• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராநதி - 30

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
நதி - 30

“போதுமா போதுமா… இப்ப உங்களுக்கு நிம்மதியா? நல்லா இருந்த குடும்பத்தை நாலாக்கிட்டீங்கல்ல, இன்னும் என்ன என்ன நடக்குமோ? உங்க பிக்கல் பிடுங்கல் தாங்காம ஒருத்தன் போய்ட்டான். இனி ஒவ்வொருத்தனா தன் பொண்டாட்டியை கூப்பிட்டு தனியா போவானுங்க. நீங்களும் உங்க மருமகளுங்களும் மட்டும் இந்த வீட்டைக் கட்டிட்டு ஆளுங்க..” என தன் கணவரிடம் கத்திய பார்வதி, பெரிய மகனை அழைத்துக்கொண்டு மாதேஷின் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

சிவநேசனுக்கு இது மிகப்பெரிய அடி. மாதேஷ் குடும்பத்தை விட்டு தனியாக போவான் என்றெல்லாம் அவர் நினைக்கவே இல்லை. அப்படி இருக்க தனியாக சென்றதும் இல்லாமல் தொழிலில் இருந்தும் மொத்தமாக வெளியே செல்வதாக ஜெகதீசனிடம் கூறியிருக்க, தளர்ந்து போய்விட்டார்.

அவர் ஒன்று நினைத்து பேச, நடந்ததோ வேறு. அதிலும் மகன் தனியாக போய்விட்டான் என்பதில் பவானிக்குத்தான் மிகப்பெரிய இடி.

நேற்று வந்த ஒருத்திக்காக பெற்றவர்களை விட்டு போய்விட்டானா? என்பதை மட்டும்தான் யோசித்துக் கொண்டே இருந்தார்.

அதற்கு அம்பிகாவும் சரியாக தூபம் போட, மகனை விட்டு மருமகளின் மேல் மேலும் வன்மத்தை வளர்த்துக்கொண்டார்.

யார் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுமில்லை, என்ற மனநிலைக்கு வந்த பிறகுதான் மாதேஷ் இந்த முடிவை எடுத்தான்.

எடுத்த முடிவை தன் சகோதரர்களிடம் கூற, புவனன் முடியவே முடியாது என்று குதிக்க, அவனை ஒத்தே ருத்ரனும் பேச, கார்த்திதான் இதற்கு முதலில் சரி சொன்னது.

“கொஞ்ச நாள் இவங்க தனியா இருக்கட்டும் புவி. அப்போதான் சாம்பவிக்கும் மாதேஷ் மேல நம்பிக்கையும் பாசமும் வரும். இப்போ நம்ம வீட்டுக்கு வந்தாலும், என்னதான் மாது அவளை நல்லாவே பார்த்துக்கிட்டாலும், சின்னதா ஒரு உறுத்தல் இருந்துக்கிட்டே இருக்கும். அது அவங்க வாழ்க்கைக்கு நல்லதில்ல. அவன் எடுத்த முடிவுதான் சரி..” என பேசி மற்றவர்களை சரி செய்துவிட்டான்.

பார்வதியும் மகேஸ்வரனும் வந்து சாம்பவியிடம் பேசி சென்றிருந்தனர்.

“உன் மனசு சமாதானம் ஆகுறவரை நீங்க இங்க இருங்க. ஆனா அதுதான் நம்ம வீடு, எப்ப வேனும்னாலும் நீங்க அங்க வந்துடலாம். யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க. சொல்லாம நான் பார்த்துக்குறேன். அதே நேரம் குழந்தைன்னு வந்துட்டா தனியா விடமாட்டேன் பார்த்துக்கோங்க..” என்று சாம்பவியிடம் தெளிவுப்படுத்தி விட்டார் பார்வதி.

அதேநேரம் மகேஸ்வரனும் மாதேஷிடம், “வீட்டை விட்டு தனியா வந்த சரி, அதுல நியாயம் இருக்கு. ஆனா தொழிலை விட்டு போறது எந்த வகையில சரி. தாத்தா பேசினதை நான் சரின்னு சொல்லல. ஆனா அதுக்காக மொத்தமா ஒதுங்குறது தப்பு. சாம்பவி இப்போ இருக்குற மனநிலைக்கு நீ தனியா வந்தது சரிதான். ஆனால் தொழில்ல அப்படி வரமுடியாது. தொழில் எப்பவும் உங்களுக்குத்தான், நீங்கதான் பார்க்கனும்..” என்றுவிட்டார் உறுதியாக.

மாதேஷிற்கும் அது புரிய சரியென்று அமைதியாகிவிட்டான். முதலில் மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் நாளாக நாளாக சாம்பவி தன் துயரில் இருந்து மெல்ல மெல்ல மீள, வாழ்க்கை பிடிபட்டது. மிகவும் அன்னியோன்ய தம்பதிகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டினர்.

இதோ மதியின் பிரச்சினை என்று தெரிந்த பிறகுதான் இந்த வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போதும் ‘இங்கேயே இருங்க’ என்று யாரும் எந்தக் காட்டாயமும் கொடுக்கவில்லை.

அதுவே சாம்பவியை ‘இங்கேயே இருக்கலாம்’ என்று யோசிக்க வைத்தது. இதோ இங்கு வந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது. அத்தைகள் இருவரிடமும் பெரிதாக பேச்சு வைத்துக் கொள்வதில்லை. சிவநேசனிடம் பேசுவதே இல்லை. அவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இனி என்ன நடக்கும் என்ற யோசனையில் தன் வாழ்க்கையை ஒருமுறை தன் மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டாள் சாம்பவி.

இங்கு கார்த்தி சொல்லிவிட்டு சென்றதையே யோசித்து யோசித்து பயந்து போயிருந்தாள் அபி. மனோகரியிடம் கூட இதை சொல்லவில்லை.

எப்படி சொல்வது என்று ஒரு பயம்? மனோகரி தப்பான முடிவு எதுவும் எடுத்து விடுவாளோ என்று ஒரு பயம்? அதற்கும் மேலாக இந்த கார்த்தி என்ன செய்வானோ என்று பெரிய பயம் என யோசித்து யோசித்து மிகவும் குழப்பத்தில் இருந்தாள் அபி.

அபி எதையோ யோசித்து குழப்பிக் கொள்கிறாள் என்பது வரை, முரளிக்கும் மனோகரிக்கும் புரிகிறது. புரிந்து என்னவென்று கேட்டால், ‘ஒன்றுமில்லை’ என்று சொல்பவளிடம் எப்படி பேச, என்ன கேட்க என அவர்களும் குழப்பத்திலேயே இருந்தார்கள்.

பூமதியோடு வெளியில் வந்த அண்ணன்கள் நால்வரும் அவளிடம் வைபவ் பற்றி பொறுமையாக எடுத்து கூற, முதலில் மறுத்தாலும் பிறகு ஒத்துக் கொண்டாள். எப்படியும் தன்னை இவர்கள் விடமாட்டார்கள் என்றுதான் அவளுக்குத் தெரியுமே, அதனால் அவர்கள் சொல்வதையே கேட்டுக் கொள்ளலாம், சரியோ தப்போ இனி அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்ற முடிவுக்கும் வந்துவிட்டாள்.

பூமதி சரியென்று சொன்ன பிறகு வீட்டில் பேசினார்கள். அவர்கள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று மட்டும் கூற, பெரியவர்களுக்கும் அதுவே சரியெனப்பட, சிவநேசனுக்கு மட்டுமே சற்று உறுத்தலாக இருந்தது.

வீட்டிற்கே ஒரு பெண். இந்த வீட்டின் இளவரசி. அவளை தூரமாக அனுப்புவதா என யோசித்தபடியே இருந்தார். அவருக்கே அப்படி என்றால் பெற்றவர்களின் கவலையை சொல்லவும் வேண்டுமா?

ஆனால் மகளின் வாழ்க்கை நல்லவிதமாக அமைய சில விசயங்களை கடந்துதான் வர வேண்டும் என்று புரிந்து அதற்கு அமைதியாகிவிட்டனர்.

சிவநேசனிடம் யார் பேசுவது என்றுதான் அனைவருக்கும் யோசனை. கார்த்தியை பேச சொல்லலாம் என்றால் “டேய் நான்தான் பேச வருவேன்னு நினைச்சு, ஆல்ரெடி எனக்கு ஒரு ஆப்பு ரெடி பண்ணி வச்சிருப்பார். அதுக்கு நான் ஆள் இல்ல சாமி. இப்போதான் நானே என் லவ்வை கொஞ்சம் டெவலப் பண்ணி வச்சிருக்கேன். அதுக்கு கும்மியடிக்க பார்க்காதீங்க. யார் வேணும்னாலும் பேசுங்க.. நான் இல்ல..” என்று உறுதியாக சொல்லிவிட, மற்ற மூவருக்கும் சிரிப்புத்தான்.

“உஷார் பார்ட்டிடா நீ..” என புவனன் கூற,

“நீ பொழச்சுப்ப ராசா பொழச்சுப்ப..” என ருத்ரன் வம்பிழுக்க,

“குடும்பஸ்தன் ஆக பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு..” என மாதேஷும் கிண்டலடிக்க,

“இதுக்காக டியூசனாடா போக முடியும், எல்லாம் உங்களைப் பார்த்து கத்துக்கிட்டதுதான்.” என்று கார்த்தியும் அவர்களிடம் வம்பு பேசிக் கொண்டிருந்தான்.

மகேஸ்வரனே தந்தையிடம் பேசி சமாளிக்க, அவருக்கு கார்த்தியின் மேல் கோபம் வந்தது. அவன்தான் எப்படியும் வருவான் என்று எதிர்பார்த்தவருக்கு அவன் வராதது ஏமாற்றமே, அதோடு தன்னை சரியாக கணித்து வைத்திருக்கிறானே என்று எரிச்சலும் வந்துவிட்டது.

வீட்டில் அனைவருக்கும் விருப்பம் என்ற பிறகு அவர் மட்டும் வேண்டாம் என்று சொல்ல முடியாதே, அவரும் வேண்டா வெறுப்பாக சரியென்று விட்டார்.

தாத்தாவிடம் பேசி சம்மதம் வாங்கிய கையோடு வைபவிடமும் பேசியிருந்தார்கள். அவனுக்கு மதி சரியென்று விட்டாள் என்பதை நம்பவே முடியவில்லை. மதியின் சம்மதமே அவனுக்கு ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொடுக்க, வீட்டில் பேசி சம்மதம் வாங்கிவிட்டான்.

மதியின் வாழ்க்கையில் நடந்த விபத்தை அவன் வீட்டில் சொல்லவில்லை. அதை ருத்ரனிடம் கூறிவிட்டான். “மதி வாழ்க்கையில என்ன நடந்தாலும், அது எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும், எங்க வீட்டுக்கு தெரியனும்னு இல்லண்ணா.. என் அம்மாவே ஆனாலும் அவங்க மதியை தப்பா ஒரு பார்வை பார்த்தாலும் அதை என்னால தாங்க முடியாது..” என்றும் சேர்த்து கூற, வைபவின் மேல் மரியாதை பலமடங்காக ஏறிக் கொண்டே போனது.

மதியின் பிரச்சினை அது சரி செய்யவென ஒரு வாரம் முழுதாக ஓடிவிட, அபிக்கு இப்போதுதான் நிம்மதியே வந்தது. இரண்டு நாளில் திருமணம் என்று சொல்லி சென்றவன், ஒரு வாரம் முடிந்தும் வரவில்லை என்றதும் ‘அப்பாடா விட்டுட்டான்’ என நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள் பெண்.

கார்த்தி வராத இந்த ஒரு வாரத்தில் எப்படியாவது மனோக்கும், முரளிக்கும் திருமணத்தை விட வேண்டும் என்று நினைத்து மனோகரியின் அப்பாவிடம் பேச, அவருக்கு மகளின் எண்ணம் தெரியும் என்பதால் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மனோகரியின் தாய்தான், “அவங்க கல்யாணம் சரி, அப்போ நீ..” என கேட்க, என்ன பதில் சொல்வாள் பெண். அமைதியாக அவரைப் பார்த்து சிரிக்க,

“என்னம்மா பேசுறீங்க.. அபி மட்டும் எப்படி இங்க தனியா இருப்பா? நாங்க அவளையும் கூட கூப்பிட்டுத்தான் போவோம். மாமாவும் அப்படித்தான் சொல்லிட்டு இருக்காங்க..” என அபியை விட்டுக் கொடுக்காமல் பேச, மனோகரியின் இந்த குணத்திற்காகத்தானே அபிராமி தன் வாழ்க்கையை கூட பணயம் வைக்க முயன்றாள்.

மனோகரி போன்ற ஒரு நல்ல பெண், தன் அண்ணனுக்கு மனைவியாக வர, எத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளலாம் என்றும் நினைத்துக் கொண்டாள்.

இத்தனை பேச்சுக்களிலும் யாரும் கதிரவனைப் பற்றி பேசவே இல்லை. அவரை கார்த்தி என்ன செய்திருப்பான் என்று இப்போதுவரை யாருக்கும் எந்த அனுமானமும் இல்லை. ஆனால் கண்டிப்பாக ஏதோ செய்திருப்பான் என்று மட்டும் எல்லோருக்கும் புரிய, கதிரவனின் பேச்சை முற்றிலுமாகவே தவிர்த்தனர்.

முரளி மூன்று வார விடுப்பில் வந்திருக்க, அபியைத் தேடி கண்டுபிடித்து, மருத்துவமனை வாசம் என ஒரு வாரம் ஓடியிருக்க, மீதி இருந்த இரண்டு வாரத்திற்குள்ளாகவே திருமணத்தை முடிக்க வேண்டும் என்றுவிட்டான்.

மூவருக்குமே பாஸ்போர்ட் இருக்க, டூரிஸ்ட் விசாவில் இருவரையும் அழைத்து செல்வதில் பெரிதாக எந்த பிரச்சினையும் இருக்காது என்றான் முரளி.

அதனால் மனோகரியின் அப்பா தனக்கு தெரிந்தவரின் மூலம் ரிஜிஸ்டர் ஆஃபிசில் திருமணத்திற்கு உண்டான அனைத்து வேலைகளையும் பார்த்திருந்தார்.

விடியற்காலை பிரம்ம முகூர்த்ததில் கோவிலில் தாலிகட்டும், பத்து மணிக்கு மேல் ரிஜிஸ்டர் ஆஃபிசில் பதிவுத் திருமணமும் என்று முடிவு செய்யப்பட்டது.

அபியின் மனதில் கார்த்தி வேறு வந்து அடிக்கடி மிரட்டி சென்றிருந்தான். எப்போது என்ன செய்வானோ? இந்த திருமணம் அவனுக்குத் தெரியுமா? தெரியாதோ? அவன் காதல் என்றதெல்லாம் பொய்யோ? தன்னை மிரட்டத்தான் அப்படி பேசினானோ? இப்போது அண்ணனுடன் சென்றுவிட்டாள் தேடுவானோ? கோபப்படுவானோ?’ என்ற மனம் நிறைய குழப்பங்களும், பயமும் நிறைந்திருக்க, அதோடே அண்ணன் திருமணத்தில் வேலைகளைப் பார்த்தாள் அபி.

இந்த குழப்பத்தையும் பயத்தையும் யாரிடம் பேசி தீர்வு காண்பது என புரியவில்லை. இந்த நொடி தன் தாயின் அனைப்பையும் மடியையும் வெகுவாக தேடியது பெண்ணுள்ளம்.

இதோ அதிகாலை நான்கு மணிக்கு கோவிலில் தாலிகட்டு முடிந்து பத்து மணிக்கு ரிஜிஸ்டர் ஆஃபிசில் நின்றிருந்தனர்.

அடுத்தது நீங்கள்தான் என ஒருவர் வந்து சொல்லி செல்ல, மாலைகளை இருவரிடமும் கொடுத்துவிட்டு, மொபைல் போனில் கேமராவை ஆன் செய்து அவர்களை போட்டோ எடுக்க சற்று தள்ளி நிற்க, அவளுக்கு பின்னால் வெகு அருகில், அனைத்து நின்றால் எப்படி ஒரு நெருக்கம் இருக்குமோ அந்த நெருக்கத்தில் அவளை ஒட்டியபடி அவன் நிற்க, அதே நேரம் பேக் கேமராவிற்கு பதிலாக, ப்ரன்ட் கேமராவை ஆன் செய்திருந்த அபிக்கு அது தெளிவாக விழ, அவள் அதிர்ச்சியில் திரும்பி பார்க்கும் போதே அவள் கழுத்தில் தாலியைக் கட்டி நிதானமாக மூன்று முடிச்சை போட்டான் கார்த்தீசன்.!

அபிராமியின் கார்த்தீசன்!
 
Last edited:

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
683
88
63
Coimbatore
கல்யாண பெண்ணுக்கே தெரியாமல் கல்யாணமா?