• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 49

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur
தாமரை - 49

நாயகிக்கு அடுத்து என்ன செய்வது என்றேத் தெரியவில்லை. கேட்ட செய்தியின் அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னுமே வெளிவரவில்லை.

மகள் எப்படி இருக்கிறாள் என்று இன்னும் அவருக்குத் தெரியவே இல்லை. அதற்குள் அவர் அண்ணனின் இறப்பு செய்தி வந்துவிட்டது.

கேட்டதிலிருந்து செழியனுக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறார் சீனி. ஆனால் அவன் போன் முழு அழைப்பும் சென்று முடிகிறதே தவிர, எடுக்கப்படவில்லை.

“செழியன் எங்க போனான் நாயகி. போன் எடுக்கவே இல்ல..” என்று மனைவியிடம் கேட்க,

“எனக்குத் தெரியலயே.. நான் இன்னைக்கு அவன்கிட்ட பேசவே இல்லை.” என அழுது கொண்டே இருக்க,

“சரி நீ இங்க இரு.. நானும் இளாவும் அங்க போய் பார்த்துட்டு உனக்கு சொல்றோம்..” என்றவர் இளங்கோவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

இங்கு ‘என்னை கேட்காம பேசன்ட் அட்டெண்டரை உள்ள விடவேக்கூடாது..’ என கண்டிப்பாக எச்சரித்திருந்தான் ஷ்யாம்.

அதனால் நாயகியால் ப்ரீத்தாவை பார்க்க முடியவில்லை. செய்தி கேட்டு வசந்தியும் வந்து விட்டார். அவருக்கும் பேத்தியின் நிலை சொல்லப்பட, பயத்தில் அப்படியே ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டார்.

ப்ரீத்தாவை நர்சின் பாதுகாப்பில் விட்டுவிட்டு தாமரையைப் பார்க்க வந்தான் ஷ்யாம்.

அவன் முகம் மிகவும் இறுகிப் போயிருந்தது. அவனுக்கு அந்த வீடியோப் பற்றித் தெரியும் என்று தாமரைக்கு தெரியவில்லை. அவனுக்கு மட்டுமல்ல ப்ரீத்தாவிற்கும் தெரியும் என்றும் அவளுக்குத் தெரியாது.

அதனாலே அவள் மிகச் சாதாரணமாக ஷ்யாமை எதிர்கொள்கிறாள் என்று ஷ்யாமிற்கு புரிந்தது.

தாமரையோ தன் கணவனுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது என்று நினைத்து தன் மனநிலையை சமன்படுத்த நினைத்தாள்.

“ப்ரீத்தா எப்படி இருக்கா ஷ்யாம்..?” என பதட்டமாகவே கேட்க,

“ராணிம்மா. பாட்டி வந்துருக்காங்க. இதை கேட்டு அதிர்ச்சியில அப்படியே உக்காந்துட்டாங்க, நீங்க அவங்ககூட கொஞ்சம் இருக்கீங்களா?” என்றான் தாமரையின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.

“ஓ.. இதோ போறேன் தம்பி..” என வேகமாக அவர் வெளியில் செல்ல, குழப்பமாக ஷயாமையே பார்த்தாள் தாமரை.

“இப்போ பேபிஸ் மட்டும் இல்லன்னா… உன்னை அடிச்சு பல்லெல்லாம் கழட்டிருப்பேன் ராஸ்கல். என்னடி பண்ணிட்டு வந்துருக்க..” என கடுமையாக கேட்க,

“என்ன ஷ்யாம்.? எதுக்கு இவ்ளோ கோபம். என்ன நடந்தது? எனக்கு புரியுற மாதிரி பேசமாட்டியா.?” என அவளும் கத்த,

“என்ன புரியனும் உனக்கு? உனக்கு புரியலன்னு சொன்னா இந்த உலகம் நம்புமா? எப்படி எங்களையெல்லாம் ஏமாத்தி வச்சிருக்க நீ..?” என கத்தியவன்,

“அந்த வீடியோ பத்தி மாமாவுக்கு தெரியுமா?” என்றான் கோபமாக.

“வீடியோ.. எந்த வீடியோ.. ஹான் நீ.. நீ பார்த்தியா.?” என்றவளுக்கு உடலெல்லாம் கூசிப்போக, வேகமாக முகத்தை மூடி உடலையும் குறுக்கிக்கொண்டு ‘ஓ…” என கத்தியழ ஆரம்பித்தாள்.

“ஹேய் பைத்தியம்.. முதல்ல இப்படி அழறதை நிறுத்து.. எதுக்கு இப்போ அழுது எங்களுக்கு டென்சன் ஏத்துற..” என கத்தியவன், “அதை நான் பார்க்கல, நான் மட்டும் இல்ல யாரும் பார்க்கல. முதல்ல நடந்ததை மறைக்காம சொல்லு..” என அதட்ட,

‘மாட்டேன்..’ என தலையை ஆட்ட,

“அம்மு எனக்கு கோபம் வந்துச்சுன்னா நீ தாங்க மாட்ட..” என அதட்டி, சற்றுமுன் நடந்த அனைத்தையும் சொல்ல பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள்.

‘ப்ரீத்தாவை மிரட்டினானா?’ என்றாள் உள்ளே சென்ற குரலில்..

“ஹான் ஆமா..” என்றவன் செழியனின் தந்தை ஆக்சிடெண்டில் இறந்து விட்டதையும் கூற,

‘ஹோ’ என்றவளுக்கு அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றேத் தெரியவில்லை.

வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி அமைதியாகவே அமர்ந்திருக்க, “இளா உங்கிட்ட இதைப்பத்தி பேசினானா?” என பதில் சொல்ல மாட்டேங்கிறாளே என்ற கடுப்பில் கத்தினான்.

“ஹான் ஆனா இதைப்பத்தி பேசவே மாட்டேங்கிறான். அதை விடு, வேற என்ன மறைக்கிற, உண்மையை சொல்லுன்னு கேட்டான்..” என்றாள் அவளும் கடுப்பாக.

அவள் வயிற்றை சுட்டிக் காட்டி “இன்னும் எத்தனை நாள் மறைக்க முடியும்னு நினைக்கிற நீ..” என்றவன், “இன்னைக்கு நீ சொல்ற, இல்லைன்னா நான் சொல்லிடுவேன்..” என முடிக்க, தாமரைக்கு கோபம் வந்துவிட்டது.

“நீ சொல்லக்கூடாது.. நானும் சொல்லமாட்டேன்..” என வீம்பு பண்ண,

“அம்மு.. சூழ்நிலை தெரியாம பேசக்கூடாது. அவன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அவன் செஞ்சதை நான் நியாயப்படுத்தல. அவன் மேல எனக்கு இன்னும் கோபம் இருக்குத்தான். ஆனா அதுக்காக நீ செய்றதை நான் சரின்னு சொல்லமாட்டேன். இது அவனுக்கு தெரிஞ்சிருக்கனும். நீ மறைக்க என்ன ரீசன் வெச்சிருக்க.. உப்புசப்பில்லாத ஒரு காரணம். அதை சொன்னா இளங்கோவால ஏத்துக்க முடியுமா சொல்லு.. இதையே இளா உங்கிட்ட மறைச்சிருந்தா நீ என்ன செஞ்சிருப்பன்னு சொல்லு..” என மேலும் பேச, தாமரையின் அழுகை கூடியதே தவிர குறையவில்லை.

“நீ வருத்தப்படனும்னு நான் பேசல அம்மு. அது உனக்கேத் தெரியும்.” என்றவன், “நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லல..” என்றான் மீண்டும்.

“ஸாரி ஷ்யாம்.. வெரி சாரி.. இது.. இதை எங்கிட்ட கேட்காத. அப்பாவுக்கு தெரியும் அவ்ளோதான். நான் அத்தான்கிட்ட சொல்றேன். ப்ளீஸ் உங்கிட்ட இதை எப்படி சொல்ல..” என்றவளுக்கு அவமானத்தில் முகமே கருத்துப் போனது.

“அம்மு.. நீ என்னை என்னனு நினைச்ச.. நான்..?” என்றவன், “சரி விடு…” என வெளியில் செல்ல, அப்போதுதான் அவள் வார்த்தைகள் அவனை எந்தளவிற்கு காயப்படுத்தியிருக்கும் என்று அவளுக்கு புரிந்தது.

“அய்யோ ஷ்யாம்.. நான் அந்த மீனிங்க்ல சொல்லலடா. ப்ளீஸ் நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிக்கோடா..” என அவனிடம் கெஞ்ச,

“எந்த மீனிங்க்.. ஃப்ரண்டாவோ, ஒரு ப்ரதராவோ நீ ஃபீல் பண்ணிருந்தா கண்டிப்பா சொல்லிருப்ப. உன் அப்பாக்கிட்ட சொல்ல முடிஞ்ச உன்னால என்கிட்ட சொல்ல முடியல இல்லையா? அப்போ உனக்கு நான் யாரோ தான அம்மு.” என்றவனுக்கு என்ன முயன்றும் குரல் உடைந்துதான் போனது.

“ஷ்யாம் அப்படியெல்லாம் இல்லடா.. இதை எப்படி உனக்கு புரிய வைக்கன்னு எனக்குத் தெரியல. ஆனா நீ நினைக்கிற மாதிரி நான் யோசிக்கவே இல்ல. புரிஞ்சிக்கோ ப்ளீஸ்..” என்றாள் மன்றாடும் குரலில்.

“சரி.. நீ சொல்றதை நான் நம்புறேன். அப்போ இன்னைக்கு இளங்கோக்கிட்ட எல்லாத்தையும் மறைக்காம சொல்லிடு. இதுக்குப் பிறகு எந்த பிரச்சினையும் வேண்டாம். நான் மாமாவுக்கு கூப்பிட்டு பேபி பத்தி சொல்லிட்டேன். நீ ரிலாக்ஸ் ஆகிட்டு அவர்கிட்ட பேசு. அத்தை ரொம்ப பயந்து போய் இருக்காங்க. அவங்களை சமாதானம் செய்..” என்று வெளியில் நகரப் போக,

“ப்ரீத்தா.. ப்ரீத்தா எப்படி இருக்கா?” என்றாள் தாமரை.

“தூங்கிட்டு இருக்கா. ஸ்லீப்பிங்க் டோஸ் கொடுத்துருக்கு. சின்னப்பொண்ணு இல்லையா? இன்னும் நடந்த பிரச்சினையில் இருந்து வெளியில் வரல. தூங்கி எழுந்தா பெட்டர் ஆவான்னு நினைக்கிறேன் பார்க்கலாம். அதுக்குள்ள அவங்கம்மா என்ன என்ன கூத்து பண்ண போறாங்களோ..” என்றபடியே சென்றுவிட்டான்.

இங்கு நாயகி முதற்கொண்டு அனைவரும் செழியனுக்கு அழைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் போன் எடுக்கப்படவே இல்லை.

“குடிகாரப் பைய, எங்க போய் தொலைஞ்சானோ தெரியல..” என புலம்பியபடியே இருந்தார் சீனி.

இளங்கோ எதுவும் பேசவில்லை. அமைதியாக அவரோடு நின்றிருந்தான். அதை உணர்ந்த சீனி “என்னாச்சு இளா?” என கேட்க,

“ஒன்னும் இல்லையே மாமா.. தாராவை ஊருக்கு அனுப்பிடலாம்னு இருக்கேன். அத்தைக்கிட்டயும் சொல்லிட்டேன். உங்களத்தான் கூட அனுப்பலாம்னு நினச்சேன். இப்போ முடியாது இல்லையா? அதான் வேற என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன்..” என்றான்.

“ஓ.. ஆனா ஏன் ப்பா.. வளைகாப்புக்கு இன்னும் கொஞ்ச நாள்தானே இருக்கு..” என்றார் யோசனையாக.

“ஆமா மாமா.. ஆனா அவளுக்கு அவங்க அப்பா கூட இருக்கனுமாம். ரெண்டு நாளா கேட்டுட்டே இருக்கா. பாட்டியும் அனுப்பி வைக்கத்தான் சொல்றாங்க..” என்றவன், “ஷ்யாமை கொண்டு போய் விட சொல்றேன்..” என்றான் முடிவாக.

“ஹ்ம்ம் அதுவும் சரிதான் இளா.. அவர்கிட்ட பேசிட்டு சொல்லு. இல்லைன்னா நீ போய்ட்டு வா. இங்க நான் பார்த்துக்கிறேன்..” என்றார் பெரியவராய்.

“ம்ம் சரி மாமா.. நீங்க செழியனுக்கு கால் பண்ணுங்க. அவன் ப்ரண்ட்ஸ் யாரும் தெரிஞ்சா விசாரிங்க. பாடியை கொடுத்துட்டா மத்த சடங்கெல்லாம் செய்ய அவன் வேணும். அத்தைக்கிட்ட கேளுங்க..” என்றான் அக்கறையாக.

“அந்த நாய் எங்க போய் தொலைஞ்சதோ தெரியல இளா. இப்போ அவன் வர வரைக்கும் வச்சிருக்கவும் முடியாது.. சரி நாமளே செய்யலாம்னா அந்த பைத்தியக்காரன் வந்து என்ன பிரச்சினை பண்ணுவானோன்னு இருக்கு..” என்றார் கவலையாக.

“நீங்க அத்தைக்கிட்ட பேசுங்க மாமா..” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே இளங்கோவிற்கு போன் வர, “ஒரு நிமிசம் மாமா..” என போனை எடுத்து தள்ளி வந்து ‘என்னடா.?” என்றதும்,

“ஸார் லாரி ட்ரைவர்க்கு செட்டில் பண்ணியாச்சு. ட்ரைவர் மேல கேஸ் ஃபைல் பண்ணல. கார் ஓட்டிட்டு வந்தவர் மேலதான் தப்பு. அவர் கார்லதான் ப்ரேக் ஒர்க் ஆகலன்னு கன்ஃபார்ம் பண்ணிருக்கோம்..” என்றதும்,

“குட் ஒர்க்.. அந்த டிடெக்டிவ் ஏஜென்சி ஆளை போய் பார்த்தியா?”

“இப்போ அந்த ஆஃபிஸ்லதான் வெய்ட் பண்றேன் பாஸ்..”

“ஓக்கே.. அவன் ஒரு பென் ட்ரைவ் கொடுப்பான். வாங்கிட்டு வந்து என்னோட கபோர்ட்ல வச்சிடு.. நான் நைட் வந்து எடுத்துக்கிறேன்..”

“ஓக்கே சார்.. செழியன் மேட்டர்..?”

“இப்போ அவனை டச் பண்ண வேண்டாம். டுடே நைட் நான் தேனி போறேன். வைஃபை விட்டுட்டு வர டூ டேய்ஸ் ஆகும். அதுக்குப் பிறகு பார்த்துக்கலாம். அதுவரை மாப்பிள்ளைக்கு கவனிப்பு செம்மையா இருக்கனும்..”

“ஓகே சார். அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். பை சார்..”

“ம்ம்.. ஓக்கே பை..” என வைத்துவிட்டவன் மீண்டும் வந்து சீனியிடம் நின்று கொண்டான்.

அமைதியாக அந்த இடத்தில் இருந்தாலும், அவன் முகத்திலும், உடலிலும் காணப்பட்ட அந்த அமைதி
அவன் உள்ளுக்குள் இல்லை.

எரிமலையாய் வெடித்து சிதறிக் கொண்டிருந்தது அவனது கோபம்.

தாமரைக்காகவும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காகவும் தான் மிகவும் பொறுமையாக இதை கையாலுகிறான்.

அதைவிட முக்கியக் காரணம் மகேஸ்வரி அத்தை. தன் தந்தையால் அவர் இழந்த நிம்மதியை, அவருக்கு அவன் திருப்பிக் கொடுக்க வேண்டும். தாமரையோடு அவன் வாழும் வாழ்வுதான் அவருக்கு நிம்மதியைக் கொடுக்கும் என அவனுக்குத் தெரியாதா?

இத்தனை வருடங்கள் அவனை பிரிந்து மிகவும் வேதனையில் இருந்தார். மீண்டும் அப்படியொரு வேதனையைக் கொடுக்க அவன் தயாராக இல்லை.

அவனுக்குள் ஒரு திட்டம். இங்கிருக்கும் அனைத்தையும் விட்டுவிட்டு அத்தை மாமா, மனைவி, குழந்தைகள் என குடும்பமாக அந்த கிராமத்தில் வாழ வேண்டும் என்று.

எந்த ஊரும், எந்த சொந்தமும் வேண்டாம் என கதிரவன் வந்தாரோ, அதை வேண்டும் என நினைத்து அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறான் இளங்கோ.

அதனால் அவனுக்குத் தெரிந்த உண்மைகளை யாரிடமும் சொல்லாமல், அவனே அனைத்தையும் பார்த்து, ஒவ்வொருத்தருக்கும் தண்டனையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

அவனுக்குத் தெரிந்த சில உண்மைகளுக்கே ஒரு உயிரை எடுத்துவிட்டான். அடுத்த உயிரை எடுக்க நாளும் பார்த்து விட்டான்.

மொத்த உண்மையும் தெரிந்தால் என்ன செய்வான்.? எப்படி அந்த கோபத்தை வெளிப்படுத்துவான்.