• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 72 (எபிலாக் -1)

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur
தாமரை - எபிலாக்

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு…

இளங்கோவின் வீடு வழக்கம்போல ஆராவாரமாக காணப்பட்டது. மூன்று குழந்தைகள் இருக்கும் போதே அங்கு கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. இப்போது நான்காவது ஒரு குழந்தை வேறு. ஆர்ப்பாட்டத்திற்கும் ஆராவாரத்திற்கும் குறை இருக்குமா?

தாமரையின் இரண்டாவது பிரசவத்தில் பிறந்த பாரி வேந்தனுக்கு, குலதெய்வ கோவிலில் மொட்டையடிக்க விழா ஏற்பாடாகியிருக்க, இப்போது குடும்பம் மொத்தமும் அந்த விழாவிற்குத்தான் கிளம்பிக் கொண்டிருந்தது.

பிள்ளைகள் மூவரும் கிளம்பி, ஹாலில் விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் பொருட்களை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.

செல்வம் குழந்தைக்கு சீர் செய்ய வேண்டிய பொருட்களை பார்த்திருந்தார். இன்றும் சக்திதான் செய்யப் போகிறான். ஆனால் பெற்றோரின் பங்கு என கூட்டத்தில் காட்ட வேண்டுமே என அனைத்தையும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

“சாமி.. இன்னும் அம்மு என்ன செய்றான்னு பாரு.. வெயிலுக்கு முன்னாடி போனாதான் அங்க கொஞ்ச நேரமாவது இருக்க முடியும்..” என்ற மகேஸ்வரியிடம்,

“கிளம்பிட்டா அத்தம்மா தம்பி தூங்குறான். அதான் எல்லாரும் கிளம்பும் போது தூக்கிட்டு கீழ வந்தா போதும்னு சொல்லிட்டேன்.. கார்ல ஏறும் போது வரச் சொல்லிக்கலாம்..” என்ற இளங்கோ, ஷ்யாம் க்கு கால் செய்து கொண்டே வெளியில் வந்தான்.

“என்ன இளா..? ஏன் டென்சன்..?” என்ற வசந்தியிடம்,

“ஒன்னுமில்ல பாட்டி, இந்த ஷ்யாம் இன்னும் ரீத்துவை கூப்பிட்டு வரல பாருங்க..” என்றபடியே மீண்டும் அழைத்தான்.

“நேத்து ஏதோ சர்ஜரி முடிஞ்சி வீட்டுக்கு வரவே லேட்டாகிடுச்சாம், ஷ்யாம் தம்பி எழுந்ததும் கூப்பிட்டு வரேனு ப்ரீக்குட்டி காலையில சொல்லுச்சு இளா.. நான் தாமரைக்கிட்ட கூட சொன்னேனே.. அவங்க அப்படியே கூட கோவிலுக்கு வரட்டும் விடு..” என்ற பெரியவரிடம்,

“சரி பாட்டி.. நான் பேசிக்கிறேன்..” என்றவன், தன் அறைக்குச் சென்றான்.

“மகி.. பசங்களுக்கு சாப்பிட கொடுத்தியா? அங்க சாப்பிட எடுத்து வச்சியா? மாறனுக்கு தனியா எடுத்து வச்சிடு.. அவனைத்தான் உன்னால சமாளிக்கு முடியாது.. ” என்றார் வசந்தி சிரிப்போடு.

“அதெல்லாம் சரியா எடுத்து வச்சிட்டேன் அத்த, இந்த பொண்ணுங்க கூட என்ன சொன்னாலும் கேட்டுக்குது, இந்த பையன் பிடிச்சா பிடிவாதம் தான்..” என சலித்தவருக்கு, குரலில் கூட அந்த சலிப்பு தெரியல்லை.

“ம்ம். எல்லாம் நீ கொடுக்குற செல்லம் தான. பாவம் தாமரை. இவனை சமாளிக்க முடியாம திணறுரா.. இளா வந்து சத்தம் போட்டாத்தான் கொஞ்சமாவது கேட்குறான்..” என்ற வசந்தியின் குரலிலும் ஆனந்த ஆர்ப்பரிப்பு தான்.

“நல்லா சொல்லுங்க ம்மா.. யார் பேச்சையும் கேட்குறது இல்ல. இளாவோட அதட்டலுக்கு மட்டும் தான் கொஞ்சம் அடங்குறான். அப்படியே அவங்க தாத்தன போல. தான் நினைச்சதைத்தான் நடத்திக்கிறான்..” என்ற செல்வத்தின் பேச்சிலும் மகிழ்வின் சாரல்தான்.

“என் செல்லத்த கொற சொல்லலன்னா இந்த வீட்டுல யாருக்கும் பொழுது போகாதே..” என்ற நேரம் சரியாக அந்த இடம் வந்து மகேஸ்வரியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டான் இளமாறன்.

“செல்லத்துக்கு என்ன வேணும்..?” என்ற மகேஸ்வரி பேரனைத் தூக்கிக் கொள்ள

“கொத்தவை என்னைக் கிள்ளிட்டா.?” என உதடு பிதுக்க,

“முதல்ல இவன் என்ன செஞ்சான்னு கேளு மகேசு.. புள்ளைங்க ரெண்டு பேரோட பூவையும் பிச்சு விட்டுட்டு வந்துருக்கான்..” என பின்னோடு வந்தார் சீனி.

“ஏன் சாமி இப்படி பண்ண? உன் அம்மா பார்த்தா திட்டுவா, அடிப்பா..?” என மகேஸ்வரி பேசிக் கொண்டிருக்கும் போதே தகப்பனோடு இரண்டு பிள்ளைகளும் அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள்.

தகப்பனைப் பார்த்ததும் “மகிம்மா..” என மாறன் அவர் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்ள, பிள்ளைகள் இரண்டும் இப்போது மகேஸ்வரியையும் சேர்த்து முறைத்தது.

“அத்தம்மா.. வர வர அவன் சேட்டை அதிகாமகிடுச்சு. சொல்லி வச்சிடுங்க.. இப்படியே பண்ணிட்டு இருந்தா அடி வெளுத்துடுவேன்..” என நிஜமான கோபத்தோடு கூற, மாறனின் கண்களில் நீர் கட்டிவிட்டது.

மகேஸ்வரியோ “போ சாமி.. தம்பி இனி அப்படியெல்லாம் பண்ண மாட்டான்.. நல்ல நாள் அதுவுமா புள்ளைய ஒன்னும் சொல்லாத..” என்றபடியே பேரனோடு அங்கிருந்து மகேஸ்வரி நகர்ந்துவிட, இப்போது பிள்ளைகள் இருவரும் தகப்பனை முறைத்தது.

“நான் என்ன பேபிஸ் பண்ணட்டும். உங்க மகிம்மாகிட்ட நான் கோபமாவே பேசமாட்டேன். அது தெரிஞ்சு சரியா அவன் அங்கதான் போய் நிக்கிறான்..” என பாவம் போல் கூற,

“எப்பவும் இப்படித்தான் சொல்றீங்க.. இனி அவன் கூட நாங்க சேரமாட்டோம். குட்டிதம்பி கூட மட்டும் தான் எங்க கூட்டு..” என முகம் திருப்பிய இரண்டு முல்லைகளையும், கைகளில் அள்ளிக்கொண்டு மனைவியைத் தேடிச் சென்றான்.

கணவனையும், மகள்களையும் பார்த்ததுமே விசயம் புரிபட, கிண்டலாக சிரித்தாள் பெண்.

‘சிரிக்காதடி.’ என பார்வையிலேயே மிரட்டியவன், “தாரா பாப்பாவுங்க ரெண்டு பேரும் இனி மாறன் கூட கூட்டு இல்லையாம். குட்டித் தம்பி கூட மட்டும் தான் கூட்டாம். அதனாலதான் இங்க கூப்பிட்டு வந்துருக்கேன். நீ என்னனு கேளு..” என்ற நேரம் ஷ்யாமிடமிருந்து அழைப்பு வர, மனைவியிடம் கண்ணைக் காட்டிவிட்டு வெளியில் வந்தான் இளங்கோ.

எப்படியும் மனைவி சமாதானம் செய்து விடுவாள் என்று தெரியும். பெரியவர்கள் இருக்கும் போது குழந்தைகளிடம் சத்தமாக கூட பேச முடியாது. உடனே ‘ஏன் இப்போ அதட்டுற, ஏன் இப்படி குழந்தைங்ககிட்ட கத்துற’ என பெற்றவர்களிடம் தான் பாய்வார்கள். அதனால் தனியாக இருக்கும் போது தான் குழந்தைகளை அதட்டுவதோ, இல்லை கண்டிப்பதோ எல்லாம்.

“எங்க டா இருக்க.? இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்..?” என இளங்கோ கத்த,

“வந்துட்டேன் பக்கத்துல தான் இருக்கோம். என் பேபியை கிளப்புறதுக்குள்ள உன் பேபி டயர்டாகிடுச்சு. அதான் உன் பேபிக்கு எனர்ஜி ஏத்தி கூப்பிட்டு வரேன்..” என பதில் கொடுக்க,

“கெட்ட வார்த்தையா தான் வாயில வருது. ஆனா கோவிலுக்கு போறதுனால இப்போ பேச முடியாது. ஒரு நாள் எங்கிட்ட வசமா சிக்குவ இல்ல. அன்னைக்கு வச்சு செய்றேன் டா..” என்று போனை வைத்த இளங்கோவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘எப்படியெல்லாம் பேசுது பக்கி’ என்று நினைத்தவனுக்கு இங்கு வந்த ஆரம்ப நாட்கள் மனதி ஓடியது.

இளங்கோ மொத்தமாக இங்கே வந்து விடலாம் என்று முடிவெடுத்து விட்டாலும், அது அவ்வளவு சீக்கிரமாக இலகுவாக நடந்து விடவில்லை.

ஜெர்மனி ப்ராஜக்ட் முடியவும், சென்னை கிளையை நவீனிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்க, அதே கம்பெனி மீண்டும் ஒரு ப்ராஜெக்டை இளங்கோவிற்கு ஆஃபர் செய்தது.

முந்தையதை விட இரண்டு மடங்கு லாபம். அதோடு இதன் கிளை லண்டனிலும் இருக்க, அங்கும் இதே ப்ராஜக்டை செய்ய வேண்டி வந்தது.

இது மிகப்பெரிய வாய்ப்பு.. இதை தவறவிடவும் மனமில்லை. எடுத்துக் கொள்ளவும் பயம்.. என்ன செய்வது என குழப்பத்தில் இருக்கும் போது கை கொடுத்தாள் ப்ரீத்தா.

ஜெர்மனிக்கு இளங்கோ செல்ல, லண்டனுக்கு ப்ரீத்தா சென்றாள். ஷ்யாமால் மனைவியோடு போக முடியவில்லை. அவளை எப்படி தனியே அனுப்ப என யோசித்த நேரம், இளங்கோதான் ராணிம்மாவையும் சீனியையும் உடன் அனுப்பி வைத்தான்.

சீனி உடன் இருக்க, ப்ரீத்தாவால் அங்கு சுலபமாக தன் வேலையைப் பார்க்க முடிந்தது. ஆறு மாத காலத்தில் இரண்டு ப்ராஜக்டும் முடிய, அதன் பிறகே இளா மொத்தமாக ஊர் வந்து சேர்ந்தான்.

அதோடு ஷ்யாமிற்கும் ப்ரீத்தாவிற்கும் இந்த பிரிவு அவர்களின் அந்நியோன்யத்தையும், காதலையும் அதிகப்படுத்தியது.

ப்ரீத்தா லண்டனில் இருந்து வந்த இரண்டு மாதத்தில் கருவுற, சீனியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். பெண்களுக்கே உண்டான அந்த நேர ஹார்மோன் பிரச்சினை ப்ரீத்தாவை ஆட்டிப்படைக்க, ‘எனக்கு அம்மா வேணும், அம்மா வீடு வேணும்..’ என சீனியை ஒரு வழி செய்துவிட்டாள்.

மகளின் இந்த ஆசையில் பெற்றவர்தான் திணறிவிட்டார். ‘என்னவாயிற்று இவளுக்கு’ என்றுதான் எல்லோரும் பார்த்தனர்.

பின் தாமரை அவளை அதட்டி கேட்க, ‘லண்டனில் இருக்கும் போது, ராணி மற்றும் சீனியின் நடவடிக்கைகளை கவனித்து, அவர்களுக்குள்ளும் நேசம் இருப்பதை கவனித்திருக்கிறாள். இதை எப்படி செயல்படுத்த என நினைத்து குழம்பிய நேரம் தான், அவள் கருவுற்றிருக்கிறாள். இதை சாக்கிட்டு அவர்களை இணைத்து விடலாம் என்று முடிவு செய்துதான் இந்த ஆர்ப்பாட்டம்.

இந்த திட்டம், ஷ்யாமிற்கும் இளங்கோவிற்கும் முன்னமே தெரிந்திருகிறது. அதனால் தான் அவர்கள் அமைதியாக இருந்திருக்கிறார்கள்.

தாமரைக்கும் முன்னமே அவர்கள் மீது சந்தேகம்தான். அவளுக்கும் இதை எப்படி கேட்பது என தெரியாமல் தான் இருந்தாள். இப்போது ப்ரீத்தாவின் ஆசை என, அதை வைத்தே இருவரையும் இணைத்து விடலாம் என்று முடிவு செய்துவிட்டாள்.

அதனால் மிகவும் பொறுமையாக விசயத்தை அனைவருக்கும் தாமரை எடுத்து சொல்ல, ‘என்ன.?’ என நெஞ்சில் கைவைத்து விட்டார் ராணி.

நடக்கவே நடக்காது என ஒற்றைக் காலில் நின்ற இருவரையும், தன் பட்டினி போராட்டத்தால் சம்மதிக்க வைத்து, இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டாள்.

‘இத்தனை வயசுக்குப் பிறகு இதென்ன?’ என கேள்வி கேட்ட மூளைக்கும், மனதுக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை பெரியவர்கள் இருவராலும்.

அவர்களுக்காக அதே ஊரில் தனியாக வீடு கட்டி கொடுத்துவிட்டான் இளங்கோ.

என்னதான் வயதானவர்கள் என்றாலும், இந்த கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் தனிமையும் கிடைக்காது, அவர்களுக்கான புரிதலும் வராது என்பதால் இந்த ஏற்பாடு. அனைத்தும் தாமரையின் சொற்படி தான்.

‘ராணிம்மாவோட கல்யாண வாழ்க்கை சரியா அமையல. அதுக்குப் பிறகு அவங்க வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கேத் தெரியும். இனியாவது அவங்களுக்காக, தன்னோட குடும்பத்துக்காக அவங்க வாழட்டும். அதுக்கு கொஞ்ச நாளாவது தனியா இருக்கனும். ப்ரீத்தா பிரசவம் வரைக்கும் தனியா இருக்கட்டும். அப்போதான் அவங்க லைஃப் ஒரு முழுமையடையும்..’ என்று தாமரை தன் வீட்டாட்கள் இருக்கும் போது தான் சொன்னாள்.

அனைவருக்கும் சம்மதம் தான் என்றாலும், வசந்தி என்ன சொல்வாரோ என்று அனைவரும் அவரைத்தான் பார்த்தனர்.

பிள்ளைகளின் பார்வையை உணர்ந்த பெரியவர், மனதளவிலும் பெரியர்தான் என தன் சம்மதத்தைக் காட்டி நிரூபித்தார்.

அவருக்கு ராணியை நன்றாக தெரியும், அவரின் உணர்வுகளும் புரியும். அதனால் மகன் வாழ்க்கையில் ராணி வருவதை அவர் மனப்பூர்வமாகவே ஏற்றுக் கொண்டார்.

அடுத்து ப்ரீத்தாவின் பிரசவம் அவர்கள் வீட்டில் தான் நடந்தது. இதில் சுமதியின் தலையீடு எங்கேயும் இல்லை. சொல்லப் போனால் அவருக்கு அதற்கு நேரமும் இல்லை.

ஷ்யாமும் இங்கேயே வந்துவிட்டதால், அவனுக்கென கேபின், அவனுக்கென தனி டிபார்ட்மென்ட், அவனுக்கென நோயாளிகளை எப்படி வர வைப்பது’ என அவரது கவனம் அதில்தான் இருந்தது.

அதோடு மருமகளி கொடுமை செய்யும் மாமியார் இல்லையே. அவளுக்கென முழு சுதந்திரம் கொடுத்து, அவள் முடிவுகளை அவளே எடுக்கும் அளவிற்கு அவளுக்குத் துணை இருக்கிறார். இதற்குமேல் என்ன வேண்டும்.

ராணி இருப்பதால் மருமகளைப் பற்றிய கவலையில்லாமல் தன் தொழிலை கவனித்தார்.

மகேஸ்வரியும், ராணியும் இருக்கும் போது அவருக்கு வேறென்ன கவலை இருக்கப் போகிறது.

ஆம் அப்படித்தான் என அவர் நினைத்துக் கொண்டிருக்க, அப்படியெல்லாம் இல்லை, ‘உங்களுக்கு ஒரு கவலை பார்சல்’ என வந்து நின்றான் இளங்கோ.

அதைக் கேட்டுத் தலையில் கை வைத்து விட்டார் சுமதி..!