• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 4

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 4

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர்!.

"அக்கா!" என்று குரல் கேட்கவும் "வா சுபா!" என்ற வார்த்தைகள் பாதிபாதியாய் வர, சுபத்ரா கைகளில் சாப்பாட்டுடன் வந்திருந்தாள்.

"இன்னும் சாப்பிடலனு முருகா சொன்னான்.. சாப்பிடாமல் இருந்தா எல்லாம் ஆச்சா?" சுபத்ரா கேட்டபடி இரவு உணவாய் இட்லியினை எடுத்து ஊட்ட போக,

"சுபா.... ம... து..." என்று திக்கி திக்கி பேசிய வளர்மதியின் எண்ணம், கவலை, வேதனை எல்லாம் புரியாமல் இல்லை சுபத்ராவிற்கு.

அதற்கு காரணமானவன் மேல் கோபம் வயிற்றில் இருந்து தீயாய் ஏறிய, அது மேலே பரவி அடுத்தடுத்து நடந்த நிகழ்வின் தாக்கத்தில் கண்ணில் நீரைக் கொண்டு வந்து கொதிக்க வைத்து நிற்க, சகோதரி முன் மறைத்து உள்ளிழுத்துக் கொண்டவள்,

"மதுவுக்கு என்ன? நல்லா தான் இருப்பா.. உன்னை தேடி சீக்கிரமே வருவா!" என்றாள்.

"ம..து பிற.. ந்த..." என்று சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் வளர்மதியின் உடல் முழுதும் எரிச்சலும் வலியும் ஏற்பட, அவள் கண்கள் காட்டிய திசையில் காலண்டரையும் அவள் வார்த்தையையும் கொண்டு தான் மதுவின் பிறந்த தினம் நியாபகம் வந்தது சுபத்ராவிற்கு.

மூச்சை முட்டிக் கொண்டு வந்த அழுகையை எப்படி மறைப்பதென தடுமாறி தான் போனாள் சில நொடிகளில் சுபத்ரா.

தனக்கே இப்படி இருக்க பெற்றவள் பதறாமல் எப்படி என தோன்றவும் பற்களை கடித்து தன்னை சமன் செய்து கொண்டவள்,

"மதுக்கு நாலு வயசு முடிஞ்சிருச்சு க்கா.. அடுத்த வருஷம் நம்ம கூட தான் மது பிறந்தநாள்.. நான் சொல்றது நடக்குதா இல்லையா பாரு! நீ அடிக்கடி சொல்லுவியே சுபா சொன்னா அப்படியே நடக்கும்னு.. இதுவும் நடக்கும்!" என்று கூற, வளர்மதி கண்களிலும் வலியை தாங்கி தன் தங்கையைப் பார்த்தாள்.

"போதும்! மது வரும் போது அவளை கொஞ்சுறதுக்கு கொஞ்சமாவது தெம்பு வேண்டாமா? சும்மா சும்மா சாப்பிடாம இருந்தா யாருக்கு கஷ்டம்? நாளைக்கே கூட உன் முன்னாடி அவ வந்து நிற்கலாம்.. அப்ப தூக்கி கொஞ்சனும்னா இப்ப கொஞ்சமா சாப்பிடு!" என்று கூறி, பலவாறு சமாதானம் செய்து சிறிதாய் அதட்டியும் வைத்து வளர்மதியை சாப்பிட வைத்தாள் சுபத்ரா.

"சாப்பிட்டாங்களா சுபா பாப்பா?" முருகன் கேட்க,

"சாப்பிட்டா அண்ணா! எனக்கு நீங்க காலையிலே ஒரு போன் பண்ணி இருக்கலாம் இல்ல? அசதியில நான் பிரண்ட் ரூம்லயே தூங்கிட்டேன்" சுபத்ரா கூறவும்,

"நானே பார்த்துக்கலாம்னு நினச்சேன் பாப்பா.. வளர் பாப்பா இவ்வளவு அடம் பண்ணாதே!" என்றார் அந்த வீட்டில் பல வருடங்களாய் வேலை செய்யும் முருகன்.

"ப்ச்! இன்னைக்கு மது பிறந்தநாள் ண்ணா!" என்றாள் கவலையாய்.

"எப்படி வாழ வேண்டிய பொண்ணு.. படுபாவி பய.. இப்படி படுக்க வச்சுட்டானே!.. பெத்த பொண்ணை பார்த்தாவது சந்தோசப் பட்டுக்கலாம்னா அதுக்கும் நம்ம வளர் பாப்பாக்கு குடுத்து வைக்காம போச்சே!" என்று முருகனும் மனதார வருந்தினார்.

"இல்ல ண்ணா! மது கண்டிப்பா நம்மகிட்ட வருவா.. நான் அவளை தேடலைனு நினைக்குறிங்களா? அவளை அக்காகிட்ட கொண்டு வந்து நான் சேர்ப்பேன்" என்று தீவிரமாய் சுபத்ரா கூற,

"நடந்தா சந்தோசம் தான் பாப்பா.. நீ வந்து சாப்பிடு!" என்று அவர் அழைக்க,

"நேத்து பிரைடல் ஒர்க் முடியவே லேட் நைட்.. அதான் காலைல அசந்து தூங்கிட்டேன்.. இப்பவும் ஒரு கஸ்டமர் பார்க்க வர சொன்னதால தான் லேட்!" என சுபத்ரா கூறினாள்.

"என்கிட்ட எதுக்கு பாப்பா சொல்லிக்கிட்டு.. சாப்பிடாம அடம் பண்ண போய் தான் உனக்கு போன் பண்ண வேண்டியதா போச்சு.." என்று கூற,

"இருக்கட்டும் ண்ணா! உங்களுக்கு தான் எங்களால கஷ்டம்!" என்றவள்,

"அங்கை அம்மா வந்தாங்களா?" என்று கேட்டாள் தினமும் வளர்மதியை சுத்தமாய் வைத்துக் கொள்ள வரும் பாட்டியை.

"வந்தாங்க! அவங்களும் சொல்லிப் பார்த்து கேட்கல.. அவங்க பேரன் வர்ற நேரம் ஆகவும் தான் கிளம்பினாங்க!"

"சரி நான் பார்த்துக்குறேன்.. நீங்க கிளம்புங்க" என்று கூறி அவரை அனுப்பி வைத்தாள்.

மேலே மூன்று படுக்கை அறை, கீழே இரண்டு படுக்கை அறை, முன்னறையை தாண்டி பெரிய ஹால் என பெரிய வீடு தான்.

துள்ளி குதித்து விளையாடி என அன்னை, தந்தை, சகோதரி என மகிழ்ச்சியில் இருந்த இல்லம் இன்று அமைதியாய் வெறுமையாய் காட்சியளித்தது.

அதை நினைத்துப் பார்த்தால் நினைவுகள் சுற்றி சுழன்று தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் என உணர்ந்தவள் அதனை விரட்டிட மனதை சமன்படுத்த என முகத்தில் நீரடித்து கழுவினாள்.

நினைப்பது எல்லாம் நடந்திடுமா என்ன? அவன் நினைவு நெஞ்சை விட்டு நீங்கி இருந்தால் தான் இன்று தன் வாழ்க்கையின் முடிவை வேறு பாதைக்கு கொண்டு சேர்த்திருப்பாளே!

சாப்பிட மனம் இன்றி சகோதரி அறைக்கு வர, மாத்திரையின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள் வளர்மதி. அருகே இருந்த சோபாவில் தானும் படுத்துக் கொண்டாள்.

அருகே மாட்டியிருந்த ஒரு வயது மதுவின் படத்தைப் பார்த்தவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழித்தோட, சத்தமின்றி கரைந்து கொண்டிருந்தாள் மதுவோடு அவனின் நினைவுகளோடும்.

**********

"ஹியூமனாடா நீயெல்லாம்? இன்னைக்கும் லேட்டா போனா அடுத்தவாரம் நான் அரங்கேற்றம் பண்ணின மாதிரி தான்.." கோபத்தோடும் சிணுங்களாய் சக்தி அபியினை திட்ட,

"உன்னை மாதிரியே பைக்கும் உதவாம போகும்னு நான் நினைக்கலையே!" என்றவனை முறைத்து நின்றாள் சக்தி.

சக்தியின் ஸ்கூட்டியை கணேசன் வாங்கி சென்றிருக்க, அபி சக்தியை நடனாலயத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தவன் வண்டி பாதியிலேயே நின்று போனது.

"சூப்பர் மச்சி!" என்று திடீரென உற்சாகமான குரலில் சக்தி கூற, அவள் உற்சாகத்தில் கலந்து கொள்ளவில்லை விஷயம் இல்லாமல் இருக்காது என அறிந்த அபிநந்தன்.

"அடுத்த தெரு தானே ஆதி வீடு? கால் பண்ணி வர சொல்லு" என்று சக்தி கூற,

"ம்ம்க்கும்ம்! வந்துட போறான்.. நீ வேற! நான் நடுரோட்ல நிக்குறேன்னு சொன்னாலே ஓரமா நில்லுன்னு சொல்லிட்டு கட் பண்ணிடுவான்.. நீயும். நிக்குறனு சொன்னா ஆட்டோல போங்கனு சொல்லுவான்" என்றான் நண்பனை அறிந்து.

"இதெல்லாம் ஆகறது இல்லை.. பேசாமல் ஆட்டோவே கூப்பிடலாம்!" அபி சொல்ல,

"ம்ம்ஹும்ம்! நான் வர மாட்டேன்.. நான் சொல்ற மாதிரி சொல்லு அவன்கிட்ட!" என்றவள் ப்ளனை கேட்டு வாயில் கைவைத்தான் அபி.

"லேட்டாகுது ஆத்தா வையும்னு இப்ப தான இந்த வாய் சொல்லிச்சு?" அபி கேட்க,

"அது வேற வாய்!" என்று அசால்ட்டாய் கூறி நின்றாள். விதியே என ஆதிக்கு அழைத்தான் அபி.

"எங்க டா இருக்க?" அபி கேட்க,

"கிளம்பிட்டேன் டா!" ஆதி.

"நான் உன் வீட்டு பக்கத்து தெருல தான் நிக்குறேன்.. பைக் மக்கர் பண்ணுது.. கொஞ்சம் வா!"

"இந்த நேரத்துல ஆபீஸ் போகாம இங்க எதுக்கு நீ வந்த?" சரியாய் கேட்டான் ஆதி.

'விவரம்! விவரம்! என்னனு தான் மூளைய வச்சானோ கடவுள்' சக்தி நினைக்க,

"ப்ச்! டேய் வா டா சொல்றேன்!" என்று அபி கூற,

"சரி! சரி! வர்றேன்!" என்று கூறி இடத்தையும் கேட்டு அங்கே செல்ல, அபியோடு நின்றிருந்தாள் சக்தி.

"குட் மார்னிங் அபி! ஹாய் சக்தி!" என்ற மது பள்ளி சீருடையில் இருந்தாள்.

"அடிச்சது பாரு லக்கி ப்ரைஸ்! மது ஸ்கூல்க்கு ஆப்போசிட் தானே நடனாலயா?" அபி முணுமுணுவென சக்தியிடம் கேட்க,

"இப்ப பாரு நம்ம பெர்ஃபார்மன்ஸை!" என்ற சக்தி,

"ப்ச்! லேட்டாகுது அபி.. டூ சம்திங்" என்றாள்.

"ப்பா டைம் ஆச்சு!" மதுவும் கூற,

"டேய்! ஸ்கூல் தானே போற? அப்படியே சக்தியை ட்ரோப் பண்ணிடேன்.." என்று அபி சொன்னது தான் தாமதம், வண்டியில் இருந்து இறங்கிவிட்டான் ஆதி.

"மது! அபி கூட ஸ்கூல் போய்ட்டு வா.. ஈவ்னிங் அப்பா பிக்கப் பண்ணிக்குறேன்!" என்று ஆதி மகளிடம் கூற, வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்க பெரும்பாடுபட்டு போனான் அபி.

அதுவும் சக்தி முகம் போன போக்கில் வாய்விட்டு சிரித்து நண்பனிடம் வாங்கிக் கட்டிக் கொள்வோமோ என பயந்து சிரிப்பை அதக்கியது எல்லாம் இன்னுமான துயரம்.

"சீக்கிரம் போய்ட்டு வா.. நான் இங்க இருக்குற மெக்கானிக்கு கால் பண்றேன்!" என்ற ஆதி அபி வண்டி நின்ற புறம் வந்துவிட, சக்திக்கு புசுபுசுவென்று தான் வந்தது.

"போலாமா?" அபி கேட்ட விதத்தில்,

"போலாம்! போலாம் அபி! சக்தி! பின்னாடி தனியா உட்கார்ந்துப்ப தானே?" என்று மது கேட்க,

"நேரம் டி! ஏன் இல்லைனா உன் அப்பா வந்து புடிச்சிக்குவாரா?" என்றவள் "இதுக்கு ஆட்டோவே பெட்டர்!" என்றும் கூற,

"சொன்னேனே!" என்று சிரித்து வண்டியை கிளப்பி இருந்தான் அபி.

வழி எங்கும் புலம்பல் சக்தியிடம் நிற்காமல் வர, "சக்தி எப்பவுமே இப்படி தானா அபி?" என்று கேட்டாள் மது.

"ஆமா மதும்மா! அவளுக்கு வாய் மட்டும் இல்லைனு வச்சுக்கோ நாய் தூக்கிட்டு போய்டும்" என்றவன் இருவரையும் இறக்கிவிட்டு வந்தான்.

அபி வண்டியை அங்கே மெக்கானிக்கை வர சொல்லி எடுத்து போக சொல்லிவிட்டு வந்து சேர, இருவரையும் அழைத்தார் சூர்யா.

"குட் மார்னிங் சார்!" என்று அபி வர, பின் அமைதியாய் வந்து வணக்கம் தெரிவித்து அமர்ந்தான் ஆதி.

"ப்ராஜெக்ட் ஒன்னு வந்திருக்கு ஆதி!" என்று சூர்யா கூற,

"ஓஹ்!" என்று ஆதி கூறவும், "ஆன்சைட் எல்லாம் அவன் போகல சார்!" என்றான் அபி.

"அதான் தெரியுமே! ஆதி சரினு சொன்னாலும் நீ இங்க இருக்குற வரை அவனை அனுப்ப முடியாது" இலகுவாய் தான் கூறினார்.

"தெரிஞ்சிடுச்சு இல்ல? இனிமேல் இவனை நான் பயந்து பயந்து உங்க ரூம்க்கு அனுப்ப வேண்டாம் பாருங்க! ஆபீஸ் வேலையோட இதையும் ஒரு வேலையா பார்த்துட்டு இருந்தேன்!" என்று அபி.

"இதை மட்டும் பார்த்தன்னு சொன்னா நம்புறேன்.. ஆபீஸ் ஒர்க் நீ பார்த்து நான் பார்த்தது இல்லையே!" என்று சூர்யா சிரிக்க, அபி பதில் சொல்ல துவங்கவும்,

"ப்ச் அபி!" என்ற ஆதி, "சொல்லுங்க சார்! என்ன ப்ராஜெக்ட்?" என்று கேட்க,

"குட் ஸ்பைரிட்! இந்த ப்ராஜெக்ட்ல நான் உங்களோட அபியையும் ஜாயின் பண்ணிருக்கேன்" என்றார் சூர்யா.

"அய்யயோ! இவனோடவா? இவன் வேலை செய்ய சொல்வானே!" அபி பதற,

"தாட்ஸ் ஒய்!" என்று சிரித்தபடி முடித்து ஆதியிடம் விவரம் கூறி கைகொடுத்து அனுப்பி வைத்தார் சூர்யா.

தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
சக்தி பிள்ளைக்கு பல்பு வாங்குறதே வேலையா போய்டுச்சு அபி சொல்லியும் கேட்டாளா 😄😄😄😄😄😄😄
 
Top