• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 70(1)

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,341
556
113
Tirupur
தாமரை - 70

“என்ன இந்த சக்தி பையன் பேரு வைக்கிறதுக்கு எல்லாம் சீர் செஞ்சுகிட்டு இருக்கான்..” என கூட்டத்தில் பெரியவர் ஒருவர் பேச

“ரெண்டு வீட்டிலேயும் பெருசா எந்த விசேஷமும் எத்தனை வருஷம் நடக்கல. தாமரைக்கு வளைகாப்பு வைக்கலாம்னு நெனச்ச நேரம் இளாவுக்கு விபத்து நடந்துடுச்சு. அதோட மூணு பிள்ளைங்களை சுமந்துட்டு இருக்கும்போது வளைகாப்பு வெச்சா, ஊர் கண்ணே அவ மேலதான் இருக்கும்னு மகேசு வைக்க வேண்டாம்னு சொல்லிடுச்சு. இனி இந்த வீட்டுல நடக்குற எல்லாமே விசேஷம் தானே.. அதுதான் இப்ப இருந்தே சக்தி பையன் செய்றான்.” என கூட்டத்தில் மற்றொரு பெரியவர் கூற

“அதுக்காக புதுசு புதுசா பழக்கி விடக்கூடாது இல்ல.. பணம் இருக்கு அதனால இவங்க செய்றாங்க.. இல்லாத பட்டவங்க என்ன செய்வாங்க சொல்லு..” என்றார் அந்த பெரியவர்.

அவர் சொல்வதில் நியாயம் இருந்தாலும், செய்பவர்களை செய்யாதே என்று சொல்ல எந்த உரிமையும் அவர்களுக்கு இல்லையே..

“அட விடுங்க பெரியப்பா, பல வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் இந்த வீட்டுல விசேஷமே நடக்குது. அதை ஏன் தப்பா பாக்கறீங்க.. அவங்க சந்தோஷத்தை இப்படி காட்டுறாங்க.. நாம நம்ம பிள்ளைங்ககிட்ட சொல்லித்தான் வளர்க்கணும்.” என்றார் மற்றொருவர்.

“அது என்னமோ உண்மைதான்யா. இப்பதான் செல்வம் முகத்திலயும், அந்த புள்ள மகேசு முகத்துலயும் சந்தோஷ கலையே தெரியுது..” என்று பேச்சை முடித்துக் கொண்டார் பெரியவர்.

இப்படி ஊர்காரர்கள் ஒவ்வொருவராய் ஒவ்வொன்றாக அவர்களுக்குள்ளே பேசி, அவர்களுக்குள்ளே விவாதித்து அவர்களுக்குள்ளே முடித்தும் கொண்டனர்.

விழாவில் நாயகிகளும் நாயகனும் தேக்கு மரத் தொட்டிலில், பட்டு துணியில் கண்ணை உருட்டி உருட்டி முழித்துக் கொண்டு கிடந்தனர்.

ஐயர் ஹோமம் முடித்து, “தாய்மாமன் சீனிப்பால் வச்சிட்டு காதுல பெயர் சொல்லுங்க..” என்றதும், சக்தியும் அவன் மனைவியும் முதலில் ஆண் குழந்தை இடம் வந்தனர்.

“பேர் சொல்லிட்டியா..?” என்ற கணவனின் முனுமுனுப்பில்,

“இல்ல த்தான்.. என் அண்ணன் என்ன பேர் வைக்கிறானோ அதுதான் உங்க பையன் பேரு..” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூற, இளங்கோ அலறியே விட்டான்.

“ஏய் என்னடி சொல்ற..?” என கலவரமாய் மனைவியை பார்த்துவிட்டு, அதைவிட கலவரமாய் சக்தியை பார்த்தான்.

சீனிப்பால் கொடுத்துவிட்டு சக்தியோ குழந்தையை கையில் தூக்கியவன் தாமரையை திரும்பிப் பார்க்க, அவளோ “உனக்கு என்ன பேர் வைக்கணுமோ வை ண்ணா.. எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல..” என்றதும் மொத்த குடும்பமும் அவளை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தனர்.

அதை கவனித்தும் கவனிக்காதது போல சக்தி சிறு சிரிப்புடன், குழந்தையின் காதில் முதலில் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லிவிட்டு, அடுத்து ‘இளமாறன்’ என்று மூன்று முறை சொல்ல, இளங்கோ மனைவியை ‘நான் நினைச்சேன்.. வேள்பாரி எஃபெக்ட்) என பரிதாபமாக பார்த்தான்.

அடுத்து ஒரு பெண் குழந்தைக்கு பொற்சுவை என்றும், மற்றொரு பெண் குழந்தைக்கு கொற்றவை என்றும் பெயர் வைக்க, ஷியாமும் இளங்கோவும் தாமரையை முறைத்து தள்ளினர்.

இவளப்பத்தி தெரிஞ்சும் ஆப்சன் கொடுத்தோமே என அவர்களுக்கு அவர்களே புலம்பிக் கொண்டனர்.

‘நல்ல அழகான தமிழ் பெயர்’ என்ற செல்வம் குழந்தைகளின் காதில் பெயரைக் கூற,

அதைப்போல அடுத்தடுத்து பெரியவர்களும் வரிசையாக பெயரைக் கூற, கடைசியாக தான் கணவன் மனைவி இருவரும் வந்தனர்..

“நீ வேள்பாரி புத்தகத்தை கீழ வைக்காம படிக்கும்போதே எனக்கு டவுட் வந்தது. இப்படித்தான் ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணுவேன்னு..” என புலம்பியபடியே மகளின் காதில் பெயரை கூறினான் இளங்கோ.

கணவனின் புலம்பலை ரசித்தப்படியே தாமரையும் சிறு புன்னகையுடன் பெயரை கூறினாள்.

விழா அதற்கான ஆர்ப்பாட்டங்களுடன் இனிதே முடிவுக்கு வந்தது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக கிளம்ப ஷியாமும் ப்ரீத்தாவும் தாமரையிடம் சொல்லிக் கொள்ள வந்தனர்.

“டேய் நீயும் கிளம்புறியா..?” என்ற இளங்கோவிடம் ‘ஆம்’ என்பது போல் ஷ்யாம் தலையாட்ட,

“ஹாஹா என்ன இன்னும் உங்க பிரச்சனை தீரலையா?” என்றான் சிரிப்புடன்

“உன் பொண்டாட்டி தான் உர்ருனு இருக்கா? எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை..” என ஷியாம் கூற

“நீங்க என்னமோ பண்ணிட்டு போங்க.. உங்க ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ண வந்தா, நான்தான் பல்பு வாங்கிட்டு போகனும்..” என்றவன், ப்ரீத்தாவை அழைத்துக் கொண்டு தனியாக வந்தான்.

“நீ ஓகே தானே ரீத்து மா அங்க ஒன்னும் பிராப்ளம் இல்லையே.. உன் பிரண்ட்ஸ் எல்லாரும் என்ன சொல்றாங்க.. மேரேஜ் பத்தி நீ என்ன சொன்ன..?” என்றான் இளங்கோ.

“மாமா நான் ஓகே தான்… எனக்கு அங்க ஒரு பிரச்சனையும் இல்ல.. ஷ்யாம் என்னை நல்லாவே பார்த்துக்கிறார். நீங்க இவ்வளவு பதட்டப்பட வேண்டிய அவசியமே இல்லை..” என்றாள் சிறு புன்னகையுடன்

“எனக்கு ஷ்யாம் பத்தி நல்லா தெரியும். அவன் உன்னை நல்லாவே பார்த்துப்பான். அது எனக்கு பிரச்சனையே இல்ல. ஆனா நீ நம்ம வீட்ல இருக்கிற மாதிரியே அங்க இருக்க முடியாது இல்லையா. என்னதான் ஷியாம் உன்னை நல்லாவே பார்த்துக்கிட்டாலும், நீயும் அவனை பாத்துக்கணும். உனக்கும் சில பொறுப்புகள் இருக்கு தானே ரீத்து. ஸ்டடிஸ் முடிஞ்சதும் அடுத்து என்ன பிளான். பிஜி எங்க பண்ண போற? அப்ராட் போக உனக்கும் இன்ட்ரஸ்ட் இருந்தது இல்ல.. உனக்கு ஓகேன்னா சொல்லு, ஷ்யாம் கிட்ட நான் பேசுறேன்..” என்றான் இளங்கோ.

“மாமா இதெல்லாம் நான் யோசிக்கவே இல்ல.. நான் ஷியாம்கிட்டயும் இன்னும் இதை பத்தி பேசவே இல்ல. அங்க காலேஜ் முடிஞ்சதும் மொத்தமா ஊருக்கு வந்துடலாம்னு தான் அவரோட பிளான், அங்கிளும் ஆண்டியும் என்ன சொல்றாங்கன்னு தெரியல. நான் அவங்ககிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்லட்டுமா.?” என்று கேட்டவளை சிரிப்புடன் பார்த்தான் இளங்கோ.

இளங்கோவின் சிரிப்பில் சிறு கூச்சம் கூட வந்தது பெண்ணுக்கு. அதனால் “என்ன மாமா.?” என்று சிணுங்கினாள்.

“எங்க ரீத்துக்குட்டிக்கு எவ்வளவு பொறுப்புன்னு பாத்துட்டு இருக்கேன்..” என்றதும்,

“போங்க மாமா.. சும்மா கிண்டல் பண்ணிக்கிட்டு.” என்றாள் மகிழ்ச்சி பொங்க.

“எனக்கு சொல்லனும்னு எந்த அவசியமும் இல்ல குட்டிமா. ஆனால் எது செஞ்சாலும் சரியா செஞ்சா போதும். நீ இப்படி பொறுப்பா பேசுறது எனக்கு உங்க ரெண்டு பேரோட அண்டர்ஸ்டாண்டிங்கை காட்டுது. சோ நான் பேசி எந்த குழப்பமும் உங்களுக்கு வேண்டாம். நீங்க வீட்டுல பேசி ஒரு முடிவுக்கு வாங்க..” என்று முடித்து விட்டான் இளங்கோ.

“தேங்க்ஸ் மாமா..” என இளங்கோவின் தோளில் சாய்ந்து கொண்டு சிரித்தவளை, மென்மையாக அனைத்துக் கொண்டான் இளங்கோ.

பின் மெதுவாக “உனக்கு என் மேல கோபம் இல்லையே.” என்றான் வருத்தமாக

“சத்தியமா இல்ல மாமா.. அம்மா பேச்சைக் கேட்டு நான் தான் உங்களை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டேன்.. தாமரையையும் தான். அவங்க லவ் பத்தி ஷ்யாம் என்கிட்ட சொன்னார், எனக்கு ரொம்ப பிரமிப்பாவும் கில்டியாவும் இருந்துச்சி. நான் அவங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். கல்யாணம் முடிஞ்சது.. குழந்தை வயித்துல இருக்கும்போது கூட, நான் என்னோட ஆசையும் சுயநலமும் தான் பெருசு என்கிற மாதிரி நடந்துக்கிட்டேன் இல்ல மாமா… அதை இப்ப நினைச்சாலும் அசிங்கமா இருக்கு..” என்றாள் பிரீத்தா குற்றவுணர்வுடன்.

“ச்சே ச்சே என்னடா நீ.? நீ சின்ன பொண்ணு சொன்னா புரிஞ்சுப்ப.. இதோ இப்ப சொன்னதும் புரிஞ்சுக்கலையா.. ஆனா நான் செஞ்சது மகா முட்டாள்தனம் தான. அவங்க அப்பாவை கஷ்டப்படுத்தணும்னு ஏதேதோ கூத்து பண்ணி தாராவை அசிங்கப்படுத்திட்டேன். இப்பவும் எனக்கு அந்த குற்ற உணர்வு இருக்கு. அவளோட உண்மையான காதலுக்கு முன்னாடி நான் வெறும் தூசு தான் டா.. இதுவரை அவளுக்கு கஷ்டத்தையும் கண்ணீரையும் மட்டும் தான் கொடுத்து இருக்கேன். இனிமேலாவது அவளை நான் நல்லா பாத்துக்கணும்..” என்றான் உணர்ச்சிவசப்பட்ட குரலில்.

“கண்டிப்பா மாமா.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.. நீங்க உங்க தாராவை தாங்கு தாங்குன்னு தாங்குவீங்க..” என்றாள் பிரீத்தாவும் சிறு சிரிப்புடன்.

இவர்கள் எங்கே இப்படி பேசிக் கொண்டிருக்க, அறைக்குள் இருந்த ஷ்யாமோ தாமரையிடம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

“என்ன சொல்றான் உன் அத்தான்? இப்பவாவது உன் லவ்வு அவனுக்கு புரிஞ்சதா?” என கிண்டலுடன் கேட்க,

“ஷ்யாமா இன்னைக்கு நீ அடி வாங்காம போக மாட்டேன்னு நினைக்கிறேன்.. அத்தானைப் பத்தி என்கிட்ட இப்படி பேசுறதை முதலில் நிறுத்து.. எனக்கு கோபம் வரும்..” என மூக்கு விடைக்க பேச,

“ஹா ஹா.. இந்த மூக்கு விடைக்கிறதை பார்த்து எவ்வளவு நாளாச்சு.. இப்பதான் அசல் காளியாத்தா மாதிரி இருக்க..” என மேலும் கிண்டல் செய்ய, பதில் சொல்ல தெம்பு இல்லாமல் பல்லை கடித்தாள் பெண்.

“ஓகே ஓகே கூல் அம்மு..” என சமாதானம் செய்ய ஒரு வழியாக இறங்கி வந்தாள் தாமரை.

“அப்புறம் எப்படி போகுது உன்னோட கல்யாண வாழ்க்கை.?” என தாமரை விசாரிக்க,

“பயந்த மாதிரி எல்லாம் இல்லடி.. வெரி ஸ்மூத்..” என்றதும்,

“பார்ரா..” என தாமரை சிரிக்க,

“சின்ன பொண்ணு தானே அம்மு.. போக போக புரிஞ்சுக்குவா.. இன்னும் அவங்க அம்மா இழப்புல இருந்து வெளிய வரலைன்னு நினைக்கிறேன். எங்களை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு அதை வெளிக்காட்டிக்கிறது இல்லை. பட் என்னால புரிஞ்சுக்க முடியுது. அங்க இருந்தா கண்டிப்பா அதையேதான் யோசிச்சு வருத்தப்படுவான்னு தோணுது அதனாலதான் இங்க வந்துடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.” என்றான் மனைவியை மனதில் வைத்து.

“நல்ல ஐடியா தான்.. நமக்குத்தான் அந்த பொம்பள மோசமான ஆளு. ப்ரீத்தாவை பொருத்தவரைக்கும் நல்ல அம்மா.. அதனால கண்டிப்பா மிஸ் பண்ணுவா.. அதுல இருந்து வெளியே கொண்டு வரது உன் கையில தான் இருக்கு..” என்றாள் தாமரையும்.

“என்னால மட்டும்தான் முடியும்.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.. என ஷ்யாம் சொல்லி சிரிக்க, தாமரையின் முகத்திலும் சிரிப்பு வந்து விட்டது.

“அத்தான் சொன்னார் பிரீத்தாவுக்கு அப்ராட் போய் படிக்க ரொம்ப ஆசையாம். அத்தான் ஜெர்மனியில் இருக்கும் போது அங்க வந்து படிக்கிறேன்னு சொல்லிட்டு இருப்பாளாம்.. இப்ப அவளுக்கு என்ன ஐடியானு கேளு..” என தாமரை கூற

“அவளுக்கு ஒரே ஐடியா தான்.. அது ஷ்யாமோட பொண்டாட்டியா இருக்கிறது. ஷ்யாமோட பிள்ளைகளுக்கு அம்மாவா இருக்கிறது. “என சொல்லிவிட்டு கண்ணைச் சிமிட்டி சிரிக்க,

“அடப்பாவி ஆனாதிக்கவாதியா டா நீ..?” என்ற தாமரைக்கும் சிரிப்பு வந்துவிட்டது

“இப்பவே ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் பார்க்க அப்பா திணறிட்டு இருக்காரு. நான் இங்க வந்தா தான் அவருக்கு நிம்மதியே. நானும் அம்மாவும் பேஷண்ட்ஸ் பார்த்தா.. பிரீத்தா மேனேஜ்மென்ட் பார்ப்பா. இப்போதைக்கு இதுதான் ஐடியா. ப்ரீத்தாவுக்கு அப்ராட் போக ஆசை இருந்தா, வீட்டுல பேசி ஒரு முடிவு எடுக்கலாம்..” என்றதும், தாமரைக்கும் அது தான் சரியெனப்பட்டது.

“ஓகே அம்மு.. நாங்க கிளம்புறோம்.. அம்மா கால் பண்ணிட்டு இருக்காங்க.. நீ ஹெல்த் பார்த்துக்கோ.. ரெஸ்ட் எடு.. மார்னிங் வரேன்..” என கிளம்ப, தாமரையும் தலையாட்டி புன்னகைத்தாள்.

அவள் தலையாட்டிய விதம் சிரிப்பை தர, அவள் அருகில் வந்து ஆட்டிய தலையை மென்மையாக வருடி கொடுத்தவன் “சந்தோஷமா இரு..” என்று மனைவியோடு கிளம்பி விட்டான்.