• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஜென்ம ஜென்மமாய் - 1

MK30

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
14
3
thanjavur
அத்தியாயம் 1



"ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம்

சரவணபவ குஹா சரணம் சரணம்

குருகுஹா சரணம்; குருபரா சரணம்

சரணமடைந்திட்டேன் கந்தா சரணம்"


முருகனின் அறுபடை வீடுகளையும் ஒன்றாய் ஒரே இடத்தில் காணும் பாக்கியம் பெற்றால் அதைவிட வேறு என்ன வேண்டும் இந்த பிராணன் முக்தி பெறுவதற்கு? என்னும் த்ருப்தியுடன் அனைவரும் வந்து செல்லும் சென்னை பெசன்ட்நகர் அறுபடை வீடு முருகன் கோவில் அது.

இங்கு "நியூயார்க் விநாயகர்" என்று அழைக்கபடும் மகாவல்லப கணபதியும், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, பழநி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய ஸ்தலங்களில் உள்ளது போலவே தனிதனி சந்நிதியில் முருகப் பெருமானின் திருவிக்கிரகங்களும் உள்ளன.

"முருகா" என பக்தர்கள் மனமுருகி அழைத்தாலே மயில் ஏறி அருள்புரிய பறந்து வருபவர் முருகர். அவரை போற்றி புகழும் "கந்தகுரு கவசத்தை" தினம் 108 முறை உச்சரிக்கும் பழக்கமுடைய ஜகதாம்பாள், எந்நாளும் போல் இன்னாலும் உதடுகளின் ஓயாத உச்சரிப்பில் நொடிதோறும் முருகனை துதித்தபடி அந்த அறுபடை முருகனின் அழகிய சொருபங்களை தன் கண்களால் விழுங்கியவாறு ஒவ்வொரு சன்னிதானமாய் ஏறி இறங்கினார்.

அறுபடைகளையும் தரிசித்து பைரவரையும், நவகிரகங்களையும் கண்களுக்குள் பூட்டி கொண்டு வந்தவர் நெடுநெடுவென உயர்ந்து நின்றிருந்த வேலின் புறம் அமர்ந்திருந்த தனது பெயரன், பெயர்த்தியின் அருகே வந்தார்.

பாட்டியின் கைகளை பற்றி நிதானமாய் அவர் அமர உதவிய குகன், "பாட்டி! உங்களுக்கு தான் மூட்டு வலி இருக்குல அப்றம் இத்தனை சன்னிதியையும் ஏறி இறங்கனுமா பாட்டி? அப்படியே கீழயே நின்னு அவரை பார்த்ததுபோல நம்ப கன்னத்துல இரண்டு தட்டு தட்டிட்டு வந்தா போதாதா?"

கால்களை நீட்டி அமர முடியாமல் சற்று குறுக்கியபடி அமர்ந்து கால்களை நீவி கொள்ளும் பாட்டியிடம் ஆயாசமாய் கேட்டான்.

அதற்கு ஜகதாம்பாள் பாட்டி பதில் அளிக்கும் முன், "அவ்வளவு அக்கறை இருந்தா அப்பாகிட்ட சொல்லி அறுபடை கோவில்களுக்கும் டிக்கெட் போட்ருக்கனும்டா அண்ணா. நான் பாட்டியை அழகா ரயில்லையே கூட்டிட்டு போய் கூட்டிட்டு வந்திருப்பேன்" என தமையனிடம் நொடித்தாள் அருகே அமர்ந்திருந்த குமாரி.

"லூசு! ரயிலை என்ன முருகன் சன்னிதி வாசல்லயா நிறுத்துவான் அப்பவும் நடக்க தான் செய்யனும். பாட்டியால முடியாதுனு தான் அப்பா வேணாம்னு சொன்னாங்க அது புரியாம பேசாத" என தங்கையை அதட்டினான் குகன்.

"அட விடுப்பா.. பேத்தியா முருகனை பார்க்கனும்னு ஆசையா இருந்தா, அவ ஆசைக்காக தான் நானும் உங்க அப்பன் கிட்ட பேசுனேன். அவன் என்னனா என்னால ஏறி இறங்க முடியாதுனும், என்னை வீட்ல தனியா விட்டுட்டும் போகமுடியாதுனு ஒரேடியா எங்கேயும் போக வேணாம்னு நின்னுட்டான்"

என தன் மகனின் தன் மேலான பாசத்தில் பூரித்தாலும், தன்னால் அவர்கள் சந்தோஷமும் பாழாகிறதே என்ற கவலையுடன் பேசினார் ஜகதாம்பாள்.

"அச்சோ பாட்டி! நீங்க எதுக்காக இவ்வளவு கவலைபடுறீங்க? இந்த லூசு ஒன்னும் முருகரை பார்க்க ஆசைபடலை. ரயில்ல போனா விதவிதமா வித்துட்டு வருவாங்க அதை சாப்டுட்டே அப்பாவோட பாதி காசை காலி பண்ணிடலாம்னு போட்ட திட்டம் பாழாச்சுனு தான் வருத்தபடுறா" என பாட்டியை சமாதானம் செய்ய சொன்னான்.

அதற்குள் பொங்கி எழுந்த குமாரி, "டேய்! தெரிஞ்சமாதிரி பேசாத நான் இந்த வருஷம் என்னோட ஆய்வு கட்டுரைக்கு முருகரை பத்தி தான் தகவல்களை சேகரிச்சு எழுத போறேன். அதனால் தான் பாட்டிகிட்ட சொல்லி அறுபடை வீடுகளுக்கும் போக அப்பாகிட்ட பேச சொன்னேன்"

என்றவளுக்கு இந்தவருட ஆய்வு கட்டுரையின் மதிப்பெண்களின் முடிவை எண்ணி இப்பொழுதே பயம் எழுந்தது.

"விடு கண்ணு! நேர்ல போகலைனா என்ன? இதோ உனக்காக தான் பாட்டி இந்த கோவிலுக்கு கூட்டிட்டு வந்தேன். இந்த அறுபடை கோவிலை தரிசித்தாலே அந்த அறுபடை வீடுகளையும் தனிதனியா பார்த்த மாதிரி தான்.

இதோ பாரு.. ஒவ்வொரு அறுபடை கோவில்களின் இடத்துலையும் முருகர் எப்படி எந்த திசையில் இருப்பாரோ அதே திசையில், அதே கோலத்துல தான் இங்கேயும் அந்த அந்த சன்னிதில இருக்காரு பாரு. அதோட நீ கவலைபடாதடா ராஜாத்தி! உனக்கு என்ன தகவல் வேணும்னாலும் கேளு அப்பத்தா எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்"

என வாஞ்சையாய் பேத்தியின் கன்னம் வழித்து முத்தமிட்டார் ஜகதாம்பாள்.

"அவகிட்ட இப்படி ஒரு வார்த்தையை சொல்லி மாட்டிகிட்டிங்களே பாட்டி. இனி உங்களை வேற எந்த வேலையும் செய்யவிடாம கேள்வியா கேக்கபோறா பாருங்க" என சிரித்த குகனுக்கு கைப்பேசியில் அழைப்பு வந்தது.

அதனால், "பாட்டி! நீங்க இவளை மடில உட்கார வச்சி கதை சொல்லிட்டு இருங்க நான் இப்போ வந்திடுறேன்" என அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

"அவன் கிடக்குறான் நீங்க சொல்லுங்க பாட்டி.. இந்த முருகர் ஏன் இரண்டு கல்யாணம் பண்ணிகிட்டாரு? கடவுளா இருந்தாலும் அது தப்பு தான?"

கோபம் போல் கேட்டாலும் அவளுக்குள் இருக்கும் ஆர்வம் பதிலுக்காய் பாட்டியை பார்த்தபடி அவரை ஒட்டி அமர வைத்தது.

தனது கைகளை பற்றி கொண்டு அமர்ந்திருந்த பேத்தியை பார்த்து புன்னகைத்த ஜகதாம்பாள், "கடவுள் நம்பளை போல சாதாரண மனுஷர் இல்லடா. நம்ப வாழ்க்கையில் ஒரு வருஷம்ன்றது தேவர்கள் உலகத்துல ஒரு நாள்னு சொல்லுவாங்க ஆனா முருகர் தேவர்களுக்கெல்லாம் தேவர். அவரோட செயல்கள் என மக்களால் சொல்லபடுற விஷயங்கள் அனைத்தும் மக்களோட வாழ்க்கைக்கு தேவையானதை தான் சொல்லும்"

பொறுமையாய் விளக்கிய பாட்டியிடம் உதட்டை பிதுக்கிய குமாரி, "இந்த கல்யாணம் மூலமா முருகர் மக்களுக்கு என்ன சொல்ல வராரு பாட்டி இரண்டு கல்யாணம் பண்ணலாம்னா?

என்னோட தோழி அந்த ஸ்மிர்த்தி நான் ஆய்வு கட்டுரைக்காக முருகரை எடுக்க போறேன் சொன்னதுக்கு எங்களோட கிருஷ்ணர் ராதையை காதலிச்சாலும் கல்யாணம் பண்ணது ருக்மணியை மட்டும் தான் ஆனா உங்க முருகர் இரண்டு சைட்லையும் ஆள் வச்சிட்டு நிக்கிறாருனு கிண்டல் பண்ணா தெரியுமா"

ஆதங்கமாய் சொல்லிய பேத்தியின் கன்னம் தடவியவர், "இறைவனை இப்படி எல்லாம் பேசகூடாதுடா தங்கம். பாட்டி தான் சொல்றேன்ல இறைவனோட ஒவ்வொரு திருவிளையாடலுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதேபோல தான் அவர்கள் மேல் பிணையப்பட்ட கதைகளுக்கும் அர்த்தமுண்டு. அதை புரிஞ்சிக்க முடியலைனா கடந்து போகனுமே தவிர விமர்சிக்க கூடாது" என்றார்.

அப்பொழுது தான் தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேசி முடித்து வந்த குகனும், "சரியா சொன்னீங்க பாட்டி! ஏய் லூசு.. அந்த ஸ்மிர்த்திக்கு புராணம் எல்லாம் தெரியுமா தெரியாதா. கிருஷ்ணரோட மனைவிகளோட எண்ணிக்கை என்னவாம்? அவ நம்ப முருகரை பத்தி கிண்டல் பண்றாளா?" என கேட்டவனிடம் நிஜமான கோபம் வெளிபட்டது.

அதில் பேத்தியை விடுத்து பேரனின் கரம் பற்றி தன் அருகே அமர வைத்தார் ஜகதாம்பாள்.

"ராஜா கண்ணா.. அந்த புள்ளைதான் தெரியாம பேசுச்சுனா இப்போ நீயும் அதே போல தான் பேசுற பாரு. நம்ப ஒரு விஷயத்தை சொல்லும் முன்னாடி அந்த விஷயம் சரியானதானு யோசிச்சு பேசனும் ராஜா.

ஒரு விஷயம் நமக்கு முரணா தோணுச்சுனா அதை பேசவோ செய்யவோ கூடாது இதை விளக்குறதுக்காக தான் அந்த குமரன் வள்ளி, தெய்வானைனு இரண்டு பேரை திருமணம் செஞ்சாரு"

என்றவர் இப்பொழுது தான் குமாரியின் கேள்விக்கான விடையின் பக்கம் வந்தார்.

"என்ன பாட்டி சொல்றீங்க? எங்களுக்கு தெளிவா சொல்லுங்க? மனிதர்கள் முரண்படகூடாதுனு முருகர் இரண்டு கல்யாணம் பண்ணாருனு சொல்ல வரீங்களா?"

குகன் தன் சந்தேகத்தை கேட்க,

"இல்ல ராஜா.. மனிதர்கள் தங்களுக்குள்ள முரண்படுறது இருக்கட்டும் ஒரு மனிதன் அவனுக்குள்ளையே முரண்படாகூடாதுனு தான் குமரர் புரிய வைக்க நினைச்சாரு.

அதாவது ஒரு மனிதனோட எண்ணமும், செயலும் ஒன்னா தான் இருக்கனும். எதையும் விருப்பம் கொள்ளாமல் செய்யனும்னு செய்ய கூடாது அதேபோல ஒரு விஷயத்து மேல ஆசைபட்டுட்டோம்னு அதை மனசுலயே நினைச்சிட்டு அடையறதுக்கு முயற்சியே பண்ணாமலும் இருக்ககூடாது"

அவர் சொல்வது புரிவது போல் இருந்தாலும் புரியாமல் போக, "பாட்டி! இப்போ நீங்க சொன்னதை நான் என் ஆய்வு அறிக்கைல எழுதினா எங்க ப்ரொபசரே தலையை பிச்சுப்பாரு"

குமாரி பாவமாய் சொன்னதில் குகன் சிரித்தபடி, "பாட்டி! நான் கேள்வி பட்டிருக்கேன் முருகரோட துணைவிகளில் வள்ளி இச்சா சக்தினும், தெய்வானை க்ரியா சக்தினும். இரண்டும் முருகருக்கு அதாவது மனித வாழ்க்கைக்கு தேவை அதை தான நீங்க இப்படி சொன்னீங்க" என கேட்டான்.

பாட்டி பதில் சொல்வதற்குள், "டேய் அண்ணா! எப்பவும் அந்த டப்பாக்குள்ள தான தலையை நீட்டிட்டு இருப்ப" என அவன் கைகளில் இருந்த அலைப்பேசியை காட்டி சொன்னவள் தொடர்ந்து,

"இப்போ எதுக்கு எங்களுக்கு நடுவுல வந்து ஏற்கனவே குழம்புற என்னை இச்சா,க்ரியானு எதோஎதோ சொல்லி குழப்புற.. போ அங்க" என அவனை விரட்டினாள்.

அதில் பாட்டி சிரிக்க அவள் தலையில் கொட்டிய குகன், "பயித்தியம்! இவங்களோட கல்யாணம் பத்தியே ஒழுங்கா தெரியாம நீ என்னத்த ஆய்வு கட்டுரையை தயார் பண்ண போறனு தெரியலை. உன்னை பத்தி தெரிஞ்சு தான் அப்பா காசை வீணாக்க வேணாம்னு அறுபடை வீடுகளுக்கு போற ப்ளானை விட்டுட்டாரு போல" என தங்கையை சீண்டினான்.

அதில் குமாரிக்கு ரோஷம் வர, "ஓவரா பேசாத அண்ணா! இப்போ அதிகமா சோசியல் மீடியால முருகரை கொண்டாடுறாங்களேனு அவரை பத்தி ஆய்வு கட்டுரை எழுதலாம்னு நினைச்சேன். அதேபோல எனக்கும் சில விஷயங்கள் தெரியும் சரியா. வள்ளி- தெய்வானை இரண்டு பேரும் முன் ஜென்மத்துல விஷ்ணுவோட பொண்ணுங்களா இருந்தாங்க, அடுத்த பிறவில தான் வள்ளி தெய்வானையா பிறந்து முருகரோட கல்யாணம் ஆச்சு. தெய்வானை வீட்ல பார்த்து வச்ச கல்யாணம் வள்ளி காதல் கல்யாணம்"

கடகடவென தனக்கு தெரிந்ததை ஒப்பித்தவள் தமையனை கெத்தாய் பார்த்து வைத்தாள்.

"ம்கக்கும்.. இந்த விஷயம் எல்லாம் ஊருக்கே தெரியும் நம்ப ஊருக்கு மட்டும் இல்ல பல மைல்களுக்கு அப்பால இருக்க சிங்கபூர், மலேசியா மக்களுக்கு கூட தெரியும்" என வம்பு வளர்த்தான் குகன்.

அதில் அவனை அவள் அடிக்க பார்க்க அமர்ந்திருந்த போதும் அவனின் உயரம் அதிகம் என்பதால் இவளால் பாட்டிக்கு மறுபுறம் இருந்து எக்கி எக்கி தான் அடிக்க முடிந்தது.

இருவரின் சண்டையையும் சில நொடிகள் சிரித்தபடி பார்த்த ஜகதாம்பாள், "போதும் போதும்டா கண்ணம்மா... ராஜா விடு ப்பா " என இருவரையும் சமாதானம் செய்தார்.

"இப்போ என்ன முருகர் தன்னோட திருமணம் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வராருனு சொல்லனும் அதான? அதை நானே உனக்கு புரியும் படி சொல்றேன். இரண்டு பேரும் அமைதியா கேளுங்க" என பாட்டி இருவருக்கும் பொதுவாய் சொல்ல,

"பாட்டி! எனக்கு முழு கதையும் சொல்லுங்க.. முருகரோட பிறப்பு, வளர்ப்புலாம் எல்லோருக்கும் தெரியும் ஆனா தெய்வானை, வள்ளி கதைகளை எனக்கு முழுசா சொல்லுங்க. அவங்க இரண்டு பேரும் எதுக்காக பிறவி எடுத்து முருகரை சேரந்தாங்க? அதிலும் ஒருத்தங்க காதல் திருமணம் ஒருத்தங்க சம்பிரதாயபடி திருமணம்"

என்று வள்ளி தெய்வானை கதையை விளக்கமாய் சொல்லும்படி பாட்டியை வற்புறுத்தினாள் குமாரி.

"சரிடா ராஜாத்தி! பாட்டி சொல்றேன்.. நானும் சின்னதா இருக்கப்போ உன்னை மாதிரி தான் சந்தேகங்கள் கேட்பேன். அப்போ எனக்கு என் பாட்டி சொன்ன கதைகளை தான் இப்போ நான் உனக்கு சொல்ல போறேன்" என ஆரம்பித்தவர் தொடர்ந்து,

"மும்மூர்த்திகளில் அழிப்பவராய் இருந்தாலும் அன்பால் சுலபமாய் உருக கூடிய கடவுள்னா அது சிவபெருமான் தான், அதேபோல தான் தேவி பார்வதியும். நம் முன்னோர்கள் தேவி பார்வதியை மலைமகள்னு சொல்வாங்க. இயற்கையின் தேவி அவங்க, அப்போ அவங்க அழகுக்கு குறை இருக்குமா? அப்படி அன்பும் அழகும் சேர்ந்த கலவையானஅவர்களோட பிள்ளை தான் எம் சுவாமி குமரவேல் அதாவது முருகர்.

குழந்தையே பிறக்காதுனு தேவி ரதியிடம் சாபம் வாங்கிய தேவி பார்வதிக்கு மகனாய் அந்த முருகர் கிடைத்தாராம். அந்த தருணத்தில் அவரோட பிறப்பை பார்த்து பார்வதியோட அண்ணனான மாகாவிஷ்ணு ஆனந்த கண்ணீர் விட்டாராம். அவரோட அந்த கண்ணீர் துளிகள்ல இருந்து உருவான இரு பெண்கள் தான் முருகரின் மனைவிகளாகனும்னு தவம் இருந்து மற்றொரு பிறவியில் வள்ளி மற்றும் தெய்வானையா பிறந்தாங்க"

ஜகதாம்பாள் தான் அறிந்த கதையை தன் பெயரன், பெயர்த்திக்கு விவரமாய் விவரிக்க தொடங்கினார்.


பாற்கடலில் ஆதிஷேஷனின் மேல் அழகாய் சயனித்திருந்த அனந்தநாதனின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிய, அதை தன் கைகளில் தாங்கினார் மகாவிஷ்ணுவின் மன அரசி மகாலட்சுமி.

அவரின் கரம் பட்டதில் இரு துளிகளும் பாற்கடலையே ஜொலிஜொலிப்பாய் மாற்றும் வணணம் ஒளியை பாய்ச்சியது.

அதை புன்னகையுடன் வரவேற்ற தேவி மகாலட்சுமி தன் கரத்தை முன்னால் நீட்ட ஜொலித்துக் கொண்டிருந்த இரு துளிகளும் சிறு மணியாய் மாறியது. அவர் மேலும் தன் கரத்தை விரித்தபடி கீழே நீட்ட மணிகள் இரண்டும் உருண்டோடி கடலில் அமிழ்ந்தது.

இதை அறியாமல் மாகாவிஷ்ணு வசிகரிக்கும் இதழ் புன்னகையுடன் முருகரின் பிஞ்சு முகத்தை தன் மனக் கண்களால் உணர்ந்து தன் கண்களுக்குள் காட்சியாய் காணும் பொழுது பாற்கடலில் மணியாய் விழுந்த இரு துளிகளும் பெண்களாய் மாறி அவர்கள் முன் நின்றனர்.

விண்ணுலக தேவர்களின் அழகெல்லாம் ஒட்டுமொத்தமாய் குத்தகைக்கு எடுத்தது போல் மாகலட்சுமியின் கடாச்சத்தில் மினுமினுப்பாய் நின்ற இரு பெண்களும் தன் கண்களை மலர்த்த, அவர்கள் முன் தெரிந்தது மகாவிஷ்ணுவின் கண்களின் வழி காட்சியாய் வெளிப்பட்ட முருக பெருமான் தான்.

பார்த்த நொடி இருவருக்குமே அவர் பால் அன்பு பெருக்கெடுத்தது. இரு பெண்களுக்கும் அவர் யார் என அறிய ஆர்வம் தோன்றியது.

ஒருவள் கேட்க தயங்கி நின்றாள் என்றால் மற்றொருவள், "தந்தையே யார் இவர்?" என தைரியமாய் கேட்டாள்.

அப்பொழுது தான் தன் சிந்தையில் இருந்து வெளிவந்த மகாவிஷ்ணு தன் முன் நிற்கும் இரு பெண்களையும் கண்டு மகாலட்சுமியின் புறம் திரும்பினார். அவர் புன்னகையுடன் தலையை மட்டும் அசைக்க அதை புரிந்து தன் மாய புன்னகையை விரித்தார் பரமாத்மா.

"சிவசக்தியின் அம்சம் என்பதால் பிறந்தவுடனே பூமிவாசிகளின் வாழ்க்கைக்கான தத்துவத்தை விளக்க நினைத்துவிட்டானா ஆறுமுகன். லட்சுமி! பார்த்தாயா நம் மருமகனை இப்பொழுதே தனக்கான செயல்களை தானே நிர்ணயிக்க தொடங்கி விட்டான்"

என மருமகனை பற்றி பெருமையாய் இதழ் விரித்த பெருமாளிடம்,

"ஆம் நாராயணரே! பூமிவாசிகள் தங்களின் வாழ்வை வாழ்வாங்கு வாழ அற நெறிகளை வகுக்க நம் மருமகன் முருகன் அருள்புரிவான்" என்றார்.

"ஆகட்டும் லட்சுமி! இனி நடப்பதை பார்ப்போம்" என்றவர் அந்த இரு பெண்களையும் பார்க்க, அவர்களோ இவர்கள் பேசுவதை கூட உணராமல் தாங்கள் பார்த்த அந்த முகத்தை பற்றி நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஒருவள் குமரனை யார் என்று அறியாமலே மனதால் விருப்பத்துடன் பூஜிக்க, மற்றொருவள் குமரனை அறிய வேண்டுமென்ற அவசியமே இல்லை என்பதை போல் அடுத்து அவரை பார்ப்பது எப்படி? என்னும் செயல்திட்டத்தை யோசிக்க தொடங்கி இருந்தாள்.

பார் முழுக்க அறிந்தவர் பாற்கடல் அரசன் இவர்கள் இருவரின் மன எண்ணங்களை அறிய மாட்டாரா? சிரித்தபடி, "மங்கைகளே.. என் மகள்களே!" என அழைத்து அவர்கள் கவனத்தை தன்புறம் திருப்பினார்.

இருவரும் சிந்தை களைந்து பெருமாளின் அருள் பொங்கும் முகத்தை பார்த்து கரம் கூப்பி அவரை வணங்கினர்.

"சொல்லுங்கள் மகள்களே! தங்களுக்கு வேண்டியது என்ன?" என ஒன்றும் அறியா பாலகனாய் அவர்களிடமே வினவினார்.

இரு பெண்களும் ஒருவரை கண்டு ஒருவர் புன்னகைத்து கொண்டனர். பின் முன்னால் பேசியவளே மீண்டும் தானே பேசினாள், "தந்தையே! நான் விரும்புவது எல்லாம் ஒன்று தான். தற்பொழுது தங்கள் கண்களில் நான் கண்டவர் பார்க்க பாலகராய் தோன்றினாலும் அப்படி அல்ல என தோன்றுகிறது. அவருடன் தான் எனது ஜென்மம் தொடர வேண்டும் அதற்காய் நான் என்ன வேண்டும் என்றாலும் செய்ய தயார்" என புன்னகைத்தாள்.

மகாவிஷ்ணு மற்றொரு பெண்ணவளை பார்க்க அவளோ தவிப்புடன் தன்னுடன் தோன்றியவளை கண்டபடி தன் மன இச்சையை சொல்ல தயங்கினாள்.

அவளை அறிந்த மகாலட்சுமி, "நாராயணரே! தாங்கள் அறியாதது என்று இந்த மூவுலகிலும் ஏதேனும் உண்டா என்ன? தங்களின் ஆனந்த கண்ணீரில் தோன்றிய பெண்களின் மன எண்ணங்கள் என்னவென்று தாங்கள் அறிவீர்கள். அதை நிறைவேற்றி வையுங்கள்" என மனதினுள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்.

துணைவியின் வேண்டுதலை மறுப்பது கணவனுக்கு அழகில்லையே அதனால் மென்மையாய் தலையசைத்த எம்பெருமான்,

"மகள்களே உங்கள் இருவரில் ஒருவள் செயல் வடிவம் மற்றொருவள் இச்சைகளின் வடிவம் உங்களின் பிறப்பிற்கு காரணமான நான் ஒரு தந்தையாய் என் இரு பிள்ளைகளின் செயல் மற்றும் எண்ணங்களை நிறைவேற்ற வழிவகுப்பது என் கடமை. ஆயினும் அனைத்தையும் சுலபமாய் அடைந்தால் அதில் பெரியதாய் உவகை தோன்றாது அல்லவா" என நிறுத்தினார்.

பெண்கள் இருவரும் தந்தை சொல்ல வருவது என்ன? என ஆழமாய் கவனித்தபடி நின்றிருக்க மகாலட்சுமிக்கு தான் பொறுமை இல்லாமல் போனது.

"நாராயணரே! தாங்கள் சொல்ல வருவதை விரைவாக சொல்லுங்களேன் இவர்கள் இப்பொழுது என்னதான் செய்ய வேண்டும்?" என அவசர பட்டார்.

"தேவி! பெண்கள் என்றும் ஆவல் மிக்கவர்கள் தான் அதிலும் அன்னைகள் அனைவரும் பிள்ளைகளின் வாழ்வின் இறுதி நொடி வரை அறிந்து முன்பே அவர்களை காக்க முற்படும் உன்னதமானவர்கள் தான் என்பதற்கு நீயும் விதிவிலக்கல்ல போலும்"

என குறும்பாய் நகைத்தவர் மகள்களிடம், "தங்கங்களே! தாங்கள் இருவரும் இந்த நொடி முதல் தவம் புரிய தொடங்க வேண்டும்" என்றார்.

இரு பெண்களும் ஒருவரை ஒருவர் கண்டபடி, "தவமா? எதற்காக? யாரை நோக்கி தவம் இருக்க வேண்டும் தந்தையே?" என ஒரே குரலில் வினவினர்.

"அதை நான் சொல்ல முடியாது மகள்களே.. தங்களின் எண்ணங்களும், செயல்களுமே தங்களின் பாதையை வகுக்கும்.. பாதையின் முடிவில் தாங்கள் வேண்டியதை கிட்ட செய்யும் புது வழி பிறக்கும்" என வலது கரத்தை உயர்த்தி ஆசிர்வதித்தார்.

இரு பெண்களும் ஒன்றும் புரியாமல் மகாவிஷ்ணுவிடமும், மகாலட்சுமியிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு தவம் புரிவதற்காய் சென்றனர்.

செல்பவர்களை கண்டவாறு, "நாராயணரே! இவர்களை தவம் இருக்குமாறு தாங்கள் தான் கூறினீர்கள் ஆனால் தவத்தின் முடிவில் புது வழி பிறக்கும் என்கிறீர்களே. அப்படியானால் இவர்களின் விருப்பத்தின் முடிவு தவத்தால் கிடைக்காதா?" என கேட்டார்.

"அவர்கள் இருவரும் தவம் இருந்தால் மனஅமைதியும் தெளிவும் கிட்டும் தேவி. அதன் மூலம் அவர்களின் இலக்கிற்கான பாதை கிட்டுமேயன்றி அது அவர்களின் இலக்காகாது.. இலக்கு அதன் பின் தான் தொடங்கும். ஏனெனில் எம் மருமகன் முருகனை அடைவது அத்தனை இலகுவானது அல்லவே.."

என்றவரின் இதழ்களில் வழக்கமான மாய புன்னகைகள் மலர்ந்தது.


- தொடரும்.



(இந்த கதையில் வரும் அனைத்து மனிதர்களும், கடவுள்களும், அவர்களின் செயல்களும், சூழல்களும் எனது கற்பனையே அன்றி எந்த ஒரு தனி மனிதனையோ, மத நம்பிக்கைகளையோ, இறைவனையோ குறிக்காது. இதில் வரும் சம்பவம்கள் முழுக்கமுழுக்க எனது கற்பனை மட்டுமே எந்த ஒரு வரலாற்று செய்திகளுடனோ புராணங்களுடனோ தொடர்புடையது அல்ல)
 
  • Love
Reactions: MK24 and Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
வித்தியாசமான கதை 👍

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 
  • Like
Reactions: MK30