தீஞ்சுவை 1
மாலை நேரம் ஒரு கவிதைபோல அமைந்திருந்தது. சூரியன் மெதுவாக பசுமை நிறைந்த மலைக் குன்றுகளின் பின்னால் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த மறைவு, நம் மனதிலேயே ஒரு நினைவின் வெப்பத்தை விடும் போன்று இருந்தன.
வானம் ஒற்றை ஓவியன் பேனாவால் தீட்டிய ஓவியமாக மாறி, ஆரஞ்சும் பொன்னும் கலந்து பளிச்சிடும் அலைபாயும் மேகங்கள் வானத்தின் மேல் ஒளிர்கின்றன. பறவைகள் கூட்டமாக மழலையின் இசையை மீட்டும் இசைப்போல கீதங்களை மெல்ல நடத்தியபடி தங்கள் கூடுகளுக்குத் திரும்பு கொண்டு இருந்தன.
இயற்கையின் இந்த மாலை நேரம், மனிதரின் மனதை அமைதியாக்கும் ஒரு தெய்வீக தருணமாக காட்சி தருகிறது. அந்த நேரத்தில், வேகமாக ஓடும் வாழ்க்கை மெல்ல நின்று, ஒரு முறை இயற்கையின் இசையை கேட்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது.
வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த தீபன், இயற்கையின் அழகைத் தனது மனதில் பதியச் செய்ய முயன்றான். ஆனால், எவ்வளவு முயன்றாலும் அவனது மனம் அதில் பதியவே இல்லை. அவன் கண்கள், இயற்கையின் சுகமான காட்சிகளை விட, உயிரிழந்த தனது மனைவியின் சிரிக்கும் முகத்தையே துயரத்தோடும் எதிர்பார்த்தன.
இவர்தான் தீபன், வயதோ ஐம்பத்து ஐந்து. ஒரு மாதம் முன்புதான் தன் காதல் மனைவியை இழந்தார். அது தற்காலிகமாக இல்லையே, நிரந்தரமாக மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்குப் போய்ச் சேர்ந்தார்.
கவியா, இவரின் காதல் மனைவி. முப்பதாவது வயதில் பல போராட்டங்களுக்குப் பிறகு கரம் பிடித்தார். இருபத்தி ஐந்து வருட குடும்ப வாழ்க்கை போன மாதத்தோடு முடிவுக்கு வந்து இருந்தது.
வானத்தைப் பார்த்துக் கொண்டு, “உனக்கு அப்படி என்ன அவசரம். என்னை இப்படித் தனியாக விட்டுவிட்டுப் போகவே இவ்வளவு காதலிச்சியா? நீ இல்லாமல் தனியாக என்னால வாழ முடியாதே. என்னைத் தவிக்க விட்டுட்டுப் போய்ட்டியே என் முரட்டு ராணி” என்று கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார்.
சரியாக அந்த நேரம் அவரது மகன் போன் செய்தார். மோஹித், இவர்களின் மகன், கல்யாணம் ஆகி இரண்டு மாதம் தான் ஆகிறது.
“அப்பா இன்னும் அங்கவே இருந்து என்ன பண்ண போகிறீங்க. இங்க நமக்கு எவ்வளவு பொறுப்பு இருக்குனு நியாபகம் இருக்கு தானே. சீக்கிரமா வீட்டுக்கு வாங்க” என்று தனிமையில் தவிக்கும் தந்தையிடம் சொல்ல,
“வரேன் பா. இன்னும் கொஞ்சம் மாசம் இங்க இருந்துட்டு வரேனே. இங்க இருக்கும் போது உன் அம்மாவே கூட இருக்கிற மாதிரி ஒரு எண்ணம், என் கூட பேசிட்டே இருக்கிற மாதிரி இருக்கும். இங்க அதை வைங்க, இதை இங்க வைங்கனு எதாவது நமக்கு வேலை சொல்லிட்டே இருக்கிற மாதிரி இருக்கு. அங்க வந்தா இப்படி எல்லாம் இருக்காதே” என்று தன் மனைவி நினைவில் சொல்ல,
தாய் இறந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் அந்த இழப்பிலிருந்து மீள முடியமால், தந்தையைத் தனியே விடவும் மனம் இல்லாமல், இங்கே இருந்து நகரக் கூட முடியாத அளவுக்கு வேலை இருந்தது.
“சரி பா. ஆனால் எனக்கு நீங்க வேண்டும். அம்மா இல்லாமலே என்னால சமாளிக்க முடியலை. அம்மா நம்மளை ரொம்ப சுதந்திரமா தனிச்சி இயங்கர மாதிரி தானே வளர்த்தாங்க. இதுவரை நமக்கு ஒரு நல்ல தோழியா இருந்து வழிகாட்டியவங்க இனி தெய்வமாக வழிகாட்டுவாங்க. உங்களுக்கு இன்னும் ஒரு மாசம் தான் டைம். அதுக்கு அப்பறமா என் கூட வந்திடனும்” என்று காலம் நிச்சயம் காயத்தை ஆற்றும் என்ற நம்பிக்கையில் சொல்ல,
“கண்டிப்பா உன் கூட வந்துடுவேன். நீ ஒழுங்கா மருமக புள்ளையைப் பார்த்துக்கோ. வேலை வேலைனு இருந்திடாதே” என்ற தந்தையிடம் சிறிது நேரம் பேசிவிட்டே கைப்பேசியை அணைத்தான்.
மகன் பேசியதில் மனம் சற்று மட்டுப்பட்டு இருக்க, மெதுவாகக் கண்களை சுழட்டினார். கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஊர் தான் ஊத்துக்காடு. சென்னைக்கு அறுபது கிலோமீட்டர் அருகில் இருக்கும் ஊர் தான். ஊத்துக்காடு எல்லையம்மன் இங்கே பிரசித்தி பெற்றவள். தன் மனைவி வேண்டுகோளில் இங்கே இடத்தை வாங்கி பத்து வருடம் முன்பு தான் அழகான எளிமையான வீட்டைக் கட்டி இருந்தனர்.
வேலை என்று அதன் பின்னே நிற்க நேரம் இல்லாமல் ஓடும் நேரத்தில் ஓய்வுக்காக இங்கே தான் ஓடி வருவார்கள். இப்பொழுது தீபன் தனியாக வந்திருக்கிறார். அதுவும் தன் மனைவியின் நினைவுகளைத் தேடி.
உள்ளே வந்தவர் ஒவ்வொரு பொருளாகப் பார்த்துக் கொண்டே வந்தார். பல ஞாபகங்கள் அதில் அடங்கி இருந்தது. தூசி படிந்து இருந்த சைக்கிள் இவனைப் பார்த்துச் சிரித்தது.
“எனக்குத் தெரியாது இப்ப நான் சைக்கிள் ஓட்டணும். வாங்கி தர முடியுமா இல்ல நான் கோச்சிட்டு கிளம்பவா” என்ற கோவமாகக் கத்திக்கொண்டு இருக்கும் கவியாவிடம், “மாதா ஸ்ரீ உங்களுக்கு என்ன இளமை ஊஞ்சல் ஆடுற நினைப்பா ஒழுங்கா காரில் வாங்க” என்று பத்து வயதே ஆன மோஹித் மிரட்ட,
“ஹா ஹா ஹா.. என்னால முடியாததை என் பையன் பண்றான். உன்னையே மிரட்டறான். ஆனா அவன் சொல்கிறது சரி தானே. உனக்கு என்ன சின்ன பொண்ணுன்னு நினைப்பா” என்று தீபன் அவன் பங்கிற்குச் சொல்ல,
“அது எல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு இப்ப சைக்கிள் வேண்டும். போய் இரண்டு பெரும் பக்கத்தில் எங்க கடை இருக்கோ பார்த்து வாங்கிட்டு வாங்க” என்று உள்ளே சென்று விட,
“ஏன்டா மகனே நாமளே நாளைக்கு இங்க இருந்து கிளம்பிடுவோம் இப்ப சைக்கிள் வாங்கி உங்க அம்மா என்னடா பண்ண போறா” என்று வாய் பேசிக்கொண்டு இருந்தாலும் கை மனைவி கேட்டதை வாங்க அருகே கடை ஏதேனும் இருக்கிறதா என்று போன் மூலம் ஆராய்ந்தது
“என்ன பா பண்றீங்க” என்று போனைத் தீவிரமாகப் பார்க்கும் தன் தந்தையை முறைத்துக்கொண்டு கேட்க,
அவனின் பார்வையை அறியாத தீபன் “அது ஒன்னும் இல்லடா மகனே, பக்கத்தில் எங்க கடை இருக்குனு பார்த்தேன். இங்க இருந்து ஒரு பத்து கிலோமீட்டரில் ஒரு கடை இருக்கு வரியா நல்ல சைக்கிளா பார்த்து வாங்கிட்டு வந்திடலாம்” என
“நீ எல்லாம் திருந்த மாட்டத் தகப்பா. வாங்கப் போகலாம்” என்று அடுத்த அரைமணி நேரத்தில் புத்தம் புதிய சைக்கிள் அங்கே இருந்தது. இன்றைய நாள் முழுவதும் அந்த சைக்கிளில் தான் பவனி வந்தார் கவியா.
அந்த சைக்கிளை தன் தோள் சுருங்கிய கையால் வருடியவர் “எல்லாமே நேற்று நடந்த மாதிரியே இருக்கு. காலம் இவ்வளவு வேகமாக ஓடியிருக்க வேண்டாம்” என்று உள்ளே சென்றவரை அடுத்து வரவேற்றது ரெட் கலர் குஷன் சோஃபா.
“ஏய் நம்ம வீட்டு கலருக்கு இந்த ரெட் கலர் சோஃபா நல்லாவே இருக்காது ப்ளீஸ் டி… என் குட்டி ராணி தானே. அந்த பிளாக் கலர் வாங்கலாமே, பார்க்கவும் ரொம்பவே கிளாஸ்சிக்கா இருக்கு” என்று ஷோவ்ரூமில் தீபன் கவியாவிடம் கெஞ்சிக் கேட்க,
“எனக்கு கிளாஸ்சிக் எல்லாம் வேண்டாம். எனக்கு பிடிச்சது வாங்கினால் போதும். அது தான் சூப்பரா இருக்கு ப்ளீஸ் ப்ளீஸ் நான் பாவம் தானே எனக்காக இதுவே வாங்கலாமே” என்று முகத்தை சுருக்கு பாவமாக கேட்க,
இவர்கள் அருகே நின்று இருந்த மோஹித் “உங்க கூட வந்தது தான் நான் பண்ண பெரிய தப்பே. சட்டு புட்டுனு எதாவது வாங்குங்க, பசி உயிர் போகுது. இப்ப தான் கொஞ்சிட்டு இருக்கீங்க” என்று முறைக்க,
“சரி ரெட் சோஃபாவே வாங்கலாம்” என்று தீபன் சொன்ன அடுத்த நொடியே சந்தோசமாக துள்ளி கொண்டு அதை பில் போட சென்றாள்.
மோஹித் “இந்த அம்மா ஏன் தான் உங்க கிட்ட மட்டும் இப்படி குழந்தை மாதிரி நடந்துக்கிறாங்க. வெளிய எல்லாம் எல்லாரையும் தெறிச்சு ஓட விடுறாங்க” என்று புரியாமல் கேட்க,
மகனின் கேள்வியில் மெலிதாக புன்னகைத்துக் கொண்டு, “ஒரு பொண்ணு அவ மனசுக்கு தோன்ற மாதிரி அவ மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட, இல்ல தன்னை எதுக்கும் ஜட்ஜ் பண்ண மாட்டாங்க என்ற ஒரே ஆள் கிட்ட மட்டும் தான் தன் இயல்போடு நடந்துப்பா. ஐந்து வயதாக இருந்தாலும் சரி ஐம்பது வயதாக இருந்தாலும் சரி அவங்க உள்ளே கண்டிப்பா ஒரு குழந்தைத்தனம் இருக்கும். அதை மாறாமல் பார்த்துக்கணும். அவன் தான் உண்மையான ஆம்பளை” என்று தன் மகனிடம் சொல்ல, அவனும் புரிந்தது என்பதைப் போல் தலையை ஆட்டினான்.
மேஜை மேல் இரவு உணவு இருக்க, அதைப் பார்த்து மனம் இன்னும் தன் துணைவியைத் தான் தேடியது. கவியா இருக்கும் வரை எப்பொழுதும் சுடச் சுட தான் சாப்பாடு அவருக்கு நேரத்திற்கு வரும்.
ஆனால் தற்பொழுது சமையல் நேரத்திற்கே ஒரு ஆள் செய்து விட்டு சென்று விட, அனைத்திலும் தன் மனைவியின் நினைவே அவரை பெரிதும் பாதிக்கிறது.
படுக்கையறைக்கு எதிரே ஒரு அறை இருந்தது. அதை பெரிதும் பயன்படுத்தியது கவியா தான். இவர் பெரிதாக உள்ளே சென்றது இல்லை. இப்பொழுது செல்ல தோன்றியது.
உள்ளே நுழைந்ததும் அவரை வரவேற்றது அவர்களின் கல்யாண புகைப்படம் தான். இதழில் தோன்றிய புன்னகையுடன் உள்ளே சென்றவரை அடுத்து வரவேற்றது, மேஜை நாற்காலி, அதில் ஒரு கணினி மற்றும் அதன் உபயோக பொருட்கள்.
ஒவ்வொரு பொருளும் அவருக்குப் பல கதை சொல்லியது. கடைசியாக அவர் கண்ணில் பட்டது தான் நான்கு ஐந்து டைரி. அதைப் பார்த்ததும் இவருக்கு ஒன்றும் புரியவில்லை.
“கவி டைரி எழுத்துவாளா. எழுதாம இப்படி இருப்பா, அவ தொழிலே எழுதறது தானே. ஆனால் எனக்கு எப்படி இது தெரியாமல் போச்சு. இதில் என்ன இருக்கும் வியா மா, எனக்குத் தெரியாதது இருக்கானு தெரியலை ஆனால் இப்ப இதை படிச்சா நீ என் கூடவே இருக்கிற மாதிரியே இருக்கும்” என்று தனியாகப் பேசிக்கொண்டே மேலே இருந்த டைரியைப் பிரிக்க, அதில் ஒரு புகைப்படம் இருந்தது, பாரிஸ் சென்ற போது கவியா, தீபன், மோஹித் மற்றும் அவனின் காதலி கேத்தரின்.
இரண்டு வருடம் முன்பே, மோஹித் “ஐயோ நான் சொல்றது புரியலையா. ப்ளீஸ் மீ நம்ம எல்லாம் அப்பறமா ஒன்றா டூர் போகலாம். இப்ப நாங்க மட்டும் போகிறோமே” என்று தன் அன்னையிடம் கெஞ்சிக்கொண்ட இருக்க,
தீபன் அந்த ஹால் ஓரத்தில் இருக்கும் சோஃபாவில் அமர்ந்து நியூஸ்பேப்பர் படித்துக் கொண்டே இவர்களைப் பார்க்க, மோஹித் “யோவ் தகப்பா நீயாவது எனக்குக் கொஞ்சம் சப்போர்ட் பண்ணேன்” என
“நோ யூஸ் மகனே உன் அம்மா சொல்கிறது தான் கரெக்ட் இன்னும் கல்யாணம் கூட ஆகலை. எப்படி உன்னை நம்பி தனியா அனுப்ப” என
கவியா “நீங்க சும்மா இருங்க… உன் மேல நம்பிக்கை இல்லாம எல்லாம் இல்ல டா. ரொம்ப நாளா பேமிலி ட்ரிப் போக பிளான் போட்டோம் தானே இப்ப போகலாம்ல” என
“அப்ப அதுக்கு தனியா பிளான் போடணும். நான் எதற்கு பாரிஸ் போக போறோம்னு தெரியும் தானே” என்று பாவமாகக் கேட்க,
‘தெரிஞ்சது தானே பிரச்சனை’ என்று தீபன் மெலிதாக முணுமுணுக்க, அவரை ஒரு முறை முறைத்து விட்டு அவனிடம், “தெரியும்டா நாங்க இரண்டு பெரும் உங்களைத் தொல்லை பண்ணவே மாட்டோம். ப்ளீஸ் டா நாங்களும் வரோம்” என
மோஹித் “வயசான காலத்தில் ஹரித்வார், காசி, ராமேஸ்வரம் போகாமல் எங்க கூட பாரிஸ் வர ஆசை படுறீங்க. ரொம்ப நல்லது எல்லாரும் போகலாம், இந்த சந்தோசமான விசயத்தை கேத்தரின் கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று சோகத்தில் பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டே தன் அறைக்குச் செல்ல,
தீபன் “ஏன் டி பையனை இப்படி கொடுமை பண்ற, போயிட்டு வரட்டுமே, அவங்க என்ன சின்ன பசங்களா” என, “அவங்க சின்ன பசங்க இல்ல அது தான் பிரச்சனை. நாமளும் அவங்க கூட என்ஜோய் பண்ணலாம். எதுக்கு நம்ம ரிட்டையர்மெண்ட் வரை வெயிட் பண்ணாமல், முன்னே வி.ஆர்.எஸ் எடுத்தோம். நம்ம இரண்டு பெரும் இன்னும் பாரிஸ் போனதே இல்லை தானே. இவன் பெயரைச் சொல்லி நாம கொஞ்சம் சுத்தி பார்க்கலாம்” என்று கவியா சிரிக்க, அடுத்த பத்து நாட்களில் பாரிஸ் செல்லும் விமானத்திலிருந்தனர். அந்த நாட்களை நினைவு கூர்ந்து மேலும் படிக்கத் தொடங்கினார்.
தீபன், வேளையிலிருந்து இருந்தால் தற்பொழுது டைரக்டர் ஜெனரல் ஆகி இருப்பார் அதுவும் இந்தியத் தொல்லியல் துறையில். ஆனால் அவரோ தன் மனைவிக்காக, அவள் உடல் நலக் குறைவால் அவதிப் படுவதை அறிந்து உடனே வேலையை ராஜினாமா செய்து அவரோடு நேரம் செலவிட நினைத்தார்.
அவர் ஒன்று நினைக்க, கடவுள் ஒன்று நினைத்தார் போலே . இருவரின் முதல் சந்திப்பை இன்று நினைத்தாலும் அவருக்குத் தித்திப்பாக இருக்கும். அன்று அவர் கவியாவை அழைத்த காரணம் வேறு ஆனால் நடந்தது வேறு தானே.
இருபத்தி ஏழு ஆண்டுகள் முன்பு,
மூன்று வருடங்களாக வட இந்தியாவில் மிகவும் கஷ்டமாகத் தான் சென்றது தீபனுக்கு. ஆசை ஆசையாக தொல்லியல் துறைக்குத் தான் படிப்பேன் என்று முடிவு எடுத்து கல்லூரி முடித்ததும் கவனத்தை எதன் மீதும் செலுத்தாமல் படிப்பிலே செலவு செய்து தேர்வில் வெற்றி பெற்றவனுக்கு போஸ்டிங் வடக்கே போட்டு விட, மூன்று வருடங்கள் முயன்றே தற்பொழுது சென்னை மாற்றல் வாங்கி வந்த சமயம்.
இரவு உணவு முடித்து விட்டு அறைக்கு வந்த தீபனின் கவனத்தை அவனின் கணினி சத்தம் எழுப்பி ஈர்க்க,
‘இந்த நேரத்தில் யார் அது மெயில் பண்றது’ என்ற யோசனையோடு அந்த சுட்டியைத் தட்டியவன், அதில் வந்த செய்தியில் அதிர்ந்தான்.
“கோபுரம் என்பது கதவின் தொடக்கம் மட்டுமே. திறக்காத வரை ரகசியம் தெரியாது” என்று ஒரே வரியில் இருக்க,
‘இதுல என்ன சொல்ல வராங்க. யாரு அனுப்பி இருப்பா’ என்று யோசித்தவனுக்குத் தெரியாதே அதன் ஆதியும் அந்தமும்.
சுவைப்போம்....
cocomelon
Last edited: