• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஜென்ம ஜென்மமாய் - 6

MK30

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
14
3
thanjavur
அத்தியாயம் 6 (ரசம்- நகை)

'உன் புருஷன் வாங்குன காசுக்கு நீ ஒருநாளைக்கு இருபது மணிநேரம் வேலை செஞ்சாலும் பத்து வருஷம் கிட்ட உன் கடன் முடியாது. அதனால சும்மா சும்மா சீக்கிரம் வேலையை முடிச்சு போகாத சொல்லிட்டேன்"

வீட்டின் வாயிலில் நின்று சத்தமாய் மிரட்டுவது போல் பேசியவரிடம் பதில் பேச முடியாமல் கண்களில் முட்டும் கண்ணீருடன் சரியென தலையசைத்தாள் சீதா.

அவளின் அழுகையை உணர்ந்து குரலை செறுமிய அந்த ஊரின் பெரியவர் என்றழைக்கபடும் பண்ணையார், "சரிசரி! காலங்காத்தால அழுவாத வேணும்னா ஒன்னு பண்ணு இதோ நிக்கிறானே இவனை நம்ப தோட்டத்தை சுத்தம் பண்ணுற வேலைக்கு அனுப்பி விடு பத்து வருஷம்ன்றது ஏழு எட்டு வருஷமா குறையும்" என யோசனை சொன்னார்.

அவர் என்னவோ அவளுக்கு சாதகமாய் சொன்னது போல் தான் பாவித்தார் ஆனால் தன் முந்தானையை பற்றியபடி மறைந்து நிற்கும் பத்து வயது மகனை வேலைக்கு அனுப்ப சீதாவின் மனம் ஒப்பாததால் பதில் சொல்லாமல் நின்றாள்.

"சரி போ.. புருஷன் வாங்கி வச்ச கடனை அடைக்கிறதோட தனியா இந்த புள்ளைய படிக்க வேற வைக்கனுமே அதான் யோசனை சொன்னேன் மத்தபடி உன் விருப்பம் தான்" என்றவர் விடைபெற்று செல்ல வேடிக்கை பார்க்கும் அக்கம்பக்கத்து மனிதர்களை கண்டிகொள்ளாமல் மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

அமைதியாய் ஆனால் அவசரஅவசரமாய் மகனை கிளப்பியவள் இருவருக்கும் சேர்த்து உணவை கட்ட தாயிடம் வந்த சிறுவன், "ம்மா! நான் வேணும்னா அந்த தாத்தா சொன்ன மாதிரி அவர் தோட்டதுக்கு வேலை போகட்டுமா? உனக்கும் கஷ்டம் இருக்காது" என கேட்டதில் தாயின் மனம் கண்ணீர் சிந்தியது.

அவனின் உச்சி மோர்ந்து அவனின் உயரத்துக்கு சமமாய் மண்டியிட்டு அமர்ந்தவள், "பரணி! அம்மாக்கு கஷ்டம்லாம் இல்லப்பா.. நீ மட்டும் நல்லா படிச்சு நல்ல உத்தியோகத்துக்கு போய்ட்டா போதும் சாமி அம்மாக்கு சந்தோஷமா இருக்கும் சரியா.. நல்லா படிக்கனும்" என்றவரின் கன்னம் தொட்ட பரணி,

"கஷ்டம் இல்ல சொல்ற அப்றம் ஏன் மா நீ சிரிக்கவே மாட்ற நீ சிரிச்சு நான் பார்த்ததே இல்லையே ம்மா" ஏக்கமாய் சொல்லிய பிள்ளையை அணைத்துக் கொண்ட சீதாவின் கண்கள் கலங்கியது.

பிள்ளை சொல்வது உண்மை தான் ஊர் முழுக்க பல கடன்கள் வாங்கி அதை கொடுக்க முடியாமல் சுயநலமாய் தற்கொலை செய்து இறந்து போன கணவரால் சிரிப்பென்பதையே மறந்து தான் பல வருடங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் சீதா.

பிள்ளை அதை கவனித்து சொல்லியதில் அவளுக்கு வருத்தம் தான் ஆனால் என்ன செய்வது அவளின் மனதில் இருக்கும் துயரங்களை கொட்டி கவிழ்க்க அவளுக்கென்று வடிகால் யாருமில்லையே. பிறந்தது முதல் யாருமில்லாமல் ஊரின் கோவிலில் வளர்ந்தவள் திருவிழாவிற்கு வந்த பக்கத்து ஊர் வாலிபனை காதல் என்ற பெயரில் நம்பி வந்ததன் விளைவு பரணியும், எக்கசக்க கடனும் தான்.

பரணியின் தந்தைக்கும் சொந்தங்கள் என பெரியதாய் யாரும் இல்லாமல் இருந்த ஒன்றிரண்டு பேரும் கடன் தங்கள் தலையில் விழுமோ என இவர்களை சீண்டாததில் அவள் தன் துக்கங்களை தன்னுள்ளே போட்டு அடக்கி ஒரு கட்டத்தில் இறுக்கத்தின் இருப்பிடமாய் மாறி போனாள் சீதா.

இப்பொழுது கூட பரணியை அணைத்து இரு சொட்டு கண்ணீர் விட்டவள் அடுத்த நொடியே அதை அடக்கி கொண்டு, "பள்ளி கூடத்துக்கு நேரமாச்சு பரணி.. வா போகலாம்" என அவனை அழைத்துக் கொண்டு நடந்தாள்.

தெருமுனையில் அந்த தெருவில் இருக்கும் சிறுவர் சிறுமியருடன் அவனையும் சேர்ந்து போகுமாறு அனுப்பியவள் தன் வேலையை பார்க்க சென்றாள்.

நொடிபொழுதும் ஓய்வெடுக்காமல் சுறுசுறுப்பாய் ஒளி பாய்ச்சும் சூரியனை போல் நாள் முழுக்க வேலை பார்த்த சீதா மாலை மங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

மகன் வீட்டிற்கு வந்து விளையாட சென்ற தின் அறிகுறியாய் அவனின் பள்ளி உடைகள் வீட்டின் கொடியில் தொங்கி கொண்டிருக்க, காலையில் அதில் போட்டு சென்ற வீட்டில் அணியும் உடை காணாமல் போய் இருந்தது. ஒரு மூலையில் அவனின் பள்ளிகூட பையும் அழகாய் சுவற்றில் சாய்ந்து கிடக்க மற்ற எந்த பொருளும் சிதறாமல் அதன் அதனிடத்தில் அப்படியே இருந்தது கண்டு சீதாவிற்கு முகம் இறுகியது.

இந்த வயதில் சிறுவர்கள் எப்படி சேட்டை செய்வர் என்று சீதா அக்கம்பக்கத்து வீடுகளில் பார்க்கிறாள் தானே, ஆனால் பரணியிடம் அந்த சேட்டைகள் எதுவும் இருக்காது. சதா தான் இப்படி இறுக்கமாக சுற்றுவதால் மகனும் தன்னை போலவே மாறி வருகிறானோ என்ற யோசனையில் தான் அவளின் முகம் இறுகியது.

யோசனையோடே மாலை வேலைகள் பார்த்தவளை , "சீதாம்மா! சீதாம்மா" என வாசலில் இருந்து எவரோ அழைக்கும் குரல் கேட்டது.

"யாரு?" என குரல் கொடுத்தபடி வெளியே வந்த சீதா அங்கு வாசலில் இருந்த சிறுவனை கண்டு தன்னையும் அறியாமல் புன்னகைத்தாள்.

அப்படி தன்னை பார்ப்பவரையும் தன்னுடன் சேர்ந்து புன்னகைக்க வைக்கும் படி தான் இருந்தது அந்த சிறுவனின் முகதேஜஸ்.

"சொல்லு தம்பி! யார் நீங்க?" என கேட்டவர் சிறிது யோசித்து, "இந்த ஊர்ல நான் இதுவரை உங்களை பார்த்ததே இல்லையே யார் வீட்டுக்காவது விருந்தாட வந்திருக்கீங்களா?" என கேட்டாள்.

"இந்த பூமியே ஒரு வீடு தான் நாமெல்லாம் இங்க விருந்தாளிங்க தானே" அழகாய் புன்னகைத்த சிறுவனின் முகம் பளபளவென மின்னியது.

அவனின் புன்னகையை கண்ணசைக்காமல் பார்த்து நின்ற சீதாவிடம், "சீதாம்மா! இதை உங்ககிட்ட கொடுக்க சொல்லி உங்க பையன் பரணி தந்தான். அவன் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரேனு சொன்னான் ம்மா. நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்ததால என்கிட்ட கொடுத்து விட்டான்" என ஒரு சின்ன பெட்டியை நீட்டினான்.

அவனின் முக வசிகரத்தில் சீதா எதுவும் கேட்காமல் கைநீட்டி அந்த பெட்டியை வாங்கி கொள்ள அவரை பார்த்து மேலும் இதழ்விரிய புன்னகை சிந்தியவன்,

"பொன்நகை இல்லாதவர்கள் புன்னகைக்க கூடாது என்று விதி ஒன்றும் இல்லை தாயே! இனி என்றும் நான் விரும்பும் நகை தங்கள் முகத்தில் நிலைத்திருக்கும் என்று எண்ணுகிறேன்" என புன்னகையுடனே விடைபெற்றான்.

அவன் கண்ணில் இருந்து மறையும் வரை கண் சிமிட்டாமல் பார்த்து நின்றவளை கலைத்தது கையில் இருந்த பெட்டியில் இருந்து எழுந்த அசைவுகள்.

"ஆ.. என்ன இது பெட்டி ஆடுது" என பயத்துடன் பார்த்தவள் மெதுவாய் அதை திறக்க போக அதற்குள் அதில் இருந்த ஒன்று சட்டென வெளியே குதித்து தாவியதில் "ஆ" என அலறி கீழே தொபுக்கடீர் என விழுந்தாள்.

விழுந்து முழுதாய் ஒரு நிமிடம் கழிந்தும் என்ன நடந்தது என புரியாமல் முழித்தவள் படுத்தபடியே தலையை திருப்பி பார்க்க அந்த அட்டை பெட்டிக்குள் தலையை விட்டபடி உருட்டி கொண்டிருந்தது அதில் இருந்து குதித்திருந்த அந்த சின்ன உருவம்.

அட்டையினுள் தலை இருக்க அது நகர நகர பெட்டியும் நகர அதில் இன்னும் பெட்டியினுள் தலையை நுழைத்தபடி நகர பெட்டியுடன் சேர்ந்து அதுவும் சுவரோரமாய் நகர்ந்து சென்றது.

அதை பார்த்தவுடன் இதற்கா இத்தனை பயந்து அலறி கீழே விழுந்தோம் என்ற எண்ணம் தோன்ற தன்னையும் மறந்து பல வருடங்கள் கழித்து வாய்விட்டு நகைத்தாள் சீதா.

அவரின் சிரிப்பில் பெட்டியின் அசைவுகள் நிற்க அதனுள் இருந்து தன் தலையை வெளியே எடுத்து இவரை நோக்கி திரும்பி அந்த குட்டி உருவம் தன் கண்களை உருட்டி "ம்யாவ்" என கத்தியது.

மாலை நேர சூரியனின் மென்மையான ஆரஞ்சு வண்ணத்தில் புலி போல் உடலில் ஆங்காங்கே கோடுகள் இருக்க பொசுபொசுவென நீண்ட வாலுடன் அதை ஆட்டியபடி நின்றிருந்தது அந்த குட்டி பூனை.

அது கண்களை முழித்து பார்ப்பது முறைப்பதாய் தோன்ற, "ஒய் என்ன? உன் விளையாட்டை நான் தொந்தரவு பண்ணிட்டேனு முறைக்கிறியா? என்ன பயம்புறுத்துனதுக்கு நான் தான் உன்னை முறைக்கனும். ஆளை பாரு" என அதட்ட,

அது மீண்டும், "மியாவ்" என கத்தியது.

"என்ன சும்மா சும்மா மியாவ்ன்ற... யார் நீ முதல்ல" என சிறுபிள்ளையாய் அதனுடன் பேச்சு வார்த்தையை தொடங்கினாள்.

அது இம்முறை இவளை மதிக்காமல் மீண்டும் அட்டை பெட்டியினுள் தன் தேடுதல் பயணத்தை தொடர்ந்தது.

"அட.. இதுக்கு திமிரை பாரேன் மதிக்காம திரும்புது" என தனக்குள் முனுமுனுத்தவள், "இந்த பரணிக்கு இந்த பூனைக்குட்டி எங்க இருந்து கிடைச்சிதுனு தெரியலையே வழக்கமாக இப்படி எல்லாம் எதையும் வீட்டுக்கு கொண்டு வரமாட்டான். இப்போ எதுக்கு அந்த பையன்கிட்ட கொடுத்து விட்டிருக்கான்" தனக்குள் பேசியடி பாலை காய்ச்சியவர் ஒரு பாத்திரத்தில் ஊற்றி பூனையின் அருகே கொண்டு சென்று வைத்தார்.

அது இன்னும் பெட்டினுள் தலையை விட்டிருக்க அதை பற்றி இழுத்தவர், "டேய் பையா! இங்க வந்து இதை குடி அப்றம் விளையாடு" என பாலின் அருகே விட்டார்.

அதுவும் முதலில் தயக்கமாய் வாசம் பார்த்து பின் குடிக்க தொடங்கியது. அந்நேரம், "சீதா! பொழுதுபோற நேரத்துல கொடில துணி தொங்குது பாரு" என பக்கத்து வீட்டு பெண்மணியின் குரல் கேட்க அவசரமாய் ஓடிய சீதா துணிகளை எடுத்து வந்து ஒவ்வொன்றாய் உதறி மடித்தார். அவர் மடிக்கும் துணி பறக்கும் திசைக்கு ஏற்ப இப்படியும் அப்படியுமாய் ஆடி எகிறி அதை பிடிக்க முற்பட்டது பூனைக்குட்டி.

முதலில் அதை கவனிக்காத சீதா புடவையை மடிக்க தொடங்க புடவையின் முனையை கெட்டியாய் பிடித்துக் கொண்ட பூனைக்குட்டி இவளின் இழுப்பில் மேலே வந்ததில் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் அது தொங்கி கொண்டிருந்த விதத்தில் பக்கென சிரித்துவிட்டாள்.

"ஹாஹாஹா... ஏய் என் புடவை என்ன உனக்கு ஊஞ்சலா இறங்கு கீழ இறங்கு" என அதட்ட தன் கண்களை உருட்டி உருட்டி பார்த்த பூனைக்குட்டி இவள் அடிப்பது போல் கை தூக்கியதில் அதுவும் தன் ஒரு கையை முன்னால் தூக்கியது.

புடவையில் தொங்கி கொண்டிருப்பதை புரியாமல் கை தூக்கியதில் அது தொப்பென கீழே விழ சீதா பதறினாள்.

ஆனால் அதுவோ, 'இதெல்லாம் நமக்கு அசால்ட்டு ப்பா' என்றபடி தரையில் கால்களை அகட்டி வைத்து தன் நாக்கால் தன்னை சுத்தபடுத்த தொடங்கியது.

அதில் மேலும் புன்னகை அதிகரிக்க துணிகளை மடித்து விட்டதால் அதன் அருகே அது செய்வதை பார்த்தபடி அமர்ந்துவிட்டாள் சீதா.

சிறிது நேரம் தன்னை தானே சுத்தபடுத்திய பூனைக்குட்டிக்கு அலுப்பாகியதோ என்னவோ அமைதியாய் படுத்துக் கொண்டது. சரி அதான் படுத்து விட்டதே என இவள் இரவு உணவு தயார் செய்யலாம் என நினைத்து பாத்திரத்தை எடுக்க அடுத்தநொடி வாலை ஆட்டியபடி அங்கு வந்து நின்றது பூனைக்குட்டி.

பின் அவள் வேலை செய்யும் பொழுதெல்லாம் அவளை உரசியபடி நின்று அவளின் காலின் இடைவெளிக்குள் புகுந்து என அவளை ஒட்டி திரிந்த பூனை சிறிது நேரத்தில் தன் செயல்களால் அவளை நிமிடத்திற்கு ஒருமுறை சிரிக்க வைத்தது.

அந்திசாயும் வேளை வீட்டிற்கு வந்த பரணியை கலகலவென நகைக்கும் அன்னையின் சிரிப்பொலியே வரவேற்றது.

"என்ன! அம்மாவா சிரிக்கிறாங்க?" என்ற ஆச்சரியத்துடன் வீட்டினுள் நுழைந்தவனை முதலில் கண்டது பூனைக்குட்டி தான்.

"மியாவ் மியாவ்" என கத்தியபடி அவனை உள்ளே செல்லவிடாமல் கத்த உள்ளே வீட்டிற்கு பின்னால் இருந்து வேகமாய் வாயிலுக்கு வந்த சீதா அதை பார்த்துவிட்டு மீண்டும் அடக்கமாட்டாமல் சிரித்தார்.

அன்னையின் சிரிப்பை ஆவலாய் பார்த்த பரணி, "ம்மா என்னாச்சு?" என கேட்டான்.

"இல்லடா பரணி! இப்போ தான் புஷ்பா அக்கா சக்கரை இருந்தா தா டி- னு கேட்டு வந்தாங்க. ஆனா இந்த பூனைக்குட்டி அவங்களை வீட்டுக்குள்ளயே விடாம ஒரே கத்து. அதுவும் நான் அவங்க கிட்ட கிண்ணத்தை கொடுத்தவுடனே அப்படி என்ன எங்க வீட்ல இருந்து வாங்குறனு கேக்கிற மாதிரி எகிறிட்டு போகுது. பாவம் புஷ்பாக்கா அலறி அடிச்சிட்டு பின்பக்கமா இப்பதான் ஓடுறாங்க"

என சிரிப்புக்கு இடையில் சொன்னவள் நீண்ட நேரம் சிரித்ததில் மூச்சு வாங்கினாள்.

பூனைக்குட்டி இன்னும் பரணியை பார்த்து கத்திக் கொண்டிருக்க குழந்தையை தூக்குவது போல் லாவகமாய் அதை தூக்கியவள், "டேய் பையா! எதுக்கு கத்துற.. அண்ணன் டா நம்ப அண்ணன்" என சொல்ல அதற்கு என்ன புரிந்ததோ இத்தனை நேரம் பெரிய குரலாய் கத்திக் கொண்டிருந்ததற்கு மாறாய் சிறிய குரலில் ஆமோதிப்பது போல் "மியாவ்" என்றது.

அன்னை இத்தனை அந்த பூனையை கொஞ்சுவதை கண்டு அதை அவர் தான் கொண்டு வந்திருப்பார் என பரணி நினைக்க, சீதாவோ மகன் நண்பனிடம் கொடுத்து விட்டது என நினைத்து கொண்டார்.

ஆனால் அதை கொடுத்து சென்ற சிறுவன் இத்தனை நேரம் இவர்கள் வீட்டினருகே மறைந்திருந்து சீதாவின் கிண்கிணி சிரிப்புகளை கேட்டிருந்தவன் இப்பொழுது காற்றோடு காற்றாய் மறைந்தான்.

மேலுலகத்தில், "நாராயணரே! இந்த முறை 'க்ரியா'வின் பிறப்பு இந்த பூனை சரிதானே அதோடு அந்த சிறுவன் இச்சா தானே" என குதுகலித்தார் மகாலட்சுமி.

சிறுபிள்ளை போன்ற அவரின் மகிழ்வில் தானும் புன்னகைத்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல், "ம்க்கும் இது நம் மகளின் ஐந்தாம் பிறவி இப்பொழுது தான் அவள் என்ன பிறப்பெடுக்கிறாள் என்றே தாங்கள் கண்டுகொள்ள முடிகிறது போலும்" என பரிகசித்தார்.

"நான் என்ன செய்வது நாராயணரே! தங்களை போலவே தங்கள் பிள்ளைகளும் நான் ஒன்றை நினைத்தால் அவர்கள் ஒன்றை செய்ய கூடியவர்களாய் உள்ளார்கள். பூமியில் சொல்வார்களே பொங்கல் செய்ய சொன்னால் களி கிண்டுவது போல் என்று அப்படி" என கிண்டலாய் மொழிந்தவர் கலகலத்து சிரித்தார்.

அவரின் சிரிப்பு பூலோகத்தில் உள்ள பெண்களின் மனதிலும் எதிரொலித்தது போலும் காலையில் துயில் கலைந்து எழும்பொழுதே சீதாவும் முந்தைய நாள் நினைவில் புன்னகையுடனே தான் எழுந்தாள்.

அவளின் புன்னகையை பெரும் நகையாய் மாற்றியது அவள் கண்ட கோலம். இரவு அழகாய் பாய் விரித்து போர்வை போர்த்தி படுத்திருந்த பரணி சுவரோரமாய் உருண்டிருக்க அந்த பாயில் போர்வைக்கு மேல் சொகுசாய் சாய்ந்து உறங்கி கொண்டிருந்தது அந்த குட்டி பூனை.

அதிலும் அதன் தலை ஒருபக்கம் திரும்பி இருக்க, உடல் வேறு பக்கம் வளைந்திருக்க கால்கள் இரண்டும் மேலே துக்கியபடி படுத்திருந்ததை கண்டவளுக்கு சிரிப்பு வெடிக்க "ஹாஹாஹா" என சிரித்தாள்.

அன்னையின் சிரிப்பை உறக்கத்திலும் உணர்ந்து பரணி புன்னகைக்க மகனை வாஞ்சையாய் பார்த்தவர் தன் சிரிப்பில் அசையாத பூனையை பார்த்து மென்னகையுடனே காலை வேலைகளை கவனிக்க சென்றாள்.

அவள் அத்தனை வேலைகளையும் முடித்து பரணியையும் எழுப்பி கிளப்பி முடிக்கும் வரையிலுமே எழாத பூனை தன் உடலை மட்டும் விதவிதமாய் வளைத்து அவளுக்கு அவ்வப்போது சிரிப்பை மூட்டியது.

அதன் உறக்கத்தை ரசித்தவளுக்கு அதை கலைக்க மனமில்லாத போதும் நேரம் ஆனதில் வேறு வழியின்றி அதை அப்படியே தூக்கிக் கொண்டு வெளியில் வந்தாள்.

அவள் தூக்கும் பொழுது சிறிதாய் கண்விழித்து பார்த்து 'ஓ நீ தானா' என்பதுபோல் மீண்டும் கண்களை மூடி ஒய்யாரமாய் அவள் மேல் சாய்ந்து கொண்டது.

"கொழுப்பை பார்த்தியா இதுக்கு" என்றபடி அதை வாசல் திண்ணையின் ஓரம் விட்டவள் ஒரு பாத்திரத்தில் பாலும், மற்றொன்றில் தண்ணீரும் எடுத்து அதன் அருகில் வைத்தாள்.

அதற்குள் அது எழுந்து தன்னை சுத்த படுத்திகொள்ள, மகனுக்கு முன்னால் செல்லுமாறு கண்ணசைத்தவள் பூனைக் குட்டியிடம் குனிந்து, "ஒய் குட்டி! அம்மா வேலைக்கு போய்ட்டு வரவரைக்கும் சமத்தா இருக்கனும் சரியா?" என்றாள்.

பதில் சொல்ல அது எங்கு அவளை கவனித்தது? அது தான் மும்முரமாய் தன்னை சுத்தம் செய்து கொண்டிருந்ததே அதில் மென்னகையுடனான பெருமூச்சுடன் அங்கிருந்து மகனின் பின்னே நடந்தாள் சீதா.

காலையில் பால் வைத்ததுடன் சரி வேறு ஒன்றுமில்லாமல் அந்த சின்ன ஜீவன் என்ன செய்யும் என்ற யோசனையுடன் அன்று விரைவில் வீட்டிற்கு வந்தவளை யாருமில்லா திண்ணையே வரவேற்றது.

அவள் வைத்திருந்த இரு பாத்திரங்களில் பால் இருந்த பாத்திரம் முழுதாய் தீரந்திருக்க, தண்ணீர் பாதி மட்டும் மிச்சம் இருந்தது. வீட்டின் சுற்றும் முற்றும் பார்த்தவள் பூனைக்குட்டி தென்படாததில், "எங்க போச்சு இந்த பூனைக்குட்டி" என தவிப்புடன் புலம்பியபடி கதவை திறந்து உள்ளே சென்றார்.

அவரை வரவேற்பது போல் "மியாவ் மியாவ்" என கத்தியவாறு சமையலறையில் இருந்து ஓடி வந்தது பூனைக்குட்டி. அதையும் வீட்டின் வாயிலையும் மாறி மாறி பார்த்தவள் அப்பொழுது தான் திறந்திருந்த சன்னலை கவனித்தாள்.

அது எப்படி வந்திருக்கும்? என புரிந்து கொண்டவள் புன்னகையுடன் அதற்கான பாலை கொண்டு வந்து வைக்க அதுவும் வேகவேகமாய் குடித்தது.

அன்றைய மாலை அவள் நேரம் பூனையுடன் கழிய வெளியே அவளை யாரோ அழைத்தனர். அவள் யாரென பார்க்க வெளியே செல்ல பண்ணையார் தான் நின்றிருந்தார்.

"என்ன இன்னிக்கும் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பி வந்துட்டேனு கணக்கு பிள்ளை சொன்னாரு.. தினம் இப்படி சீக்கிரம் வந்தா உன் புருஷன் வாங்குன கடனை யார் அடைப்பா?" என அவர் சத்தம் போட அக்கம்பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் எட்டி பார்த்தனர்.

அவளுக்கு வழக்கம் போல் அவர் செயலில் தலைகுனிவு ஏற்பட கண்களில் கண்ணீர் திரள தொடங்கியது. அந்நேரம் வீட்டினுள் இருந்து குடுகுடுவென ஓடி வந்த பூனை "மியாவ் மியாவ் மியாவ்" என அவரை பார்த்து கத்தியபடி எகிறிகொண்டு போக அவர் இரு அடி பின் வைத்தார்.

பின் அது மீண்டும் "மியாவ் மியாவ்" என கத்தியபடி இவளின் புடவை முந்தானையை வாயால் பற்றி வீட்டின் உள்ளே இழுத்தது. அதன் செயலில் இத்தனை நேரம் அவளின் கண்களில் முட்டிக்கொண்டு நின்றிருந்த கண்ணீர் காணாமல் போக இதழின் ஓரம் புன்னகை பூத்தது.

வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கும் பூனைக்குட்டியின் செயலில் சிரிப்பு வர "ஹாஹாஹா" என கலகலத்து சிரித்தனர். அதில் அந்த பண்ணையார் முறைத்தபடி நகர ஏனையோர்,

"பரவாயில்லையே சீதா! உனக்கு பாதுகாப்புக்கு ஆள் இருக்காரு போலயே ரொம்ப வீரமானவர் தான்" என கிண்டல் அடிக்க, இன்னும் "மியாவ் மியாவ்" என கத்தியபடி தன் கால்களுக்குள் உரசி கொண்டிருந்த பூனைக்குட்டியை பார்த்து சீதாவும் வாய்விட்டு சிரித்தாள்.

அவளின் சிரிப்பை அதிசயமாய் பார்த்த மக்கள் புன்னகைத்தவாறு நகர சிலர், "சீதா சிரிச்சு இன்னிக்கு தான் பார்க்கனும்னு நம்பளுக்கு விதி இருக்கு போல" என்றும், "இந்த பூனை வந்து தான் சீதாக்கு சிரிக்க தெரியும்னே நம்ப தெரிஞ்சிக்கனும்னு இருந்திருக்கு பாரேன்" என்றும் கிண்டல் செய்து சென்றனர்.
 
  • Love
Reactions: Kameswari

MK30

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
14
3
thanjavur
நீண்ட நெடிய வருடங்களுக்கு பின் அக்கம்பக்கதவர்களின் அனுதாபம் அற்ற இயல்பான கேலியில் சீதாவிற்கு மனம் லேசாக எந்த யோசனையும் இன்றி அவள் இதழ்களும் விரிந்தன.

புன்னகை என்பது நம் மனதை திறக்க செய்யும் சாவி.. அதை தொலைத்து விட்டால் சுத்தம் செய்யப்படாத பூட்டிய வீடு போல் நம் மனமும் அழுக்கடைந்து இருண்டு போய்விடும். அவ்வப்பொழுது மனதை திறந்து சுத்தம் செய்து கொண்டு சிரிக்கவேண்டும் அப்பொழுது தான் வாழ்வு இனிக்கும்.

இதோ காதல் என்ற ஒன்றால் தன் வாழ்வில் சிரிப்பை தொலைத்து இறுகி போய் நின்ற பெண் இன்று அனைத்தையும் கடந்து இலகுவாய் புன்னகைக்க காரணம் அந்த குட்டி பூனை தான்.

பெரிய பெரிய சுற்றுசூழல் மாற்றங்களை உருவாக்குவதும், மிகப்பெரிய பொக்கிஷங்கள் கிட்ட உதவியாய் இருப்பதும் மட்டும் பிறருக்கு செய்யும் நன்மை அன்று ஒருவரின் உள்ளத்தில் உள்ள தேவையற்ற குப்பைகளை நீக்கி அவர்களை இலகுவாய் இருக்க செய்வதும் பிறருக்கு செய்யும் மிக பெரிய நன்மை தான்.

அப்படி இப்பிறவியில் சீதாவை இறுக்கத்தில் இருந்து தளர்த்தி இலகுவாய் மாற்றிய பூனைக்குட்டி பக்கத்து வீட்டில் இருக்கும் புஷ்பாக்கா காய வைக்கும் கருவாடுகளை திருடுவதும், அவர்கள் வீட்டு பால் கிண்ணத்தை தட்டி பாலை கொட்டிவிடுவதும் என ஏகபட்ட சேட்டைகளை செய்து அவரிடம் அடிவாங்கவும் செய்தது.

ஆனால் அடிவாங்கிய பின்னும், அடிப்பவர் கீழே சிந்திய பாலை துடைக்காமல் பூனைக் குட்டியையே குடிக்க செய்வதும், திட்டியபடியே என்றாலும் உடன் இரண்டு கருவாடுகளை போடுவதுமாய் இருக்க அந்த தெருவில் இருந்த ஏனையோரும் அவ்வாறே செய்தனர்.

அடிவாங்கும் நேரம் மட்டும் அமைதியாய் இருக்கும் பூனைக்குட்டி மீண்டும் தன் சேட்டைகளை தொடர்வதால் சீதாவிற்கு மட்டுமின்றி அந்த தெருவில் உள்ள அணைவருக்கும் தங்கள் நேரங்கள் சுறுசுறுப்பாய் மாறி மனபாரங்களும் குறைய தொடங்கியது.

இப்படி நல்முறையில் 'க்ரியா'வின் ஐந்தாம் பிறப்பும் வெற்றிகரமாய் மற்றவர்களின் முகத்தில் புன்னகையை நிலைக்க செய்யும் விதத்தில் அமைந்தது.


- தொடரும்..

(இந்த கதையில் வரும் அனைத்து மனிதர்களும், கடவுள்களும், அவர்களின் செயல்களும், சூழல்களும், இடங்களும் எனது கற்பனையே அன்றி எந்த ஒரு தனி மனிதனையோ, மத நம்பிக்கைகளையோ, இறைவனையோ குறிக்காது. இதில் வரும் சம்பவங்கள் முழுக்கமுழுக்க எனது கற்பனை மட்டுமே எந்த ஒரு வரலாற்று செய்திகளுடனோ, புராணங்களுடனோ தொடர்புடையது அல்ல)
 
  • Love
Reactions: Kameswari

MK30

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
14
3
thanjavur
🤣🤣🤣 பூனைக்குட்டியோட சேட்டை👌
பூனைங்க இருந்த நிஜமா அவ்வளவு கலகலப்பா இருக்கும் வீடு😂