• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஜென்ம ஜென்மமாய் - 5

MK30

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
14
3
thanjavur
அத்தியாயம் 5 (ரசம் : வெகுளி)

தட்டாம்பட்டி நீர் வளத்திற்கு பெயர் போன ஊர்.. குட்டை, குளம், ஏரி, கிணறு என அனைத்தும் வாய்க்கபெற்ற ஊர்.

அன்று குளத்துக்கரையில் பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருக்க சற்று தள்ளி சிறுவர்களும், சிறுமிகளும் விளையாடி கொண்டிருந்தனர்.

"நீதான் நீதான்" "ஏய் அவனை புடி" "நீ அவுக்குனி ஆட்டம் ஆடுற போ" என பலவித வண்ணங்களில் சிறுவர்களின் குரல்கள் நிமிடத்துக்கு ஒருமுறை உரத்து ஒலித்துக் கொண்டிருந்தது.

அவர்கள் மேல் வெயிலை வாரி இறைக்காமல் வானம் மந்தமாக காட்சியளித்தது. தட்டான் பூச்சிகள் அந்த வானத்தை தங்களின் விளையாட்டிடமாய் எண்ணி மண்ணில் விளையாடும் சிறுவர்களுக்கு இணையாய் வானில் பறந்து கொண்டிருந்தது.

அந்நேரம் ஒரு சிறுவன் ,"சரி வாங்க நம்ப பாண்டி ஆடுவோம்" என அனைவரையும் அழைத்தான்.

அனைவரும் "சரிசரி" என குழு சேர ஒரு சிறுமி மட்டும், "இல்ல முத்து! இன்னும் கொஞ்ச நேரத்துல மழை வரும். அதனால நான் இப்பவே வீட்டுக்கு போறேன் நினைஞ்சிட்டு வந்தா அம்மா வையும்" என்றுவிட்டு ஓடினாள்.

சிறுவர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முத்து என்று அழைக்கபட்டவன் வானத்தை பார்த்துவிட்டு,

"வானம் ஒரு மாதிரி தான் இருக்கு ஆனா கொஞ்ச நேரத்துல மழை வரும்னு எப்படி சொல்றா சரியான பயந்தாகோலி ஆட்டத்துல தோத்துடுவோம்னு பொய் சொல்லிட்டு ஓடுது பாரு"

என கிண்டலாய் சொல்ல சிறுவர்கள் அனைவரும் "கொல்" என சிரித்தனர்.

தொடர்ந்து அந்த சிறுமியை கேலி பேசியபடி அவர்கள் பாண்டி விளையாட ஆரம்பித்த சிறுது நேரத்தில் எல்லாம் மழைதுளிகள் வானில் இருந்து எவரோ துறத்துவது போல் சரசரவென ஓடிவந்து இவர்களை நனைத்தது.

என்ன மழையா? என நிமிர்வதற்குள் அனைவரும் மொத்தமாய் நனைந்துவிட, "ஆத்தி! நான் துவைக்க துணி கொண்டு வரும்போதா இப்படி ஆகனும்" என துணி துவைக்க வந்திருந்த பெண்கள் வேகமாய் ஒதுங்கி நிற்க இடம் தேடி ஓடினர்.

அவர்கள் ஓடி ஒதுங்க சிறுவர்களோ மழையில் ஆட்டம் போட்டனர், "டேய் சுள்ளான் நீ கௌரிமவன் தான? என்னடா மழைல ஆட்டம்" என ஒரு பெண்மணி குரல் கொடுக்க,

"அடியே முத்தம்மா மவளே! பொம்பளை பொண்ணு மழைல ஆட்டமா போடுற உங்க ஆத்தாகிட்ட சொன்னா வெளக்கமாறு பிய்யும் தெரியும்ல" என இன்னொருவர் கத்த, ஓரமாய் நின்றபடி மற்றவர்களும் பிள்ளைகளை அதட்டியதில் சிறுவர்கள் மழையை கண்டுகொள்ளாமல் வீட்டை நோக்கி ஓடினர்.

அனைவருக்கும் 'நனைந்தபடி வீட்டுக்கு சென்றால் அன்னை எதில் அடிப்பாரோ' என யோசனையுடன் சென்றால் முத்துவிற்கு மட்டும், 'ராணி எப்படி கொஞ்ச நேரத்துல மழை வரும்னு சொன்னா? அவளுக்கு எப்படி அது தெரியும்?' என்ற யோசனை ஓடியது.

யோசனையின் விளைவால் அவன் கால்கள் தானாய் ராணியின் வீட்டின் வாயிலில் சென்று நின்றது. அவன் வந்த நேரம் வாசல் திண்ணையில் அமர்ந்து மழைதுளிகளை கை நீட்டி ரசித்து கொண்டிருந்தாள் ராணி.

"அங்க மழைல நனைய மாட்டேனு சொல்லி ஓடி வந்துட்டு இங்க இதை தான் பண்ணிட்டு இருக்கியா ராணி" சிரித்தபடி அவள் அருகே சென்று அமர்ந்தான்.

"ஆமாம் முத்து! மழைய எனக்கும் பிடிக்கும் ஆனா நனைஞ்சா உடம்புக்கு முடியாம போதுனு அம்மா வஞ்சிபுடுவாங்க" என சோகமாய் சொன்னாள்.

"ஆமா ஆமா.. உனக்கு இதுக்கு முன்னாடி கூட மழைல நனைஞ்சு பெரிய நோய் வந்துச்சுல. மூச்சுகூட விடமுடியாம கஷ்டபட்டியே. அது திரும்ப வந்திடுமோனு உங்க அம்மா பயந்திருப்பாங்க. ஆமா அந்த நோய் ரொம்ப ஆபத்தாமே பக்கத்துல கூட யாரும் வரகூடாதாம்ல"

பாவம் போல் சொன்னாலும் முத்துவின் வார்த்தைகள் அவளை மட்டம் தட்டி வலிக்க வைப்பது போல் தான் இருந்தது.

ஆனால் ராணிக்கு முத்துவின் கடுமை புரியவில்லை அவன் வார்த்தைகளில் அவளுக்கு மனம் வருத்தம் தோன்றினாலும், "இல்ல முத்து அது சாதாரண மூச்சு பிரச்சனை தானாம். அது பெரிய நோய் இல்லனு நம்ப வாத்தியார் கூட சொன்னாரு . ஆனா அம்மா தான் வாத்தியார் சொன்னதை நம்ப மாட்டுது" சோகமாய் சில நொடிகள் அமர்ந்தாள்.

பின் இயல்புக்கு வந்து பார்க்க முத்து அருகே அமர்ந்திருந்ததில்,

"அச்சச்சோ முத்து! நீ ஏன் என் பக்கத்துல உட்கார்ந்த நீ சொன்ன மாதிரி ஒருவேளை இது உனக்கும் வந்துட போகுது தள்ளி போ" என அவனை சொல்லியவள் அதற்கு மாறாய் தானே எழுந்து சென்று தள்ளி நின்றாள்.

அவள் செய்கையை உணர்ந்தும் ஒன்றும் சொல்லாமல் அதை ஏற்பதுபோல் பேச்சை மாற்றினான் முத்து.

"ஏன் ராணி! மழை வர போகுதுனு உனக்கு எப்படி தெரியும்? உனக்கு தான் மழைல நனைஞ்சா ஆகாதே அதனால மழை எப்படி வரும்னு கண்டுபிடிக்க எதாவது மந்திரம் தெரிஞ்சு வச்சிருக்கியா உங்க உனக்கு சொல்லி கொடுத்திருக்காரா என்ன?" என்று கேட்டான்.

முத்துவிற்கு எப்பொழுதுமே ராணியின் மேல் அவளின் அறிவின் மேல் பொறாமை தான். மழை வருவது பற்றி எப்படி இவள் கண்டுபிடித்தால் என அறிந்து அதை தானே கண்டுபிடித்ததாய் தன் நண்பர்களிடம் சொல்லதான் இப்பொழுது அவளை தேடி வந்தது.

ஆனால் வெகுளியான ராணிக்கு இவன் குணம் இதுவரை புரிந்ததே இல்லை. இப்பொழுதும் அவன் கேட்பது புரியாமல்,

"அச்சோ முத்து! நீ என்ன இப்படிலாம் பேசுற மந்திரம்னா பேய் எல்லாம் வருமே அதான?" என பயத்தில் கண்களை உருட்டியபடி வெகுளியாய் கேட்டாள்.

அதில் யோசனையான முத்து எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து சென்றான்.

"என்னாச்சு இந்த முத்துவுக்கு? வந்தான் பேசுனான் பாதிலயே போயிட்டான்" என தனக்குள் புலம்பிய ராணி தன் வீட்டுக்குள் சென்று விட்டாள்.

பின் நாட்கள் எப்பொழுதும் போல் செல்ல சில மாதங்கள் கடந்து ஒருநாள் பள்ளிகூடத்தில் முத்து தன் வகுப்பறைக்கு செல்லும் வழியில் ஆசிரியர்கள் அறையில் அவனின் வாத்தியார் ராணியுடன் எதோ பேசுவதை கண்டு நின்றான்.

அவர்கள் பேசுவது என்னவென்று முத்து கேட்க முற்பட்ட போது பள்ளி மணி அடிக்க தொடங்கிவிட அவனுக்கு அவர்கள் பேசுவது கேட்காமல் போனது.

ஆனால் ஆசிரியர் ஒரு பை நிறைய மாம்பழங்களை ராணியிடம் கொடுப்பதும் ராணி முகம்கொள்ளா புன்னகையுடன் அதை வாங்குவதும் தெரிந்தது. அப்பொழுதே அந்த பழங்கள் தன்வசம் வேண்டும் என எண்ணிவிட்டான் அவன்.

அன்று பள்ளி முடிந்தவுடன் பிள்ளைகள் வீட்டை நோக்கி நடக்க சிறுமிகளுடன் நடைபோட்ட ராணியின் அருகே வேகமாய் தன் சைக்கிளை தள்ளிகொண்டு போன முத்துவிடம்
"என்ன முத்து?" என அவள் நின்று புன்னகை முகமாய் கேட்க,

"சும்மா தான் ராணி.. ஆமா எங்க வாத்தியார் எதுக்கு உனக்கு பழம் கொடுத்தாரு?" என கேட்டான்.

"உனக்கு எப்படி தெரியும் முத்து? வாத்தியார் என்கிட்ட அதை கொடுக்குறப்போ அங்க யாரும் இல்லயே" என சாதாரணமாய் சொல்ல,

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு வந்ததால் மற்ற பிள்ளைகள் முன்னால் சென்றிருந்தனர். அதனால் தைரியமாய், "வாத்தியார் தான் என்கிட்ட சொன்னார் ராணி.. ராணி பழங்கள் எடுத்துட்டு போறா அவளோட துணைக்கு போ. பசங்க வாங்கிக்க போறாங்கனு சொன்னாரு" பொய் சொன்ன முத்து முன் சென்றவர்களை சுட்டி காட்டினான்.

"ஆனா அவங்க கேட்டா என்ன முத்து பகிர்ந்து சாப்பிடுறது நல்லது தான?" என வெகுளியாய் சிரித்தாள்.

"ஆமா ராணி! ஆனா நீ எப்படி இத்தனை பேருக்கும் கொடுப்ப அப்றம் ஒருத்தருக்கு கிடைக்கலைனாலும் கஷ்டம்ல அதான் அவங்களுக்கு தெரிய வேண்டாம். நீ அதை என்கிட்ட கொடு நான் சைக்கில் கூடைல வச்சிக்கிறேன்" என்றான்.

இவள் அவன் சொன்னதை நம்பி பையை நீட்ட, "ஓய்! பை இல்லாம நீ வந்தா ஏன்னு உன்னை கேட்க மாட்டாங்களா? வெறும் பழம் இருக்க பையை மட்டும் கூடைல இருக்க என்னோட பையில போடு" என்றான்

அவன் பேசுவது எல்லாம் சரியாய் இருக்கும் என நம்பிய ராணி வாத்தியார் கொடுத்த பழங்கள் அடங்கிய பையை அவனின் பையில் வைத்தாள்.

அவள் வைத்த பின் தான் முத்துவிற்கு மூச்சே வந்தது. இதற்காக தானே அவன் இத்தனை நேரம் மூச்சுமுட்ட பேசியது.

அதற்கு பின் அவன், 'இனி எப்படி அதை தன்னுடனே எடுத்து செல்வது?' என யோசனையுடன் அமைதியாக வர, "என்ன முத்து பேசிட்டே வந்த திடிர்னு அமைதியாகிட்ட?" என ராணியே பேச்சை ஆரம்பித்தாள்.

"ஆங்..அது.. ஆங் நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லலைல அதான் நானும் உன்னை திரும்ப அதை கேக்க வேணாம்னு அமைதியா வரேன்" என்றவன் அவள் புரியாமல் முழித்ததில்,

"அதான் வாத்தியார் ஏன் உனக்கு இந்த பழம் கொடுத்தாருனு கேட்டேன்ல. உனக்கு சொல்ல வேணாம்னா விட்ரு" என முகத்தை சோகமாய் வைத்தான்.

"முத்து! எதுக்கு இப்படி பேசுற அவர் வீட்ல ரொம்ப கொசு தொல்லை இருக்குனு சொன்னார். அதான் அதை அழிக்க நான் அவருக்கு ஒரு பரிசு கொடுத்தேன் அதுக்கு பதிலா தான் அவர் எனக்கு இந்த பழங்களை கொடுத்திருக்காரு" என உண்மையை அப்படியே சொன்னான்.

"கொசுவை அழிக்க பரிசா? அப்படி என்ன பரிசு கொடுத்த?" என நிஜமாகவே முழித்தான் முத்து.

அவனின் முழியை பார்த்து சிரித்தபடி, "ஆமா ஆமா.. தட்டான்பூச்சி தான் அந்த பரிசு" என கலகலவென நகைத்தாள் ராணி.

"தட்டான் பூச்சியா?" என முத்துவின் குரலோடு, மேலோகத்திலும் இருகுரல்கள் ஒலித்தது. அந்தகுரல்கள் தேவி பார்வதி மற்றும் தேவி லட்சுமியின் உடையது.

"எண்ண அண்ணா! க்ரியா இந்த முறை தட்டான் பூச்சியாக பிறந்துள்ளாளா என்ன?" பார்வதி தமையனை கேட்க,

"அவசரபடாதீர்கள் பார்வதி தேவியாரே! தங்கள் தமையனார் ஒருவேளை தட்டாம்பூச்சி அழிக்க சென்ற கொசுவாக கூட க்ரியாவை பிறக்க சொல்லியிருப்பார். பின் அவளை காக்க இச்சாவை அனுப்பி வைப்பார்"

அனைத்து காரியங்களுக்கும் காரணம் மும்மூர்த்திகள் தானே! முந்தைய பிறவியில் க்ரியா பிறக்கும் முன்னே ஏற்பட்ட கலவரத்தால் இன்னுமே கணவனிடம் ஊடல் கொண்டிருந்த மகாலட்சுமியின் குரல் கணவனை பற்றிய நொடிப்புடன் வெளிவந்தது

"இந்த காலத்தில் நல்லதை சொன்னால் கூட குற்றமாய் முடிகிறது. உன் அண்ணனின் கவலைக்குரிய நிலையை பார்த்தாயா பார்வதி" என தங்கையை ஆதரவுக்கு அழைத்தார் நாராயணர்.

"நான் முன்பே சொன்னேனே அண்ணா! லட்சுமி தேவியார் புத்திர வேதனையில் அறியாமல் செய்த பிழை என்று. ஆனால் தாங்கள் அதற்காக எத்தனை பாடம் எடுத்தீர்கள் அதான் தேவியின் கோபத்தின் காரணம்" என பார்வதி லட்சுமிக்கு ஆதரவாய் பேசினார்.

"ஆதிசக்தியான போதும் நீ இன்னும் குழந்தை தான் பார்வதி! பூலோகத்தில் ஒரு பழமொழி உண்டு : 'கணவன் அடிப்பது பிரச்சனை இல்லை அதை நாத்தனார் காண்பது தான் குற்றமாம்' அது தான் இங்கு நடக்கிறது" கமுக்கமாய் சொல்லிய மாயவன் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டார்.

அண்ணனின் அழிசாட்டியத்தில் புன்னகை தோன்ற "அண்ணா!" என தேவி பார்வதி போலி கண்டிப்புடன் பார்க்க, "போதும் உங்கள் மாய்மாலம் இப்பொழுது நடப்பதற்கு வாருங்கள் க்ரியா என்னவாய் அவதரித்துள்ளாள்" என அன்னைக்கே உரிய ஆவலுடன் கேட்டார்.

"பூமி மாதாவின் குளிர்ச்சியை கட்டுக்குள் வைக்கும் பிறவி தான் இந்த முறை 'க்ரியா' தேர்ந்தெடுத்தது லட்சுமி" என நாராயணரின் வார்த்தைகள் முடியும் பொழுது,

"அப்படி என்றால் தட்டான் தான்" என முடித்தனர் தேவிகள் இருவரும்.

இங்கு பூலோகத்தில், "என்னமா சொல்ற? உங்க வாத்தியார் நீ சொன்ன மாதிரியே தட்டான்களை வளர்த்தாரா? அதனால கொசுகள் அழிஞ்சிடுச்சா" என திண்ணையில் அமர்ந்து மகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார் அரசு

"ஆமாப்பா நிஜமா தான்.. அதனால் தான் அவர் எனக்கு ஒரு பை நிறைய மாம்பழங்கள் கொடுத்தாரு" என்றவள் தன் பள்ளி பையை எடுக்க ஓடினாள்.

மின்னல் வேகத்தில் உள்ளே ஓடியவள் சோகமாய் திரும்பி வர, "என்னடா என்னாச்சி?" என விசாரித்தார் தந்தை.

"ப்பா! பசங்க மாம்பழத்தை கேப்பாங்கனு சொல்லி முத்து அவன் சைக்கிள்ல மறைச்சி வைக்க சொன்னான்-ப்பா. ஆனா பேசிட்டே அதை எடுக்க மறந்து வந்துட்டேன் பா" என்ற மகளை கண்டிப்புடன் பார்த்தார் அரசு.

"ராணிமா! என்ன பழக்கம் இது எதுக்காக மறைச்சு வச்ச? நம்ப செய்யுற காரியம் தப்புனா தான் அந்த விஷயத்தை யாருக்கும் தெரியாம மறைக்க தோணும். அப்படி மறைச்சு செய்யனும் நினைச்சாலே அந்த விஷயம் தப்பான விஷயம்னு தான் அர்த்தம்" என்றார்.

"இல்லப்பா முத்து தான் சொன்னான் பசங்க பங்கு கேப்பாங்க எல்லோருக்கும் பத்தாதுனு" மெல்லிய குரலில் சொன்ன மகளின் கண்ணில் கண்ணீர் குளம் கட்ட மனம் உருகியது தந்தைக்கு.

ஆயினும் மகளுக்கு நல்லதை சொல்வது தந்தையின் கடமையல்லவா,

"இங்க பாருடா தங்கம்! எவ்வளவு சின்னதா இருந்தாலும் சரி அதை நம்ப கூட இருக்கவங்களோட பகிர்ந்து கிட்டோம்னா அதில் கிடைக்கிற சந்தோஷம் தனியா இருக்கும் டா. இப்போ நீ அதை பகிர்ந்திருந்தா எல்லோரும் ஏதுனு கேக்குறப்போ நீ அந்த கொசுவை அழிக்கிற சக்தியை சொல்லி கொடுத்திருக்கலாம்" - என எடுத்து சொன்னார்.

"ப்பா! இனி நான் இந்த மாதிரி பண்ணமாட்டேன் பா. நாளைக்கு முத்து பழத்தை கொண்டு வந்தவுடனே நான் அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பேன் ப்பா. அதோட தட்டான்பூச்சி பத்தியும் நான் எடுத்து சொல்வேன் ப்பா" என தலையை ஆட்டி ஆட்டி பேசினாள்.

அவளின் ஆடும் தலையை பிடித்து செல்லமாய் தட்டிய தந்தை, "என்னோட தங்கம் ரொம்ப நல்ல பொண்ணுனு எனக்கு தெரியும். சரி வாங்க அம்மா நமக்கு எதாவது சாப்பிட வச்சசிருப்பாங்க சீக்கிரம் போய் சாப்பிடுவோம்" என உள்ளே அழைத்து சென்றார்.

மறுநாள் பள்ளியில் முத்துவிற்காக ஆவலாய் காத்திருந்த ராணி முத்து வந்தவுடன், "முத்து! நேத்து பழத்தை உன்கிட்ட கொடுத்ததையே நான் மறந்துட்டு வீட்டுக்கு போயிட்டேன் தெரியுமா? அப்பாகிட்ட சொல்லும் போது தான் நியாபகம் வந்துச்சு. சரிசரி கொடு" என கையை நீட்டினாள்.

வகுப்பில் அனைவரும் இவர்களை பார்க்க, "பழமா? நீ என்ன பழம் என்கிட்ட கொடுத்த? ஒருவேளை நாம சண்டை போட்டு பழம் விடுவோமே அந்த பழம் சொல்றியா ஆனா நாம தான் சண்டையே போடலையே" என கெக்கபெக்கவென சிரித்தவனை தொடர்ந்து வகுப்பில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

"முத்து! விளையாடாத பழத்தை கொடு எல்லோருக்கும் அதை பகிர்ந்து கொடுக்கனும்னு அப்பா சொன்னாங்க" என இன்னும் கையை இறக்காமல் பேசியவளின் கை மேல் கை வைத்து,

"ஏய்! என்னவோ என்கிட்ட கொடுத்து வச்ச மாதிரி கேட்குற வேணும்னா சொல்லு நான் நம்ப பள்ளிகூட வாசல்ல இருக்க ஆயா கடைல வாங்கி தரேன்" என பேசியபடி அவளை கண்டுக் கொள்ளாமல் சென்றான்.

அவன் சொன்னதில் ராணிக்கு அழுகை வரும் போல் இருந்தது. அதனால் அமைதியாய் சென்று அமர மதிய உணவு வேளையில் அவளை வாத்தியார் அழைத்தார்.

ராணி அவருடன் செல்வதை கண்டு முத்து பின்னே செல்ல, "என்னம்மா! எங்க ஊர் மாம்பழம் எப்படி இருந்துச்சு" என சிரித்தபடி விசாரித்தார்.

அவருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் அவள் முழிக்க, "ரொம்ப அருமையா இருந்துச்சு ஐயா! ராணி எனக்கும் கொடுத்தா அந்த பழத்தை" என முன்னால் வந்து நின்றான் முத்து.

"ஓ அப்படியா ப்பா.. ராணி நல்ல பொண்ணு தனக்கு கிடைச்சதை தான் மட்டும் வச்சிக்கனும்னு நினைக்காதவ. உலகம் தெரியாத வெகுளியான பொண்ணு யாரும் இவளை ஏமாத்தாம இருக்கனும்" என புன்னகைத்தார் ஆசிரியர்.

பின், "ஆங் ராணி! நான் உன்னை வர சொன்னது உன்னோட தட்டான்களை உன்கிட்ட கொடுக்க தான்" என்றவர் ஒரு சின்ன கண்ணாடி குடுவையை தனது மேஜையில் இருந்து எடுத்து நீட்டினார்.

அதனுள் மஞ்சள் நிறத்தில் ஊசி போன்ற வடிவத்தில் ஒய்யாராமாய் காற்றில் நின்றன இரு தட்டான் பூச்சிகள். அதன் இறக்கைகள் விரிந்திருக்க கால்கள் ஆறும் ஒன்றாக குவித்திருந்த அதன் தோற்றம் பார்க்கவே மனதை கொள்ளை கொள்வதாய் இருந்தது.

குடுவையை ஆசையுடன் வாங்கியவளிடம், "இனி இதை நீயே வளர்த்துக்கோ மா. எங்க வீட்ல இப்போ ஏகப்பட்ட முட்டை இருக்கு அது எல்லாம் சீக்கிரம் வளர்ந்திடும்னு நினைக்கிறேன்" என்றார்.

"ஐயா! அதெல்லாம் வளர்ந்ததும் விட்டுடுங்க. இந்த மாதிரி குடுவைல எல்லாம் அடைச்சு வைக்காதீங்க நானே இதை இப்போ வெளியே தான் விட போறேன்" என்றாள்.

"ஏன் மா?" என ஆசிரியர் கேட்க,

"ஐயா! என்னோட அப்பா தான் எனக்கு சொன்னாரு தட்டான்கள் தண்ணீரை சுத்தமா வச்சிக்கும் அதோடு தண்ணீரில் உருவாகுற கொசுக்கள் போன்ற உயிரினங்களை சாப்பிடும் அதனால நோய்களை தடுக்க முடியும்னு. நீங்க எங்க வாத்தியார் அம்மாகிட்ட உங்க பசங்களுக்கு அடிகடி காய்ச்சல் வருதுனு சொன்னதை கேட்டேன். அதோட கொசு தொல்லையும் அதிகமா இருக்குனு சொன்னீங்கல அதான் நான் எங்க அப்பா பிடிச்சு கொடுத்த தட்டானை உங்களுக்கு கொடுத்தேன். இதோட வேலை இப்போ முடிஞ்சுது இனி நம்ப இதை விட்ருவோமே"

அழகாய் பேசியவளின் கன்னம் தட்டியவர், "அருமையான பொண்ணை பெத்து வளர்க்கிறாரு உன்னோட அப்பா. உனக்கு எத்தனை விஷயங்களை சொல்லி தந்திருக்காரு. உன் அப்பாவை நினைச்சு நான் பெருமை படுறேனு அவர்கிட்ட சொல்லுமா" என அவர்களை அனுப்பி வைத்தார்.

இருவரும் பேசியதில் அதிலும் வாத்தியார் ராணியை புகழ்ந்ததில் முத்துவிற்கு காதில் புகை வராத குறைதான். ஆனால் ராணி அமைதியாய் கையில் இருந்த குடுவையை முகத்திற்கு நேராக பிடித்து பார்த்தபடி நடந்து வருவதை கண்டவனுக்கு அந்த தட்டான்களை பறிக்க தோன்றியது.

ஆனால் முதல்நாள் தான் செய்து வைத்த பிழை கண் முன்வர, "ராணி! என்னை மன்னிசுக்கப்பா" என்றான்.

அவன் குரலில் தட்டான்களிடம் இருந்து இவனிடம் தன் பார்வையை திருப்பியவள், "என்ன முத்து என்னாச்சு?" என கேட்டாள்.

"இல்லப்பா நேத்து நீ மாம்பழம் கொடுத்தல அதை உன்கிட்ட கொடுக்க மறந்து நான் போனேனா அப்போ ஒரு கல் தடுக்கி நான் கீழ விழுந்துட்டேன்" முகத்தை அழுவது போல் வைத்தான்.

அதில் "அச்சச்சோ.. என்ன சொல்ற முத்து உனக்கு அடிபட்டுச்சா?" காலை அவன் அனைவரின் முன்பும் தன்னை கிண்டல் செய்ததை மறந்து அவனுக்காக பதறினாள் ராணி.

"ஆமா ராணி! நான் விழ சைக்கிள் என் மேல விழுந்திடுச்சு அதுல பையில இருந்த மாம்பழம்லாம் கீழ விழுந்து தூசி ஆகிடிச்சு. கீழ விழுந்ததை சாப்பிட கூடாதுனு அம்மா சொல்வாங்க தான அதான் நான் அதை அப்படியே விட்டுட்டேன். காலைல வகுப்புல நீ கேட்டப்போ நான் சொல்லிருப்பேன் ஆனா நான் விழுந்ததை சொன்னா எல்லோரும் சிரிப்பாங்க அதான் சொல்லலை" என்றான்.

அவன் சொல்வதை நம்பிய ராணி, "ஆமா முத்து! கண்டிப்பா சிரிச்சிருப்பாங்க என்னை பார்த்து கூட எல்லோரும் சிரிச்சாங்க தான" என்றாள் வெகுளியாய்.

"சரி ராணி! இந்த தட்டான்களை நீ வாத்தியார்கிட்ட சொன்னமாதிரி பறக்க விட போறியா?" என கேட்டான்.

"ஆமா முத்து! இதுங்க பாவம் எவ்வளவு மென்மையா சின்னதா இருக்கு. இவங்களால நமக்கும் இந்த பூமிக்கும் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?" என கண்களை விரித்து பேசினாள்.

"ஓ என்ன நன்மை ராணி"

"என்ன நன்மையா? நீ கொஞ்ச நாள் முன்னாடி என்கிட்ட கேட்டியே மழை வரபோகுதுனு எப்படி சொன்னேனு அதுக்கு பதில் இந்த தட்டான் தான் முத்து"

"என்ன" என அவன் இப்பொழுது கண்களை விரிக்க,

"ஆமாம் முத்து! எங்க அப்பா இந்த பூச்சி பத்தி தான் நிறைய ஆராய்ச்சி பண்ணி சொல்லுவாரு. இந்த பூச்சியை வச்சி ஒரு இடத்துல தண்ணி எப்படி இருக்குனு நம்ப கண்டுபிடிக்கலாமாம். அதே போல இந்த பூச்சி கீழாக பறந்தா மழை அங்கே வருமாம், கொஞ்சம் தள்ளி மேல பறந்தா வேற எங்கேயோ மழை பக்கத்துல பெய்யபோகுதுனு அர்த்தமாம்.

அதோடு இது அழுக்கான நீர்ல இருக்க பாசி, அந்த நீரால உருவாகுற கொசு, ஈ எல்லாத்தையும் சாப்பிடுமாம் அப்போ மனிதர்களுக்கு தண்ணீரால வர நோய் குறைஞ்சிடுமாம். இதோ நம்ப வாத்தியார் வீட்ல அதான நடந்துச்சு" என்றவள் அந்த குடுவையை ஆட்டி பார்த்து சிரித்தாள்.

அந்த குடுவையில் இருக்கும் தட்டான்களை தொட முத்துவின் கை பரபரக்க, "ராணி நேத்து மாம்பழத்தை கீழ போட்டப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு நீ கொடுத்ததை பாதுகாக்கலைனு இதை என்கிட்ட கொடுக்கிறியா பத்திரமா வச்சு நாளைக்கு தரேன்" என கேட்டான்.

"இல்ல முத்து! இது ஏற்கனவே ஒரு மாசமா சுதந்திரமா இல்லையே அதனால அப்பாகிட்ட சொல்லி இதை செடிங்களோட விடப் போறேன்" என தயக்கமாய் சொன்னாள்.

"சரி ராணி! நீ என்னை நம்பலை அதான் நான் மாம்பழத்தை பாழ் பண்ணிட்டனே" என பாவமாய் முகத்தை தொங்க போட்டான்.

அதில் ராணிக்கு ஏதோ போல் ஆக, "சரி முத்து! இந்தா நீயே வச்சிக்கோ ஆனா நாளைக்கு வரைக்கும் வேணா சாய்ந்திரமா கொண்டு வந்து கொடுத்துடு" என்றவள் அந்த குடுவையை அவனிடம் கொடுத்தாள்.

அவள் கொடுத்த குடுவைக்குள் இருந்த இரு தட்டான்களும் நான்கறிவு உயிரினங்களுக்கே உரிய கண்களால் அவர்களை உற்று பார்த்தது.

"அந்த குடுவையில் இரண்டு தட்டான்கள் உள்ளதே நாராயணரே! அதில் நம் மகள் யார்?" என கேட்டார் மகாலட்சுமி.

"இருவருமே நம் மக்கள் தான் தேவி " நாராயணர் சிரிக்க, "என்ன இம்முறை இச்சா, க்ரியா எடுத்த அவதாரத்திலே தன் வடிவை கொணடுள்ளாளா?" என பார்வதி தேவியும் ஆச்சரியமாய் கேட்டார்.

"ஆம் பார்வதி! தட்டான்களின் முட்டை அவசியமாய் பட்டது ஆனால் அந்த சிறுமியின் தந்தையிடம் க்ரியா மட்டுமே இருந்தாள் அதனால் தான் இச்சா இவ்வடிவம் பெற்று தானாய் அந்த அரசுவிடம் சேர்ந்தாள்.

அதனால் தான் சிறுமியின் ஆசிரியரின் வீட்டில் முட்டைகள் உருவாகி அவர்கள் வீட்டில் சீரற்று கிடந்த நீர்நிலை சரியாகி உள்ளது"

"அப்படி என்றால் க்ரியா மற்றும் இச்சாவால் அவர்கள் நன்மை பெற்றுள்ளார்கள் சரி தானே நாராயணரே! அப்படி என்றால் இம்முறை க்ரியாவின் பிறவி எந்த தொந்தரவும் இன்றி சுபமாய் நடந்து முற்றுபெற போகிறதா" என ஆனந்தபட்டார் தேவி லட்சுமி.

அவரின் ஆனந்தத்திற்கு ஈடாய், "ஏய் தட்டான் பற பற" "ஏய் தட்டான் பற பற" என பூலோகத்தில் இருந்து முத்துவின் குரல் குதுகலாமாய் ஒலித்தது.

அதற்குள் அவன் தட்டான்களை விடுவித்து விட்டானா? என தேவிகள் இருவரும் பூலோகத்தை காண, அங்கு இன்னும் தட்டான்கள் அந்த குடுவையில் தான் இருந்தது. ஆனால் அது அப்படியே இருக்க போவதில்லை என்பதை போல் அதன் அருகே அந்த சிறுவன் பெரிய கற்கள் மற்றும் நூல்குண்டுடன் வந்து அமர்ந்தான்.

"தட்டான் பற பற " என மீண்டும் சொல்லிய முத்து குடுவையை பார்த்து, "என்ன இரண்டுபேரும் முட்டை கண்ணை வச்சி முழிச்சுமுழிச்சு பார்க்குறீங்க. உங்களை பறக்க வைக்க தான் நான் இதை தயார் பண்றேன்" என்றவன் கெக்கலித்து சிரித்தான்.
 
  • Love
Reactions: Kameswari

MK30

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
14
3
thanjavur
"நாராயணரே! இந்த சிறுவன் என்ன செய்ய போகிறான்?" என லட்சுமியும், பார்வதியும் பதைபதைத்து பார்க்க கல்லில் நூலின் ஒருமுனைை கட்டிய சிறுவன் குடுவையை மெதுவாய் திறந்து தன் கையை உள்ளே விட்டான்.

அவன் தட்டான் வடிவில் இருக்கும் க்ரியாவை பிடிக்க முற்பட்ட சூழல் உணர்ந்த இச்சா முன்வந்து அவன் கையில் சிக்கியது. உற்சாகமாய் அதை வெளியில் எடுத்த சிறுவன் அதன் வாலில் வெற்றிகரமாய் நூலின் மறுமுனையை கட்டினான்.

பின் சத்தமாய் "தட்டான் பறபற" என கத்தி சிரிக்க தட்டான் பூச்சியின் வாலில் கல்லுடன் சேர்த்து நூல் கட்டி இருந்ததால் அதனால் பறக்க முடியாமல் இறகுகளை படபடவென அடித்தது.

அது வலியில் துடிக்க அதை கண்டு சிரித்த முத்து அருகே இருந்த பிள்ளைகளை கூப்பிட்டு அதன் செயல்களை குறிப்பிட்டு வேடிக்கை காட்டினான்.

பிள்ளைகளும் கைத்தட்டி குதுகலிக்க, "பிள்ளைகளா.. என்ன இத்தனை சத்தம்? வாங்க வந்து பழம் எடுத்துக்கோங்க" என அங்கு வந்த முத்துவின் தாய் பிள்ளைகளை அழைக்க அவர் கையில் இருந்த தட்டில் இடம்பெற்றிருந்தது நேற்று ராணியை ஏமாற்றி முத்து எடுத்து வந்திருந்த மாம்பழங்கள்.

அந்நேரம் தட்டான்களை இவனிடம் கொடுத்து விட்டாலும் அதை இன்னும் அடைத்து வைப்பதில் விருப்பம் இல்லாத ராணி தன் தந்தையை அழைத்துகொண்டு அங்கு வந்து சேர்ந்தாள்.

அவள் வந்த நேரம் ஆளுக்கொரு மாம்பழ துண்டுகளை கைகளில் ஏந்தி "தட்டான் பற பற" என பிள்ளைகள் கத்திக் கொண்டிருக்க பதறியடித்து வந்தவள் பார்த்தது வலியில் பறக்கமுடியாமல் தன் இறக்கைகளை அடித்து கொண்டிருந்த தட்டானை தான்.

முத்து கை கட்டி நின்று வேடிக்கை பார்க்க அவன் அருகே மற்றொரு குடுவையில் இருந்த தட்டானும் அவள் கண்ணில் சிக்கியது. வேகமாய் ஓடிச் சென்று அந்த குடுவையை எடுத்தவள் அதன் மூடியை திறந்து அந்த தட்டானை பறக்க விட்டாள்.

"அப்பா! அதை நான் பறக்க விட்டுட்டேன் இதை நீங்க காப்பாத்துங்க ப்பா என்னால தான் இப்படி ஆகிடுச்சு" அந்த நிலையிலும் முத்துவை பலிக்காமல் அவனிடம் கொடுத்த தன் மேல் தான் தவறு என தந்தையை துணைக்கழைத்தாள் பெண்.

அவர் ராணி சொல்லும் முன்னே அந்த கல்லில் இருந்து நூலை அகற்றி இருந்தார். அவர் கையில் அமைதியாய் இருந்த தட்டானை பார்த்தவள், "ப்பா! இது செத்து போச்சா" அழுகுரலில் கேட்க,

"இல்லடா இப்போ இதோட வால்ல இருக்க நூலை அறுத்திட்டு கொஞ்சம் மஞ்சள் போட்டா சரியாகிடும் நீ அழாதடா வா வீட்டுக்கு போவோம்" என அழைத்தார்.

"சரி ப்பா!" என்றவள் முத்துவையும், அவன் செய்த ஏமாற்று வேலையையும் மறந்து தட்டானை ஏந்தி செல்லும் தந்தையின் பின் சென்றாள்.

இங்கு ராணியால் விடுவிக்கபட்ட "க்ரியா" தன் செயலான நீர்நிலைகளை சுத்தபடுத்த பறந்து சென்றாள்.

அந்த வாத்தியாரின் வீட்டில் நன்மை நடந்தது போல் இனி அவள் செல்லும் அனைத்து இடங்களிலும் நன்மைகள் தொடர்ந்து அவளின் இந்த பிறவி வெற்றிகரமாய் முடியும் என நம்புவோம்.

தீயவர் அனைவரும் திருந்துவதில்லை, நல்லவர் தங்களின் வெகுளிதனத்தால் தீயவரை தீயவர் என உணர்ந்து அவர்களை தடுப்பதுமில்லை. வெகுளியாய் இருப்பது தவறில்லை ஆயினும் வெகுளிதனம் ஏமாற்றதிற்கான அடிதளம் என உணரவேண்டும்.

- தொடரும்.

(இந்த கதையில் வரும் அனைத்து மனிதர்களும், கடவுள்களும், அவர்களின் செயல்களும், சூழல்களும், இடங்களும் எனது கற்பனையே அன்றி எந்த ஒரு தனி மனிதனையோ, மத நம்பிக்கைகளையோ, இறைவனையோ குறிக்காது. இதில் வரும் சம்பவங்கள் முழுக்கமுழுக்க எனது கற்பனை மட்டுமே எந்த ஒரு வரலாற்று செய்திகளுடனோ, புராணங்களுடனோ தொடர்புடையது அல்ல)
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
கருத்துக்கள் மிகவும் அருமை 👌❤️
 
  • Love
Reactions: MK30