• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஜென்ம ஜென்மமாய் - 8

MK30

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
14
3
thanjavur
அத்தியாயம் 8 (ரசம் - வீரம்)

மகாலட்சுமி க்ரியாவின் மனித பிறப்பில் அவள் கொண்ட பலவீனமான அச்சத்தை எண்ணி கவலை கொண்டு நாராயணரிடம் புலம்பினார்.

"கவலை கொள்ளாதே லட்சுமி! அச்சம் என்பது க்ரியாவின் சுபாவங்களில் ஒன்று அவ்வளவு தான் அவள் உதவாமல் மயங்கியது தான் தங்களை கவலை கொள்ள செய்கிறதென்றால் நான் சொல்வதை கேள். திடிரென்று யாரோ ஒருவர் குருதியுடன் தம்முன் வந்து உதவி கேட்கையில் அவள் மயங்காமல் இருந்ததே உன் வெற்றி தானே"

"என்ன கூறுகிறீர்கள் நாராயணரே?"

"ஆம் லட்சுமி! நீ உதவி என ஓடி சென்ற நொடி பயந்தாலும் அங்கிருந்து அவள் ஓடி செல்ல முயலவில்லை. நான் மூவுலகையும் அறிவேன் என அறிவாய் அல்லவா.. அதன்படி அந்நேரத்தில் பயத்துடனே அவள் வீராவை அழைத்தது கூட அந்த மனிதருக்கு ஏதேனும் உதவ முடியுமா என்ற எண்ணத்தில் தான் என்பதை நான் உணர்ந்தேன் அதனால் தான் கூறுகிறேன்" என்றார்.

"அப்படி என்றால் அவளுள்ளும் வீரம் உள்ளது என்கிறீர்களா?" வினா தொடுத்த லட்சுமி தேவியாரிடம் அத்தனை ஆவல்.

"ஆம் லட்சுமி! நம் மகள் என்று இல்லை பூலோகத்தின் நம் படைப்புகள் அத்தனையிடமும் நவரசங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அவரவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்தந்த குணங்கள் வெளிவருகிறது. க்ரியாவின் மனத பிறவியான தேவியின் வாழ்வில் இதுவரை வீரம் என்னும் ரசம் வெளிபடும் சூழல் ஏற்படவில்லை. அதனால் அது வெளியில் வரவில்லை அவ்வளவு தான் நீ கவலை கொள்ளாதே" என தேற்றினார்.

அவர் சொல்வது சரி தான் என்பது போல் தந்தையின் சிலம்ப பயிற்சி மைதானத்தின் வாயில்வரை மட்டும் செல்லும் வழக்கம் கொண்ட தேவி இப்பொழுதெல்லாம் மைதானத்தின் உள்ளே செல்கிறாள்.

அன்று அன்னை தன்னை நினைத்து கவலை கொள்வதை எண்ணி மனம் கலங்கியிருந்த தேவி அன்னைக்காக தான் வர ஆரம்பித்தாள். பயிற்சி நேரம் முடிந்தபின் வருபவள் பரமேஸ்வரர் இப்பொழுது பயிற்சி நேரங்களை மூன்று மணி நேரம் என மாற்றியதால் இடைவேளையில் வந்து போக தொடங்கினாள்.

இப்படி வரும் வேலை சில நேரம் அவர்கள் பயிற்சி செய்யும் சிலம்பத்தின் ஒலிகள் கேட்டு பயத்தில் உடல் நடுங்க தாயை ஒட்டி அமர்வாள். மீனாட்சியும் தன் கூட்டில் இருந்து வெளிவரும் மகளை முழுதாய் வெளிகொண்டு வர அவளை அணைவாய் அணைத்து கொள்வார்.

அவரின் அணைப்பில் அச்சம் களைபவள் அன்றொருநாள் தன்னிடம் ஒருவர் உதவிகேட்டு தன்னால் உதவமுடியாமல் போனதின் பலனாய் தொடர்ந்து வந்த நாட்களில் தன் அச்சத்தை துறந்து பயிற்சியை கவனிக்க தொடங்கினாள்.

ஒருநாள், "ஏங்க நீங்க கவனிச்சீங்களா? இப்போலாம் தேவி அவளாவே உங்களோட சிலம்ப பயிற்சியை கவனிக்கிறா. இப்பவும் அவ உடல் நடுங்குது தான் ஆனா பரவாயில்ல தைரியமா உட்கார்ந்து கவனிக்கிறாளே" என பரமேஸ்வரரிடம் மகிழ்சியாய் சொல்லும் அன்னையின் குரல் காதில் விழ புன்னகைத்து கொண்டாள் தேவி.

அந்நேரம் "அக்கா அக்கா" என்று கத்தியவாறு சுந்தரி வர அவளின் கவனம் தங்கியின் புறம் திரும்பியது. சின்ன மகளின் குரலை கேட்ட மீனாட்சி பரமேஸ்வரரிடம்,

"ஏங்க நீங்க ஒன்னு பண்ணுங்க.. நாளைல இருந்து உங்க வகுப்பு பசங்க பயிற்சி முடிஞ்சு போனப்றம் நம்ப சின்னகுட்டிக்கு வீட்லயே சொல்லி குடுங்க. அவளுக்கு பள்ளிகூடம் திறக்க நாளாகும்" என்றார்.

"ஏன் மீனாட்சி! நீதான அவ பரதம் முழுசா முடிக்கட்டும் கவனம் சிதற கூடாதுனு சொன்ன" என பரமேஸ்வரர் புரியாமல் கேட்க,

"ஆமா நான் தான் சொன்னேன் இப்பவும் நான் தான சொல்றேன் சொல்றதை செய்ங்கங்க" என முறுக்கி கொண்டு போனார்.

அவரின் கட்டளைபடி மறுநாள் முதல் சுந்தரிக்கு வீட்டின் முன்னால் சிலம்ப பயிற்சி ஆரம்பமாக அந்நேரத்தில் பூக்களை கட்டுமாறு திண்ணையில் தேவியை அமர வைத்தார் மீனாட்சி. அவள் அமரும் இடத்தில் இருந்து பார்த்தால் வீட்டு வாயிலில் தந்தையும், தங்கையும் செய்யும் பயிற்சி நன்கு தெரியும்.

பொதுவாகவே தேவிக்கு கண்கள் பார்க்கும் செயலை கைகள் செய்யும் வரம் பெற்றவள். அதை அறிந்து தான் மீனாட்சி இந்த திட்டம் தீட்டியது. பெண்ணோ ஆணோ வீரம் அவசியம் என்ற எண்ணம் கொண்டவர் தன் மகளை அச்சத்தில் உழல விடுவாரா? இதோ அழகாய் தேவியே அறியாமல் அவளுக்குள் சிலம்பத்தின் வித்தைகளை ஆழமாய் இறங்க வழி வகுத்து கொடுத்துவிட்டார்.

நாட்கள் மாதங்களாய் கடக்க சுந்தரி பயிற்சியில் கடைசி நிலையில் இருக்க, தேவியும் தந்தை, தங்கைக்கு கற்று கொடுத்த அனைத்தையும் கவனித்து தன் அடிமனதினுள் சேமித்திருந்தாள்.
ஆனால் இன்னுமே வெளியில் செல்ல அதிகம் தயக்கம் காட்ட அவளை வீட்டில் விட்டு சுந்தரியை மட்டும் தன்னுடன் அழைத்து கொண்டு வெளியில் சென்றிருந்தார் மீனாட்சி.

அந்நேரம், "பரமேஸா! டேய் பரமேஸா! வெளியே வாடா" என ஒரு குரல் ஆக்ரோஷமாய் ஒலிக்க பரமேஸ்வரர் 'யார் அது?' என்ற யோசனையில் புருவங்களின் சுருக்கத்துடன் வாயிலுக்கு வந்தார்.

அன்னையும், தங்கையும் வெளியில் சென்றிருக்க 'யாரது தந்தையை இத்தனை சத்தமாய் மரியாதையின்றி விளிப்பது?' என்ற கேள்வியுடன் பின்பக்கம் இருந்து தேவி முன்னால் வர அவளுடன் வீரனும் வந்தான்.

"என்ன பரமேஸூ! நான் தான் போனமுறையே என் மருமகனுக்கு சிலம்பம் கத்துகுடுக்காதனு உன்கிட்ட சொன்னேன்ல எதுக்கு அதையும் மீறி அவனுக்கு கத்துதர" என உறுமினார் அந்த ஊரின் தலைவர் சாமி.

"இங்க பாருங்க சாமி! நீங்க என்ன தான் இந்த ஊரை கட்டுபாட்டுல வச்சிருந்தாலும் என்னை பொறுத்தவரை ராஜமுத்து தான் பெரியவரோட வாரிசு. அவருக்கு தான் இந்த ஊரை ஆளுறதுக்கான தகுதி இருக்கு. நீங்க இத்தனை நாள் சொத்தை அபகரிக்க அவரை ஒன்னும்தெரியாம அடிமையா வச்சிருந்த மாதிரி இனி வச்சிக்க முடியாது. பெரியவரோட வாரிசுக்கு சிலம்பம் மட்டுமில்ல அத்தனை வீர கலைகளையும் நானட கத்துகொடுக்க தான் போறேன்" என்றார் தீர்க்கமாய்.

"யோவ்! இதெல்லாம் பேச நீ யாருயா? தேவையில்லாத விஷயங்கள்ல தலையிட்டு என்கிட்ட வாங்கிகட்டிகாத. ராஜமுத்து என் அக்கா பையன் அவனுக்கு சரியான விவரம் இல்ல இனியும் விவரம் வர நான் விடவும் மாட்டேன். அதனால உங்களுக்கெல்லாம் எப்பவும் நான்தான் முதலாளி. ஒழுங்கா என் பேச்சை கேட்டு நடக்க பாரு" என கர்ஜித்தவரை பார்த்து பயமற்று சிரித்தார் பரமேஸ்வரர்.

அதில் சாமி கோபத்துடன் வரும்பொழுது கொண்டு வந்திருந்த கட்டையால் பரமேஸ்வரரை தாக்க அவர் லாவகமாய் விலகினார். அதில் மேலும் கோபம் கொண்ட சாமி எதிர்பாரா நேரத்தில் தலையில் ஓங்கி அடிக்க தலைசுற்றி தடுமாறிய பரமேஸ்வரர் கீழே விழுந்தார்.

நடந்த நிகழ்வுகளை கண்முன் பார்த்துகொண்டிருந்த தேவிக்கு முதலில் அந்த மனிதரின் கோபத்தில் அவளின் சுபாவமான பயமே முன்னால் வந்ததால் நடுங்கியபடி ஓரமாய் நின்றிருந்தாள். ஆனால் அவள் அருகே இருந்த வீரன் சாமி பரமேஸ்வரரை தாக்க தொடங்கியவுடனே அருகே சென்று கத்தியவாறு சாமியை தாக்க முற்பட்டு கொண்டிருந்தது.

நடுங்கியபடி நடப்பதை பார்த்திருந்த தேவி தந்தை மயக்கம் போட்டதில் தன் பயம் பின்னால் சென்று தந்தை பாசம் முன்னால் வர நகர மறுத்த கால்களை நகர்த்தி "ப்பா!" என கத்தியபடி தந்தையிடம் ஓடினாள்.

அதுவரை "ச்சூ ச்சூ" என நாயை கட்டையால் தடுத்துக் கொண்டிருந்த அந்த மனிதர் தேவியை பார்த்துவிட்டு, "ஓ ஓ.. நீதான் வாத்தி மவளா! நீ தான் இந்த வீட்லயே ரொம்ப நல்ல பொண்ணுனு கேள்விபட்டிருக்கேன்" என 'ஈஈ' என இளித்தவன் தொடர்ந்து,

"இங்க பாரு பொண்ணே! உங்க அப்பன் தேவையில்லாம என் வழில வந்தான் அதான் கொஞ்சமா தட்டி ச்சே ச்சே கொஞ்சமா தள்ளி வச்சேன். இனி என் வழில வந்தான்" என நாக்கை மடக்கி மிரட்டியவன், "சொல்லி வை அவன் கிட்ட" என்றவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றான்.

அவன் போவதை கண்ட வீரன் தேவியை பார்க்க அவள் அவன் பேசியதை பொருட்டாய் கொள்ளாமல் தந்தையை மடி தாங்கியபடி "அப்பா அப்பா" என அழைத்து கொண்டிருந்தாள்.

அவள் அங்கிருந்து எழ போவதில்லை என புரிந்துகொண்ட வீரன் உடனே "லொல் லொல்" என குறைத்தவாறு சாமியின் மேல தாவ, "அஆ..ங்க ஆ" என கத்தியவன் சுதாரித்து தான் கொண்டு வந்திருந்த கட்டையால் வீரனை தாக்கினான். அதில் "வீல் வீல்" என வீரன் கத்த திடுக்கிட்டு திரும்பிய தேவி வீரனின் நிலை கண்டு தன் அழுகை நிறுத்தி அதிர்ந்தாள்.

அந்த ஆள் இன்னும், "த்து என்னையவே கடிக்க வரியா" என அதை அடித்து கொண்டிருக்க பிறந்ததில் இருந்து முதல்முறையாய் தன் உச்ச குரலில் "வீரா" என கத்தினாள் தேவி.

அந்நொடி அவளுக்கு எங்கிருந்து அத்தனை ஆவேசம் வந்ததோ வேகமாய் எழுந்தவள் அங்கு ஓரமாய் வைக்கபட்டிருந்த தந்தையின் சிலம்பத்தை கையில் எடுத்து சாமியை தாக்க தொடங்கினாள்.

இத்தனை நாட்களாய் தங்கை தந்தையிடம் பெற்ற பயிற்சிகளை மனதில் நிறுத்தியவள் அதில் கற்றிருந்த எதிர்தாக்குதல் முறையை பயன்படுத்தி எதிரில் இருந்தவனை சிலம்பம் கொண்டு சுழன்று சுழன்று அடித்தாள்.

"சாது மிரண்டால் காடு கொள்ளாதாம்" என்பதாய் அவள் தாக்குதல் அனைத்தும் அசுரதனமாய் இருக்க சாமியின் பிடி தளர்ந்தது.

அந்நேரம் சென்ற வேலை முடிந்து வீடு திரும்பிய மீனாட்சியும், சுந்தரியும் நடப்பதை கண்டு திகைத்து விட்டனர். உடல் முழுக்க ஆங்காங்கு ரத்தம் கட்டி, தலை மற்றும் வாயில் இருந்து ரத்தம் வழிய தரையில் உருண்டு கிடக்கும் சாமியும், அவனுக்கு எதிரில் காளி போல் கையில் சிலம்பத்துடன் ஆக்ரோஷமாய் நின்றிருந்த தேவியையும் கண்டவர்களின் நிலைய வார்த்தைகளால் சொல்ல முடியுமா?

அடுத்து அவர்கள் பார்வையில் வீரன் சிக்க ரத்தம் தொய்ய வலியில் முனங்கி கொண்டிருந்தவனை கண்டு சுந்தரி "வீரா" என அழைத்த ஓட அவள் பின்னே சென்ற மீனாட்சி வீட்டின் வாயிலில் மயங்கியிருந்த கணவரை கண்டு அவரிடம் விரைந்தார்.

சுந்தரியின் குரலில் தேவி தன் கையில் இருந்த சிலம்பத்தை கீழே போட்டவள் வீரனிடம் வந்தாள். இத்தனை நேரம் வீரத்துடன் சண்டையிட்ட பெண் இவளா என்னும் வண்ணம் முகம் கசங்க அழுதபடி தரையில் மண்டியிட்டவள் முதல்முறையாய் வீரனை தன் விரல்களால் தடவினாள்.

அவள் ஸ்பரிசம் உணர்ந்து அது "ம்ஹூம் ம்ஹூம்" என குரல் கொடுக்க கண்களில் வழியும் கண்ணீருடன் குருதி பெருக்கெடுக்கும் வீரனை சிறிதும் பயமின்றி தன் மடிமேல் தூக்கி அணைத்துக்கொண்டாள்.

சில நாட்களின் பிறகு:

" கவனம் சிலம்பத்துல மட்டும் தான் இருக்கனும்"

"கண் பார்க்கிறதை கை செய்றது மட்டுமில்ல மூளை நினைக்கிறதையும் கை அடுத்த நொடி செஞ்சு முடிக்கனும்" என தேவி உரத்தகுரலில் சொல்ல மாணவர்கள் அவள் சொல்வதை பணிவுடன் கவனித்து அவள் சொல்லும்படி பயிற்சி செய்தனர்.

"அம்மாடியோவ்! ஏங்க நம்ப மூத்த பொண்ணா இது! என்ன கம்பீரம் குரல்ல.. காத்துக்கு கூட இவ பேசுறாளானு சந்தேகம் வரும்படில பேசுவா இப்போ குரலை பாருங்களேன்" என அதிசயம் போல் சொன்ன மீனாட்சியை பார்த்து புன்னகைத்த பரமேஸ்வரரின் முகத்தில் இன்னும் சோர்வுகள் மிச்சம் இருந்தது.

"அக்காவே தான்மா.. அப்பாக்கு அடிபட்டு இனி அவருக்கு சரியாக நாள் எடுக்கும்னு மருத்துவச்சி சொன்னதை கேட்டு நீங்களும் அப்பாவும் அடுத்து என்னனு தடுமாறி நின்னப்போ 'நான் இருக்கேன் நான் எல்லாம் பார்ப்பேனு' முன்னால வந்த அதே அக்கா தான் மா இவ" என சொல்லிய சுந்தரிக்கு தன் தமக்கையை எண்ணி அத்தனை பெருமை.

பின் என்ன? பயத்தின் இருப்பிடமாய் இருந்தவள் தன் குடும்பத்திற்கு ஒன்றென்றவுடன் தானாய் பொறுப்புகளை தைரியத்துடன் ஏற்றது பெரிய விஷயம் தானே. அதில் என் குடும்பம் என சுயநலம் உள்ளது என சொன்னால் தந்தையிடம் வித்தை கற்க வருபவர்களின் வாழ்வு தடைபட கூடாது என தந்தையுடன் உதவியுடன் அவர்களுக்கு வகுப்பை நடத்த முற்பட்டதும் சுயநலத்தில் அடங்குமா என்ன?

எத்தனையோ பேர் தங்கள் எதிர்காலத்தை அந்த சிலம்ப பயிற்சி தான் நிலை நிறுத்தம் என எண்ணி வந்திருக்க அவர்களை ஏமாற்ற கூடாது என தானாய் முன் வந்தது அதுவும் தன் அச்சத்தை துடைத்து என்பது பெரும் விடயம் அல்லவா.

மேலோகத்தில், "லட்சுமி! நீ ஆசைபட்டது போலவே க்ரியாவின் மானுட பிறப்பு தன் பலவீனத்தை வென்றுவிட்டது பார்த்தாயா இனி உனக்கு எந்த கவலையும் இல்லை அல்லவா?" என தன் துணைவியை வினவினார் பாற்கடல் வாசன்.

"ஆம் நாராயணரே! எமக்கு இதில் ஆனந்தம் தான். ஆனால் அந்த மனிதர் அவள் தந்தையை அடித்த ஒரு செயல் அவளை எவ்வாறு மாற்றியது என்று தான் அதிசயமாய் உள்ளது அது தான் பாசத்தின் சக்தியா?"

"நீ என்ன நினைக்கிறாய் லட்சுமி! தன் தந்தைக்காக அவள் தன் பயம் துறந்தாள் என்றா? நிச்சயமாய் இல்லை பாசம் என்பது அவளின் ஐந்தாவது பிறவியிலே அவளுள் முகிழ்த்தது அதனால் அதன் காரணமாய் அவள் குணம் தற்பொழுது மாறவில்லை. அவள் குணம் மாறியதற்கு காரணம் அவளின் ஆறாம் பிறப்பிற்கே உரியதான பகுத்தறிவு தான் "

"என்ன கூறுகிறீர்கள் நாராயணரே"

"ஆம் லட்சுமி! தன் தந்தைக்கு அடிபட்டவுடன் அவள் ஓடி வந்தது உண்மைதான் ஆனால் அவள் பயத்தை துறந்து வீரத்தை ஏற்றது தன்னுள் முகிழ்த்த குற்றவுணர்வை குறைக்க தான். செய்த வினைகளின் விளைவுகளை தான் கொண்ட பகுத்தறிவினால் ஆராய்ந்து அவள் தன்னை தானே குற்றவாளியாய் கருதியதால் தான் அதை போக்க வீரம் கொண்டாள்" என உரைத்தார்.

"ஆனால் நடந்ததில் அவள் தவறு என்ன உள்ளது சுவாமி! எதற்காக அவள் தன்னையே குற்றவாளியாய் எண்ண வேண்டும்?"

"ஏனெனில் அவள் முன்பே செயல்பட்டிருந்தாள் அவளால் இச்சா தன் உயிரை இழந்திருக்க மாட்டாள் அல்லவா?" என வினா தொடுத்த நாராயணர் மகாலட்சிமியை பார்த்து தன் கண்களை மூடி திறந்து,

"ஆம் வீரனாய் அத்தனை வருடங்கள் அவளின் நிழலாய் இருந்தது இச்சா தான். அன்று நீ க்ரியாவின் பலவீனம் சரியாக வேண்டும் என அவசரபட்டு செய்த காரியத்தை கண்டிருந்த இச்சாவும் இம்முறை அதையே செயல்படுத்த எண்ணம் கொண்டுதான் அந்த மனிதரை தாக்கியது. அதேபோல் அவளின் எண்ணமும் பலித்துவிட்டது" என்று விளக்கினார்.

"எவ்வாறோ நம் புதல்விகள் வெற்றிகரமாய் அனைத்து பிறப்புகளின் கடமையையும் முடித்து விட்டார்கள் அல்லவா சுவாமி! இனி இருவருக்கும் இறுதி பரிட்சை மட்டும் தான் மீதம் உள்ளது" என நிம்மதியாய் மூச்செய்தினார் தேவி லட்சுமி.

"ஆம் தேவி லட்சுமி! இனி இத்தனை நாள் ஒருவருக்கொருவர் துணை இருந்தது போல் இல்லாமல் இருவரும் தங்களின் இலக்கை தனிதனியாய் அடையும் நேரம் வந்துவிட்டது. இதுவரை நம் மகள்களாய் இச்சா மற்றும் க்ரியா என்று இருந்தவர்கள் இனி அப்பிறவியின் மூலம் இந்த மூவுலகிற்கும் வள்ளி மற்றும் தெய்வானையாய் அறிய படுவார்கள்" என்று முழங்கினார் நாராயணர்.

அவரின் வாக்கை மெய்ப்பிப்பது போல் சில காலங்கள் கழித்து அதாவது க்ரியாவின் மனித பிறப்பான தேவியின் முடிவிற்கு பிறகு தேவலோகத்தில் இந்திர சபையில் உள்ள நீலாம்பல் குளத்தில் நீலாம்பல் பூக்களின் மேல் புது பூவாய் கிடைத்தது அந்த குழந்தை.

"இந்திர தேவரே இந்திர தேவரே!" சலங்கை ஒலிகள் சலசலக்க மூச்சு வாங்க ஓடி வந்த இந்திராணியை புன்னகை முகமாய் திரும்பி பார்த்த இந்திரதேவர் அவர் கைகளில் இருந்த குழந்தையை கண்டு அதன் அழகில் மெய் மறந்தார்.

"இந்திராணி? யார் இந்த குழந்தை?" என வினவியவர் ஆசையாய் அந்த குழந்தையை தூக்க,

"யார் என நானறியேன் தேவா.. ஆயினும் இனி இவள் நம் மகள் தான்" என அழுத்தமாய் உரைத்தாள் இந்திராணி.

அதில் திடுகிட்ட இந்திரன் இந்திராணியை கேள்வியாய் பார்க்க, "ஆம் தேவா! குழந்தையில்லா எனக்கு வரமாய் கிடைத்திருப்பவள் இனி இவளை நான் எவரிடமும் ஒப்படைக்க மாட்டேன்" என இந்திரரிடம் இருந்து குழந்தையை வாங்கிய இந்திராணி திரும்ப அவள் முன் அசைந்தாடி வந்து நின்றது ஐராவதம்.

ஐராவதம், நான்கு தந்தங்கள் மற்றும் ஏழு தும்பிக்கைகளை கொண்ட வெள்ளை நிற தெய்வீக யானை. இது தேவர்களின் தலைவனான இந்திரனின் வாகனமானதால் "யானைகளின் அரசன்" என பெயர் பெற்றது.

அதன் வரவில் இந்திராணி முகம் பிரகாசிக்க, "ஐராவதமே! இங்கு பார்... இவள் தான் இனி இந்த இந்திர சபையின் இளவரசி இவளை பாதுக்காக்கும் பொறுப்பு இனி உன்னுடையதாகும் புரிந்ததா?" என கேட்டார்.

அவர் கூறியது புரிந்தது என்பது போல் தன் தலையை ஆட்டிய ஐராவதம் அந்த குழந்தையின் முன் ஒற்றை காலை மடக்கி மண்டியிட்டு தன் தும்பிக்கைகளை தூக்கி பிளிறியது.

அது ஆசிர்வாதம் கேட்பது போல் தோன்ற ஆச்சரியமாய் பார்த்த இந்திராணியை மேலும் ஆச்சரியமூட்ட செய்தது ஐராவதத்தை ஆசிர்வதிப்பது போல் கைகளை தூக்கிய குழந்தை.

அந்த குழந்தைக்கு அவள் "தேவ சேனா" என பெயரிட்டு வளர்க்க எந்நேரமும் இந்திரதேவனின் யானையான ஐராவதத்துடன் அவள் திரிந்ததால் "தெய்வானை" என்றும் அழைக்கபட்டாள்.

தேவர்களின் தலைவர் இந்திரரின் மகளாய் அனைத்து போர் கலைகளையும் சிறப்பாய் கற்று அவள் வீரமானவளாய் உருமாற பூலோகத்தில் மானின் வயிற்றில் பிறந்து வேடனின் மகளாய் மலை கிராமத்தில் வளர தொடங்கினாள் இச்சா "வள்ளி" என்னும் நாமத்துடன்.

- தொடரும்
 
  • Love
Reactions: Kameswari