"ஸ்ரீபிரசாத்தோட சிஸ்டர் சர்"
"டைம்"
"விடிஞ்சு தான் சர் பாத்திருக்காங்க. அப்போவே ஆள் அவுட்"
"ஓஹ் ஓகே. ஆம்புலன்ஸ் எங்கே இன்னுமா வரலே"
"ஆன் தி வே சர்" என அவன் சொல்லும் போதே ஸ்ட்ரக்சருடன் இருவர் வர, அவர்கள் பணியில் இடையிடாமல் நகர்ந்திருந்தான்.
"உனக்கு என்ன யா தோணுது" நடையை அளவாகப் போட்டு, பார்வையால் இடத்தை ஆராந்தப்படியே புகழ் கேட்க,
"கேஸ் கொஞ்சம் தலைவலி குடுக்கும் போலச் சர்" என்றான் கமல்.
சிரிப்பு வந்தது அவன் பதிலில். "அப்புறம் இது எந்துக்கு யா போட்டிருக்கே " அவன் சட்டையைப் பற்றிக் கேட்க, கமல் பதிலாய் புன்னகைத்து, காதை சொறிய, அப்படியே இருவரின் நடையும் ஹாலின் பால்கனி வந்திருக்க,
அதற்குள் கமலை அங்குள்ள யாரோ அழைத்திருக்க,
"சர் இதோ வந்திடுறேன் " என ஓடினான்.
இங்கிருந்து தானே யாரோ தன்னைப் பார்ப்பதை போல் உணர்ந்தேன் என நியாபகம் வந்தது புகழுக்கு.
ஏதோ நெருடியது. ஆராய முற்பட்டான். சிந்தை முழுவதும் இதில் இருக்க, கதவின் லாக்கை யாரோ திறக்க முற்படும் சத்தமும், அதைத் தடுக்கும் சத்தமும், அதைத் தொடர்ந்து,
"ம்மீ.. திர்ற, கதவை திர்ற, எனக்கு வெளியே போவணும்" எனச் சிறு பிள்ளை குரலும்,
"நிக்கி அங்கெல்லாம் போகக் கூடாது, வேண்டாம் சொல்லு பேச்சு கேளு "என ஒரு பெண்ணின் குரலும் கேட்க, அவனையும் அறியாமல் தன்னாலே ஒரு பரபரப்புத் தொற்றிக்கொண்டதில், இவன் கவனம் மொத்தமும் அங்குப் போக,
கதவை திறந்து கொண்டு "ம்மீ பிடி பாக்கலாம். என்னைப் பிடி பார்க்கலாம் " எனப் பிள்ளை ஒன்று ஓடி வர,
"அச்சோ! நிக்கி போகாத" பின்னோடு அந்த ஒருத்தியும் ஓடி வருவது இப்பொது பார்வைக்கு.
ஓடி வந்தது நிகேதன்.
பின் வந்தது ஜதி,
பார்த்து நின்றிருந்தது புகழ்.
யாரை பார்க்க வேண்டுமென்று அவன் ஆவி வரை துடித்துக் கொண்டிருந்ததோ, அவளைத் தான் இப்பொது பார்த்தது.
அவனின் பிரியமைனா.
நின்று பார்த்தான். பார்த்துக் கொண்டிருந்தான். பார்த்த படியே தான் இருந்தான், உயிரின் அடி ஆழம் வரை தித்திக்க.
இருக்கும் இடத்தை உணர வில்லைச் சுற்றியிருக்கும் சூழ்நிலை மனதில் பதியவில்லை. எதற்கு வந்தான் நியாபகம் இல்லை. அவள் மட்டுமே அனைத்துமாய்.
பாராதிருந்தவளை, பார்ப்பேனா தவித்து இருந்தவளை நிரப்பிக் கொண்டிருந்தான் தனக்குள்.
ஆனால் அவளுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை போல.
"வராதே சொன்னா நிக்கி கேக்குறதே இல்ல! நிக்கி பேட் பாய்" இலகுவாகப் பேசி, மிக இயல்பாக நிக்கேதனை தூக்கி கொண்டு திரும்பினாள்.
இப்பொது இருவர் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டது.
பிரிக்க நினைக்காமல் நிதானமாக அவன் நின்றிருக்க, அதை விட வெகு நிதானமாக பார்வையை விலக்கி கொண்டாள் ஜதி.
யாரையோ போல் அவனைப் பார்த்துச் சிநேகமாகப் புன்னகைத்து "பாத்தியா நிறையப் போலீஸ் நிக்கிறாங்க! நீ சொல்லு பேச்சு கேக்கல பிடிச்சிட்டு போயிருவாங்க அந்த அங்கிள்! வா உள்ள போகலாம்" அவனைக் காட்டி பிள்ளையிடம் பேசியப்படியே கடக்க,
அவளின் சாதாரண இந்தச் செயலில் சற்றுத் தாமதமாகத் தான் உணர்ந்தான். தனக்கிருப்பது போல் எந்த உணர்வும் அவளை ஆட்கொள்ளவில்லை என. போலீஸ் காரன் மூளையே சற்று குழம்பி தான் போனது.
அவள் தானா?
அவளே தான்! அவனின் ஜதியே தான் அடித்துச் சொன்னது உள்ளமும் அவனுக்கு உரிமை பட்ட அவளின் எல்லாமும்.
சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொண்ட ஏமாற்றத்தை தடுக்க முடியாமல் நின்றான். இருந்தும்,
"எக்ஸ் க்யூஸ் மீ! நீ.. நீங்க" எனக் கேட்க போக,
"இவங்க ஸ்ரீபிரசாத் பியான்சி சர். அது அவர் பிள்ளை" அருகில் வந்திருந்த கமல் தான் சொல்லியிருந்தான்.
உடல் சட்டென்று விறைத்து இறுக, விடுக்கென்று புகழ் பார்வை ஜதியின் மேல் போக, அவள் நடை ஒரு நொடி நின்று, தயங்கி பின் இயல்பானது.
திரும்பி இவனை பாராது பார்த்தாளோ?
கொஞ்ச நஞ்ச சந்தேகமும் ஓடி விட, இப்பொது கோபம் கோபம் மட்டுமே ! கண் மண் தெரியாத கோபம்! இப்போதே அவளைப் பிடித்து உலுக்கி எடுத்துவிடும் அளவு கோபம்! மலை போல தவிப்புகள் எழுந்து, நெஞ்சு முழுக்க அடைத்திருந்த போது கூட இப்படியொரு உணர்வை அனுபவித்ததில்லை!
மளமளவென ஏதோ உள்ளுக்குள் சீட்டுக்கட்டு போல சரிந்தது.
எல்லாம் ஐந்து நிமிடங்களில் நடந்திருக்க, அவ்வளவு தான் சுதாரித்திருந்தான் புகழ். சாதாரண மனிதனின் உணர்வுகள் மறைந்து, போலீஸ் புத்தி விழித்தது.
நெற்றி நெறிந்து, கண்கள் இடுங்கி, பின் இயல்பானது.
ஆக எனை பார்த்திருக்கிறாள்! சற்று முன் உணர்ந்தவை
அடித்துச் சொன்னது! மீசையைக் கீழாக இழுத்து நீவி விட்டுக் கொண்டான்.
'எப்படி இங்கு வந்து சேர்ந்தாள்' ஆராய்ந்தது மூளை. தெரியாத கேள்வியோடு, இப்போது மிக அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு கேள்வியும் ஒட்டி கொண்டது.
அவள் முகத்தில் இழப்புக்கான சுவடு தெரிந்ததா? ஆராய்ச்சியை வெளிப்படுத்தியது விழிகள்.
காட்சிகளை ஓட விட்டுப் பார்த்தான் மனதுள். கண்கள் கூடக் கலங்கினது போலத் தெரியவில்லை. ஒரு இறப்பு வீட்டில் இருப்பது போல் அவள் இருக்கவில்லை. ஆராய்வின் முடிவு சொன்னது.
தன்னைப் போல ஒரு ஆசுவாசம் வந்துவிட, பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டான். ஆனாலும் இறுக்கமான சூழ்நிலையை வெகு சாதாரணமாக அவள் கடந்தது உறுத்தியது.
இதெல்லாம் பழக்கப்பட்டவள் தானே! அவள் பார்க்காததா! இவனே விடை கண்டாலும் அவள் எதிர்கொண்ட விதம் எதையோ விடுபட்டு யோசிப்பதாக அடித்துச் சொன்னது.
அது எல்லாவற்றையும் வெறுத்த, அந்நிய மனநிலை என அவனுக்குப் புரியவில்லை.
பேண்ட் பாக்கெட்டில் கை விட்டுக்கொண்டவன், அவளை அளவெடுப்பது போலொரு உடல் மொழியில் நின்றிருந்தான்.
அவள் முற்றிலும் வெறுக்கும் அவனின் பாவனைகள் வெளிப்பட்டதை, சரியாக அறைகதவை சாற்றும் போது பார்த்து விட, உறுத்து விழித்தவள் கதவை அடித்துச் சாற்ற, அவனையும் மீறி இதழ் கடையோரம் சிறு புன்னகை வந்தமர்ந்தது.
எதனாலாம்!
அதே நேரம், ஜதியின் கோபம் எப்படி அவன் பார்வைக்குத் தப்பவில்லையோ? அதே போல் அவளை அங்கிருந்தே தொடர்ந்து சென்ற இரு கண்களில் வழிந்த ரௌத்திரமும் வன்மமும் அவன் கண்களிலிருந்து தப்பவில்லை.
வான் பூக்கும்..
Last edited: