• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஜென்ம ஜென்மமாய் - 2

MK30

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
14
3
thanjavur
அத்தியாயம் 2: (ரசம் - அமைதி)


மகாவிஷ்ணுவின் ஆனந்த கண்ணீரில் தோன்றிய இரு பெண்களும் அவரின் வார்த்தைகளை ஏற்று தவம் புரிவதற்காய் சென்றனர்.

தவம் புரிவது என்பது சட்டென ஒரு இடத்தில் கண்களை மூடிக்கொண்டு அமர்வதா என்ன? நிச்சயமாய் இல்லை. தவம் என்பது நமது மனதின் அமைதியை நோக்கிய பயணம், ஆயினும் அதற்கான முதல் வழி தூய்மை மற்றும் புனிதம் ஆகும்.

தூய்மை மற்றும் புனிதத்தை சிந்தையில் கொண்டு இருபெண்களும் இணைந்து தேர்வு செய்த இடம் "கங்காவதாரணை" - அது புனித நதியாம் கங்கை பாய்ந்து வரும் இமயமலை முகட்டில் அமைந்துள்ள புண்ணிய பூமி.

முன்னொரு காலத்தில் பகீதரன் என்பவனின் வேண்டுதலின் காரணமாக பிரம்மதேவர் "கங்கை நதி"யை பூமிக்கு அனுப்ப சம்மதித்தார். ஆயினும் புண்ணிய அரசியை தாங்கிக் கொள்ள சிவபெருமான் ஒருவராலே முடியும் என்பதால் பகீரதன் சிவபெருமானை வேண்டிக் கொண்டானாம்.

அவன் வேண்டுதலில் இறைவன் அதை தாங்கிக்கொள்ள தானே பூமிக்கு இறங்கிவந்து கொண்ட கோலமே கங்காவதாரணை தாண்டவம்.

ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி, உடலைப் பின்புறமாக வளைத்து, கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் "கங்காவதரணம்" என்று அழைக்கப்படுகிறது.

இறைவனே இறங்கி வந்து தாண்டவமாடி கங்கையை தன் மேல் தாங்கி கொண்ட இடத்தை விட புனிதமான இடம் மூவுலகிலும் வேறெங்கும் கிட்டுமா? அதனால் இருபெண்களும் அவ்விடத்தை தேர்ந்தெடுத்து தவம் புரிய தயார் ஆனார்கள்.

மாகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் புத்திரிகள் என்பதால் அவர்கள் தேகம் பட்டாடைகளாலும், பொன் நகைகளாலும் மின்னிக் கொண்டிருந்தன. அவை அனைத்தையும் துறந்த இருவரும் மரபட்டைகளாலும், முஞ்சா புல்லினாலும் ஆடைகளை உருவாக்கி அவற்றை உடுத்திக் கொண்டனர்.

"அக்கா! இனி நம் தவத்தை துவங்குவோமா?" என இருபெண்களில் இச்சா சக்தி தன் தமைக்கையிடம் கேட்க,

"ஆம் தங்கையே! செயல்கள் தான் நமக்கு பலனை தரும் தொடங்குவோம்" என இருவரும் தங்களின் தவத்தை அங்கு தொடங்கினர்.

இரு கரங்களையும் தாமரை மொட்டாய் குவித்து வான் நோக்கி நீட்டியவர்கள், ஒரு காலை மடக்கி அதை மற்றொரு கால் முட்டியின் பின்புறம் வைத்து, விழிகளை மேல் நோக்கி நிறுத்தி "ஓம் நம சிவாய" மந்திரத்தை உச்சரித்து தங்களின் தவத்தின் முதல் அடியை வைத்தனர்.

இப்படி தொடங்கிய அவர்களின் தவம் ஒருநாள், இருநாள் அல்ல பல காலங்கள் தொடர்ந்தது. சுட்டெரிக்கும் கோடை காலங்களில் உடல் வெப்பத்தில் கருகுவது போல் ஆன போதும், மழை காலத்தில் அவர்களை சுற்றி குளம் போல் நீர் நிறைந்த போதும், குளிர் காலத்தில் பற்கள் உறைந்த போதும் அவர்கள் இதழ்கள் உச்சரிக்கும் மந்திரங்கள் ஒரு பொழுதும் நிற்கவில்லை.

அவர்களின் தவத்தின் தூய்மையினால் அவர்களை சுற்றி இருந்த இடத்தில் இருக்கும் மரங்கள் சுவையான கனிகளை கனிந்தன. புற்கள் செழித்து வளர்ந்தன. இயற்கையாய் பகைமை பாராட்டும் விலங்குகள் கூட பகைமையை விட்டொழித்தன.

இப்படி மூவாயிரம் ஆண்டுகளை கடந்து முனிவர்கள் மற்றும் தேவர்களையே விஞ்ச கூடிய இவர்களின் தவத்தில் மேலுலகம் மொத்தமும் பிரமித்தது. மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் "எம் பெண்கள்" என பெருமையில் விம்ம சிவபெருமான் இவர்களின் தவத்தில் மெய்சிலிர்த்தார்.

அவரின் மகன் முருகரால் பூமி வாழ் மக்களின் வாழ்விற்கான தத்துவத்தை விளக்கும் கருவிகள் தானே இந்த இரு பெண்களும். அவர்களின் பிறப்பும், இந்த தவமும் முன்பே முடிவு செய்யபட்டதே ஆயினும் சிறிதும் தளராத இருபெண்களின் தவத்தில் அவர்களின் எண்ணங்களுக்கு உயிரூட்ட ஓடிச் சென்றார் அன்பில் உருகும் உன்னத பெருமான்.

மூவாயிரம் ஆண்டுகளாய் முழு மூச்சாய் கடும் தவம் புரிந்தவர்களுக்கு வரம் அளிக்க மாகாதேவனே மீண்டுமாய் இறங்கி வந்தார் "கங்காவதாரணை"க்கு.

அண்டசராசரமும் சில நொடிகள் உறைந்து நிற்க பெண்களின் முன் தோன்றினார் சிவபெருமான். கண்களை கூச செய்யும் புனித ஒளியுடன், மகிழ்வான புன்னகையுடன் ஆசிர்வதிப்பது போல் கைகளை உயர்த்தி,

"மகள்களே! உங்களின் தவத்தில் யாம் இன்புற்றோம். தங்களுக்கு வேண்டும் வரத்தை கேளுங்கள்" என இதழ் மொழிந்தார்.

அவரின் குரலில் இத்தனை வருடங்களாய் மேல்நோக்கியிருந்த இருபெண்களின் கண்களும் அவர்புறம் திரும்பியது. மடக்கி வைத்திருந்த காலை இறக்கி இருகால்களையும் ஒன்றாய் தரையில் ஊன்றியவர்கள் வான் நோக்கி தாமரை மொட்டாய் குவித்து நீட்டியிருந்த இரு கரங்களையும் கீழ் இறக்கி மார்புக்கு நேராய் நீட்டி கீழே விழுந்து வணங்கினர்.

"மகாதேவா! தங்களின் வரவில் நாங்கள் புனிதம் பெற்றோம்" என ஆனந்த கண்ணீர் வழிய இருபெண்களும் உவகை கொண்டனர்.

புன்னகைத்த ஈஸ்வரர், "மகள்களே! தாங்கள் வேண்டுவது என்ன கூறுங்கள்" என கேட்டார்.

"மகாதேவா! எங்களின் பிறப்பின் காரணங்களை நாங்கள் அறியோம் ஆயினும் பிறந்த நொடியே ஒருவர் எங்களுள் மையம் இட்டு விட்டார். அவரை சேர்வதே எங்களின் வேண்டுதல்" என இருபெண்களும் ஒன்றாய் உரைத்தனர்.

இவர்களின் பிறப்புடன் தன் மகனின் எதிர்கால திருவிளையாடலின் முடிச்சை உணர்ந்திருந்த பரமசிவன்,

"தங்களின் சித்தம் தேங்கியவரை சேர்வதென்பது அத்தனை சுலபமான காரியம் அன்று மகள்களே. ஆயினும் யாம் தம் தவத்தினால் மகிழ்ந்ததால் தங்களுக்கு அவரை சேர்வதற்கான வழிகளை கூறுகிறேன். வேறு எந்த உதவியும் என்னால் செய்வதென்பது ஆகாது. சம்மதா?" என வினவினார்.

இரு பெண்களும் ஒருவரையொருவர் கண்டு பின் முதலாமவள், "நான் வேண்டுவது கிட்ட எக்காரியம் புரியவும் தயாராய் உள்ளேன் மகாதேவா" என உரத்து உரைத்தாள்.

மற்றொருவள் மகாதேவன் முன் முன்பே தன் விருப்பத்தை உரைத்துவிட்ட போதும் தற்பொழுது துணிந்து சரி சொல்வதற்கு தயங்கினாள். ஆயினும் அவளின் இச்சை அவளை சரி என மெதுவாய் தலையாட்ட வைத்தது.

இரு பெண்களின் பதிலிலும் மர்மமாய் புன்னகைத்த மகாதேவன்,

'நாராயணரே! என்ன இது தங்களின் இரு பெண்களும் தங்களை போல் மாயாவிகள் இல்லை போலும். ஒருவள் எம் பார்வதியின் வேகத்தையும் மற்றும் இன்னொருவள் தேவி சரஸ்வதியின் விவேகத்தையும் கொண்டவர்கள்' என தன மனதினுள் மகாவிஷ்ணுவிடம் உரையாடினார்.

பாற்கடலில் பள்ளிகொண்டவர் இத்தனை நேரமாய் தேவி மகாலட்சுமியுடன் இங்கு நடப்பதை தானே கண்டு கொண்டிருந்தார். அதனால் மகாதேவரின் கேள்விக்கு பதிலாய் தன் மாய புன்னகையை சிந்தியவர்,

'மகாதேவரே! காட்சி முழுதாய் முடிந்த பின்பே காரணம் விளங்கும். அதுபோல் எம் மகள்களின் செயல்கள் தீர்மானம் ஆன பின்பே அவர்களின் போக்கும் தங்களுக்கு பிடிபடும். பின் சொல்லுங்கள் அவர்கள் யாரை போல் என்று' என உரைத்தார்.

'அப்படியே ஆகட்டும் நாராயணரே!' என மனதில் உரையாடலை முடித்தவர் தன் முன் இருந்த பெண்களிடம்,

"மகள்களே! தங்கள் இருவரின் பயணத்தின் முடிவும் எனது மகன் வேலனே ஆவான். அவனை சேர்வதற்கான இருபாதைகளை நான் உங்களுக்கு காட்டுவேன் அதில் ஒரு பாதையை மட்டுமே ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் என்ன பாதையை தேர்ந்தெடுப்பீர்கள் என்பது உங்களின் விருப்பமே" என்றார்.

இரு பெண்களும் அவர் சொன்ன "வேலன்" என்ற பெயரில் உருகி அவர் காட்ட போகும் பாதைக்காய் ஆவலுடன் நின்றனர்.

"இங்கு பாருங்கள் குழந்தைகளே! வேலன் தேவர்களின் சேனாதிபதி அவனை சேர்வதென்பது சாதாரண மானுட பெண்களாலோ, தேவ கன்னிகைகளாலோ கூட முடியாத செயல்.

அவனை சேர வேண்டுமென்றால் முதல் வழி: ஏழுஜென்மங்களின் இச்சைகளை அனுபவித்து அதை கடந்து இறைவனே எம் சிந்தை என அவனிடம் சரணடைய வேண்டும்

இரண்டாம் வழி: இச்சைகளை துறந்து மீண்டும் பல காலங்கள் தவம் புரிந்து அதன் பலனாய் முதல் ஐந்து பிறவிகளை விடுத்து நேரடியாய் மனித குலத்தில் பிறந்து இச்சையுடன் அவனை சேர வேண்டும்.

ஆனால் இதில் முதல் வழியில் அந்த அந்த பிறவிக்கு உரிய குணங்கள் மட்டுமே உங்களுக்கு கைவரும். இரண்டாம் வழியில் தவம் இருப்பது என்பது தற்பொழுது போல் ஒரே இடத்தில் நிற்பது அன்று ஊன், உறக்கம் இன்றி தன்னால் முடிந்த உதவிகளை ஏழு ஜென்மங்களை சேர்ந்தோருக்கும் செய்வது ஆகும்.

இனி வழியை தேர்ந்தெடுப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. சொல்லுங்கள் யார் எதை தேர்வு செய்கிறீர்கள்?" என கேட்டார்.

இவர்களின் உரையாடலை ஆவலுடன் கவனித்திருந்த ஆதிலட்சுமி பாற்கடல் வாசனிடம், "நாராயணரே! தவத்தின் முடிவில் பாதை பிறக்கும் என்றவுடன் அது மிகவும் கடினமானதாய் இருக்குமோ என நினைத்து மகள்களை எண்ணி கவலை கொண்டிருந்தேன் ஆனால் இப்பொழுது என் மனம் நிம்மதியுற்றது" என்றார்.

"ஆயினும் தேவி அவர்கள் இன்னும் தங்கள் பாதையை தேர்ந்தெடுக்கவே இல்லையே அதை பற்றி தங்களுக்கு கவலை இல்லையா?" என மகாவிஷ்ணு வினவ,

"நாராயணரே! இதில் கவலை கொள்ள என்ன உள்ளது? மகாதேவர் கொடுத்த இரு பாதைகளில் முதலாவது இச்சைக்கான பாதை இரண்டாவது க்ரியாவிற்கான பாதை. அவர்கள் இருவரும் தானே இச்சா சக்தி மற்றும் க்ரியா சக்தி. அவர்கள் நிச்சயம் அவரவர் பாதைகளை சுலபமாய் கடந்து விடுவார்கள் தானே" என்றார் ஒளிரும் புன்னகையுடன்.

"ஆம் தேவி! அவர்கள் வெறும் தேவ கன்னிகைகள் என்றால் அவரவரின் பலங்களை கொண்டு தாம் சொல்லியது போல் தான் தங்கள் பாதையை தேர்ந்தெடுப்பார்கள் தேவி. ஆயினும் அவர்கள் இருவரும் இந்த மாயவனின் புத்திரிகள் என்பதை நீ மறந்துவிட்டாயா என்ன?"

மாந்திரிகமாய் வசிகரித்தவரின் மாயபேச்சில் மயங்கினாலும் சுதாரித்து நடக்க போவதை உணர்ந்தவர், "நாராயணரே! தாங்கள் சொல்வது..." என மாகலாட்சுமி வார்த்தைகளை முடிக்கும் முன்பே இங்கு மகாதேவரிடம் தங்களின் முடிவை சொல்லினர் இருபெண்களும்.

க்ரியா சக்தியான பெண்ணவள், "மகாதேவா! நான் செயல்களின் வடிவம் ஆவேன் ஆயினும் தாங்கள் சொல்வது போல் தேவர்களின் சேனாதிபதியை சேர நம் பலத்தை மட்டும் அளித்தால் போதாது நம் பலவீனத்தையும் வெல்ல வேண்டுமல்லவா.

ஆதலால் நான் இச்சைகளை உடைய ஏழு ஜென்மங்களை தேர்ந்தெடுக்கிறேன். ஏழு ஜென்மங்களின் இறுதியில் ஏழாம் பிறவியில் தேவர்களின் தலைவர் இந்திரனின் மகளாய் பிறந்து சாஸ்திர முறைப்படி எம்மவருடன் சேர அருள் புரியுங்கள்"

என்று தன் முடிவை சொன்னவள் அந்நொடி முதலே இச்சைகளுக்கு ஆட்பட்டு தன் விருப்பத்தை மொழிந்து இறைவனை வணங்கினாள்.

மகாதேவர் இச்சா சக்தியானவளை பார்க்க,

"என் தமக்கையின் சொல்லை நானும் ஏற்கிறேன் மகாதேவா! என் பலவீனத்தை கடந்து தயக்கங்களை துறந்து என்னால் முடிந்த செயல்களை மட்டும் இன்றி என் மனதில் தோன்றும் அத்தனை செயல்களையும் செயல்புரிந்து மனித பிறவி எடுத்து என் பெருமானை அடைய காத்திருப்பேன் அருள்புரியுங்கள்" என வணங்கினாள்.

மகாவிஷ்ணு மொழிந்த திருப்புமுனை இதுதான் என உணர்ந்து கொண்ட மகாதேவர் புன்னகையுடன் இருபெண்களுக்கும், "அப்படியே ஆகட்டும்" என ஆசிர்வதித்து அங்கிருந்த மறைந்தார்.


முதல் ஜென்மம் (அமைதி):


"க்ரியா" சக்தியானவள், தான் தேர்ந்தெடுத்த பாதையில் முதல் ஜென்மத்திற்காய் அதாவது முதல் பிறவிக்கான உயிரினங்களில் தன் பிறப்பிற்காய் தேர்ந்தெடுத்தது "இச்சைகளை பொருளாக்கும் மரம்" என்று அழைக்கபடும் அரச மரத்தை தான்.

"ஏழ்பிறவிகள்" என சொல்லபடுவதில் முதல் பிறவியானது தொடுதல் உணர்வை மட்டும் கொண்ட உயிரனங்கள் ஆகும் அதாவது தாவரங்கள் போன்றவை.

அதில் க்ரியா சக்தி தேர்ந்தெடுத்தது
வேர் பகுதியில் பிரம்ம தேவரும், நடுவில் திருமாலும், உச்சியில் சிவபெருமானும் இணைந்து அருள்புரியும் அரச மரமே.

அவள் அரச மரமாய் உருபெற்று தன் முதல் பிறவியின் கடமைகளை நிறைவேற்ற தொடங்கினாள். பல காலங்களாய் யாருமற்று காடு போலான பகுதியில் தொடுதல் உணர்வை மட்டுமே கொண்டு ஐம்பூதங்களை உணர்ந்து வாழ்ந்தவளின் வாழ்வில் வந்தது ஓர் திருப்பு முனை.

அந்நாள் என்றும் போல் விடிந்தாலும் அவளுள் மட்டும் ஓர் பரபரப்பு வழக்கம் போல் பறவைகள் அரசமரத்தின் பழங்களை உண்டு மகிழ்ந்திருந்த வேளை,

"தாத்தா! நீங்க எதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வரீங்க? இது பார்க்கவே காடு மாதிரி இருக்கு எனக்கு பயமா இருக்கு" என்று ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது.

அதை தொடர்ந்து, "கௌரிமா! பயப்படாதடா.. தாத்தா தான் உன் கூடவே இருக்கேன்ல இன்னும் கொஞ்சம் தூரம் தான்.. வா மா" என்ற பெரியவர் தன் பேத்தியின் கரம் பற்றியபடி நடந்து அந்த அரச மரத்தின் முன் வந்து நின்றார்.

பட்டை சாம்பல் நிறத்தில் பரந்த கிளைகளுடன், இதய வடிவ இதழ்களுடன் நின்றிருந்த அரசமரத்தை பார்த்தவர் நிம்மதியுடன் மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டார்.

"தாத்தா! என்னாச்சு?" என அவர் பேத்தி மரத்தையும் தன் தாத்தாவையும் மாறிமாறி பார்க்க,

"கௌரிமா! இந்த மரத்தை தான் தாத்தா தேடி வந்தேன் டா. இது இந்த பாதையில இங்க இருக்குனு ஒரு சின்ன பொண்ணு சொன்னா. ஆனா நம்ப எத்தனை மணி நேரம் நடந்தும் இதை காணலையே அதனால சின்ன பிள்ளையோட பேச்சை நம்பி வந்துட்டோமோனு நான் கூட தவிச்சு போய்ட்டேன். இப்போ தான் நிம்மதியா இருக்குடா" என்றார்

"என்ன தாத்தா! எதுக்காக இந்த மரத்தை தேடி வந்தீங்க? நம்ப சீக்கிரம் போகனும் தாத்தா எங்க வீட்ல பிரச்சனை ஆகிடும்" என சொல்லிய பெண்ணிடம் நிரம்ப சோர்வுகள்.

வெறும் சோர்வுகள் மட்டும் அல்லாது அதனுடன் சோகங்களும் எண்ணிலடங்கா ரேகைகளுடன் அவள் முகத்தில் குடியிருந்தது.

"வருத்தபடாதடா கௌரிமா! தாத்தா உன் வருத்தத்தை போக்க தான் இந்த மரத்துகிட்ட கூட்டிட்டு வந்தேன். இங்க பாருடா இது ராஜ விருட்சம் அதாவது அரச மரம்" என்றார்.

தாத்தா சொல்வதை புரியாமல் பார்த்த கௌரி, "ஆனா தாத்தா இந்த மரம் என்னோட கஷ்டத்தை எப்படி போக்கும் இந்த மரத்தை பார்த்துட்டே இருந்தா மட்டும் எனக்கு புள்ளை பிறந்திடுமா என்ன?" என அங்கலாயித்தாள்.

"என்னம்மா இப்படி சொல்லிட்ட 'அரசமரத்தை சுற்றி வந்து அடிவயிற்றை தொட்டு பார்த்தாள்'னு ஒரு பழமொழியே உண்டு தெரியுமா? இந்த மரத்தோட காற்று பெண்களோட கருப்பை கோளாறுகளை நீக்கும். இந்த மரத்தை தான் இத்தனை நாளா தாத்தா தேடிட்டிருந்தேன். அதனால நம்பிக்கையோட போய் இந்த மரத்து பக்கத்தில் உட்காரு மா" என்றார்.

'மரத்தோட காற்று நோய்களை தீர்க்குமா?' என பெரும் சந்தேகம் கௌரியுனுள் தோன்றிய போதும் இத்தனை தொலைவுகள் அலைந்து தனக்காக வந்திருக்கும் தாத்தாவின் நம்பிக்கையை வீண் செய்ய கூடாது என்பதால் அந்த அரச மரத்தின் அருகே சென்றாள்.

பட்டை சாம்பல் நிறத்தில் இருந்த மரத்தில் ஆங்காங்கே அதன் பட்டைகள் விரிசல் விட்டும், உடைந்தும் இருக்க தன் கைக்கொண்டு அதை வருடியவள் அந்த மரத்தை பார்வையிட்டாள்.

அவளின் தொடுதலை உணர்ந்த அரசமரம் தன்னுள் சிலிர்த்தெழுந்து தன் இச்சையை காற்றின் மூலம் வெளிபடுத்தியது. இத்தனை ஆண்டுகளாய் அம்மரம் கொண்ட அமைதி சிறிதுசிறிதாய் கௌரியினுள் பரவ அவளும் மெதுமெதுவாய் அந்த மரத்தை தொட்டபடி அதை சுற்றி வந்தாள்.

அவள் மரத்துடன் ஒன்றிவிட்டதை பார்த்தவதறு அருகே தள்ளி அமர்ந்த அவளின் தாத்தா மனதார தன் பேத்திக்கு புத்திர பாக்கியம் கிட்ட வேண்டும் என வேண்டினார்.

இத்தனை காலங்களாய் மனித தொடுகையை உணராமல் இருந்த அரசமரம் முதல் முதலாய் தன்னை தீண்டுபவளின் துயர் துடைக்க இச்சை கொண்டது. அதனால் அது அந்த பெரியவரின் வேண்டுதல் நிறைவேற தானுமாய் வேண்ட தொடங்கியது.

சில மணி நேரங்கள் கடக்க அந்த தாத்தாவும், பேத்தியும் அங்கிருந்து கிளம்பினர்.

"தாத்தா! நீங்க சொன்ன விஷயங்கள் உண்மையானு எனக்கு தெரியாது ஆனா இங்க இருந்த இந்த கொஞ்ச நேரத்துல என்னோட மனசு ரொம்ப அமைதியா மாறிடுச்சு. எந்த துக்கமும் இப்போ என் மனசுல இல்லை, முழுக்க முழுக்க அமைதி மட்டும் தான் இருக்கு" என்ற கௌரியின் வார்த்தைகளில்,

"இதை தான் அந்த சின்ன பொண்ணு என்கிட்ட சொன்னா கௌரி மா.. இந்த மரம் இந்த இடத்துல இருக்கு. அங்க கொஞ்ச நேரம் இருந்தா உங்க பேத்தி மனசு அமைதி அடைஞ்சு அதனால் அவங்களோட உடல் உபாதைகளும் சீக்கிரம் குணமாகி பிள்ளை பேறு கிடைக்கும்னு சொன்னா" என்றுரைத்தார் தாத்தா.

"சின்ன பொண்ணு இவ்வளவு பேசுனாளா. யார் தாத்தா அது உங்களுக்கு தெரிஞ்சவங்களோட பொண்ணா?" என கௌரி கேட்பதையும்,

"இல்லடாமா அந்த பொண்ணு யார்னு எனக்கு தெரியாது ஆனா அந்த பொண்ணோட பெயரை கேட்டேன். அது இச்சானு சொல்லுச்சு" என பெரியவர் பதிலளிப்பதையும் கண்டு மேலோகத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் ஒருவரைஒருவர் கண்டு புன்னகைத்துக் கொண்டனர்.

"நாராயணரே! க்ரியா தன் ஏழு ஜென்மங்களையும் கடக்க இச்சா உதவுவதில் என் மனம் நம் பிள்ளைகளின் ஒற்றுமையை எண்ணி மிகவும் மகிழ்கிறது" என்றார்.

"அவர்கள் தோன்றும் பொழுதே ஒன்றாய் தோன்றியவர்கள் தேவி! ஒருவொருக்கொருவர் உதவியாய் இருந்து அவரவர் பாதையை வெற்றிகரமாய் முடித்து தங்கள் பிறப்பின் நோக்கத்தை குமரனுடன் இணைந்து உலகிற்கு உணர்த்துவர்" என்றார் மாகாவிஷ்ணு.

அவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப தாங்கள் ஏற்ற பாதையில் முதல் அடியாய் முதல் பிறப்பில் அரசமரமாய் அவதரித்த க்ரியாவின் புகழ் இச்சாவின் உதவியுடன பூமி வாசிகளுக்கு பரவியது.

கூட்டு பிராத்தனைகள் என்றுமே விரைவில் நிறைவேறும் அல்லவா அன்று கௌரியின் தாத்தாவுடன் இணைந்து அரசமரமும் தன் வேண்டுதலை வைத்ததில், அடிகடி அங்கு வந்து சென்ற கௌரி விரைவில் தன் மன அமைதியின் மூலம் உடல் சீர்பெற்று பிள்ளை பாக்கியம் அடைந்தாள்.

அவள் மூலம் அந்த அரசமரம் மக்களின் கருத்தில் விழ பலர் அமைதியை தேடி அங்கு வர தொடங்கினர். பல வண்ண மக்களின் தொடுதல்களில் தன் இச்சைகள் அனைத்தையும் வெளியிட்டு, அவை வெளிவர உதவிய அம்மக்களுக்கு தன்னால் முடிந்த வேண்டுதல்களை தவறாமல் தொடர்ந்து பல ஆண்டுகளை கழித்தது அரசமரம்.

அரசமரத்தின் வாயிலாக பலருக்கு மன அமைதி கிடைக்க, அமைதியின் உருவமான அரசமரத்திற்கும் ஒருநாள் மொத்தமாய் இந்த பிறவியில் இருந்து அமைதி கிட்டியது.

தொடுதல் உணர்வுடன் அமைதியை மட்டுமே கொண்டு தன் முதல் பிறவியை அரச மரமாய் வெற்றிகரமாய் கடந்த "க்ரியா" தன் அடுத்த பிறவியை நோக்கி பயணித்தாள் அவளுடன் "இச்சா"வும் தான்.


- தொடரும்.

(இந்த கதையில் வரும் அனைத்து மனிதர்களும், கடவுள்களும், அவர்களின் செயல்களும், சூழல்களும் எனது கற்பனையே அன்றி எந்த ஒரு தனி மனிதனையோ, மத நம்பிக்கைகளையோ, இறைவனையோ குறிக்காது. இதில் வரும் சம்பவங்கள் முழுக்கமுழுக்க எனது கற்பனை மட்டுமே எந்த ஒரு வரலாற்று செய்திகளுடனோ, புராணங்களுடனோ தொடர்புடையது அல்ல)
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அருமையா இருந்தது ❤️👌

விளக்கங்கள் சூப்பர் 👌

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 
  • Like
Reactions: MK30

MK30

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
14
3
thanjavur
அருமையா இருந்தது ❤️👌

விளக்கங்கள் சூப்பர் 👌

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
நன்றி சகி❤