• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 6

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 6

"வீட்டுக்கு ஒரு போன் பண்ணி இருந்தா யாராவது வந்திருப்போம் இல்லை? அவ்வளவு பெரிய மனுஷங்க நீங்க என்ன?" என சென்பகவல்லி கோபமாய் கேட்க,

"பாட்டிம்மா! அந்த நேர டென்ஷன்! ஆதி பயந்து நானும் சக்தியும் ஷாக் ஆகி.. ப்ச்! அந்த நேரம் என்ன பண்றதுன்னு கூட தெரியல பாட்டிம்மா!" சமாதானமாய் அபி கூற,

"சரி சரி! அதான் இப்ப மது சரி ஆகிட்டா இல்ல? விடுங்க.. டேப்லெட் எல்லாம் வாங்கிட்டியா?" என்ற சீதாவிற்கு மதுவிற்கு மூச்சு திணறல் அடிக்கடி வரும் என்றளவு மட்டுமே தெரிந்திருந்தது.

அதற்கான மருத்துவம் தான் அடிக்கடி ஆதி பார்த்துக் கொண்டிருக்கிறான் என தான் அங்கே அனைவரும். நினைத்திருக்கின்றனர்.

"கேட்டதும் எங்களுக்கே பதட்டமாகி போச்சு அபி! என்ன இந்த பசங்க நம்மகிட்ட சொல்லலையேனு வேற தோணுச்சு.. கிளம்பி வரலாம் நினச்சேன்.. நீ அதுக்குள்ள இங்க தான் வர்றோம்னு சொல்லிட்ட!" தியாகராஜன் கூற,

"போன் சைலன்ட்ல இருந்துச்சு மாமா! அதான் நீங்க பண்ணும் போது கவனிக்கல!" என்றான் அபியும்.

மது வந்ததும் நல்ல உறக்கத்திற்கு சென்றிருக்க, மற்றவர்கள் பேசிக் கொண்டு இருந்தனர்.

ஆதியும் சக்தியும் அமைதியாயிருக்க, கணேசனும் அங்கே தான் இருந்தார்.

கணேசன் மட்டும் எதுவும் பேசவில்லை. தூக்கத்தை கெடுத்து இப்படி உட்கார வைத்துவிட்டார்களே என்று தான் அவர் நினைத்து அமர்ந்திருந்தார்.

"சரி அதான் பார்த்துட்டு வந்துட்டாங்க இல்ல? எல்லாம் போய் தூங்க வேண்டியது தானே?" என்று கணேசன் எழுந்து மணியைப் பார்க்க, பண்ணிரண்டை கடந்து கொண்டிருந்தது.

"ஆளப் பாரு! ஒரு வார்த்தை எப்படி இருக்கா என்ன எதுனு கேட்கல.. வாய் மட்டும்!" என்று முணுமுணுத்து ஈஸ்வரி கூற,

"நீங்க போங்க!" என்று கணவனை கூறிய சீதா,

"அண்ணே! நீங்களும் போய் தூங்குங்க! கூட்டிட்டு போங்க அண்ணி!" என்றார் ஈஸ்வரியிடம்.

"ஹ்ம்! அவர் மாத்திரை போட்டும் பச்ச குழந்தையாச்சேன்னு தூக்கம் வராம இருந்தார் நீங்க வர்ற வரைக்கும்.. காலையில பேசிக்கலாம்.. எல்லாரும் தூங்குங்க!" என பொதுவாய் கூறிவிட்டு தியாகராஜன் பின்னே சென்றார் ஈஸ்வரி.

"சக்தி!" என சீதா சக்தியின் தோளைத் தொட,

"ஹான்!" என விழித்தவள் அப்போது தான் நடப்பிற்கு வந்தாள்.

"போய் தூங்கு டி நேரமாச்சு இல்ல!"

"ஹ்ம்!" என்ற சக்தி ஆதியைப் பார்க்க, வந்ததில் இருந்து யாரிடமும் பேசிடவில்லை அவன்.

"ஆதி சாப்பிட்டானா அபி?" செண்பகவல்லி கேட்க,

"நான், ஆதி, மது மூணு பேருமா தான் சாப்பிட்டோம் பாட்டிம்மா! அதுக்கு அப்புறம் தான்.." என்று ஆதியைப் பார்த்தான்.

"சரிப்பா! எல்லாம் சரி ஆகிடும்.. போய் தூங்குங்க" என்று கூற,

"ஆதி!" என்று அழைத்தான் அபி. பதிலில்லை..

"ஆதி.." என தொட்டு திருப்பவும் அவனைப் பார்த்தவன் எதுவும் பேசாமல் இருக்க,

"நீ வா என்கூட" என்ற அபி ஆதியை கைப்பிடிக்க, எழுந்து நடந்தான் அவன்.

"பாவம் த்தை ஆதி!" சீதா கூற,

"ஒரு விவரமும் அவனை இன்னதுனு தெரியாம என்னனு ஆறுதல் சொல்ல? மனசுக்கு சங்கடமா தான் இருக்கு சீதா! எதுக்கும் நாளைக்கு மது பேர்ல போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்துருவோம்!" என்றார் செண்பகவல்லி.

"சரிம்மா!" என்ற சீதா,

"நீ போகலையா இன்னும்? போய் தூங்கு சக்தி!" என்று கூற,

"அதான் அபி சொன்னானே நேர்ல அப்படி மதுவை பார்க்கவும் சக்தி ரொம்ப பயந்துட்டான்னு.." என்று சக்தி தலை கோதிய செண்பகவல்லி,

"ஒன்னும் இல்ல டா.. கடவுள் நல்லவங்களை சோதிக்க தான் செய்வார் கைவிட மாட்டார்!" என்று கூற, தலையசைத்து உள்ளே சென்றாள்.

"ஆதி! இப்படி இருக்காத டா.." அபி தாள முடியாமல் கூற,

"அபி! எனக்கு அப்பப்ப மது பயம் காட்றா டா.. நான் அவளை நல்லா பார்த்துக்கலைனு தான டாக்டர் சொல்லிட்டு போறார்.. எனக்கு தெரிஞ்ச வரை நான் எங்கேயும் தப்பு பண்ணலையே டா?" ஆதி தன் மனதில் உரு போட்டதைக் கூற,

"தப்பு உன்கிட்ட இல்ல ஆதி! சில விஷயங்களை இயற்கை தான் நமக்கு கத்து கொடுக்கும்.. மதுக்கும் அப்படி தான்.. நான் சொல்றேன்.. மது கொஞ்ச நாள் இங்க நம்ம வீட்டுல இருக்கட்டும்!" என்றதும் ஆதி மறுப்பாய் கூற வர,

"ஆதி! புரிஞ்சிக்கோ! ஒரு பேமிலி பாண்டிங்ல மது கொஞ்ச நாள் இருக்கட்டுமே! மதுனா மது மட்டும் இல்லை நீயும் கூட தான்.. பார்த்துக்கலாம்.. இவ்வளோ பேர் இருக்கோம்ல?" அபி.

ஆதியால் பதில் கூற முடியவில்லை. சிரமம் கொடுக்க வேண்டாம் என்று தான் தோன்றியது.. கூடவே மதுவின் உடல்நிலையும். மறுக்க முடியாத காரணம் அபி கூற, சரி என்று தெரிந்த பின் ஒப்புக் கொள்ளுதல் தானே சரி.

நீண்ட நாள் அதையும் தாண்டி நீண்ட இந்த மூன்று வருடங்களுக்கு பின்பு அவளின் அந்த ஒருவளின் நியாபகம் ஆதிக்கு.

'என்னைக்கும் எனக்கு முதல் பேபி என் மதும்மா தான்' கூறியவளை நினைத்தவன் தலையை உடனே உலுக்கிக் கொண்டான்.

"என்னாச்சு டா?" அபி கேட்க,

"ஹ்ம்ம்! ஒண்ணுமில்ல.. மது இருக்கட்டும்.. நான் அங்கேயே இருந்துக்குறேன்"

"உன் பொண்ணு நீ இல்லாம இருந்துட்டாலும்!"

"நான் வந்து பார்த்துக்குவேன் தினமும்.. நான் சொன்னா மது கேட்பா.."

"ப்ச்! சொன்னா கேட்குறவனா நீ? தூங்கு காலையில பேசிக்கலாம்" என்று அபி படுத்துக் கொள்ள,

மதுவைப் பார்த்து விட்டு படுக்கையில் விழுந்தவன் நியாபகத்தில், மறந்ததாய் நினைத்தவளை மனது நியாபகத்தில் கொண்டு வந்து இம்சித்தது.

எத்தனை வருடங்கள் சென்றாலும் கடவுள் நிகழ்த்தி வைக்கும் தருணம் அதை மாற்றிட முடியாதே!

அடுத்த நாள் காலை மது எழுந்த போது எப்போதும் போலவே அவள் இருக்க, ஆதியால் அவ்வாறு இருக்க முடியவில்லை.

அன்று மதுவிற்கு விடுமுறை சொல்லிவிட்டான் பள்ளியில். அலுவலகம் செல்லவே மனநிலை இல்லை என்றாலும் இங்கே அபி வீட்டினரோடு எப்படி? என்று நினைத்தவன், காலை மது எழுந்ததும் அவளிடம் பேச,

"ஐம் ஆல்ரைட் ப்பா! நீங்க போய்ட்டு வாங்க!" என்றாள் மது.

"சூர்டா மதும்மா?" ஆதி கேட்க,

"ஹன்ட்ரேட் பெர்ஸன்ட் ப்பா!" என்று சிரித்தாள்.

"அதான் மது சொல்றாளே ஆதி! நாங்க இத்தனை பேர் இருக்கோம் இல்ல? எங்க மேல நம்பிக்கை இல்லையா?" சீதா மதுவிற்கு பால் கொண்டு வந்தவர் கேட்க,

"அப்படி இல்லை சீதாம்மா.. நான் இருக்கனும்னு மது நினைப்பா இல்லையா அதான் கேட்டேன்" என்றான் ஆதி.

"நீயும் இன்னைக்கு ஒருநாள் ரெஸ்ட் எடேன்.. அபி சொன்னான்.. இப்ப வந்த ப்ராஜெக்ட்ல உன்கூட அபியை தானே போட்டிருக்காங்களாம்? அவனை பார்த்துக்க சொல்லு! நீ மதுவோட இரு!" என்று சொல்வதை கேட்டபடியே வந்திருந்தான் அபி.

"ம்மா! இதெல்லாம் அதிகம்.. அவனை வச்சி தான் நான் ஓட்டிட்டு இருக்கேன் அங்க.. ஏபிசிடிய எல்லாம் மாத்தி மாத்தி போட்டு வச்சிருப்பானுங்க ம்மா.. ஒன்னுமே புரியாது!" அன்னை பேச்சை கேட்டு வராமல் இருந்திருவானோ என நினைத்து அபி கூற,

"நீங்க போய்ட்டு வாங்க ப்பா.. அதான் பாட்டி சொல்றாங்க இல்ல?" என்றாள் மதுவும்.

"நீ சமத்து டா செல்லம்.." அபி கூற,

"அப்பாக்கு ரெஸ்ட் குடுத்து நீ வேலை பாரு அபி!" என்றாள் மது கட்டளை போல.

"அதுக்கு அவன் இங்கேயே இருக்கலாம்.. ரெஸ்ட் குடுக்கணுமாம்!" என்ற அபி மதுவை கவனித்துக் கொண்டு தான் வருகிறான்.. அதை பேச்சில் காட்டிடவில்லை.

"சக்தி எங்கே ம்மா?" அபி கேட்க,

"இவ்வளவு நேரமும் மது எழுந்ததுல இருந்து கூட தான் டா இருந்தா.. ரிகர்சல் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தா கிளம்புறாளோ என்னவோ!" என்று கூற,

"சரி நான் அவகிட்ட சொல்லிட்டு அப்படியே கிளம்புறேன்!" என்றவன்,

"ஆதி! அம்மா பார்த்துக்குவாங்க.. நீ போய் கிளம்பிட்டு வா.. நான் சக்திகிட்ட சொல்லிட்டு வர்றேன்!" என்று சென்றான்.

ஆதி ஏற்கனவே சக்தி விஷயமாய் அபியிடம் பேச முடிவெடுத்து இருக்க, அதை இப்போது சொல்வதா என்று யோசித்தபடி இருந்தான்.

மதுவுமே சமாளித்துக் கொள்வதாய் சொல்லியதோடு தெளிவாயும் இருக்க, அபி வீட்டின் ஒவ்வொருவரும் வேறு தனிதனியாய் நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அவனுக்கு கொடுக்க, அரை மனதாய் என்றாலும் ஒருவழியாய் கிளம்பினான் அலுவலகத்திற்கு.

***********

"நாளைக்கு மார்னிங் வந்துடுவேன் க்கா.. நீ அடம் பண்ணாம சாப்பிடணும்.. முருகா இங்க தான் இருப்பான்.. நைட்டுக்கு அங்கை அம்மாவை தங்க வர சொல்லி இருக்கேன்.. அவங்க பேரனையும் கூட்டிட்டு வருவாங்க.." சுபத்ரா வளர்மதியிடம் கூற,

"நான் பார்த்துக்குவேன் சுபா!" என்றார் தனித்தனி வார்த்தைகளாய் வளர்மதி.

"தெரியும் க்கா! இருந்தாலும் சொல்றேன்.. நம்ம ஊர்ல வச்சிருந்த ஃபன்க்ஷன் தான்.. லாஸ்ட் மினிட்ல மாப்பிள்ளை வீடு சைட்ல பெரிய ஆளுங்க எல்லாம் வர்ராங்கனு சொல்லி சென்னைல பெரிய மண்டபத்துக்கு மாத்திட்டாங்களாம்.. எப்பவாச்சும் தான் பாட கூப்பிடுவாங்க.. நான் இங்கே தானேனு சரினு சொன்னேன்.. இப்ப அண்ணா நகர் போக வேண்டியதாகிட்டு.. ஈவ்னிங் ரிசெப்ஷன் முடியவும் மிட்நைட் கிளம்ப முடியாதே! சோ மண்டபத்துல இருந்து மார்னிங் கிளம்பி வந்துடுறேன்" என்று தன் சகோதரிக்கு விளக்கமாய் புன்னகைத்து சுபத்ரா கூற, மெல்லிய புன்னகை சிந்தினாள் வளர்மதி தங்கை முகம் பார்த்து.

சுபத்ரா அழகுக்கலை நிபுணர்.. தனியாய் ஒரு பார்லரும் நடத்தி வருபவள் அதனோடு குரல் வளமும் அவளுக்கு இசையில் விருப்பமும் என இருக்க தந்தை இருந்தவரை மட்டும் அதை முறையாய் கற்றிருந்தாள்.

இப்போது நண்பர்கள் மூலம் அவ்வபோது ஈவேன்ட்டில் கலந்து பாட வாய்ப்புகள் வர, தனக்கு பிடிக்கும் என்ற காரணத்திற்காக மட்டும் எப்போதும் என்றில்லாமல் எப்போதாவது பாட ஒத்துக் கொண்டு செல்வாள். இப்போதும் அப்படி தான் சென்னை செல்கிறாள்.

"பார்த்துக்கோ முருகா! நைட்டுக்கு அங்கை அம்மா வந்த அப்புறம் நீங்க கிளம்புங்க.. அக்காவை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க.. ஏர்லி மார்னிங் எல்லாம் நான் வந்துடுவேன்னு தான் நினைக்குறேன்" என்று சுபத்ரா கூற,

"போய்ட்டு வா பாப்பா.. நாங்க எல்லாம் இருக்கோம் இல்ல?" என்று அவர் கூறவும் ஒரு பெருமூச்சுடன் கிளம்பி இருந்தாள் வீட்டில் இருந்து.

எதிர்பாக்காத ஒரு சந்திப்பு.. தேடும் ஒருவனை அவளும் பார்க்கவே கூடாது என நினைத்தவளை அவனும் சந்திக்கும் வாய்ப்பு தான் அந்த சந்திப்பு.

தொடரும்..