• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 17

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
தாமரை - 17

ஆதவன் இன்னும் பூமியைத் தொட்டு தழுவாத அதிகாலைப் பொழுது. கருப்பையாவின் வீட்டில் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

செல்வம் வராததால் கந்தசாமியும் லட்சுமியும் மட்டும் வந்திருந்தனர். செல்வம் இல்லாததால் பூஜைக்கு தேவையான பொருட்களை காரில் ஏற்றிக் கொண்டிருந்தார் கதிரவன்.

அவரிடம் “இப்படி ஆளும் பேருமா நீ நம்ம வீட்டுல வேலை செய்றதைப் பார்க்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை தம்பி..” என்ற தந்தைக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் சிரித்து வைத்தார் கதிரவன்.

அவருக்கு இதெல்லாம் சுத்தமாக வரவில்லை. வரவில்லை என்பதைத் தாண்டி பிடிக்கவில்லை. இந்த ஊர் இங்கிருக்கும் மக்கள், இந்த வேலை இப்படி எதிலும் நாட்டமில்லை.

நகர வாழ்க்கையில் மோகம் கொண்டு சென்றவருக்கு, அது நரக வாழ்க்கை என்று காலம் புரிய வைக்கும்.

அனைவரும் கோவிலுக்கு சென்று, பூஜை முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். கோவிலில் இருந்தே மகேஸ்வரியின் முகம் தெளிவில்லாமல் தான் இருந்தது.

அதை யார் கவனிக்கவில்லை என்றாலும், கதிரவன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அதை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

‘என்னையே என் வீட்டாளுங்க மதிக்காத மாதிரி பண்ண உன்னை அப்படியே விட்டுடுவேனா’ என்றவருக்கு முந்தைய இரவு போதையில் செல்வமும் கதிரவனும் பேசியதை நினைவு கூர்ந்தார்.

“அப்புறம் மாப்பிள்ளை நீ எப்போ கல்யாண சாப்பாடு போடப்போற..” என செல்வத்தைப் பார்த்து கதிரவன் கேட்க,

“என்ன மச்சான் நக்கல் பண்ற, வயசு புள்ளைய வீட்டுல வச்சிக்கிட்டு என்னை கல்யாணம் பண்ண சொல்ற.?” என செல்வமும் சிரிப்புடன் கேட்க,

“ஹேய் என்னய்யா நீ.. லட்சுமி சின்ன பொண்ணு. அதுக்கு முடிச்சிட்டு உனக்கு பண்ணனும்னா நீ கிழவனாகிடுவ. உனக்கும் வயசு போய்டும். மாமாக்கிட்ட சொல்லி முதல்ல உன் வாழ்க்கையை பாருய்யா..” என கதிரவன் பேச,

“யோவ் நீ வேற.. சின்ன பொண்ணோ பெரிய பொண்ணோ. நம்ம வீட்டுல ஒரு பொண்ணை வச்சிட்டு இன்னொரு வீட்டு பொண்ணை நம்ம வீட்டுக்கு கொண்டு வரக்கூடாதுய்யா. அது அவங்களுக்குத்தான் கஷ்டம். நாம ஆம்பிளைங்க நாலு இடம் போவோம், வருவோம். ஆனா பொண்ணுங்க அந்த நாலு சுவத்த தாண்டி வெளிய போகாதுங்க. அப்புறம் ரெண்டும் பேசி ஏதோ ஒரு இடத்துல ஒத்து வராம பிரச்சினை ஆகிடும். அதெல்லாம் எதுக்கு சொல்லு. அதோட லட்சுமிக்கு அம்மா பாசம் என்னனே தெரியாது. அந்த புள்ளைக்கு ஒரு கஷ்டம்னா அப்பாவாலையும் தாங்கிக்க முடியாது. இதெல்லாம் யோசிச்சுத்தான் நான் முடிவு பண்ணிருக்கேன்..” என செல்வம் பேச, கதிரவனுக்கும் இது உண்மைதான் என்றாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“என்னமோ போய்யா? நீ பேசுறது எல்லாம் ஏதோ சினிமா வசனம் போல இருக்கு..” என சலிப்பாக கூறியவர், “ஆனாலும் எனக்கு நம்ப முடியல. ஒரு பொண்ணு கூடவா உன்னை அசைக்கல. உன் மனசுக்குள்ள வந்து உட்காரல..” என சிரிப்புடன் கிண்டலாக கேட்க

சட்டென்று ஒரு நொடி அமைதியான செல்வம், பின் சிரித்துவிட்டார். “யோவ் இது என்ன டவுனா? அங்க மாதிரி இங்க எல்லாம் பொண்ணுங்க பின்னாடி சுத்த முடியுமா? காணா பொணமாக்கிடுவாங்க. எத்தனை நாள் ஆசையா உனக்கு? என்னை இப்படி மாட்டிவிட..” என மேலும் சிரிக்க, கூடச் சேர்ந்து சிரித்தாலும், அந்த அமைதியான ஒரு நொடி ஏதோ இருக்கிறது என யோசிக்க வைக்க, அவர் புருவம் சுருங்கி யோசனையானது.

அந்த யோசனையிலேயே வீட்டுக்கு வர நள்ளிரவாக அதுவரைக்குமே தூங்காமல் நடந்து கொண்டிருந்தாள் மகேஸ்வரி.

கதிரவனைப் பார்த்ததும் “என்ன அண்ணா இவ்ளோ நேரம் கழிச்சு வர? அவர் எங்க? அவர் வீட்டுக்கு பத்திரமா போய்ட்டாரா?” என கேட்க,

முன்னாடி கேட்டதை விட்டவர், “யாரை பத்திரமா போய்ட்டாரான்னு கேட்குற? யாரு.?” என கோபமாக கேட்க,

“ம்ம்ம் அது அதுவந்து அவர்.. அவர்தான் செல்வம் மாமா.. வீட்டுக்கு போய்ட்டாரா? ரொம்ப குடிச்சிருக்காரா?” என கதிரவனின் பார்வையை உணராது, மீண்டும் மீண்டும் கேட்க,

“அதை ஏன் நீ கேட்கற? என்ன நடக்குது இங்க? நீ எதையாவது எங்கிட்ட மறைக்கிறீயா?” என அண்ணனாக மிரட்ட,

அப்போதுதான் மகேஸ்வரியும் சுயத்திற்கு வந்தவர், “இல்ல லட்சுமி அங்க தனியா இருப்பா? மாமாவும் வயசானவர் இல்லையா? அதான் கேட்டேன்..” என ஏதேதோ சொல்லி சமாளிக்க,

“மகேசு நீ பொய் சொல்றன்னு எனக்குத் தெரியும். என்னனு தெளிவா சொல்லு. உண்மையை சொல்லு..” என மீண்டும் மிரட்ட, அந்த குரலில் பொய் சொல்ல முடியவில்லை மகேஸ்வரியால்.

“எனக்கு செல்வம் மாமாவைத்தான் பிடிச்சிருக்கு. அதை அவர்கிட்ட சொன்னேன். என்னை ஓங்கி அடிச்சிட்டார். அடிச்சதும் இல்லாமல், இதெல்லாம் சரிப்பட்டு வராது, நம்ம குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சும் நீ எப்படி இந்த மாதிரி ஆசைகளை வளர்த்துக்கலாம். நாளைக்கு ஊர்ல எல்லாரும் என்ன பேசுவாங்க. ஒழுங்கா வீட்டுல பார்க்குற மாப்பிள்ளையைக் கட்டிட்டு கிளம்புற வழிய பாரு. இல்லைன்னு ஏதாவது ஏடாகூடமா வேலைப் பார்த்த, உன் மூஞ்சில கூட நான் முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.” என அழ,

“செல்வம் சொல்றது சரிதானே? நாளைக்கு ஊர்ல ரெண்டு குடும்பத்தையும்தான தப்பா பேசுவாங்க.? அதோட அவனுக்கும் உன்னைப் பிடிக்கல இல்ல. பிடிச்சிருந்தா கூட ஏதாவது செய்யலாம்” என கதிரவனும் கூற,

“அவருக்கும் என்னைப் பிடிக்கும். ஆனா எல்லாருக்காகவும் அதை மறைக்கிறார்..” என மகேஸ்வரி பட்டென சொல்ல, கதிரவன் நம்பாமல் தங்கையைப் பார்த்தார்.

“ஆமா அண்ணா. அவருக்கும் என்னைப் பிடிக்கும். அவர் பார்வையில அதை நான் உணர்ந்துருக்கேன். அந்த தைரியத்துலதான் நான் அவர்கிட்ட பேசினேன். ஆனா அவர்..?” என மேலும் அழ,

“நீ இப்போ வந்து சொல்றியே உனக்கு அறிவிருக்கா? நாளைக்கிருந்து பத்திரிக்கை வைக்க ஆரம்பிச்சிடனும்னு அம்மா பேசிட்டு இருந்தாங்க.. இனி எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும்.” என கதிரவன் உண்மையான பாசத்தில் பேச,

“எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலண்ணா, அவர்கிட்ட சொன்னா, அவர் எதுவும் செய்வார்னு நினைச்சேன். ஆனா அவரே இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு சொல்லிட்டு போய்ட்டார். இனி நான் என்ன செய்ய முடியும். நம்ம வீட்டுல சொல்ற தைரியம் எனக்கு இல்ல, ஆனா அவரைத் தவிர யாரையும் என்னால நினைக்கக்கூட முடியாது..” என்ற தங்கையின் அழுகை அண்ணனின் நெஞ்சை சுட்டதுதான்.

“அப்போ என்ன செய்றதா இருந்த.. கிணத்துல விழுந்து சாகலாம்னா, இல்ல உத்திரத்துல தொங்கலாம்னா? இப்போ எனக்கு இது தெரியாம போயிருந்தா இப்படித்தான் எதையாவது செஞ்சிருப்ப..” என அதட்ட, பதில் சொல்லாமல் மகேஸ்வரி அழ, அதிலேயே அந்த முடிவில்தான் தங்கை இருந்திருக்கிறாள் என்று கதிரவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“பைத்தியக்காரி பைத்தியக்காரி.. என்ன நினைச்சிட்டு இப்படியெல்லாம் யோசிச்சிருக்க. உன்னைத் தூக்கிக் கொடுத்துட்டு நாங்க நிம்மதியா இருந்துடுவோமா? பைத்தியம் போல யோசிக்கிறதை நிறுத்து. கொஞ்சம் டைம் கொடு, என்ன செய்யலாம்னு யோசிக்கலாம். அதுக்குள்ள நீ எதையும் செஞ்சி வச்சிடாத.. உன்னை கானோம்னு அம்மா தேடுறதுக்குள்ள உள்ள போ..” என தங்கையை மிரட்டி அனுப்பியவருக்கு இதை எப்படி சரி செய்ய என்று சுத்தமாக தெரியவில்லை.

அதற்காக அப்படியே விடவும் மனமில்லை. “என்ன செய்யலாம் என்ன செய்யலாம்..” என யோசித்துக் கொண்டே வெகுநேரம் நடந்தவருக்கு, பட்டென ஒரு திட்டம் பிடிபட, இதில் இருந்து செல்வம் தப்பிக்கவே முடியாது என தெரிய, வக்கிரமாக சிரித்துக்கொண்டே தன் அறைக்குச் சென்று நிம்மதியாக தூங்கினார்.

இதோ கோவிலுக்கும் சென்று வந்தாகிவிட்டது. கந்தசாமியும், கதிரவனும் வேலையென வெளியில் சென்று விட, கதிரவனிடம் லட்சுமியை வீட்டில் விட்டு வரும்படி அனுப்பி வைத்தார் தங்கம்.

“ஏன் மாமா உங்களுக்கு இந்த ஊர் பிடிக்காதோ? எப்பவும் வந்ததுமே போய்டுறீங்க.?” என வழக்கம்போல லட்சுமி கதிரவனிடம் ஆர்வமாக பேச ஆரம்பிக்க,

“ஊர் பிடிக்காதுனு எல்லாம் இல்ல லட்சு? ஆனா இங்க மாதிரி அங்க இருக்காது. ரொம்ப ஜாலியான மக்கள். எங்க போகவும், வரவும் தடையில்லை. யாரும் யாருக்கிட்டயும் பேசலாம். பயப்பட வேண்டியதில்ல. நாமளும் நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி இருக்கலாம். உனக்குத் தெரியுமா? எனக்கு கூட அங்க ரெண்டு மூனு பொண்ணுங்க ஃப்ரண்டா இருக்காங்க. இங்க அப்படியெல்லாம் இருக்க முடியுமா சொல்லு?” என கதிரவனும் லட்சுமியிடம் வம்பளந்து கொண்டே செல்ல,

அதைப் பார்த்த ஊரில் உள்ள ஒரு கிழவி, “எப்பா நீ கருப்பையா மவன்தான, என்னவாம் இந்த புள்ள கூட சோடி போட்டுக்கிட்டுத் திரியிற,” என குதர்க்கமாக கேட்டு வைக்க

“ஏன் அப்பத்தா சோடி போட்டா என்னவாம்.. உங்களுக்கு என்னவோ தப்பா தோனுது போலையே என்னவாம்..?” என அவரும் பதிலுக்கு கேட்க,

“ஏன் உனக்குத் தெரியாதாக்கும், நம்மூர்ல கட்டிக்கப் போறவகதான் சோடி போட்டு சுத்துவாக, நீங்களும் சோடியா சுத்தவும் அப்படித்தானோன்னு நினைச்சேன்…” என கிழவி கிராமத்திற்கே உரிய குசும்பில் பேச,

“ஏய் கிழவி என்ன பேசுற நீ?” என அதட்டிய லட்சுமியை, தடுத்து பிடித்த கதிரவன்,

“ஆமா அப்பத்தா நாங்க கட்டிக்கப் போறோம், அதான் சோடி போட்டு சுத்துறோம்.. இப்போ என்ன?” என முடிக்க,

“அடியாத்தி என்ன பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு. இது உங்க ரெண்டு வீட்டுக்கும் தெரியுமா? தெரிஞ்சா எவ்வளவு பெரிய பிரச்சினை நடக்கும் தெரியுமா?” என புலம்பிய கிழவி, அப்படியெல்லாம் இல்லை என சொல்ல வந்த ளட்சுமியின் பேச்சை காதிலேயே வாங்காமல், தான் கேட்டதை மற்றவர்களிடம் ஒலிபரப்ப ஓடிவிட்டது.

“ஏன் மாமா நீங்க? இந்த கிழவிக்கு இதுதான் வேலை. இதை உடனே ஊரெல்லாம் சொல்லி வைக்கனும் அதுக்கு. வீட்டுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினையே ஆகிடும்..” என பயந்து லட்சுமி பேச,

“அய்யோ லட்சு இப்போ எதுக்கு நீ இவ்ளோ பயப்படுற? அதுதான் அந்த கிழவி பத்தி எல்லாருக்கும் தெரியும்னு சொல்றியே, அப்போ நம்ம வீட்டுக்கும் தெரிஞ்சிருக்குமில்ல, யாரும் தப்பா எல்லாம் நினைக்க மட்டாங்க..” என அவளை சமாதானம் செய்து வீட்டில் விட்டவன், அங்கிருந்தே தன் தங்கைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் ஊருக்கு சென்றான்.

அந்த ஊரில் இருக்கும் டீக்கடையில் சிறிது நேரம் அமர்ந்தவன், ஆட்கள் சற்று கூடினதும், “ம்ச் யாரை எப்போ எங்க நம்புறதுனே தெரியல. பெரிய வீட்டுக்காரங்கன்னு பேரு. ஆனா ஒழுக்கம் சுத்தமா இல்ல. இவங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலன்னு யார் அழுதா.?” என தனக்குத்தானே புலம்புவது போல் பேச, அங்கிருந்த கூட்டமெல்லாம் இப்போது அவனைத்தான் பார்த்தது.

“யாரு தம்பி நீ? இங்க வந்து என்ன பேசிட்டு இருக்க.?” என வயதில் பெரியவர் தன் கடா மீசையை முறுக்கிவிட்டு கேட்க,

“நான் பக்கத்து ஊருங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் சினேகிதனுக்கு பொண்ணு பார்த்துச்சுங்க. நல்ல பெரிய இடம்தான். சீரெல்லாம் நல்லா செஞ்சிடுவோம்னு சொல்லும்போதே நாங்க யோசிச்சிருக்கனும்ங்க, விட்டுட்டோம். அக்கம் பக்கம் விசாரிச்சா அந்த பொண்ணுக்கும், அவங்க வீட்டுக்கு வந்துட்டு போற ஒரு பையனுக்கும் பழக்கமாம். அதை மறைக்கத்தான் இப்படி பேசியிருக்காங்க. உள்ளூர்ல கட்டிக் கொடுத்தா அவங்க குட்டு தெரிஞ்சிடும்னு வெளிய மாப்பிள்ளை பார்த்துருக்காங்க..” என கதிரவன் நீட்டி முழக்க,

“இப்போ எல்லாம் இந்த மாதிரி நிறைய நடக்குது என்னத்த சொல்ல, ஆமா அதை ஏன் இங்க வந்து சொல்லி புலம்பிட்டு இருக்க..” என அவர் கேட்க,

“அதுதாங்க.. அந்த சம்பவம் தெரிஞ்சி என் சினேகிதன் அந்த புள்ளைய வேண்டாம்னுட்டான். இப்போ இந்த ஊர்ல அந்த பொண்ணுக்கு மாப்பிள்ள பார்த்து இன்னைக்கு பத்திரிக்கை கூட போய் குலசாமி கோவில்ல வச்சிட்டு வந்துட்டாங்களாம். அதான் அப்படியான்னு விசாரிச்சிட்டு போக வந்தேன்..” என அனைவரையும் பார்வையால் அளந்த படியே கூற,

“ஹேய் நம்ம மாரப்பன் பையனுக்கு பார்த்த பொண்ணை சொல்றியா? அவன் நல்ல பையனேப்பா. அவனுக்கு பார்த்த பொண்ணு ஒழுக்கம் கெட்டவளா? இதை நடக்கவிடக்கூடாதுப்பா.. தங்கமான பையனாச்சே அவன். அவனுக்கு இந்த மாதிரி ஒரு பொண்ணா.. ச்சே.. நான் இப்பவே போய் என்னனு விசாரிக்கிறேன்.” என அடுத்து கதிரவனிடம் எதையும் விசாரிக்காமல் அந்த பெரியவர் போய்விட, கதிரவனுக்கும் அதுதானே வேண்டும்.

ஆட்கள் அவர்களுக்குள்ளாகவே ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, அதே நேரம் அப்போது வந்த பஸ்ஸில் யாரும் கவனிக்கும் முன் ஏறி ஊர் வந்து சேர்ந்திருந்தார் கதிரவன்.

இங்கு மாரப்பன் வீட்டுக்கு சென்றவர் விசயத்தைக் கூறிவிட, முதலில் அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் அடுத்தடுத்து ஆட்கள் ஒவ்வொருவராக வந்து பேசவே மனம் ஊஞ்சலாட ஆரம்பித்தது.

‘இது ஒரு பொண்ணோட வாழ்க்கை. எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. நாளைக்கு அவங்க வீட்டுக்கு போய் தீர்மானமா பேசி முடிவு பண்ணிக்குவோம்.’ என அவர்களாக பேசி ஒரு முடிவு எடுத்துவிட,

தான் கொழுத்திப்போட்டு போன தீக்குச்சியில் அடுத்தநாள் காலையில் தன் வீட்டில் நடக்கப் போகும் பிரச்சினைகளை நினைத்தபடியே, அன்றிரவு சென்னைக்கு பயணித்துக் கொண்டிருந்தார் கதிரவன்.
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
19
18
Ullagaram
செந்தாமரை என் தாமரை..!
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 17)


அடப்பாவி மக்கா..! அழகாத்தான் திட்டம் போட்டு காயை நகர்த்துறாப்ல. ஆனா, இங்க லஷ்மி வீட்ல வேற மாதிரி பத்திக்கும் போல யே...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
154
110
43
Dindigul
ஆஹ கதிரவந்தான் வில்லன்.. இளங்கோ இல்ல அப்படித்தான சொல்ல வர்ரீங்க
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,612
668
113
44
Ariyalur
அச்சோ அண்ணனே தங்கச்சிக்கு வில்லத்தனம் பண்ணுறானே இதுல லட்சுமியையும் ஒரு பக்கம் சிக்க வைக்குறானே