• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 48

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur
தாமரை - 48

ப்ரீத்தாவின் கார் மரத்தில் மோதி நின்ற நொடி, பின்னே வந்து கொண்டிருந்த ஷ்யாமிற்கு ஒரு நிமிடம் உயிரே போய் வந்துவிட்டது.

வேகமாக காரை ஓரம் கட்டி அவன் இறங்கி வருவதற்குள் அங்கு கூட்டம் கூட ஆரம்பித்தது.

அவர்களை விலக்கி அவன் சென்று பார்க்க, தலையில் அடிபட்டு, மூச்சுப்பேச்சில்லாமல் ஸ்டியரிங்கில் தலை கவிழ்ந்து கிடந்தாள் ப்ரீத்தா.

அதைப் பார்த்ததும் தான் டாக்டர் என்பதும், அவளுக்கு முதலுதவி கொடுக்க வேண்டும் என்பதையும் மறந்து அதிர்வில் அவளைப் பார்த்தபடியே நின்றான் ஷ்யாம்.

அதற்குள் அங்குள்ளவர்களில் ஒருவர் “சீக்கிரம் ஹாஸ்பிடல் கொண்டு போகனும்ப்பா. 108க்கு போன் போடுங்க..” என்று சத்தம் கொடுக்க, அதில்தான் நிகழ்வுக்கு வந்தான் ஷ்யாம்.

“நான் டாக்டர்தான். எங்க ஹாஸ்பிடல் கொண்டு போயிடலாம். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க..” என்றவன் அவளைத் தூக்கிக்கொள்ள, ஒருவர் வந்து அவன் காரைத் திறக்க, பின்பக்கம் படுக்க வைத்தவன் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து, “ஒரு டென் மினிட்ஸ் இந்த காரை பார்த்துக்க முடியுமா ப்ளீஸ். எங்க செகியூரிடி வந்து காரை எடுத்துக்குவார்..” எனவும்,

“சரி தம்பி… நாங்க இங்கதான் இருப்போம், பார்த்துக்குறோம்..” என்றதும் அவசரத்திற்கு தன் கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு, வேகமாக மருத்துவமனையை நோக்கி காரை எடுத்தான் ஷ்யாம்.

அதற்குள் இங்கு பாதி வேலையை முடித்திருந்தான் இளங்கோ.. தன் ஆட்களை வைத்து சத்தமே இல்லாமல் செழியனைத் தூக்கியிருந்தான்.

அவன்தான் தூக்கினான் என்று வெளியே தெரியாத அளவிற்கு வேலையை முடித்திருந்தான்.

அவன் ப்ரீத்தாவை செழியனிடம் போகச் சொன்னதற்கு இரண்டு காரணம் இருந்தது.

ஒன்று அவன் வீடியோவை லீக் செய்யாமல் இருக்க வேண்டும்.

மற்றொன்று அவன் அந்த இடத்தை விட்டு வெளியில் சென்று விடக்கூடாது.

ப்ரீத்தா அங்கு வருகிறாள் என்று தெரிந்தால் மட்டுமே அவன் தன் வீட்டை விட்டு நகர மாட்டான் என்று இளங்கோ நினைத்தான். அதன் படியே தான் நடக்கவும் செய்தது.

ப்ரீத்தா வருவதற்கு முன்பே செழியனை அங்கிருந்து தூக்கிவிட்டான்.

இதில் இன்னொரு நல்ல விசயமாக செழியன் போதையின் பிடியில் இருந்தான்.

ப்ரீத்தா வரும் போது சாதாரணமாக இருந்தால் அவனால் அவளிடம் கடுமையாக நடக்க முடியாது என்று நினைத்து மது அருந்தியிருந்தான். அது இளங்கோவிற்கு மிகவும் சாதகமாகிப் போனது.

“சார்.. நம்ம இடத்துக்கு கொண்டு வந்துட்டோம்..” என்றவனிடம்,

“ம்ம்.. ப்ளாக் ரூம்ல போட்டு வைங்க. நான் சொல்லாம அந்த ரூமை யாரும் திறக்கவே கூடாது.” என்றவன் “ஃபுட் அண்ட் வாடர் ஃபெசிலிடி அரேஞ்ச் பண்ணிட்டு உள்ள போடுங்க..” என்றான் கட்டளையாக.

‘சாக போறவனுக்கு ஏன் சாப்பாடு. சோத்த போட்டு கொலை பன்ற ஒரே ஆளு இவர்தான் போல..’ என்று புலம்பியபடியே, அதற்கான வேலையைப் பார்த்தான் இளங்கோவின் கையாளான ரஹீம்.

“அண்ணா.. இவனை எத்தனை நாள் அடச்சி வைக்கனும்..” என அங்கிருந்த ஒருவன் கேட்க,

“ம்ச் தெரிலடா.. ப்ளாக் ரூம் ரெடி பண்ணிடு..” என்றான் ரகீம்.

“ப்ளாக் ரூமா?” என அவன் வாய் பிளக்க,

“ஆளு.. ஏதோ பெருசா பண்ணி மாட்டிருக்கான் போல.. இவன் சாவு எப்படி இருக்குமோ..?” என்று புலம்பியபடியே அந்த அறைக்குள் அவனை கொண்டு போய் போட்டான் ரஹீம்.

மருத்துவமனையில் தாமரைக்கு மயக்கம் தெளிந்திருந்தது. அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த இளங்கோ எதுவுமே பேசாமல் அவள் கையைப் பிடித்தபடியே அமர்ந்திருந்தான்.

உண்மையில் அவனுக்கு எப்படி பேச வேண்டும் என்று தெரியவே இல்லை. உள்ளம் பேசு பேசு என ஆர்ப்பரிக்கிறது. ஆனால் அவனால் முடியவில்லை.

குற்றமே செய்யாதவளை குற்றவாளியாக்கி, வார்த்தைகளால் வதைத்து, எத்தனை பெரிய குற்றத்தை செய்திருக்கிறான் அவன்.

அவனின் தந்தை செய்த பாவத்தையே அவனால் சுமக்க முடியவில்லை. இதில் அவனும் மன்னிக்க முடியாத பாவத்தை செய்திருக்கிறானே.

இப்போது எந்த முகத்தை வைத்து அவளிடம் பேசி மன்னிப்பை யாசிப்பது என்றே இளங்கோவிற்குத் தெரியவில்லை.

அமைதியாக இருந்தவன் ‘அத்தான்..’ என்ற தாமரையின் காற்றான குரலில் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.

“என்ன தாரா.. என்ன வேணும்? டாக்டரை கூப்பிடவா? உனக்கு ஒன்னும் இல்ல.. ஈவ்னிங்க் வீட்டுக்கு போகலாம்..” என அவளை சமாதானம் செய்ய,

“ஹான் சரி.. நான் அங்க ஊருக்கு போகட்டுமா? இங்க இருக்க முடியல. அப்பா கூட இருக்கனும் போல இருக்கு.” என்றாள் தொண்டை அடைக்க..

அவனே அனுப்பி வைக்கும் முடிவோடுதான் இருந்தான். ஆனால் இப்போது அவளாக கேட்கவும் மனது ஏதோ போல் முரண்டியது.

“ஏண்டா.. இப்போ எப்படி ட்ராவல் பண்ண முடியும்..” என தன் முடிவுக்கு மாறாக பேசினான்.

“தெரில.. ஆனா போகனும். எனக்கு அப்பாக்கிட்ட போகனும்..” என்றாள் சிறுபிள்ளை பிடிவாதத்தோடு.

“ம்ம் சரி.. சரி நான் ஷ்யாம்கிட்ட பேசிட்டு அரேஞ்ச் பண்றேன்..” என்றான் சற்று இறுக்கமாக.

“நீங்களும் வரீங்களா? அம்மா சந்தோசப்படுவாங்க..” என்றாள் சின்னக் குரலில்.

“பின்ன.. உன்னைத் தனிய அனுப்புவேன்னு நினைச்சியா? நான்தான் கொண்டு வந்து விட போறேன்.” என்றவன், “நீ எங்கிட்ட எதையாவது மறைக்கிறியா.?” என்றான் அவளை நேர் பார்வை பார்த்து.

அவன் செழியனை மனதில் வைத்தெல்லாம் கேட்கவில்லை. செல்வம் சொன்ன ‘உங்ககிட்ட சொல்ல தாமரைக்கிட்ட ஒரு நியூஸ் இருக்கு. அதை அவதான் சொல்லனும்.’ என்றதைத்தான் கேட்டான்.

ஆனால் தாமரையோ செழியனைப் பத்திதான் கேட்கிறான் என நினைத்து “நீங்க.. நீங்க என் மொபைல் பார்த்தீங்களா?” என்றாள் அரண்டு போய்..

“ஹான் அதை பார்த்தேன்.. அந்த பிரச்சினையை அப்புறம் பேசலாம். அதுக்கு டைம் இருக்கு. ஆனா நான் கேட்டது வேற. அது இல்லாம வேற எதுவும் எங்கிட்ட சொல்ல இருக்கா.?” என்றான் பொறுமையாக.

“அது.. அது எப்படி? அவனை என்ன செஞ்சீங்க? அவன்தான்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?” என பதட்டமாக கேட்க,

“ம்ச் இப்போ எதுக்குடி இவ்ளோ பதட்டம். அதுதான் நான் பார்த்துக்கிறேன் சொல்றேன்ல.. அதை விடு நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..” என்றான் கடுப்பாக.

“ம்ச் நான் என்ன கேட்குறேன்.. நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க?” என்றாள் தாமரையும் கடுப்பாக.

“அதை விடு தாரா.. எனக்கு இப்போ அது ஒரு விசயமே இல்ல. வேற என்னவோ இருக்கு அதை சொல்லு..” என அவன் விடாப்பிடியாக கேட்க, அந்த நேரம் சரியாக ஷ்யாமிடமிருந்து போன் வந்தது.

அந்தப் பக்கம் அவன் கூறியதை கேட்டு பதட்டமானவன் “நான் இப்போ வரேன்..” என வேகமாக வெளியில் சென்றான். அதே நேரம் பதட்டமாக வந்த ராணி “பாப்பா ப்ரீத்தா புள்ளைக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம். ஷ்யாம் தம்பி தான் கொண்டு வந்துருக்கார்..” என்றதும் தாமரைக்கும் அந்த பதட்டம் ஒட்டிக் கொண்டது.

“நானும் வரேன் ராணிம்மா.. போகலாம்..” என எழும்ப,

“ம்ச் பாப்பா.. கொஞ்ச நேரம் அமைதியா இரு. இப்போ எமர்ஜென்சி வார்டுக்குதான் கொண்டு போயிருக்காங்க. அங்கெல்லாம் நீ போறது சரியில்ல. அதுதான் இளா தம்பி போயிருக்கில்ல, பார்த்துட்டு வந்து சொல்லட்டும்..” என கிளம்ப இருந்தவளை தடுத்து மீண்டும் படுக்க வைத்தார்.

இங்கு செழியனின் அப்பாவிற்கு மனதே சரியில்லை. இந்த செய்தியை யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது.

தங்கையிடம் சொன்னால் அந்த வீடியோவில் ப்ரீத்தா இருந்தால் கூட கொஞ்சம் பதட்டப்படுவாள், ஆனால் அதிலிருப்பதோ தாமரை.

நிச்சயம் இதை வைத்து ஒரு திட்டம் தீட்டி, அந்த பெண்ணை இளாவின் வாழ்க்கையில் இருந்து கிளப்ப யோசிப்பாள். நாயகி அதோடு நிறுத்தினால் அவருக்கு பிரச்சினை இல்லை.

ஆனால் அந்த வீடியோவை பரப்பி ஊரே அவள் மானத்தை ஏலம் போடும் அளவிற்கு செய்துவிடுவாள்.

உயிரை விட மானம் பெரிதே. அவருக்கும் அந்த உணர்வு இருந்தது. அதனால்தான் மகன் செய்த செயலை அவரால் ஏற்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை.

அதனால் நாயகியைத் தாண்டி வேறு யாரிடம் பேசுவது என யோசிக்கும் நேரம், அவன் மனதில் வந்து நின்றார்கள் சீனியும் இளங்கோவும்.

இளங்கோவிடம் கூறினால் மகனை மொத்தமாக மறந்து விட வேண்டியதுதான். ஆம்! அவன் நிச்சயம் மகனை கொன்று விடுவான் என்று தெரியும்

சீனி.! அவரிடம் சொல்லலாம்.. ஆனால் தங்கையின் வாழ்வு என யோசித்தார். எல்லாம் சில நொடிதான். பின் அவரிடமே சொல்லிவிடலாம் என்று முடிவு செய்தார்.

இப்படி இவர் யோசிக்கும் நேரம் நாயகியிடமிருந்து அவருக்கு போன் வந்தது.

‘இவளுக்கு வேற வேலையே இல்ல’ என சலித்தபடியே தான் போனை எடுத்தார்.

அந்தப் பக்கம் பேசிய நாயகியோ பதட்டமாக ப்ரீத்தாவைப் பற்றி கூர, இதுவரை யோசித்த அனைத்தையும் மறந்துவிட்டு, தங்கை மகளைப் பார்க்க வேகமாக மருத்துவமனைக்கு ஓடினார்.

நாயகியும், சீனியும் அழுதபடியே அந்த கேஷ்வாலிடி முன் நின்றிருந்தனர்.

அவளுக்கு பெரிதாக எந்த அடியும் இல்லையென்று ஷ்யாமிற்கும், இளங்கோவிற்கும் மட்டும்தான் தெரியும்.

அவளால் இப்போது இந்த சூழ்நிலையை கையாள முடியாது என்று இருவரும் பேசி வைத்து, அவளுக்கு தூங்குவதற்கான ஊசியை செலுத்தினர்.

ஆனால் வெளியில் அவர்களிடம் சொல்லும் போது கிரிடிகல் தான் என்றிருந்தான் ஷ்யாம்.

அதற்கு தகுந்தாற் போல அந்த இடமே பரபரப்பாகவே காட்டப்பட்டது.

நாயகியின் இத்தனை வருட ஆட்டம் அந்த இடத்தில் அடங்கிப் போவதை போல் இருந்தது.

ஆம்.. வெளியில் வந்த ஷ்யாமின் காலிலேயே விழுந்துவிட்டார் நாயகி.

“தம்பி என் பொண்ணை எப்படியாவது காப்பாத்திக் கொடுத்துடுங்க..” என மடங்கி அழுது கதறினார்.

எப்போதும் அகங்காரம் பிடித்து, யாரையாவது அதட்டி உருட்டி மிரட்டும் நாயகியிடம் இப்படி ஒரு அழுகையை யாருமே எதிர்பார்க்கவில்லை.

இளங்கோவும், ராணியும்தான் அவரை மாறி மாறி சமாதானம் செய்தார்கள்.

அதே நேரம் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த செழியன் தந்தையின் கார் ப்ரேக் பிடிக்காமல் சென்றது. அவர் பயத்தில் காரின் வேகத்தை குறைக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை.

இருக்க இருக்க காரின் வேகம் கூடியதே தவிர, குறையவில்லை. அவருக்கு புரிந்து போனது இந்த காரிலிருந்து நாம் உயிருடன் தப்ப முடியாது என்று.

அதே நேரம் உண்மையை சொல்லாமல் உயிரை விடவும் அவருக்கு மனமில்லை.

அத்தனை பயத்திலும் இளங்கோவிற்கு அழைத்து உண்மையை சொன்னவர், எதிரே வந்த லாரியை கவனிக்காமல் காரைவிட, அவர் காரோ அந்த லாரியின் முன் பக்கத்தில் மோதி அப்பளமாக நொறுங்கித் தீ பிடித்தது.

அதே நேரம் அழுது கொண்டே அமர்ந்திருந்த மகேஸ்வரியின் மேல் வந்து விழுந்தது அந்த மாலை. ஆம்! லட்சுமியின் புகைப்படத்தில் மாட்டியிருந்த சந்தன மாலை. அவர் திடுக்கிட்டு மேலே பார்க்க, லட்சுமி அவரைப் பார்த்து சன்னமாய் புன்னகைத்தாள்.