• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 52

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur
தாமரை - 52

ஷ்யாமின் உடல் விரைத்தது ஒரு நொடிதான். பின் தளர்ந்து “கண்டிப்பா நீதான் பார்க்கனும். என்னோட பேரண்ட்ஸ பார்த்துக்க எனக்கு என்ன ரைட்ஸ் இருக்கோ, சேம் ரைட்ஸ் உன்னோட பேரண்ட்ஸ் பார்க்க உனக்கும் இருக்கு. அவங்க இங்க இருக்குறாங்கன்னா இருக்கட்டும். இல்ல அவங்களை நம்ம கூடவே கூப்பிட்டு வரதுன்னாலும் வந்துக்கலாம். எனக்கு நோ அப்ஜக்சன். ஆனா நீ முக்கியமான ஒன்னை மறந்துட்ட. இளா எப்படி இதுக்கு சம்மதிப்பான். உன்னோட பேரண்ட்ஸ் நீதான் பார்க்கனும்னு அவன் பொறுப்பை உங்கிட்ட தள்ளி விடுவானா? நீ இப்படி யோசிச்சன்னு தெரிஞ்சாலே எவ்ளோ வருத்தப்படுவான்னு தெரியுமா?” என்றான் ஷ்யாம்.

“ம்ம் எனக்குத் தெரியும். நான் இப்படி யோசிச்சேன்னு தெரிஞ்சாலே மாமா என்கூட பேச மாட்டாங்க. ஆனா என்னோட பொறுப்பை நான் தட்டி கழிக்கிற மாதிரி இருக்காதா? அம்மாவும் அப்பாவும் என்னை சுயநலமா யோசிக்கிறேன்னு நினைக்கமாட்டாங்களா?” என்றாள் வருத்தமாக..

“ம்ச்.. என்னடி நீ? முதல்ல நீ இப்படி யோசிக்கிறதை நிறுத்து. தலையில அடிபட்டு மூளை குழம்பிடுச்சுன்னு நினைக்கிறேன். அதுதான் லூசுத்தனமா யோசிக்கிற..?” என்று அவள் தலையில் வலிக்காமல் குட்டியவன், “நீ இதெல்லாம் யோசிக்காத குட்டி, உனக்கோ நம்ம ஃபியுச்சருக்கோ எந்த பிரச்சினையும் வராத மாதிரி ப்ளான் பண்ணலாம் ஓகேதான. இப்போ ரெஸ்ட் எடு..” என்றான் ஷ்யாம்.

“ஹான்.. அம்மா அப்பா யாரும் இங்க வரலையா?”

“ம்ம் உங்கிட்ட சொல்ல வேண்டாம்னு பார்த்தேன். உனக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னு உங்க அம்மா அவங்க அண்ணனுக்கு கூப்பிட்டு சொல்லிருக்காங்க. அதை கேட்டு பதட்டத்துல கிளம்பி வந்துருக்கார். வர வழியில கார் ஆக்சிடென்ட். அவர் ஸ்பாட் அவுட். செழியன் இல்லாததுனால இளங்கோதான் எல்லாம் பார்த்துக்கிட்டான். உன் பேரண்ட்ஸ் அங்கதான் இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்க. அவங்க வர்ரதுக்குள்ள உன்கிட்ட பேசிடனும்னு முடிவு பண்ணேன்.”

“என்ன சொல்றீங்க? அப்போ மாமா இல்லையா? செழியன் வரலையா?”

“செழியன் எப்படி வருவான்? அவனைத்தான இளா வச்சிருக்கானே.”

“ஹான்.. இது வேற யாருக்கும் தெரியுமா? தெரிஞ்சா பிரச்சினை ஆகிடாதா.?”

“எப்படி தெரியும்? ஏன் நீ சொல்லப் போறியா? அவனோட ப்ளான் என்ன தெரியுமா?” என ஆரம்பித்து, செழியனின் திட்டத்தை விவரிக்க, ப்ரீத்தாவிற்கு அதிர்ச்சியில் மீண்டும் மயக்கமே வந்துவிட்டது.

“நிஜமாவா.?” என்றாள் அதிர்ச்சியோடு

“ம்ம் இளா கூட உன் மேரேஜ் நடக்காததுனால மட்டும்தான் இவ்ளோ பொறுமையா இருந்திருக்கான். நடந்திருந்தா அப்பவே அவனோட உண்மையான குணம் தெரிஞ்சிருக்கும்.. இப்போ இளாக்கிட்டதான் இருக்கான். இளா கண்டிப்பா அவனை உயிரோட வெளிய விடமாட்டான். நீ அதையெல்லாம் யோசிக்காத. இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடு. நாளைக்கு நாம ஊருக்கு போறோம்..” என்றான் முடிவாக.

“அம்மா அனுப்ப மாட்டாங்க. கண்டிப்பா அங்க அனுப்பவே மாட்டாங்க..”

“அதெல்லாம் பாட்டி பார்த்துப்பாங்க. அவங்களே பேசி சம்மதிக்க வைப்பாங்க. நீ பயப்படாம இரு.”

“ம்ம் சரி.. “ என்றதும், ஷ்யாமும் அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

இளங்கோ ஊருக்கு கிளம்புவதற்கு முன்னாடியே வசந்தியிடம் இதுபற்றி பேசிவிட்டுத்தான் சென்றிருந்தான். அவருக்குமே நடப்பதையெல்லாம் பார்க்க சற்று பயமாகத்தான் இருந்தது.

அதனால் மகனிடம் இது பற்றி பேச வேண்டும் என்று நினைத்திருந்தார். அப்போதுதான் சீனியும் நாயகியும் அங்கு வந்தனர்.

அண்ணனின் இழப்பு நாயகியை பெரியளவில் பாதித்திருக்கிறது என்று அவர் ஓய்ந்து போன தோற்றத்திலேயே புரிந்து போனது.

செழியன் எங்கே போனான்? என்பதுதான் அவருடைய மிகப்பெரிய கேள்வி. ஆனால் அந்த கேள்விக்கான பதில்தான் அவருக்கு கிடைக்கவில்லை.

மகளைப் பார்க்க சென்றவர், அவள் உறக்கத்தில் இருப்பதைப் பார்த்து வெளியில் வந்து வசந்தியின் அருகில் அமர்ந்தார்.

“ம்மா.. நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. நேத்து இருந்து இங்கதான் இருக்கீங்க.. உங்களுக்கும் முடியாம போயிட போகுது.”

“இல்ல சீனி.. எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல. ப்ரீ குட்டியை பார்க்குறத விட எனக்கு என்னோட உடம்பு முக்கியமா? அதெல்லாம் எதுவும் இல்ல. நீங்க சாப்பிட்டீங்களா? அங்க எல்லாம் முடிஞ்சதா.?”

“செழியன் பத்தி எந்த விவரமும் தெரியல த்த.. அவன் இப்படி சொல்லாம போறவனே கிடையாது. எந்த பிரச்சினையிலயாவது மாட்டிக்கிட்டானா? இல்ல அண்ணன் மாதிரி இவனும் எதுவும் ஆக்சிடென்ட்ல..” எனும் போதே நாயகிக்கு கண்ணீர் வர,

“ம்ச் அப்படியெல்லாம் இருக்காது நாயகி. அவன் ப்ரண்ட்ஸ் கூட டூர் போயிருப்பானோ என்னவோ. அங்க நெட்வொர்க் இல்லாம இருக்கலாம். நீ பயப்படுற மாதிரி இருக்காது.. நீ அமைதியா இரு..” என மனைவியை தேற்றினார் சீனி.

“ஆமா நாயகி.. அப்படி தப்பா எல்லாம் நடந்திருக்காது. நீ அவனை நினச்சு மனசை குழப்பாதே..” என்றவர் “எனக்கு என்னமோ மனசே சரியில்ல சீனி, பாப்பாவை கூப்பிட்டு நான் ஊருக்கு போறேன். அடுத்த வாரம் திருவிழா வருதாம். இளங்கோ எங்க ரெண்டு பேரையும் அங்க வர சொல்றான். நீங்க காரியம் முடிஞ்சதும் வந்துடுங்க..” என்றார் வசந்தி.

“ஊருக்கா.. அங்க எதுக்கு அத்தை. அதெல்லாம் வேண்டாம். அங்க இருக்குறவங்க நம்ம பாப்பாவை பார்த்தா தப்பா பேசுவாங்க.”

“யாரும் எதுவும் பேசமாட்டாங்க. நீயே எடுத்துக் கொடுப்ப போல.” என மருமகளைச் சாடியவர் “எனக்கு இங்க நடக்கிறதெல்லாம் பார்க்கும் போது பயமா இருக்கு சீனி. பாப்பாவுக்கு நடக்க இருந்தது தான் இவங்க அண்ணனுக்கு நடந்துருக்கோனு எனக்குத் தோனிகிட்டே இருக்கு. இங்க இருந்தா இன்னும் ஏதாவது நடக்குமோன்னு இருக்குப்பா.. உங்களையுமே இங்க விட்டுட்டு போக பயமா இருக்கு. ஆனாலும் நீங்க இங்க இருந்தே ஆகனுமே..” என தன் பயத்தை மகனிடம் கூற, சீனிக்குமே இந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்களைப் பார்த்து இதே யோசனைதான்.

அவருமே இது பற்றி இளங்கோவிடம் பேச வேண்டும் என்று நினைத்தார்.

அதனால் “இளா என்ன சொன்னான் ம்மா..?” என்றார்.

“அந்த டாக்டர் தம்பி நாளைக்கு ஊருக்கு போறாராம், அவர் கூடவே எங்களை வர சொல்றான். எங்களைப் பார்த்துட்டு அவன் இங்க கிளம்பி வந்துடுறேனு சொல்றான். அப்புறம் திரும்பி திருவிழாவுக்கு வந்தா போதும்னு சொல்றான்.. நீங்களும் இந்த கருமாதி முடிஞ்சதும் அங்க வந்துடுங்க..” என்றார் சற்று கண்டிப்பாக.

“அத்த.. அந்த பையன்கூட எப்படி அனுப்ப முடியும். அதெல்லாம் வேண்டாம் இங்கேயே பார்த்துப்போம்..” என்றார் நாயகி மீண்டும்.

“நீ முதல்ல வாயை மூடு.. அம்மா சொல்றாங்கன்னா காரணம் இருக்கும். நீயும் நானும் அவ கூட இருந்து பார்த்துக்க முடியுமா? உன் அண்ணன் மகனை வேற தேடனும். அதை பார்க்கிறதா, இதை பார்க்கிறதா?” என மனைவியிடம் கத்தியவர்,

“ம்மா நாளைக்கு நீங்க கிளம்புங்க. நான் அந்த டாக்டர் தம்பிக்கிட்ட பேசிடுறேன்..” என்றார் சீனி.

நாயகிக்கு இதில் சுத்தமாக விருப்பமே இல்லை. ஆனால் இப்போது அவருக்கு செழியனை தேட வேண்டும். கணவர் கூறுவது போல ப்ரீத்தாவை வைத்துக்கொண்டு செழியனை தேடுவது சிரமம் என்று புரிந்தது, அதனால் அடுத்து எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார்.

“நான் நர்ஸ்கிட்ட சொல்லிட்டு வந்து உங்களை வீட்டுல விட்டுட்டு வரேன். பேக்கிங்க் எல்லாம் முடிச்சிட்டு கூப்பிடுங்க, வந்து அழைச்சிட்டு வரேன். பாப்பாவும் தூக்கத்துல தானே இருக்கு.. அதுக்குள்ள போய்ட்டு வந்துடலாம்..” என்றவர் இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

இங்கு செக்கப் முடிந்து வெளியில் வந்ததுமே தாமரைக்கு மிகவும் சோர்வாக இருந்தது.

“ப்பா.. வீட்டுக்கு போகலாமா? எனக்கு படுக்கனும் போல இருக்கு..” என செல்வத்திடம் கூற,

“சரி அம்மு.. நீ கார்ல உட்கார்.. நான் போய் இளாக்கிட்ட சொல்லி கூப்பிட்டு வரென்..” என்றதும்,

“ப்பா.. அவங்க வரும் போது வரட்டும்.. நீங்க வாங்க போகலாம்..” என கடுப்பாகிவிட்டாள்.

“என்ன அம்மு இதெல்லாம். நம்ம வீட்டுக்கு வந்தவங்களை இப்படியா விட்டுட்டு போக முடியும். இளா நம்ம வீட்டு மாப்பிள்ளை. மரியாதை இல்லாம நடத்தக்கூடாது..” என செல்வம் ஆரம்பிக்கவுமே,

“ப்பா.. எனக்கு ஒன்னுமில்ல நான் வெய்ட் பண்றேன்.. நீங்க போய் உங்க ஆசை மருமகனை கூப்பிட்டு வாங்க..” என பல்லைக் கடிக்க,

“ம்ச்.. என்ன அம்மு நீ..?” என்றவர் சுமதியின் அறைக்குள் செல்ல, தாமரையோ இருந்த கடுப்பில் தந்தையை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவளும் பார்க்கிறாள் தானே! வந்ததில் இருந்து செல்வம் இளா.. இளா என அவன் பின்னே அலைவதை.

ஏற்கனவே மகேஸ்வரியும் ராணியும் அவனை விட்டு விலகுவதே இல்லை. அதுவே அவளுக்கு கடுப்பாகும். இப்போது அந்த லிஸ்டில் அவள் தந்தையும் சேர்ந்துக்கொள்ள பெண்ணுக்கு ஒரே புகைச்சல்.

கடுகடுவென அமர்ந்திருக்க, சுமதியின் அறையில் இருந்த வந்த நால்வரையும் பார்த்து முறைத்துக்கொண்டே காரை நோக்கி வேக வேகமாக நடக்க,

“ஏய்.. ஏய் அறிவிருக்காடி.. வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு டங்கு டங்குன்னு நடக்கிற..” என மகேஸ்வரி அதட்டியபடியே அவளிடம் வர,

“இப்போ எதுக்கு கத்துறீங்க. எனக்கு டையர்டா இருக்கு படுக்கனும். என்னை வீட்டுல விட்டுட்டு வந்து உங்க மாநாட்டை நடத்த வேண்டியதுதானே..” என தாமரை கத்த,

“என்னாச்சு இவளுக்கு.. பேய் மாதிரி கத்துறா.” என புலம்பியபடியே பின் பக்கம் கதவைத் திறக்க, யாரையும் பார்க்காமல் முகத்தைத் திருபிக்கொண்டு போய் உள்ளே அமர, ஒரு பக்கம் ராணியும், மறுபக்கம் மகேஸ்வரியும் அமர, முன்னால் இளங்கோ அமர, காரை செல்வம் எடுத்தார்.

‘புசுபுசுவென மூச்சூவிட்டபடி அமர்ந்தவளை பார்த்த இளங்கோவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘பொறாமை.. மேடத்துக்கு பொறாமை பொங்கி வழியுது..’ என சிரித்தபடியே வர,

ராணி அமைதியாக வராமல் “ஏன் இளா சிரிக்கிற..?” என கேட்டு வைக்க,

“இல்ல ராணிம்மா… காருக்குள்ள ஒரே கருகுன வாசம்.. அதுதான் எங்க இருந்து வருதுனு யோசிச்சேன். சிரிச்சேன்..” என மேலும் சிரிக்க…

“ப்பா.. அவனை சும்மா வர சொல்லுங்க. எனக்கு கோபம் வந்தா அவ்ளோதான்..” என தாமரை கத்த,

“ஏய் பைத்தியக்காரி.. வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு எப்படி கத்துற.. மூச்சு பிடிச்சா என்ன செய்வ? அதென்ன புருசனை போய் அவன் இவன்னு பேசுற.. வீட்டுக்கு வா வாயிலேயே சூடு வைக்கிறேன்..” என மகேஸ்வரி ஆரம்பிக்க,

“இப்போ எல்லாம் அத்தான்னு கூப்பிடுறதே இல்ல அத்தம்மா.. அந்த ஷ்யாம் கூட சேர்ந்து அவன் இவன்னு பேசுறது, வாடா போடான்னு பேசுறது, சில நேரம் ரெண்டு பேரும் கெட்ட வார்த்தைல கூட திட்டுறாங்க தெரியுமா? உங்களுக்காகத்தான் சும்மா இருக்கேன்..” என சிரிப்பை அடக்கி பாவம் போல் கூற, அதுவரை இருந்த மொத்த பொறுமையும் தாமரைக்கு போய்விட்டது.

‘டேய்… இன்னைக்கு செத்தடா..” என முன்னால் எட்டி அவன் மண்டையைப் பிடித்து ஆட்ட ஆரம்பித்தாள்..
(பிதாமகன் படத்தில் லைலாவை இமேஜின் செய்து கொள்ளவும்)