"இன்னாப்பா! சரவணா சவுக்கியமா! அண்ணன சூசாவா நீ ரொம்ப ஆசைப்படுறியாம். அவுனா! அதான் அதி என்னன்னு பார்த்து விசாரிச்சிட்டு, அனுப்பிட்டு போலாம்னு வெச்சாவு" புகழ் அருகில் வரவும் கையில் கத்தியோடு ஓங்கிக்கொண்டு அவனை ஆவேசமாக நெருங்கிய சரவணன்,
"மாத்தி சொல்ற புகழ், உன்னை அனுப்ப தான் நான் இங்க வர வெச்சது" சொல்லி முடிக்கவில்லை அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்திருந்தான் கமல்.
"எங்க இப்ப பேசு " கமல் ஒரு அழுத்து அழுத்த, கண்களை ஒரு நிமிடம் பயத்தில் மூடி ஸ்தம்பித்தவனிடமிருந்து கத்தி தன்னைப் போல நழுவி விழுந்தது.
அதை எத்தி விட்ட கமல் "போடுடா முட்டிய" எனத் திருத் திருவென விழித்தவன் தம்பியை பார்க்க அவன் தலை பக்கமும் ஒரு துப்பாக்கி நீண்டு கொண்டிருந்தது. மற்றவர்களும் கையில் துப்பாக்கியுடன் இவர்களைச் சூழ்ந்திருக்க வெறும் கத்தி வீச்சருவாள்களை மட்டும் வைத்திருந்த அவனது ஆட்கள் உறைந்து போயிருந்தனர்.
வேறு வழி இல்லாமல் முட்டி போட்டவனின் கைகளைப் பின்னோடு சேர்த்து கமல் விலங்கிட்டான்.
அவனோடு வந்தவர்கள் எல்லாரையும் கைது செய்ய இதையெல்லாம் மௌனமாகப் பார்த்திருந்த புகழிடம்,
"தோ பாரு புகழு! ஒயுங்கா எங்கள வுட்டுடு! என் தம்பிக்கு மட்டும் எதுனா ஆச்சு அவ்ளோ தான் உனுக்கு" சொல்லும் போதே குரல் நடுங்கிற்று சரவணனுக்கு.
"ஆஹான்.. அவுனா"
சரவணன் முகத்திற்கு நேராகக் குனிந்து புன்னகைத்துக் கண் சிமிட்டினான் புகழ்.
"இப்புடே யாரோ என்னை மேலே அனுப்ப போறதா சொன்னாங்க! சொல்லி ஒகட்டே நிமிஷம் ஆகலே! கால்லே வுழுந்து கதறுறியே ப்பா சரவணா! உன் தம்பி மேல அவ்ளோ பாசமா" எகத்தாளமாகவே கேட்டவன்,
"அப்ப உன்னைப் போட்டுடலாமா! நுவ்வு அண்ணா உன்னைப் பார்க்க சாலா ஆசப்படுறானாம்" புருவங்களைக் கேள்வியாய் வளைத்து கேட்க சரவணன் பல்லை கடித்தான்.
"எங்கள வுட்டுடு எவ்ளோ வேணாலும் டீல் பேசிக்கலாம்" புகழ் மசிய மாட்டானென்று தெரிந்தாலும் வலை வீச சொன்னது உயிர் பயம்.
"சரவணனுக்குப் பயம் லா வருது ப்பா" கூடுமான வரை வெறுப்பேற்றினான் புகழ்
"அப்டினா இந்நேரத்துக்கு உன் அண்ணன் உயிரோட இருந்திருப்பான் டா. என்கிட்டயே டீல் பேசுறியா பொறுக்கி ராஸ்கல்" ஓங்கி ஒரே அறை, காது கொயிங் என்றது.
"ஏய்" எனக் கைகள் விலங்கிட்டிருந்த போதும் பாசத்தில் முருகன் துள்ள, அவனுக்கும் சிறப்பான கவனிப்புக் கிடைத்தது புகழினால்.
"ஏண்டா ஒக்கட்ட ஆள போடணும்னா, அமுக்கமாருந்து பிளான போட்டமா, போட்டு தள்ளுனோமான்னுட்டே போறதில்லே. அதே வுட்டுட்டு எங்க டிபார்ட்மென்ட் ஆள வெச்சு வேவு பாக்குறே. வெளியருக்க நுவ்வுக்கே ஆள் இருக்கு னா, எனக்கு இருக்காதா"
"இப்ப சூடு தொக்கா மாட்டிக்கிட்டே. ஏமி ரா மீரு பெத்த ரவுடி?"
"அது சரி அறிவிருந்தாதானே! எங்க டிபட்மென்ட் ஆளுங்களோட சகவாசம் வெச்சிருக்கே! உனுக்கு எப்டி இருக்கும்"
"ஆமா நுவ்வு அண்ணன் ஏமி பெத்த சுதந்திர போராட்ட தியாகியா ரா! அவன் செய்ததுக்கு மெடல் குடுத்து பாராட்டு பத்திரமா வாசிப்பாங்க! குழந்தையைக் கடத்தி வியாபாரம் செய்ற குக்கா (நாய்). உங்களுக்கெல்லாம் எதுக்கு டா உடம்புல ஜீவிதம்! அவன் ஒரு கேப்மாரி! நீ ஒரு மொள்ளமாரி!"
"ஒழுங்கா வாயை மூடிட்டு இருந்தியன்னா, கறக்க வேண்டியதெல்லா கறந்துகிட்டு என் ஆளுங்ககிட்ட உன்னை அனுப்புவேன். இல்ல என் பாட்டுக்கு, பொட்டுல போட்டுட்டு போய்ட்டே இருப்பேன் எப்டி வசதி"
இத்தனையும் கேட்டுக்கொண்டே சரவணனையும், அவனது ஆட்களையும் அடி வெளுத்திருக்க, அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி விழுந்தது.
"சர்! சர்! வேணாம் சர்! விட்டுடுங்க சர்!" கதறல் மட்டுமே அங்கு. போதாக்குறைக்கு,
"ஏண்டா நீங்கல்லாம் ஒரு ஆளுன்னு உங்களுக்குப் பிராண்ட் ஷர்ட் டா? இதைப் போட்டுட்டா நீங்க லாம் படிச்சவனுங்க ஆகியிருவீங்களாடா?
"ஏண்டா டிப் டாப்பா சட்டை போட்டியே அதுக்குப் பட்டன் போட்டியா! நாலு பட்டன் அவுத்து விட்டுகிட்டு நான் ஐடி கை ன்னு என்கிட்டயே ஜாம்பம்! ம்ம்.. உங்க வாயை திறந்தாலே தெரிஞ்சிருமே டா நீ பக்கா லோக்கல் ன்னு! போலீஸ் காரனையே ஏமாத்துறீங்களா" கமலும் அவன் பங்கிற்கு நான்கு எத்து வைத்திருந்தான்.
"விடு யா கமலு செத்துற போறானுங்க"
"பின்ன என்ன சர்! தத்ரூபமா இவனுங்க நடிப்ப நம்பணும்னு கேக் மொத்தத்தையும் கீழ போட்டு மிதிச்சு வெச்சிருக்கானுங்க. ரெண்டு பியர் பாட்டில போட்டு உடைச்சிருக்கானுங்க. பாத்த உடனே அவ்ளோ கோவம். உங்களுக்காகத் தான் பொறுத்திட்டு இருந்தேன்"
ஒரு ப்ளோவில் மனதில் நினைத்ததை எல்லாம் கமல் சொல்லி விட்டுத் திருத் திருவென விழிக்க,
'இதுக்கா டா அவனுங்கள அடிச்ச அட மானம் கெட்டவனே' என்று பார்க்க மட்டுமே செய்தான் புகழ்.
"நல்ல வேல சர் ஒன்னும் சொல்லல" கமல் அப்படியே நழுவி விட,
அதன் பிறகு அவர்களை அப்புறப்படுத்த சொன்னவன் "நம்ம இடத்துக்குக் கூட்டிட்டுப் போய்ச் சிறப்பா கவனிங்க. நான் வரும் போது எல்லா விஷயமும் சொல்லியிருக்கணும்" அவனது ஆட்களிடம் சொல்லி, ஒரு ப்ரைவேட் வேனில் ஏற்றிவிட்டு, இவன் ஜீப்பில் ஏற, கமல் வாகனத்தைக் கிளப்ப, சரியாக அந்நேரம் போன் சிணுங்கியது.
எடுத்து பார்த்தவன் முகமெல்லாம் புன்னகை. அட்டென்ட் செய்து காதில் வைத்தது தான் தாமதம்
"ஏமி ரா போலீஸ் காரன் நுவ்வு! போலீஸ் புத்திய என்கிட்டயே காமிக்கிறியா! வந்து சேருன்னு சொல்லிட்டு மீரு பாட்டுக்கு வந்துட்ட! என்னைப் பார்த்தா எப்டி தெலுசு! என் பார்தாவும் போலீஸ் காரர் தான் புரிஞ்சுதா!"
"எக்கட உன்னாரு மீரு! எப்போ வருவ! எவ்வளவு நேரம் காத்திருக்குறது நானு! பெத்த அம்மாவை ராத்திரி நேரத்துல ரோட்டுல நிக்க வெச்சிட்டு எனக்கென்னன்னு போய்ட்ட! கொஞ்சமாவது அறிவிருக்கா"
"நா மேல அபிமானன்டே இப்டி செய்வியா நுவ்வு! நா பாவா உயிரோட இருந்திருந்தா எனக்கு இந்தக் கதி வந்திருக்குமா"
புகழின் அம்மா காக்கிநாடா காஞ்சனாவின் வார்த்தைகள் கல் மாதிரி ஒவ்வொன்றும் சர் சர்ரென வரிசை கட்டினது.
பின்னே, சென்னைக்கு ட்ரெஸ்பர் ஆகி இருப்பதாகவும் உடனே போகவேண்டி இருப்பதால் தான் முன்னே செல்வதாகவும், இரண்டு நாள் கழித்து அவர் வந்தால் போதுமென்றும், வீட்டுப் பொருட்களை எடுத்து வர ஆள் அனுப்புவதாகவும் மகன் சொல்லிவிட்டு, எனக்கென்னவென வந்தால், தாய் மணப்பாரா என்ன?
அந்தக் கோபம் இரண்டு நாட்கள் மகனிடம் பேசாமல் இருந்து, வேண்டுமென்றே நேரம் கெட்ட நேரத்தில் சென்னை வீடு வந்த பிறகு, விளாசி எடுத்துவிட்டார் மனுஷி.
அவரது குரல் வலிமையோ, அந்த அமைதியான சூழ்நிலையோ, கமலின் காதில் தவறாமல் எல்லாம் விழுந்தது.
திருத் திருவென விழித்தவனுக்கு, பெண்ணிடம் வம்பு செய்துவிட்டு தப்பி ஓடினவரை பிடித்து, மக்கள் சரமாரி அடி உதை. பிடிப்பட்டவர் நிலை கவலைக்கிடம். பத்திரிகைகளில் படிப்போமே அது தான் நினைவிற்கு வந்தது.
இந்தப் பக்கம் பிரதிபலிப்பு என்னவென்று பார்க்க, ஓரக்கண்ணால் புகழை பார்த்தான்.
அவன் எதற்கும் அசரவில்லை என்பது லேசாகப் புன்னகைத்தபடி கேட்டுகொண்டிருப்பதில் தெரிந்தது. இதெல்லாம் எப்போதும் கேட்கும் ஒரு விஷயம் போல ஒரு உடல் மொழி வேறு.
"இந்த மனுஷன் இருக்காரே" அமைதியாக என்ன நடக்கிறது கவனிக்க ஆரம்பித்தான்.
அந்தப் பக்கம் கடுப்பாகி இருக்க வேண்டும்? "ஏமி டா பதில் சொல்ல கூடத் தோணலையா! இவளுக்கு என்ன பதில் சொல்றதுன்னு உதாசினங்கா இருக்கியா! செப்பு டா!
புகழ் பேசுவதற்குள் மீண்டும் காஞ்சனாவின் குரல் அங்கிருந்து வர,
"ம்மா ஏண்டி ம்மா நுவ்வு, ம்ம்ப்ச், இப்ப எக்கட உன்னாரு? மீரு வீட்டுக்கு வந்துட்டியா? ஏமி உனக்குக் கோபம்ம்மா" கொஞ்சும் குரலில் கொஞ்சல் மொழிந்தான் மகன்.
பதில் தந்து விட்டால் அவர் காக்கிநாடா காஞ்சனா அல்லவே! அமைதியாக இருக்க,
"ம்ம்ப்ச்! ம்மா.. மட்லாடு ம்மா.. நா பிரியதம்மா கதா. நா செல்லம்மா கதா. பேச மாட்டியா சரி பரவால்ல. நேனு வந்ததுக்கப்புறம் பேசிக்லாம் சரியா"
"ஏமி டா பேசணும்! இல்ல ஏமி பேசணுங்கறேன். நேனு பேசமாட்டேன். வீட்டு சாவியைக் குடுத்தனுப்பு அதி ச்சாலு நாக்கு" பட்டென்று போனை வைத்திருந்தார்.
மறுபடி புகழ் அழைத்தும் எடுக்கவில்லை. கட் செய்து கொண்டே இருக்க, அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட காவலர் குடியிருப்பு இன்ச்சார்ஜிற்கு அழைத்து விவரம் சொல்லி பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வைத்தான்.
"என்ன சர் அம்மாவா! ரொம்பக் கோவமா இருக்காங்களோ"
கமல் கேட்ட எதுவும் அவன் காதில் விழவில்லை. ஏதோ ஒரு பெயர் தெரியா உணர்வு ஆட்கொள்ள யோசனை புகழை ஆட்கொண்டது. அவனை நினைக்கக் கூடாதென்று நினைத்தாலும் ஏதேதோ நியாபகம் வந்து தொலைத்தது.
என்ன உணர்வு இது? ஏன் இப்பொது தோன்றுகிறது? கேள்விகள் குடைந்தாலும் மனதின் குடைச்சலுக்குப் பதில் இல்லை.
அமைதியாகப் புகழ் இருக்க "விடுங்க சர் பொம்பளைங்கனாலே அப்டித்தான். உங்களுக்கு அம்மா. எனக்கு என் பொண்டாட்டி. என்ன வாழ்க்கை சர் இது. நிம்மதியே இல்ல" கமல் சலித்துக் கொள்ள இப்பொது பதிலுறைத்தான் புகழ்.
"அது அப்படி லேது ரா கமல். அவங்க அப்படி இல்லேனா என்கிட்டயும் சரி உன்னகிட்டயும் சரி உயிர்ப்பு இருக்குமா? யோசிச்சு பாரு"
"அவங்களோடவும் இருக்க முடியாது. அவங்க இல்லாமலும் இருக்க முடியாது அவங்க டிசைன் அப்டி நம்ம டிசைன் இப்டி"
"சர்! எப்டி சர் " கமல் அதிசயித்துப் பார்க்க, பெரிதாகச் சிரித்திருந்த புகழ் "அனுபவம் யா" என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டாலும், அதை யார் தந்தது என்ற உண்மை அவனுக்குத் தெரியுமே!
ஒவ்வொன்றிலும் நானிருக்கிறேன் என முன் வந்து நிற்பவளை, என்ன சொல்லி விரட்ட முடியுமாம் அவனால்!
அணுவில் கலந்து உயிராகிக் கிடைப்பவளை ஒதுக்கவும் முடியவில்லை.
பெருமூச்சோடு பாதையில் கவனம் பதித்து விட, மொத்தமாக அவன் கவனத்தைப் பறிக்கவெனவே, அவனின் அந்த ஒருத்தி செய்யக் கூடாததை எல்லாம் செய்து வைத்திருந்தாள்.
வான் பூக்கும்..
Last edited: