• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Admin 02

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
320
அணைத்து வைக்க, வைக்க 'என்னை பாரேன்' என மீண்டும் மீண்டும் மிளிர்ந்து, குரல் எழுப்பி, கண் சிமிட்டி கொண்டிருந்த அலைபேசியின் உயிரை, முதல் வேலையாக மொத்தமாக பறித்து போட்டிருந்தான் புகழ்.

இளந்தீபன் முதன் முறை அழைக்கும் போதே எடுத்து பார்த்திருந்தான். யாருடனும் பேச பிடிக்காமல் தான் அவன் கடலோடு கை கோர்த்தான். அப்படியிருக்க, இளந்தீபன் மேல் வருத்தத்தில் இப்பொது எப்படி பேசுவான்?

ஒன்றும், ஒன்றும் இரண்டு கணக்கு போட்டவனுக்கு, தெரியாமலா போய்விடும். வேண்டுமென்றே கேஸை அவன் தலையில் கட்டி இருக்கிறான் என்று.

'நான் கேட்டனா இவர' கோபம் கணன்றது. ஊடுருவும் குளிரையும், மேனி வருடும் காற்றையும் மீறி நெருப்பாய் சுட்டது.

நேரம், நள்ளிரவோடு கைகோர்த்து மெது நடை போட்டு கொண்டிருந்த வேளை. ஊரே உறக்கத்தில் அடங்கியிருக்க, இங்கே இவனுக்கு மட்டும் அது எட்டாக்கனி.

இன்னமும் கடற்கரையை விட்டு அகலவில்லை புகழ். சிறு மாற்றமாக, மணலில் கால்கள் புதைய நடை பயிலாமல், ஜீப்புக்குள் உடலை புதைத்து ஸ்டீரிங்கில் தலை கவிழ்ந்திருந்தான்.

அவனை பற்றிய சிந்தனையே இல்லாதவனுக்கு, 'இருக்கணுமா? போகணுமா? அய்யோ! சொல்லும் போதே போயிருக்கணுமோ? இவர விட்டு எப்பிடி போவேன் ன்னு இருந்தது தப்போ?' குழப்பதுடன் அமர்ந்திருந்த கமல் பற்றி, என்ன அக்கறை இருந்துவிட போகிறது?

'டியூட்டி முடிந்த போதே சொன்னேன்! கேட்டிருக்க வேண்டும் நீ! கேட்கவில்லை அல்லவா? அனுபவி!' அந்தரத்தில் விட்டுவிட்டான் புகழ்.

மதியம் அத்தனை அக்கறை வைத்து, உணவு உண்டு வர சொன்னவன் இவன் தானா? நினைக்குமளவு பிழிந்து எடுத்திருந்தான். ரசிகர் மன்றம் வைக்கும் எண்ணம் எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது.

விசாரணைகள், அலைச்சல்கள் புதிதில்லை தான். ஆனால், புகழின் இந்த வேகம் அவனுக்கு மிகவும் புதிது. 'ஏன் இத்தனை வேகம்' புரிபடாமலே சுழட்டி அடித்ததில், ஒரே நாளில் நொந்து நூலாகி போனான்.

இதோ, இப்பொது கூட அரை தூக்கத்தில் கண்கள் சுழண்டு மூடுவதுமாய், எதோ உணர்வில் விழித்து அவனை பார்ப்பதுமாய் சாமியாடி கொண்டிருக்கிறான்.

அதற்கும் கேடு வருவது போல், அவன் கைபேசி குரலெழுப்பாமல் அதிர்ந்து அழைப்பு வருவதை உணர்த்தியது. குரல்வளையை நெறித்து போட்டிருந்தான், புகழின் கோபத்திற்கு பயந்து.

'இந்த நேரத்துல எவண்டா அது' அசட்டையாக போனை எடுத்து பார்த்தவன், அதிலிருந்த பெயரை பார்த்து அவசரமாக அழைப்பை ஏற்றான்.

எதிர்பக்கத்து குரல் என்ன கேட்டதோ? இவன் பதிலளிக்க தயங்கி கலவரத்துடன் புகழை பார்த்தான். சொன்னால் இங்கு தெரிந்து விடும்! சொல்லாவிட்டால் அங்கே பொல்லாப்பு!'

சம்பந்தப்பட்டவனை கூடவே வைத்துக்கொண்டு என்னவென்று சொல்வதாம்! கேட்பது கமிஷனர் வேறு!

"சர்.. அது வந்து" கமல் இழுத்த இழுப்பில் இளந்தீபனுக்கு புரிந்தது. பாவம்! அவன் என்ன செய்ய முடியும்!

"லொகேஷன் மாத்ரம் ஷேர் செய்ங்க கமலே. வேறொன்னும் சம்சாரிக்கண்டா"

சொன்னவன் வைத்து விட, கேட்டதை அனுப்பி விட்டு, கமல் பக்கத்தில் இடியே விழுந்தாலும் அஞ்சேனென அமர்ந்திருந்தவனை பார்த்தான். எந்த எதிரொலியும் இல்லை அவனிடம்.

இதற்கு முன் அவ்வளவு ரிஸ்க்கான கேஸையே கூலாக முடித்ததை கண் கூடாக பார்த்தவன்.
ஏனோ இந்த கேஸை எடுத்ததிலிருந்து, புகழ் புகழாய் இல்லை போலொரு பிம்பம் தோன்றிக்கொண்டே இருந்தது.

முதன் முறை புகழை பார்த்த போது இணக்கம் வந்திருந்தது. பிறகு மரியாதை வந்தது. இப்பொது பயம் பயம் மட்டுமே. எந்நேரத்தில் எப்படி பேசுவான் இன்னமும் பிடிப்படவில்லை.

கமல் அவன் எண்ண ஓட்டத்தில் இருக்க, அடுத்த பத்து நிமிடத்தில் இளந்தீபன் காரில் வந்திறங்கினான்.

பார்த்ததும் மரியாதை நிமித்தம், கமல் ஜீப் கதவை திறந்து கொண்டு அவன் முன் சென்று "சர்" என்று நிற்க, கை கடிகாரத்தை பார்த்து,

"சமயமாகிட்டு கமலே! நீங்க கிளம்புங்க! என்னன்னு பாத்து நான் கூட்டிட்டு வரான். என் கார்ல போய்டுங்க" கமலை அனுப்பி வைக்க முயன்றான்.

"இல்ல சர்! நான் எப்டி அவரை மட்டும் விட்டுட்டு தனியா? நானும் சரோடவே"

இவ்வளவு நேரம் போயிருக்க வேண்டுமோ எண்ணத்தில் இருந்தவனுக்கு, இப்பொது ஏனோ அப்படியே போய்விட மனமில்லை. தயக்கமாக பார்க்க,

"சரி கார்லருங்க! உங்க சர்கிட்ட பேசிட்டு வருன்னு"

"எஸ் சர் " என்று நகர்ந்து விட்டவன் இளந்தீபனின் கார் அருகே நின்று கொண்டான்.

"எடோவ் புகழே! நினக்கு எந்தா ப்ராந்தோ! எத்தன தவணா கோல் போட்டேன்! போனும் எடுக்கில்லா! இவடே என்னடா செய்யுன்னு நீ" ஜீப் அருகில் வந்தவன் எகிற, புகழிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.

அவன் நிமிரவும் இல்லை. தீபனின் முகம் பார்க்கவும் விழைய வில்லை. அவன் குரலுக்கு இருந்த இடத்தை விட்டு அசையவும் இல்லை.

இப்படி நடக்குமென ஊகித்தது தான். சினம் கொள்வான் தெரிந்தது தான். ஆனாலும் அப்படியே எப்படி விட முடியும்? இவன் வேறொன்று நினைத்து தான் புகழை வர வைத்திருந்தான். அதற்குள் என்னென்னவோ ஆகி விட்டது. இதிலும் ஏதேனும் நல்லது நடந்து விடாதா? அந்த எண்ணத்தில் தான் ஸ்ரீபிரசாத் கேஸை இவனிடம் ஒப்படைத்தான்.

வேறொருவரிடம் சென்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கும். பிறகு வருந்தி பலனில்லை. அதனால் தான் சொந்தம் உறவினர்கள் கேஸ்களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க கூடாதென்பத்தையும் மீறி கொடுத்திருந்தான்.

ஒரு பக்கம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறான் தான் அவனுக்கே தெரியும். ஆனால் சட்ட ரீதியாக பார்த்தால் அவன் மனைவி என்பது பதிவில் இல்லை. இதை சாதகமாக கொண்டே இக்காரியத்தை செய்திருந்தான்.

இவன் மட்டுமே அறிந்த ஒன்றல்லவா அந்த தைரியமும்.

ஆண் மகனாய் அவன் பாடு புரிந்ததில் கடிய கூட முடியவில்லை.

"எடோ.. டேய்.. புகழே" ஜீப் கதவை திறந்து ஆதரவாய் அவன் தோள் தொட,

"கேஸ் பத்தி தெரிஞ்சிக்கணுமா? இல்லே உங்கோ சொந்தம் பத்தி தெரிஞ்சுக்கணுமா?" புகழிடமிருந்து குரல் மட்டுமே வந்தது கடினமாக.

'எனக்கு சொந்தமா? அப்ப ஆ பெண்குட்டி நினக்கு ஆரடா' வாய் வரைக்கும் வந்த வார்த்தையை விழுங்கினான். இந்நேரத்தில் ஜதிக்காக பரிந்துகொண்டு போவது சரியென்று படவில்லை. உச்சாணி கொம்பில் ஏறிக் கொண்டானென்றால் பின் கஷ்டம்.

"எந்தா டா? நான் என்ன கேக்குன்னது? நீ எந்தா பரையுன்னது? புகழே என்னாச்சு டா உனக்கு"

"பின்னே! அதே தெரிஞ்சுக்க வந்தவர்ட்ட வேறென்ன பேச சொல்றீங்க" சுள் என்றான்.

"டேய் உன்மேலருக்க அக்கறை ல வந்தா"

"அக்கறையா நுவ்வுக்கா நம்ப சொல்றீங்களா ண்ணா? எல்லாம் தெரிஞ்சு பிடிவாதமா பிளான் போட்டு என்னை வர வெச்சிருக்கீங்க! என் மேல அக்கறை இருக்கவர் செய்ற வேலையா இது!

"உங்க வேலை மாத்ரமா? இல்ல அவ கூட்டும் இருக்கா இதுலே "

"அநியாயம் சம்சாரிக்கண்டா புகழே! விட்டா ரெண்டு பேரும் பிளான் போட்டு ஸ்ரீ பிரசாத்தை போட்டு தள்ளிட்டோம் பறைஞ்சாலும் பறையுவ நீ"

"எந்தா டா ப்ராந்தாடா உனுக்கு"

"இன்னும் பிடிக்கலே! ஆனா சீக்கிரம் பிடிச்சிடும்! பிடிக்க வெச்சிடுவீங்க ரெண்டு பேரும்!"

"அவ பேசாமருந்து கொல்றா! நீங்கோ மறைச்சு வெச்சே உயிர எடுக்கறீங்க! ம்ம்ப்ச் விடுங்கோ! எக்கடிக்கோ வெல்டானு"

இருக்கையை விட்டு இறங்கியவன், தீபனை தள்ளிக்கொண்டு சென்று கடலை பார்த்தவாறு நின்று கொண்டான்.

உடல் மொழியில் இறுக்கம் கூடிக்கொண்டே போனது. மனிதன் ஒரு நாளில் எத்தனையை தான் தாங்குவது.

ஆறவில்லை இளந்தீபனுக்கும். இவனை இப்படி பார்க்க முடியவில்லை என்று தானே வரவழைத்தான். இன்றைக்கு ஏன் என்றவன், நாளைக்கு விஷயம் தெரிந்து ஏன் சொல்லவில்லை என்றால் என்ன செய்வது. நடப்பது சரியோ, தவறோ நடக்கட்டும் என வரவழைத்தான்.

"எனக்கு வேற வழி தெரியல டோவ் புகழே! சொன்னா நீ வந்திருப்பியா சொல்லு!" நெருங்கி வந்து அவன் தோளோடு சேர்த்து அரவணைத்து கொண்டவன், அவன் கேள்வியை அவனிடமே திருப்பினான்.

நிச்சயமாக வந்திருக்க மாட்டான். பார்த்த பிறகே விலக நினைத்தவன், பார்க்காத போது எந்த முடிவையும் எடுத்திருப்பான், சொல்ல முடியாது. நிம்மதி வந்திருக்குமா என்றால் இல்லை. உயிரோடு இருக்கிறாள் ஆசுவாசம் வந்திருக்கும். அது மட்டும் போதுமா வாழ்நாளிற்கும்? பதிளில்லை அவனிடம்.

அவளுக்கு பிடித்த இருளில், எங்கோ சிறு புள்ளியாய் மின்னி தெரியும் வெளிச்சத்தில், விடை தெரியுமோ ரீதியில் ஆழ்ந்து பார்த்திருந்தான் அதையே.

"ஆ பெண்குட்டியோட சண்டை போட்டியா? திட்னியா? வேண்டாமடா புகழே! நல்ல குட்டி "

சொன்னது தான் தாமதம், வேகமாக அவன் கையை விலக்கிக்கொண்டு புகழ் தள்ளி போய் நிற்க, அப்போதும் விடவில்லை தீபன்.

"கள்ளம் பாரயண்டா டா நான் கண்டுபிடிக்கும்"

முறைத்து பார்த்தான் இளந்தீபனை. விட்டால் அவளை அறைந்து தள்ளும் ஆத்திரம் வந்ததை சொன்னால் என்ன செய்வாராம்? பார்க்க கூடாததையும் பார்த்து, கேட்கக்கூடாததையெல்லாம் கேட்டும் ஆகிற்றே. வெறுத்து போய் வந்தது.

"இப்பவும் போனது தப்பு ன்னு தோணற்தா" தூண்டில் போட்டான் இளந்தீபன்.

பார்த்த மாத்திரத்தில் அவள் தள்ளி நிறுத்தியதில் விலக வேண்டுமென நினைத்தான் தான் மறுப்பதற்க்கில்லை. ஆனால், அவளின் உணர்வை தொலைத்த முகத்தை பார்த்த பிறகு, எல்லாம் மரத்து போன நிலையை கவனித்த பிறகு? ம்ம்ஹும்! அவனால் முடியுமா என்ன?

"சரி பாவமடா ஆ பெண்குட்டி"


"ஏமி? அவளா? அதுக்கு நீங்க என்னை சொன்னாலும் தகும்.
என்ன பேச்சு பேசினா தெரியுமா"

எதிர்பார்த்தது தான். முதலில் தீபனிடமே வாயை திறக்கவில்லையே. இவன் பேச்சில் சிறு நம்பிக்கை வந்து, குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் சொன்னவள் புகழை பற்றின எதற்கும் அசைந்து கொடுக்கவில்லையே. எதோ ஒரு கோபம், வலியாய் மாறி அவளுள் புதையூண்டு இருப்பது போல் ஒரு எண்ணம்.

அதை, இருவரும் தான் பேசி தீர்த்து கொள்ள வேண்டும்.

எதிர்பாராது பார்த்தானே அவளை. பர்சனலாக ஸ்ரீ பிரசாத் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்து, இவன் சென்றிருந்தபோது. L அவளுக்கு இவனை தெரியாது. ஆனால் இளந்தீபனுக்கு ஜதியை நன்றாக தெரிந்தது.

பார்த்தவனுக்கு முதலில் அதிர்ச்சி தான். 'ஈ குட்டி இங்க என்ன செய்யுது' யோசனைகள் ஓட அதன் பின் ஆராய்ச்சி பார்வை மட்டுமே. ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தான். அவளுண்டு நிகேதன் உண்டென்று இருந்தாள். யாரையும் பார்க்கவில்லை. எவரிடமும் பழகவில்லை. மலர்ச்சி முகத்தில் இருந்தாலும், கண்களுக்கு எட்டவில்லை. உயிர் இருந்ததே ஒழிய உயிர்ப்பில்லை. எதனாலாம்?

முன்பிருந்தவனாயிருந்தால் பெண்ணை இவ்வளவு கவனித்திருப்பானா? என்றால் இல்லை. இவனுக்கும் ஒருத்தி பாடம் கற்று கொடுத்திருந்தாளே.

கூப்பிட்டு ஸ்ரீ பிரசாத் அறிமுகம் செய்யும் வரை எல்லாம் நன்றாக தான் போனது. அறிமுகமாக சொன்ன வார்த்தை உவப்பை தரவில்லை. இளந்தீபனுக்கு மட்டுமல்ல என்பது அதிர்ந்து உறைந்து நின்ற ஜதியை பார்த்த பிறகு உணர்ந்து கொண்டான்.

ஆக இவளுக்கும் இது புதிய செய்தி. அதொன்றே அவளை தனியாக பார்த்து பேசும் அவசியத்தை உணர்த்த, பேசின பிறகோ ஸ்ரீ பிரசாத் தன்னை அணுகினதன் விஷயத்தை துரிதமாக்க வைத்திருக்க, அதற்குள் என்னென்னவோ நடந்திருந்தது.

போதாக்குறைக்கு வம்பிலும் மாட்டி இருக்க, இவனென்றால் முறுக்கிக்கொண்டு இருக்கிறான்.

"டேய் சத்தியமறியாத பரையண்டா கேட்டோ"

"அதே தான் நானும் கேக்கறேன் அவளுக்கு என்ன அவஸ்யம்? நான் என்ன செத்தா போய்ட்டேன்? தலையெழுத்தா அவளுக்கு? எவனோ பிள்ளைக்கு ஆயா வேலை பார்த்து அங்கருக்கவங்க பேச்சு வாங்கணும்னு இருக்க? இப்ப எங்க வந்து நிக்குது தெரியுமா"

இளந்தீபன் புரியாமல் பார்க்க, அன்றைக்கு நடந்த எல்லாம் சொன்னான்.
 
Top