• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 15

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
தாமரை - 15

மருத்துவமனைக்கு வந்த இளங்கோ ரிசப்ஷனில் கேட்டு தாமரையின் அறையைக் கண்டுபிடித்து உள்ளே வந்தான்.

தாமரை கட்டிலில் படுத்திருக்க, அவளுக்கு மற்ற பக்கத்தில் இருந்த சிறிய கட்டிலில் மகேஸ்வரி படுத்திருந்தார்.

தாமரையா இது? என்று சந்தேகமே வந்துவிட்டது. வெயிலில் வதங்கிய கொடியாய் துவண்டு போய் கிடந்தவளை, பார்க்க பார்க்கவே இளங்கோவின் இதயம் நொறுங்கிப் போனது.

பட்டாம்பூச்சி போல் மகிழ்ச்சியாய் பறந்து கொண்டிருந்தவளை, எப்படி மாற்றி வைத்திருக்கிறேன்.

‘அத்தான் உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்று தன் பின்னே சுற்றியவளிடம், ப்ரீத்தாவுடனான தன் நிச்சயம் முடிந்துவிட்டது என்று கூறி, அவளை காயப்படுத்தி அனுப்பிய பிறகு, ஒதுங்கித்தானே போனாள்.

அப்படி ஒதுங்கிப் போனவளை நீதானே இழுத்து வைத்து வம்பிழுத்தாய். எப்படியெல்லாம் மனம் நோக வைத்தாய்.

ஏன் அன்றைய சம்பவத்திற்கு முன்பு வரை அவள் உன்னைத் தேடி வரவே இல்லையே. அன்று என்ன நடந்திருந்தாலும் அதில் சரிபாதி பங்கு உனக்கும் இருக்கிறதே, அப்படியிருக்க அத்தனை பேர் முன்னிலையில் வார்த்தையால் வதைத்தது எந்த வகையில் சரி. அதோடு குழந்தையை வேறு கொடுத்துவிட்டு போய்விட வேண்டும் என்றெல்லாம் பேசி அவள் மனதைக் கொன்றுவிட்டாயே.

இப்போது எப்படி அனைத்தையும் சரி செய்வாய்? அதோடு உன் அத்தையின் முன்னே எப்படி தலை நிமிர்ந்து நிற்பாய், அவரை எப்படி எதிர்கொள்வாய் என்று அனைத்தும் சேர்ந்து குற்றவுணர்ச்சி அவனைக் கொன்றது.

தாமரையின் கையைப் பிடித்தபடியே வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தான் இளங்கோ. அவளிடம் என்ன பேசுவது என்றுகூட புரியவில்லை.

இப்போது என்ன பேசினாலும் அவள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்க, அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

பெண்ணவளின் முகத்தில் தெரிந்த சோர்வு, கண்களூக்கு கீழே இருந்த கருவளையம், உடல் மெலிவு அனைத்தும் அவளின் வேதனையை பறை சாற்ற, தன்மேலே கோபம் கொதித்துக்கொண்டு வந்தது இளங்கோவிற்கு.

அடுத்து என்ன செய்வது என்பது பற்றி யோசிக்க முடியாத அளவுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்து, பழைய நினைவுகளிலேயே மூழ்கி கிடந்தது.

தாமரையின் கையைப் பிடித்தபடி, அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தான் தெரியாது. தன் கேசத்தை ஒரு கரம் வருடிய உணர்வில்தான் தன்னுணர்வு பெற்று நிமிர்ந்தான் இளங்கோ.

‘அத்தம்மா..’ என்ற இளங்கோவின் குரல் அவனுக்கே கேட்கவில்லை. நிமிர்ந்து அவரைப் பார்க்கும் திராணியில்லாமல் தலையைக் குனிந்து அமைதியாகவே அமர்ந்திருந்தான் இளங்கோ.

மருமகனின் ஓய்ந்து போன தோற்றத்தைப் பார்த்தே, அவன் எப்படி கிளம்பி வந்திருப்பான் என்று புரிந்து கொண்ட மகேஸ்வரி, தன் கையில் இருந்த காபியை அவனிடம் கொடுத்தார்.

அதை கவனித்தவன் “அத்தம்மா..” என்றான் குரல் தழுதழுக்க..

“முதல்ல காபியைக் குடி சாமி. கடைசியா எப்போ சாப்பிட்ட.?” என்றார் கனிவாக.

அந்தக் கனிவில் மேலும் மேலும் உடைந்து போனான் இளங்கோ. “சாரி அத்தம்மா ரொம்ப ரொம்ப சாரி.. நான் அப்படி நடந்துருக்கக்கூடாது. தப்புத்தான். ரொம்பவும் பெரிய தப்பு. மன்னிச்சிடுங்க அத்தம்மா. அப்போ ஏதோ கோபத்துல பேசிட்டேன். ஆனா.. ஆனா அப்படி பேசியிருக்கக்கூடாது..” என சிறுபிள்ளை போல தேம்பியவனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட மகேஸ்வரியின் கண்களிலும் நீர் வழிந்தது.

வெகுநேரம் வரை இருவரும் அமைதியாகவே இருந்தனர். இப்போது இருவரும் அந்த சிறிய கட்டிலில் அருகருகே அமர்ந்திருந்தனர். இருவரின் பார்வையும் தாமரையைத் தொட்டே இருந்தது.

அந்த அமைதியைக் கலைத்தது மகேஸ்வரிதான். “அம்மு இனி அங்க வரமாட்டா சாமி. அவ அப்பாவும் அனுப்பமாட்டா. என்னையும் இனி இதைப்பத்தி பேசக்கூடாதுனு சொல்லிட்டார்..” என்றார் வருத்தமாக.

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் அத்தம்மா.. உங்களுக்கு என்மேல நம்பிக்கை இருக்குல்ல. நான் தாராவை நல்லா பார்த்துக்குவேன்னு நீங்க நம்பினா போதும்…” என்றவனிடம்,

“உன்மேல நம்பிக்கை இருக்கப் போய்த்தான் அம்முவை உன்கூட அனுப்பி வைச்சேன். எனக்கு மட்டுமல்ல அவருக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. ஆனா இப்போ அவர் என்ன முடிவெடுப்பாருன்னு தெரில..” என்றார் கலக்கமாக.

“அத்தம்மா அதுதான் நான் பார்த்துக்குறேன்னு சொன்னேன்ல்ல.. நீங்க வருத்தப்படாதீங்க. ஆனா எனக்கு வேற ஒன்னு தெரியனும்..” என்று நிறுத்தியவன்,

“நான் அங்க ஊருக்கு வராமல் போயிருந்தா, உங்களுக்கு என்னைத் தெரியாமலே போய்ருக்கும் இல்ல. நீங்களும் என்னைத் தேடி வந்திருக்க மாட்டீங்கல்ல. என்னை அப்படியே விட்டிருப்பீங்கல்ல..” என இத்தனை நாள் தன் மனதை அரித்த கேள்வியை கேட்டேவிட்டான் இளங்கோ.

இளங்கோவின் கேள்வியில் சில நொடி அமைதி காத்தார் மகேஸ்வரி பின், “உன்னை அப்படியே விட்டுட்டேன்னு உனக்குத் தெரியுமா.? என் குடும்பத்துல எனக்குன்னு இருக்குற ஒரே உறவு நீதான். என்னை மாதிரிதானே நீயும் யாருமில்லாம கஷ்டப்பட்டிருப்பன்னு நான் அழாத நாளே இல்ல. அதை கவனிச்ச என் அக்காதான் என்னை சமாதானம் செஞ்சிட்டு, உன்னைப் பார்த்துக்க அங்க வந்தாங்க..” என நிறுத்த, இளங்கோவின் முகம் குழப்பத்தைக் காட்டியது.

மகேவரியின் முகத்தையே குழப்பமாக பார்த்தபடியே ‘அக்கா’ என முணுமுணுக்க, “ராணி..” என்று அழுங்காமல் கூறினார் மகேஸ்வரி.

“என்ன ராணிம்மாவா..?” என அதிர்ச்சியில் கேட்டவனிடம் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினார் மகேஸ்வரி.

“அத்தம்மா அத்தம்மா..” என்றவனின் முகத்தில் வந்து போன உணர்வுகளை மௌனமாக உள்வாங்கினார் மகேஸ்வரி.

“நீங்க என்னை விட்டுட்டீங்க. என்னை பார்க்கவும்தான் இப்படி பாசமா இருக்குறமாதிரி நடிக்கிறீங்கன்னு, நானே நினைச்சிக்கிட்டேன். அதோட அம்மா இறந்ததுக்கும் நீங்க எல்லாரும்தான் காரணம்னு நாயகி அத்தை சொல்லவும்..” என்று தனக்குத் தானே புலம்பியவன், “ஓ அதுதான் என்னை ராணிம்மா அவங்ககிட்ட விடாமலே வளர்த்தாங்களா.? நாயகி அத்தை என்ன சொன்னாலும், நீ வளர்ந்துட்ட, நீயே நல்லா யோசிச்சு முடிவு பண்ணுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. அப்போ நாயகி அத்தை சொன்னது பொய்யா.?” என்றான் கேள்வியாக.

“அவங்க என்ன சொல்லிருந்தாலும் அது எல்லாமே பொய் கிடையாது. அது அவங்களுக்காக அவங்க செய்துகொண்ட நியாயம்.” என்றதும், இளங்கோ ‘என்ன இது’ என புரியாமல் பார்க்க,

“ம்ம் உன் அப்பா இறந்த அன்னைக்கு, உன் மாமாக்கிட்ட கெஞ்சி கேட்டு நான் இங்க வந்தேன். அப்போ எல்லோரும் அவங்க அவங்க வேலையைப் பார்த்துட்டு இருந்தாங்க. ஏன் உன் பாட்டிக்கூட ஒரு ஓரமாதான் இருந்தாங்க. உன்னைப் பார்த்துக்க இங்க ஆளே இல்ல. நான் இங்க வந்ததும் உன்னை என்கூடவே வச்சிக்கிட்டேன். உன் பாட்டியும் இதைப் பார்த்துட்டு ஒன்னும் சொல்லல. காரியம் எல்லாம் முடிஞ்சி நான் கிளம்பும் போது நீ என்னை விடவே இல்ல.. உன் பாட்டிக்கிட்ட நான் என்கூட கூப்பிட்டு போறேன் சொன்னதுக்கு, சரின்னு சொன்னாங்க.”

“ஆனா உன் மாமாவும் அத்தையும் விடவே இல்ல. நீ எங்கிட்ட வளர்ந்தா சொத்து எல்லாம் எங்கிட்ட வந்துடும்னு பயம் போல. நானும் எவ்வளவோ பேசி பார்த்தேன் ஒத்துக்கவே இல்ல. அப்புறம் உன் பாட்டியும் கூட வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நீயும் அழுதுட்டே இருந்த. என்னாலயும் இங்கேயே இருக்க முடியல. ஊர்ல தாமரையும் மாமாவும் தனியா இருந்தாங்க. அதனால கிளம்ப வேண்டியதாகிடுச்சு..” என்றவர் இளங்கோவைப் பார்க்க அவன் முகம் உணர்வுகளை தொலைத்து நிர்மலமாக இருந்தது.

“உன்னை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டாலும், என் கவலையும் பயமும் உன்னைப் பத்திதான். அங்க யாரும் உன்னை தனியா விடமாட்டாங்கன்னு தெரியும். உன் பணம் அதை செய்ய விடாதுன்னும் தெரியும். அதே நேரம் உன்னை அவங்க நல்லா பார்த்துக்க மாட்டாங்கன்னும் தெரியும். அந்த யோசனையிலயே இருக்கும் போது எனக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வர, அதைக் கவனிச்ச ராணியக்காதான் நான் போய் தம்பியைப் பார்த்துக்குறேன், நீ இங்க உன் பொழப்ப பாருன்னு என்னை சமாதானம் செஞ்சாங்க. எனக்கும் அந்த யோசனை சரின்னு படவும், உடனே அவங்களை அனுப்பி வச்சிட்டேன்.” என்று நிறுத்த,

மாமாவும் அத்தையும் தன் தாயைக் கொன்றுவிட்டதாகக் குற்றம் சாட்டி, ஆண்டுக்கணக்கில் அவர்களைத் தள்ளி வைத்துத் தண்டித்தவன் இதே இளங்கோதான். அவனே இன்று அவர்களுடைய மகளின் மனதைக் கொன்றுவிட்டு, தன்னை நம்பி வந்தவளை நடைபிணமாக்கிவிட்டு வந்து நிற்கிறான்... அவனை தன் அத்தை ஒரு வார்த்தைக் கூட தவறாகச் சொல்லாமல், அவனுக்கே ஆறுதல் சொல்கிறாள். எவ்வளவு உயர்ந்த உள்ளம்... இந்தப் பாசத்தை இவ்வளவு நாள் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று நொந்து போனான் அவன்.

“இனி அம்முவோட விருப்பம்தான். நான் சொன்னாலும் அவளுக்கு விருப்பமில்லன்னா அவர் சம்மதிக்கமாட்டார். அதோட அம்முவுக்கு அங்க என்ன நடந்ததுன்னு தெரில. ‘நான் அங்க போகமாட்டேன். என்னை அனுப்பக்கூடாது’ இந்த ரெண்டு வாக்கியத்தை மட்டும்தான் சொல்லிட்டே இருக்கா. இப்போ அவளோட உடம்பும் மனசும் ரொம்ப முக்கியம். அதனால ஊருக்கு கூட்டிட்டு போகலாம்னு தான் எனக்கும் தோனுது..” என்றார் மகேஸ்வரி.

அவர் கூறியதைக் கேட்டவன், “அத்தம்மா இனி அங்க ஊருக்கு வரனும்னா முறைப்படி என் மனைவியாதான் வரனும், அதுக்கு தகுந்தபடிதான் எல்லாம் நடக்கனும். இன்னும் ரெண்டு மாசம் மட்டும் பொறுத்துக்கோங்க. ஏழாவது மாசம் வளைகாப்பு வச்சு என் மனைவியா அங்க கூப்பிட்டு போங்க. அதுவரைக்கும் இப்படியெல்லாம் பேசி என்னை கஷ்டபடுத்தாதீங்க..” என வலியுடன் கூற,

“நீ பேசுறதை கேட்க எனக்கு சந்தோசமாதான் இருக்கு சாமி. ஆனா அம்முவோட அப்பாவுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. அவர் இனி உன்னை நம்பமாட்டார்..” என்றதும், பட்டென திரும்பி அவரைப் பார்க்க,

“ம்ம்ம் அவரோட இழப்பு… அதை நம்ப வைக்காது..” என்றார் வருத்தமாக.

‘ஏன்..?’ என்ற கேள்வியுடன் அவன் பார்க்க, “நம்ம குடும்பத்தால அவர் இழந்தது மிகப்பெரிய இழப்பு.. உன் அப்பாதான் புருஷன்னு வாழ்ந்துட்டு இருந்த ஒரு பொண்ணை உயிரோட கொண்ணுட்டார் உன் அப்பா. அதுவும் உன் அம்மாக்கூட வாழ்ந்துக்கிட்டு இருந்தும் அது தெரியாம நடிச்சு எங்க மொத்த குடும்பத்தையும் ஏமாத்தி..” என்று சொல்லிக் கொண்டே வந்தவர், “அவங்க பாவம்தான் நம்மளை இப்படி போட்டு வதைக்குது போல…” என தன் புடவை முந்தானையால் வாயை மூடிக்கொண்டு சத்தமில்லாமல் கதறினார் மகேஸ்வரி.

என்ன நடந்தது என முழுதாக தெரியாவிட்டாலும், ஓரளவுக்கு தன் தந்தைதான் காரணம் என்று அவனுக்குத் தெரியும். முன்னாடி அவர்கள் மீது கோபமாக இருந்தவனுக்கு அதை தெரிந்து கொள்ள விருப்பமில்லை.

ஆனால் இப்போதும் அப்படியே இருக்க முடியாதே. அதனால் என்ன நடந்தது என தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்று நினைத்தவன் “அத்தம்மா.. என்ன நடந்ததுன்னு எனக்கு முழுசா சொல்லுங்க.. அப்போதான் நான் அம்மு அப்பாக்கிட்ட பேச முடியும். வீட்டுலயும் என்னைச்சுத்தி என்ன நடக்குதுனு கண்டுபிடிக்க முடியும்..” என அழுத்தமாக கேட்க, மகேஸ்வரிக்கும் சொல்லிவிட்டால் போதும் என்ற நிலைதான்.

தன் மகளின் வாழ்க்கை அதில்தான் இருக்கிறது எனும்போது, ஒரு தாயாக அதை செய்துதானே ஆகவேண்டும். அதோடு தன் கணவரையும் அவன் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும், மேலும் தாமரையும் நிம்மதியாக அவளுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பாள் என நினைத்து நடந்த அனைத்தையும் இளங்கோவிடம் கூற ஆரம்பித்தார் மகேஸ்வரி.

ஆனால் அத்தனை சீக்கிரம் தாமரையை நிம்மதியாக வாழவிடமாட்டேன் என்று ஒரு வீடியோவை வைத்து விதி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
19
18
Ullagaram
தாமரையே, என் செந்தாமரையே !
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 15)


பின்னே..? இவனை நம்பி வந்த பெண்ணை இப்படி குத்துயிரும் குலையுமா ஆக்கிப் போட்டுட்டப் பிறகு இனி இவனை எப்படி நம்புவாங்க...? ஆம்பிளை நாலையும் யோசிச்சுத்தானே
முடிவெடுக்கணும். இவனை மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன்னா முடிவெடுப்பாங்க..?


அதென்ன கதைன்னு தெரியலையே..? அந்த பாவம் தான் ஆட்டி வைக்குதுன்னு சொல்றாங்கன்னா... அப்ப இளங்கோவோட அப்பாவும் இவனை மாதிரியே வில்லங்கமானவரோ...?


அட.. மழை நின்னாலும் தூவானம் விட்ட பாடில்லைன்னு அதென்ன வீடியோ.. தாமரையோட வாழ்க்கையில குழப்பத்தை உண்டாக்குற அளவுக்கு சதி பண்ணுதுன்னு தெரியலையே...?


இன்னும் எத்தனை சஸ்பென்ஸ் இருக்குன்னு தெரியலையே..?


😀😀😀
CRVS (or) CRVS 2797