• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320
வான் பூக்குதே ஜதியோடு

அத்தியாயம் 1

பூமியெங்கும் அஞ்சனையை ஆவேசமாகக் கொட்டி கவிழ்த்த பெருமிதத்துடன், நிலவு மகள் ஒளிர்ந்துக் கொண்டிருந்த இரவு நேரம்.

யார் மீது என்ன கோபமோ? அடித்துக் கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது பெரு மழை.

லாவகமாக வாகனம் ஓட்ட தெரிந்தவர்களே சற்று நிறுத்தி நிதானித்துச் செல்லும் படியான அந்த நேரத்தில், காற்றோடு போட்டி போட்டு ஊசி போல் இறங்கும் மழைக்கு ஊடே, வெளிச்சத்தைப் பாய்ச்சி மிக, மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது அந்த மினி கூப்பர்.

அந்த வேகத்திற்குச் சற்றும் மிஞ்சாமல், அதை ஓட்டி கொண்டிருந்தவள் நெஞ்சமும் வேகமாகத் தான் துடித்துக் கொண்டிருந்தது.

கண்ணீர் உடைப்பெடுத்து வழிந்தோட சிவப்பேறியிருந்த அவள் கண்கள். பேயை பார்த்தது போல் இரத்த பசையற்று வெளிறிப் போயிருந்த முகம். அந்தக் குளுமையிலும் ஆறாக வியர்த்து கொட்டி உதறிக் கொண்டிருக்கும் தேகம்.

ஸ்டியரிங்கை பிடித்தபடி தன்னை நிலை நிறுத்த முயன்றவளை மீறி, நடுக்கத்தை அப்பட்டமாக வெளி காட்டும் கரங்கள்.
ஆக்சிலரேட்டரில் இருந்து கால்களை எடுத்தால் துவண்டு விடுமோவெனத் திடமாக வைத்திருந்த விதம்.

அத்தனையும் சொன்னது எதைப் பார்த்தோ பயந்து, எதனிடமிருந்தோ அகப்படாமல் தப்பிப் போக முயல்கிறாள் என்று.

'இதே ஸ்பீட் ல வண்டி ஓட்டிட்டு போனா வேற யாரும் தேவை இல்ல. உன்னை நீயே அழிச்சுக்கலாம் "

மனதில் தோன்றாமல் இல்லை. ஆனாலும், அவளால் பொங்கி எழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயலவில்லை. முயற்சிக்க மட்டுமே முடிந்தது.

நம்பி தோற்றேனே!
நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டானே! இதயம் ஆறாமல் அரற்றிக் கொண்டிருந்தது.

அது தந்த கழிவிறக்கமும், கோபமும் அவளை ஊக்கி கொண்டிருந்தது. நினைக்கக் கூடாதென்று நினைத்தாலும், நெஞ்சமெங்கும் கட்டினவனின் நியாபகமே வியாபித்தது.

காதலித்த நாட்களும், கரம் பிடித்த பின்னான நாட்களும் அவளைக் கொன்று கூறு போட்டது. உயிராய் நினைத்தவனே அவளைக் குழி தொண்டி புதைப்பானென அவள் என்ன கனவா கண்டாள்?

புதையலாய் நினைத்திருக்க, பொய்த்து போனானே உள்ளுக்குள் கதறி தீர்த்தாள். இத்தனைக்கும் காரணமான அந்த நிகழ்வுகள் மீண்டும் கண்முன் படையெடுக்க, பெண்ணின் முகம் அருவருப்பில் சுழித்தது.

ஆற்றாமையா? இயலாமையா? கோபமா? பிரித்தறிய முடியா உணர்வுகளை வெளிப்படுத்த துடித்த உதடுகளை, பல்லால் வலிக்கக் கடித்து அடக்க முயன்று தோற்றதில், கேவல் வெடித்துக் கொண்டு வந்தது.

கூடவே, உள்ளுக்குள்ளிருந்து ஓங்கரித்துக் கொண்டு வருவது போலொரு உணர்வு மேலெழும்ப, சட்டென்று கரம் கொண்டு வாயை பொத்தி கொண்டாள். பாவையின் பார்வை அனிச்சையாகப் பின் இருக்கைக்குப் போனது.

நடக்கும் களேபரங்களை அறியா வண்ணம், உறங்கி கொண்டிருந்தது அவளின் பிஞ்சு. சீட் பெல்ட் அரணாய் பாதுகாக்க, இதமான போர்வைக்குள் அடக்கமாக வீற்றிருந்தான், இரண்டு வயது பிள்ளையான நிகேதன். அப்படியே பார்வையை மேல் தூக்கி பின் கண்ணாடி வழியே பார்த்தாள்.

அந்த அத்துவான இடத்தில் இவள் வாகனத்தைத் தவிர்த்து, வேறெந்த நடமாட்டங்களும் இல்லை. அந்தக் கும்மிருட்டு கூட அவளுக்குப் பயத்திற்குப் பதில், ஆசுவாசத்தையே தந்தது.

அது சரி! சற்று முன்னர்ச் சந்தித்த அதிர்ச்சியை விடவா வேறெதையும் சந்தித்து விடப் போகிறேன்!

வெறுமையொன்று சம்மனட்டது.

இப்பொது மழை சற்று அடங்கி லேசான தூறல் மட்டுமே தூறிக் கொண்டிருக்க, அலுங்காமல் காரை நிறுத்தியவள், மகன் விழிக்காமல் இருக்க வண்டியை அணைக்காமல், ஹேண்ட் பிரேக்கை மட்டும் போட்டுவிட்டு இறங்கினாள்.

அவ்வளவு நேரம் எப்படிப் பொறுத்தாளோ?

இறங்கியது தான் தாமதம். குடலே வெளிவரும் அளவு குமட்டிக் கொண்டு எடுத்தாள். நீரை முகத்தில் அடித்துக் கழுவியவளுக்கு, அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டால் என்னவென்று வந்தது.

வெறும் வயிற்றிற்கு நீரை வார்த்து, சோர்வை அடக்கி, இடுப்பை பிடித்துக் கொண்டு, சற்று நேரம் கண்கள் மூடி காரின் மேல் சாய்ந்து நின்றவளை, மகன் சிணுங்கி நடப்பிற்கு அழைத்தான்.

தூக்கதிலிருந்து விழித்ததும் அவளைத் தான் தேடுவான். அருகில் தாய் இருந்தால் சரி தப்பித்தோம். இல்லையென்றால் ஊரையே கூட்டி விடுவான்.குரல் ஹை டெசிபலுக்குப் போய் மூச்சிரைக்க ஆரம்பித்து விடும்.

இப்போதும் அப்படியே தேடியதில் அன்னை வெளியே இருக்க, தன்னைத் தனியாக விட்டு விட்டாளோவெனப் பிஞ்சிற்குப் பயந்து வந்துவிட்டது போல. பாய்ந்து கண்ணாடி மேல் கை வைத்து தட்டி, தட்டி அழைத்தான் பெற்றவளை.

பிள்ளையின் நீர் திரளும் கண்களும், பிதுங்கும் செப்பு வாயும், விடைக்கும் நாசியுமாய், அணைக்கக் கை தூக்கி அழுகைக்குத் தயாராகும் பிள்ளை பெற்றவளுக்கு ஆசுவாசத்தைத் தருமா?

அவளுக்கு அப்படிதான் இருந்தது. பாரமேறியிருந்த மனது சற்று அடங்குவது போல் உணர்ந்தாள்.

இவனிற்காக வேணுமாவது எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டுமென்ற உறுதி பிறக்கவும்,
கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரை துடைத்து, காரில் ஏறுவதற்குள் அமர்ந்திருந்தவாறே துள்ளினான் பிள்ளை.

தன் துக்கம் விழுங்கி, மகனுக்காகச் சிரிப்பை சிந்தினாள்.

"எழுந்துட்டீங்களா டி நிக்கி குட்டி " கைநீட்டி தூக்கி வாரி அணைத்தாள் தளிரை.

கொஞ்சி குலவும் நேரமில்லை தான். ஆனால் அதைத் தவிர்த்து அவளுக்கு வேறு வழியும் இல்லை. பிள்ளை அழுதால் அவளுக்கு எதுவும் ஓடாது. பார்வையை ஒரு பக்கம் பின் வழியில் வைத்திருந்தப்படியே, நிகேதனை மடிக்கிடத்தி நீரை ஆகாரமளித்தாள்.

அவன் எங்கே அருந்தினான். என்றைக்குமில்லாமல் அவ்வளவு அடம் பிடித்தான்.

'நீர் வேண்டாம். நீ தான் வேண்டும்' நன்றாகப் பேச வந்தால் சொல்லியே விட்டிருப்பானோ! என்னவோ! அந்தளவிற்குத் தாயை தேடினான்.

சொல்ல தெரியாமல் மம்.. ம்.. மம்மா.. முணங்கிக்கொண்டே அவள் மேல் ஏறி ஆ.. ஆ.. ஆ.. வெனப் பிஞ்சு வாயால் அவள் மேனியெங்கும் முகமெங்கும் எச்சிலை பூசி தேடலை தொடங்கினான் குருத்து.

சில தடவை கன்னத்தில் கடித்தும் வைத்தான். அப்போது தான் முளை விட்டிருந்த அரிசி பல் இரண்டு அழுத்தமாகப் பதிந்ததில் வலிக்கவில்லை. மாறாக, உயிரின் வேர் வரை தித்தித்தது.

தடுக்கவே இல்லை அவள். அவளுக்கிருந்த ரணத்திற்குப் பிள்ளையின் இந்தப் பரிதவிப்பு மருந்திட்டதோ? என்னவோ? கண்களின் ஓரம் நீர் கசிய மெல்லிய புன்னகையுடன் அனைத்தையும் வாங்கிக் கொண்டாள்.

அவனும் இப்படிதானே தன்னைத் தேடுவான்? நிஜமாகத் தன்னைத் தான் தேடுவானா? அல்லது வெறும் வடிகாலாகப் பயன்படுத்திக் கொண்டானா? ஏதேதோ எண்ணம் சூழ அவளையும் அறியாமலே கட்டினவன் நியாபகம் கட்டியணைத்தது.

"நானும் பாக்கறேன் நிக்கி குட்டி என்னைத் தேடவே மாட்டேன்றான் வினோ. என்ன டி சொக்குப்பொடி போட்ட என்னைப் போலவே என் பையனும் உன்னையே கொஞ்சி குலவி தள்ரான். சில நேரம் அவன் மேல பொறாமை கூட வருது தெரியுமா. ஆனாலும் உனக்கு நான் தான் பர்ஸ்ட் பேபி. நான் வந்துட்டா நீ என்னைக் கொஞ்சிட்டு போக, மிச்சம் தான் நம்ம பிள்ளைக்கு"

வந்ததும் வராததுமாக ஆசையாக அள்ளி நெஞ்சிற்குள் முகம் புதைத்து கொஞ்சி தீர்ப்பானே!

அத்தனையும் பொய்யா?

அவனை நினையாதே மனமே!

அத்தனையும் வெறும் வேஷம் என்று தெரிந்த பின்னும் மானம் கேட்டு நினையாதே!

அவன் உனக்கு மட்டுமான ஆண் இல்லை. இது தான் இனி நிதர்சனம்.

தொண்டையடைக்க எழும்பிய உணர்வு குவியலை மென்று விழுங்கினாள்.

அவள் அமைதியாக அணைத்தபடி இருந்ததில் நிகேதன் சற்று மட்டுப்பட இருவருக்குமான பாச போராட்டம் சற்று ஓய்ந்தது. அவனுக்குப் பிடித்த அவள் குரலில் பதிவேற்றியிருந்த தாலாட்டு பாடலை மெலிதாக ஒலிக்க விட்டாள்.

கலக்கம் நீங்கி நிகேதன் குதூகலிக்க ஆரம்பித்தான். பின் நீரை குடிக்கத் தந்து, கையில் அவன் விரும்பி உண்ணும் பிஸ்கெட் ஒன்றை கொடுத்து, முன் பக்க இருக்கையில் அமரவைத்துச் சீட் பெல்ட் போட்டு விட்டு காரை இயக்கினாள்.

அவனுக்கும் அன்னை தன்னுடன் இருப்பதே போதுமாய் இருந்ததோ, பிஸ்கெட்டை வாயில் வைத்து குதப்பியவாறு, கார் வேகமாய்ச் செல்லவும் வெளிச்சகீற்று வழியே தெரிந்த மரங்களைப் பார்த்தவாறும், அதை அன்னையிடம் கை நீட்டி காட்டி மழலை மொழி பேசி மிளிற்றவும் ஆரம்பித்திருந்தான். பின் நோக்கி செல்லும் இயற்கை அவனுக்கு மிகவும் சுவாரஸ்யம் தந்தது போல.

பாதையின் மேலும், மகன் மேலும் கவனம் வைத்தபடியே நடந்ததை மீண்டும் புரட்டினாள். இப்பொது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. மாறாக அறிவை விழிக்க விட்டாள்.

எங்குத் தவறி போனேன்? எங்குத் தவற விட்டேன்?

அவளையும் விட்டு வைக்கவில்லை. யாரையும் விட்டு வைக்கவில்லை. ஆதி முதல் அந்தம் வரை புரட்டி எடுத்தாள்.

சுய அலசல் அவன் மீது உயிராய் நேசம் வைத்ததைத் தவிர்த்து வேறெந்த பாதகமும் செய்யவில்லையென்ற பதிலையே மீண்டும், மீண்டும் தந்தது.

பிறப்பிலேயே மிகத் தைரியமான பெண் வினோதினி. அத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்திற்குச் சக்கரவர்த்தியான சத்திமூர்த்திக்கு ஒற்றை வாரிசாய் பிறந்தவள். பெற்றவருக்குப் பின் தானே எல்லாம் என்று போனதில் அதற்கான திறனை வளர்த்து கொண்டவள். எந்தச் சூழ்நிலையையும் சட்டென ஸ்வீகரித்து வெளிவரும் தைரியம் பெற்றவள். அந்தத் திறன் எப்போதும் உண்டு.

அது போலவே, இந்த இக்கட்டான சமயத்திலும் தன்னைப்போல வினோதினி இப்போதும் மீண்டு விட,

'உன்னைச் சும்மா விட மாட்டேன் டா ப்ளெடி ராஸ்கல். நான் யாருன்னு காமிக்குறேன் உனக்கு. என்னை ஏமாத்தினதுக்கு நடுத்தெருவில உன்னை நிக்க வெக்கல' கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டீயரிங் வீலை ஓங்கி குத்தினாள்.

நினைத்து முடிக்கவில்லை. சட்டென இடம் வெளிச்சமானதில்,
வினோதினியின் பார்வை ரெவெர்ஸ் வியூ கண்ணாடியை பார்க்க, பார்த்தவள் விழி அதிர்ந்து பெரிதாய் விரிந்தது.

தூரத்தில் பாசக்கயிறென வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி, இருளை கிழித்துக்கொண்டு சீறி வந்து கொண்டிருந்தது அவனது கார்.

சற்று மட்டுப்பட்டிருந்த இதயத் துடிப்பும், பரபரப்பும் அதிகரிக்கத் தொடங்கியது.

திங்க் ஆப் தி டெவில், அண்ட் தி டெவில் இஸ் ஹியர்.

யாரின் கண்ணிற்குச் சிக்காமல் சென்றுவிட வேண்டுமென்று அந்த ஆள் அரவமற்ற ரோட்டில் வாகனத்தைச் செலுத்தி கொண்டிருக்கிறாளோ, அவனே தான் விரட்டி வந்து கொண்டிருந்தான். அந்த லேண்ட் க்ரூசர் ப்ராடோவை முடுக்கியபடி, புயலுக்கு ஒப்பான வேகத்தில்.

அது நாள் வரை கம்பீரமாகத் தெரிந்த வாகனம், இப்பொது வினோதினியை விழுங்க வரும் ராட்சசனாகத் தெரிந்ததில் வியப்பேதுமில்லை. ஏனென்றால் அதனை ஒட்டி வந்து கொண்டிருந்தவனும் அவ்வகையானவனே.

ஆஜானுபாகுவான தேகத்தால் இருக்கையை நிரப்பி, அமர்ந்திருந்தவனது கண்களில் எரிச்சல் அப்பட்டமாக வழிந்தது. மனம் முழுக்க யோசனை யோசனை மட்டுமே.

திடமாக எதையும் எடுக்க முடியாததில் மூளை வேறு குழம்பி கிடக்க, குளிர் நீரை முகத்தில் தெளித்துப் போதையை இறக்கியதன் கோபத்தை வாகனத்தின் வேகத்தில் காண்பித்து, முடுக்கியதில் அதுவும் சீறிப் பாய்ந்தது.

இந்த மாதிரியான சூழலும், திருப்பமும் நிகழ்ந்து விடுமென்று நினைத்துகூடப் பார்க்கவில்லை ஸ்ரீபிரசாத்.

எவ்வளவோ முன் ஏற்பாடுகளுடன், சர்வ ஜாக்கிரதையாகத் தான் இது நாள் வரை இம்மாதிரி செயல்களைச் செய்து வந்திருந்தான். எங்கு எதில் தவற விட்டான் தெரியவில்லை. வசமாக மாட்டிக்கொண்டான்.

இப்போதும் என்ன முடிவுடன் அவளைப் பின் தொடர்கிறான் என்று தெரியவில்லை. பேசி வழிக்கு கொணர போகிறானா? இல்லை தன் வழி இது தானென உணர்த்த போகிறானா? தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள் மனையாள், நினைக்கும் போதே.

"எவ்வளவோ தடுத்தேன் சர், மேடம் என்னை அடிச்சு தள்ளி விட்டுட்டு உள்ள வந்துட்டாங்க. வந்த வேகத்தோட உங்களயும். அது வந்து.. ரூம்ல நீங்களும், உங்க" ஏதோ திணறிப்போய்ச் சொல்ல வந்தவன், அய்யனாராக உறுத்து விழித்து உறுமியவனின் உறுமலில் வார்த்தையை விழுங்கி,

"பார்த்துட்டு அழுதுட்டே வேகமா கார் எடுத்திட்டு போய்ட்டாங்க சர். என்னை ஒன்னும் செய்துறாதீங்க சர். சாரி சர்" வேலைக்காரன் சொன்னதை வைத்து பார்த்தால் இவளை சமாதானம் செய்ய முடியுமென்று தோன்றவில்லை.

அதற்காகப் பணிந்து போகவும் விருப்பமில்லை. ஒரு முறை பேசி பார்ப்போம். வழிக்கு வந்தால் சரி. வராவிட்டால் அதைப் பிறகு பார்ப்போம். ஒரு முடிவோடு கூப்பரை மறிக்க வேகத்தைக் கூட்டவும் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

அவன் உடன் பிறப்பு தான் அழைத்திருந்தாள். அவனுக்குத் தெரியும் இந்நேரம் விஷயம் அவளுக்குச் சென்றிருக்கும் என. இருந்தும் பேச பிடிக்காமல் நான்கைந்து அழைப்புகளைத் தூண்டித்தும் விடவில்லை அவள்.

ஒரு கட்டத்திற்கு மேல் மிகுந்த எரிச்சலுடன் ஏற்றவன், "மனுஷன சாகடிக்கணும்னே இப்டி செய்றியா, போன் எடுக்கலைனா விட வேண்டியது தானே, ஏன் சும்மா சும்மா கால் செய்ற, இருக்குற டென்ஷன் ல நீயும் தொல்லை பண்ணாத" அழைப்பை எடுத்த உடனே கடுப்படிக்க, அவளுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை.

"இதப்பாருடா அவகிட்ட பேசும் போது கோவப்படாம பேசு. நமக்குக் காரியம் தான் முக்கியம் உன் பொண்டாட்டி குணம் தெரியுமில்ல உனக்கு. அவ கோவப்பட்டாலும் பரவாயில்லை நீ அடங்கிப் போ. இந்த விஷயம் வெளிய தெரிய கூடாது அவ்வளவு தான். வெச்சிடுறேன்" அழைப்பை துண்டிக்கப் போனவளை,

"என்ன பயமுறுத்துறியா? என்ன செய்ய முடியும் அவளால" ஸ்ரீ பிரசாத்தின் கோவமான குரல் தடுத்தது.

"பயமுறுத்தலடா , பிரக்ட்டிக்கல் சொல்றேன். அது உனக்கும் தெரியும். இது உன் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்லை என் பக்கமும் ரிஸ்க் இருக்கு"

அவன் அமைதியாகவே இருக்க "தம்பி உன்னை அடிபணிஞ்சு போகச் சொல்லலை. டெம்பிரவரியா அவள ஆ பண்ணு சொல்றேன். உன்னை அவ்வளவு விரும்பினவ. கண்டிப்பா யோசிப்பா. யோசிக்கணும். அந்த அளவுக்கு நீ பேசணும். அடுத்து என்னன்னு பார்க்கவாவது நமக்கும் டைம் வேணும்ல. அதனால தான் இவ்ளோ மெனக்கெட்டு சொல்றேன். சொல்றத சொல்லிட்டேன் இனி நீயே முடிவு பண்ணிக்க"

"ம்ம்ம் சரிக்கா புரியுது. நான் பாத்துக்கறேன்" மூத்தவள் சொன்னதில் இருந்த உண்மை அவனைக் கொஞ்சம் நிதானிக்க வைத்தது.

"ம்ம்ம் முடிஞ்ச கையோட அவளை உன்னோட கூட்டிட்டு வந்துடு" என்றவள், எங்கு இருவரும் இருக்கிறார்கள் என்ற தகவலையும் கேட்டுக்கொண்டே போனை தூண்டித்தாள்.

நம்பிக்கையே இல்லாது இருந்தவனிடம், மூத்தவள் பேசியதில் ஏதோ ஒரு மூலையில் நம்பிக்கை வந்து ஒட்டிகொண்டது.

"ப்ளீஸ் மேடம்! என் பின்னால வராதீங்க. உங்களுக்கும் எனக்கும் படிப்பை தவிர்த்து எந்தச் சமமான அந்தஸ்தும் இல்லை. காதலிச்சிட்டு கழட்டி விட்டுப் போகறது அப்பர் கிளாஸ் ல பிறந்த உங்களுக்கு வேணும்னா சகஜமா இருக்கலாம். என்னால முடியாது. ப்ளீஸ், லீவ் மீ. எனக்குன்னு நிறையக் கடமைகள் இருக்கு புரிஞ்சுக்குவீங்க நினைக்கிறேன்"

தான் அவ்வளவு பேசி விலகி போகும் போதும், உருகி கரைந்து துரத்தி காதலித்தவள், அவ்வளவு சீக்கிரம் விலகி விட மாட்டாள் என்று.

ஆனால் நடக்குமா? இந்தக் கேள்வி எழாமல் இல்லை.

ஒழுக்கம் மிகவும் பார்ப்பவள் வினோதினி. மனிதர்களின் சிறு பார்வை மாற்றத்தை கூடக் கண்டு கொள்வாள்.

"அந்தக் கம்பெனி ஆள் கேரெக்டரே சரி இல்ல. எதுக்கு இப்படிப்பட்டவன் கிட்ட எதுக்குப் பிஸ்னஸ் செய்றீங்க. கட் பண்ணுங்க முதல்ல.
இவங்கள எல்லாம் ஆபிஸ்க்குள்ள விடுறதே தப்பு. இவங்கள மாறி ஆளுங்கள நம்பினா நம்ம பேரும் சேர்ந்தே கெடும்" தொழிலில் கூட அந்த நேர்மை வெளிப்படும்.

"தொழில் ன்னு வந்துட்டா இதெல்லாம் பாத்துட்டு இருக்க முடியாது வினோ. நம்மகிட்ட ஒழுங்கா இருக்கானா அது போதும்" என்றாலும்,

"அப்டி அட்ஜெஸ்ட் செய்துட்டு போகணும்னு எந்த அவசியமும் இல்லை ஸ்ரீ. நேர்மையா ஒரு ரூபாய் லாபம் வந்தாலும் போதும்" என்பவளின் ஒரு வருட டர்ன் ஓவர் கோடிகளில் புரளும்

சத்தியமூர்த்தி ஒரு சுயம்பு. தானாக முளைத்து தானாக வளர்ந்த காட்டு மரம். சைக்கிளில் வீட்டுக்கு வீடு சென்று தரும் தவணை முறை ஜவுளி வியாபாரம் செய்தவர். திருமணமான அதிர்ஷ்டமோ, அவரது அயராத கடும் உழைப்போ படிப்படியாக முன்னேறினார்.

மனைவியும் தொழிலில் துணைக்கு வந்து விட, இவர் வெளி வியாபாரங்களைப் பார்க்க, அது விருத்தி ஆகி ஒன்றை பிடித்து இன்னொன்று என இவர் கால் தடம் பதிக்காத தொழில் இல்லை.

சிலவற்றில் அடி வாங்கினாலும் அந்த முயற்சியை மட்டும் விட வில்லை. அது பெரும் பேரையும், வசதியையும் அள்ளி தந்தது.

அந்த வசதி தான் ஸ்ரீபிரசாத் கண்ணை உறுத்தியது.
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
274
Nice start ji
1637581260232.png
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,926
அருமையான ஆரம்பம் சகி , ஆரம்பமே விறுவிறுப்பு,, ஒரு பதட்டம், அடுத்து எதுவும் விபரிதமாக நடந்திடுமோ என்னும் எண்ணம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
Last edited:
Top