• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராதோ என் தேடல் - 6

Viba visha

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
90
அத்தியாயம் - 6

சிரபுஞ்சியின் மழைச்சாரலாய் மனதுக்குள் இதமளித்தது அவனது பேச்சு. மயிலிறகின் வருடலாய் அவளுக்குள் இவன் இடம் பிடிக்க, உள்ளுக்குள் சற்று தெம்பாகவும் உணர்ந்தாள் பெண்.

இங்கு இவள் பேசி முடித்துவிட்டு வந்து புகழியின் அருகே நிற்கவும், அவர்கள் பேருந்து வரவும் சரியாய் இருந்தது.

புகழியும், அம்பரியும் தங்கள் வீட்டிற்கு வந்த பிறகு, அவளுக்கும் விக்ரமிடம் தான் கூறியதை பற்றி எடுத்துரைக்க, புகழிக்குமே மனதிற்குள் சற்று நிம்மதியாய் இருந்தது.

இப்படியாய் நாட்கள் சென்று கொண்டிருக்கையில் தான் அவர்கள் ஐ.வி செல்லும் தினமும் நெருங்கியது.

அன்று காலையில் புகழிக்கும் முன்னதாகவே எழுந்து, குளித்துத் தயாராகியவளை, புகழி ஆச்சர்யத்துடன் பார்த்தாள். இத்தனைக்கும் காலைக் காபி கூட அருந்தாது, அவள் தயாராகவும், தானும் அப்பொழுது தான் குளித்துவிட்டு வந்த புகழி.. "என்னங்க மேடம்.. என்னைக்கும் இல்லாத அதிசயமா உங்க லவ்வர் பாய்.. காபி மேன கண்டுக்காம விட்டுடீங்க?" என்று குரலில் கேலி இழைத்துக் கேட்டாள்.

என்னவோ, அம்பரி இப்படிக் காலையிலே எழுந்து தயாராவதும், அன்று அவர்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து சுற்றுலா செல்வதுமாக எல்லாம் சேர்ந்து புகழியை உற்சாகப்படுத்தியிருந்தன என்றே கூறலாம்.

இப்படிப் புகழி உதட்டில் சிரிப்புடன் கேட்கவும், விடுவாளா அம்பரி? "ஆமா தாயே.. இன்னைக்கு என் லவ்வர் பாய்க்குக் கொஞ்சம் ரெஸ்ட். ஆனா முழுசா ரெஸ்ட் இல்ல.. இதோ இப்ப நான் ரெடி ஆகிட்டேன் இல்லையா? இதோ ஓடோடிப் போறேன் அவன்கிட்ட.

வா.. நீயும் வந்து எங்க ஜோதியில ஐக்கியமாகு.." என்று கூறிக்கொண்டே அவளது கரத்தைப் பற்றி இழுத்தபடியே அந்தச் சிறு கிச்சனுக்குள் நுழைந்தாள் அவள்.

இருவரும் காபியை அருந்தியபடியே பேசிக்கொண்டிருக்க, புகழியோ.. "ஹேய்.. இன்னைக்குச் சாயந்திரம் தான நம்ம டூர் பஸ் கிளம்புது? நீ என்ன இப்போவே இவ்வளவு ஜம்முன்னு ரெடி ஆகிட்ட?" என்று ஆச்சர்யமாய்க் கேட்க, "அதெல்லாம் சொல்றதுக்கு இல்ல.. பரம ரகசியம்.." என்று நக்கலுடன் கூறினாள் அவள்.

அதைக்கேட்டு கடுப்படைந்த புகழியோ.. "ஹேய்.. என்னனு சொல்லுடி ப்ளீஸ்.." என்று கெஞ்சியும் கூட, அம்பரி பதில் கூறாதிருக்கவும்.. இன்னமும் கோபமடைந்தவளோ..

"நீ மட்டும் இப்போ என்ன விஷயம்னு சொல்லலைன்னா, நான் இந்தக் காபியை குடிக்க மாட்டேன்." எனக் கூறி தனது காபி கப்பை ஓரமாக வைத்து முகம் திருப்ப, அம்பரியோ.. "ஆஹா.. ரொம்ப நல்லதா போச்சு.." என்று கூறிக்கொண்டே புகழி மிச்சம் வைத்திருந்த காபியை எடுத்து பருகப் போனாள்.

உடனே அவளது கரத்தில் இருந்து தனது காபி கப்பை பிடுங்கிய புகழியோ "என் காபியை கொடு டி.. காபி குடிகாரி.." என்று கூறிக்கொண்டே பிடுங்கிய கோப்பையிலிருந்து தனது காபியை சட்டெனக் குடித்து முடித்தாள்.

இப்படியாய் இருவரும் பேசி கலகலத்துக் கொண்டே கல்லூரிக்குப் புறப்பட்டுச் செல்ல, அன்று தான் புகழி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியதாக உணர்ந்தாள் அம்பரி.

அந்த உணர்விலேயே மனம் நிறைந்தது அம்பரிக்கு. அதன் பிறகு கல்லூரி வந்தடைந்த அம்பரி, இனியாவுடன் சேர்ந்து ரகசியமாய்த் தனியே போய்ப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகே புகழி வந்தால் போதும், தங்களது பேச்சை நிறுத்தினர். இவர்களது இந்தச் செயல்பாடுகள் எல்லாம் புகழிக்கு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தின.

"டென்ஷனுக்குப் பிறந்ததுங்க.. இந்த ரெண்டுங்களும் அப்படி எதுக்கு இவ்வளவு பிளான் போடுதுங்கனு தெரியலையே.. ஒருவேளை இவளுங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது கள்ளக் கடத்தல் பிசினஸ் செய்யப் போறாளுங்களா என்ன?" என்று புகழி யோசித்துக் கொண்டிருந்தாள்.

அன்றைய மதிய உணவு இடைவேளையின் பொழுதும் கூட, புகழியை மற்றவர்களுடன் உணவருடந்த வைத்துவிட்டு, அம்பரியும், இனியாவும் தாங்கள் மட்டுமாகக் காண்டீனில் சென்று ஏதாவது வாங்கி வருவதாகக் கூறிவிட்டு செல்ல.. அவர்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தாள் புகழி.

"நிச்சயம் இதுங்க ஏதோ வம்பை விலைக்கு வாங்கப் போகுதுங்க.." என்பர் எண்ணியவளாய் புகழி உணவருந்திக் கொண்டிருக்கையில், சற்று நேரத்திலேயே அவர்கள் வகுப்பில் மற்றொரு மாணவி அவசர அவசரமாக உள்ளே நுழைந்தாள்.

வந்தவள், நேரே புகழியிடம் சென்று.. "ஹேய் புகழ்.. நம்ம அம்பி, கேன்டீன்ல மயக்கம் போட்டு விழுந்துட்டாடி.. நீ சீக்கிரம் போய்ப் பாரு" என்று பதட்டத்துடன் மூச்சிரைத்தபடியே கூற, புகழியும் தான் உணவருந்திக் கொண்டிருந்ததையே மறந்து சட்டெனப் பதறிப்போய் எழுந்து கேன்டீனுக்கு ஓடினாள்.

வேகவேகமாய்ப் படிகளில் இறங்கி, கீழிருக்கும் காண்டீனுக்குள் சென்றால், அங்கே நிறைய மாணவிகள் ஓரிடத்தில், ஒரே கூட்டமாய் நின்றிருந்தனர்.

இங்கோ ஏற்கனவே எகிறியிருந்த புகழியின் இதயத்துடிப்பு இன்னமுமாய் உச்சத்தை எட்டத் துவங்கியது. சட்டெனக் கூட்டத்தை அவள் விலக்கிப் பார்க்கவும், கரங்களில் ஏந்திய கேக்குடன் அம்பரியும், இனியாவும் நின்றிருந்தனர்.

அதைக் கண்டதும் ஒரு கணம் புகழிக்கு என்ன நடக்கிறதென்பதே புரியவில்லை.

இன்னைக்கு நம்ம பிறந்த நாள் கூட இல்லையே.. எதுக்கு இவளுங்க இப்படிக் கேக்கோட நிக்கறாளுங்க? என்று குழப்பியபடியே இருவரையும் புகழி ஏறிட்டுப் பார்க்க, அவளருகே வந்த அம்பரியோ.. "இன்னையோட நீ எங்களைப் பிரண்டா ஏத்துக்கிட்டு ஒரு வருஷம்.. அதாவது 365 நாள் ஆகுது. என்னதான் நீ என்னோட ரூம் மேட்டா இருந்தாலும், உனக்குக் காலேஜ் சேர்ந்த பிறகு என் கூடப் பிரண்ட் ஆக இவ்வளவு நாள் தேவைப்பட்டுச்சு.

அதுக்கான செலிப்ரேஷன் தான் இது.." என்று கூறவும்.. புகழிக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

அதிலும் இனியா.. அவளிடம், தான் அவ்வளவாகப் பேசாவிட்டாலும் கூட, அவள் தன்னை உயிர் தோழியாக எண்ணியிருக்கிறாள் என்பதை அறிந்து மனமெல்லாம் பூரித்தது புகழிக்கு.

விழிகளில் வழிகின்ற நீருடனே.. "தேங்க் யூ சோ மச் டி.. உங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ தேங்க்ஸ்.. என்ன சொல்றதுன்னே தெரியல. யார் கூடவும் பேசாம பலகாம இருந்த என்ன, உங்க பிரண்டா நீங்கி ஏத்துக்கிட்டீங்களே.. அதுவே எனக்குப் பெரிய கொடுப்பினை.. அபி.. இனி.. நீங்க ரெண்டு பேரும் தான் எனக்குக் கிடைச்ச பொக்கிஷம்.." என்று உணர்ச்சி மேலிட தழுதழுத்த குரலில் கூறிட, மற்ற இருவரும் கூட அவளைக் கட்டிக் கொண்டனர்.

அங்கு இருந்த தங்களது ஜூனியர் மாணவிகளுக்கும் அந்தக் கேக்கை பகிர்ந்து கொடுத்துவிட்டு, மீதமிருக்கும் கேக்கை தங்கள் தோழிகளுக்கு வழங்க எடுத்துச் செல்லுகையில் பார்த்தால்.. அந்தக் கேண்டீனின் வாயிலருகே இவர்களையே பார்த்தபடி உதட்டில் முறுவலுடன் நின்றிருந்தான் சத்யா. அவனைப் பார்த்ததும் கேக் வைத்திருக்கும் அட்டைப் பெட்டியை மீண்டுமாய்ப் பிரித்து அதில் சிறிதளவு வெட்டி, ஒரு சிறு தட்டில் வைத்து அவனிடம் நீட்டினாள் அம்பரி.

அப்பொழுது அவனது சிரித்த பார்வையில் தானும் மகிழ்வுடனே திரும்பினாள்.

யாரிடமும் கூறாது.. எதுவென்றே தெரியாது.. அவர்களுக்கு அழகான ஸ்னேஹம் துளிர்த்தது.

அம்பரியின் இந்த மாற்றத்தை கண்டுகொண்ட அவளது தோழிகளும் இதழில் குடிகொண்ட மலர்வுடனே அஙளுடன் நடந்தனர்.

அன்று மாலை கல்லூரி நேரம் முடிந்ததும், அனைவரும் சுற்றுலாவிற்குக் கிளம்ப ஆயத்தமானார்கள்.

அன்றைய இரவு உணவும் கல்லூரி விடுதியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. மாணவிகளன் கலகலப்பு சத்தத்துடன் உணவு முடித்து அனைவரும் பேருந்தில் ஏறினர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன், கூடவே கலகலப்பு நடனத்துடன் மாணவிகளுடன் உடனிருந்த ஆசிரியைகளும் மீண்டும் தங்கள் கல்லூரிப் பருவத்திற்கே சென்றது போல ஆனந்தமாய் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

அவர்களுடன் வந்த சம்பத் சாரும், சத்ய விக்ரமும் பேருந்தின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அமர்ந்து அவருடன் பேச்சு கொடுத்தபடி வந்துகொண்டிருந்தனர்.

மாணவிகளின் அந்தக் கச்சேரி எல்லாம் முடிந்து அவர்கள் உறங்க நள்ளிரவிற்கும் மேலே ஆகிவிட்டது.

மறுநாள் விண்ணோடு வேந்தன் எழுகின்ற பொழுதினில், அவர்களது பேருந்து தமிழக எல்லை தாண்டி, பாலக்காடு கடந்து, திரிச்சூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

பறவைகளின் சத்தத்தில் கிழக்கு வெளுத்துக் கொண்டிருக்க, அந்த மனோரம்மியமான பொழுதினில் விழி திறந்தாள் அம்பரி. சுற்றிலும் வரிவடிவாகத் தெரிந்த கேரளத்தின் அழகிலேயே அவள் மயங்கிவிட்டாள் என்றே கூறவேண்டும்.

தன்னையும் மறந்து, வானம் இருள் தொலைத்து.. மஞ்சள் பூசுவதை மனமெங்கும் ஒரு மயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவளுக்கு அடுத்ததாகக் கண் விழித்த இனியாவும், புகழியும் கூட, இந்தக் கிழக்கு வெளுத்த வேளையில் தங்களைத் தொலைத்தனர்.

ஆனால் அந்த ஏகாந்தமெல்லாம் மற்றவர்கள் எழும் வரையில் தான். அவர்கள் எல்லோரும் எழுந்து மீண்டும் அந்தப் பேருந்துக்குள் கல்லூரி பட்டாம்பூச்சிகளின் சிறகு படபடக்கத் துவங்கியதும், சுற்றுப்புற அழகை மறந்துவிட்டனர் அனைவரும்.

இப்படியான குதூகலத்துடனே திரிச்சூரின் ஒரு பெரிய ஹோட்டலில் இவர்கள் அனைவருக்கும் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் அனைவரும் தங்கி சிரம பரிகாரங்கள் செய்த பிறகு, அங்கிருந்து அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தொழிற்சாலைக்கு முதலில் செல்லலலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதன் படி அனைத்து மாணவிகளும் கிளித்து முடித்துத் தயாராக அவரவர் அறைகளுக்குச் செல்ல, அவர்களைத் திருச்சியில் இருந்தே பின் தொடர்ந்து வந்த காரிலிருந்து ஒருவன் இறங்கி, அதே ஹோட்டலில் அறையெடுத்து தங்கியதை அங்கிருந்த யாருமே உணரவே இல்லை.
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
avv.. 6 padikkama 7 padichu confuuse KI, IPPO MARUPADIYUM 6 PADICHITU VAREN
 
Top