன் வந்து ஹரித்ராவுக்கு நடந்த அநியாயத்தை கண்டுபிடிக்கனும்னு தான். ஆனால் மதன் திடீர்னு வருவான்னு நெனைக்கல... எல்லா நேரமும் ரெம்ப கவனமாத் தான் இருந்தேன்... இருந்தும் என்னையும் தாண்டி அப்படி ஒரு சம்பவம் நடந்திடுச்சு... ஒருவாரம் கழிச்சு கண் முழிச்ச போது ஜீத்து சொன்ன விஷயங்கள் படி பார்த்தா நீங்க சிட்டிய விட்டு வெளியேறலேனு தெரிஞ்சிடுச்சு... அதான் தேட வேண்டாம்னு சொன்னா ஏதாவது ஒரு செக் போஸ்ட்ல சிக்குவான்னு பார்த்தேன். ஆனால் பதுங்கிட்டான்.

அவன் ஹரித்ராவுக்கு யூஸ் பண்ணின ட்ரக்ஸ் பத்தி தெரிஞ்சதுனால அதை வெச்சு தேடினேன். கிடைச்சிருந்தா அமைதியா அவனை ஃபாலோ பண்ணி உன்னை வெச்சு அவனை முடிக்க நெனச்சிருந்தேன். ஆனால் கெடைக்கலேங்கவும் தான் பயமே ஆரம்பிச்சது.. நீயும் வெண்பாவும் கெடச்சாப் போதும்னு நெனைக்கிறளவு மனசு படபடனு அடிச்சுகிச்சு..." என்று அவன் கூறிய விதத்திலும், கண்களில் தெரிந்த படபடப்பிலும் அதற்கு மேல் அவனை பேசவிடாமல் தன் கை கொண்டு இதழ்களை மூடியவள்,

"போதும் இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம்... என் ராம் எப்பவும் நினைச்சதை சாதிக்கிற வீம்புக்காரனாத் தான் இருக்கனும்... என்னையும், வெண்பாவையும் நெனச்சு என்னைக்கும் பயந்து பலவீனமா ஆகக் கூடாது..."

"மனுஷனா பொறந்தா ஏதாவது ஒரு விஷயத்துக்குனாலும் பயந்து தான் ஆகனும். நீ என் உயிர் டீ... உனக்காக உன்னை நெனச்சு பயப்படுறதுல எனக்கு எந்த அவமானமும் இல்லை... நீ அப்படியே கெடச்சிருந்தா என் உயிர் என்கிட்ட திரும்பக் கெடச்ச மனநிம்மதி மட்டும் தான் இருந்திருக்கும். ஆனா இப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா!!! பெருமையாவும் இருக்கு..." என்று முகம் கொள்ளா சந்தோஷத்தோடு மொழிந்தான்.

-ஊடல் கூடும்.​