• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 70 (2)

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,341
556
113
Tirupur
தாமரை - 70 (2)

குழந்தைகளோடு சேர்த்து கணவன் மனைவி இருவரையும் நிற்க வைத்து திருஷ்டி சுற்றினார் மகேஸ்வரி.

“இன்னைக்கு ஊர் கண்ணு மொத்தமும் புள்ளைங்க மேல தான்..” என ராணி கூற, வசந்தியும் ‘ஆம்’ என்பது போல் தலையாட்டினார்.

பேரனின் குழந்தைகளைப் பார்த்த நாளில் இருந்தே மனம் நிறைந்த புன்னகையுடன் தான் வலம் வருகிறார் வசந்தி.

நாயகியின் இழப்பை, பிறந்த குழந்தைகள் மறக்கடித்து விட்டன என்று தான் சொல்ல வேண்டும். மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை அவர் கையில் தான் இருக்கும். பேரனின் இந்த வாழ்க்கையை மிகவும் ரசித்தார் வசந்தி.

தன் பேரனுக்கு இப்படி ஒரு முகம் உண்டு என்பதே இப்போதுதான் அவருக்கு தெரிந்தது. அது மகிழ்வையும் கொடுத்தது. இத்தனை நாள் கவனிக்காததில் ஒரு குற்றவுணர்ச்சியையும் கொடுத்தது.

தன்னிடம் உறங்கிய குழந்தையை எடுத்துக் கொண்டு தாமரையிடம் விட்டுவிட்டு தன் அறைக்குச் சென்றவரின் பின்னே தானும் சென்றான் இளங்கோ.

முதலில் பேரன் வருவதை அவர் கவனிக்கவில்லை. தன் அறைக்கு சென்று கதவடைக்கும்போது தான் அதை கவனித்தார்.

“என்ன இளா” என சிரிப்புடன் கேட்க,

“உங்களுக்கு இங்க ஓகே தானே பாட்டி.. இங்க இருக்க உங்களுக்கு பிடிச்சிருக்கா? எனக்காகத் தான் இருக்கீங்களா.?” என்றவனிடம்,

“தம்பி உண்மைய சொல்லனும்னா ஆரம்பத்துல இங்க வரதுல எனக்கு பெருசா விருப்பம் இல்லை.. தப்பா எல்லாம் இல்ல.. இங்க இருந்தா உன் அப்பாவையும் அம்மாவையும் நினைச்சு, உன்னை இங்க தப்பா பேசுவாங்கன்னு பயம் இருந்துச்சு. நீ எப்படி இங்க சமாளிப்பன்னு கூட தோணுச்சு. தாமரை கிட்ட பேசி உன்கிட்ட இதெல்லாம் வேண்டாம்னு சொல்ல சொல்லலாம்னு கூட நினைச்சேன்.

அப்புறம் நாயகி இறப்பு, ப்ரீத்தா கல்யாணம் எல்லாம் வேற யோசிக்க விடல. முதல்ல கொஞ்ச நாள் இருந்து பார்ப்போம். பிடிக்கலைன்னா கஷ்டமா இருந்தா கிளம்பி போயிடலாம்னு நினைச்சுதான் வந்தேன். ஆனா எனக்கு இப்போ அந்த எண்ணமே இல்ல இளா. உன் அம்மா இருந்திருந்தால் கூட என்னை இப்படி பார்த்திருக்க மாட்டா. மகேஷ் பொண்ணு என்ன அப்படி பாத்துக்குது.

தாமரையும் குறை சொல்லக்கூடாது சரியா மாத்திரை எடுத்துக்கிறேனானு செக் பண்ணுது. நான் தனியா இருந்தா வந்து என் பக்கத்துல உக்காந்து எதையாவது பேசிட்டு இருக்கிறது, அப்படி நாங்க மட்டும் இருக்கும் போது உன் அம்மாவை பத்திதான் அதிகம் கேட்பா.

சாயங்காலம் என் கூட வாக்கிங் வரதுன்னு என்ன நல்லா பாத்துக்குறா. எல்லாருமே அருமையான புள்ளைங்க. என்ன நாம தான் இங்க வராம தப்பு பண்ணிட்டோம்.. என் கடைசி காலம் இப்படி நிம்மதியா கழிக்கிறதுல எனக்கு பரம திருப்தி தம்பி. நீ என்னை யோசிக்காத. நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்..” என பேரனின் தோள் தட்டி செல்ல, பேரனும் பாட்டியை அணைத்து விடுவித்தவன் மனம் நிறைந்த புன்னகையுடன் வெளியில் வந்தான்.

ஹாலில் சீனியும் செல்வமும் அன்றைய கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்க, மகேஸ்வரியும் ராணியும் ஆளுக்கொரு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தனர்.

இன்னும் ரெண்டு பேரும் தூங்கலையா? ஆட்டமா.? என்ற இளா, மகேஸ்வரி அருகில் அமர

“தூக்கத்துக்குத்தான் கண்ணு சொக்குறாங்க.” என சிரித்தபடியே இளமாறனை தோலில் போட்டு தட்டிக் கொண்டிருக்க,

ராணியோ பொற்சுவையுடன் எழுந்தார். “இருங்க ராணிமா நான் எடுத்துக்கிறேன்..” என்ற இளங்கோ, மகளை தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்றான்.

மகேஸ்வரியும் எழுந்தவர் “சரி சீக்கிரம் முடிச்சிட்டு படுங்க.. இல்ல நாளைக்கு பாருங்க.. எல்லாருக்குமே இன்னைக்கு அலுப்பு தான்..” என்று பேரனோடு மகளின் அறைக்கு சென்றார்.

“பாப்பாவை கொடுத்துட்டு இங்க வா மகேசு.. எங்களுக்கு காபி கொடு..” என்ற செல்வத்தை மகேஸ்வரி முறைக்க,

“ரொம்பத்தான் முறைக்காம போடி.. உன் மருமகன் பூனை குட்டி மாதிரி என் பொண்ணு பின்னாடி சுத்துறது உனக்கு தெரியவே தெரியாதாக்கும்..” என்று மனைவியை சீண்ட,

“அது தெரிஞ்சதுனால தான் பூனைகிட்ட இருந்து பாலை காபந்து பண்றேன்..” என சிரிக்க, ராணியும் சீனியும் கூட சிரித்து விட்டனர்.

“அதெல்லாம் பையன் கவனமாத்தான் இருப்பான். நீ ஆபீஸர் வேலை பார்க்காம வந்து சேரு..” என்ற செல்வத்திடம்,

“எனக்கு இளா மேல நம்பிக்கை இருக்கு.. ஆனா உங்க மக மேல தான் நம்பிக்கை இல்ல.. அடுத்த மூணு பிள்ளையை பெத்துக்க அவளுக்கு பிரச்சனை இல்லாம இருக்கலாம். ஆனா என் சாமி பாவம், எப்படி இத்தனை பேர சமாளிக்கும்..” என்ற மனைவியை முறைத்தவர்,

“அதான என் பொண்ணை பேசணும்னா உனக்கு கசக்கவா செய்யும்..” என்றவருக்கும் சிரிப்புத்தான்.

இவர்களின் பேச்சு அறைக்குள் இருந்த தம்பதியர்களின் காதில் விழத்தான் செய்தது. தாமரை மூக்கு விடைக்க கணவனை முறைக்க, அவனோடு நமுட்டு சிரிப்புடன் குழந்தையை சரியாக படுக்க வைப்பதில் மும்மரமாக இருந்தான்.

“உங்க அத்தையும் மாமாவும் என்ன பேச்சு பேசுறாங்க. அதைக் கேட்டு நீங்க நக்கலா சிரிக்கிறீங்க. இனி என் பக்கத்துல வந்து பாருங்க, அப்ப தெரியும் இந்த செந்தாமரை யாருன்னு..” என ஆரம்பிக்க,

“கத்தாதேடி பிசாசு… மெதுவா பேசு குழந்தை எழுந்துட்டா, மறுபடியும் தூங்க ரொம்ப நேரம் ஆகும். அப்புறம் நீயும் தூங்க முடியாது. உனக்கு கஷ்டம்..” என மெதுவாக பேச,

மனைவியானவளோ “என்ன எதுக்கு இப்போ அதட்டுறீங்க.. பிள்ளைங்க மேல இருக்கிற பாசம் கூட, என் மேல இல்ல. நான் இல்லாம தான் இவங்க வந்தாங்களா? எப்பவும் என்னையவே கத்துறது..” என நொடியில் முகத்தை திருப்பிக் கொண்டு சண்டைக்கு இழுத்தவளை கண்டு அதிர்ந்து போனான் கணவன்.

“அம்மாடி.. எப்படியெல்லாம் வம்பு இழுக்கிறா பாரு குள்ள கத்திரிக்காய்..” என நினைத்தவனுக்கு சிரிப்புதான்.

“ஏன் குட்டிமா ஒரு கிஸ் கூட இப்ப கிடையாதா?” என சம்பந்தமே இல்லாமல் ஆரம்பிக்க,

“இப்ப நான் என்ன பேசிட்டு இருக்கேன்? நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க?” என பல்லைக் கடிக்க,

“இப்போ எது தேவையோ அதைத்தான் பேச முடியும். நீ லூசுத்தனமா பேசினா நானும் அப்படியே பேசணுமா.?” என்றவன் மனைவி முறைத்ததை கண்டு கொள்ளாமல் அவளை நெருங்கி அமர்ந்தான்.

”என்ன பண்றீங்க நீங்க?” என்றவளுக்கு கணவனின் நெருக்கம் மூச்சடைத்தது.

“இன்னும் எதுவும் பண்ணல.. பண்ற ஐடியாவும் இல்லை. இது வேற..” என சீண்ட ஆரம்பித்தவனை கவனிக்காமல்,

“முதல்ல கிளம்புங்க.. அம்மா வந்துருவாங்க..” என்றாள் பதட்டமாக,

“நான் வெளியே போகாம, என் அத்தம்மா உள்ள வர மாட்டாங்க” என்றவனுக்கு தன் அத்தையை நினைத்ததும் மனமெல்லாம் நிறைந்து போனது.

“ரொம்பத்தான்..” என்றாலும் அவளுக்கும் அதே உணர்வுதான்.

“இல்லையா பின்ன..?” என்றவன், மனைவியை அனைத்து அவள் அடுத்து, யோசிக்கும் முன்னே, இதழ்களை சிறை செய்திருந்தான்.

நீண்ட நெடிய முத்தம் இருவருக்குமே அந்த முத்தம். இருவருக்குமே அந்த முத்தம் தேவையாகத்தான் இருந்தது.

கலைத்து ஓய்ந்து மூச்சுக்கு ஏங்கி தவித்தவளை விடுவித்து, நிறைவாக தன் மேல் சாய்த்துக் கொண்டான் இளங்கோ.

“என்னத்தான் இது..?” என அவன் மார்பில் குத்தியவளின் கையைப் பிடித்து, உதட்டில் வைத்துக் கொண்டவன் “இதெல்லாம் எனக்கு பத்தவே இல்லை..” என்றான் உணர்ச்சி பொங்கிய குரலில்.

“அத்தான்..” என திணறியவளின் விழிகள் கலங்கியது. அவன் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்ற ஏக்கம், அவள் கலங்கிய விழிகளில் அப்பட்டமாக தெரிந்தது.

அதை கண்டவன் தன்னையே திட்டிக்கொண்டு “ஹேய் என்னடி நீ? இதுக்கு ஏன் இப்போ இவ்வளவு பீலிங்ஸ், உன் ஹெல்த் தெரிஞ்சும் கேட்டா, என்னை நீ வெளுக்காம உட்காந்து ஃபீல் பண்ணிட்டு இருக்க.. இவ்வளவு செல்லம்மெல்லாம் கொடுக்காதடி. அப்புறம் வரைமுறை தெரியாம உன் பின்னாடியே சுத்துவேன்..” என நெற்றி முட்டி கண் சிமிட்டினான் கணவன்.

“நான் இப்படித்தான் மாத்திக்கோன்னு என்னை சொல்லாதீங்க..” என்றாள் பெண் உர்ரென்று.

“சரி.. சரி.. உடனே மூஞ்சியை தூக்கி ஆணியில மாட்டாத..” என மனைவியை வம்பு இழுத்தவன், “உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே தாரா.. உடனே கோபப்படக்கூடாது.. நான் என் பக்கம் மட்டும் யோசிச்சு, இந்த முடிவை எடுத்துட்டேன். உன்கிட்டயும் அர்த்தமாகிட்டயும் கலந்துக்கவே இல்ல. அது ஒரு மாதிரி உறுத்துது, அதான்.” என்றான் கணவன் சிறு பிள்ளை போல்.

“அத்தான் உங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது? நீங்க இங்கேயே இருக்கணும்னு நினைச்சது எங்களோட பேராசை.. அது நடக்காதுன்னு நாங்க நினைச்சுட்டு இருக்கும்போது, கண்ணெதிரே நடந்தால் எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும். அப்படி நீங்க இங்க வந்தா, கண்டிப்பா பாட்டியும் ப்ரீத்தா சீனிப்பாவையும் கூட்டிட்டு தான் வருவீங்கன்னு தெரியும். அப்ப அதுக்கு தகுந்த மாதிரி தானே, எங்களோட மனநிலை மாற்றி இருப்போம். உங்களுக்காக யாரையும் எதையும் அட்ஜஸ்ட் பண்ணிக்க என்னால முடியும். உங்க அத்தமாவும் அப்படித்தான்.

எதுவுமே இல்லாத விஷயத்தை நினைச்சு, ஓவரா ஃபீல் பண்ணாதீங்க..” என அவன் முடியை பிடித்து ஆட்ட,

“நல்லா தான டி பேசிட்டு இருந்த? அதுக்குள்ள என்ன நடந்துச்சு.” என இளங்கோ அலற,

“என்ன நடந்துச்சா? உங்கள பேர் செலக்ட் பண்ண சொன்னேன். அதை நீங்க செய்யல?” என மேலும் ஆட்ட,

“எப்படியும் நீ யோசிஸ்சு வச்சிருப்பன்னு தெரியும். அதோட வொர்க் பிரஷர் அதிகம்..” என்றவன் “அதுதான் உன் அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி பேர் வெச்சாச்சுல்ல, இன்னும் ஏன் அதையே பேசுற..” என்ன சிரிக்க,

“எனக்கும் புடிச்ச பேரு தான், உங்களுக்கு பிடிக்கலையா.”? என்றாள். ஒருவேளை கணவனுக்கு பிடிக்கவில்லையோ என்ற பயம் வந்துவிட்டது.

“நான் எப்போ அப்படி சொன்னேன்? ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. இனி பிடிக்கலனாளும் மாத்த முடியாது..” என சிரிக்க,

“ம்ச்… சரி விடுங்க.. இப்போ எனக்கு பிடிச்ச மாதிரி பேர் வச்சாச்சு. அடுத்து உங்களுக்கு பிடிச்ச மாதிரி வைப்போம். எப்படியும் நெக்ஸ்டும் ட்ரிப்ள்சா தான் இருக்கும். இந்த பேலன்ஸ் கணக்கும் சரியா போகும்..” என சிரிக்காமல், சீரியசாக பேசிய மனைவியின் பேச்சில் கணவன் தான் அரண்டு போனான்.

‘அடியே செந்தாமரை.. போதும்டி தாயே.. இதுக்கு மேல் உன் உடம்பு தாங்காது. இவங்க மூனு பேரையும் நல்லபடியா வளர்த்தினாலே போதும். புதுசு புதுசா டாஸ்க கொடுக்காத..” என நிஜமாகவே அரண்ட குரலில் கூற, கலகலவென சிரித்துவிட்டாள் தாமரை.

மகளின் சிரிப்பு சத்தம் வெளியில் இருக்கும் பெற்றவர்களின் கண்ணில் ஆனந்தக் கண்ணீரை வர வைத்தது.

“இப்போதான் இந்த வீட்டுக்கு ஒரு கலையே வந்துருக்கு..” என்ற செல்வத்தின் கைகளைப் பிடித்து தட்டிக் கொடுத்தார் சீனி.

“உங்க இந்த கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்..” என்றவரின் குற்றவுணர்ச்சியைக் கண்டு நொடியில் தன் முக பாவத்தை மாற்றிக் கொண்டார் செல்வம்.

“அப்படியெல்லாம் யோசிக்காதீங்க மாமா.. இதெல்லாம் நம்ம வாழ்க்கையில நடக்கனும்னு இருக்கு. நடந்துடுச்சு. இனி போனதைப் பத்தி பேசாதீங்க. நமக்கு இனி நம்ம புள்ளைங்க வாழ்க்கைதான் முக்கியம். அதுக சந்தோசம்தான் நமக்கும் சந்தோசம். மனசை போட்டு குழப்பாம போய் படுங்க..” என்ற மகேஸ்வரிக்கு தலையை மட்டும் ஆட்டினார் சீனி.

அப்போது அவருக்கும், செல்வத்திற்கும் காபியைக் கொடுத்த ராணி, “இதுவரைக்கும் நடந்த எதையும் மாற்ற முடியாது. இனி நடக்கிறதை நல்லாதா நடத்திக்கலாம். ப்ரீத்தாவை மனசுல வச்சு யோசிங்க..” என்ற ராணிக்கும் அதே தலையசைப்பு தான். ஆனால் மனதில் சின்னதாய் ஒரு ஆறுதல் கிடைத்தது.

“விடுங்க சீனி.. பொம்பளைங்க சொல்றது சரிதான். நம்ம இனி பழசை நினைக்கவே வேண்டாம்..” என்றார் செல்வமும்.

தன் மனைவி இவர்களுக்கு செய்தது என்ன? இவர்கள் தனக்கு செய்வது என்ன? மேன்மக்கள் மேன்மக்கள்தான் என்பது எத்தனை உண்மை. போனதை நினைத்து, இருப்பதை வருத்தி என்ன பயன் என உணர்ந்த சீனியும், அவர்களைப் பார்த்து நிம்மதியாக புன்னகைக்க, கடிகார முள்ளும், நான் பணிரெண்டைத் தாண்டி விட்டேன் என குயிலாக கூவி காட்ட,

“பாருங்க.. மணி பண்ணெண்டாகிடுச்சு.. இனி வர விடியல் எல்லாம் நமக்கு நல்லதாவே தான் விடியும்னு கடவுள் நமக்கு மணியடிச்சு சொல்றார். அதை மட்டும் நினைச்சிட்டு எல்லாரும் போய் தூங்குங்க..” என ராணி சிரித்தபடியே கூற, மற்றவர்களும் அந்த கூற்றுக்கு புன்னகை முகமாகவே சீனியும், ராணிம்மாவும் கிளம்ப, மடியில் குழந்தையுடன் அமர்ந்திருந்த மனைவியின் அருகில் அமர்ந்த செல்வம் “என்ன உன் அண்ணனே திரும்பி வந்துட்டானா?” என்றபடியே குழந்தையின் பாதத்தை வருட, கணவரின் கிண்டலுக்கு மகேஸ்வரி பதிலெல்லாம் சொல்லவில்லை. மாறாக கணவனைப் பார்த்து மந்தகாசமாக புன்னகைத்தார்.

‘ஆமாம்.. அப்படித்தான்...’ என்ற பார்வை வேறு.

“வயசான காலத்துல பார்வையெல்லாம் பயங்கரமா இருக்கே..” என்ற கணவருக்கும் நிறைவான புன்னகைதான்.…

“ஏன் இருக்கக்கூடாதா?” என்ற மனைவியின் அன்பில், அவரின் வருடக் கணக்கான காத்திருப்பு, எதிர்பார்ப்பு பூர்த்தியானதில் மனம் நிறைந்து போனது இளாவின் மாமனாருக்கு.

மனைவியின் கண்களில் இருந்த நிறைவும், மகிழ்வும் இனி வரும் காலங்களில் இளங்கோ நிரந்தரமாக குடியமர்த்துவான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை செல்வத்துக்கு.

அந்த மகிழ்வோடு அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழட்டும் என்று நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்..

இனி எல்லாம் சுபமே!
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
390
8
28
Hosur
Super vani
Valthukkal