• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராநதி - 29

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
நதி - 29

மருத்துவமனை களேபரங்கள் அனைத்தும் முடிந்து, அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மனைவியோடு மருத்துவமனையில் இருந்து கொண்டான் மாதேஷ்.

ஏற்கனவே மிகவும் பயத்திலும், கழிவிரக்கத்திலும் தான் அந்த வீட்டில் இருந்தாள் சாம்பவி. அதை வெளியில் சொல்லவில்லை என்றாலும், கணவனான அவனால் புரிந்து கொள்ள முடிந்திருந்தது. அதனாலே மனைவியை அதிகம் வெளியில் விடாமல் பார்த்துக்கொண்டான்.

இன்று கண்டிப்பாக இவனே போக வேண்டிய வேலை. அதனால்தான் கிளம்ப வேண்டியாதாகிப் போனது. பார்க்க தைரியமான பெண் போல தெரிந்தாலும், சாம்பவி அப்படி இல்லை. அதிலும் ஒரே நேரத்தில் பெற்றவர்களை இழந்த பிறகு முற்றிலும் உடைந்து போயிருந்தாள்.

தனக்குள்ளே மிகவும் ஒடுங்கிப் போயிருந்தாள். இப்போது எப்படி இவளை அதிலிருந்து வெளியில் கொண்டு வருவது எனத் தெரியாமல் தவிப்புடன்தான் அவளோடு தங்கியிருந்தான் மாதேஷ்.

வீட்டிற்கு வந்த அனைவருக்கும் அன்றைய நாளை நினைத்து மிகவும் வேதனை. அதிலும் தாத்தா அப்படி பேசியதை நினைத்து பேரன்கள் மூவருக்கும் சிறு பயம் கூட, மாதேஷ் என்ன செய்வானோ என்று வேறு யோசித்துக் கொண்டிருந்தனர்.

கிடைத்த நேரத்தில் கார்த்தி தாத்தாவிடம் தனியாகவும் பேசியிருந்தான். அவனுக்குமே சிவநேசன் அப்படி பேசியதில் வருத்தம்தான்.

அவர்கள் பிரச்சினையை கூறாமல் ஏமாற்றி திருமணம் செய்து வைத்திருந்தால் கூட, சிவநேசனின் இந்த கோபத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் அனைத்தையும் கூறி, இப்போது திருமணமே வேண்டாம் என்றுதான் சொன்னார்கள்.

இவர் தேவைக்கு எல்லாம் பேசி, செய்துவிட்டு இப்போது இவரே அந்த பெண்ணை அவமானப்படுத்துவது எந்த வகையில் சரி, இதில் மற்ற அண்ணிகளின் முகங்களும் வருத்தமாக இருப்பதை கார்த்தி கவனிக்கத்தான் செய்தான்.

பார்கவியும், பைரவியும் இரவு உணவுக்கு ரெடி செய்ய செல்ல, மகேஸ்வரன் தன் மனைவியிடம் கத்திக் கொண்டிருந்தார்.

“நாளைக்கே நமக்கு அப்படி ஒரு நிலமை வந்து, நம்ம பொண்ணு இப்படி நின்னா நீ என்ன செஞ்சிருப்ப. மானம் மரியாதையோட வாழ்ந்த மனுஷன், அதுதான் யார் முகத்துலயும் முழிக்க முடியாதுன்னு செத்துட்டார். அப்போக்கூட அவர் தன்னோட பொண்ணைப் பத்தி யோசிக்கல, ஏன்னா நாம அவளை நல்லா பார்த்துக்குவோம்னு நினைச்சிருப்பார். அந்த எண்ணத்தையே குழிதோண்டி புதைச்சிட்டீங்கள்ல ரெண்டு பேரும்..” என்றவர்,

“உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லப்பா. உங்க வயசுக்கு இது சரியும் இல்ல..” என சிவநேசனிடம் சொல்லிவிட்டு, தன்னறைக்கு செல்ல, அவரின் இரண்டாவது மகன் ஜெகதீசன் தலையை நிமிர்த்தவே இல்லை.

அதைப் பார்த்த பார்வதிக்கு மனம் வலிக்க, “தம்பி..” என அவன் தோளைத் தொட போக, “என் பிள்ளைக்கு இல்லாதது என்னம்மா இருக்கு. இன்னைக்கு அந்த பொண்ணுக்காக இல்லைன்னு சொன்னார். நாளைக்கு என் பையனுக்கே ஒரு கஷ்டம், பணத்துக்கு வந்து நின்னா இப்படித்தான் பேசுவாரா? சொல்லுங்கம்மா. இவர் என்ன சொன்னாலும் சரியா இருக்கும்னு கேட்டே வளர்ந்துட்டேன். இப்போ நான் என்ன செய்யனும்? என் மகன் வந்து என்னை கேட்டா நான் என்ன பதில் சொல்லட்ட்டும்?” என குரல் உடைந்து பேச, வீட்டின் மற்ற மூன்று மகன்களும் அவரைச் சுற்றி நின்று கொண்டனர்.

“ப்பா.. அவர் ஏதோ கோபத்துல பேசிருக்கார். அதை ஏன் பெருசு பண்றீங்க.. நீங்க அமைதியா இருங்க. நாளைக்கு மாதுக்கிட்ட நாங்க பேசிக்கிறோம். இனி இப்படியொரு பிரச்சினை இந்த வீட்டுல வராது..” என ருத்ரன் பேச,

“ப்பா.. விடுங்க பார்த்துக்கலாம். இவங்களுக்கு பணம்தான் பிரச்சினைனா சரி பண்ணிக்கலாம். மாதேஷ் அவங்க மேல கேஸ் போடனும்னுதான் சொல்லிட்டு இருக்கான். பார்த்துக்கலாம். அப்பீல் பண்ணுவோம். ஜெயிக்க வாய்ப்பிருக்கு..” என கார்த்தியும் பேச,

அதே நேரம் புவனனின் மொபைல் ஒலிக்க, எடுத்து பார்த்தவன் யோசனையோடு காதில் வைக்க, “என்னடா சொல்ற? நல்லா தேடுனியா? ரெஸ்ட் ரூம்ல இருக்கப் போறாடா?” என பதட்டமாக பேச, வீட்டில் இருந்த அனைவரின் முகமும் பதட்டத்துடன் புவனனையே பார்த்துக் கொண்டிருந்தது.

“ஷிட்..” என்றவன் “எங்கேயும் போயிருக்க மாட்டா? பக்கத்துல தேடு.. நீ டென்சன் ஆகாதா, நாங்க வந்துட்டே இருக்கோம்..” என்று மாதேஷுக்கு தைரியம் சொன்னவன்,

“ப்பா… சாம்பவியை அங்க காணோமாம்.. எல்லா பக்கமும் தேடிட்டு தான் கால் பண்ணிருக்கான்.. நாங்க போய் பார்த்துட்டு சொல்றோம்.. நீங்க எதுக்கும் கமிஷ்னர்கிட்ட பேசிடுங்க..” என்றதும், மூவரும் வேகமாக கிளம்பிவிட, பார்வதிக்கு உடலெல்லாம் நடுக்கம் எடுத்துவிட்டது.

“யாருமே இல்லாத பொண்ணு எங்க போகும். போக இடம்கூட இல்ல. ஆனா எங்கேயாவது போய்டனும்னு நினைச்சிருக்கான்னா, நீங்க எப்படி பேசிருப்பீங்க..” என மீண்டும் மகேஸ்வரன் பேச ஆரம்பிக்க, சிவநேசனுக்குமே பதட்டம் கூடிவிட்டது.

‘தப்பாக எதுவும் நடந்துவிடக்கூடாது’ என பரிதவிப்பாக பூஜையறைக்கு சென்றாள் பார்கவி. அவளுக்கு பின்னே வந்த பைரவி “அக்கா நான்தான் சொன்னேனே, அவ முகமே சரியில்லன்னு. இப்போ எங்க போனாளோ, என்ன பண்றாளோ..?” என பயத்துடன் பேச,

“அப்படித்தான் போகட்டுமே பவி, இவங்ககிட்ட இருந்து, இப்படி பேச்சு வாங்குறதுக்கு அவ எங்கேயோ போய் நிம்மதியா இருக்கட்டும்..” என பட்டென பார்கவி பதில் கொடுக்க, அம்பிகாவிற்கும் பவானிக்கும் அங்கு நிற்கவே முடியவில்லை.

அமைதியாக நகர்ந்து டைனிங்க ஹாலில் அமர்ந்துவிட, “பணம் தான் எல்லாத்தையும் நிர்ணயம் செய்யுது போல பவி, அது இல்லைண்ணா என்னையும் கூட வெளிய அனுப்பிருவாங்க. சொந்த அண்ணன் பொண்ணுனு கூட யோசிக்க மாட்டாங்க..” என பார்கவி விடாமல் பேச,

“அக்கா இப்போ நீங்க ஏன் இவ்ளோ டென்சன் ஏத்திக்கிறீங்க.. முதல்ல அவ நல்லபடியா கிடைக்கட்டும். நீங்க அமைதியா இருங்க.” என பைரவி பார்கவியை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

இங்கு மருத்துவமனையில் “அவ வெளியே போற வரை நீ எங்கடா போனா.?” என கார்த்தி மாதேஷிடம் கேட்டுக் கொண்டிருக்க,

“டேய் அவதான் காஃபி வேணும்னு சொன்னா. அதை வாங்கிட்டு வரதுக்குள்ள காணோம்டா. இப்போதான் கொஞ்சம் சரியாகி, அவங்க இழப்புல இருந்து வெளிய வந்தா. அதுக்குள்ள இது என்னடா?” என தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் மாதேஸ்.

“ஒன்னுமில்ல மாது.. தப்பா எந்த முடிவும் எடுக்கமாட்டா. நாம தேடுவோம். நீ தைரியமா இரு..” என அவனை சமாதானம் செய்து, நால்வரும் சாம்பவியைத் தேடி நாலாபக்கமும் கிளம்பிவிட்டனர்.

மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த சாம்பவிக்கு, இந்த உயிர் தேவையே இல்லை என்றுதான் தோன்றியது. வாழ்க்கையே வெறுத்துப் போனது.

‘அப்பா’ அவர் ஏன் என்னைப் பற்றிக் கூட யோசிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்தார். அவர்கள் இல்லாமல் நான் எப்படி இந்த உலகை சமாளிப்பேன் என்று ஏன் யோசிக்கவே இல்லை. இனி எப்படி அந்த வீட்டில் இருக்க முடியும்.

அந்த வீட்டில் இனி ஒருநாளும் என்னால் இருக்க முடியாது. முடியவே முடியாது. என பலதையும் யோசித்து நடந்தவள் வந்த இடம் தேனி பஸ் ஸ்டான்ட். அப்போதுதான் மதுரை செல்லும் பேருந்து நின்றிருக்க, அதில் ஏறலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே, காலையில் வீட்டிற்கு வந்த ஆண்களில் ஒருவர் கண்ணில் பட்டுவிட்டாள்.

அவருக்கு அந்த நேரத்தில், அந்த கோலத்தில் சாம்பவியைப் பார்த்ததும் யோசனையாக இருக்க, காலையில் பேசும்போது ருத்ரன் கொடுத்த அவன் எண்ணிற்கு அழைத்தபடியே வேகமாக சாம்பவியிடம் சென்றார்.

முதல் ரிங் முழுவதும் சென்றும் எடுக்கவில்லை. அதற்குள் பேருந்தில் ஏறி இருந்தாள் சாம்பவி. முதலில் அவளை நிறுத்த வேண்டும் என்று நினைத்தவர், “பாப்பா..” என சத்தமாக அழைக்க, சாம்பவியும் வேகமாக திரும்பி பார்த்தாள்.

“என்ன பாப்பா இங்க? தூரமா போறியா?” என பேச்சை வளர்த்துக்கொண்டே மீண்டும் ருத்ரனுக்கு அழைக்க,

“இல்ல இல்ல அண்ணா.. நாளைக்கு காலேஜ்ல ஒரு ஃபங்க்சன். அதுக்கு ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் போறோம், அவங்க எல்லாம் முன்னாடியே போய்ட்டாங்க. நான் கிளம்ப லேட்டாகிடுச்சு, அதான் இப்போ போறேன்…” என திணறிக்கொண்டே பதில் சொல்ல, அதற்குள் ருத்ரன் போனை எடுத்துவிட்டான்.

“மதுரைக்குத்தான பாப்பா.. வா நானும் அங்கதான் போறேன். அதோ நம்ம கார் அங்க நிக்குது. அக்கா தம்பி எல்லாம் இருக்காங்க. வா பாப்பா. அக்கா உன்னை பார்க்கனும்னு சொல்லிட்டே இருந்தா..?” என ஏதேதோ பேசி காருக்கு அழைத்து வந்து, தன் மனைவியிடம் பேச வைத்துவிட்டுத்தான், ருத்ரனின் பேச்சுக்கு செவி கொடுத்தார்.

“தம்பி என்ன நடந்துச்சுன்னு கேட்டு உங்களை சங்கடப்படுத்த மாட்டேன். பாப்பா இங்க எங்கிட்டதான் இருக்கு. நான் எங்க வீட்டுக்கு கூப்பிட்டு போறேன். அட்ரஸ் அனுப்பறேன். நீங்க அங்க வந்துடுங்க. வீட்டுல வச்சி பேசி கூப்பிட்டு போங்க. பயப்படாம வாங்க..” என்றவர் வைத்துவிட்டு பெருமூச்சு விட்டார்.

அன்று சாம்பவியின் வீட்டில் நடந்ததை தன் மனைவியிடம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டிருந்தார் மனிதர். அவருக்கு சிவநேசனின் பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை. எப்படி கொஞ்சமும் யோசிக்காமல் பெண்ணைக் கொடுத்தார்கள் என்று சாம்பவியின் பெற்றோர் மீதுதான் கோபம் வந்தது. இதோ அவர் பயந்தது போலவே அங்கு ஏதோ பிரச்சினை நடந்திருக்கிறது என புரிந்து போனது.

அதற்குள் அவரின் மனைவி சாம்பவியிடம் பேசி சமாதானம் செய்து காரிலும் ஏற்றியிருந்தார்.

“போலாமா பாப்பா..” என்றவரின் கார் மதுரையை நோக்கி நகர ஆரம்பித்தது.

“கார்த்தி, சாம்பவி இருக்குற இடம் தெரிஞ்சிடுச்சு, நானும் மாதேஷும் அங்க போறோம். நீங்க வீட்டுக்கு போங்க. அங்க இருக்குறவங்களுக்கு எடுத்து சொல்லி சமாதானம் செய்ங்க. யாரையும் எதுவும் பேச வேண்டாம். கவி அண்ணிதான் ரொம்ப பயந்து போயிருப்பாங்க. முதல்ல அவங்களுக்கு சொல்லுங்க..” என்ற ருத்ரன் மாதேஷுடன் மதுரை கிளம்ப, கார்த்தியும் புவனனும் வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்.

சாம்பவியை கண்ணில் பார்க்கும் வரைக்கும் மாதேஷிற்கு உயிரே இல்லை. இப்படி ஒரு முடிவு எடுக்க எத்தனை யோசித்திருப்பாள், எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்திருப்பாள் என்றுதான் யோசித்துக் கொண்டே வந்தான்.

அவளை பார்த்த பிறகுதான் மனம் சற்றே நிம்மதியானது. அவளிடம் ஏன் இப்படி செய்தாய் என்று எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஏற்கனவே நான்கு பேரும் பேசி முடிவெடுத்திருப்பார்கள் போல, அன்று அங்கே இருந்தவர்கள், அடுத்தநாள் காலையில் தேனிக்கு செல்லாமல் நேராக பெரியகுளம் சென்றனர்.

ஏன்? எதற்கு? என்று எந்த கேள்விகளும் கூட சாம்பவியிடம் இல்லை. பெரியகுளம் கோர்ட்டைத் தாண்டி கார் செல்லவும்தான், “எப்படியும் நீ இங்க ப்ராக்டிஸ்க்கு வரனும், அங்க இருந்து வர்ரது சிரமம்தான, அதுனால இங்க இருக்குற நம்ம வீட்டை ரெடி பண்ணிட்டேன். முன்னாடியே செஞ்சிருக்கனும். நீ நார்மல் ஆனதும் செய்யலாம்னு இருந்தேன். அப்பவே செஞ்சிருக்கனும்னு இப்போ தோனுது..” என்ற கணவனின் தோளில் சாய்ந்து கொண்டவளுக்கு அப்படியொரு அழுகை.

“தேங்க்ஸ்..” என்றவளைத் தானுமாக அனைத்துக்கொண்டான் மாதேஷ்.
 
Last edited:

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
154
110
43
Dindigul
சிவநேசனுக்கு பணம் தான் குறீக்கோளா?இந்த மாமியாருங்களுக்கு என்ன பிரச்சினை
பாவம் சாம்பவி
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,612
668
113
44
Ariyalur
சாம்பவியையே இந்த பேச்சு பேசிருக்காங்க அதுவும் வக்கீலுக்கு படிக்கிற பிள்ளை, அபி எல்லாம் ஏம்மாத்திரம் 🙄🙄🙄🙄🙄