• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 11.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
பகுதி – 11.

கோபால், முத்துப்பாண்டி அவர்களது அடி பொடிகள் என அனைவரும் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களோடு வைஷாலியின் அப்பா பைரவனும் ஊருக்கு கிளம்பிப் போயிருக்க, ஒரு மாதிரி மனநிலையில் அமர்ந்திருந்தாள்.

தகப்பன் தன்னை விட்டு கிளம்பிச் சென்றது கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் அப்பா தன்னுடனே இருக்க முடியாது என அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவளை மிகவும் தொல்லை செய்து கொண்டிருந்தவன் முத்துப்பாண்டி தான்.

அவர்கள் ஊரின் பக்கம் அத்தை மகன், மாமன் மகளை திருமணம் செய்துகொள்ளும் வழக்கமே கிடையாது. அப்படியும் முத்துப்பாண்டி அவளைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என பிடிவாதமாக இருந்தான்.

கோபாலின் குடும்பத்திலேயே அதிகம் படித்தவன் அவன்தான். கல்லூரிக்கு மூன்று வருடங்கள் சென்றான். ஆனால் டிகிரியை கரத்தில் வாங்கினானா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. எத்தனை பேப்பர் அரியர் வைத்திருக்கிறான் என்றும் தெரியாது.

பிஞ்சிலேயே பழுத்துவிட்ட அவனது குடும்பத்து வழக்கத்துக்கு தப்பாமல், அவனும் பதினைந்து வயதிலேயே அவனது அடாவடியைத் துவங்கி இருந்தான். வைஷாலியை விட பத்து பன்னிரண்டு வயது பெரியவன்.

பெண்களை அவன் பார்க்கும் பார்வையே ஒரு மாதிரி வக்கிரம் இருக்கும். அவன் பார்க்கும் இடங்கள் அதைவிட கீழானவை. அவர்கள் ஊரில், அவளது பள்ளியில் படிக்கும் எத்தனையோ தோழியர் முத்துப்பாண்டியைப் பற்றி வைஷாலியின் காதுபட இதைப்பற்றி பேசி இருக்கிறார்கள்.

அவள் சின்னப் பெண்ணாக இருந்த பொழுது அவளை தூக்கி வைத்துக் கொள்வது, கொஞ்சுவது, முத்தமிடுவது எனச் செய்வான். ஒரு வயது வரைக்கும், அவள் வயதுக்கு வரும் வரைக்குமே அதையெல்லாம் அவள் பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை.

அவள் வயதுக்கு வந்த பிறகு, அத்துமீறி அவள் தேகத்தை தொட்டு வருடி, “நல்லா வளர்ந்துட்ட...” என அவன் வக்கிரமாக சொன்ன பொழுது அருவருத்துப் போனாள். அவளை முத்தமிட முயன்ற பொழுது அவள் விலகி ஓடினாள்.

“ஏய்... நான்தானே உன்னை வளர்த்தேன்... என்ன புதுசா ஓடி ஒளியிற?” என அவளை விரட்டினான். அவள் வீட்டில் தன் அறையில் இருக்கையில், முற்றத்தில் தோழியரோடு விளையாடுகையில் பின்னால் இருந்து அவளைக் கட்டிப் பிடித்து தூக்குவான்.

ஆனால் அந்த கட்டிப்பிடிப்பு எல்லாம் ‘பேட் டச்’ விதத்திலேயே இருந்தது. அதுவும் அந்த கரங்களுக்கு அவன் கொடுக்கும் அழுத்தமே, அவன் தெரியாமல் செய்யவில்லை, கை படவில்லை... அவன் வேண்டும் என்றே செய்கிறான் என அவளுக்குச் சொன்னது.

தன் தாயிடம் சொன்னால் வேலைக்கே ஆகாது எனத் தெரிந்து, தன் தகப்பனிடம் சொன்னாள். பைரவன் முத்துப்பாண்டியை நேரடியாக அழைத்து, “இனிமேல் என் மகளை தொட்டுப் பேசாதே” எனச் சொல்லி கண்டித்துவிட்டார்.

அதை முத்துப்பாண்டி தன் அத்தை ரத்னாவிடம் சொல்லி, “உனக்கு ஒரு நியாயம், என் அண்ணன் மகனுக்கு ஒரு நியாயமா? ஏன் நீ உன் அத்தை மகளை கட்டிக்க நினைக்கலை? உரிமைப்பட்டவன்னு அப்படி இப்படின்னு இல்லாமலா இருந்திருப்ப?

“என் அண்ணன் மகனுக்கு என்ன குறைங்கறேன்? படிப்பில்லையா? பணமில்லையா? வசதி இல்லையா? அவன் பார்க்க நல்லாத்தான் இல்லையா? என்ன குறையை கண்டங்கறேன்? அவன் ஆசைப்பட்டா என் பொண்ணை அவனுக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்” ரத்னா ஆடித் தீர்த்துவிட்டாள்.

ஆனாலும் மனைவியின் பேச்சை அவர் கண்டுகொள்ளவே இல்லை. முத்துப்பாண்டி இனிமேல் தன் வீட்டுக்குள் தன் அனுமதியின்றி வரக் கூடாது என கண்டிஷனாகவே சொல்லிவிட்டார். அதற்கெல்லாம் அவன் அடங்குவானா என்ன? வைஷாலியைப் பார்த்தாலே ஒரு மாதிரியாக சிரித்து வைப்பான்.

அவளைப் பார்த்து கண்ணடிப்பான்... ‘பொண்டாட்டி’ என அழைப்பான். அவளை நெருங்கி நிற்பான், அவளை அப்பட்டமாக உரசுவான். அவள் தேகத்தில் தெரியாமல் பட்டது எனச் சொல்லிக் கொண்டு கை கூட வைத்திருக்கிறான்.

இது எல்லாம தெரிந்த பிறகே, மகள் பண்ணிரண்டாவதை முடித்த உடனே பைரவன் தன் மகளை சென்னையில் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தார். அவளை லீவுக்கு ஊருக்கு கூட வர வைப்பது இல்லை. அவர்தான் இங்கே வந்து மகளைப் பார்த்துச் செல்வார்.

அவர்களுடனே இருப்பவருக்கு கோபாலின் மகன்களைப்பற்றி தெரியாதா என்ன? முத்துப்பாண்டியோ பைரவன் வேலைக்கு ஆகமாட்டார் எனத் தெரிந்தே தன் தகப்பனை நாடினான். பைரவன் மகளை எப்படியாவது கண் மறைவாக வைத்து காப்பாற்ற நினைக்க, அதற்கு ரத்னாவே விட வேண்டுமே.

ரத்னா மகளிடமே ஒன்று இரண்டு முறை, முத்துப்பாண்டியை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி சொல்லிவிட்டார். தாயிடம் அவள் கொஞ்சமும் பிடி கொடுக்கவே இல்லை. ஆனால் இப்பொழுது, முத்துப்பாண்டிதான் மாப்பிள்ளை என ரத்னா முடிவே எடுத்துவிட்டிருந்தார்.

பைரவன் அவளைக் காப்பாற்றுவதாக சொல்கிறார்தான். ஆனால் தன் அப்பாவால் நிச்சயம் அது முடியாது என அவளுக்குத் தெரியும். அதுவும் இப்பொழுது சென்னைக்கு வந்தவன், இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும் அவளிடம் வாலாட்ட மறக்கவில்லை.

அவன் ஊருக்குச் செல்லும் வரைக்கும் அறைக்கதவை பூட்டிக் கொண்டு தன் அறையிலேதான் அடைந்து கிடந்தாள். அவளை அப்படியே அவன் விட்டுவிடுவானா என்ன?

இங்கே முதலமைச்சரோடு மீட்டிங் முடிய, கோபால் ஊருக்குச் செல்லலாம் என முடிவெடுத்தார். அப்பொழுது அவளைத் தேடி வந்தான் முத்துப்பாண்டி. கோபால் கிளம்பும் நேரம் உள்ளே இருப்பது எப்படி? எனவே அவள் வெளியே வந்தாள்.

“மருமகளே, அப்போ நாங்க ஊருக்கு கிளம்பறோம். ஒரு வருஷம் கழிச்சுதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டியாம். எனக்கு அதில் கொஞ்சம் வருத்தம்தான். இவனுக்கு வயசு போகுதே... ஆனாலும் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தைக் கால்ல நிக்கறான்.

“உன்கிட்டே ஆசையா பேசிப் பழகணும்னே என்கூட வந்தான். ஆனால் வந்த இடத்தில் என்னென்னவோ ஆகிப் போச்சு. அந்த கதையெல்லாம் இப்போ எதுக்கு... அவன்கிட்ட ஒரு ரெண்டு வார்த்தை ஆசையா பேசி அனுப்பி வை...” அவர் சாதாரணமாகச் சொல்வதுபோல் இருந்தாலும் ஒரு கட்டளை ஒளிந்து இருப்பது அவளுக்குப் புரிந்தது.

முத்துப்பாண்டி என்றாலே அவளுக்கு வேப்பங்காயாக கசக்கையில், அவள் எப்படி அவனிடம் முகம் கொடுத்துப் பேச? அவள் தன் தகப்பனைப் பார்க்க, ‘பேசு...’ என்பதுபோல் அவரும் ஒரு செய்கை செய்தார்.

பைரவனோ, ‘நான் இங்கேயே மகளுடனேயே இருக்கிறேன்’ எனச் சொல்ல, கோபால் அதற்கு அனுமதிக்கவே இல்லை.

“மாப்ள, சின்னஞ்சிறுசுக கொஞ்சம் அப்படி இப்படி இருக்கறது வழக்கம் தானே. ஒரு ரெண்டு நிமிஷம் பேசிக்கட்டும், நாம வெளியே இருப்போம் வாங்க...” கோபால் பேச, தன் கண் முன்பே தன் மகளை இப்படி ஒரு நிலையில் நிறுத்தி வைப்பது அந்த தகப்பனுக்கு கொடுமையாக இருந்தது.

கோபால் அன்று வீட்டுக்கு வந்த பொழுதே, “என் மகனோட ஆசைக்கு குறுக்க யார் வந்தாலும் அதையெல்லாம் நான் பார்க்கவே மாட்டேன். என் பசங்க சந்தோஷம்தான் எனக்கு முக்கியம், நான் சொல்றது உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன்” பைரவனிடம் மறைமுகமாக மிரட்டி இருந்தார்.

பைரவன் வேறு வழியின்றி கோபாலோடு செல்ல, முத்துப்பாண்டி அவளை நெருங்கினான். அவளை நெருங்கி நின்றவன், ஒரு மாதிரி நாக்கை சுழற்றினான். அந்த செய்கையே அவளுக்கு அருவருப்பாக இருக்க முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“பொண்டாட்டி... சும்மா கும்முன்னு ஆயிட்ட. இது வரைக்கும் எத்தனையோ பொண்ணுங்களை தொட்டு அனுபவிச்சாலும், உன்னை மட்டும் ஏன் விட்டு வச்சிருக்கேன் தெரியுமா?” அவன் ஒரு மாதிரி குரலில் கேட்டு வைக்க, அவனது பேச்சு ஒவ்வாமையைக் கொடுத்தது.

அதுவும் தன்னிடமே பல பெண்களோடு இருந்தான் என்பதைச் சொல்ல, வாந்தி வரும்போல் இருந்தது. அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று இருந்தாள். அந்த இடத்தை விட்டு அகல அவளுக்கு ஒரு நொடி கூட ஆகி இருக்காது.

ஆனால் அவன் தன்னை அப்படியே விட்டுவிடுவான் என அவள் நம்பவில்லை. தான் அறைக்குள் சென்றால், பின்னாலேயே வந்து அத்துமீறி தன்னைத் தொட்டால், தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை விட, தன் தகப்பன் இருக்கையிலேயே தனக்கு இப்படி ஒரு நிலை வந்தால் அவர் உடைந்துபோவார் எனப் புரிய அப்படியே நின்றாள்.

“சரி, நீ எதுக்குன்னு கேட்க மாட்ட... நானே சொல்றேன். உன் கழுத்தில் தாலி கட்டிட்டு, ஃப்ரஷ்ஷா போடணும். அதுவும் அணு அணுவா ரசிச்சு... ஷ்ஷ்... இப்போவே போட்டுட்டா அப்போ இன்ட்ரஸ்ட் போய்டும் அதுக்குத்தான் விட்டு வச்சிருக்கேன்.

“அதோட... உன்னை இப்படி பார்த்து பார்த்து வெறி ஆவறது ஒரு மாதிரி கிளுகிளுப்பா நல்லா இருக்கு. சும்மா தளதளன்னு இருக்க... எல்லாமே நான் எதிர்பார்த்ததை விட அதிகமாத்தான் வச்சிருக்க” என்றவன், அவள் எதிர்பாராத நேரம் அதைச் செய்திருந்தான்.

“ஸ்... ம்மா... பொறுக்கி நாயே...” அவள் தன்னை மீறி வலியில் அலறி இருந்தாள்.

“நாய் தான்... இந்த நாய் எங்கே எல்லாம் *** போகுதுன்னு நீயும் தெரிஞ்சுக்கத்தான் போற. வரட்டா பொண்டாட்டி...” என்றவன் கண்ணடித்து, நாக்கை சுழற்றியவாறே சென்றான். ஒரு பக்கா பொறுக்கி என்பதை அவனது செய்கை அப்பட்டமாகச் சொன்னது.

தன் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டவள், அவன் தொட்ட தன் தேகத்தை வெறுத்தாள். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை?’ எண்ணியவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

அவன் செய்த செய்கையால் தேகம் நொந்ததை விட, மனம் அதிகம் நொந்தது. மனம் வலித்தது. எதுவும் செய்ய இயலாத கையறு நிலை நெஞ்சை அறுத்தது.

வெளியில் இருந்த பைரவனோ மீண்டும் உள்ளே வந்து தன் மகளைப் பார்க்காமலேயே ஊருக்குச் சென்றுவிட்டார். செல்லும் முன்னர் அருணாவிடம் தன் மகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றார்.

தன் மகள், அந்த ‘முத்துப்பாண்டி தன்னை தவறாகப் பார்க்கிறான், மேலே கை வைக்கிறான்’ எனச் சொல்லியும் தன் மகளை அவனிடமிருந்து காப்பாற்ற முடியாத அந்த நிலையை அறவே வெறுத்தார்.

“அவன் நல்லவன் இல்லை... நம்ம மகளுக்கு அவன் வேண்டாம்” என மனைவியிடம் போராடிப் பார்த்துவிட்டார்.

“இங்கே நல்லவங்க எல்லாம் பொண்டாட்டியை தலைக்கு மேலே தூக்கி வச்சு ஒன்றும் பார்த்துக்கலை. எவளையோ மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டுத்தான் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்துறாங்க.

“இல்லையா பொண்டாட்டியைத் தொடாமல் தள்ளி வச்சிருக்காங்க. அதுக்கு என் பொண்ணு மேலே அவ்வளவு ஆசை வச்சிருக்கற என் மருமகன் எவ்வளவோ பரவாயில்லை. வயசுப் பசங்க சில நேரம் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கறது சகஜம் தான்.

“பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா, அவ முந்தானையை பிடிச்சுகிட்டு சுத்தி வருவாங்க. நம்ம பொண்ணு கொஞ்சம் திறமைசாலியா இருந்துட்டா அவனை முந்தானைக்குள் சுருட்டி வச்சுக்கலாம். இதெல்லாம் ஒரு குறைன்னு பேச வந்துட்டீங்க” என்றவள் ஆடித் தீர்த்துவிட்டாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
பைரவன் உள்ளுக்குள் அத்தனை வெதும்பிப் போனார். இப்பொழுது கூட இந்த முத்துப்பாண்டி தன் மகளிடம் ஒழுங்காக நடந்திருக்க மாட்டான் என அவருக்குப் புரிகிறதுதான். ஆனால் அவனை எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியவில்லையே. பைரவனுக்கு உள்ளம் குமுறியது.

‘என்னை மன்னிச்சுடு பாப்பா... இப்படி ஒரு வக்கில்லாத அப்பனா போயிட்டேனே’ பைரவனின் உள்ளம் தகித்துக் கொண்டிருந்தது.

‘இவங்களை எல்லாம் அடக்க ஒருத்தன் வருவான். நிச்சயம் வருவான்’ எப்பொழுதும் போல் தனக்குள் சொல்லிக் கொண்டார். அது நடந்தே ஆகவேண்டும் என அவரது உள்ளம் பேராசை கொண்டது.

தகப்பன் வந்தால் அவரை எப்படி எதிர்கொள்வது? எனப் புரியாமல் வைஷாலி படுத்து அழுது கொண்டிருந்தாள். அந்த நேரம் வந்து அவளது தோளைத் தொட்டாள் அருணா.

“பாப்பா... அழுவாத பாப்பா... எந்திரிச்சு வா... ஏதாவது சாப்பிடு” அவளை அழைத்தாள்.

“இல்லக்கா... எனக்கு எதுவும் வேண்டாம். அப்பா...?” என்றவளுக்கு தன் வீட்டிலேயே தனக்கு பாதுகாப்பு இல்லையே என்ற வருத்தம்தான்.

“எல்லாரும் கிளம்பிட்டாங்க பாப்பா” என்றவளது குரலிலும் அத்தனை வருத்தம்.

“ஓ...” என்றவளுக்கு தன் தகப்பன் தன் முகம் காண முடியாமல்தான் சென்றுவிட்டார் எனப் புரிய, நெஞ்சடைத்துக் கொண்டு வந்தது.

“பாப்பா... ரூபி வீட்டுக்கு வேணா போறியா பாப்பா?” அவள் இப்படி அழுது கொண்டிருக்க, அருணாவுக்கு மனதே கேட்கவில்லை.

“இல்லக்கா... வேண்டாம்...” என்றவளுக்கு அவள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அதைவிட, ரூபியின் ஸ்கூட்டி அங்கே நிற்பதைப் பார்த்துவிட்டு, அந்த முத்துப்பாண்டி கேட்டது வேறு மனத்தைக் குடைந்தது.

“இது யார் வண்டி...?” அதைக் காட்டிக் கேட்டான்.

“என் ஃப்ரண்டோடது?” என்றவள் உள்ளே செல்லப் போனாள்.

“ஃபிகர் எப்படி இருக்கும்? உன்னை விட நல்லா இருப்பாளா?” அவன் இளித்தவாறே கண்ணடிக்க, அவனைக் கன்னம் கன்னமாக அறைந்து தள்ளும் வேகம்.

‘ச்சே... இவனால் எப்படி என்கிட்டேயே இப்படி பேச முடியுது?’ என்னும் ஆற்றாமை. எல்லாம் சேர இப்பொழுது அழுது கரைந்தாள்.

அதற்குள் அவர்கள் வந்து, எல்லாம் முடித்துவிட்டு கிளம்பிச் செல்ல இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. ரூபியும் கடந்த இரண்டு நாட்களாகப் பொறுத்துப் பார்த்தவள் வைஷாலிக்கு அழைத்தாள். அது சைலெண்டில் இருக்கவே, அது அவளுக்கு கேட்கவே இல்லை.

உடனடியாக ரூபி அருணாவின் அலைபேசிக்கு அழைத்தாள். அவளது அலைபேசி இசைக்கவே, வைஷாலியை விட்டுவிட்டு அழைப்பது யார் எனப் பார்க்கப் போனாள். ரூபி அழைத்துக் கொண்டிருக்க வேகமாக அழைப்பை ஏற்றாள்.

“ரூபி பாப்பா... சொல்லுங்க...” குரல் கொடுத்தாள்.

“அக்கா ஷாலு எப்படி இருக்கா? ரெண்டு நாளா ஃபோன் பண்ணவே காணோம்? நான் ஃபோன் பண்ணாலும் எடுக்கவே இல்லை. அங்கே எல்லோரும் கிளம்பிட்டாங்களா? இல்லன்னா இன்னும் இருக்காங்களா?” சற்று கவலையாகவே கேட்டாள்.

“அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க... இப்போதான் கிளம்பினாங்க. இங்கே... நீங்க வரீங்களா பாப்பா?” வைஷாலியைப் பற்றி சொல்ல மனம் உந்தினாலும் அதை அவள் செய்யவில்லை.

“வர்றதைப் பத்தி எதுவும் இல்லைக்கா... ஆனா என் வண்டி அங்கே நிக்குது, அதான் யோசிக்கறேன். நீங்க கொஞ்சம் ஃபோனை அவகிட்டே கொடுங்களேன்” அவள் கேட்க, அருணா வைஷாலியைத் தேடிச் சென்றாள்.

“பாப்பா... ரூபி பாப்பா ஃபோன் பண்ணி இருக்கு” என்றவாறே அவளிடம் நீட்டினாள்.

அதை வாங்கி மியூட் செய்தவள், “நான்தான் எங்கேயும் போகலைன்னு சொன்னேன் தானே... நீங்க வேற ஏன்க்கா?” தன் மனநிலை புரியாமல் நடந்து கொள்கிறாளே என்று ஆற்றாமையாக இருந்தது.

“ரூபிதான் பாப்பா கூப்ட்டது... நான் இல்லை...” வேகமாகச் சொன்னாள்.

“ஓ... சரி நீங்க போங்க” என்றவள் மியூட்டை எடுத்துவிட்டு குரல் கொடுத்தாள்.

“எனக்கு இன்னைக்கு பிறந்தநாள்... ஒரு விஷ் பண்ணலாம். கோவிலுக்குப் போகணும், ஆனால் என்கிட்டே வண்டி இல்லை” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டாள். அப்பொழுதுதான் ரூபிக்கு அன்று பிறந்தநாள் என்பதே அவள் நினைவுக்கு வந்தது.

உடனே தன் அலைபேசியில் இருந்து அவளுக்கு அழைக்க, ரூபியோ அழைப்பை ஏற்கவே இல்லை. சட்டென தன் மனநிலை மாற, வேகமாக எழுந்து குளித்து உடை மாற்றியவள், ரூபியின் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

வைஷாலியின் வண்டியை பைரவன் சரி செய்து கொண்டு வந்து நிறுத்தி இருந்தார். ஆனாலும் அவளது வண்டியை கொடுக்க வேண்டும் என்பதால் அதை எடுத்துக்கொண்டு சென்றாள். கை காயம் இப்பொழுது நன்றாக ஆறி இருந்தது.

அடுத்த கால்மணி நேரத்தில் அவள் அங்கே இருக்க, ரூபியோ அவளைப் பார்த்தவுடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஹேப்பி பெர்த்டே ரூபி” அவள் வாழ்த்த, மற்றவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள். “ஏய்... சாரிடி... எனக்கு இருந்த டென்ஷன்ல சுத்தமா மறந்துட்டேன். சாரி...” அவள் கரத்தைப் பற்றி மன்னிப்பை வேண்டினாள்.

“உன் சாரி இங்கே யாருக்கும் வேண்டாம்... என் கிப்ட் எங்கே?” அவளிடம் கேட்டாள்.

“உனக்கு என்ன வேணும்னு மட்டும் சொல்லு, அதை அப்படியே வாங்கித் தர்றேன். இப்போ ஏற்கனவே பிளான் பண்ண மாதிரி எங்கேயாவது வெளியே போலாமா?” அவளிடம் கேட்டாள்.

“நான் எங்கேயும் வரலை, நீ போ...” அவளோ முறுக்கினாள்.

“ஆன்ட்டி... நீங்களாவது சொல்லுங்களேன்... சாரி...” அவளது தாய் அங்கே வர, அவரையும் துணைக்கு அழைத்தாள்.

“ரெண்டு நாளா நீ ஒரு ஃபோன் கூட பண்ணலைன்னு புலம்பித் தள்ளிட்டா. நீயாச்சு, அவளாச்சு... எனக்கு குட்டிப் பையனை கவனிக்கற வேலை இருக்கும்மா” என்றவாறு அவர் ஒதுங்கிக் கொண்டார்.

“அப்போ நீ பேச மாட்டியா? போ... நான் போறேன்” என்றவள் எழுந்துகொள்ளப் பார்க்க, அவள் கரத்தைப் பிடித்து தடுத்தாள்.

“நீ இவ்வளவு தூரம் வந்ததால் உன்னை நான் மன்னிக்கறேன்” அவள் சொல்ல, தோழியை இறுக கட்டிக் கொண்டாள்.

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரூபி... நீ கோவிலுக்குப் போகணும்னு சொன்னியே, போகலாமா? அப்படியே எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாம்” அவள் அழைக்க, ரூபியும் கிளம்பினாள்.

“அம்மாடி, இங்கேயே டிபன் சாப்ட்டு கிளம்புங்கம்மா. கேசரி, வடை பாயாசம், இட்லி எல்லாம் செய்து வச்சிருக்கேன்” தேவி சொல்ல,

“நீ இன்னும் சாப்பிடலையா?” ரூபியிடம் கேட்டாள்.

“நீ விஷ் பண்ணவே இல்லையா? டென்ஷன்ல பசிக்கலை” அவள் சொல்ல, தோழிக்கென, அவளது தாய் செய்தார் என்பதற்காகவே அங்கே உண்ண சம்மதித்தாள்.

“உன்னால் சாப்பிட முடியுமா ஷாலு? கை காயம் எல்லாம் ஆறிடுச்சா?” என்றவாறு அவள் கரத்தைப் பற்றி திருப்பிப் பார்த்தாள்.

“ம்... அது ஓகே தான்... கொஞ்சம் எரியும்... பட் ஓகே...” அவள் சொல்ல,

“அம்மா ஒரு கிண்ணம், ஸ்பூன் எடுத்துட்டு வாங்கம்மா” ரூபி கேட்க, அவளது அக்கா சித்ரா அவள் கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்தாள். இருவரும் உண்டுவிட்டு கோவிலுக்குச் சென்றார்கள்.

“உனக்கு என்ன கிப்ட் வேணும்?” தோழியிடம் கேட்டாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம்... இன்னைக்கு முழுக்க நாம ரெண்டுபேரும் ஊர் சுத்துறோம் வா...” என்றவாறு அவளை இழுத்துச் சென்றாள். சென்னையில் சுற்றுவதற்கு இடமா கிடையாது?

“மாயாஜால் போலாமா?” ரூபி கேட்க, அவளும் ஒத்துக்கொண்டாள். அங்கே சென்று சேரவே ஒரு மணி நேரம் கடந்திருக்க, அப்பொழுது ஓடிக் கொண்டிருந்த படத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

அவர்கள் இருவரும் படிகளில் ஏற, அப்பொழுது அங்கே கீழே விஸ்தாரனாக இருந்த இடத்தில் ஒரு சின்ன மேடை போடப்பட்டு, அதில் சர்வஜித் நடு நாயகமாக அமர்ந்து இருந்தான். அவனை அப்பொழுது பார்த்த இரு பெண்களுக்கும் சிறிதும் அடையாளம் தெரியவில்லை.

“இது யாருடி...?” ரூபி அவனைப் பார்த்தவாறே வைஷாலியிடம் கேட்டாள்.

“இதுதான் மிஸ்டர் சர்வஜித், இப்போதைய நெட்வொர்க் உலகத்தின் கிங்ன்னு சொல்வாங்களே. அதோட பெட்ரோல் விலையை எல்லாம் முடிவு பண்றதும் இவர்தான்னு சொல்லிக்கறாங்க” என்றவள் அவனையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தாள்.

அவன் கண்களில் அப்பொழுதும் குளிர் கண்ணாடி இருக்க, தன் அருகே இருந்தவரிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாலும், சுற்றிலும் தன் பார்வையைப் பதித்து இருந்தான். செய்தியாளர்களின் கூட்டத்தால் அந்த இடமே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

அவ்வப்பொழுது ஏதாவது ஒரு கேமராவின் வெளிச்சம் அவனைப் படம்பிடித்துக் கொண்டிருப்பதைச் சொன்னது. வைஷாலி அப்படியே படிகளில் நின்றுவிட, ரூபி அவளைக் கலைத்தாள்.

“என்ன ஷாலு? எதுக்கு அப்படிப் பார்க்கற?” அவளிடம் கேட்டாள்.

“இவரைப் பார்த்தால், அவர் மாதிரி தெரியல?” தோழியிடம் கேட்டாள்.

“நீ யாரைச் சொல்ற?” புரியாமல் கேட்டாள். வைஷாலி சர்வஜித்தை கை காட்டினாலும், அங்கே இருந்த அவனை ‘சர்வா’வோடு ரூபியால் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

“அதான்... அன்னைக்கு நம்மளை... ம்ச் அவன்தான்...” வைஷாலி சொல்ல, மறுப்பாக தலை அசைத்தாள்.

“இல்ல ஷாலு... இவர் வேற...” ரூபி மறுத்தாள். அவள் மறுக்கவே, வேகமாக பார்வையைச் சுழற்றி யாரையோ வேகமாகத் தேடினாள். அவள் தேடலுக்கு விடையாக அவள் பார்வையில் விழுந்தான் ஹரீஷ்.

“அங்கே பார்... அவரும் இங்கேதான் இருக்கார். இது அவன்தான்” வைஷாலி அடித்துப் பேசினாள்.

அங்கே ஹரீஷைப் பார்த்த ரூபியின் முகத்தில் ஒரு அசட்டைத்தனம் வந்து அமர, “அவனும் நம்மளை மாதிரி வேடிக்கை பார்க்க வந்திருப்பான். நீ வா...” அவளை அங்கே இருந்து அழைத்துச் செல்ல முயன்றாள்.

அந்த நேரம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தொகுப்பாளினி, “இப்பொழுது மிஸ்டர் சர்வஜித் இந்த லான்ச் பற்றி சில வார்த்தைகள் பேசுவார்” அவள் சொல்ல, அவன் குரலைக் கேட்க வேண்டி நின்றுவிட்டாள்.

“ஒரு நிமிஷம் இரு ரூபி...” எனச் சொல்ல, வேறு வழியின்றி நின்றாள்.

“ஹலோ எவ்ரிபடி...” என்றவன் மேல்தட்டு ஆங்கிலத்தில் பேசினான். அவன் வாயில் இருந்து ஆங்கிலம் அடைமழையென பொழிய அவனது அந்த குரலைக் கேட்டவள் தன் தோழியைப் பார்த்தாள்.

“ரூபி... ரூபி... அதே வாய்ஸ்... அதே வாய்ஸ்... உனக்கு அப்படித் தோணல?” அவளிடம் படபடத்தாள்.

“ஆண்டவா... தலையில் அடிபட்டால்தான் மூளை குழம்பும்னு சொல்வாங்க. உனக்கு என்ன கையில் காயமானத்தில் யாரைப் பார்த்தாலும் அப்படித் தோணுதா என்ன? இங்கே கூகிள்ல பார்... அவரைப்பத்தி பல விஷயம் கொட்டிக் கிடக்கு. நீ என்னன்னா யாரை யாரோட கம்பேர் பண்ற?” ரூபி சொல்ல, வைஷாலி நம்ப மறுத்தாள்.

‘இல்ல... எனக்கு சந்தேகமா இருக்கு...’ அவள் நினைத்தவாறே அவனைப் பார்த்தாள். அந்த நொடி அவனும் அவளைப் பார்ப்பது போன்ற ஒரு தோற்றம்.

அதைப் பார்த்தவள், “ரூபி... அவன் நம்மளைத்தான் பார்க்கறான்” அவளிடம் சொன்னாள்.

“லூசு மாதிரி பேசாத ஷாலு. அவர் குளிர் கண்ணாடி போட்டிருக்கார் அப்படி இருக்கும்போது, அவர் நம்மளைத்தான் பார்க்கறார்ன்னு எப்படிச் சொல்ற? முதல்ல நீ வா...” அவளை இழுத்துக் கொண்டு செல்ல முயன்றாள்.

ஹரீஷ் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு எரிச்சலாக இருந்தது. எனவே அவன் கண்ணில் பட்டுவிடாமல் அங்கே இருந்து செல்ல முயன்றாள். ஆனால் அதை தோழியிடம் சொல்ல முடியாமல்தான் அவ்வாறு செய்தாள்.

அவள் சொன்னது சரியே என்பதுபோல், சர்வஜித் கண்ணாடியின் ஊடாக வைஷாலியைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவளிடம் தெரிந்த அதிர்வு, ஆராய்ச்சி, தன் தோழியிடம் பேசியது என அனைத்தும் அவனுக்கு அப்பட்டமாகப் புரிந்தது.

அவனுக்குள் அந்த நொடி தோன்றிய உணர்வு என்ன? அதிர்ச்சியா? ஆராய்ச்சியா? எதுவாக இருந்தாலும் வைஷாலி தள்ளி இருந்து இருக்கலாம்.

பகை முடிப்பான்.......
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
25
29
13
Vellkovil
முத்துபாண்டி ரத்னா இரண்டு பேரையுமே சர்வாகிட்ட விடுங்க
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
முத்துபாண்டி ரத்னா இரண்டு பேரையுமே சர்வாகிட்ட விடுங்க

கண்டிப்பா முத்துப்பாண்டி அவன்கிட்டே வாங்குவான். ரத்னாவுக்கு இதே ஆட்டத்தை தொடர முடியுமா என்ன?
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
122
34
28
Deutschland
பொண்ணுகிட்ட அவன் எப்படி நடந்து கிட்டான் என்று தெரிந்தும்அவனுக்காக வக்காலத்து வாங்கும் அம்மா ,என்ன அம்மா இவங்க .
இந்த முத்துபயல சர்வா வெழுத்து வாங்கணும் அதை பாத்து வைஷு சிரிக்கணும்..