• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராநதி - 10

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
நதி - 10

“வாட் கம் அகைன்..” என்று அதட்டலாகக் கேட்ட கார்த்தியைப் பார்த்து அரண்டவள், “அது அப்பாதான் ப்ளீஸ்.. நான் போறேன்..” என வேகமாக அங்கிருந்து நகர்ந்தவளின் கைகளை எட்டிப் பிடித்தவனுக்கு கைகள் அகப்படாமல் பெண்ணின் துப்பட்டா மாட்ட, அவனும் சுதாரிக்காமல் அப்படியே இழுத்துவிட்டான்.

கார்த்தி இப்படியெல்லாம் செய்வான் என்று தெரியாத அபி, சட்டென்று தன் கைகளைக் கொண்டு மேலே மறைத்தவள், அப்படியே சுவரோடு ஒட்டிக் கொண்டாள்.

கார்த்திக்கிற்கும் இது எதிர்பாராத செயல்தான். அவன் கைகளைத்தான் எட்டிப்பிடிக்க முயன்றான். ஆனால் இது அவனே எதிர்பார்க்காத செயல். பின் முதுகு அழுகையில் குழுங்க நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு தன்மேலே எரிச்சலும், கோபமும் வந்தது.

அதை அடக்கி, “ஸாரி.. நான் அப்படி செஞ்சிருக்கக்கூடாது, அன்ட் நான் பேசிட்டு இருக்கும் போது நீயும் மேனர்ஸ் இல்லாம கிளம்பி போயிருக்கக்கூடாது..” என அவளுக்கு ஒரு குட்டு வைத்தவன், துப்பட்டாவைத் தூக்கி அவளிடம் எரிய, அது சென்று அவளது காலடியில் விழுந்தது.

அவன் பேச்சையும் செயலையும் பார்த்தவள், கீழே கிடந்த துப்பட்டாவை எடுக்காமல் கலங்கிய விழிகளோடு அவனையேப் பார்த்தாள்.

இதென்ன எதற்கெடுத்தாலும் டேமை திறந்து விட்டுட்டு, எனச் சலிப்பாக எண்ணியவன், “ம்ம்.. இன்னும் என்ன..? எடுத்து போட்டுட்டு வந்து உட்கார் உங்கிட்ட பேசனும், நீ போடாம உக்காந்தாலும் எனக்கு ஒன்னும் இல்ல..” என அவள் எடுக்காமல் யோசனையில் நிற்கவும் கார்த்திக் நக்கலாகப் பேச,

எப்படி அவன் முன் குனிந்து எடுப்பது என யோசனையில் நின்றவளுக்கு அவன் வார்த்தைகள் அமிலமாக காதில் விழுந்தது. கோபமும் இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே என்ற ஆற்றாமையும் அதை வெளிக்காட்ட முடியாத இயலாமையும் சேர, “அந்தப்பக்கம் திரும்புங்க ப்ளீஸ்..” என கெஞ்ச வைக்கும் தன் நிலைமையை எண்ணி நொந்து கொண்டே கேட்டாள் அபிராமி.

அதில் மீண்டும் கடுப்பானவன், “ஏய் என்ன என்னை வெறியேத்திப் பார்க்கனும்னு முடிவா இருக்கியா.? நீ ஒன்னுமே போடாம வந்து நின்னாலும் நான் என் கன்ட்ரோலை விட்டுட மாட்டேன் ரைட், ஐம் ஸ்ட்ராங்க். நாட் எ வீக் பெர்சனாலிடி, பெரிய இவ மாதிரி தான்.. ச்சே..” என்றுக் காட்டுக் கத்து கத்தியவன், அவள் முகத்தில் தெரிந்த பயத்தில், அதிர்ச்சியில் ‘ஷிட்’ எனத் தலையைத் தட்டிவிட்டு பின்னேத் திரும்ப, அடுத்த நொடி வேகமாக தன் துப்பட்டாவை எடுத்து தன் கழுத்தோடு போட்டு மறைத்தாள்.

அந்தோ பரிதாபம் அவன் பார்த்து விடக்கூடாது என்று நினைத்ததை அவளுக்கு எதிராக இருந்த அந்த அறையின் கண்ணாடி அவனுக்கு காட்டிட, எதற்கு அவள் தயங்கினாள் என்பது நொடியில் புரிந்தது.

அவளது அங்க வளைவுகள் அப்படி. சட்டென்று மூச்செடுத்தது அவனுக்கு.

‘ஷப்பா வந்து பத்து நிமிசத்துல எத்தனை தடவை எப்படியெல்லாம் டார்ச்சர் பண்றா.. இவளை முதல்ல இங்க இருந்து அனுப்பனும். நம்ம கன்ட்ரோலை கலைச்சு விட்டுட்டுத்தான் போவா போல..’ என நொந்து போனவன்,

அவளைக் கடுகடுவென முறைத்துக் கொண்டே “அம்மா தாயே அன்னைக்கு உங்களை பாவம் பார்த்து என் கார்ல ஏத்திட்டு வந்து எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டேன்னு இப்போதான் புரியுது. உங்களோட எந்த பேப்பரும், முக்கியமா உங்கப்பான் சொன்ன எந்த லாட்டரி சீட்டும், என் கார்ல இருக்கல. மறுபடியும் நான் தேடிப்பார்க்குறேன், அப்படி ஒரு வேலை கிடைச்சா உனக்கு கூப்பிட்டு சொல்றேன் வந்து வாங்கிக்கோ, இப்போ இடத்தை காலி பண்ணு..” என முகத்தில் அடித்தார் போல சொல்ல,

விட்டால் போதும் ஓடிவிடுவேன் என்ற நிலையில் இருந்த அபிராமியும், அவன் சொல்லி முடித்த அடுத்த நொடி எழுந்து வெளியில் விருவிருவெனெ சென்றுவிட்டாள். அவள் சென்ற வேகத்தைப் பார்த்து கார்த்திக் கூட ஒரு நொடி அசந்து தான் விட்டான்.

என்ன இந்த பப்ளிமாஸ் இப்படி ஓடுது, நாம என்ன அவ்ளோ டெரராவா இருக்கோம்’ எனத் தன் பிம்பத்தை பின்னோக்கி கண்ணாடியில் பார்த்தவன், ‘வைட் காட்டன் சர்ட், ப்ளாக் டெனிம் ஜீன்ஸ்.. அடர்ந்து முறுக்கிய மீசை, அலையாய் படர்ந்த கேச’ என அவனுக்கு அவனே ரசித்துவிட்டு, நல்லாத்தானே இருக்கோம். இந்த லூசு ஏன் இப்படி அரண்டுட்டு ஓடுது’ என எரிச்சலாகப் புலம்பியபடியே தன் இருக்கையில் யோசனையாக அமர்ந்தான் கார்த்தி.

இங்கோ வெளியில் வந்தவள், “எப்படா போக சொல்லுவான்னு இருந்துச்சு. அம்மாடி இனி இந்தப்பக்கமே எட்டிப் பார்க்கக்கூடாது. இவனும் இவன் மூஞ்சியும். எப்போ பாரு ஒரு கிலோ வரமிளகாய் அரைச்சு மூஞ்சியில தடவின மாதிரி காஞ்சிட்டே இருக்கான், மீசையைப் பாரு மீசையை நல்லா வீரப்பனுக்கு சப்சிடியூட் போட்டமாதிரி, அடியாள் மாதிரி வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். ஒரு வேளை வக்கீலா இருப்பானோ, இருப்பான். அதான் இப்படி மிரட்டிட்டு இருக்கான். எப்படித்தான் இவனை எல்லாம் வீட்டுல மேய்க்குறாங்களோ தெரியல..” என பொங்கிய கோபத்தை வாய்க்குள் முணுமுணுத்தபடி அந்த இடத்தை விட்டு கிட்டத்தட்ட ஓடினாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்றைய நாள் முழுவதும் கடுகடுவெனவே சுற்றிக் கொண்டிருந்தான் கார்த்தி. வேலை செய்பவர்கள் அனைவரையும் உண்டில்லை என்றாக்கிவிட,

“ஓரு அக்கா வந்துச்சு, கார்த்தி சார் கூட சண்டை போட்டுச்சு, அவர் திட்டிட்டார் போல அழுதுட்டே போச்சு, அப்போ இருந்து கார்த்தி சார் இப்படித்தான் இருக்கார்” என இதற்கெல்லாம் காரணம் அபிராமிதான் என்று ஆபிஸ்பையன் எல்லோரிடமும் சொல்லிவிட, அவர்கள் வாயிற்கும் அவலாகிப் போனாள் அவள்.

வீட்டுக்கு வந்த அபிராமியோ சாதாரணமாக தன் தந்தைக்கு அழைத்து விசயத்தைச் சொன்னவள், “இனி என்னை அங்க அனுப்பாதப்பா, அவன் ஆளு சரியில்ல..” எனவும்,

அதுவரை அமைதியாக இருந்த கதிரவன் “ஏய் அறிவில்ல உனக்கு. அவன் அப்படி சொல்லவும், உடனே மண்டையை ஆட்டிக்கிட்டு ஓடிவந்துட்டியா.? ஒரு ரூபா ரெண்டு ரூபாவா போனா போகட்டும்னு விட, ஒரு கோடி. எப்படி விட முடியும். கொஞ்சம் கூட பொழைக்கத் தெரியாம என்ன பொண்ணு நீ..” என ஆத்திரத்தில் கண்டதையும் பேச,

“போதும் நிறுத்துங்க..” என முதல் தடவையாக தந்தையை அரட்டிய அபிராமி, “எப்படி பொழைக்கனும்னு நினைக்கிறீங்க..” என காட்டாமாகக் கேட்க,

“பொழைக்கனும்னா அப்படி, இப்படித்தான். விட்டா வாயெல்லாம் நீளுது, பெத்தவனையே எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துட்டியா.. ம்ம் வாயை உடைச்சிடுவேன் பார்த்துக்கோ. எல்லாம் உன் ஆத்தாள சொல்லனும், நல்லா வளர்த்துவிட்டுப் போயிருக்கா பாரு, ஒன்னுத்துக்கும் உதவாம, என் உயிரை எடுக்கனே..” என்றவர் போனை வைத்துவிட, அபிராமிக்கு தான் அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.

‘என்ன எதிர்பார்க்கிறார், நான் எப்படி பிழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், அப்படி இப்படியென்றால், உடலெல்லாம் அருவருப்பில் தீயாய் எரிந்தது.

அவனிடம் ஈஷியபடியே பேசி காரியத்தை சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறாரா.? இல்லை வேறுமாதிரியா..? இவர் என் அப்பாதானா.? இவரைப் பற்றித் தெரிந்ததினால் தான் அம்மா அவ்வளவு பயந்தார்களா..? அம்மா அம்மா என்னை ஏன் இப்படி தனியா விட்டுட்டுப் போயிட்டீங்க, பயமா இருக்கே.. நான் எப்படி இவரோட இருக்கப் போறேன்..’ தந்தையைப் பற்றி உணர்ந்த நொடி அவளுக்கு உள்ளுக்குள் பயம் பேயாட்டம் போட்டது. தன் அன்னையின் மடி வேண்டும், அவரிடம் செல்ல வேண்டும் என மனம் அழுகையில் கூப்பாடு போட்டது.

சில நிமிடங்கள் அழுகையில் கரைய நேரத்தைப் பார்த்தவள் கதிரவன் வர இன்னும் நேரமிருப்பதை உணர்ந்து, உடனே முரளிக்கு அழைத்து விட்டாள்.

“என்ன அம்மு இந்த நேரமே..” என்றபடியே எடுத்த முரளிக்கு காதில் விழுந்தது எல்லாம் தங்கையின் அழுகுரல் தான்.

கத்தினாள், கதறினாள், தேம்பினாள் அழுதே கரைந்தாள். ஆனால் அவனுக்கு பதிலே சொல்லவில்லை.

தூரதேசத்தில் இருப்பவனுக்கு இப்படியான அழைப்பு என்றால் அவன் என்ன நினைப்பான். பதறிவிட்டான். கெஞ்சினான். கொஞ்சினான். மிரட்டினான். அழுதான் எதற்கும் பதிலில்லை அவளிடம்.

பின் தங்கையின் தோழி மனோகரிக்கு அழைத்து கேட்க, அவளுக்குமே தெரியவில்லை. உடனே அவள் “எங்கிட்ட ஒன்னுமே சொல்லலயே மாமா, நான் போய் பேசிட்டு அங்க இருந்து கூப்பிடுறேன்..” என்றவள் உடனே அபியிடம் ஓடிவந்தாள். இரு வீடு தள்ளிதான் மனோகரியின் வீடு.

மனோகரியைப் பார்த்ததும் மீண்டும் அழுகை வந்தது அபிக்கு, சந்திரா இருக்கும் போது அடிக்கடி மனோகரி இங்கு வருவாள்தான். அவரது மறைவிற்குப் பிறகு வெளியில் பார்த்து பேசிக் கொள்வதோடு சரி. வீட்டிற்கெல்லாம் வந்ததில்லை.

அப்போது புரியாதது எல்லாம் இப்போது புரிந்தது. தந்தைக்கு பயந்தே வீட்டில் இங்கு அனுப்பாமல் இருந்திருக்கிறார்கள் என்று. அதுவும் சேர்ந்து அவளுக்கு அழுகையைக் கொடுக்க, மனோகரியைக் கட்டிக் கொண்டு வெடித்து அழ ஆரம்பித்தாள்.

பல நிமிட அழுகை ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர, அவளது முதுகை வருடி நீர் கொடுத்து சமாதானம் செய்ய, சில நொடி மௌனத்திற்குப் பிறகு மடை திறந்தார் போல அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

மனோகரிக்கு கதிரவனைப் பற்றி அதிகம் தெரியாது தான். ஆனால் ஊதாரித்தனமாக சுத்துவார், தற்பெருமை அதிகம். உருப்படாத வேலைகள் செய்வார் என்று தந்தையின் மூலம் தெரியும் தான். ஆனால் மகளிடமே இப்படி பேசுவார் என்று நினைத்திருக்கவில்லை.

இன்னும் அபிராமி அழுதுகொண்டே இருப்பதை உணர்ந்தவள், “அபி இன்னைக்கு எங்க வீட்டுல வந்து இரு. உங்க அண்ணாவை வரச்சொல்லி அவர் கூட நீ கிளம்பு. உங்க அப்பாவை நம்பி இனியும் நீ இங்க இருக்க முடியாது. அது சேஃப் இல்ல..” என்றவள், முரளிக்கு அழைத்து விசயத்தை சொல்லாமல், அம்மா ஞாபகம் என்று மட்டும் சொல்லி, அபியை கையோடு அழைத்துக்கொண்டு வீட்டையும் பூட்டிக் கிளம்பி விட்டாள்.

அபிராமியோடு உள்ளே நுழைந்த மகளைக் கேள்வியாகப் பார்த்தாலும், எதுவும் பேசவில்லை அவளது பெற்றோர். அபியை சமாதானம் செய்து சாப்பிட வைத்து, முரளியிடமும் நல்ல முறையில் பேச வைத்து உறங்கவிட்ட பிறகே பெற்றோரிடம் விஷயத்தைக் கூறினாள் மனோகரி.

கேட்டவர்களுக்கு கதிரவன் மேல் அருவருப்பும் கோபமும் தான் போட்டிப் போட்டுக் கொண்டு வந்தது.

“என்ன மனுஷன் இவனெல்லாம். பொண்டாட்டி செத்துட்டான்னு கொஞ்சமும் கவலை இல்லாம கூத்தியா வீட்டுல கிடந்தவன் தான. இவன்கிட்ட நல்லதை எதிர்பார்க்க முடியுமா.? காலம் போன கடைசில எப்படி போகுது பாரு புத்தி. சந்திரா புள்ள சாவுல கூட எனக்கு சந்தேகம்தான், மொத நாள் நல்லா பேசுன புள்ள, அடுத்தநாள் செத்துட்டான்னு சொன்னா எப்படி நம்ப, ச்சே..: என மனோகரியின் அப்பா ஆவேசமாகப் பேச,

“அப்பா அவளுக்கு கேட்டுடும் கொஞ்சம் அமைதியா பேசுங்க.” எனப் பதறிய மகளை முறைத்தவர்,

“இன்னும் ஏன் அவளுக்கு மறைக்கனும், இப்பவே அவளுக்கு எல்லாம் தெரியட்டும்..” என மேலும் கத்த,

“கொஞ்சம் சும்மா இருங்க, மனோ சொல்றதும் சரிதான். முரளி வர வரைக்கும் நாம கொஞ்சம் கவனமா பார்த்துக்கலாம். அவன் வந்து அபியைக் கையோட கூப்பிட்டு போய்டட்டும். இந்தாளு இப்படியே தாந்தோற்றித்தனமாவே சுத்தி உருப்படாம போகட்டும்.. அதுவரை அந்த மனுஷன் கூட வம்பிழுக்காம இருங்க..” என எல்லாவற்றிற்கும் பொதுவாக ஒரு தீர்வைச் சொன்னவர், மகளோடு எழுந்து அறைக்கு சென்றுவிட்டார்.

நேரம் நடுஜாமத்தை தாண்டியிருக்கும், கதிரவனின் சத்தம் வீதியில் நாராசமாகக் கேட்க, சத்தத்தைக் கேட்டு முதலில் எழுந்தது மனோவின் தந்தை தான்.

எரிச்சலில் எழுந்து சென்றவர், “ஏய் இங்க என்ன சலம்பல் பண்ணிட்டு இருக்க, மனுசங்க அசந்து தலையை சாச்சிடக்கூடாது, குடிச்சிட்டு வந்து ஊரையே ரெண்டாக்க வேண்டியது..” எனக் கத்த,

“என்னவே விட்டா பேசிட்டே போற, நானே எம்பொண்ணு, என் ராசாத்தியக் காணோம்னு கவலையில இருந்தா, உனக்கு நான் சலம்பிட்டு இருக்க மாதிரி தெரியுதோ, உன் வீட்டு பொண்ணு காணாம போனா தான என் கவலை உனக்கு தெரியும்.” என குரலில் வன்மத்தைத் தேக்கி, அது தெரியவிடாமல் நக்கலாகப் பேச,

“எம்பொண்ணு ஏம்ல அர்த்த ராத்திரி காணாம போறா.. அவளுக்கு அப்பன் சரியில்லையா, இல்ல ஆத்தாதான் ஆவியாயிட்டாளா. ரெண்டு பேரும் குத்துக்கல்லாட்டம் அவளுக்கு கூட இருக்கும் போது அவ ஏன் போறா.” என உனக்கு சளைத்தவன் அல்ல நான் என அவரும் பதிலுக்கு அதே குரலில் பேச,

“அப்போ எம் பொண்ணு எவங்கூடவோ இல்ல இல்ல, இந்தா நிக்கானே இவங்கூட ஓடிப்போயிட்டான்னு சொல்றியா..” என அங்கே காரில் சாய்ந்தபடி, இதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்ற ரீதியில் நின்றிருந்த கார்த்திக்கை காட்டிப் பேச,
அதுவரை அப்படி ஒருவன் நின்றிருக்கிறான் என்றே கவனிக்காத மனோகரியின் தந்தை சட்டென்று கதிரவனிடம் வந்து “புத்திக்கெட்டு போய் அலையிறியாலே மடப்பயலே, பெத்த பொண்ண என்ன பேச்சு பேசுத.” என அவரைப் பிடிக்கப் போக, ஆனால் அதற்குள் அவரைப் பிடித்துக் கீழேத் தள்ளிய கார்த்தி நெஞ்சில் காலை வைத்து அழுத்தியிருந்தான்.

“இனி நீ உயிரோட இருக்கவே லாயக்கில்ல.. என்ன ஜென்மம் நீயெல்லாம்..” எனக் கர்ஜித்தபடியே காலில் அழுத்தத்தைக் கூட்டினான் கார்த்தி.
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
இவனெல்லாம் என்ன அப்பன்.. இப்படி இருக்குறவனை கொன்னா கூட தப்பில்ல.. மூஞ்சை பாரு
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
274
Intha DOG ellam appana irukka layakke illa, pottu thallidunka boss
 

saru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2022
Messages
141
Karthi epdi vandan
 
Top