• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்.. 2

kkp38

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
13
6
3
Tamil nadu
அத்தியாயம்..2

ஆட்டிசம்..


ஆட்டிசம் ஸ்பெக்ட்ரல் கோளாறு என்பது அறிவுசார் இயலாமை, மோட்டார் ஒருங்கிணைப்பு, மற்றும் கவனத்திலுள்ள சிரமங்கள், தூக்கம், இரைப்பை குடல் தொந்தரவுகள் போன்ற உடல் ஆரோக்கிய பிரச்சினைகளுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம்..



"வாம்மா விசாலி அதிசயமா சீக்கிரமா வந்துட்ட'', என்று சிரித்துக் கொண்டே கதவைத் திறந்து விட்டார் தணிகாசலம்.

''ஆமாம் பா இன்னிக்கு கம்பெனியில் கொஞ்சம் வேலை குறைவாக இருந்தது. அது தான் அசிட்சென்ட் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வந்துட்டேன்''.. என்று சொன்னவள்..

'எங்கப்பா உங்க அருமை பொண்ணு வர்ஷினியை காணாம்..

ஆபிஸில் வேலையைக் கவனிக்காமல் சீக்கிரம் வந்ததற்கு ஆயிரம் கேள்வி கேட்பாளே ..

கம்பெனியில் இருக்கும் டூல்ஸ் இருந்து மிஷின் வரை பார்ட் பார்ட்டா நலம் விசாரிப்பாலே '',

என்று அவரின் காதின் அருகே மெதுவாகக் கேட்டவளைக் கண்டு சிரித்து விட்டார் தணிகாசலம்.

''என்னமோ மா என் பொண்ணு அப்படி என்ன சொல்லி உன்னை மிரட்றாலோ தெரியலே இந்தளவுக்கு பயப்படற மாதிரி நடிக்கீறியே ''..

என்று கேலிப் பண்ணிச் சிரித்தார்.

''ம்க்கும் உங்க பொண்ணை நீங்க தான் மெச்சிக்கணும்'' என்றவள்..

''எங்கே காணம் அம்மணியை.. குட்டி கூட இருக்கிறாளா'',

என்று விசாலி கேட்க,

''இல்லமா குட்டிம்மா தூங்கிரா.. வர்ஷினி மாடியில்தான் இருக்கிறா.. வாடா இன்னிக்கு உனக்குப் பிடிச்ச சாப்பாட்டைத் தான் ரமணிம்மா செய்திருக்காங்க .. சாப்பிட்டு மேலே போய் நீயும் உன் சகியும் கொஞ்சிக் கொள்ளுங்க.. என்று சொல்லவும்,

''ப்..பா'',.. என்று காலை உதறிச் சிணுங்கிய விசாலி..

''அப்படியே உங்க பொண்ணை கொஞ்சிட்டாலும்… என்று முணுமுணுத்து விட்டு..

''ஏன்பா அவளை இவ்வளவு பிடிவாதமாக வளர்த்தீங்க'', என்று கேட்டதும் தணிகாசலம் முகம் சுருங்கிப் போனது.

''சாரி சாரிப்பா, எனக்கு அவளுடைய வாழ்க்கையை இப்படிச் சிக்கலாக்கிக் கொள்கிறாளே என்ற வருத்தத்தில் தான்'', என்று சொல்லுவும்,

''ம்ம்..சரி சரி விடுடா பார்த்துக்கலாம். எந்த கோடியிலோ பிறந்த இருவரைச் சந்திக்க வைத்த கடவுள் சேர்த்து வைக்கவும் வழி செய்யாமலா இருப்பாரு'' என்று சொல்லியவரை...

''ம்க்கும் அதுக்கு உங்க பொண்ணும் ஒத்துழைக்கணும்'' என்று சொல்லியவள்

''நான் வர்ஷியை பார்த்துட்டு வந்தபிறகு சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கிறேன்''என்று சிரித்துக் கொண்டே மாடி ஏறினாள் விசாலி.

மாடியறையை திறந்து உள்ளே போனவளோ மேசையின் முன்பு வர்ஷினியின் கைகளால் வரைந்த ஆடையின் வடிவமைப்புகளில் வண்ணங்களும் சேர்ந்து மிளிர்ந்ததைக் கண்டு வியந்து போனாள் விசாலி..


''ஏய் வர்ஷி பேபி பிரமாதம் டா.. செமயா இருக்கு''..

என்று சொல்லிக் கொண்டே வரைந்ததை எடுத்துப் பார்த்தவள் அதில் வரைந்திருந்த டிசைன்களில் சிறு சிறு நுண்ணிய வேலைப்பாடுகளையும் வரைந்து வைத்திருப்பதைக் கண்டு மனம் எப்பவும் போல அவளின் திறமையில் வியந்து தான் போனது விசாலிக்கு.

''ஏய் குரங்கே .. என்னைப் பேபினு சொல்லாதே சொல்லறேனுல, எனக்கே ஒரு பேபி இருக்கிறதாம், இதில் என்னைப் பேபினு கொஞ்சிறீயா''..

என்று விசாலியை முறைத்தாள் வர்ஷினி.

அதைப் பார்த்துக் கலகலத்து சிரித்த விசாலியோ முகம் மாறி...

'' என்னையா குரங்கு சொன்ன.. உன்னை என்ன செய்ய போறேன் பாரு'' ..

என்று மிரட்டிய விசாலி என்றும் போல இன்றும் தன் கேலி குரலில்..

''வர்ஷி.. பேபினு உன்னைக் கொஞ்சுகிறேன் நினைச்சீயா.. பேய் பிசாசு சொல்லா முடியாமல் சேர்த்து பேபினு சொல்றேன்.. அது உனக்கே தெரியாதாம் பேபிபிபி''..

என்று சிரித்தவளை கோபத்துடன் பார்த்த வர்ஷினியோ தன் கைக்குக் கிடைத்த பொருட்களை எடுத்து விசாலி மேலே எறிய…

''ஏ,ஏய்.. பேச்சு பேச்சா இருக்கணும்.. இப்படி வயலண்டா அடிக்க கூடாது.. அப்பறம் படாத இடத்தில் பட்டால் என்னை எவன் கல்யாணம் பண்ணி்க்குவான்''..

என்று சொல்லியவளைப் புரிந்தும் புரியாமல் பார்த்தவளைக் கண்டு..

''அதான்டி முகத்தில் அடிப் பட்டால் என் அழகான முகம் மாறி போச்சுனா அப்பறம் எவன் பார்ப்பான்'', என்று கன்னத்தில் கைவைத்து விழிகளை சிமிட்டியபடி சொல்ல,

அதைக் கேட்டு காண்டான வர்ஷினியோ ''அழகான முகமா அப்படி ஒன்னும் என் கண்ணுக்குத் தெரியலையே'', ..

என்று சொல்லிக் கலாய்த்தவளை விசாலி அடிக்கத் துரத்தினாள் ..

அறைக்குள் இருவரும் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டே ஓடியவர்களோ ஒரு கட்டத்தில் ஓய்ந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து பெருமூச்சு வாங்கியபடி சிரித்தவர்கள்....

''சின்ன வயசிலே இப்படித் தானே துரத்திக் கொண்டு ஓடியனோமல'',..

என்று சொல்லிய விசாலியை பார்த்து..

''ம்ம்.. அந்த நாட்கள் எல்லாம் மீண்டும் வராதானு ஏக்கமா இருக்கு விசா'', என்று வர்ஷினி சொல்லவும்.

''ம்ம், என்றவள்...

''சரிசரி அதைவிடு இன்னிக்கு முக்கியமான விசயம் பேசணும் சீக்கிரம் வந்தேன்''...

என்று சொல்லியவளை என்னவென்று பார்வையுடன் பார்த்தாள் வர்ஷினி.

''நாம சினிமாவில் பலருக்கு டிசைனராக இருந்தாலும் இரண்டு வருசமா சிலதை குறைத்து விட்டோம்'', என்று பீடிகையுடன் பேச்சை ஆரம்பித்தாள் விசாலி.

''ஆனால் இன்று நமக்கு வந்திருக்கும் சான்ஸ் நம்முடைய தொழிலை தேசிய அளவில் அவார்டு கிடைக்கும் அளவுக்கு இருக்கும்..

உன் கற்பனைக்கு தீனி போடப் போகிற டிசைன்கள்..

இதற்காக நம்மை மீட் பண்ணனும் பேசணும் சொல்லிச் சினிமா ஸ்கோப் புரோடக்ஷன் இருந்து போன் பண்ணிக் கேட்டாங்க வர்ஷினி''...

என்று விசாலி சொல்லிவுடனே முகம் மாறி இறுக்கமான முகத் தோற்றத்துடன் அமர்ந்திருந்தாள் வர்ஷினி.

''என்னடி நா சொல்வதை கேட்கிரீயா இல்லையா.. உன் சிறு வயசிலே நீ எவ்வளவு ஆசைப்பட்டு இருக்க.. அதுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வந்திருக்கு.. அதை மிஸ் பண்ண வேண்டாமே'' ...

என்று கிட்டதட்ட கெஞ்சிக் கொஞ்சிப் பேசிய விசாலியை பார்த்தவள்

''ஆசைப்பட்டு எல்லாம் நடக்கணும் அவசியமில்லை விசாலி''..நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்கிற பக்குவம் இருந்தால் போதும்.. இன்றைய நிலையில் இருப்பதைச் சரிவர நடத்தலாம்.. புதுசா எதையும் தூக்கித் தலை மேல் போட்டுக்க வேண்டாம் .. அதுவுமில்லாமல் பாப்பாவை விட்டு எங்கயும் நான் வர மாட்டேன் சொல்லிருக்கேன் தெரியும் தானே.. உனக்கென மறதி வியாதியா ..மறந்து போக ''..

என்று அழுத்தமான குரலில் கேட்டவளைப் பார்த்த விசாலி சில கணங்கள் திகைத்துப் போனாள் .

எப்பவும் இலகுவாக மென்மையான பேச்சுடன் புன்முகமாக இருப்பவளோ இன்று குழந்தையைத் தவிர மற்றவர்களிடம் சற்று கடுமையைப் பூசிக் கொண்டிருப்பதும், எதிலும் ஆசையில்லாமல் விட்டேறியதனமாக இருப்பதை எண்ணி மனம் வருந்தினாள் விசாலி..

அதுவே வர்ஷினின் உயிர்ப்பைக் கொல்வதைப் போல இருக்கிறது என்று தோன்றியது விசாலிக்கு.

ஆனால் அதை வெளியே காண்பிக்காமல்,

''இங்கே பார் வர்ஷி.. உன் கோபம் முறைப்பை எல்லாம் முட்டை கட்டி அட்டாலே போடு.. இரண்டு வருசமா சும்மா பாப்பா பாப்பானு சொல்லிக்கிட்டு இருக்க.... ஷிவானி குட்டிம்மா வளர வளர சரியாகிவிடுவாள்… எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதனாலா நாளை நாம் அழைத்தவர்களைப் போய் பார்க்கணும் கண்டீசனா சொல்லிட்டேன்.. பிடிக்கல்ல.. செய்ய வேண்டாம்.. இதை என்று இனி காரணம் சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாது ஒகே.. நான் கீழே போறேன்.. நீயும் இந்த முசுட்டு முகத்தை இந்த அறைக்குள்ளே விட்டுட்டு வா, நான் போய் ரமணிம்மா எனக்காக ஸ்பெஷலா செய்த சாப்பாட்டை சாப்பாடப் போகிறேன்''..

என்று மளமளவென்று ஒப்பித்து விட்டு சிட்டாய் பறந்தாள் விசாலி.

படபடவென்று பட்டாசா பொறிந்து விட்டுப் போகிறவளைப் பார்த்த வர்ஷினிக்கோ மனமோ மீண்டும் திரைத்துறை உலகத்திலா.. ஒருமுறை பட்டதற்கு இன்று வரை மனயளவில் இரத்தக்கண்ணீர் வடிப்பது பற்றாதா.. திரும்பவுமா... என்ற எண்ணமோ அதீதமாக அவளை அலைக் கழித்தது.

விசாலி சொல்லிச் சென்றதைச் சிந்தித்த படி இருந்தவள் சினிமா ஸ்கோப் புரோக்ஷன் சொன்னவள் யாரை பார்க்கணும் சொல்லாமலே போயிருச்சே என்று தோழியை மனதிற்குள் திட்டியபடி கீழே வந்த பத்மவர்ஷினியோ அங்கே நடந்த நிகழ்வைப் பார்த்துக் கண்ணில் நீர் வடியச் சிரிக்க ஆரம்பித்திவிட்டாள்.


அவளின் சிரிப்பு சத்தத்தில் திரும்பிய விசாலி,


''என்ன என்னைப் பார்த்துச் சிரிக்கிற.. நான் என்ன கோமாளி மாதிரியா இருக்கேன்.."


என்று முறைப்பாகக் கேட்டவளைக் கண்டு மீண்டும் சிரித்தாள் வர்ஷினி.


ஷிவானியை மடியில் வைத்தபடி தணிகாசலம் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தன் மகளின் சிரிப்பைத் தன்னை மறந்து பார்த்திருந்தார். இப்படி மனம் விட்டுச் சிரிக்கும் மகளைக் காண்பதே அரிதாகிப் போனதே சில வருடங்கள் என்ற எண்ணம் அவருள்.

குழந்தையின் முன் குரங்குயின் முகசேட்டைகளை பலதை செய்து குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள் விசாலி.


''இவளைக் குரங்கு சொன்னால் கோபம் வருதாம்.. ஆனால் செய்வது எல்லாம் ''..

என்று வார்த்தைகளை வர்ஷினி முடிக்கும் முன்பே முந்திக் கொண்ட விசாலியோ...

''நம் முன்னோர்கள் மங்கி பரம்பரை தானே''..
என்று இழுத்தவளைக் கண்டு..

எல்லாரும் சிரிக்க அந்த இடமே சிறிது நேரம் கலகலத்தது.

ஆனால் குழந்தையோ எங்கோ வெறித்தபடி நிர்மலமான முகத்தோடு இருப்பதைப் பார்த்தவர்களின் மனம் வலித்தது.

குழந்தையின் முன் சிறு செய்கையும் மனயளவில் பாதிக்கும் என்று அறிந்தால் அதை யாரும் செய்ய மாட்டார்கள்.

ஆனால் மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே பேசி மனத்தை வருத்திக் கொள்வதை விட இயல்பாகக் கடக்கவும் பழகிக் கொள்ள வேண்டும் என்று தணிகாசலிடம் விசாலி தனியாக அழுத்திச் சொன்னாள்.

''நீங்க தான் பா வர்ஷிக்கு சொல்லணும்… குழந்தை இப்படி இருக்கேனு வருத்தத்தில் உழன்று போவதை விட அதைச் சரிப் பண்ண வழி தேடணும்.. வர்ஷினி தன் குழந்தையை கவனிக்கிறேனே அவளின் உயிர்ப்பை இழப்பது உங்களுக்குப் புரியலையா .. ஷவானிக்கு முழுநேரமும் தாயின் கவனிப்பு வேண்டும் தான்.. ஆனால் அதை மட்டும் பார்த்தால் இவள் மனயளவில் ஓய்ந்து விடுவாள் பா.. கிட்டதட்ட கன்சீவ்னு உறுதியான முதல் இப்ப வரை வேலைக்கு வெளியே வராமல் தனக்குள்ள இறுகிக் கொண்டே குழந்தையை மட்டுமே உலகம் என்று இருக்கிறாள்.முழு நேரமும் அவள் கம்பெனிக்கோ வரனும் அவசியமில்லை தான். பாப்பா தூங்கும்போதோ இல்லை நீங்க குழந்தையோடு இருக்கும்போது விட்டுவிட்டு வரச் சொல்லுங்க.. இல்லையென்றால் நாம் பழைய துடிப்பான வர்ஷியை இழந்து விடுவோம்'',.. என்று தோழியிடம் சொல்ல முடியாதே தணிகாசலத்திடம் சொன்னாள் விசாலி.

அதைக் கேட்டவரோ ''ம்ம் புரிது விசாலிம்மா .. நானும் பலமுறை பேசிவிட்டேன், ஆனால் பிடிவாதமா இருக்கிறாளே'', என்று விசனத்துடன் சொன்னார்.


''செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்கீங்க பா.. அவள் உங்களுக்கு இளவரசி இருக்கலாம்.. ஆனால் வாழ்க்கையில் அவள் இன்னொருவருக்கு மனைவி அங்கே அவருக்கு மகாராணி அவளே தான்''..


என்று சொல்லும் விசாலியைக் கண்டு இந்த மாதிரி புரிந்து கொள்ளும் தோழி கிடைக்க தன் மகள் எதாவது புண்ணியம் செய்து இருப்பாளோ என்ற எண்ணத்தோடு எதுவும் பேசாமல் மௌனமாகச் சொன்னதற்குத் தலையாட்டினார் தணிகாசலம்.

அவரிடம் பேசி முடித்துவிட்டுத் தான் குழந்தை எழுந்ததும் பல சேட்டைகளைச் செய்து கொண்டிருப்பவளைப் பார்த்து வர்ஷினி சிரிக்க அவ்விடமே கலகலத்தது.


விசாலி மீண்டும் கம்பெனிக்குக் கிளம்பிய நேரத்தில் தான் ''ஏய் விசாலி நாளை யாரையோ சந்திக்கணும் சொன்னீயே யாருனு சொல்லாமலே கிளம்பிறே''..


என்று கேட்ட பத்மவர்ஷினியை ஒரு அர்த்தமுள்ள பார்வையைப் பார்த்தவள்..


''உனக்குத் தெரிந்தவர் தான் .. நம் எல்லாருக்கும் தெரிந்தவர் தான்''..
என்று சொல்லியவள்..


''இதற்கு மேலே கேட்காதே தாயே.. நாளை மீட் பண்ணும் போது நீயே பார்த்துக்கோ.. அதைவிட அவர்கள் நம்மைப் பார்க்க விரும்புவது வேலைக்கான விசயம் மட்டுமே.. உன் கற்பனை குதிரையை ஓட விட்டு பின்னால் துரத்திக்கிட்டு ஓடாதே''..


என்று சொல்லிய விசாலியோ இன்னும் இங்கே இருந்தால் துருவித் துருவி பல கேள்விகளைக் கேட்பாளே அம்மணி நினைத்துக் கொண்டு தணிகாசலத்தைப் பார்த்து ''பை பா'', என்று சொல்லிவிட்டுக் கிளம்பி ஓடினாள் விசாலி.


''எதையும் முழுசா சொல்ல மாட்டாளே '', என்று தோழியைத் திட்டிக் கொண்டே வந்த மகளைப் பார்த்துச் சிரித்தவர்..


''இன்னும் சின்ன புள்ளக மாதிரியே சண்டை போட்டுட்டு இருக்கீங்கடா''..
என்று சொன்னவர்..


''கண்டதை யோசிக்காமல் பாப்பு குட்டியை பாரு கண்ணு''..

என்று விசாலி சொன்னதை வைத்து ஆராய்ந்து வேறு சிந்தனைக்குப் போகாமல் இருக்கப் பேத்தியைக் கையில் கொடுத்து மகளின் மனத்தைத் திசை திருப்பி விட்டார் தணிகாசலம்.

குழந்தையைத் தூக்கிக் கொண்டவளின் சிந்தனை வேறு எங்கும் செல்லாமல் போனது..


மறுநாள் விசாலி சொன்ன நேரத்திற்கு எளிமையான பருத்தி சுரிதாரில் தயாரானவள் அப்பாவிடம் சென்று..

'' பாப்பாவை உங்களால் தனியாகப் பார்த்துக்க முடியும் தானே பா''

என்று ஆயிரம் முறை கேட்டவளைச் செல்லமாக முறைத்தார் தணிகாசலம்..

''பேத்தியுடைய அம்மாவைப் பார்த்துப் பார்த்துச் செல்லமாக வளர்த்தவனுக்கு என் தங்கப் பேத்தியைக் கொஞ்ச நேரம் பார்த்துக்க முடியாதா'' ..

என்று சொன்னாலும் தயங்கித் தயங்கி நின்றவளை மிரட்டியே கம்பெனிக்கு அனுப்பினார் .

மகளை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்த்து விட்டே தான் தன் காரை எடுத்துக் கொண்டு கம்பெனியை நோக்கிச் செலுத்தினாள் பத்மவர்ஷினி.

செல்லும் வழியெங்கும் அவளின் உள்ளம் இறந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் நடுவே ஊஞ்சலாடியது.

கம்பெனியின் வளர்ச்சிக்காக ஒரு நாள் போட்ட ஒப்பனை அவளைச் சுழல் காற்றாய் சுழற்றி தரையில் வீசி எறிந்தது.

அதிலிருந்து மீள முடியாமல் அடக்கப்பட்ட உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் புன்னகையுடன் கடப்பது ஒவ்வொரு நாளும் அவளுக்கு அக்னிப் பரீட்சை.

மீண்டும் அதே சினிமா துறையில் என்று நினைக்கும் போதே அவளுக்குள் பதிந்த அவனின் பிம்பம் சிங்கமாய் கர்ஜித்த முகத்தின் சாயலே.

எவ்வளவு அழகாகத் தொடங்கிய உறவு.. தரிசாய் கிடந்த இதயத்தின் காதல் செடியை நேச அன்பால் மழையாகப் பொழிந்து வளர்த்தான்.

விடியல் தொடங்கும் முன்பும் இரவு நீள் வரை அன்பின் பிடிப்பில் தன்னையே மறந்து அவனின் கரங்களுக்குள் அடங்கியவளின் செவிகளில் மெல்லிய மூச்சுக் காற்றில் மெஸ்மரிசமான குரலில் பேசிய காதல் பேச்சுகளும் கனிவான பார்வைகளும் ஆழ்ந்து அவளுள் மூழ்கிய தருணங்கள்.

அத்தனையும் கானல் நீர் என்பதை உணர்ந்தே அவனுடன் கழித்த அந்தச் சில நாட்கள் தான்.

கனவுகளிலும் கற்பனை ஓட்டங்களுக்கு உயிர் கொடுப்பவனுக்கு நிஜ வாழ்வில் உயிர் கொடுத்து உயிரை வேரோடு பிடுங்கி எறியவும் தெரியும் என்று உணர்ந்த நேரம்.

அந்நொடிகள் தன் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாமோ. அவனைச் சந்திக்காமலே இருந்திருந்தால் இந்த மரண வலி கிடைத்து இருக்காதோ..


எது எதுவோ சிந்தனை தடுமாற்றங்கள் உள்ளத்தில் உருவெடுத்து புகை முட்டமானது விழிகளின் பார்வையில்.


உள்ளம் தடுமாறினாலும் கரங்களோ லாவகமாகக் காரை கம்பெனியின் போர்ட்டிகோவில் நிறுத்தினாள்.


ரொம்ப நாள் கழித்து வந்தவளுக்கு ஆடையுலகம் என்ற பெயருடைய பலகையை பார்த்தபடி நின்றவளின் கண்களில் நீர்ப்படலம் பளபளத்தது.


விழி வழியே வழியும் நீரை விழாமல் கண்ணுக்குள்ளே அணை கட்டியவள் அலுவலகத்தின் படியேறி நுழைந்தவளைக் கண்டு அங்கே வேலை செய்யும் பெண்களுக்கு பெரும் ஆச்சரியம். எறும்பின் சுறுசுறுப்பைக் கொண்டவள் குழந்தைக்காக ஒரு இடத்திலே முடங்கி விட்டாளே என்ற எண்ணமும் அவர்களிடையே இருந்தது.


இரண்டு வருடங்கள் கழித்தாவது வந்தாலே என்று எண்ணத்துடன் அவளைச் சூழ்ந்து ஆரவாரம் செய்தார்கள்.


''மேம் தினமும் கொஞ்ச நேரம் வந்துட்டு போலாமலே''..


என்ற எல்லாரும் கேட்ட கேள்விக்குப் புன்முறுவலை மட்டும் கொடுத்துவிட்டு தன் ஆபீஸ் அறைக்குள் நுழைந்தாள் பத்மவர்ஷினி.


அறைக்குள் நுழைந்தவளை எதிர்கொண்டு அழைத்தபடி தீட்சயணமான பார்வையுடன் கம்பீரமாக நின்றவனைக் கண்டு அதிர்ந்து முகம் மாறி திடுக்கிட்டு நின்றது சில பல நொடிகள் தான்.


யாரை வாழ்நாளில் பார்க்கக் கூடாது நி
னைத்தவன் கண்முன்பு கம்பீரமாக எந்தவித குற்றவுணர்வு இன்றி தன்னை எதிர்கொள்ளுவதைக் காண அவளுள் ஜ்வாலையா கோபத் தீ பற்றி எரிந்தாலும் அதை மறைத்தபடி அவனை எதிர் கொண்டாள் வர்ஷினி.



தொடரும்
 

Attachments

  • received_961603518457940.jpeg
    received_961603518457940.jpeg
    132.9 KB · Views: 37
  • Like
Reactions: Rajivijay