• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"உன் தம்பிய பத்திரமா இருக்க சொல்லு. அவனுக்கு எப்போனாலும் என்னாலும் நடக்கலாம்..." என்று மிரட்டும் தோரணையில் கூறிவிட்டுச் சென்றான் ராம்.

அவர்கள் சென்றவுடன் மனமுடைந்து பின்னால் இருந்த சோஃபாவில் அப்படியே சரிந்து அமர்ந்தார் கங்காதரன்.

"உங்க மூனு பேரையும் வளர்க்கிறதுல எங்க தப்பு செய்தேன்னு எனக்குத் தெரியலே. ஒரு சின்னப் பொண்ணு, என்னை பார்த்து 'இது தான் நீ பிள்ளை வளர்த்திருக்க லட்சணமா?'னு கேட்காம கேட்டுட்டுப் போறா..." என்று புலம்பிட,

விமலாவிற்கோ கணவன் அமர்ந்திருக்கும் நிலை காணப் பொறுக்காமல் நேத்ராவிடம் சென்று "மூனு பேரும் சேர்ந்து என்ன டி மறைக்கிறிங்க?... அந்த பையன் உன்னைப் பார்த்து என்னடி சொல்லிட்டுப் போறான்? ஒருத்தன் போலிஸ்காரன் மாதிரி இருக்கான். ஒருத்தன் ஹிந்தி மட்டும் தான் பேசுறான். அந்த மிதுன்யா பொண்ணும், இன்னோரு பையனும் ஏன் பவன் செய்த காரியத்துக்கு, கமலையும் பார்த்து திட்டிட்டு போறாங்க? சொல்லு டி..." என்றார்.

நேத்ரா ஏதும் சொல்லாமல் விசும்பலுடன் நின்றிருந்தாள். இடையிடையே கீழேயிருக்கும் மற்றொரு அறையில் இருந்து சிணுங்கல் சத்தம் கேட்க பவன் நேத்ராவைப் பார்த்து 'போ' என கண்ஜாடை செய்ய, சிவநேத்ரா விமலாவைப் பார்த்தாள் விமலாவின் அனுமதி வேண்டி....

விமலாவும் கொஞ்சம் மனமிறங்கி "சரி போ" என்றிட, அடுத்த நிமிடம் அந்த அறைக்குள் அடைக்கலம் புகுந்தாள்.

பவன் தன் தந்தை அருகில் தரையில் அவர் காலருகே சென்று அமர்ந்து,
"அப்பா உங்க வளர்ப்பு தப்பா போயிருக்கும்னு நினைக்கிறிங்களா?"

"இப்போ இருக்க சூழ்நிலை உன்னை அப்படித் தான் யோசிக்க சொல்லுது. அந்த பொண்ணோட குடும்பத்துல யாரோ நம்ம சிவாவை ஏதோ சொல்லிருக்காங்க... அது மட்டும் நல்லா புரியுது" என்றவர் கமலை நிமிர்ந்து பார்க்க...

"கரெக்ட் ப்பா... அதே தான். அதான் நானும் அண்ணனும் அவங்களுக்கு நல்ல பாடம் கத்துக் கொடுக்க நினைச்சோம்."
இவ்வளவு நேரம் திடகார்த்தமாக இருந்த விமலா இப்போது உடைந்து போனார்.

"அதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை அளிச்சிடிங்கலே டா!!!" என்று அழுகையுடன் அதிர்ச்சியாக கேட்டிட,

"அம்மா அந்த ராம் நம்ம சிவாவை என்னலாம் சொல்லிருக்கான் தெரியுமா!!!" என்று கோபமாக ஆரம்பித்த கமல் அனைத்தையும் கூறி முடித்தான்.

கங்காரதன் கண்கள் கலங்க, நேத்ராவின் வாழ்வை நினைத்து மேலும் நொந்துபோனார்.

"அவளைப் பேசிற எல்லார் வீட்டிலேயும் ஒரு பொண்ணை கட்டிக்கிட்டு வந்து அவங்களுக்கு புரிய வைக்க முடியுமா? கொஞ்சம் கூட யோசிச்சி நடந்துக்கமாட்டிங்களா டா? ஊரார் வாய்ல விழுகாம இருக்கனும்னா நாம தான் வீட்ல அடங்கி இருக்கனும்." என்றார் விமலா.

"என்னம்மா நீங்களும் இப்படி பேசுறிங்க?... எவனோ ஒருத்தன் தான் நம்ம சிவாவை பேசி கஷ்டப்படுத்துறான்னா நீங்களும் இப்படி பேசினா சிவா வருத்தப்படுவா ம்மா. கண்ட கண்ட பொறுக்கிப் பசங்க பேச்சுக்குப் பயந்து சிவா வீட்டுக்குள்ளேயே அடஞ்சி கிடக்கனுமா?" என்றான் பவன்.

அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்த நேத்ரா வெளியே வந்து கமலைப் பார்த்துக் கத்தினாள்.

"அதுக்காக நீங்களும் இப்படித் தான் பொறுக்கித் தனமா செய்விங்களா? கல்யாணம்றது உங்களுக்கு என்ன விளையாட்டா தெரியுதா? இவன் ஒருத்தன் தான் என்னை பேசினானா? ஏன் டா இப்படி செய்திங்க?"

இருவரும் அமைதியாக இருக்க "நான் ஒருத்தி கஷ்டப்படுறது பத்தாதா? அந்த பொண்ணு மனசு எவ்வளவோ கஷ்டபட்டிருக்கும்!!! இனி அந்த பொண்ணு என்ன செய்வா!!!" என மிதுன்யாவிற்காக கலங்கினாள் நேத்ரா.

"அவளுக்கென்ன!!! அவளுக்கு தான் அவளோட ராம் மச்சான் இருக்கானே.... அவன் பார்த்துப்பான் அவளை." என்று பொறாமை சிறிதாக எட்டிப் பார்க்க, எங்கோ பார்த்துக் கொண்டே கூறினான் பவன்.

பவனின் இந்த முக பாவனையை அனைவரும் கவனித்தாலும் கவனியாதது போல் அமர்ந்திருந்தனர்.

கங்காதரன் பவன் மற்றும் கமலைப் பார்த்து, "நம்ம சிவா அவளோட வாழ்க்கைல ஜெயிக்கனும்னு நீங்க ரெண்டு பேரும் நெனச்சிங்கன்னா, அவளை தனியா செயல்படவிடுங்க. அவளோட பிஸ்னஸ் மீட்ல நீங்க தலையிடாதிங்க. எனக்கு சிவா மேல நம்பிக்கை இருக்கு. நீங்க இதுல தலையிடாம இருந்திருந்தா அவளே இந்த பிரச்சனையை தீர்த்திருப்பா. அடுத்தமுறை அவனை சந்திக்கும் போது தலை நிமிர்ந்து திக்கிறமாதிரி தான் செய்திருப்பா... இப்போ நீங்க ரெண்டுபேரும் செய்திருக்க காரியம் அவளைத் தான் தலை குனிய வெச்சிருக்கு." என்றிட மூவரும் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தனர்.

"நீ சொல்லும்மா... இந்த பிரச்சனைய நீ எப்படி ஹேண்டில் பண்ண நினைச்ச?"
"அது... வந்து..." என்று இழுத்திட

"தைரியமா சொல்லு ம்மா... எல்லாமே ஒரே நாள்ல கத்துக்கிடனும்னு நினைச்சா முடியாது. பல அனுபவங்கள் கடந்து வந்தா தான் சரியான பாதையில போறதுக்கு கத்துக்க முடியும். நீ நிச்சயம் வேற ப்ளான் தான் தயாரா வெச்சிருப்பனு எனக்கு தோணுது. இந்த இரண்டு பசங்களும் தான் உனக்குத் தெரியாம உன் ப்ளானை சொதப்பிருப்பானுங்க... நீ உன் ஐடியாவை சொல்லு..."

"அவங்க வீட்ல பாரி அங்கிள் நல்லா பேசுவார். லட்சுமணன் ஐயா பத்தி உங்களுக்கும் நல்லாவேத் தெரியும். அவருகிட்ட என்ன கேட்டாலும் நிச்சயம் செய்து கொடுக்கக் கூடியவர். இப்போ இருக்கிற அபி கூட நல்ல பையன் தான். ஆனால் இன்னு அவனா எந்த டெஷிஷனும் எடுத்ததில்லை. அவங்க அண்ணனை கன்சிடர் பண்ணிட்டு தான் எந்த முடிவும் எடுப்பான். அதனால அந்த ராமிற்கு கட்டளை பிறப்பிக்கக் கூடிய அவங்க அப்பா அல்லது தாத்தாவை வீட்டுக்குப் போய் பார்த்து பேசனும்னு நெனச்சேன்."

"ம்ம்ம்... நல்ல யோசனை தான். ஆனால் அதுக்கு பின்னும் அந்த ராம் உன்னை தொல்லை செய்திருந்தா என்ன செய்திருப்ப..."

"அவரோட குணத்துக்கு நிச்சயம் ப்ரச்சனை செய்திருப்பார் தான். மொத்தமா ஆர்டரை கேன்சல் செய்யாம கொஞ்ச கொஞ்சமா குறைக்க நெனச்சேன். ஒரு வேலை அவங்க இனி சரியான முறையில நமக்கு இறக்குமதி செய்தா கான்ட்ராக்ட் போட்டது போட்டபடி இருக்கட்டும்னு நெனச்சேன்... ஏன்னா நம்ம கடையிலேயும் அவங்க டிசைன்ஸ்க்கு தான் நல்ல வரவேற்பு, அதுமட்டுமில்லாம லட்சுமணன் ஐயாவோட நேர்மை."

அவளை பெறுமையோடு பார்த்த கங்காதரன், "பவன் உன் கோபத்தை தூக்கிப்போடு... இப்போ உன்னால எவ்வளவு பெரிய பிரச்சனைனு பார்..." என்று கடுமையாக பேசிட, பதில் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

"அந்த பொண்ணை இரண்டு நாள் எங்கே வெச்சிருந்த?" என்று நேத்ரா பவனைப் பார்த்து கேட்க, அப்போதும் பதில் கூறாமல் அமைதி காத்தான் பவன்.

"உன்னைத் தான் டா கேட்குறேன்... இன்னைக்கு தான் இங்கே கூட்டிட்டு வந்திருக்க... நேத்து வரை எங்கேடா வெச்சிருந்த?"

கமல் முந்திக் கொண்டு பதில்
கூறிட, அங்கே அமைதி நிலவியது.
"நம்ம குற்றாலம் வீட்ல தான்"
நொடியில் நேத்ராவின் கண்கள் குளம் கட்டிட மீண்டும் அந்த அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள்.

"பவன், கமல் நீங்க ரெண்டு பேரும் ஆரம்பிச்ச பிரச்சனைய இனி நீங்க தான் சரி செய்யனும். திரும்பவும் அந்த பொண்ணை கஷ்டப்படுத்தாம, சுமூகமா இதை சரி செய்யப் பாருங்க..." என்று கூறிவிட்டு கங்காதரன் எழுந்து செல்ல, விமலா அழுது கொண்டிருக்கும் நேத்ராவை சமாதானம் செய்யச் சென்றார்.

"டேய் அண்ணா... என்ன டா இரண்டு நாள்லயே அண்ணி மேல காதலா!!!? அண்ணி அந்த ராமை மச்சானு கூப்பிடுறது உனக்கு பிடிக்கல போலியே!!!" என்று தமையனை கேலி பேசினான் கமல்.

தன்னுள் தோன்றிய ஏதோ ஒரு உணர்வை கமலின் முன்னால் காட்டிட விரும்பாத பவன் "என்ன டா உலறுர?.. போ போய் வேலையப் பாரு..." என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

இங்கே இப்படி என்றால் அங்கே அவளோ தன் கழுத்தில் ஏதோ பாரங்கல்லைச் சுமப்பது போல் பாரமாக உணர்ந்தாள் அவனின் மனையாள். அந்த தங்க சங்கிலியை வெறித்துப் பார்த்தவளுக்கு கழற்றி எரிந்திட கைகள் துடித்துக் கொண்டிருக்க, மனமோ பழி தீர்த்துவிட்டு அந்த வேலையை செய் என்று கட்டளையிட்டது.

செல்லும் வழியெங்கும் மனம் நிறைய கணம் நிரைந்திருக்க, கண்ணீர்விட்டு கணம் குறைக்க நினைத்தாள் பெண்ணவள். அவளின் அழுகையைத் தாங்கிட முடியாத அபி முதன்முறையாக ராமை எதிர்த்துக் கேள்வி கேட்டான்.

"அன்னைக்கு என்ன நடந்தது பையா? நீங்க சும்மா மட்டும் மிரட்டியிருந்திருப்பிங்கனு எனக்கு தோனல. வேற ஏதோ நடந்திருக்கு... என்னனு சொல்லுங்க பையா?" என்றான்.

அபியின் குரலில் தன்வலியில் இருந்த வெளிவந்த ராம் மிதுன்யாவை ஏரிட்டான்.

"நான் தப்பா பேசினேன் தான். அதுக்காக அவ எப்படி அவ தம்பியவிட்டு இப்படி ஒரு காரியம் செய்யத் துணியலாம்?" என்று ராம் சீற்றமாய் பதிலளிக்க,
இப்போது கேள்வி கேட்பது மிதுன்யாவின் முறையாகியது.

"அப்படி என்ன தப்பா பேசினிங்க ராம்?!?"

நேத்ரா அன்று தன் அறையில் நுழைந்திலிருந்து இன்று காலை தொலைபேசியில் உரையாடியது வரை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான் ராம்.

ராமிற்கு இப்போதும் தான் நேத்ராவிடம் தடந்து கொண்டமுறை தவறு என்று தோன்றிடவில்லை. அவனுக்குள் தோன்றிய நேத்ராவின் மீதான உணர்வு அவனுக்கு உரிமை இருப்பதாகவே உரைத்தது.

பின்னிருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு "அவளே முழுசா நம்பினேன் டி. என்னை ஏமாத்திட்டா... ஒரு வார்த்தை 'மிதுன்யா என்கிட்ட தான் இருக்கா... என் காலில் விழு. அவளை அனுப்பி வெச்சிடுறேன்' அப்படினு சொல்லிருந்தாக் கூட எனக்கு ஒன்னும் தெரிஞ்சிருக்காது. அவளுக்கும் இந்த கடத்தலுக்கும் துளியும் சம்மந்தம் இல்லாத மாதிரி பேசினாலே..." என்றுக் கூறி வருந்தினான்.

இப்படி புலம்பித் தவிக்கும் ராம் மிதுன்யாவிற்கு புதியவன். தான் மீண்டிருக்கும் நிலையைவிட, தன் குடும்பத்திற்கு என்ன பதில் சொல்வது என்ற யோசனையைவிட, நேத்ராவின் ஏமாற்றமே அவன் மனதை வதைப்பதை உணர்ந்து கொண்டாலும் அதற்கான காரணம் என்ன என்பதை அறிய மறந்தாள். அலசி ஆராயும் மனநிலையிலும் அவள் இல்லை.

-ஊடல் கூடும்​
 
Top