• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஜென்ம ஜென்மமாய் - 7

MK30

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
14
3
thanjavur
அத்தியாயம் 7 (ரசம்- பயம்)

முந்திய தினம் திருமணம் முடித்த பெண்களின் புது மஞ்சள் தாலி போல் பார்க்கவே அழகாய், ரசிக்க வைக்கும் பளபளப்புடன் அட்டகாசமாய் வெளிவந்தான் அதிகாலை நேர ஆதவன்.

அவன் வருகையை வரவேற்பது போல் சிலம்பங்களின் 'தட்தட்' என்ற ஓசை அந்த அதிகாலை வேலையில் உரத்து கேட்டது.

"கவனத்தை சிலம்பம் மேல மட்டும் வைங்க"

"முதல்ல தடுக்க பாருங்க அதுக்கு அப்றம் தான் தாக்கனும்"

"அவசரபடாதீங்க பொறுமை பொறுமை"

என கம்பீரமாய் உத்தரவுகள் இட்டபடி மைதானத்தில் நடையிட்ட பரமேஸ்வரரின் பார்வை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் தன் மாணவர்கள் ஒவ்வொருவர் மேலும் ஈட்டியாய் துளைத்து நின்றது.

ஒவ்வொருவரின் அசைவும், அவர்களின் அடுத்த செயலும் அவரின் கண்ணசைவில் இருந்தது. விடியற்காலை நான்கு மணிக்கு ஆரம்பித்த பயிற்சி ஆறு மணியளவில் முடிந்தது.

பயிற்சி முடிந்தும் மாணவர்கள் கிளம்பாமல் தங்களின் சிலம்பங்களை உரிய இடங்களில் வைத்துவிட்டு மைதானத்தில் காலை பரப்பி அமர்ந்தனர். அவர்களின் கண்கள் நொடிக்கொருமுறை மைதானத்தின் வாயிலை ஆவலுடன் பார்த்தபடி இருந்தது.

அந்நேரம் அவர்கள் எதிர்பார்த்த ஆள் எதிர்பார்த்த பொருளுடன் வர, "ஐயா" என மாணவர்கள் ஒன்றாய் தங்களின் சிலம்ப குருவை அழைத்தனர்.

அவர்களின் அழைப்பில் இருந்த குதுகலத்தில் வந்திருப்பது யார் என புரிந்துக்கொண்ட பரமேஸ்வரர் சிரித்தபடி வாயிலுக்கு சென்று வந்திருந்த நபரிடமிருந்து அவர் கொண்டு வந்திருந்த கூடையை வாங்கி கொள்ள அடுத்த நிமிடம் அந்நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

சிரித்தபடி அதை பார்த்த பரமேஸ்வரர் கூடையுடன் மைதானத்திற்கு வர, "என்ன பசங்களா உங்க வாத்தியார் முகம் ஜொலிஜொலிக்கிது. வழக்கம் போல வர வேண்டியவங்க வந்து கொடுக்க வேண்டியதை கொடுத்தாச்சு போலயே" என கேட்டவாறு மைதானத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்தார் மீனாட்சி.

"ஆமாங்க வாத்தியாரம்மா! இப்போ தான் பாப்பா வந்து கருப்பட்டி தண்ணியை கொடுத்திட்டு போறாங்க. நாங்களும் அதை குடிக்க தான் இங்க உட்கார்ந்து இருக்கோம்" என்றனர் மாணவர்கள்.

பரமேஸ்வர் அனைவருக்கும் கூடையில் இருந்த சிறு தம்ளர்களில் வெதவெதவென்று இருந்த கருப்பட்டி தண்ணியை ஊற்றி கொடுத்தார்.

தன்னிடம் நீட்டபட்ட தம்ளரை வாங்கிய மீனாட்சி மற்றவர்களுக்கு கேட்காத குரலில், "இந்த பொண்ணு ஏங்க இவ்வளவு பயந்தவளா இருக்கா? இவளை நினைச்சாலே எனக்கு பதைபதைக்குது" என்றார்.

மனைவியின் குரலில் நிஜமான கவலை தெரிய பரமேஸ்வரர், "ஏன் மீனாட்சி இப்போ என்ன ஆகி போச்சு?" என கேட்டார்.

"என்ன ஆகிடுச்சா? ஏங்க நீங்க பார்த்தீங்க தான வழக்கம்போல இன்னிக்கும் அவ மைதானத்தோட வாசல்லகூட காலை வைக்கலை . வாசல்லயே நின்னு கொடுத்துட்டு ஓடிட்டா"

"அதுக்கு என்ன மீனாட்சி? உனக்கு தான் தெரியுமே புள்ளைக்கு சிலம்பம்னா பயம்னு. ஆனா என்ன பண்றது எனக்கு இதுதான் எல்லாமே" பெருமூச்செய்தினார் பரேமேஸ்வரர்.

"இது என்ன அவளுக்கு பயம்னா அவளோட. நீங்க அவ பொறக்குறதுக்கு முன்னாடில இருந்தே சிலம்பம் ஆடுறவர் தானே. அவ பயப்புடுறானு தான் நீங்க வீட்ல மத்தவங்களுக்கு சொல்லி கொடுத்துட்டு இருந்தவர் இந்த நாலு வருஷமா இந்த மைதானத்தை வாங்கி இங்க சொல்லி கொடுக்கிறீங்க. ஆனா ஒன்னுங்க உங்க பொண்ணுக்கு சிலம்பம் மட்டுமா பயம் பார்க்குற எல்லாமே பயம் தான்" என படபடத்தார்.

"மீனாட்சி எதுக்கு இத்தனை படபடக்குற? காலையில் இங்க என் கூட வந்து உனக்கு மனசுக்கு அமைதி வேணும்னு தான தியானம் பன்ற அப்பவும் பாரு எத்தனை அமைதி இல்லாம இருக்க?"

"பின்ன என்னங்க பண்றது பயந்தாகோலி பொண்ணை பெத்து வச்சிருக்கேனே எந்நேரமும் எதை கண்டு பயப்படுவானுல நான் கண்ல விளக்கெண்ணையை ஊத்தி பார்க்க வேண்டியதா இருக்கு"

"அடடா.. என்னம்மா நீ புள்ளைய குத்தம் சொல்லிட்டே இருக்க. அவ பொறந்ததுல இருந்தே பயந்த சுபாவமா இருந்துட்டா அதுல அவ தப்பு என்ன இருக்கு அவளை பார்த்துக்க தான் நாம இருக்கோமே விடு. இப்போ வா கிளம்புவோம் பசங்களும் ஒவ்வொருத்தரா கிளம்புறாங்க பாரு" என பரமேஸ்வரர் மனைவியை அப்போதைக்கு சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

வீட்டிற்கு சென்றவர்களை வாயிலில் இருந்த அழகான பெரிய கோலமே வரவேற்றது. பார்க்கவே அத்தனை அழகாய் கண்ணை பறிப்பது போல் வாயிலை அடைத்து போடப்பட்டிருந்த கோலத்தை இருநொடிகள் ரசித்தவர்கள் வீட்டை சுற்றி பின்பக்கமாய் செல்ல அங்கு தங்களின் சுகந்தம் பரப்பி இருந்தது அவர்கள் வீட்டு தோட்டத்து மலர்கள்.

அடுத்து சில மணிநேரங்கள் அவர்களின் நேரம் அங்கு தோட்டத்தை சுத்தம் செய்வது, தோட்டத்தின் செடிகளில் உள்ள பூக்களை பறிப்பது என சென்றது. பின் வேலை முடிய
பின்புறம் இருந்த குளியலறையில் குளித்து வீட்டினுள் நுழைந்தவர்களை சமையலறையில் இருந்து வந்த உணவின் மணம் வரவேற்றது.

"ப்பா.. ம்மா! வாங்க வாங்க வாசனையே ஆளை தூக்குதுல நானும் அதான் வந்தவுடனே முதல்ல சாப்பிட வந்துட்டேன்" ஆர்பாட்டமாய் கத்தி பேசிய சுந்தரியின் தலை கோதிய பரமேஸ்வரர்,

"என்னடா பரதம் பயிற்சி எல்லாம் எப்படி போகுது?" என விசாரித்தார்.

"ஓ நல்லா போகுது ப்பா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அப்பா! பரதம் நல்லா கத்துக்கிட்டா நீங்க எனக்கு சிலம்பம் கத்து கொடுப்பீங்கனு வாக்கு கொடுத்திருக்கீங்க மறக்கல தானே. நான் தினம் பயிற்சில அதை தான் நினைச்சிப்பேன்" என்றாள்.

அவளின் தலையில் கொட்டிய மீனாட்சி, "முதல்ல செய்யுற வேலையில முழு கவனம் வச்சு செய். அப்றம் அடுத்ததுக்கு போகலாம். ஆமா நீ போற அந்த பரத வகுப்பை சாயந்திரம் போக கூடாதா அக்கா தனியா எல்லா வேலையும் பார்க்குறாள"

"ம்மா... அக்காவையும் தான் நான் வகுப்புக்கு கூப்பிட்டேன் அவ தான் வரமாட்டேன் அங்க எல்லோரையும் பார்க்க பயமா இருக்கும்னு சொன்னா" என தோளை குழுக்கிய சுந்தரியை கண்டு கணவனை பார்த்து, "கேட்டீர்களா?" என்பதாய் கண்களை உருட்டினார் மீனாட்சி.

மனைவி தன்புறம் திரும்பியதில் மீண்டும் ஒரு சமாதான படலத்திற்கு இப்பொழுது வாய்ப்பில்லை என புரிந்து பரமேஸ்வரர் பேச்சை மாற்றுவதற்காய், "அம்மாடி தேவி! தங்கை பசியோட உட்கார்ந்திருக்கா பாருமா சாப்பிட கொண்டு வா மா" என்று சமையலறையை பார்த்து குரல் கொடுத்தார்.

தந்தையின் குரலில் வெளியில் வந்தவள் மகாலட்சுமியின் அம்சத்துடன் நீண்ட கருகூந்தல் அசைந்தாட அழகாய் அன்ன நடையிட்டு உணவை கொண்டு வந்தாள்.

பரமேஸ்வரரும், மீனாட்சியும் பிறகு உண்பதாய் சொல்ல முதல் ஆளாய் உண்ட சுந்தரி, "அக்கா! வழக்கம் போல இன்னிக்கும் உன்னோட சமையல் அசத்தல் போ" என பாராட்டினாள்.

"ஆமாடா தேவி! இன்னிக்கு வாசல்ல போட்ட கோலம் கூட ரொம்ப அழகா இருந்துச்சு" என பாராட்டினார் பரமேஸ்வரர்.

"ஆமா நீங்க இரண்டு பேரும் அவ செய்யுறதுக்கு இப்படி பாராட்டிட்டே இருங்க அவளும் இதுவே நமக்கு போதும்னு வீட்லயே அடைஞ்சி கிடக்கட்டும்" என அதட்டினார்.

அதில் பரமேஸ்வரரும், சுந்தரியும் அவரை முறைக்க தேவி கண்களில் கட்டிய கண்ணீர் குளத்துடன் தாயை பார்த்தாள். அவள் கண்களில் தாய் மேலும் திட்ட போகிறாரோ என்ற பயம் அப்பட்டமாய் தெரிந்தது.

"பாருங்க பாருங்க எப்படி பயந்துபோய் பார்க்குறானு. நான் அப்படி என்ன பண்ணிடபோறேன் அவளை? எதுக்கு இவ இவ்வளவு பயபுடுறானு தெரியலை. நானும் என்னஎன்னவோ முயற்சி பண்ணிட்டேன் எத்தனையோ கோவில் குளம்னு ஏறி இறங்கிட்டேன். இவ பயம் மட்டும் போன மாதிரி இல்ல" என கோவமாய் ஆரம்பித்து புலம்பலாய் முடித்தார் மீனாட்சி.

அம்மாவின புலம்பல் கஷ்டமாய் இருந்ததால் , "ம்மா! நான் நீ சொன்ன மாதிரி தைரியமா தானே காலையில தனியா இங்க இருந்து மைதானம் வரை கருப்பட்டி தண்ணி கொண்டு வந்து தரேன்"

மூக்கு விடைக்க ரோஷமாய் சொல்லியவளின் செயல் சிறுபிள்ளை போல் இருக்க சுந்தரியும், பரமேஸ்வரரும் நகைத்தனர்.

தேவி அவர்களை திரும்பி பார்க்க, "ஆமா டி... இங்க இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவுல இருக்கு பாரு மைதானம். இந்தா இங்க இருந்து அஞ்சு நிமிஷம் நடந்தா வர போகுது. அந்த அஞ்சு நிமிஷ நடைக்கே துணைக்கு வீரனை வேற கூட்டிட்டு போற அதுவும் வீரனுக்கும், உனக்குமே பத்தடி இடைவெளி இருக்கும். இதுல பேச்சை பாரு" என நொடித்த மீனாட்சியை மூவரும் மாற்றிமாற்றி சமாதானம் செய்தனர்.

சிலம்ப வாத்தியார் பரமேஸ்வரர்- மீனாட்சி தம்பதியின் மூத்த மகள் தான் தேவி. வயது பதினெட்டு கலைமகள் இருப்பிடம் அவள்தான் என்று சொல்லும் அளவிற்கு படிப்பிலும், கைவினை வேலைகளிலும் சிறந்து விளங்குபவளுக்கு இருக்கும் பெரும் குறை பயம். அவளுக்கு தன் தாய், தந்தை, தங்கை தவிர யாரை கண்டாலும் எதை கண்டாலும் பயம் தான்.

தந்தை சிலம்ப வாத்தியார், ஆனால் மகளுக்கு அந்த சிலம்பத்தை பார்த்து கூட பயம் தான். ஒவ்வொரு நாள் காலையிலும் அவர் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வேளை துயில் கலைந்தாலும் போர்வையை இழுத்து போர்த்தி உடலை இறுக்கி படுத்திருப்பாள் தேவி.

அதனாலே மகளுக்காய் தன் பயிற்சி கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றி விட்டார். தினம் காலையில் எழுந்து அவர் அங்கு சென்றுவிட கணவர் எழும்பொழுதே மீனாட்சிக்கும் முழிப்பு வந்துவிடுவதால் அவரும் கணவருடன் பயிற்சி நடைபெறும் மைதானத்திற்கு சென்றுவிடுவார்.

இவர்கள் ஒருபக்கம் பயிற்சி செய்ய மீனாட்சி மைதானத்தின் மற்றொரு ஓரத்தில் தியானம் செய்வார். அப்பொழுதெல்லாம் இவர்கள் இருவருக்கும் காலை நேர கருப்பட்டி தண்ணியை கொண்டு செல்வது சின்ன மகள் சுந்ததரியின் வேலை தான்.

அப்படி சென்றவளுக்கு சிலம்ப பயிற்சியை கண்டு சிலம்பம் கற்க ஆசை வர தந்தையிடம் கேட்டாள். அதற்கு ஒரு மாதம் முன் தான் பரதம் கற்க வேண்டும் என ஆசையாய் உள்ளது என சேர்ந்திருந்தாள்.

மகள் மனம் அலைபாயும் வயதென்பதால் அவள் விருப்பங்கள் மாறுகிறதோ என பயந்த மீனாட்சி கணவனிடம் சொல்ல, பரமேஸ்வர் மகளிடம் பரதம் முடிந்தபின் சிலம்பம் என பேசி வைத்துள்ளார்.

அதனால் அவள் பரதம் வகுப்பிற்கு சென்றுவிட கருப்பட்டி தண்ணீர் எடுத்து செல்லும் பணி மீனாட்சியின் முடிவால் தேவியிடம் வந்தது. முதலில் வெளியில் தனியாய் வர பயந்தவள் பின் வீரனின் துணையுடன் சென்று வந்தாள்.

"அச்சம் என்றால் என்னவென்று அறியாத அரங்கனின் மகளா இது? எம்மால் நம்ப இயலவில்லை .. நாராயணா நாராயணா" வீணையுடன் நின்றிருந்த நாரதமுனிவர் சந்தேகமாய் வினவினார்.

அதற்கு பதிலாய், "நாரதரே! ஒருமுறை தங்களின் திருமுகத்தை என்முன் காட்டுங்களேன்" என சொன்ன பெருமாளின் புறம் என்ன என்று புரியாமல் திரும்பி தன் முகத்தை காட்டினார் நாரதர்.

அவரை நன்றாய் பார்த்த நாராயணர், "ஆகட்டும் ஆகட்டும்" என தலையசைத்தார்.

"என்ன நேர்ந்தது நாராயணரே! தாங்கள் ஏன் என் முகத்தை பார்க்க வேண்டும் என்றீர்கள்" என நாரதர் வினா தொடுக்க,

"இல்லை நாரத மாமுனியே! இனி தாங்கள் எப்பொழுது வைகுண்டம் வருவீர்களோ அப்பொழுது இப்போதைய தோற்றத்துடனே இருப்பீர்களா என்ற சந்தேகம் என்னுள் திடீரென தோன்றியது. அதுதான் இப்பொழுதே தங்களை நன்றாய் பார்த்துக்கொள்கிறேன்"

குறும்புடன் ஒலித்த குரலில் நாரதர் என்னவென்பதாய் நாராயணரை பார்க்க அவர் தன்னருகே இருந்த தேவி லட்சுமியை கண்களால் சுட்டி காமித்தார்.

அப்பொழுது தான் தேவி லட்சுமியின் முகத்தை கண்ட நாரதர் அவர் தன்னை பார்வையால் பஸ்மமாக்கி கொண்டிருந்ததில் கண்முழி பிதுங்க, "தாயே! நான் என்ன கூற வந்தேன் என்றால் தங்களின் புத்திரி க்ரியா தங்களை போலவே அழகை எல்லாம் தன்னுள் கட்டி கண்டுள்ளார்கள். அதனால் சற்று வீரமாகவும் இருந்திருக்கலாமே என்று?.." என்றவரின் வார்த்தைகள் தேவி லட்சுமியின் தீ பார்வையில் பாதியில் நின்றது.

"என் புத்திரி என்பதால் அவள் எப்படி இருக்கவேண்டும் என்று நாம் முடிவு செய்ய இயலாது நாரதரே! அவள் இதுவரை எடுத்து ஐந்து பிறவிகளுமே பிறருக்கு நன்மை விளைவிக்க கூடியதாய் தான் இருந்துள்ளது. அப்படி இருக்க அவளின் இந்த பிறவியும் நிச்சயம் ஒருவருக்கேனும் நன்மை விளைவிக்கும். அதனால் அவளின் பயணத்தை பற்றி தாம் கவலை கொள்ள வேண்டாம்" என்றார்.

"ஆனால் தேவி! தங்கள் புத்திரிகளின் இந்த ஜென்ம ஜென்மமான பயணங்களே அவர்களின் பலவீனங்களை தோற்கடிக்க தானே. அப்படி இருக்கையில் க்ரியாவின் இந்த ஜென்மத்தை மட்டும் பார்த்தோமானால் பயம் அவர்களின் பலவீனமாய் மாறி விடுகிறதே. அது அவர்களின் இந்த பிறவி வெற்றி பெற தடையாய் அமைய வாய்ப்புள்ளதே" என்றார்.

அவர் சொல்வதும் சரியாய் தோன்ற தேவி லட்சுமி யோசனையில் ஆழ்ந்தார். அதை கண்ட நாராயணனர், "நாரத முனிவரே? தாம் வந்த வேலை வழக்கம் போல் சிறப்பாய் முடிவுற்றது போலும்" என்று அவரை ஆட்சியபேனையாய் பார்த்தார்.

"நாராயணா நாராயணா! என்ன பிரபு தாங்களே இவ்வாறு சொல்லலாமா? நான் எனக்கு தோன்றிய சந்தேகத்தை மட்டும் தான் கேட்டேன் இதில் வேறொன்றும் வினையில்லை" என பரிதாபமாய் சொல்லிய நாரதமுனியை கண்டு நாராயணர், "தங்களை நான் அறிவேன்" என்பதாய் பார்க்க,

"அப்பொழுது.. நான் விடைபெறுகிறேன பிரபு.. சென்று வருகிறேன் தேவி" என அவசரஅவசரமாய் இருவரிடமும் விடை பெற்று கிளம்பினார் நாரதமுனிவர்.

அவர் சென்ற பின்பும் லட்சுமியின் மௌனம் தொடர, "லட்சுமி! என்ன ஆலோசனை செய்கிறாய்?" என வினவனார் நாராயணர்.

"நாராயணரே! நாரதர் சொன்னது போல் க்ரியாவின் பயம் அவளின் பலவீனமாய் இந்த பிறவியை கடக்க தடையாகும் எனில் என்ன செய்வது?" என கவலை கொண்டார்.

"லட்சுமி! க்ரியாவும் இச்சாவும் நம் மகள்கள், எளிதில் தோல்வியை ஒப்பு கொள்பவர்கள் இல்லை. கடந்த ஐந்து பிறவிகள் போல் இந்த பிறவியும் வெற்றிகரமாய் தான் முடியும் கவலை கொள்ளாதே" என அழுத்தி சொன்னார் நாராயணர்.

ஆனார் தேவி லட்சிமியின் அன்னை மனம் பயந்தது. அதனால், "இல்லை சுவாமி! இம்முறை நானே செல்ல போகிறேன் நான் சென்று க்ரியாவின் பயத்தை போக்க முயல்கிறேன்" என்ற மகாலட்சுமி அடுத்த நொடி அங்கிருந்து மறைந்தார்.

பூலோகத்தில் மதிய உணவு வேலைகளை முடித்த தேவி தங்களின் வீட்டின் முன் இருந்த இடத்தில் ஆதவனின் கதிர்கள் தன் மேல் படும் படி அமர்ந்திருந்தாள். அவளுக்கு சற்று தள்ளி தரையில் முன்னங்கால்களை முன்னால் போட்டு மண்ணில் படுத்துக் கொண்டிருந்தது வீரன்.

வீரன் நான்குகால் பிராணி, இரண்டு வருடம் முன்பு தங்கள் வீட்டின் வாயிலில் அடிபட்டு கிடந்த நாயை முதலில் கண்டது தேவி தான். ஆனால் அதன் அருகே செல்ல பயமாய் இருந்ததில் தாயை அழைத்துவந்து அதற்கு உதவ கூறினாள்.

மீனாட்சியும் அதன் காயத்திற்கு மருந்திட்டு சரிசெய்ய அந்த நாய் சாப்பிட உணவை கொண்டு வந்து கொடுத்தது தேவி தான். அந்த நாயின் காயம் சரியாகும் வரை சற்று தள்ளி நின்று நொடிக்கொரு முறை அதை பார்த்து நிற்பாள்.

அதன் பின் அந்த நாய் எங்கும் செல்லாமல் இவர்கள் வீட்டிலே இருந்துவிட்டது. அதிலும் தேவி இருக்கும் இடம் தான் அதன் இருப்பிடம் அதற்கு அடிபட்ட தினங்களில் இவள் எத்தனைக்கு எத்தனை அதை பார்த்தாளோ இப்பொழுது அது அவளை பார்த்தபடி அவள் பின் சுத்தும்.

முதலில் வழக்கம் போல் பயந்து நடுங்கிய தேவி சிறிது நாட்களில் அந்த நாயின் இருப்பிற்கு பழகிவிட்டாள். அதற்கு "வீரன்" என தந்தையிடம் சொல்லி பெயர் வைத்தது கூட அவள் தான்.

அப்பொழுது வீட்டில் அனைவரும் அவளை ஆச்சரியமாய் பார்க்க, "ப்பா! நான் பயப்பட கூடாதுனு நினைச்சாலும் முதல்ல அந்த பயம் தான் வருது அதான் இதுவாச்சு வீரமா இருக்கட்டும்னு வீரன்-னு பெயர் சொன்னேன்" என்றாள்.

என்னதான் வீரனுக்கு தேவி பழகிவிட்டாலும் இன்றளவும் அதன் அருகே செல்லமாட்டாள், இதுவரை அவள் அதை தொட்டது கூட இல்லை. அது அந்த வீரனுக்கும் எப்படி தான் புரியுமோ அதுவும் அவளை நெருங்க முற்பட்டதில்லை இதோ இப்பொழுதும் இவளை விட்டு சற்று தள்ளி தான் படுத்திருந்தது.

தந்தையும், அன்னையும் அறிந்தவர் வீட்டு விசேஷத்திற்காய் காலையிலே சென்றிருக்க, சுந்தரி பள்ளிக்கு சென்றிருந்ததால் இப்பொழுது வீட்டில் இருந்தது தேவியும், வீரனும் தான்.

மதிய வெயில் மந்தமாய் தேகத்தை வருட வீட்டின் முன் இருந்த மண் திட்டில் அதை அனுபவித்து அமர்ந்தாள், அவளுடன் வீரனும்.

சிறிது நேரத்தில் அவளை சுற்றி தாமரை மலர்களின் மணம் கமிழ பயம்கொண்ட தேவி சுற்றும் முற்றும் பார்த்து " வீரா" என அழைத்தாள். அவளின் ஒரு குரலில் துள்ளிகுதித்து எழுந்து நின்ற நாய் அவளை கண்டு "பயப்படாதே" என்பதாய் "கொல்" என குரைத்தது.

அந்நேரம் அவர்கள் வீட்டு வாயிலில், "காப்பாத்துங்க யாராவது காப்பாத்துங்க" என அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்தான் ஒருவன். பின்னாலட எவரோ துறத்துவது போல் தலைதெறிக்க ஓடி வந்தவன் வாயில் கதவை திறந்து வீட்டினுள் வர அவன் கோலத்தை கண்டு தேவிக்கு உடல் நடுங்கிது.

அந்த மனிதன் அணிந்திருந்த உடை கிழிந்திருக்க தலையில் இருந்து ரத்தம் சிந்தி ஆடை நனைந்திருக்க தலை முடி கலைந்து ஓடி வந்திருந்தான்.

மூச்சுவாங்க அவள் அருகே வந்தவன், "அம்..மாடி என்..னை கா..ப் பாத து..மா... என்..னை துறத்..திட்டு வராங்கமா" என கதறியபடி அவள் கால்களில் விழசெல்ல பயந்த தேவி, "வீரா வீரா" என கத்தியபடி பின்னால் நகர்ந்தாள்.

அவள் குரல் கொடுக்கும் முன்பே அவளுக்கு ஆதரவாய் நிற்கும் வீரன் இம்முறை அமைதியாய் அந்த மனிதரின் அருகே நின்றருந்தது. அந்த மனிதர் இவர் அழுகையை கண்டு, "பயப்படாதமா பயப்படாத.. சரிசரி நான் இங்க இருந்து போயிடுறேன். எனக்கு கொஞ்சம் தண்ணி மட்டும் கொடுமா" என நா வரண்டு போனதில் குரல் மெதுவாய் வந்தது.

அவர் பேசுவது அனைத்தும் காதில் விழுந்தாலும் அவளிடம் பயமே பிராதானமாய் இருந்தது. அழுதபடி தேம்பியவள் "வீரா வீரா" என்று மட்டும் உச்சரித்துக் கொண்டிருந்தாள்.

அவள் முகத்தை கண்ட அந்த மனிதர் அவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்து தனக்காய் எதுவும் செய்யபோவதில்லை என புரிந்து திரும்பி வீரனை பார்த்து பின் வாயிலை பார்த்தார்.

இப்பொழுது அந்த வாயில் வழியே நான்கைந்து ஆண்கள் கைகளில் கட்டையுடன் "ஏய் நீ இங்க தான் இருக்கியா?" என்று ஆவேசமாய் ஓடிவந்தனர்.

அப்பொழுதாவது அவள் ஏதேனும் உதவுவாளா? என அந்த மனிதர் தேவியை பார்க்க அவள் அவர்கள் "ஏய்" என அழைத்து ஓடி வந்தபொழுதே பயத்தில் மயங்கி சரிந்திருந்தாள்.

அதை கண்டு வீரன் "லொல்" "லொல்" என கத்தியவாறு தேவியை சுற்றி வந்து அந்த மனிதரை பாவமாய் பார்த்து நின்றது. அந்த மனிதர் உடனே அங்கிருந்து மறைய இங்கு மேலோகத்தில் நாராயணர் அருகே மீண்டும் தோன்றினார் மகாலட்சுமி.

"தாம் சென்ற காரியம் என்ன ஆயிற்று தேவி" என வினவிய நாராயணரை கவலையேறிய கண்களுடன் பார்த்த தேவி லட்சுமி,

"நாராயணரே! என் எண்ணம் ஜெயம் கொள்ளவில்லை. க்ரியாவின் பிறவிகள் மற்றவருக்கு உதவும் நோக்கத்தில் தானே. அதனால் ஒருவருக்கு உதவி தேவைபட்டால் நிச்சயம் தன் பயம் துறந்து அவள் தன் குணத்தை வெளிபடுத்துவாள் என்று எண்ணி தான் சென்றேன் ஆனால் என் எண்ணம் பலிக்கவில்லை. இனி என் செய்வது நாராயணரே?"

வருத்தத்துடன் கூறிய தேவி லட்சுமிக்கு க்ரியாவின் இந்த பிறவி எப்படி வெற்றிகரமாய் முடியும் என்று மனதினுள் பயம் தோன்றியது.

- தொடரும்.

தேவி லட்சுமியின் கவலைக்கான விடை அடுத்த அத்தியாயத்தில் ...
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஒவ்வொரு பதிவும் அருமையா இருக்கு 👌❤️
 
  • Love
Reactions: MK30